செவ்வாய், 23 அக்டோபர், 2018

பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்

ஆர்எஸ்எஸ்-உம், பாஜக-வும், கேரளாவில் எப்படியாவது தங்களுக்கென்று ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள, கடந்த பல ஆண்டுகளாகவே, பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன.  
ஆர்எஸ்எஸ் கேரளாவில் கடந்த எழுபது அல்லது எண்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே இதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. 
மக்களை மீளவும் எப்படியாவது, மீளவும் பத்தாம்பசலித்தனமான மற்றும் மூடப்பழக்க வழக்கங்களைப் பின்பற்றக் கூடியவர்களாக மாற்றிட முடியுமா என்று முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கேரளாவில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான  கோவில்களில் அமைக்கப்பட்ட குழுக்களிலும் அவர்கள் ஊடுருவி, கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு மத நிகழ்ச்சிகளின்போது மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இந்துக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடும், அதன் மூலமாகத் தங்கள் செல்வாக்கை விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையுடனும்,  சிறுபான்மை இன மக்களுடன் மத மோதல்களைத்திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் முன்னேற்றத்தின் மாண்புகளுக்காவும், மதச்சார்பின்மைக்காகவும், அறிவியல் அணுகுமுறை மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் உட்பட அனைத்துப் பிரிவினரின் உரிமைகளுக்காவும், பாதுகாப்பிற்காகவும் உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடதுசாரிக் கட்சிகளையும் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும்  அளித்த ஆதரவின் காரணமாக, பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 
இதற்கு முன் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின்போதும்கூட, பல தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடது ஜனநாயக முன்னணியையும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்,  ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் தங்களுக்குள் கள்ளத்தனமாக இணைந்து செயல்பட்டிருக்கின்றன. 
எனினும், இவ்வாறு இவர்கள் நயவஞ்சக முயற்சிகள் எவ்வளவுதான் மேற்கொண்டபோதிலும் இவர்களால் கேரள அரசியலிலும்,  கேரள சமூகத்திலும் வெற்றி பெற முடியவில்லை.
கேரளத்தில், இடது ஜனநாயக முன்னணி, கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மேற்கொண்டுவரும் மக்கள் நலக் கொள்கைகள் காரணமாகவும், ஊழலற்ற நிர்வாகத்தின் காரணமாகவும் மக்கள் மத்தியில் அமோகமான ஆதரவினைப் பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறது. பசுமையான கேரளம் (Green Kerala), வாழ்க்கைத் திட்டம் (Life Project), தலித்/பழங்குடியினர் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாத்திட முனைப்புடன் தலையிடல், குடிநீர் வசதிகளை அளித்தல், பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தல், வேளாண்துறையில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தல் போன்ற திட்டங்களின் காரணமாக  உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தப்பட்டிருத்தலும் பல்வேறு தரப்பு மக்களின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கின்றன. 
மேலும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம்,  பெண்கள், தலித்/பழங்குடியினர், அரவாணிகள், திருநங்கையர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள்பிரிவினர் என அனைத்துத்தரப்பு மக்களின் நலன்களையும் பாதுகாத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.  
  நிபா வைரஸ் வேகமாகப் பரவிய சமயத்திலும், ஓக்கி புயல் ஏற்பட்ட சமயத்திலும் மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2018 ஆகஸ்டில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட சமயத்திலும் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு அவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றிய ஆற்றலை,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கடும் விமர்சகர்கள் உட்பட அனைத்துப் பிரிவு மக்களும் பாராட்டினார்கள்.
கேரளத்தில் உள்ள கோவில்களில் தலித்துகளை அர்ச்சகர்களாக நியமனம் செய்தது, தேவஸ்வம் போர்டு நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகளை அதிகப்படுத்தியது போன்று ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் எடுத்ததானது, முற்போக்கான மற்றும் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்துப் பிரிவு மக்கள் மத்தியிலும் அபரிமிதமான ஆதரவைப் பெற்றன. 
அதே சமயத்தில், சமூகத்தில் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் பத்தாம்பசலித்தனமான சிந்தனையுடையோர் மத்தியில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியை அளித்ததாகக் கூற முடியாது என்பதும் உண்மையாகும். 
 எனினும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்களால் வெளிப்படையாக எதிர்ப்பினைக் காட்ட முடியவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் கோபத்தைக் காட்டுவதற்கு ஒரு வாய்ப்புக்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி, பொதுத்துறை நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மீதான தாக்குதல்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், அறிவுஜீவிகள் போன்றவர்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் விளைவாக மக்களிடமிருந்து பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மிகவும் தனிமைப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றன.  
கேரள மக்களிடமிருந்தும் பாஜகவும், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும் அதேபோன்றே தனிமைப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. மக்கள்  இடது ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் பின்னே அணி அணியாய் ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  
நரேந்திர மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் ரபேல் ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள இமாலய ஊழல் காரணமாகவும் மக்கள் பாஜக-விடமிருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிடமிருந்தும் விலகிக் கொண்டிருக்கிறார்கள். 
 இவ்வாறு கேரளாவில் உருவாகியுள்ள சூழ்நிலை, வரவிருக்கும் 2019 மக்களவைத் தேர்தலின்போது கேரளாவில் பாஜக-தேஜகூ-விற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எவ்விதப் பயனையும் அளிக்கப்போவதில்லை என்று மீண்டும் ஒருமுறை தெளிவாகவே வெளிப்படுத்தி இருக்கிறது.
சபரிமலை தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மீது பக்தர்களின் ஒரு பிரிவினர் மத்தியில்  குழப்பத்தை உருவாக்கி, அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராகத் திருப்பிவிட வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் இத்தகைய பரபரப்பான முயற்சிக்குப் பிரதானமான  காரணமாகும். 
மக்களை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்ப வேண்டும் என்பதும்  அவர்களுடைய  தேவையாகும். 
ஆர்எஸ்எஸ்/பாஜகவினரின் இத்தகைய வஞ்சக நடவடிக்கைகள்  மக்கள் மத்தியில் வெற்றிபெறப் போவதில்லை.  வரலாற்றுச்சக்கரத்தைப் பின்னோக்கித் திருப்ப அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்  நிச்சயமாக தோல்வியுறும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப்பின் உள்ள வரலாறு
செப்டம்பர் 28  அன்று பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னே ஒரு நீண்ட வரலாறு உண்டு. இளம் வழக்குரைஞர்கள் சங்கம் என்று அழைக்கப்பட்ட ஓர் அமைப்பு, 2006இல் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த ரிட் மனுவில், சபரிமலைக் கோவிலுக்குள் நுழைவதற்கும், சாமி கும்பிடுவதற்கும் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதித்திடும் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இந்த மனுவைத் தாக்கல் செய்த மனுதாரர்கள், கேரளாவில் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களும் அல்ல. இவர்கள் அனைவரும் வட இந்தியாவில் வசித்தவர்கள். இவர்களில் பலர், ஆர்எஸ்எஸ்/பாஜக-வுடன் தொடர்புடையவர்கள். 
இப்பிரச்சனைமீது உச்சநீதிமன்றம் கேரள அரசாங்கத்தின் கருத்தைக் கேட்டது. 2007இல் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலிருந்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், உச்சநீதிமன்றத்தில் ஓர் உறுதிவாக்குமூலம் தாக்கல் செய்தது. 
அதில், மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கியிருந்தது. அதாவது, சபரிமலைக் கோவிலுக்குள் நுழைவதற்கு, சமூகத்தில் பெண்களுக்கோ அல்லது எந்தப் பிரிவினருக்குமோ எந்த வடிவத்திலும் பாகுபாடு காட்டப்படுவதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. 
 மேலும் அந்த உறுதிவாக்குமூலத்தில், கடந்த காலங்களில் சபரிமலைக் கோவிலுக்குள் நுழைவதற்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்ததுடன், அப்போதைய திருவாங்கூர் மன்னர் சமஸ்தானத்தின் ராஜாவாக இருந்தவரும், ராணியும் சபரிமலைக் கோவிலுக்கு விஜயம் செய்த நிகழ்வையும் குறிப்பிட்டிருந்தது.  மேலும் அந்த உறுதிவாக்குமூலத்தில், இப்பிரச்சனை மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் சமயத்தில், மக்களின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது. 2016 பிப்ரவரியில்,  சட்டமன்றத் தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவரான  உம்மன் சாண்டியின் தலைமையிலிருந்த ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், இதற்கு நேர்விரோதரமானதோர் உறுதிவாக்குமூலத்தை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், கேரள அரசாங்கம், சபரிமலைக் கோவிலுக்குள் 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள பெண்கள் நுழைவதற்கு ஆதரவான நிலையில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. 
2016இல் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் அமைந்தபின்னர், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில், விவாதத்திற்காக வந்த சமயத்தில், 2007இல் தாக்கல் செய்திருந்த உறுதிவாக்குமூலத்தில் இருந்த நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்தி, ஓர் உறுதிவாக்குமூலத்தைத் தாக்கல் செய்தது.  
நாயர் சர்வீஸ் சொசைட்டி, ஐயப்பா சேவா சங்கம், தேவஸ்வம் போர்டு, பந்தாளம் ராஜா, சபரிமலைக் கோவில் பூசாரி முதலானவர்களும் நீதிமன்றத்தின் முன்  ஆஜராகி, பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை எதிர்ப்பதாகத் தங்கள் வாதங்களைத் தாக்கல் செய்தனர்.
இவ்வாறாக சுமார் 12 ஆண்டு காலநீண்ட வழக்காடலுக்குப் பின்னர், உச்சநீதிமன்றத்தின்  ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச்சட்ட அமர்வாயத்தில், ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதிபதிகளின் பெரும்பான்மையுடன், இப்போது வழங்கியுள்ள தீர்ப்பினைப் பிறப்பித்துள்ளது.
 தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் 
“(i) ….. ஐயப்ப  பக்தர்கள் தங்களுக்கென்று தனி மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல. அவர்களுக்கென்று வித்தியாசமான விநோதமான மதக் கோட்பாடுகளைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. அவர்கள் அனைவருமே இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான்.
(ii) அரசமைப்புச்சட்டத்தின் 25(i)ஆவது பிரிவு, ‘அனைத்து நபர்களும்’ என்று  குறிப்பிட்டிருப்பதன் மூலம், எவர் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் தழுவிட, பின்பற்றிட மற்றும் பரப்புரை செய்திடலாம். இவ்வாறு அனைத்து நபர்களும் என்பதில் பெண்களும் உள்ளடக்கமேயாகும்.  25(i)இன்கீழ் அனைத்து நபர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள உரிமை, பெண்களை ஒதுக்கிடவில்லை, அல்லது பெண்களுக்கென்று இருக்கின்ற பிரத்யேக சங்கதி எதையும் கூறிடவும் இல்லை.
(iii) சபரிமலைக் கோவிலில் 1965ஆம் ஆண்டு விதிகள் 3(b)-ஆவது பிரிவின்படி பெண்களை ஒதுக்கிவைத்திருக்கும் நடைமுறையானது, ஐயப்பன் மீது அவர்களுக்கிருக்கிற பக்தியைக் காட்டுவதற்கும், தங்கள் மத நம்பிக்கையை சுதந்திரமாகப் அவர்கள் பின்பற்றுவதற்கும் உள்ள உரிமையை மறுக்கும் ஒன்றாகும்.
இவ்வாறு மறுப்பதானது, பெண்களுக்கு எந்த சாமியையும் கும்பிடுவதற்கு இருந்து வரும் உரிமையை இல்லாமல் செய்துவிடுகிறது. 
அரசமைப்புச்சட்டத்தின் 25(i)இன்கீழ் மதத்தைப் பின்பற்றும் உரிமை,  ஒரே மதத்தைச் சார்ந்த ஆண் – பெண் அனைவருக்கும், அனைத்து வயதினருக்கும் சமமானதேயாகும்.”
உச்சநீதிமன்றத் தீர்ப்பானது, சபரிமலைக் கோவிலுக்குள் 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள பெண்கள் நுழைவதற்கு அனுமதி மறுப்பது, அரசமைப்புச் சட்டத்தின் 25(i)-ஆவது பிரிவின்கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
சபரிமலைக் கோவிலுக்குள்ளும், அனைத்துக் கோவில்களுக்குள்ளும்  அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இவ்வாறு வரலாறு படைத்திருக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு பாரம்பர்யமாகச் சபரிமலைக் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கும் பக்தர்களில் ஒரு சிலர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய குழப்பத்தை, தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றன. 
இந்தப் பிரச்சனையை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை போன்று சித்தரிப்பதற்கு அவைகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக, இடது ஜனநாயக முன்னணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆதரவாக இருக்கின்ற கடவுள் நம்பிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்துவிடலாம் என்று நம்புகின்றன.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமானது கோவில்களில் அர்ச்சகர்களாக தலித்துகளை நியமனம் செய்தது, தேவஸ்வம் போர்டு நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகளை அதிகப்படுத்திய நடவடிக்கைகள் காரணமாக, மகிழ்ச்சியற்றிருக்கக்கூடிய சமூகத்தின் பத்தாம்பசலித்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான பிரிவினரையும் தங்கள் பக்கம் ஈர்த்திடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றன.
கேரளாவில் சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. முன்பெல்லாம், உயர்சாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் மட்டுமே கோவில்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளில், கோவில் நுழைவுப் போராட்டங்கள்தான் பல போராட்டங்களின் மையமாக இருந்தன. 
இத்தகைய போராட்டங்களில் தேசிய இயக்கத் தலைவர்களும், கம்யூனிச இயக்கத் தலைவர்களும் பெரும் பங்கு வகித்தனர். இவற்றின்காரணமாக அனைத்துப் பகுதி மக்களும் கோவில்களுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். 
பெண்கள் மாராப்பு அணிவதற்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகக் கூட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதேபோன்று பெண்கள் வெள்ளி மற்றும் தங்க ஆபரணங்களை அணிவதற்கான உரிமைகளுக்காகக் கூட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. மன்னர் சமஸ்தானங்கள் இருந்த காலத்தில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் மீசைகள் வைத்துக்கொள்வதற்காக வரி செலுத்திய காலமும் உண்டு. 
 இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக, சமூக சீர்திருத்த இயக்கங்களும், பின்னர் தேசிய இயக்கத்தில் செயல்பட்ட முற்போக்குத் தலைவர்களும், அதன்பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கமும் போராடியிருக்கின்றன. கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் வர்க்க – வெகுஜன இயக்கங்களின் போராட்டங்கள் கேரளாவில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கலாச்சாரம் வளர்வதற்கும், மக்கள் மத்தியில் அறிவியல் அணுகுமுறை மலர்வதற்கும் உதவின.  
இப்போது ஆர்எஸ்எஸ்-உம், பாஜக-வும் கேரள சமூகத்தை, இருண்ட, மூடநம்பிக்கைகள் மிகுந்த, பத்தாம்பசலித்தனமான நடவடிக்கைகளைப் பின்பற்றிய பழைய காலத்திற்கே மீண்டும் கொண்டு செல்ல விரும்புகின்றன.
 பாஜக-வின் இத்தகைய இழி முயற்சிகளுக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடனேயே, அது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, “சபரிமலைக் கோவிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதித்து வெளியாகியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்,” என்று கூறியது. 
இதே தொனியில் கேரளாவில் இருக்கின்ற காங்கிரஸ் தலைவர்களும் தீர்ப்பினை வரவேற்றிருந்தனர். ஆனால், தீர்ப்பு சம்பந்தமாக பக்தர்கள் சிலரிடம் உருவாகியிருந்த குழப்பத்தை உணர்ந்தபின்னர், காங்கிரஸ் தீர்ப்பினை எதிர்த்துக் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ்/பாஜக பக்கம் சாய்ந்துகொண்டது, தீர்ப்புக்கு எதிராக மக்களைத் திரட்டும் வேலையில் இறங்கியது.   
மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக மாண்புகளை உயர்த்திப்பிடிக்கக்கூடிய வல்லமை தங்களுக்குக் கிடையாது என்கிற உண்மை சொரூபத்தை காங்கிரஸ் கட்சி மீண்டும் மக்கள் மத்தியில் காட்டியுள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக தகர்ந்து தரைமட்டமாவதனை இது விரைவுபடுத்திடும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அம்மாநிலங்களைக் காட்டிலும் கூடுதலாகக் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களின் ஆதரவுத் தலம் உண்டு. 
கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் இந்நடவடிக்கையானது, பல மாநிலங்களில் நடந்துவருவதைப்போல கேரளாவிலும் அவர்களில் ஒரு பிரிவினரை,  ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் விழுங்குவதற்கு இட்டுச் செல்லும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பினையொட்டி எழுந்துள்ள பிரச்சனைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவாதித்தது. மீண்டும் பழைய காலத்திற்குத் திரும்பிச் செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது, ஆண்களுடன் பெண்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்திடும் நடைமுறையின் ஒரு பகுதியேயாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தின்படி கேரளா   அரசாங்கமும் கட்டுப்பட்டதாகும். 
 உச்சநீதிமன்றமும், மத நம்பிக்கை உரிமை என்பது, சமூகத்தின் பொது ஒழுங்கு, அறநெறி மற்றும் சமூக நலன்களுக்கு உட்பட்டதே என்று ஒரு பக்கம் கூறியுள்ள அதே சமயத்தில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளின் மூன்றாவது பத்தியில் கூறப்பட்டுள்ள ஷரத்துகளுக்கு உட்பட்டவைகளாகும் என்றும் பிரகடனம் செய்திருக்கிறது. 
வரலாறு படைத்திடும் இத்தீர்ப்பானது, பாலின சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது மற்றும் மதச்சார்பின்மை மாண்பினையும் உயர்த்திப்பிடித்திருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமும், இப்பிரச்சனை மீது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கி மாநிலந் தழுவிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்வது எனத் தீர்மானித்திருக்கின்றன. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக் குழு, கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி, அனைத்து மாவட்டக் குழுக்களிலும், மாவட்ட ஊழியர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் பொதுக்குழுக்களைக் கூட்டி, விளக்குவது என்று தீர்மானித்திருக்கிறது. இந்த வேலைகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் நிறைவுறும்.   மாவட்ட அளவில் நடைபெறும் பேரணிகளில் முதல்வரும், இடது ஜனநாயக முன்னணியின் இதர தலைவர்களும் பங்கேற்பார்கள். 
வரும் நவம்பர் முதல்வாரத்தில் கேரளாவில் 140 தொகுதிகளிலும் தொகுதிவாரியாக பாத யாத்திரை செல்வதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் இதுபோன்று பிற்போக்கு சக்திகள் 1986இல் ஷரியத் பிரச்சனையின் மீதும், 1996இல் வசதி படைத்தோருக்கு (கிரிமி  லேயர் (creamy layer) இட ஒதுக்கீடு அளிப்பது சம்பந்தமான பிரச்சனை எழுந்தபோதும் மக்களை அணிதிரட்ட முயற்சித்ததை நாம் அறிவோம்.
கட்சியும் இடதுசாரிகளும் அப்போது அவற்றை எப்படி வெற்றிகரமாக எதிர்த்து முறியடித்தோமோ அதேபோன்று இப்போதும் இவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்படும்.  
இப்பிரச்சனை மீது கட்சி நடத்திடும் தத்துவார்த்தப் போராட்டம், கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் புதிய மக்கள் பிரிவினரிடம் சென்றடைவதற்குப் புதிய வாய்ப்புகளை அளித்திடும். 
 புதிய சவால்கள், இடதுசாரிகள் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகளை நல்கிடும்.

                                                                                                                                                                                                                                                                                                -எஸ். ராமச்சந்திரன் 

தமிழில்: ச. வீரமணி

===========================================================================================

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற, தொழிலதிபர் மெஹுல் சோக்சியிடம் இருந்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மகள் சோனாலி, பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். 


 'நிரவ் மோடி நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகர்களாக இருந்த தனது மகளையும், மருமகனையும் கடன் மோசடி வழக்கு விசாரணையிலிருந்து 
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காப்பாற்றியுள்ளார்

தனது பதவியை தவறாக பயன்படுத்திய ஜெட்லியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்'

ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட தயங்குகின்றன.
                                                                                                                                                                                                                                                                                                    - காங்., தலைவர் ராகுல் .