பெட்ரோல் குண்டு.......!



பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை முற்றாக குறைக்க வலியுறுத்தி செப்டம்பர் 10 (இன்று) நடைபெறும் போராட்டம் மோடி அரசை அதிரவைக்கட்டும். 

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு என்பதே மோடி அரசின் மிகப் பெரிய ஊழல்தான். பாஜகவுடன் கூட்டுக் 
களவாணித்தனத்தில் ஈடுபட்டுள்ள மிகப் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் வராக்கடன்களை தள்ளுபடி செய்வதற்காக, பெட்ரோல் - டீசல் விலை உயர்வின் மூலம் எளிய இந்திய மக்களிடம் சூறையாடப்படும் பணம் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. 

ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 

எனவே மோடி அரசானது கூட்டுக் களவாணி முதலாளிகளின் அரசாங்கம். கூட்டுக் களவாணி முதலாளிகளுக்காக அவர்களது இடைத்தரகர்களால் நடத்தப்படுகிற அரசாங்கம். 

இவர்கள் எப்படி ஏழை இந்தியர்களின் துயரங்களுக்கு பதில் சொல்வார்கள்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் செப்டம்பர் 10 (இன்று) மாபெரும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.இதையொட்டி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 10 திங்கட்கிழமையன்று இடதுசாரிக்கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மத்திய தொழிற்சங்கங்களும் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளன. 
தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது என்றும் 2.3 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்றும் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மோடி அரசு கடைப்பிடித்து வரும் நாசகர பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன என்று இடதுசாரிக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 
விலை உயர்வைக் கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் செப்டம்பர் 10 திங்களன்று நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் மறியல் இயக்கம் நடைபெறவுள்ளது. திங்களன்று காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணாசாலை, தாராபூர் டவர் அருகில் நடைபெறும் மறியல் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ(எம்எல்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார், எஸ்யுசி(ஐ) சார்பில் ஏ.ரங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு அனைத்துப்பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டுமெனவும், கட்சி அணிகள் முழுவதும் பங்கேற்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

வரி விதிப்பால் மோடி அரசுக்கு 11லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கிறது. சொந்த நாட்டு மக்களை இந்த அளவுக்கு வன்மத்தோடும், வஞ்சகத்தோடும் கசக்கிப்பிழியும் வேறொரு அரசை இதுவரை இந்தியா பார்த்ததில்லை.
உச்சம் என்கிற வார்த்தையை மிச்சம் வைக்க முடியாத அளவிற்கு அன்றாடம் பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. விலை உயர்வுக்கு எதிராக செப்டம்பர் 10 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு நல்கியுள்ளன. தொழில் நடத்த முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள லாரி உரிமையாளர்கள் பொது வேலைநிறுத்தத்தையொட்டி லாரிகள் ஓடாது என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களும் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.விழா நடத்தினாலும் நடத்துவார்கள்
ஆனால் மோடி அரசு அஞ்சாதவன், அசராதவன் என்பது போல ஞாயிறன்றும் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.83.66 ஆகவும், டீசல் லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.76.75 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 போக்குவரத்துக் கட்டணமும் சேரும்போது ஊருக்கு ஊர் இது மாறுபடும்.
 சமையல் எரிவாயுவை விட்டுவிடக் கூடாது என்பதற்காக இம்மாதம் 1 ஆம்தேதி சிலிண்டருக்கு ரூ.32.50 உயர்த்தப்பட்டு சிலிண்டர் விலை ரூ.838.50 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் சிலிண்டர் விலை ரூ.1000ஐ தொட்டு சதயவிழா கொண்டாட இருக்கிறது. 

அதுபோக, பெட்ரோல் விலையும் ரூ.100ஐ தொடும் காலம் நெருங்குகிறது. இதையொட்டி இந்தியா முழுவதும் பாஜக சார்பில் அரசு செலவில் பிரம்மாண்டமான விழாக்களை நடத்தினாலும் நடத்துவார்கள். விளம்பரம் கிடைக்கும் என்கிற நப்பாசையில் ஊடகங்களும் அதற்கு லாலிபாடுவார்கள்.பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பது இந்தியாவின் கையில் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் திருவாய் மலர்ந்துள்ளார். 

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவோ இது 45 ஆண்டுகால பிரச்சனை என்றும், மாற்று எரிபொருள் குறித்து யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். 
அநேகமாக போக்குவரத்திற்கு மாட்டுவண்டியையும் சமையலுக்கு விறகு அடுப்பையும் மனதில் வைத்து பேசுகிறார் போலும்.பெட்ரோல் - டீசல் என்பது அன்றாட சமூக இயக்கத்தின் ரத்த ஓட்டம் போன்றது. 

இவற்றின் விலை உயர்வதால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் ஒரு சுற்று உயரும். அரிசி, காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள், பால் உள்பட அனைத்தும் விலை உயரும். ஆட்டோ, டாக்ஸி கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறுவழியில்லை. 

அரசு போக்குவரத்துக் கழகங்கள் மேலும் ஒரு கட்டண உயர்வு செய்யக்கூடும். ரயில் கட்டணம் உள்பட அனைத்தும் ஏறுமயில் ஏறுவது போல ஏறுமுகத்திலேயே இருக்கும்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் பிரச்சனையை மேலும் மேலும் சிக்கலாக்குகிறது. ஆனால் பிரதமர் மோடியோ, உலகிலேயே இந்தியாதான் மிக வேகமாக வளர்ந்து கொண்டே போகிறது என கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பேசிக் கொண்டேயிருக்கிறார்.
இந்த லட்சணத்தில் ‘வெல்ல முடியாத பாஜக’ என்ற கோஷத்தோடு வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க பாஜக தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளதாம். 

பெட்ரோல் - டீசல் - கேஸ் விலை உயர்வு ஒன்றே போதும் பாஜகவை படுபாதாளத்தில் வீழ்த்த.தோட்டத்தில் பாதிக் கிணறு என்பது போல மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரி ஆகியவை பெட்ரோல் - டீசல் விலையில் 50 சதவீதம் ஆகும். கடந்த 4 ஆண்டுகளில் அதாவது 2014 - 15 முதல் 2017-18 வரை மோடி அரசு உற்பத்தி வரியாக ரூ.99 ஆயிரத்து 184 கோடி வசூலித்துள்ளது. 
இது முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வசூலித்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
அதேபோல, மாநில அரசுகள் வசூலிக்கும் வாட் வரி, 2014 - 15 இல் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 157 கோடியாக இருந்த நிலையில், 2017 - 18 இல் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 91 கோடியாக உயர்ந்துள்ளது.மத்திய அரசு வசூலிக்கும் உற்பத்தி வரி குறைக்கப்படுமா என்று கேட்டதற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, அதற்கு வாய்ப்பே இல்லை என்று கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்துள்ளார். 
ஆனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்கு காரணம் என்று ஆகாயத்தை நோக்கி கைகாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகக் குறைவாக இருந்த போதும், அதன் பலனை நுகர்வோருக்கு தராமல் வரியை உயர்த்திக் கொண்டே சென்று விலை குறையாமல் பார்த்துக் கொண்டவர்கள்தான் மத்திய ஆட்சியாளர்கள்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது கடந்த 2014 நவம்பர் முதல் ஜனவரி 31ந்தேதி வரை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 9 முறை ஏற்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11.77ம், டீசலுக்கு ரூ.13.47ம் உயர்த்தி ஆண்டுக்கு 1லட்சத்து 46ஆயிரத்து 838 கோடியை கூடுதல் வரி வருவாயாக சுருட்டிக் கொண்டது மோடி அரசு. அப்போது அதுகுறித்து கேட்டதற்கு, கட்டமைப்பு வசதியைப் பெருக்க வரி உயர்த்தப்படுவதாகவும், கச்சா எண்ணெய் விலை உயரும்போது வரி குறைக்கப்பட்டு விலை உயர்வின் சுமை நுகர்வோரை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. 

ஆனால் தற்போது வரி குறைக்கப்படவில்லை. குறைந்தபட்சம் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைத்தால் கூட சற்று விலை குறைய வாய்ப்பு உண்டு. 
கடந்த காலங்களில் உற்பத்தி வரியை சற்று குறைத்து விலையை குறைக்க முயற்சித்தது உண்டு. அதற்கும் கூட பாஜக ஆட்சி தயாராக இல்லை.முந்தைய ஆட்சிக் காலத்தில் பெட்ரோலுக்கு அரசு விலை தீர்மானிக்கும் முறையை ரத்து செய்துவிட்டு, சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப விலை தீர்மானிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. 

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் டீசலுக்கும் இதே முறையை கொண்டு வந்ததோடு, 15 நாட்களுக்கு ஒருமுறை விலை மாறும் என்ற நிலையை மாற்றி அன்றாடம் விலை தீர்மானிக்கப்படும் என்று மாற்றினார்கள். அடுத்தக்கட்டமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பெட்ரோல் - டீசல் விலை அறிவிக்கப்படும் என்று கூட சொல்வார்கள். 
சமையல் எரிவாயுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றாக ரத்து செய்துவிட்டு அதையும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தீர்மானிக்கப்போவதாக மிரட்டி வருகிறது மத்திய பாஜக அரசு. 

இந்த லட்சணத்தில் சமையல் எரிவாயு மானியத்தை தாமாக முன்வந்து நுகர்வோர் விட்டுத்தர வேண்டும் என்ற நச்சரிப்பு வேறு. உண்மையில் மோடி பிரதமர் பதவியை தாமாக முன்வந்து விட்டுக் கொடுத்தால் கோடி புண்ணியமாகப் போகும் என்று சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் உலா வருகிறது.பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமே காரணம் என்பது போல அடிக்கடி மோடி அரசு கூறுகிறது. 
ஆனால் ரிலையன்ஸ் எஸ்.ஆர். போன்ற நிறுவனங்களும் தற்போது பெட்ரோல், டீசல் நிலையங்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
எரிகிற வீட்டில் பறித்தது ஆதாயம் என அவர்களும் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், இந்தியாவிலிருந்து மிகக்குறைந்த விலையில் வரியில்லாமல் வெளிநாடுகளுக்கு பெட்ரோல்-டீசல் ஏற்றுமதி செய்யப்படுவதுதான். வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 
இந்தியாவிலிருந்து 15 நாடுகளுக்கு பெட்ரோலும், 21 நாடுகளுக்கு டீசலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.34, டீசல் விலை ரூ.37. இந்த ரகசியமும் கூட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்தான் வெளியே தெரிய வந்தது.

மங்களூர் ரிபைனரி அண்ட் பெட்ரோ கெமிக்கல் என்ற நிறுவனம் ஹாங்காங், மலேசியா, மொரிசீயஸ், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு பெட்ரோல்-டீசல் ஆகியவற்றை குறைந்தவிலையில் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. 

இதேபோல பல்வேறு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரித்து குறைந்தவிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலகசேவை செய்து கொண்டிருக்கின்றன.உலகிலேயே அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிற நாடுகளில் ஒன்றாகவும், ஏற்றுமதி செய்கிற நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருந்து வருகிறது. 
சுத்திகரிப்பு பெட்ரோல் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா 10 -ஆவது இடத்தில் உள்ளது. 
கடந்த 2017ல் மட்டும் 24.1பில்லியன் டாலர் அளவுக்கு சுத்திகரிப்பு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 
உலக அளவில் இதில் இந்தியாவின் பங்கு 3.9சதவீதமாக உள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் 150 லிட்டர் ஒயிட் பெட்ரோல், 150 லிட்டர் பெட்ரோல், 150 லிட்டர் டீசல், மண்ணெண்ணெய், கேஸ் ஆயில், தார், கிரீஸ் என 14 பொருள்கள் கிடைக்கின்றன. 

ஒரு பேரல் சுத்திகரிக்க மொத்தச் செலவு 100 டாலர் மட்டுமே. ஆனால் லாபம் 500 டாலருக்கு மேல் கிடைக்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 அளவுக்கு தர முடிகிறது. 

ஆனால் இங்கு வரி மேல் வரி போட்டு விலையை உயர்த்துகிறார்கள். 
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் அம்பானி போன்ற மோடியின் நண்பர்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொண்டால்தான் இந்த மர்மதேசத்தின் ரகசியம் தெரியும்.உள்நாட்டு மக்களை பரிதவிக்கவிட்டுவிட்டு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உயர் தரத்தில் அதிக செலவு செய்து வரியில்லாமல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அளித்த தகவலின்படி ஆகஸ்ட் 20ந்தேதி வாக்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் சுத்திகரிக்க இந்திய நிறுவனங்களுக்கு ரூ.35.90, டீசல் தயாரிக்க ரூ.38.25ம் செலவாகிறது. எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.37.91ம் டீசலுக்கு ரூ.41.04ம் விலையாக நிர்ணயிக்கிறது. 
இதனோடு வரி சேரும் போது இடியாக இறங்குகிறது.

வரி விதிப்பால் மோடி அரசுக்கு 11லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கிறது. சொந்த நாட்டு மக்களை இந்த அளவுக்கு வன்மத்தோடும், வஞ்சகத்தோடும் கசக்கிப்பிழியும் வேறொரு அரசை இதுவரை இந்தியா பார்த்ததில்லை. 
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தம், கடையடைப்புப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று பாஜக பசப்புகிறது. இந்திய மக்களின் முதுகெலும்பை உடைத்துக் கொண்டிருக்கும் இவர்களின் ஆட்சியை தொலைத்துக் கட்டுவதுதான் இந்திய மக்களின் தலையாயக் கடமையாக இருக்க முடியும்.

 இன்றைக்கு ஒரு நாள் அனைத்து வாகனங்களின் சக்கரங்களும் சுழலாது நிற்கட்டும். 
அப்போதுதான் மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுற்றும்.
=====================================================================================
ன்று,
செப்டம்பர்-10.
  • உலக தற்கொலை தடுப்பு தினம்
  • சீன ஆசிரியர் தினம்
  • 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1858)
  • சுவிட்சர்லாந்து ஐநா.,வில் இணைந்தது(2002)
======================================================================================
மோடி அரசின் மாயத்தோற்றம்!

8.2 சதவீத பொருளாதார வளர்ச்சியா? 


கடந்த 2017-18 ஆம் ஆண்டு முதல்காலாண்டோடு (ஏப்ரல் - ஜூன், 2017) ஒப்பிடுகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல்காலாண்டு (ஏப்ரல் - ஜூன், 2018) ஜி.டி.பி8.2 சதவீத வளர்ச்சியைத் தொட்டிருக்கிறது. இது அரசு வட்டாரங்களில் மட்டுமல்லாது, கார்ப்பரேட் ஊடகங்களிலும் கொண்டாடப்படும் செய்தியாக மாறியுள்ளது. 
மோடியின் ‘‘கூர் மதிகொண்ட தலைமைக்கு’’ கிடைத்த வெற்றி, ‘‘இதுவரை காணாத இந்திய வளர்ச்சிக் கதையின் பாதை’’, ‘‘அதி வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்’’ என பல வகைகளில் கொண்டாட்டம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. உண்மையிலேயே, இதில் கொண்டாட இவ்வளவு இருக்கிறதா? இதில் இரண்டு அம்சங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. 
ஒன்று, புள்ளி விவரம் சம்பந்தப்பட்டது. மற்றொன்று, இந்த விவரங்களுக்குப் பின்னணியில் இருக்கும் ஒட்டுமொத்தச் சூழ்நிலையினை எவ்வாறு பார்ப்பது என்பது குறித்தது.

ஒப்பிடப்படும் சென்ற ஆண்டின் (2017-18) முதல் காலாண்டு, ஜி.டி.பி விகிதம் 5.6 சத வீதமாக மிகவும் சரிந்து போன காலாண்டு.
 நடப்பு நிதி ஆண்டின் (2018-19) முதல் காலாண்டினை இதனுடன் ஒப்பிட்டால், இயல்பாகவே நடப்புக் காலாண்டு வளர்ச்சி மிகப் பெரிதாகவே தோன்றும். இந்த ஒப்பீட்டுப் புள்ளி விவரங்களின் இயல்புத் தன்மையினை பள்ளத்தாக்கு, பீடபூமி, உச்சம்என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். 

முந்தைய ஆண்டின் வளர்ச்சி உச்சத்தில் இருந்தால், நடப்பு ஆண்டில் ஓரளவு வளர்ச்சி இருந்தாலும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டின் வளர்ச்சி, சற்று குறைவாகவே தோன்றும். கடந்த ஆண்டின் வளர்ச்சி பீட பூமியாக (சற்று நிதானமான வளர்ச்சியாக) இருந்தால், இவ்வாண்டு வளர்ச்சியும் சற்று நிதானமான வளர்ச்சியாகத் தோன்றும். சென்றஆண்டின் வளர்ச்சி, பள்ளத்தாக்கில் இருந்தால், இந்த ஆண்டின் வளர்ச்சி மிகப் பெரிதாக தோற்றமளிக்கும். 
ஒரு மனிதன், தன்னை விட உயரமான வன் அருகில் நிற்கும் போது சற்று குட்டையாகவும் தனக்குச் சமமான உயரத்தில் இருப்பவனுடன் நிற்கும் போது அதிக மாற்றமில்லா மலும் தன்னை விட குட்டையானவன் அருகில்நிற்கும் போது உயரமாகவும் தோன்றுவது போன்றது தான் இதுவும். வளர்ச்சியின் அத்தகைய தோற்ற மாற்றம்தான், இவ்வாண்டின் முதல் காலாண்டில் நடந்திருப்பது. இதை பொருளாதார அறிஞர்கள்அடிப்படை ஆண்டு விளைவு என அழைப்பார்கள். 
பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு கொண்டவர்கள் எவரும் இந்த ஆண்டின் ஜி.டி.பி வளர்ச்சி யினைக் கொண்டாடமாட்டார்கள். 
இன்னும் கூடச் சொல்லப் போனால், ஜி.டி.பிவளர்ச்சிப் புள்ளிகள், இரண்டு ஆண்டு களுக்கு முன்னர் இருந்த இடத்தை மீண்டும்தொட்டிருக்கின்றன. இதிலும் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை.

இந்த அதிவேக வளர்ச்சியும் நமக்குப் புதி தல்ல. ஐ.மு.கூட்டணி-2 அரசின் சாதனையும் வேதனையும் இது தானே? 
வேலைகள் உரு வாகாத வளர்ச்சி தானே அந்த அதிவேக வளர்ச்சி? இந்திய உழைக்கும் படையின் அளவு தொடர்ந்து சுருங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 1.2 கோடி பேர் வேலை தேடுபவர்களாக மாறி வருகின்றனர். வேலை இல்லாப் பட்டாளம் பெருத்து வருகிறது. 
அது தானே உண்மை? ஜி.டி.பி உயர்கிறது.
 வேலைகள் சுருங்குகின்றன. ஜி.டி.பி எவ்விதம் உயர்கிறது என்பதில் தான் சூட்சுமமே அடங்கியிருக்கிறது. எந்திர உற்பத்தியோ (மேனுபேக்சரிங்), அல்லதுகுறைந்தபட்சம் வேளாண் உற்பத்தியோ பெருகினால், வேலை வாய்ப்புக்கள் உயரும் சாத்தியம் உண்டு. 
ஆனால், மோடி அரசு அதற்கு செலவழிக்கத் தயாராக இல்லை.

இன்று நாம் காணும் ஜி.டி.பி வளர்ச்சி தனியார் நுகர்வுச் செலவுகள் உயர்வின் மூலம்மட்டுமே எட்டப்படும் வளர்ச்சி. அந்த நுகர்வுமட்டும் இந்த முதல் காலாண்டில் 8.6 சத வீதமாக உயர்ந்திருக்கிறது. இந்திய நாட்டில் தனியார் நுகர்விற்கு ஒரு கணிசமான பங்கு உண்டு. 

இன்று நாட்டில் நடைபெறும் திரு மணங்களின் செலவுகளுக்கு உச்சவரம்பு வைத்தால் ஜி.டி.பி-யின் அளவு சுமார் 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பது ஒருகணக்கீடு. 

ஆனால், இந்த 2 சதவீத ஜி.டி.பி,வேலை வாய்ப்புக்கள் எதனையும் பெரிதாக உருவாக்குவதில்லை என்பது தான் உண்மை. போக்குவரத்து நெரிசலில் செலவாகும் எரிபொருள் கூட, ஜி.டி.பி உயர்விற்கு உதவக் கூடும். இது மக்களின் நல்வாழ்விற்கு என்ன பங்களிப்பை செலுத்துகிறது என பிரான்சு நாட்டின் முந்தைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி கேட்டது இங்கு நினைவிற்கு வருகிறது. 
எனவே ஜி.டி.பி உயர்வு மொத்தத்தில் மக்களின் மகிழ்ச்சியாக மாறுவதாகக் கொள்ள முடியாது.

அரசின் பொதுச் செலவினங்கள் மொத்த ஜி.டி.பி மதிப்பில் 11.8 சதவீதம் என, தேங்கி நிற்கிறது. இது தான் சென்ற ஆண்டின் முதல் காலாண்டிலும் நிலைமை. சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி மதிப்பில் 54.7 சதவீதமாக இருந்த தனியார் செலவுகள், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 54.9 சதவீதமாக மிகச் சிறிய அளவில் உயர்ந்திருக்கிறது. 

ஆனால், வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில், பொதுச் செலவினங் களை அதிகரிப்பதற்கு அரசு தயாரில்லை. அவ்வகையில் அரசு முடங்கிக் கிடக்கிறது.
வருமானம்?

உண்மைப் பொருளாதாரத்தில் வேலைகள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவில் வரு மானத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. 
நாட்டில் வருமானம் எப்படி இருக்கிறது? 
தொழிலாளர்களின் ஊதியங்கள், பல மாநிலங்களில் குறைந்தபட்சக் கூலி ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் இல்லை. 

அரசு ஊழியர்களின் ஊதியங்களே அந்தக் குறைந்த பட்சத்தில் தான் துவங்குகின்றன. அதனால் தான் இரயில்வேயில் 1 லட்சம் வேலைகளுக்கு 2.8 பேர் மனு செய்திருக்கின்றனர். 

விவசாய வேலைகளிலும் கூலி தேக்க மடைந்து நிற்கிறது. 

இந்த நாட்டில் 15 கோடி விவசாயத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். 

கிராமப்புற வேலைகளில் இவர்களின் பங்கு 55 சதவீதம். 2014 -15 க்கும் 2016 -17க்கும் இடைபட்ட காலத்தில் இவர்களது உண்மை ஊதி யங்களின் 
- அதாவது, பணவீக்கத்துடன் நேர்செய்யப்பட்ட ஊதியங்களில் உயர்வு வருமாறு:- உழவு 1.7 சதவீதம், விதைப்பு, நாற்று நடவு,களையெடுத்தல் 3.1 சதவீதம், அறுவடை, தூற்றுதல், மற்றும் சூட்டடி 0.5 சதவீதம், வேலைத்திறனற்ற கூலி 2 சதவீதம். இவ்வளவு நுண்ணளவிலேயே கூலி உயர்ந்திருக்கிறது. 

விவசாயிகளின் நிலைமை உலகறியும். இடுபொருள் செலவில் கடுமையான உயர்வும்,கட்டுபடியாகாத விளைபொருள் விலைகளும் அவர்களது வருமானத்தை வெட்டிச் சுருக்கிவிட்டன. 

இந்த நிலைமை தான் 12 மாநிலங்களில் விவசாயிகளை வீதியில் இறங்கிப்போராட வைத்திருக்கிறது. 

இந்தப் பின்புலம் தான் தொழிலாளர்கள், விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்களை அனைத்திந்திய அளவில் ஒன்றுபடுத்திய செப்டம்பர் 5 தில்லி பேரணி.இப்போது சொல்லுங்கள் இது தான் வளர்ச்சியா?
இ.எம். ஜோசப்தகவல் ஆதாரம் - சுபோத் வர்மா கட்டுரை - தி வயர் - 01.09.2018







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?