அது என்ன புஷ்கரணி- புஷ்கரம் ?


இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. 

இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரை, பிராணகிதா போன்ற ஆறுகளைப் புண்ணிய தீர்த்தங்கள் என புராணங்கள் வாயிலாகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நீராடி, மலர்த்தூவி, தீபாராதனை காட்டி, வழிபடுகிற சடங்கிற்கு புஷ்கரம் என்று பெயர் சூட்டி வழங்குகின்றார்கள்.
ஆறுகளை வழிபடுவது இந்த நிலத்தின் தொன்மம். 


‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் தாமிரபரணி’ என்பது வழக்கு. திருநெல்வேலியின் பூர்வாங்கம் தாமிரபரணியின் படித்துறைகளில் பொதிந்து கிடக்கிறது. 
ஆறும் ஊறும் கலந்துகிடக்கிற மக்களை இன்றும் நீங்கள் அங்குசென்றால் கண்ணாரக் கண்டடைய முடியும். 

மேல் தட்டு கீழ்தட்டு என்ற பாகுபாடுகள் எதையும் தனக்குள் கொள்ளாமல் அநேக மக்களின் அன்றாடப் பாடுகளுக்குள் கலந்துகிடக்கிற நதி அது.
அப்பேர்பட்ட தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கர விழா நடைபெற இருக்கிறது. 
ஆனால், இன்று சொல்லப்படும் 144 ஆண்டுகளுக்கு முந்தைய, விருச்சிகத்தில் இருந்து கடகத்திற்கு இடம்பெயரும் நாட்களில் நடைபெறும் ‘தாமிரபரணி புஷ்கரம்’ எனும் இந்து மதக் கட்டுக் கதைகள் உண்மையானதா?

தாமிரபரணியில் இந்தப் புஷ்கர நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்னின்று உழைப்பவர்கள் காஞ்சி காமகோடி பீடத்து நிர்வாகிகள். 
இவர்கள்தான் “இந்த 144 ஆண்டுக்குப் பிறகு” என்ற போலி வரலாற்றைத் தாமிரபரணி ஆற்றின் மீது கட்டமைப்பவர்கள். 

கிமு. ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்குகிற மடம் தங்களுடையது என்று காஞ்சி மடத்தின் தோற்றக்கதையிலே அடித்து விடுகிற இவர்களுக்கு இந்தக் காலகட்டப் பிரச்சனை ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இது 2018ம் ஆண்டு. இவர்களின் கணைக்குப்படி, 144 ஆண்டுகளுக்கு முன் புஷ்கரம் நடைபெற்றது என்றால் 1874ம் ஆண்டில் அப்படி ஓர் நிகழ்வு நடைபெற்றிருக்க வேண்டும். 
சற்றும் முன் அல்லது பின்னாக 1870 முதல் 1875 வரையிலான திருநெல்வேலி வரலாற்றைச் சரியாக அமர்ந்து வாசித்தால் இவர்களது முழுப் புரட்டும் பொய்யும் அம்பலம் ஏறிவிடும்.

1870ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை திருநெல்வேலி ஜில்லாவில் ஆக்டிங் கலெக்டராக இருந்தவர் ஜே.ஆர்.அற்புத நாத். 
அவரையடுத்து மாவட்ட கலெக்ட்டராகப் பொறுப்பேற்ற ஆர்.கே.பக்கிள் 16 நவம்பர் 1870 முதல் 27 பிப்ரவரி 1874 வரை திருநெல்வேலி மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்தவர். 
பின், நிர்வாக காரணங்களுக்காக அதே ஆண்டில் மட்டும் டபிள்யு.ஏ.ஹெப்பள், டபிள்யு.எச்.காமின் இருவரும் ஆக்டிங் கலெக்டராக மாற்றி மாற்றிப் பொறுப்பேற்றனர்.

1875 அக்டோபரில் 5ம் தேதியில் ஒருநாள் கலெக்டராக இருந்த ஹெப்பள்-க்குப் பிறகு, ஜே.பி.பென்னிங்டன் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். 
ஆனால், அவரின் நேரடிப் அதிகாரத்திற்கு வருவதற்காக அடுத்த 13 நாட்களும் திருநெல்வேலி கலெக்டர் இல்லாத மாவட்டமாகவே இயங்கியது. 
18 அக்டோபர் 1875ல் ஏ.ஜே.ஸ்டூவர்ட் மீண்டும் ஆக்டிங் கலெக்டராக வந்தபோதும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பு சீரான நிலைக்குத் திரும்பவில்லை.

மேற்சொன்ன மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எவருடைய குறிப்புகளிலும் தாமிரபரணி ஆற்றில் இப்படி ஒரு விழா நடைபெற்றதற்கான அறிவிப்புகளோ அல்லது அனுமதி வழங்கின குறிப்புகளோ கிடையாது. 

மாறாக, 1869, 1874, 1877 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே மூன்று தடவை தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கரைகள் உடைந்தன.


1869-74ம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலியின் ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர் தென்பகுதிகள் அளவிட முடியாத பாதிப்புகளைச் சந்தித்தன. 

77ல் கொற்கை, கோரம்பள்ளம் நீர்த்தேக்கங்கள் உடைந்து விழுந்தன. 


1868 முதல் 74 வரையிலான ஆண்டுகளைத் தாமிரபரணியின் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்திய ஆண்டுகள் என்றே வருணிக்கிறது கெஸட்ஸ் ஆஃப் திருநெல்வேலி வால்யூம் ஒன்று.
அதில் 1874ம் ஆண்டின் வெள்ளச்சேதம் பற்றிய குறிப்பு ஒன்று, “நவம்பர் 24ம் நாள் பாளையங்கோட்டை திரும்பவும் ஒரு பெரு வெள்ளத்துக்குத் தயாராகிவிட்டது. 1869ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இது மூன்று அடி தான் குறைவு. 

திருநெல்வேலி கிருஷ்ணப்பேரி தேக்கங்கள் நிறைந்துவிட்டன. 
நயினார்குளம் நிரம்பி வழிந்து பயமுறுத்துகிறது. 

நெல்லையும் பாளையங்கோட்டையும் ஒன்றிலிருந்து ஒன்று முழுமையாகத் துண்டிக்கப் பட்டிருக்கின்றன. இடைப்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகளும், மக்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
 உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.” என்று தெரிவிக்கிறது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தான் தாமிரபரணி மகா புஷ்கரம் நடைபெற்றதாகக் காஞ்சி காமகோடி பீடம் தன் பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறது.
சரி மாவட்ட கெஸட் தான் பொய் சொல்லுகிறது என்றால், அதே காலகட்டத்தில் காஞ்சி பீடத்தில் ஆறாவது மடாதிபதியாகப் பொறுப்புக்கு வந்த சுதர்சன மகா தேவேந்திர சரசுவதி (1851லிருந்து 1891)யாவது உண்மையைச் சொல்லி இருக்கலாம். 

ஆனால் அவர், கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்த காரணத்தால் மடத்தின் கணக்குகளைக் கண்காணித்து வந்த அவரது சித்தப்பா கணபதி சாஸ்திரியால், தஞ்சை மன்னரின் உதவியோடு சிறை வைக்கப்பட்டது துவங்கி சிறையில் உண்ணாநோன்பிருந்தது வரைக்கும் அவரது அத்தனை கதையும் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது. 


அதில் காஞ்சி பீடத்தினரால், தாமிரபரணியில் மகா புஷ்கரம் நடைபெற்றதாக எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. 
ஏன்? 
உண்மையில் அப்படியோர் நிகழ்வு நடந்திருந்தால் தானே?

விவரங்கள் இப்படி இருக்க இவர்கள் எப்படி 144 ஆண்டுகள் முந்தைய புனித அடையாளத்தைத் தாமிரபரணி மீது புகுத்த முயல்கிறார்கள்? 

ஏன்? 

இங்கே தான் மதவாத விஷ்வ இந்து பரிஷத் உட்பட்ட அனைத்து காவி அடையாளங்களின் கரங்கள் வேலை செய்யத் துவங்குகின்றன. 
இவர்கள் முதலில் பொய்யை உண்மையென அறிவிப்பார்கள். அனைத்து பிராமணிய ஊடகங்களும் அவர்களுக்கு உறுதுணையாக மேற்படி பொய்யை உண்மை உண்மை என்று அறைகூவும். பிறகு மக்கள் வாய்மொழியில் இது நிஜம் தான் போல என்ற நம்பிக்கை உருவாகத் துவங்கும்.

இந்த மகா புஷ்கர நிகழ்விற்காக நதியின் கரைகளையும், துறைகளையும் கோயில் சாலைகளையும் புனரமைக்க மக்கள் வரிப்பணம் தான் செலவிடப்படும் என்றாலும் இவர்களது கைங்கரியத்தால் தங்களது மத அடையாளங்களை மக்களின் தொன்மங்களுக்குள் விசமமாகப் புகுத்தத் துவங்குவார்கள்.

 எளிய மக்களின் அடையாளமாக விளங்கும் நாட்டார் தெய்வங்களை, ஆற்றங்கரைப் பள்ளிவாசல்களை, தேவாலயங்களை, எளிய மக்களின் இயற்கை வழிபாடுகளை அடையாளமிழக்கச் செய்து, அவற்றுக்கு காவிநிறம் பூசுவார்கள். 

எங்கள் அய்யனார் கோயில்களில் பின்னே நவக்கிரகங்கள் புகுந்ததெப்படி?
தாமிரபரணி ஆற்றங்கரை உலகின் தொன்மையான நாகரிக வெளி. 
ஆதிச்சநல்லூர் அதன் கண்டெடுக்கப்பட்ட எச்சம். 


அங்கே காவி மத அடையாளத்தின் பெயரால் தங்கள் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் பிராமணியச் சிந்தனையின் யுக்தியை, அதன் முன்பின்னுள்ள சக்திகள் எளிய மக்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியோடு பொருத்தி விளையாட்டுக் காண்பிக்கின்றன.

நம் மக்களிடம் இதுகுறித்து எதிர்க்கருத்தைச் சொன்னால், “என்னம்ன்னாலும் நம்மூருக்கு நல்லதுதான்ல செய்தான்” என்பார்கள். 
அவர்களிடம் விளங்கச் சொல்லிப் புரியவைப்பதில் சங்கடம்தான் எஞ்சும். 

ஊரின், நகரத்தின், தேசத்தின் முக்கியமான அடையாளங்கள் மீது கல்லெறிந்து, அந்த சலசலப்பிலே தங்களை வளர்க்கத் துடிக்கும் புத்திசீவிகள் காவிகள். 
கங்கை முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் அதைத்தான் செய்தார்கள் செய்வார்கள்.
தாமிரபரணி ஆறும், திருநெல்வேலி ஊரும் நம்முடையது. 

எனில், இந்தப் பொய்யும் புரட்டு செய்து கொண்டாடும் விழா யாருக்கானது. 

யாரோ ஒருத்தனாவது எதிர்த்து எழுதியதாக இருக்கட்டும் என்று இதை எழுதுகிறேன். 
இந்த மகா புஷ்கரம் குறித்து எழுதச் சொல்லிக் கேட்ட நண்பன் பிரகாஷ்க்கு நன்றி.
                                                                                                                                                                                                                                                                                                                                      முகநூலில் -கார்த்திக் புகழேந்தி.
12-10-2018.
=====================================================================================================
ன்று,
அக்டோபர்-14.
  • உலக தர நிர்ணய தினம்
  • முதலாவது அச்சான சிறுவர் நூல்  வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
  • இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
  • விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்த மேற்கொள்ளப்பட்டது(1968)
======================================================================================================

ரெண்டுசாமி...மூணு சாமி....இப்போ  சிபிஐ சாமி.?
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான சிபிஐ நெருக்கடி அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே குட்கா ஊழல் வழக்கில் பலரையும் உலுக்கி வரும் சிபிஐ, நெடுஞ்சாலை ஊழல் வழக்கிலும் அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த இந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் இங்கே:
ஒரு குற்ற வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அமைப்பிடமிருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்ற நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதேநேரம் வழக்கமான முறையில் இந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. இந்த வழக்கில் மாநில காவல்துறை மீது மனுதாரர் பாரதி தரப்பில் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அப்படிப்பட்ட சூழலில் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்படுத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் குறித்த நேர்மையான விசாரணை நடக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை உயர்ந்த பதவியில் உள்ள நபரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளாதால், மனுதாரர் அளித்த புகாரை லஞ்ச ஒழிப்பு துறையிடமிருந்து வேறு அமைப்புக்கு மாற்ற முடிவெடுக்கப்படுகிறது.
பொது வாழ்வில் அனைவரும் நேர்மையுடன் இருக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் மீதான நேர்மையை நிரூபிக்கும் வகையில் வேறு விசாரணைக்கு உத்தரவிடுவதை வெறுப்பின் காரணமாக உத்தரவிடுவதாக கருதக்கூடாது.
உயர் பதவியில் இருக்கும் நபர் மீது தீவிரமான குற்றச்சாட்டு உள்ளதால் தானாக முன்வந்து, தன்னிச்சையாக விசாரிக்க கூடிய சுதந்திரமான விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட நபரின் மீதான சந்தேகங்கள் கலைந்து நம்பிக்கை உண்டாகும்.

புகாரில் முகாந்திரம் உள்ளதா இல்லையா என்ற முடிவுக்கு தற்போதைய சூழ்நிலையில் வரமுடியாது. இந்த புகாரை லஞ்ச ஒழிப்புதுறை விசாரித்தால் முறையாக இருக்காது. புகாரை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு முதல்வரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் விசாரணை நேர்மையாக இருக்காது என்ற முடிவுக்கு வருகிறேன். அதனடிப்படையில், மனுதாரர் அளித்த புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படுகிறது.
மனுதாரர் அளித்த புகார் மனு, அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கிடைத்த ஆவண ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஒரு வாரத்தில் சென்னை சிபிஐ இணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆவணங்கள் கிடைத்தவுடன் ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கி அதை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும்.
ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் மீது எவ்வித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிறேன். வெளிப்படையான நேர்மையான விசாரணை நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நீதியின் மீதான அக்கறையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என அதிமுக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூறியதாவது:
முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முதலமைச்சர் மீதான புகாரை விரைவுப்படுத்தவே எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை முழுவதும் முடித்துவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து முடித்துவிட்ட நிலையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு. நீதிமன்றத்தின் மீது நாங்கள் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. 2009-ல் திமுக ஆட்சியில் சாலை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 33 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போதைய அதிமுக ஆட்சியில் சாலை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி ரூபாய் மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது டெண்டர் வழங்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு, திமுக ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேட்டில் அப்போதைய திமுக அரசு ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது. விரைவில் திமுக மீது வழக்கு தொடருவோம்’. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏற்கனவே குட்கா ஊழல் வழக்கில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மத்திய கலால் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 
விழுப்புரம் எஸ்.பி ஜெயகுமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளையும் சிபிஐ விசாரித்து வருகிறது. 
மேலும் உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு அந்த வழக்கு நெருக்கடி கொடுக்கும் என தெரிகிறது.
குட்கா ஊழலுக்கு எதிராக முதலில் வருமான வரித்துறையினர்தான் களத்தில் இறங்கி நடவடிக்கையை ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
அவர்கள் எடுத்துக் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் சிபிஐ துருவி வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை ஊழலைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தாரர்களை வருமான வரித்துறை தனது ரெய்டு மற்றும் விசாரணையால் உலுக்கிக் கொண்டிருக்கிறது. 
அதே விவகாரம் தற்போது நீதிமன்ற உத்தரவு மூலமாகவே சிபிஐ வசம் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே இந்த வழக்கையும் சிபிஐ சீரியஸாக விசாரிக்க ஆரம்பித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக அமைச்சர்கள் பலரையுமே சிபிஐ தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது .


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?