வியாழன், 2 ஆகஸ்ட், 2018

சவாலுக்கு சவால் !

ஆதார் தகவல்களை வெளிப்படையாக வெளியிட்டு அதை ஹேக் செய்ய முடியுமா – அதாவது, திருட முடியுமா – என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா விடுத்த சவாலுக்கு, இணையதள ஹேக்கர் பதிலடி கொடுத்திருப்பது, ஆதார் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 
சர்மாவின் சவாலை டுவிட்டரில் ஏராள மானோர் பாராட்டிய நிலையில், அடுத்த 8 மணி நேரத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலியட் ஆன்டர்சன், சர்மாவின் ஆதார், பான் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அடுக்கடுக்காக டுவிட்டரில் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். 

நாட்டு மக்களின் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் ஓட்டை விழுந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரு ஹேக்கர் மிக எளிதாக ஆதார் தகவல்களை ஹேக் செய்து வெளியிட்டு இருப்பது ஆதார் தகவல்களின் பாது காப்பை – ஒட்டுமொத்த இந்திய தேசத்து மக்களது தகவல்களின் பாதுகாப்பை – கேள்விக் குறியாக்கியுள்ளது.
தற்போது தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக இருப்பவர் ஆர்.எஸ். சர்மா. இவர் இதற்கு முன் ஆதார் எண் அளிக்கும் (யுஐடிஏஐ) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையத்தில் பணியாற்றி தற்போது டிராய்க்கு திரும்பியுள்ளார். 
ஆதார் தகவல்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானது இல்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வரும் நிலையில் தான், சர்மா தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டு சவால் விடுத்தார். ஆதார் தகவல்கள் மிகுந்த பாது காப்பாக இருப்பதால்தான் இப்படி துணிச்சலாக சவால் விடுக்கிறார் என்று கூறி பலரும் புகழ்ந்தனர். 
2,850, ரீடீவிட்களும், 3 ஆயிரம் லைக்குகளும் சர்மாவுக்கு கிடைத்தன. 
ஆனால் சில மணி நேரங்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கரும், ஆன்லைன் வல்லுநருமான, எலியட் ஆன்டர்சன் ஆர்.எஸ்.சர்மாவின் அனைத்து விவரங்களையும் அடுக்கடுக்காக பதிவிட்டு இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்தார்.
அதுமட்டுமல்ல, ‘‘நீங்கள் ஆதார் எண்ணை உங்கள் வங்கிக்கணக்கோடு இணைக்க வில்லை. நீங்கள் ஆதார் எண்ணுக்காக கொடுத்தது உங்களுடைய மொபைல் எண் இல்லை; அது உங்களுடைய தனிச்செயலாளருடையது’’ என்று வேறு சில உண்மைகளையும் போட்டு டைத்தார். 
அத்தோடு அவர் நிற்கவில்லை. பிரதமர் மோடிக்கும் சவால் விடுத்துள்ளார். 

‘‘ஹாய் மோடி அவர்களே, உங்களது ஆதார் எண்ணை வெளியிடத் தயாரா’’ என்று கேட்டு கிண்டல் அடித்துள்ளார். 
சமீபத்தில் யோகா செய்வது தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி வேறு யாருக்கோ சவால் விட, தானும் அந்த சவாலை ஏற்றுக் கொள்வதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி, வேலையற்றவராய், விதவிதமாக யோகா செய்து அதை விதவிதமாக அப்டேட் செய்து சவாலில் வென்றதாக கூறிக்கொண்டார். 
பிரான்ஸ் ஹேக்கரின் சவாலை ஏற்று, ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவைதான் என்று நிரூபிக்கத் தயாரா வயசாவுடால் மோடிஅரசு .?
======================================================================================

ன்று,
ஆகஸ்ட்-02.

  • மேசிடோனியா குடியரசு தினம்
  • உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது(1870)
  • அமெரிக்காவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்றது(1790)
  • தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)
=======================================================================================
ஜிஎஸ்டி அரசியல்.
சரக்கு சேவை வரி விகிதம் பல்வேறு பொருள்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பொருள்களின் விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போல கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. பலபொருள்களின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டன. கடும் விலைவாசி உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள மக்கள் ஜிஎஸ்டியால் மேலும் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகினர். சிறு வர்த்தகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் நடைமுறையால் குழம்பி பாதிப்புக்கு உள்ளாகினர். 

கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டியின் பெயரால் மக்களின் வருமானம் கடுமையாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு; ஒரே வரி என்ற முழக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியினால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் அரசின் வரி வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ளது.
வரி நிர்வாகம் தொடர்பான பாலபாடத்தில் நேர்முக வரியை அதிகரிக்க வேண்டும். 
மறைமுக வரியை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மோடி ஆட்சியில் நேர்மாறாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பெரிய செல்வந்தர்களுக்கும் நிலப்பிரபுக் களுக்கும் நேர்முக வரியிலிருந்து மேலும் மேலும் சலுகை அளிக்கப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வரிச்சலுகை அளிக்கப்படுகிறது, மறுபுறத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஒட்டச்சுரண்டப்படுகின்றனர். 
பெட்ரோல்- டீசல் விற்பனை விலையில் பெரும்பகுதி வரியே ஆகும். இந்த நிலையில் ஜிஎஸ்டி பெயரால் பெரும் கொள்ளையடித்துவிட்டு அதன் ஓராண்டு நிறைவு விழாவையும் மோடி அரசு கொண்டாடியது. உணவகப் பண்டங்கள் உள்பட கடும் வரிவிதிக்கப்பட்டு பிறகு சற்று குறைக்கப்பட்டது.
அரசிற்கும் ஜிஎஸ்டிக்கும் எந்தத்தொடர்பும் இல்லாதது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் தேர்தல் நோக்கத்திற்காக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவது என்பது மோடிஆட்சியில் அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த ஆண்டு குஜராத் சட்டமன்றத்தேர்தலின் போது ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யப்பட்டது. 

தற்போது மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாஜக தேர்தலை சந்திக்க வேண்டியிருப்பதாலும், அடுத்த ஆண்டுமக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாலும், பல்வேறு வீட்டு உபயோகப்பொருள்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 
பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு வரிச்சலுகை அளிக்குமாறு கேட்டபோது, மறுத்தவர்கள் தற்போது நாப்கினுக்கு வரிச்சலுகை அளித்துள்ளனர். 
இதேபோல பல்வேறு பொருள்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரி குறைப்பு என்பது தேர்தலை மனதில்கொண்டதே ஆகும். பெட்ரோலியப் பொருட்களுக்கு கர்நாடகத்தேர்தலின்போது விலைஉயர்வு நிறுத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம், 
ஒட்டகத்தின் மீது கடும் சுமையை ஏற்றிவிட்டு, பிறகு கொஞ்சம் குறைத்து பெரும் சலுகை வழங்கிவிட்டது போல காட்டுவதுதான் இப்போதும் நடக்கிறது. 

ஆனால் மக்கள் ஒட்டகங்கள் அல்ல.

அதை மோடி கூட்டம் வரும் தேர்தலில் பலத்த அடி வாங்கி உணர்ந்து கொள்ளும்..
========================================================================================
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஜீவா நகர் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸிற்கு நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


69 வயதாகும் ஏ.கே. போஸ் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். 

உடல்நிலையில் பிரச்னை இருந்தாலும் அவ்வப்போது முக்கிய கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்றார். 
1972ம் ஆண்டு முதல் அதிமுக-வில் இருந்து வரும் ஏ.கே. போஸ், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதிவி வகித்துள்ளார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சீனிவேலு போட்டியிட்டார். 
ஆனால் அவர் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே மரணம் அடைந்தார். 
இதன்காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே. போஸ் நிறுத்தப்பட்டு வெற்றிப்பெற்றார். 
மரணமடைந்த ஏ.கே. போஸிற்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.