மர்மங்கள் சூழ்ந்த மாற்றங்கள் !

ராகேஷ் அஸ்தானாதான் நீக்கப்படுவார் என ஊடகங்கள் முதல் பக்கத்தில் செய்திகள் வெளியிட்டன. பாவம்! 
அவர்கள் மோடி அரசாங்கத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். 

அலோக் வர்மாதான் நீக்கப்பட்டார். தம்மீது பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் வராமல் இருக்க அஸ்தானாவையும் விடுமுறையில் அனுப்பிவிட்டனர். 
எனினும் சங்பரிவார அரசாங்கம் யாரை காப்பாற்ற முயல்கின்றனர் என்பது வெள்ளிடை மலை!
அலோக் வர்மாவும் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டுகின்றனர். 

கொடுமை என்னவெனில் ஒரே வழக்கில்தான் இந்த குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றன. 
மொயின் குரேஷி எனும் நபர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை வலியுறுத்தாமல் இருக்க அஸ்தானா கோடிக்கணக்கில் இலஞ்சம் பெற்றதாக அலோக் வர்மா குற்றம் சாட்டுவது மட்டுமல்ல; 
முதல் தகவல் அறிக்கையே தாக்கல் செய்யப்பட்டது. 
இதே மொயின் குரேஷியிடம் அலோக் வர்மாதான் இலஞ்சம் பெற்றதாக அஸ்தானா குற்றம் சாட்டுகிறார். புலனாய்வுக் கழகத்திற்குள் நடக்கும் இந்த குத்துவெட்டுகள் மல்லையா மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் வழக்கறிஞர்களுக்கு புளங்காகிதம் அளித்துள்ளது. 
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிபிஐ தமது கட்சிக்காரர்களை குற்றம் சாட்டுவது பொய்யானது என அவர்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் வாதிடப்போவதாக கூறுகின்றனர். 
ஒரு வேளை நீதிமன்றங்கள் இவர்களது வாதங்களை ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்!
யார் இந்த ராகேஷ் அஸ்தானா?
ராகேஷ் அஸ்தானா மோடியின் செல்லப்பிள்ளை எனும் குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது அல்ல! அஸ்தானா 1985ஆம் ஆண்டு குஜராத்தில் காவல்துறை பயிற்சி அதிகாரியாக இணைந்தார். 

குஜராத் கலவரத்தில் நடுநிலையோடு செயல்பட்டதற்காக மோடி அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்ட ஸ்ரீ குமார் எனும் காவல்துறை அதிகாரியிடம்தான் இவர் பணியமர்த்தப்பட்டார். புது ரத்தம் ஆரம்பத்தில் வேகம் காட்டினாலும் சில நாட்களிலேயே ஆள்பவர்களின் நல்லெண்ணத்தைப் பெற அவர்களின் செல்லப்பிள்ளையாக அஸ்தானா மாறினார். 
குஜராத் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு குறித்து விசாரிக்க அஸ்தானாதான் நியமிக்கப்பட்டார்.
 இவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர்தான் கோத்ரா எரிப்பு முஸ்லிம்களின் சதி எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்கிறார் ஸ்ரீ குமார். 

கலவரங்களை நியாயப்படுத்த இந்த “சதி கருத்தாக்கம்” குஜராத் அரசாங்கத்திற்கும் மத்தியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கும் தேவைப்பட்டது.
 இதனை அஸ்தானா செய்து கொடுத்தார். ஆள்வோரின் செல்லப்பிள்ளையாக இருப்பதற்கு இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்?ராகேஷ் அஸ்தானா மகளின் திருமணம் வதோதரா நகரில் ஒரு பெரிய ஆடம்பர ஓட்டலில் மிக படடோபமாக நடந்தது. 

நகரின் அனைத்து தங்கும் விடுதிகளிலும் விருந்தினர்களுக்காக அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. பிரச்சனை என்னவெனில் இந்த அனைத்து செலவுகளையும் பயோ ஸ்டெர்லிங் எனும் கார்ப்பரேட் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. 

இந்த பயோ ஸ்டெர்லிங்தான் 174 போலி நிறுவனங்களை உருவாக்கி வங்கிகளிடம் ரூ.8000 கோடி ஏமாற்றியுள்ளது என்பதும் மல்லையா பாணியில் இவர்களும் வெளிநாட்டுக்கு எஸ்கேப் என்பதும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு!அது மட்டுமல்ல; பயோ ஸ்டெர்லிங் நிறுவனத்தில் ரெய்டு நடந்தபொழுது கிடைத்த டைரியில் அஸ்தானாவுக்கு ரூ.25 இலட்சம் இலஞ்சம் கொடுத்ததாக குறிப்பு உள்ளது. 

இதனாலேயே இவருக்கு புலனாய்வுக் கழகத்தில் பதவி அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

எனினும் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. பீகாரில் மோடிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த லாலு பிரசாத் யாதவை கைது செய்வதில் தீவிரம் காட்டியதும் அஸ்தானாதான்! 

அஸ்தானாவின் மகன் பயோ ஸ்டெர்லிங் நிறுவனத்தில் முக்கிய அதிகாரி என்பது கொசுறுச் செய்தி!

சூழ்ச்சியும் வஞ்சகமும் செய்வோருக்கு நடுநிசியும் இரவும் மிகவும் வசதியான ஒன்று! 24.10.2018 அன்று இரவு 1.45 மணிக்கு அலோக் வர்மாவின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. 
2.00 மணிக்கு இணை இயக்குனர் நாகேஸ்வரராவுக்கு பொறுப்பு தரப்படுகிறது. சில மணி நேரங்களில் அஸ்தானாவின் வழக்கை விசாரித்த அனைத்து அதிகாரிகளையும் நாகேஸ்வரராவ் பணியிட மாற்றம் செய்கிறார். குறிப்பாக அஸ்தானா வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரி பஸ்ஸி என்பவர் அந்தமானுக்கு தூக்கியடிக்கப்படுகிறார். 

இந்த நடுநிசி அலப்பறைகள் யாரைக் காப்பாற்ற என்பது இந்த நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தால் தெரியும். 
விரைவில் அஸ்தானா மீது தொடரப்பட்ட வழக்கு பொய் என அறிவிப்பு வந்தால் எவரும் அதிர்ச்சி அடைய வேண்டியது இல்லை. எனினும் சிபிஐ மீதான மோடி அரசாங்கத்தின் தாக்குதல், வெறுமனே தனக்கு வேண்டிய அதிகாரியை காப்பாற்ற மட்டுமே எடுத்த நடவடிக்கையாக தெரியவில்லை. வேறு சில ஆழமான காரணங்களும் உள்ளன. 
அஸ்தானாவுடன் சேர்ந்து வெளியுறவு உளவுத்துறையான ‘ரா’ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவரும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள அதிகாரியும் கூட இந்த ஊழலில் கூட்டு களவாணிகளாக உள்ளனர் என்று அலோக் வர்மாவால் குற்றம் சாட்டப்படுகின்றனர். 
எல்லாவற்றுக்கும் மேலாக ரபேல் ஊழல் குறித்து ஆதாரங்களுடன் பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி, ஜெயந்த் சின்ஹா, மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் சிபிஐக்கு புகார்களை அளித்துள்ளனர். 
ரபேல் விமான ஊழல் குறித்த விவரங்களை சேகரிக்க, அலோக் வர்மா முயன்றதாகவும் அதுதான் அவருக்கு வினையாக முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

மோடி அரசாங்கம் பதவியேற்றவுடன் மத்திய புலனாய்வுக் கழகத்தில் அஸ்தானாவை சிறப்பு இயக்குநராக நியமித்தனர். அப்பொழுதே அலோக் வர்மா எதிர்த்தார். 
எனினும் மோடி அரசாங்கம் பின் வாங்கவில்லை. 
இன்றைய குத்துவெட்டுகளுக்கு இதுதான் ஆரம்பம்! 
அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய புலனாய்வுக் கழகத்தை காங்கிரசும் பா.ஜ.க.வும் பயன்படுத்தின. 

எனினும் மோடி அரசாங்கம் இதில் பல மடங்கு அதிகமாக மூர்க்கத்தனத்துடன் செயல்பட்டுள்ளது எனில் மிகை அல்ல! மத்திய புலனாய்வுக் கழகம் சுயேச்சையாக செயல்பட வேண்டும் என்பதற்காக அதன் இயக்குநர் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் பதவியில் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பணித்தது. 
அதே போல பிரதமர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுதான் இயக்குனரை தேர்வு செய்ய வேண்டும். 
அந்த இயக்குனரை நீக்க வேண்டும் என்றாலும் இந்த குழுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக அலோக் வர்மாவை நீக்கியுள்ளது. 

மோடி அரசாங்கத்தின் எதேச்சதிகார செயலுக்கு ஒஇது ஒரு கூடுதல் உதாரணம்! 
தனது பணி நீக்கத்தை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா,கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு இருக்கிறார். 
ரபேல் ஊழல் பற்றிய ஆதாரங்களை திரட்டினார் என்பதற்காகவே அவர் பழிவாங்கப்பட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன. 

ஆனால், அலோக் வர்மா வெளியேற்றம் மூலம், ரபேல் மட்டுமல்லாமல், வேறு பல வழக்குகளிலும் குற்றவாளிகளைத் தப்பவிடும் சூழ்ச்சி இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஏனெனில், சிபிஐ இயக்குநர் அலோக்வர்மா, நாட்டின் முக்கியமான பல வழக்குகளை விசாரித்து வந்தவர் ஆவார். 

ரபேல் விமான ஊழல் மட்டுமன்றி, மருத்துவக் கவுன்சிலிங்கில் நடைபெற்ற ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்டெர்லிங் பயோடெக் வழக்குகள் என பல வழக்குகள் அவரின் மேற்பார்வையில்தான் நடந்து வந்தன.

இந்திய மருத்துவக் கவுன்சில் ஊழல்வழக்கில், தங்களுக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கக் கோரி, மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள், ஓய்வுபெற்ற ஒடிசாஉயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம். குதூஸியிடம் பேரம் நடத்தினர். 
இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்றாகும். 

இந்த வழக்கை அலோக் வர்மாவே விசாரித்து வந்தார்.
அதேபோல தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்திருந்த போது,அக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என். சுக்லா மீது வழக்குதொடரப்பட்டது. 
இந்த வழக்கையும் அலோக் வர்மாவே விசாரித்து வந்தார்.

தற்போது இந்த வழக்கு இறுதிக்கட்டத்தில்உள்ளது. 

பாஜக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, நிதி மற்றும் வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றும் ஹஸ்முக் ஆதியா மீது கொடுத்துள்ள புகார் அடிப்படையிலான வழக்கும் அலோக் வர்மாவின் மேற் பார்வையில்தான் நடந்து வந்தது.

 நிலக்கரிசுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியின் செயலர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான பாஸ்கர் குல்பே மீதான வழக்குஒன்றையும் அலோக் வர்மாவே விசாரித்துவந்தார்.

பொதுத்துறை அலகு நியமனங்களுக் காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு வைத்திருந்த 3 கோடி ரூபாய் தில்லியில் கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்த வழக்கும் அலோக் வர்மா வசமே இருந்தது.

அண்மையில், குஜராத்தைச் சேர்ந்த ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ நிறுவனத்தின் முதலாளி நிதின் ஜெயந்திலால் சந்தேசரா,பொதுத்துறை வங்கிகளில் இருந்து 5300 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு,இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குத் தப்பிய வழக்கையும் அலோக் வர்மா விசாரித்து வந்தார்.

எனவே, தற்போது அவரை கட்டாயவிடுப்பில் அனுப்பியிருப்பதன் மூலம்,இந்த வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றும் சதி சத்தமில்லாமல் அரங்கேறி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
முதன்மையானது ரஃபேல் ஊழல் வழக்காகும். இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண்சௌரி, யஸ்வந்த் சின்ஹா மற்றும் மூத்த வழக்கறிஞர் பினசாந்ல்
பூஷண் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், மொபைலில் நடந்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை அலோக் வர்மா சேகரித்து வந்தார். இது பாஜகவின் உயர் அதிகார மட்டத்துக்கு எரிச்சலை மூட்டியிருக்கலாம்.

இரண்டாவது அஸ்தானாவுக்கும் வர்மாவுக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகக் காரணமாக இருந்த ஒரு வழக்கின் நடைமுறை. பிரதமரின் செயலாளரான பாஸ்கர் குல்பே நிலக்கரி ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. 
இந்தப் புகாரில் பாஸ்கரின் பங்கு என்ன என்பது குறித்து, புலனாய்வு செய்தபோது அவரை குற்றம்சாட்டப்பட்டவராகச் சேர்க்க வேண்டும் என்று புலனாய்வுக் குழுவினர் (அலோக் வர்மா தரப்பு) கூறினர். ஆனால், அஸ்தானா தரப்பு அவரை சாட்சியாக மட்டும் சேர்த்தால் போதுமானது என்று வற்புறுத்தினர். 

இதில் மோடியின் செயலாளர் என்ற வகையில் பாஸ்கரைக் காப்பாற்ற மோடியினால் நியமிக்கப்பட்ட சிபிஐயின் சிறப்பு இயக்குநர் அஸ்தானா முயற்சிகளில் ஈடுபட்டதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய மருத்துவக் கவுன்சிலில் நடந்த லஞ்ச ஊழல் வழக்கில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஐ.எம்.குடிசி சம்பந்தப்பட்டிருந்தார். அவர் மீதான குற்றப்பத்திரிகையானது தயார் செய்யப்பட்டு வர்மாவின் கையெழுத்திற்காகக் காத்திருக்கிறது.

அலகாபாத்தைச் சேர்ந்த இன்னோர் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் ஊழல் புரிந்ததாக விசாரிக்கப்பட்டு வந்தார். 
இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை நடத்தப்பட்டதால் இவர் விடுப்பில் செல்ல வைக்கப்பட்டார். இதுதொடர்பான தொடக்க நிலை விசாரணை மேற்கொள்ள தகுந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. 
அந்த ஆவணங்களில் வர்மா கையெழுத்திடுவதாக இருந்தது.


வர்மாவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் மற்ற வழக்குகளில் முக்கியமானவை. நிதி மற்றும் வருவாய்த் துறையின் செயலர் ஹஸ்முக் ஆதியா மீதான புகார்கள். இந்தப் புகார்கள் பாஜக எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமியால் தாக்கல் செய்யப்பட்டவை. 
இதில் ஹஸ்முக் ஆதியா அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைகளை வாங்கிக் கொடுப்பதற்காக இடைத்தரகராகச் செயல்பட்டார் என்பதுதான் குற்றச்சாட்டாகும். பிற வழக்குகளைப் பொறுத்தவரை அஸ்தானா குரோஷியிடமிருந்து லஞ்சம் வாங்கிய வழக்கு, சாண்டாரேசா மற்றும் ஸ்டெர்லிங் பயோடெக் ஆகிய நிறுவனங்களில் லஞ்சம் வாங்கியதான வழக்கு ஆகியவை முக்கியமானவை. 

இந்த வழக்குகளில் நடைபெற்றுவந்த விசாரணைகளை முடக்குவதற்காகவே சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதையெல்லாம் தாண்டி முக்கியமானது நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பாஜக ஊழல்கள் தொடர்பான வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான்.

சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களின் மீதான சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணை முடிந்தவுடன் இவர்கள் திரும்ப பதவியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் செய்திகள் கசிந்துள்ளன. ஆனால், தேர்தல்களை முன்னிட்டு இந்த வழக்குகளின் விசாரணைகள் பல காலம் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது. 
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் பதவிக் காலம் வரும் ஜனவரியில் முடிவுறுகிறது. தேர்தலுக்குப் பின்னரே புதிய இயக்குநர் நியமிக்கப்படுவார். அதுவரை தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்ட ராஜேஸ்வர ராவ் பதவியில் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதுவரை சிபிஐக்குள் நடந்த நிகழ்ச்சிகள் அந்த நிறுவனம் குறித்த மாய பிம்பங்களைத் தகர்த்து விட்டன. அது ஆளும்கட்சியின் அதிகாரத்துக்கும் பெரு முதலாளிகளுக்கும் அடிபணிந்து சேவை புரியும் ஓர் அமைப்புதான் என்பது தெளிவாகியுள்ளது. 
பெரும் மோசடிப் பேர்வழிகளை தப்பவைக்க அது எந்த அளவுக்கும் இறங்கி பணிபுரியும் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. 















===========================================================================================
ன்று,
அக்டோபர்-26.
  • நார்வே, ஸ்வீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது(1905)
  • ஆஸ்திரியா தேசிய தினம்(1955)
  • அமெரிக்கா தேசப்பற்று சட்டத்தை நிறைவேற்றியது(2001)
=============================================================================================
1977 - இயற்கையாக பெரியம்மை தாக்கிய கடைசி மனிதர் சோமாலியா வில் கண்டுபிடிக்கப்பட்டார். இத்தோடு பெரியம்மை நோயிடமிருந்து மனிதகுலம் விடுதலை பெற்றுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. 
20 ஆம் நூற்றாண்டில் மட்டும், இந்த நோயினால் 30லிருந்து 50 கோடிப் பேர் வரை இறந்தனர். 1967 ஒரே ஆண்டில் ஒன்றரைக் கோடிப் பேர் பாதிக்கப்பட்டு, 20 லட்சம் பேர் பலியாகினர். 

18 ஆம் நூற்றாண்டில், பதவியிலிருந்த அரசர்கள் ஐவர் உட்பட, சராசரியாக ஆண்டுக்கு 4 லட்சம் பேர் இந்நோய்க்குப் பலியானதுடன், நோய் தாக்கியவர்களில் மூன்றிலொருவருக்கு பார்வை பறிபோனது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பண்டைய இந்தியா, எகிப்து, சீனா ஆகிய நாடுகளில் இந்த நோய் காணப்பட்டுள்ளது. 

எகிப்திய வணிகர்களின் மூலமாக இந்தியாவில் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 735-737 காலத்தில், ஜப்பானின் மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கினர் இந்நோயினால் மாண்டனர். 

ஐரோப்பாவுக்கு எப்போது இது பரவியது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லாவிட்டாலும் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து, உலகம் முழுவதும் ஏராளமான உயிரிழப்புகளுக்கு காரணமாகியது. 
இதை உருவாக்கும் இருவகைக் கிருமிகளில், வேரியோலா மேஜர் கிருமியால் தாக்கப்படுபவர்களில் 20-40 சதவீதத்தினர் மரணமடைந்துவிடுவார்கள். 

வேரியோலா மைனர் கிருமியால் உயிரிழப்பு ஒரு சதவீதம்தான் என்றாலும் தாக்கப்பட்டவர்களில் பெரும்பகுதியினருக்கு பார்வையிழப்பும், நிரந்தரமான தழும்புகளும் ஏற்படும். இந்நோயின் மீதான அச்சத்தால், உலகம் முழுவதும், பல மதங்களிலும் இதற்கென்றே கடவுள்கள் உள்ளனர்! 

எட்வர்ட் ஜென்னர் 1796இல் இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். 
முதன்முதலில் ஒரு நோய்க்குக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி இதுதான். இந்நோய் தாக்கிய பசுவிடமிருந்து தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டதால், பசுவுக்கான லத்தீன் மொழிச் சொல்லான வேக்கா என்பதிலிருந்து வேக்சின் என்ற பெயரை ஜென்னர் சூட்டினார். 

ஆய்வகத்தில் பாதுகாக்கப்பட்ட கிருமிகளால் 1978இல் இருவருக்கு இந்நோய் ஏற்பட்டதும், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் குடியேற்றங்களை அமைத்த இங்கிலாந்து, அங்கிருந்த பழங்குடியினர்மீது உயிரியல் ஆயுதமாக இந்த நோயைப் பரப்பியதும் குறிப்பிடத்தக்கவை. 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?