'குட்கா"வில் "சிக்கா" பிரமுகர்கள்
குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குட்கா கிடங்கின் உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் உள்ளிட்ட ஐந்து பேரை தொடர்ந்து விசாரிக்க சிபிஐ சிறப்புநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இவர்களோடு வழக்கு விசாரணையை முடித்துவிட முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மாநில மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய பாஸ்கர், காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ்ஆகியோர் மீது என்ன நடவடிக்கை என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.
குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று ஜார்ஜ் வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.
இந்த ஊழல் நடந்தபோது சென்னை குற்றப்பிரிவுஆணையராகப் பணியாற்றிய ஜெயக்குமார் மீது ஜார்ஜ் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதை ஜெயக்குமார் மறுத்துள்ளார்.
இந்த நிலையில், மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் தவறேதும் செய்யவில்லை என்று நற்சான்றிதழ் வழங்குகிறார்.
தற்போது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றும் ஜெயக்குமாரை அமைச்சர் காப்பாற்ற முயல்வதன் பின்னணி என்ன?
வருமானவரித்துறை நடத்திய சோதனையின் போது குட்கா ஊழல் வெளிவந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய புலனாய்வுத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
ஏற்கெனவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடந்தநிலையில் தற்போது முதன்முறையாக டிஜிபி அலுவலகத்தில் சிபிஐசோதனை நடத்தியுள்ளது.
ஏற்கெனவே ராம்மோகன்ராவ் தலைமைச் செயலாளராக இருந்தபோது, தலைமைச் செயலகத்திலேயே வருமானவரிச் சோதனை நடந்தது. இதெல்லாம் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு.
ஆனால் முதல்வர்எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுஇதுகுறித்து கொஞ்சமும் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.
ஏற்கெனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மீது ஊழல் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போதுஅமைச்சர் வேலுமணி மீதும் திமுக சார்பில்புகார் தரப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து சோதனைக்கு ஆளாகி வருகிறார்.
குறைந்தபட்சம் விஜய பாஸ்கரை பதவிலிருந்து நீக்குவதற்கு கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராகயில்லை.
சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையிலிருந்து தொடர்ந்து தமிழ்நாட்டில் வருமானவரித்துறை, சிபிஐ என சோதனைகள் நடந்தாலும் அமைச்சர்கள் மீதோ, உயரதிகாரிகள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
அதற்கு காரணம் சோதனையை காட்டி மிரட்டி பணிய வைக்க மத்திய பாஜக அரசு முயல்வதேயாகும். கொள்ளையடிக்கப்பட்டதெல்லாம் தமிழ்நாட்டுமக்களின் பணம். மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இணைந்து நடத்தும் விளையாட்டை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘மரங்களை ஏன் வெட்டினீர்கள்?’சென்னை-சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால்திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என்றுசென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பானபொதுநல வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் பகுதியில் 500 மரங்கள் வெட்டப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், மரங்களைவெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால்எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும்.
எந்த சூழ்நிலையில் மரங்கள் வெட்டப்பட்டன என்பது குறித்துஅறிக்கை அளிக்க வேண்டும்.
நில அளவைப் பணிகள் நடைபெறும் போது ஏன் மரங்களை வெட்டினீர்கள்?
ஒரு மரத்தை வெட்ட அனுமதி வாங்கிவிட்டு ஏராளமான மரங்களை வெட்டியுள்ளீர்கள்.
மரங்களை திருட்டுத்தனமாக வெட்டுவதால் ஏன் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் ஏழை மக்களின் நிலைமை உங்களுக்குப் புரியும் என்று நீதிபதிகள் கூறினர்.நில அளவீடு மற்றும் மரங்கள் வெட்டியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
மரங்கள் வெட்டும் பணி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இன்று,
செப்டம்பர்-12.
- ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார்(1609)
- சுவிட்சர்லாந்து, கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது(1848)
- ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டது(1890)
- துருக்கியில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1980)
- ஹாங்காங்கில் ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது(2005)