செவ்வாய், 9 அக்டோபர், 2018

மூடப்படும் "கூகுள் +"

பயனர்களின்  அதிகப்படியான  நம்பிக்கையை சம்பாத்தித்து வைத்துள்ள  கூகுள் நிறுவனத்தை பயன்படுத்தாதவர்களே இருக்க மாட்டார்கள்.  
கூகுள் நிறுவனம் பல செயலிகளைபயனர்களுக்கு வழங்கியுள்ளது.அப்படிப்பட்ட செயலிதான் கூகுள் பிளஸ். கூகுள் நிறுவனத்தை சார்ந்த செயலிகளில் அதிக  பிரபலமாகாத  செயலி தான் கூகுள் பிளஸ். 
ஆரம்பம் முதலே இந்த செயலியை பயனர்கள் அதிகமாக பயன்படுத்தாமல் இருந்தனர். 

இதற்கு காரணமாக பலவற்றை கூறலாம்.
தற்போது கூகுளின் சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ், நிரந்தரமாக மூடப்படுவதாக நேற்று (8.9.18)  அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஊடகம் ஒன்றில் கூகுள் பிளஸ் மூலம் அதன்  பயனர்கள் பற்றிய அந்தரங்கத் தகவல்கள் திருடப்படுவதாக நேற்று பரபரப்பு செய்தியை வெளியிட்டது.
இந்த  செய்தி வெளியான  அடுத்த சில மணி நேரத்திலிருந்து  கூகுள் பிளஸ் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ள கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் பயன்படுத்தும் 5,00,000 பயனர்களின் கணக்குகள் சில டெவலப்பர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக  தெரிவித்துள்ளது.

இதனால் கூகுள் பிளஸில் பதிவிடப்பட்டிருந்த பயனர்களில் பெயர், இ-மெயில் ஐடி, வயது, பாலினம், தொழில் உள்ளிட்ட தகவல்கள் கசிந்துள்ளதாகவும், ஆனால் இதை யாரும் இதுவரை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும்  கூகுள் விளக்கமளித்துள்ளது.

இந்த அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை, எந்த பயனர்களின் கணக்குகளிலும் அதற்கான சாட்சிகளும் இல்லை என்றும் கூகுள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இன்னும் 10 மாதங்களுக்குள் பயனர்ங்கள் தங்களது தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. 
மேலும் ஆகஸ்ட் மாதம் வரை கூகுள் பிளஸ் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.