மூன்று மாநிலங்களில் வீழ்ச்சி...!

பிபி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் ராகஸ்தான்  சத்திஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக  தோல்வி அடையும் என தெரிய வந்துள்ளது.
தற்போது வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.  
 இந்த மாநிலங்களில் தேர்தல் நிலவரம் குறித்து ஏபிபி நியூஸ் மற்றும் சிவோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.  
அதில் இந்திய அளவில் பாஜக பின்னடைவை பெற்றுள்ளதும்,மக்களுணரவுகள் பாஜக,மோடி அரசுக்கு எதிராக பல்வேறு காரணங்களுக்காக உள்ளதாகவும் தெரிகிறது. அந்த கணிப்பின் முடிவுகளைப்  பார்ப்போம்.
ராஜஸ்தான் :
ராஜஸ்தான் மாநிலத்தில் 200 இடங்கள் உள்ளன.  இதில் கடந்த தேர்தலில் பாஜக 163 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும் மற்ற கட்சிகள் 16 இடங்களிலும் வெற்றி பெற்றன.   தற்போது இந்த கணக்கெடுப்பில் அது முழுமையாக மாறி உள்ளது.   பாஜகவுக்கு 57 இடங்களும், காங்கிரசுக்கு 130 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 13 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற முறை பாஜகவுக்கு கிடைத்த 45.2% வாக்கு  வரும் தேர்தலில் 36.8% ஆக குறையலாம் எனவும் இதர கட்சிகளுக்கு 21.7% லிருந்து 12.4% ஆக குறையலாம் எனவும் கூறப்படுகிறது.   அதே நேரத்தில் காங்கிரசுக்கு 33.1% லிருந்து 50.8% ஆக அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம்
மத்திய பிரதேச மாநிலத்தில் 230 இடங்கள் உள்ளன.  இதில் கடந்த தேர்தலில் பாஜக 165 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 58 இடங்களிலும் மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றன.   தற்போது இந்த கணக்கெடுப்பில் அது மாறி உள்ளது.   பாஜகவுக்கு 106 இடங்களும், காங்கிரசுக்கு 117 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு அதே 7 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற முறை பாஜகவுக்கு கிடைத்த 44.9% வாக்கு  வரும் தேர்தலில் 40.1% ஆக குறையலாம் எனவும் இதர கட்சிகளுக்கு 18.7% லிருந்து 18.2% ஆக குறையலாம் எனவும் கூறப்படுகிறது.   அதே நேரத்தில் காங்கிரசுக்கு 36.4% லிருந்து 41.7% ஆக அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 இடங்கள் உள்ளன.  இதில் கடந்த தேர்தலில் பாஜக 49 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 39 இடங்களிலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.   தற்போது இந்த கணக்கெடுப்பில் அது மாறி உள்ளது.   பாஜகவுக்கு 33 இடங்களும், காங்கிரசுக்கு 54 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற முறை பாஜகவுக்கு கிடைத்த 41.0% வாக்கு  வரும் தேர்தலில் 38.8% ஆக குறையலாம் எனவும் இதர கட்சிகளுக்கு 18.7% லிருந்து 21.3% ஆக அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.   அதே நேரத்தில் காங்கிரசுக்கு 40.3% லிருந்து 40% ஆக குறையலாம் என கூறப்பட்டுள்ளது.
==========================================================================================
 இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 
"இந்தியாவின் மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழகம் வந்து முதலீடு தேடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் எல்லாம் அண்டை மாநிலங்களை நோக்கி அ.தி.மு.க அரசின் கமிஷன் கலாச்சாரத்தால் ஓடுகிறார்கள். அப்படியொரு அவல நிலைமை நீடித்து நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கின்ற நேரத்தில், “2019 ஆம் ஆண்டு ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில், சென்னையில் நடைபெறவுள்ள இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், குஜராத்திலிருந்து மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்குக் கிடைக்கும்” என்று தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்திருப்பது அனைவர்க்கும் ஆச்சர்யமாக இருக்கிறது.
ஜெயலலிதா நடத்திய முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 2.42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்போவதாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று வரை அந்த முதல் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கானல் நீராகவே, எதற்கும் பயன்படாமல் இருக்கின்றன. சட்டமன்றத்தில் கூட கேள்வி எழுப்பியும், அதற்கு முதலமைச்சரிடமிருந்தோ, தொழில்துறை அமைச்சரிடமிருந்தோ எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய தெளிவான பதில் இதுவரை இல்லை.
பெறப்பட்ட முதலீடுகள் குறித்து - அவை உள்ளபடியே பெறப்பட்டிருந்தால், சரியான தரவுகளுடன் ஒரு வெள்ளையறிக்கை வெளியிடக்கூட இந்த அரசுக்குத் தன்னம்பிக்கை இல்லை. 2011 முதல் 2015 வரை முன்மொழியப்பட்ட, 1 கோடியே 55 லட்சத்து 807 ரூபாய் முதலீடுகளில், வெறும் 5620 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டிருக்கிறது என்று வெளிவந்த புள்ளி விவரம், அ.தி.மு.க அரசின் நிர்வாகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
முன்மொழியப்பட்ட முதலீடுகளில், வெறும் 3.6 சதவீதம் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்பது, ஏதோ தேய்ந்து கட்டெறும்பு கதை சொல்வார்களே அதைப்போலாகி, அந்த உண்மை இந்த அரசின் முகத்தில் செதுக்கப்பட்டுள்ள அவமானமாகவே இருக்கிறது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், தமிழ்நாடு மிகவும் மோசமாகப் பின் தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை இல்லாமல், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேதனையுடன் காத்திருக்கும் விரக்தியும், அவலமும் கலந்த நிலை உருவாகியிருக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 3.92 லட்சம் பட்டதாரிகளும், 2.87 லட்சம் முதுநிலைப் பட்டதாரிகளும், ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கிறார்கள்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், பதிவு செய்து விட்டு, பதைபதைத்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பொறியியல் படிப்பு படித்து விட்டு, 2.45 லட்சம் பேர் வேலை இல்லாமல் வாடிக் கொண்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்பின்மையில் தமிழகம், தேசிய சராசரியான 3.7 சதவீதத்திற்கும் அதிகமான சதவீதத்தில் வாய்ப்பு வெறுமையைப் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை விட, அதிக வேலைவாய்ப்பின்மையால் தமிழகத்தில் உள்ளோர்தான் தவித்துக் கொண்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி, தமிழகத்தில் மிகவும் குறைந்து வருகிறது. மத்திய புள்ளியியல் துறை நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வேயின்படி, இந்த வளர்ச்சி தேசிய சராசரியான 7.1 சதவீதத்தை விட மிகவும் குறைந்த நிலையில் - அதாவது 4.8 சதவீதமாகக் குறைந்து விட்டது. கேரளா மற்றும் ஆந்திராவை விட தமிழகம் பின்தங்கி விட்ட சூழ்நிலை அ.தி.மு.க ஆட்சியில் சுற்றி வளைத்து விட்டது.
போக்குவரத்து, உணவகங்கள், வர்த்தகம், தொடர்பு சாதனங்கள் போன்றவற்றில் தேசிய சராசரியான 8.9. சதவீதத்தை விடக் குறைந்து, தமிழ்நாடு வெறும் 6.2 சதவீத வளர்ச்சியோடு அ.தி.மு.க ஆட்சியில் வளர்ச்சி கூனிக் குறுகி நிற்கிறது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 2016-17ல் 0.86 சதவீதம் சரிந்து விட்டது என்று நிதி அயோக் சுட்டிக்காட்டியுள்ளது. 2017-18ல் அதிக நிதிப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில், தமிழ்நாடு 40 ஆயிரத்து 530 கோடி ரூபாயுடன் மூன்றாவது மாநிலமாக இருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது என்பது பாராட்டுரை அல்ல இகழ்ச்சியுரை என்பதை உணரவேண்டும். இது 2018-19 தமிழக நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில், 44 ஆயிரத்து 481 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, மிக மோசமாக வருவாய் வரவு குறைந்திருக்கிறது என்று இந்தியத் தணிக்கைத் துறை அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. 2018-19 தமிழக நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் வருவாய்ப் பற்றாக்குறை 17,491 கோடி! இவை எல்லாவற்றையும் விட தமிழகத்தின் கடன் நிலுவைத் தொகை மட்டும் 3.55 லட்சம் கோடி! ஆக அ.தி.மு.க அரசின் மிகமோசமான நிதி நிர்வாகத்தால் இன்றைக்கு மாநிலம் நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, மூன்றரை லட்சம் கோடிக்கு மேல் கடன் என்று ஒட்டுமொத்த “மாநில நிதி நிர்வாகம்” மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில்தான், முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள் என்ன ஆயிற்று என்றே யாருக்கும் சொல்லாமல், புதிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி அறிவிப்பும் வெளியிட்டு, அமைச்சர்களும் அதிகாரிகளும் கடும் நிதிப் பற்றாக்குறையிலும் உலகம் பூராவும், நாடு முழுவதும் “முதலீடுகளை ஈர்க்கிறோம்” என்று சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்கள். ஊழல் நிர்வாகம், ஊழல் அமைச்சர்கள், ஊழல் முதலமைச்சர் என்ற மூன்று முக்கிய (?) “முதலீடுகளை” மட்டும் வைத்துக்கொண்டு, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடுகளை எப்படிப் பெறப் போகிறார்கள் என்பது இமயம் போன்ற பிரம்மாண்டமான கேள்வியாக எழுந்து நிற்கிறது.
இந்த வேளையில்தான் தொழில்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், முன்பு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர், இப்போது குஜராத்திலிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டு வரப் போகிறோம் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு “கானல் நீராகி”க் கலைந்து விட்ட நிலையில், இன்னொரு கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுக் கொண்டு, தமிழக மக்களை ஏமாற்றும் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியின் கரத்தைப் பலப்படுத்த முன்வந்திருக்கும் தொழில்துறைச் செயலாளர், முதலில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ன ஆயிற்று என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியும் “தேர்தல் விளம்பரத்திற்காக” ஒரு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கு முன்பு, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட 2.42 லட்சம் கோடி முதலீடுகளும் பெறப்பட்டு விட்டனவா என்பது பற்றி விளக்க வேண்டும்.
இல்லையேல் “கமிஷன் கலாச்சாரம்” “ஊழல் அநாகரீகம்” என்பதில் மூழ்கிக்கிடக்கும் அமைச்சர்களால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முழுதும் இழந்து விட்ட அ.தி.மு.க ஆட்சியில் நடத்தப்படும், இந்த இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடும், ஊழல் அரசின் ஊதாரித்தனமான திருவிளையாடலாகவே அமைந்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்!
                                                                                                                                           மு.க.ஸ்டாலின்.

===========================================================================================
ன்று,
செப்டம்பர்-29.
  • உலக இதய தினம்
  • சர்வதேச காபி தினம்
  • அர்ஜெண்டீனா கண்டுபிடிப்பாளர் தினம்
  • ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)
===========================================================================================
இந்தியா  முழுவதும் 5 கோடி பேரின் முகநூல் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக  பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது. மேலும், 4 கோடி பேரின் முகநூல் பக்கம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் அடிக்கடி ஹேக் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் செயல்படும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ பேஸ்புக்கில் உள்ள 5 கோடிப் பேரின் தகவல்களை திருடியது தெரியவந்தது, அமெரிக்க தேர்தலில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவும் பேஸ்புக் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் 5 கோடி பேர் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் என்பவர் பேஸ்புக் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
பேஸ்புக் உபயோகப்படுத்தி வருபவர்கள் பெரும்பாலோர்  தங்களது அக்கவுண்டை பாதுகாப்பற்ற முறையில் வைத்துள்ளனர். இந்த   பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 5 கோடி பேரின் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ள தாகவும், மேலும் 4 கோடி பேரின் அக்கவுண்ட்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் பேஸ்புக் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ் (View As) எனும் வசதி இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
தங்களுடைய அக்கவுண்ட்களை மற்றவர்கள் பார்க்கும் போது, அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை நமக்கு நாமே பார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட வசதி தான் இந்த வியூ ஆஸ் எனும் சிறப்பு வசதி.
ஆனால் இந்த வசதி பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் பற்றிய ரகசிய தகவல்களை உள்ளடக்கிய பாதுகாப்பு டோக்கனை (security token) அம்பலப்படுத்துகிறது.  அதை பயன்படுத்தி ஒருவரின் பேஸ்புக் கணக்கைக் கட்டுப்படுத்த போதுமான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவராலும் பிறரின் அக்கவுண்ட்டை ஹேக் செய்ய முடியும்.
எனவே, இப்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என  கய் ரோசன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவன அதிகாரியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

`டைம்’ பத்திரிகை ₹1380 கோடிக்கு விற்பனை!

`டைம்’ பத்திரிகை ₹1380 கோடிக்கு விற்பனை!
டைம் பத்திரிகை வாங்கியுள்ள மார்க் பினியோஃப்.
உலகின் முன்னணி பத்திரிகையைான டைம் பத்திரிகை

 1380 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

யேல் பல்கலைகழகத்தில் பயின்ற ஹென்ரி லுயூஸ் மற்றும் பிரிடோன் ஹேடன் 1923-ம் ஆண்டு டைம் பத்திரிகையை தொடங்கினர். வாரந்திர பத்திரிகை உலகில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிய டைம் உலக அளவில் பலரும் படிக்கக்கூடிய பத்திரிகையாக வெகு சீக்கிரமே மாறியது. 
டைம் பத்திரிக்கையில் இடம்பெறும் அட்டை படங்கள் மிகப் பிரபலமானது.

இந்நிலையில் `சேல்ஸ் போர்ஸ்’ நிறுவனர்களான மார்க் பினியோஃப் மற்றும் அவரது மனைவி லைன் ஆகியோர் டைம் பத்திரிகையை வாங்கியுள்ளனர். 
மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரும் இவர்கள் 1380 கோடி ரூபாய்க்கு டைம் பத்திரிகையை வாங்கியுள்ளனர்.

டைம் பத்திரிகை தொடர்ந்து தனி நிறுவனமாகவே செயல்படும் என்று, பினியோஃப் தெரிவித்துள்ளார். முப்பது நாட்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு, வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தை வாங்கிய நிலையில், மற்றொரு தொழில்நுட்ப நிறுவனம் டைம் பத்திரிகையை இப்போது வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?