சனி, 30 ஜூன், 2018

நான் பாஜகவில் இருந்து ஏன் விலகுகிறேன்?

                                                                                                                                      -சிவம் ஷங்கர் சிங்

மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர்.
வடகிழக்கு இந்தியாவில் பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கான புள்ளிவிவரப் பகுப்பாய்வை நடத்தியவர். 
2015–16இல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்டமியற்றுவதற்கான உதவியாளர்கள் (LAMP) என்ற அமைப்பின் உறுப்பினர், 

               -சிவம் ஷங்கர் சிங்


அமைப்பு முறைகளையும் தேசங்களையும் கட்டமைக்கப் பல பத்தாண்டுகளோ அல்லது நூற்றாண்டுகளோ தேவைப்படுகிறது. பாஜக விஷயத்தில் நான் காணும் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால் மிக அற்ப நோக்கங்களுக்காக சில மகத்தான விஷயங்களை அது அழித்துள்ளது என்பதுதான்.
1. தேர்தல் பாண்டுகள்: இது அடிப்படையில் ஊழலை சட்டபூர்வமானதாக ஆக்குகிறது. கார்ப்பரேட்டுகளும் அந்நிய சக்திகளும் நம் அரசியல் கட்சிகளை விலைகொடுத்து வாங்குவதை அனுமதிக்கிறது. இந்த பாண்டுகள் அனாமதேயத்தன்மை வாய்ந்தவை. "இந்த குறிப்பிட்ட கொள்கையை நீங்கள் இயற்றினால் நங்கள் உங்களுக்கு ரூ. 1000 கோடி கொடுக்கிறோம்" என்று ஒரு கார்ப்பரேட் கூறினால் வழக்கு எதுவும் போட முடியாது. பெயர் தெரியாதவர்களால் அளிக்கப்படும் பாண்டு பத்திரங்களால் ஏதோ கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்துள்ளது என்பதை நிறுவுவது இயலாத காரியம். அமைச்சர்கள் மட்டத்தில் எவ்வாறு ஊழல் குறைந்துள்ளது என்பதையும் இது விளக்குகிறது. அது கோப்பு ஒன்றுக்கோ அல்லது அரசாணை ஒன்றுக்கு இவ்வளவு தொகை என்று வழங்கப்படுவதைவிட அமெரிக்காவில் உள்ளதுபோல் கொள்கை மட்டத்தில் வழங்கப்படுகிறது.
2. திட்டக் கமிஷன் அறிக்கைகள்: புள்ளிவிவரங்களுக்கு இவை முக்கிய ஆதாரங்களாக விளங்கின. அவை அரசாங்கத் திட்டங்களை தணிக்கை செய்து திட்டங்கள் அமலாக்கம் எப்படி உள்ளது எனத் தெரிவித்தன. திட்டக் கமிஷன் ஒழிக்கப்பட்ட பிறகு, அரசாங்கம் எந்தப் புள்ளிவிவரங்களைக் கொடுத்தாலும் அதை நம்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.
3. சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி அவை பயன்படுத்தப்படவில்லை என்றாலும்கூட மோடி / ஷா சம்பந்தப்பட்ட எதற்கும் எதிராகப் பேசினால் அப்படிப் பேசுபவர்களுக்கு எதிராக இந்த நிறுவனங்கள் கட்டவிழ்த்துவிடப்படும் என்ற அச்சம் நிலவுவது உண்மை.
4. கலிக்கோ புல்லின் தற்கொலைக் குறிப்பைப் பற்றியும் நீதிபதி லோயாவின் மரணத்தைப் பற்றியும் சோராபுதின் படுகொலை ஆகியவை குறித்தும் புலன் விசாரணை செய்யத் தவறியது, வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்குள்ளான எம்.எல்.ஏ. ஒருவரையும் அப்பெண்ணின் தந்தையைக் கொலை செய்த அவர் உறவினர் ஒருவரையும் பாதுகாத்தது.
5. ஓராண்டுக்கு மேலாகியும் இந்த உயர் மதிப்பு ரொக்கப் பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கை தோல்வியடைந்தது. அதைவிட மோசம் என்னவென்றால் இது தோல்வியடைந்தது என்பதை ஒப்புக்கொள்ள பாஜக மறுப்பது. பயங்கரவாதத்திற்குச் செல்லும் நிதியை நிறுத்துவோம், கறுப்புப் பணத்தைக் குறைப்போம், ஊழலை ஒழிப்போம் என்று அதைப்பற்றி செய்யப்பட்ட பிரச்சாரமனைத்தும் அபத்தம். அது வர்த்தகத்தையும் கொன்றது.
6. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அவசர கதியில் அமலாக்கப்பட்டு தொழில்களைப் பாதித்தது. மிக சிக்கலான கட்டமைப்பு, வெவ்வேறு அம்சங்களுக்கு வெவ்வேறு வரி விகிதங்கள், ரசீதுகளையும் கணக்குகளையும் பதிவு செய்வதில் மிகவும் சிக்கலான முறை ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தின.
7. வெளிவிவகாரக் கொள்கை: சீனத்திற்கு இலங்கையில் இப்போது ஒரு துறைமுகம் உள்ளது, வங்காள தேசத்திலும் பாகிஸ்தானிலும்கூட அதற்குப் பெரும் நலன்கள் உள்ளன (நாம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம்); மாலத் தீவில் ஏற்பட்ட படுதோல்வி (இந்திய வெளிவிவகாரக் கொள்கை படுதோல்வியால் இந்தியத் தொழிலாளர்களுக்கு அங்கு செல்ல இனியும் விசா கிடைப்பதில்லை) ஆகியவை வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகின்றன. மோடிஜி அயல்நாடுகளுக்குச் சென்று, 2014க்கு முன்பு உலகில் இந்தியர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. ஆனால், அவர்கள் இப்போது மிகவும் மதிக்கப்படுகின்றனர் என்று கூறிவருகிறார். வெளிநாடுகளில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் மரியாதை நமது வளரும் பொருளாதாரம் மற்றும் ஐடி துறை ஆகியவற்றின் நேரடி விளைவு. அது மோடியின் காரணமாக எள்ளளவும் முன்னேறவில்லை. மாட்டிறைச்சி காரணமாக நிகழும் படுகொலைகள், பத்திரிகைக்காரர்கள் அச்சுறுத்தப்படுதல் ஆகிய காரணங்களால் அது குறைந்திருக்கக்கூடும்.
8. திட்டங்கள் தோல்வியுற்றதும் தோல்வியை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ளாத தவறுவது இந்த அரசின் பிரச்சினை. சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (நாடாளுமன்றத்தினருக்கான முன்மாதிரி கிராமத் திட்டம்), இந்தியாவில் உற்பத்தி செய்க, திறனாற்றல் வளர்ச்சித் திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் தம் இலக்கை எட்டவில்லை. வேலையில்லா நெருக்கடியையும் விவசாயிகள் நெருக்கடியையும் அரசு அங்கீகரிக்க மறுக்கிறது.
9. பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடிஜியும் அவரது அமைச்சர்களும் ஆதரவாளர்களும் காங்கிரஸை இத்தகைய விலையுயர்வுக்குக் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் இப்போது கச்சா எண்ணெய் விலை அப்போதிருந்ததை விடக் குறைவாக உள்ள போதிலும் விலை உயர்வை நியாயப்படுத்துகின்றனர்.
10. கல்வி, மருத்துவம்: கல்வித் துறையில் ஒன்றுமே செய்யப்படவில்லை. கடந்த பத்தாண்டுகளில் அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் தரம் சீர்கெட்டுள்ளது என ASER அறிக்கைகள் காட்டுகின்றன. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. நான்கு ஆண்டுகளில் மருத்துவ வசதி குறித்து எதுவுமே செய்யவில்லை. பின்னர் ஆயுஷ்மான் பாரத் அறிவிக்கப்பட்டது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பயங்கரமான வரலாற்றைக் கொண்டிருக்கின்றன. 
ஆயினும் இந்த அமெரிக்கப் பாதை பின்பற்றப்படுகிறது. 


ஒவ்வோர் அரசாங்கத்திலும் சில தோல்விகள் ஏற்படுவதுண்டு. சில தவறான முடிவுகளும் நிகழ்வதுண்டு. ஆனால், எனக்கு இருக்கும் அதைவிடப் பெரிய பிரச்சினை தார்மிக நெறிகள் பற்றியது.
இந்த அரசாங்கத்தின் உண்மையான எதிர்மறைச் சாதனை அது எவ்வாறு திட்டமிட்டதொரு போர்த் தந்திரத்துடன் தேசிய உரையாடல் மீது செல்வாக்கு செலுத்தியுள்ளது என்பதாகும். இது தோல்வியல்ல. திட்டமிட்ட செயல்.
1. அரசுக்கு எதிரான ஒவ்வொரு விமர்சனங்கள் பாஜகவிடம் காசு கிடைக்காத பத்திரிகையாளர் ஒருவர் செய்த விமர்சனம் அல்லது காங்கிரஸிடம் காசு வாங்கிக்கொண்டு ஒருவர் செய்யும் விமர்சனம் என்று உதறித் தள்ளப்படுகிறது.
2. கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை என்ற கதையாடலை இந்த அரசாங்கம் பரப்பியுள்ளது. இது பச்சைப் பொய். தேசத்திற்கு மனோரீதியில் பெருந்தீங்கு விளைவிக்கும். இந்த அரசாங்கம் நமது வரிப் பணத்திலிருந்து ரூ.4000 கோடியை விளம்பரங்களுக்குச் செலவு செய்தது. நல்ல சாலைகளை முதலில் கட்டமைத்தவர் மோடியல்ல. மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரால் போடப்பட்ட சாலைகளில் நான் பயணம் செய்துள்ளேன். இந்தியா 1990களிலிருந்தே ஒரு வலிமை மிக்க தகவல் தொழில்நுட்பக் கோட்டையாக மாறியது.
இன்றைய அளவுகோல்கள்படி கடந்த காலச் சாதனைகளை அளவிடுவதும் இன்றைய சூழ்நிலைகளின்படி கடந்த காலத் தலைவர்களை ஏசுவதும் எளிது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு: “70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏன் கழிப்பறைகளைக் கட்டவில்லை? இத்தகைய அடிப்படையான விஷயத்தைக்கூட அவர்களால் செய்ய முடியவில்லை” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதம் தர்க்கரீதியாக இருக்கிறது. அதை நானும் நம்பினேன். இந்தியாவின் வரலாற்றை நான் படிக்கத் தொடங்கியதுவரை.
கழிப்பறைகள் நிலவரம் எப்படி இருக்கிறது என்றால் இப்போதிலிருந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி ஏன் இந்தியாவில் எல்லா வீடுகளுக்கும் குளிர்சாதன வசதி செய்துகொடுக்கவில்லை என்று சிலர் கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. அது இப்போது ஓர் ஆடம்பரமாகத் தோன்றலாம். கழிப்பறைகள்கூட ஒருகாலத்தில் ஆடம்பரமே. சில விஷயங்கள் சீக்கிரமாக நடந்திருக்கலாம். 10-15 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்கலாம். ஆனால் 70 ஆண்டுகளாக எதுவுமே நடக்கவில்லை என்பது மோசமான பொய்.
3. பொய்ச் செய்தியைப் பரப்புவதும் அதைச் சார்ந்திருப்பதும் பாஜக அரசின் இன்னொரு மோசமான அம்சம். பாஜக எதிர்ப்பு பொய்ச் செய்திகளும்கூட உள்ளன. ஆனால் பாஜக ஆதரவு, எதிர்க்கட்சி விரோத, பொய்ச் செய்திகள் எண்ணிக்கையிலும் பரப்பப்படும் வீச்சிலும் மிக அதிகமாக உள்ளன. அவை பெரும்பாலும் வெறுப்பு நிறைந்ததாகவும் பிளவுபடுத்துவதாகவும் உள்ளன.
4. இந்துக்களும் இந்து மதமும் ஆபத்திலிருக்கிறது என்றும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள மோடியே ஒரே வழி என்றும் அவர்கள் மக்கள் மனங்களில் ஆழ ஊன்றிவிட்டனர். யதார்த்தம் என்னவென்றால் இந்த அரசாங்கம் வருவதற்கு முன்பு மக்கள் எப்படி வாழ்ந்தார்களா அதே வாழ்க்கையை இப்போதும் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் மனப்பாங்கைத் தவிர வேறெதிலும் மாற்றம் இல்லை. இந்துக்களாகிய நாம் 2007இல் ஆபத்திலிருந்தோமா? அதிக அச்சத்தையும் வெறுப்பையும் பரப்புவது தவிர இந்துக்களுடைய நிலைமைகளில் நான் வேறு எந்த மாற்றத்தையும் காணவில்லை.
5. அரசாங்கத்துக்கு எதிராகப் பேசுவீர்களேயானால் நீங்கள் தேச விரோதி. இந்து விரோதியும்கூட. அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான விமர்சனம் செய்பவர்கள்கூட இப்படி முத்திரை குத்தப்பட்டு வாயடைக்கச் செய்யப்படுகின்றனர்.
6. பாஜக தலைவர்களால் நடத்தப்படும் செய்தி சேனல்கள் இந்து - முஸ்லிம், தேசியவாதி - தேசவிரோதி, இந்தியா - பாகிஸ்தான் இதுபோன்ற விவாதங்களையே நடத்திவருகின்றன. இதன் மூலம் பொது உரையாடலைப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புகின்றன. தர்க்கத்தை விடுத்து உணர்வுரீதியில் பிளவுபடுத்துவதையும் இந்த சேனல்கள் தம் வேலையாகக் கொண்டிருக்கின்றன.
7. வளர்ச்சி குறித்த செய்தி மறைந்துவிட்டது. அடுத்த தேர்தலுக்கான பாஜகவின் யுக்தி பிளவுபடுத்துவதும் போலி தேசியவாதத்தை தூண்டிவிடுவதும் ஆகும். ஜின்னா, நேரு மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்த பகத் சிங்கைச் சந்திக்கவில்லை என்று பொய்ச் செய்தி பிரதமரிடமிருந்தே வந்தது; குஜராத்தில் மோடியைத் தோற்கடிக்க காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் தலைவர்களைச் சந்தித்தனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஜேஎன்யூ மாணவர்கள் தேசவிரோதிகள், அவர்கள் தேசத்தை சுக்குநூறாகத் துண்டாடிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. வாக்காளர்களைப் பிளவுபடுத்தி தேர்தல்களை ஜெயிப்பது என்ற ஒரு குறிப்பான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரமே இவையனைத்தும்.
என் தலைவர்களிடமிருந்து நான் கேட்க விரும்பும் செய்தி இதுவல்ல. அரசியல் ஆதாயங்களுக்காகக் கலவரங்களில் தேசத்தை எரியவிடத் தயாராக இருக்கும் எவரையும் நான் பின்பற்ற விரும்பவில்லை.
தேசிய விவாதத்தை எவ்வாறு பாஜக ஓர் இருண்ட மூலைக்குத் தள்ளுகிறது என்பதற்கு இவை சில உதாரணங்கள் மட்டுமே. நான் இந்தக் கட்சியில் சேர்ந்தது இதற்காக அல்ல. இதை நான் ஆதரிக்க முடியாது. எனவே, நன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்கிறேன்.
                                                                                                                                   -சிவம் ஷங்கர் சிங் 

நன்றி: மீடியம்.காம்.
================================================================================================
ன்று,
ஜூன் -30.

  • உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணான 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)
  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)
  • முதலாவது ஹாரி பாட்டர் நூல் வெளியிடப்பட்டது(1997)
================================================================================================