தேச துரோகிகளின் கதை!
சுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை !
தேச துரோகிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.
நாட்டின் நாலாபுறமும் எல்லா நாளும் பா.ஜ.க.-வினராலும் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளர்களாலும் தேச துரோகிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.
உண்மையான ‘தேச விரோத’ செயல்பாடுகள் எப்போது, எதன் நீட்சியாக உள்ளன என்பதை அவர்கள் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இந்த சொல் இதற்கு முன்பே புகழ்பெற்றது.
இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சியின் போது, அரசை எதிர்த்த செயல்பாட்டாளர்களை, குறிப்பாக டெல்லியின் அதிகார அத்துமீறலை வெளிப்படுத்தியவர்களை வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற்று பணியாற்றியவர்கள் என்றும், அறிவுஜீவிகள் மற்றும் ஊடகங்களை தேச விரோதிகள் என்றும் கூறினார்கள்.
அது நமக்கு சொல்லப்படாத பிரிதொரு வரலாறு.
கண்டனங்களின் வரலாறு, அது எழுப்பும் கேள்வி… தேச துரோகிகள் என்கிற பதம், குற்றம் சாட்டப்பட்டவர்களை குறிக்கிறதா அல்லது குற்றச்சாட்டுகளை சொல்கிறவர்களை குறிக்கிறதா என்பதே!
‘தேச விரோதிகள்’, ‘வெளிநாட்டு ஏஜெண்டுகள்’ ஆகிய பதங்களை விரும்பும் அரசியல்வாதி ஒருவர் இருக்கிறார், அவர்தான் சுப்பிரமணிய சாமி.
1974-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ’அரசியல்’ செய்துகொண்டிருக்கிறார் சாமி.
தி டைம்ஸ் பத்திரிக்கையில் ஆகஸ்ட் 15, 1975-ல் வெளிவந்த விளம்பரம். |
அதே வருடத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணின் இயக்கம் வட இந்தியாவில் ஆதரவைப் பெற்று வந்தது. அடுத்த வருடம் ‘வெளிநாட்டு உதவி’ என்ற பதம் புனையப்பட்டு தேசிய அளவில் பிரபலமானது.
ஜெயப்பிரகாஷ் நாராயணின் இயக்கம் வெளிநாட்டு உளவு அமைப்புகளால், குறிப்பாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ.-வால் வளர்க்கப்படுகிறது என நம்பினார் இந்திரா காந்தி.
சிலி, ஈரான் போன்ற நாடுகளில் இருந்த இடதுசாரி அரசாங்கங்களைக் கவிழ்ப்பதில் சி.ஐ.ஏ.-விற்கு இருந்த பங்கும் அதுபோல இந்தியாவிலும் நடத்தத் திட்டமிடபட்டதாக நம்பினார்.
அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனுக்கும் இந்திரா காந்திக்கும் பகையுணர்வு வெளிப்படையாகவே இருந்தது. இந்திரா காந்தியை ‘பெட்டை நாய்’ என பொருள்படும்படி பேசியது ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
1975 ஜூன் 25-ஆம் தேதி ‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத் தூக்கியெறிவோம்’ என முழங்கிய போராட்டம் டெல்லியை அடைந்தது. அந்நாளின் காலைப் பொழுதில், மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த்தா சங்கர் ராயிடம், போராட்டங்களுக்கும் சி.ஐ.ஏ.-வுக்கும் தொடர்பிருப்பதை கண்டுபிடித்துள்ளதாக பிரதமர் இந்திரா காந்தி தெரிவிக்கிறார்.
அன்று மாலையே எமர்ஜென்சி எனப்படும் அவசரகால நிலையை அறிவிக்கிறார். அதன்பின், இடது-வலது கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்; பலர் தலைமறைவானார்கள்.
சிலர் மக்களைத் திரட்டி எமர்ஜென்ஸியை எதிர்த்து நின்று போராட இந்தியாவிலேயே இருந்தார்கள். சிலர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்கள்.
“பெரும்பாலான பா.ஜ.க./ஆர்.எஸ்.எஸ், தலைவர்கள் எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்துக்கு துரோகமிழைத்தார்கள்” என இன்றைய சங்பரிவார சுப்பிரமணியன் சாமியே 2000-ம் ஆண்டு எழுதியிருக்கிறார்.
அப்போதிலிருந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, சங்க பரிவாரங்கள் தங்கள் எதிர்ப்புணர்வு குறித்து வண்ணமயமான ஒரு கட்டுக்கதையை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எமர்ஜென்சியை எதிர்த்து பேரணி சென்றதாகவும், தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ். கூறிக்கொள்கிறது. இந்தக் கூற்றுகள் எல்லாம் உண்மையா என அறிய போதுமான ஆதாரங்கள் இல்லை.
ஏனெனில் அடக்குமுறை காரணமாக செய்தித்தாள்கள் இத்தகைய செய்திகளை அப்போது வெளியிடவில்லை. ஆர்.எஸ். எஸ். கூற்றுகளுக்கு எதிர் கூற்றுகளும் உள்ளன.
“பெரும்பாலான பா.ஜ.க./ஆர்.எஸ்.எஸ், தலைவர்கள் எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்துக்கு துரோகமிழைத்தார்கள்” என இன்றைய சங்பரிவார சுப்பிரமணியன் சாமியே 2000-ம் ஆண்டு எழுதியிருக்கிறார். தேசத்துக்கு துரோகமிழைத்தவர்களுக்கு வேலை செய்ய அவர் பணிக்கப்பட்டார்கள் எனவும் அவர் எழுதினார்.
அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் ஆர்.எஸ். எஸ். தலைவர் பாலாசாகேப் தேவரஸ் ஆகியோர் இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்கள் என்று பகிரங்கமாக எழுதினார்.
சுப்ரமணிய சாமி எமர்ஜென்சியின் போது என்ன
செய்துகொண்டிருந்தார்? சிறைவாசத்திலிருந்து தப்பிக்கும் முகமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
ராம் ஜெத்மலானியுடன் கை குலுக்கியபடி சுப்ரமணிய சாமி |
அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால்”அப்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் மீது நிகழ்த்திய அத்துமீறல்களைக் கண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயந்து போனார்கள்.
எனவே இந்தியாவில் என்ன நடக்கிறது என புரிந்துகொள்ள எதிர்க்கட்சிகளின் குரல்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன”. டிசம்பர் 1975-ல் சாமி லண்டனுக்கு பறக்கிறார். கென்யா, பிரிட்டன் மற்றும் வட அமெரிக்கா முழுவதும் பரவியிருந்த செயல்பாட்டாளர்களின் வலைப்பின்னலுக்குள் நுழைகிறார்.
இந்த செயல்பாட்டாளர்கள் வெளிநாட்டு அரசுகள், சிந்தனையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து இந்தியாவில் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை வெளிப்படுத்தும் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.
மகாராண்ட் தேசாய் என்ற லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் – சங்கியின் வார்த்தைகளில் சொன்னால், அவர்கள்தான் “உண்மையை கடத்தியவர்கள்” – எமர்ஜென்சி அரசாங்கத்துக்கு எதிரான அவர்களுடைய சிறந்த ஆயுதம் ‘பத்திரிகை’.
முன்னதாக, நியூயார்க் டைம்சும், டைம்ஸ் ஆஃப் இலண்டனும் ஜே.பி.-யின் விடுதலையை கோரி மேற்கத்திய இடது சாரி அறிவுஜீவிகளின் கையெழுத்தை தாங்கிய விளம்பரங்களை வெளியிட்டிருந்தன.
வெளிநாட்டு ஊடகங்களின் விமர்சனத்துக்குரிய செய்திகளை கண்டு இன்று வலதுசாரிகள் கடுங்கோபம் கொள்கின்றனர். ஆனால் 1976-ஆம் ஆண்டு இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட டசனுக்கும் மேலான பத்திரிகைகளிடம் சுப்ரமணிய சாமி பேசுகிறார்.
ஆனால், ஆசிரியர் குழு அளித்த செய்திகள், பிரதமருக்கு ஆதரவானதாகவே இருந்தன. எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1975 ஆகஸ்ட் 24-ம் தேதி அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையாளர்கள் -நியூயார்க் டைம்ஸ் மற்றும் நியூயார்க்கர் உள்பட டெல்லிக்கு வந்து இந்திரா காந்தியை நேர்காணல் செய்தார்கள்.
அவருக்கு ஆதரவாக என்.பி.சி ‘மீட் த பிரஸ்’ என்ற நிகழ்ச்சியிலும் இடம் கொடுத்தது. அந்த வாரமே ‘திருமதி காந்தி பொருளாதாரத்தில் என்ன செய்ய நினைக்கிறாரோ அதை இப்போது செய்யலாம்’ என்கிற தலைப்பில் கட்டுரைகள் வெளியாகின.
இப்படியான சூழலில் மேற்கத்திய நாடுகளில் நடந்த செயல்பாட்டாளர்களின் பிரச்சாரத்தின் விளைவாக ஆறு மாதத்தில் நியூயார்க் டைம்ஸில் தலைப்பு மாறியது.
1976, பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியான ஒரு தலைப்பு “இந்தியா: மேலும் அடக்குமுறை”. 1976 ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியான தலைப்பு “இந்தியாவில் நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறது”.
வெளிநாட்டு ஊடகங்களின் விமர்சனத்துக்குரிய செய்திகளை கண்டு இன்று வலதுசாரிகள் கடுங்கோபம் கொள்கின்றனர். ஆனால் 1976-ஆம் ஆண்டு இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட டசனுக்கும் மேலான பத்திரிகைகளிடம் சுப்ரமணிய சாமி பேசுகிறார்.
இதுபோன்ற கருத்துருவாக்கத்தால், அமெரிக்க பாராளுமன்றம் இந்தியாவில் மனித உரிமை நிலைமை என்ன என கேட்கிறது. இதேபோன்ற கேள்வியை பிரிட்டன் நாடாளுமன்றமும் கேட்கிறது.
இந்துத்துவ சிந்தனையாளர் எம்.ஜி. சித்காரா வெளிநாடுகளில் நடந்த செயல்பாடுகள் “இங்கிருந்த சர்வாதிகார ஆட்சியின் கணக்குகளை தகர்க்கும் முக்கியமான காரணியாக இருந்தன” என்றார். சர்வதேச நிர்ப்பந்தமே இந்திரா காந்தியை 1977-ஆம் ஆண்டு எமர்ஜென்சியை முடிவுக்குக் கொண்டுவர வைத்திருக்கிறது.
இதில், ஆர்வத்துக்குரிய விஷயம் என்னவென்றல், இந்திரா காந்தியின் எதிர்வினைகள்தாம்.
இன்றைய செய்திகளை கூர்ந்து நோக்கும் எவருக்கும் இது ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பேசிய பிரதமர், மேற்கத்திய ஊடகங்களை மேற்கத்திய தலையீடு என்றும் அவர்களுடைய செய்திகள் அவதூறாகவும் விஷத்தை கக்குவதாக இருக்கிறதென தெரிவித்தார். 1976-ன் முற்பகுதியில் தேச விரோத மற்றும் நாட்டுப்பற்றில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்களை பட்டியலிட இந்திய தூதரங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதாவது எமர்ஜென்சியை எதிர்ப்பவர்களை இனம் காண அறிவுறுத்தப்பட்டது.
சுப்ரமணிய சாமி சிறப்பு கவனத்துக்கு வந்தார். அமெரிக்காவில் இந்தியாவுக்கான தூதராக இருந்த டி. என். கவுல், சாமியை ‘தவறான, விஷ பிரச்சாரம்’ செய்பவராக குற்றம் சாட்டினார். 1976 செப்டம்பர் மாதம், சாமியை விசாரிக்க மாநிலங்களவை கமிட்டி அமைக்கப்பட்டது.
அப்போதும் சாமி மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து கொண்டிருந்தார். வெளிநாட்டில் உள்ள இந்திய எதிர்ப்பு சக்திகளுடன் இணைந்து இந்திய ஜனநாயக அமைப்பை குலைக்கவும் இந்தியாவுக்கு வெளியே இருந்த எதிரிகளால் இந்தியாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்துக்கு துணை போனதாகவும் விசாரணை ஆணையம் தீர்ப்பு எழுதியது.
இந்த வாக்கியங்கள் மீண்டும் படிக்க வேண்டியவை. ‘இந்தியாவுக்கு எதிரான சக்திகள்’ ‘இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம்’, ‘வெளியிலருக்கும் எதிரிகள்’ போன்ற வார்த்தைகள் நாம் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இப்போதும் இந்த வார்த்தைகள் அரசை விமர்சிப்பவர்களை நாட்டின் எதிரிகளாக சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
எமர்ஜென்சி, சர்வ-தேசிய செயல்பாடுகள் வளர்வதற்கு காரணமானது. குறிப்பாக, வலது இந்துத்துவ செயல்பாடுகள் வேர்விடக் காரணமானது. இடதுசாரி கட்சிகளாலும் அறிவுஜீவிகளாலும் தொழிற்துறை தொழிற்சங்கவாதிகளாலும் மனித உரிமை செயல்பாட்டாளர்களாலும் எதிர்க்கப்பட்ட எமர்ஜென்சியின் பலன்களை சங்கிகள் அறுவடை செய்து கொண்டார்கள்.
வரலாற்றாளர்கள் எட்வர்டு ஆண்டர்சன் மற்றும் பேட்ரிக் கிலிப்பென்ஸ் ஆகியோரின் சமீபத்திய ஆய்வுகள் இந்தக் கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ளன.
“சங்கிகள் எமர்ஜென்சி காலத்தை இந்து தேசியத்தின் சர்வதேச அணிதிரள்வுக்கு சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்” என அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
“சங்கிகள் எமர்ஜென்சி காலத்தை இந்து தேசியத்தின் சர்வதேச அணிதிரள்வுக்கு சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்” என வரலாற்றாளர்கள் எட்வர்டு ஆண்டர்சன் மற்றும் பேட்ரிக் கிலிப்பென்ஸ் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
கைது நடவடிக்கையிலிருந்தும் தணிக்கையிலிருந்தும் தப்பிக்கும் முகமாக வெளிநாடுகளுக்குப் பறந்த செயல்பாட்டாளர்கள், புதிய தளத்தை உருவாக்கவும், நிதி, ஊடக ஆதரவை பெறவும் முனைந்தார்கள். எமர்ஜென்சி முடிவுக்கு வந்த போதும் அந்த பிணைப்பை அவர்கள் வெட்டிவிடவில்லை.
வெளியிலிருந்து ஆலோசனைகள் சொல்பவர்களாகவும் சங்க பரிவாரங்களுக்கு நிதி திரட்டுபவர்களாகவும் அவர்கள் வேகமாக வளர்ந்தார்கள்; இப்போதும் வளர்ந்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கான பணம் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிதி கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள். சொல்லப்போனால், சமகால அரசியலில் வெளிநாட்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு, ஆதரிக்கப்படும் ஒரே இயக்கம் இந்து தேசியமே.
ஆட்சியிலிருக்கும் அரசு, வெளிநாட்டினரால் ஸ்பான்சர் செய்யப்பட்டது என 2014-ஆம் ஆண்டிலிருந்து தேசிய அளவில் சொல்லப்பட்டு வருகிறது.
சட்டத்துக்கு புறம்பானது என்றாலும் இன்னமும் இரண்டு தேசிய கட்சிகளும் பெரும்பான்மை நிதியை வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறுகின்றன. 2014-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் (Foreign Contribution (regulation) Act) கீழ் பா.ஜ.க.-வும் காங்கிரஸும் முறைகேடுகள் செய்ததை சுட்டிக்காட்டியது.
இதே சட்டம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுவதை தண்டனைக்குரியது என்கிறது. கடந்த கால குற்றச்சாட்டுகளின் காரணமாக அருண் ஜெட்லி, அரசியல் கட்சிகள் நிதி பெறுவதை விலக்கி இந்தச் சட்டத்தை திருத்தினார்.
தேச துரோகி என்ற பதம் புதிதல்ல. இந்த பதம் வரும்போதெல்லாம், இது எப்படி உருவானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாத்த செயல்பாட்டாளர்களை சுட்டிக்காட்ட ‘தேச துரோகி’, ‘இந்திய துரோகி’, ‘வெளிநாட்டு ஏஜெண்ட்’ போன்ற பதங்கள் எமர்ஜென்சி காலத்தில் உருவாக்கப்பட்டன.
இன்று, ஒரு புதிய கட்சி அதிகாரத்தில் இருக்கிறது. தங்களை விமர்சிப்பவர்களை அதே மொழியில் அந்தக் கட்சி அழைக்கிறது.
சுப்பிரமணிய சாமிக்கும் அருந்ததி ராய்க்கும் உள்ள பொதுவான அம்சம் எது? பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், அரசுகள் அவர்களை குற்றம் சாட்டுகின்றன.
அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சிந்திக்க வேண்டும்.
பத்திரிகையாளர் ரகு கர்னாட் எழுதி ’தி வயர்’ இணையத்தில் வெளியான கட்டுரையின்தமிழாக்கம்.
நன்றி : தி வயர்,தமிழாக்கம்:கலைமதி