ஆளுநரின் அனுமதி தேவையில்லை
தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
யூனியன் பிரதேசமான தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் உள்ளது? என விளக்கக்கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி சந்திரசுட் அவருடைய தீர்ப்பில் “ மக்களின் நலனிற்காக எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்திற்கும் ஆளுநரின் அனுமதி தேவையில்லை என்பதை ஆளுநர் பைஜால் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாநில அரசே பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், தில்லியில் துணைநிலை ஆளுநருக்குத் தான் அதிக அதிகாரம் என தீர்ப்பளித்தது.
அப்போது மாநில ஆளுநருக்கு உள்ள அதிகாரம் வேறு, துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் வேறு எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஐ.சந்திரசூட் மற்றும் அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தனர்.
அவர்கள் வழங்க இருக்கும் தீர்ப்பு தில்லிக்கு மட்டுமல்லாது யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் பொருந்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்லையில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில் ‘‘அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடு இருக்க வேண்டும்.
மத்திய – மாநில அரசுகள் கூட்டாட்சி தத்துவப்படி செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.
காவல்துறை, நிலம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை தவிர மற்ற துறைகளில் முழுமையாக முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் துணை நிலை ஆளுநருக்கும், டெல்லி அரசுக்கும் பொறுப்பு உண்டு.
நீதிமன்ற முந்தைய தீர்ப்புகளின்படி டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களை போல அதிகாரம் கிடையாது. எனினும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்.
துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையுடன் தான் செயல்பட முடியும்’’ என நீதிபதிகள் கூறினார்.
இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனநாயகத்திற்கும் தில்லி மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------