சாமி இல்லா கூடங்கள்.?
தமிழகக் கோயில்களிலிருந்து 1992 முதல் 2017 வரையிலான 25 ஆண்டுக் காலத்தில் மொத்தம் 1.200 சிலைகள் கடத்தப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்து அறநிலையத் துறை தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
இது இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், வேறு மதங்களின் இறைவர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் கவலையைத் தந்தது. பாரம்பரியக் கலைச் சொத்து களவாடப்படுகிறதே என்ற கவலை பகுத்தறிவாளர்களுக்கு. எந்த மதமானால் என்ன, நாட்டில் இறையச்சம் குறைகிறதே என்ற கவலை வேறு மதத்தவர்களுக்கு.
ஆலயங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு தர முடியவில்லையா என்று பக்தர்கள் கேட்கிறார்கள்.
அற்ப மானிடப் பிறவிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத கடவுளிடம் தங்களைக் காப்பாற்றுமாறு பக்தர்கள் இறைஞ்சுவதன் வேடிக்கை முரணைப் பகுத்தறிவாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இவற்றுக்கிடையே அனைத்து உயிர்களையும் கண்காணிப்பவராக நம்பப்படும் ஆண்டவனின் திருக்கோயில்களில் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்துவது, உலகத்தைப் பாதுகாப்பவராகக் கருதப்படும் கடவுளின் சிலைகளுக்கு வலுவான பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்துவது என்றெல்லாம் அரசுத் தரப்பில் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நீதிமன்ற ஆணைப்படி நியமிக்கப்பட்ட புலனாய்வுக் குழு தலைவர் பொன்.மாணிக்கவேல் தனக்கு அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று புகார் செய்தார். அவரை வேறு துறைக்கு மாற்றுகிற வேலையும் நடந்தது. நீதிமன்றம் குறுக்கிட்டு அதைத் தடுத்தது. அவருடைய நடவடிக்கைகள் குறித்து வெளியான செய்திகள், இதுவரையில் காவல் துறைக்குள் ஒரு தண்டனைத் துறையாகக் கருதப்பட்ட சிலைத் திருட்டு விசாரணைப் பிரிவை எல்லோரும் உற்றுக் கவனிக்க வைத்திருக்கின்றன.
எப்படி நடந்தன இந்தத் திருட்டுக்கள்?
கோயில் சிலைகளைத் தொட்டுப் பூசை செய்யும் அதிகாரம் வேறு யாருக்கும் கிடையாது என்பதால், அர்ச்சகர்களின் தயவு இல்லாமல் திருட்டு நடந்திருக்குமா என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. இரவுப் பொழுதுகளில்தான் சிலைகள் திருடப்பட்டிருக்கும் என்பதால் அந்நேரத்தில் அவர்கள் அங்கே எப்படி இருந்திருக்க முடியும் என்று கேட்டார் ஒரு நண்பர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்த சிலை முறைகேடு, கிலோ கணக்கில் தங்கம் திருட்டு தொடர்பான விவகாரங்கள், இப்படிப்பட்ட திருட்டுகள் பகலிலும் நடக்கும் என்று காட்டுகின்றன. தங்கச் சிலை தயாரிப்புக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருந்த சிற்பி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டார்கள். சிற்பியை இதற்குச் செதுக்கியவர்கள் யாரேனும் உண்டா என்று எழுப்பப்பட்ட கேள்விகள் காற்றோடு போயின.
திடுதிப்பென்று அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். அதற்குத் துறை அலுவலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். துறையில் சிறப்பாகப் பணிபுரிந்து, கடத்தப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருள்களை மீட்டுக் கோயில்களில் பாதுகாப்பாக வைத்தவர், அதனால் பலருக்கு வேண்டாதவராகிப் போனவர் என்று ஊழியர்கள் கவிதா பற்றிச் சொல்கிறார்கள்.
சிலரைப் பலிகடாவாக்கிவிட்டுத் தில்லுமுல்லுகளின் வலைப்பின்னல்களை மூடி மறைப்பதற்கான சூழ்ச்சிகள் நடப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிலைகள் திருட்டு தொடர்பாக அறநிலையத் துறையின் வேறு சில அதிகாரிகளும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனர் அல்லாத அதிகாரிகள் மேல் பழி சுமத்தித் திசை திருப்புகிற தந்திரம் இது என்று விமர்சித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.
இதையெல்லாம் மிகையான குற்றச்சாட்டுகள் என்று தள்ளிவிட முடியாது என்பதிருக்க, பலிகடா ஆக்கப்படுகிற சிலர் குற்றம் செய்யாதவர்கள் என்று கூறிவிட முடியுமா, பார்ப்பனர் அல்லாதவர்கள் என்பதால் கண்டுகொள்ளாமல் விட வேண்டுமா என்று சிலர் எதிர்வினையாற்றுகிறார்கள்.
இந்த நடவடிக்கைகளைத் தீவிரமாக ஆதரிக்கிற மதவாதம் சார்ந்த சில அமைப்புகளின் உண்மை நோக்கம் என்ன என்று கேட்கிறார்கள் ஊழியர் சங்கத்தினர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆதாரங்களும் விசாரணைகளும் தீர்ப்புகளும்தான் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். வழக்குகள் நேர்மையாக நடத்தப்படட்டும். திருத்தி எழுதுவதற்குத் தேவைப்படாத அளவுக்குத் தீர்ப்புகள் எழுதப்படட்டும்.
பொன்.மாணிக்கவேல் கைப்பற்றி வைத்திருக்கிற ஆவணங்களில், தமிழக ஆளுங்கட்சியில் உள்ள இரண்டு முக்கியப் புள்ளிகள் உள்ளிட்ட உயர்பீடத்தினரின் பெயர்கள் இருப்பதாகவும், இதனால் ஆட்சியாளர்கள் கலக்கம் அடைந்திருப்பதாகவும் ஒரு செய்திக் கட்டுரை தெரிவிக்கிறது.
இதுவரையில் காவல் துறை செய்துள்ள பணியை அப்படியே முடக்கிவிட்டு, விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனத்திடம் (சிபிஐ) ஒப்படைக்க அரசினர் முடிவு செய்ததற்குக் காரணம் அந்தக் கலக்கம்தான் என்று கூறப்படுவதன் பின்னணியில், அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று அழகாகச் சொல்லிக்கொண்டாலும், இதில் அவனால் ஓர் அணுவையும் அசைக்க முடியாது என்பது நேரடிக் குற்றவாளிகளுக்கும் அவர்களை இயக்கியவர்களுக்கும் அவர்களின் அனுக்கிரகம் பெற்றவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
எனவே தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்று நீதி தேவதையின் கையைப் பிடித்து எழுதவைக்க பல்வேறு மட்டங்களில் முயற்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். அவ்வாறு முயல்கிறவர்களைச் சட்டப் புத்தகத்திற்குள் கொண்டுவர நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பது.
முறியடிக்கப்பட வேண்டிய மற்றொரு சூழ்ச்சியையும் அறநிலையத் துறையைச் சேர்ந்த, பொதுச் சொத்து பாதுகாக்கப்படுவதில் அக்கறையுள்ள இந்நாள், முன்னாள் ஊழியர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார்கள்.
சமூகதளத்தில் செயல்படுகிற பொதுநல நாடிகளும் அந்தச் சூழ்ச்சியின் மீது விளக்கைத் திருப்புகிறார்கள்.
சிலைகள் திருட்டு, கடத்தல், கோயில்களின் பாதுகாப்பு நிலைமை போன்ற உண்மைச் செய்திகளின் துணையோடு, தமிழகத்தில் பல ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகிற ஒரு பிரச்சாரத்திற்கு இப்போது ஓசை கூட்டப்பட்டுள்ளது.
“இந்துக் கோயில்களும் சொத்துகளும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் - அதாவது அரசின் கட்டுப்பாட்டில் - இருப்பதுதான் முறைகேடுகளுக்குக் காரணம். அந்தத் துறை கலைக்கப்பட வேண்டும். கோயில்கள் மறுபடியும் பழைய தர்மகர்த்தா முறையின் கீழ், மடங்களின் கீழ் ஒப்படைக்கப்பட வேண்டும்.
கோயில் சொத்துகள் தர்மகர்த்தா குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.”
இதுதான் ஓசை கூட்டப்பட்டிருக்கிற அந்தப் பழைய பிரச்சாரம். கூடுதல் ஓசை எழுப்புவோரில் சிலர், வார்த்தைகளையும் கூட்டி, திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஆலய முறைகேடுகள் அதிகரித்துவிட்டன என்பதாகவும் இரைச்சல் கிளப்புகிறார்கள்.
நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு, பாரம்பரியமான பெரிய கோயில்களிலும், அவற்றின் சொத்துகளிலும், தட்டிக்கேட்க யாருமின்றிச் சுதந்திரமாக நடந்துகொண்டிருந்த முறைகேடுகளைக் கண்டு மிரண்டுபோன அன்றைய பிரிட்டிஷ் அரசு இப்படியொரு துறையை ஏற்படுத்தி அதன் கீழ் கோயில் நிர்வாகங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தது.
இதை வேறு வகையில் எதிர்க்க முடியாத அன்றைய கலாச்சாரக் காவலர்கள், பிரிட்டன் மகாராணி ஒரு கிறிஸ்துவர் என்பதால்தான் இந்துக்களின் கோயில்களைக் கைப்பற்றுகிறார் என்பதாக (அன்றைக்கே) இதை மதவாத அரசியலாக்க முயன்றார்கள். இதைக் கண்டு மிரண்டுபோன பிரிட்டிஷ் அரசு இதற்கு அழுத்தம் கொடுக்காமல் விட்டுவிட்டது.
இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு, தமிழக முதலமைச்சராக இருந்தவரும், தாழ்த்தப்பட்டோருக்கான ஆலய நுழைவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியவரும், தேவதாசி முறையை ஒழிக்கும் ஆணையைப் பிறப்பித்தவருமான ஓமந்தூர் ராமசாமி ஆட்சியில்தான் கோயில்கள் அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டன.
அதுவரையில் தர்மகர்த்தாக்கள் செய்துவந்த அட்டூழியங்கள் பற்றிக் கேட்டால் பெரியவர்கள் கதைகதையாகச் சொல்வார்கள். பக்தர்கள் கடவுள் மீதான நம்பிக்கையோடு, நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கை வைத்து வழங்கிய பணமும் நகைகளும் சூறையாடப்பட்டு வந்தன.
ஆலய ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். கோயிலுக்குச் சொந்தமான கட்டடங்களைக் கடை நடத்தவும் குடியிருக்கவும் வாடகைக்கு விடுவது, பல்லாயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விடுவது, நில வருமானத்தில் வீட்டுக்குக் கடத்தியது போக மிஞ்சியதைக் கோயில் கணக்கிற்குக் கொண்டுவருவது, வயல்களில் இறங்கி உழைத்த விவசாயத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவது என்று தனி நூலாகவே எழுதலாம். தட்டிக் கேட்டவர்கள் கொடூரமாகத் தண்டிக்கப்பட்ட கதைகளும் உண்டு.
அதன் பின்னணியில் சாதிய ஆதிக்க அநீதிகளும் உண்டு.
இதையெல்லாம் அறிந்திருந்ததால்தான், அறநிலையத் துறையிடம் பல ஆலயங்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தமிழக மக்கள் ஆதரித்தார்கள்.
அதற்குப் பிறகுதான் ஊழியர்களுக்கு – அர்ச்சகர்கள் உட்பட - பாதுகாப்புக் கிடைத்தது. குத்தகை விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் சட்டப்பூர்வ ஏற்பாடுகள் உறுதியாகின.
இன்றைக்கு இத்துறையைக் கலைக்க வேண்டும் என்பவர்களின் உள்நோக்கம் என்ன?
எதை அல்லது யாரை அவர்கள் பாதுகாக்க விரும்புகிறார்கள்?
சொத்து முறைகேடு மட்டுமல்ல, சமூக நீதியைத் தடுக்கிற நுட்பமும் இதில் இருக்கிறது.
அறநிலையத் துறையின் பொறுப்பில் உள்ள ஆலயங்களின் ஊழியர்கள், அரசு ஊழியர்களாகிறார்கள் என்பதால், மற்ற துறை ஊழியர்கள் தேர்வுக்கான இட ஒதுக்கீடு சட்டமும் நடைமுறையும் இவர்களை நியமிப்பதற்கும் பொருந்தும். மறுபடியும் ஆலயங்கள் தனியார் தர்மகர்த்தாக்களின் பிடியில் சிக்குமானால், சமூக நீதி என்ற தர்மம் தாரைவார்க்கப்பட்டுவிடும்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டமேகூட, அறநிலையத் துறை ஆலயங்களில் மட்டுமே செல்லுபடியாகும். மாநிலத்தில் பெரிதும் சிறிதுமாக உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் இந்தச் சட்டம் நுழைய முடியாது. அறநிலையத் துறை கலைக்கப்பட்டு, தனியார் நிர்வாகங்களின் ஆதிக்கம் மேலோங்குமானால் நெடும் போராட்டத்திற்குப் பிறகு செயலுக்கு வரத் தொடங்கியுள்ள, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் சிதறு தேங்காயாகிவிடும்.
துறையை ஒழித்துக்கட்டும் ‘லாபி’ யாகத்தை மூட்டியிருப்பவர்கள் இதில் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்களா?
இதையெல்லாம் மறுக்காமல், அதேவேளையில் துறையில் ஊழல்களே இல்லை என்று சொல்ல முடியுமா, கோயில்களில் திருட்டைத் தடுக்காமல் இருக்க வேண்டுமா, முறைகேடுகளில் ஈடுபடுவோரைத் தண்டிக்காமல் விடலாமா என்ற நியாயமான கேள்விகளைக் கேட்கிறவர்கள் இருக்கிறார்கள்.
ஆலயமேயானாலும் தெய்வம் நின்றுகொல்லும் என்று முறைகேடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாதுதான். அரசு அன்றே நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். அதற்கேற்ப நடைமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
லோக் அதாலத் உள்ளிட்ட ஊழல் கண்காணிப்பு ஏற்பாடுகள் நிலைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான கோரிக்கைகள் உரக்க ஒலிக்க வேண்டும். அவற்றை மதிக்கிறவர்கள் ஆட்சிப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதுதான் வழியேயன்றி, செய்திகளின் சந்தடிச் சாக்கில், அறநிலையத் துறைக்கு மூடுவிழா நடத்துகிற பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது அறமாகாது.
இறை நம்பிக்கையாளர்களின் மொழியில் சொல்வதானால் ஆண்டவனுக்கே அடுக்காது.
கடத்தப்பட்ட சிலைகள் பற்றிய தகவல்களுக்குள் சென்றால், எல்லாச் சிலைகளும் அவற்றின் வயதுக்காகத்தான் முக்கியமாகக் கடத்தப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு சிலையும் எத்தனை ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது, யாருடைய காலத்தில் வைக்கப்பட்டது, எந்தக் காலத்தின் சிற்பக் கலைப் பின்னணியைப் பெற்றது, எப்போதைய உலோகக் கலவையைக் கொண்டது என்ற அடிப்படையில்தான் அந்தச் சிலைகள் கடத்தப்படுகிற அளவுக்கு மதிப்பைப் பெற்றுள்ளன.
அந்தக் காரணங்களுக்காகத்தான் ஏதோவொரு நாட்டின் தனியார் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளன. ஆம், கடவுள் சிலைகள் கடத்தப்பட்டது அவற்றின் தொன்மை மதிப்புக்காகத்தானேயன்றி, அவற்றின் மகிமைக் கதைகளுக்காக அல்ல.
யாரோவொரு பணக்காரரின் வீட்டு அலமாரியில் அவை வீற்றிருப்பது அவரது வளத்தை அறிவிப்பதற்காகத்தானேயன்றி, அந்தச் சிலைகளின் அருளால் அவரது வளம் பெருகும் என்பதற்காக அல்ல. தொன்மைப் பெருமைகளில் மூழ்கிக் கிடக்காமல், தொன்மை அடையாளங்களைப் பாதுகாக்கிற கடமையுணர்வு அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் குடிமக்களுக்கும் ஏற்படுமானால், அதுதான் அந்தக் கடவுள்களுக்கும் பாதுகாப்பு.
-அ.குமரேசன்
(இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: theekathirasak@gmail.com).======================================================================================
முத்தமிழறிஞர் கலைஞர் ?
திமுக தலைவர் கலைஞர் ஜூலை 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்த அவரது உடல்நிலை நேற்று(ஆகஸ்ட் 5) மீண்டும் மோசமானது.
இந்தச் சூழலில் 06.08.2018 இரவு 7 மணியளவில் காவேரி மருத்துவமனை கலைஞரின் மருத்துவ அறிக்கையை வெளியிட்டது.
அதில், ‘திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மருத்துவ நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவரது வயது மூப்பு பிரச்னைகள் காரணமாக, அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலான பணியாக தொடர்கிறது.
தொடர்ச்சியான கண்காணிப்பிலும், முறையான மருத்துவ உதவி மூலமாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்தே முன்னேற்றத்தை முடிவு செய்ய முடியும்’ என கூறப்பட்டிருக்கிறது.
======================================================================================
இன்று,ஆகஸ்ட்-07.
- இந்திய கைத்தறி தினம்
- அமெரிக்க போர்ப் படை உருவாக்கப்பட்டது(1789)
- இலங்கையில் வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1832)
- இந்திய அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)
- இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)