இன்னும் 7 புயல் இருக்கு

"ஒன்னு இல்ல... ரெண்டு இல்ல.. இன்னும் 7 புயல் இருக்கு... பொங்கல் வரை நமக்கு பலமான மழை இருக்கு" 
என்று சொல்கிறார் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் தகட்டூர் செல்வகுமார்!
 கடந்த சில ஆண்டுகளாகவே 'வாட்ஸ்அப்'பில் ஒரு ஒரு கட்டை குரல் பிரபலமாகி வந்தது. தினமும் வானிலையை கணித்து மழை, புயல், வெயிலின் அளவீட்டைச் சொல்லி வந்த அந்த கரகரத்த குரலுக்கு சொந்தக்காரர் செல்வக்குமார்தான். இவர் மன்னார்குடியை சேர்ந்தவர்.

செருமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர். 1991-ல் இருந்து வானிலை ஆராய்ச்சி பணியினை அறிக்கையாக அளித்து வருகிறார். 
 
முதன்முதலில் டீ கடையில்தான் வானிலை தகவல்களை ஒரு நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டி வைத்து சொல்லி வந்தார்.
வானிலையில் நிலவும் மாற்றங்களை மிக துல்லியமாக கணித்துச் சொல்வதில் கெட்டிக்காரர். இதுவரை இவர் கணித்து சொல்லிய வானிலை தகவல்கள் எதுவுமே சோடை போனதில்லை. இப்போது போன கஜாவை பற்றியும் இவர் முன்னே சொல்லிவிட்டார். தற்போது அடுத்தடுத்த புயல்கள் நம்மை தாக்க போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனால் ஆசிரியர் செல்வகுமாரை ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் மூலமாக சந்தித்தோம். இனிமேல் தமிழ்நாட்டில என்னதான் நடக்க போகுது, நிஜமாவே புயல் வரப்போகுதா, அது எப்படி இருக்கபோகுது என்பதையெல்லாம் கேட்டோம். அதற்கு செல்வகுமார் அளித்த பதில்கள்தான் இவை: 
 
இப்போது வானிலை நிலவரம் எப்படி உள்ளது? 
அடுத்து என்ன நடக்க போகிறது? 
இப்போது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பற்றி ஒரு மாதத்திற்கு முன்னே அதாவது 15-ந்தேதி கஜா புயல் என்றும் 22-ம் தேதி பேத்தாய் புயல் என்றும் நான் சொல்லி இருந்தேன். அதன்படியே இன்று துல்லியமாக காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு முந்தைய நிலையில் உள்ளது. இன்று மதியத்திற்கு மேல் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை காலைக்குள் அது ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை கரையை நெருங்கியவுடன் அது பேத்தாய் புயலாகவும் உருவெடுக்கும்.

பேத்தாய் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும்போதே டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய தொடங்கும். குறிப்பாக டெல்டா மாவட்டத்தின் வடக்கு பகுதி அதாவது சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால், பூம்புகார், காரைக்கால் பகுதி, திருவாரூர் மாவட்டத்தின் பேரிளம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம், பாபநாசம், ஆடுதுறை என்று இதுபோன்ற வடக்கு பகுதிகளில் கனமழை பெய்யும்.
 
 தெற்கு பகுதிகளில் சில இடங்களில் சில மணி நேரம் மட்டுமே கன மழை பெய்யும். நாளை மதியத்திற்கு மேல் இது தீவிரமாகும். அதாவது 21-ம் தேதி இந்த புயல் நாகை மாவட்டத்தின் வடக்கு பகுதியான பூம்புகாருக்கும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கும் இடைப்பட்ட கொள்ளிடம் கடலில் கலக்கும் இடத்தில் கரையை கடக்கும். பரங்கிப்பேட்டைக்கும் தரங்கம்பாடிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் நிச்சயம் கரை கடக்கும். கரையை கடக்கும்போது டெல்டா மாவட்டங்களில் நிச்சயம் நல்ல மழை பெய்யும். 
அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களின் கரையோர பகுதிகளில் மழை ஆரம்பிக்கும். இன்று இரவு முதல் நாளை மதியம் வரை இந்த மழை பெய்யும்.

 இந்த புயல் முடிந்த பிறகு நிலவரம் என்னவாக இருக்கும்? 
 22-ந்தேதி இந்த புயல் அரபிக்கடலில் செயலிழந்து விடும். இது முடிந்தவுடன் 23-ம் தேதி தென் மாவட்டங்கள் அதாவது திருச்சி திருச்சிக்கு தெற்கே உள்ள தென் மாவட்டங்கள், கரூர்-கரூருக்கு தெற்கே உள்ள மாவட்டங்கள், ஈரோடு - ஈரோட்டிற்கு தெற்கே உள்ள மாவட்டங்கள், கோவை என இப்படி இடங்களில் மிதமான மழை பெய்யும். 
ஆனால் கண்டிப்பாக 24-ம் தேதியிலிருந்து 29ம் தேதி வரை மழை இருக்காது.
 அந்த சமயங்களில் கடுமையான வெயில் இருக்கும்.
 அன்றைய தினங்களில் இரவில் பனிப்பொழிவும் நிறைய இருக்கும். 
 
இனி டிசம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது? 
30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை அருகே வரப்போகிறது. மன்னார்வளைகுடாவை அடைந்து ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் மழை வரப்போகிறது. அதாவது நவம்பர் 30, டிசம்பர் 1 நல்ல மழை வரப்போகிறது. அதாவது ஒட்டுமொத்தமாக சொல்லப் போனால், வாரத்திற்கு ஒரு புயல் என உருவாகி வருகிறது. இப்போது கஜா 15-ந் தேதி வந்தது. தற்போது கேத்தார் புயல் 21.ம் தேதி, 29-ம் தேதிக்கு மேல் மற்றொரு தாழ்வு மண்டலம், டிசம்பர் 5-ந் தேதிக்கு மேல் இன்னொரு தாழ்வு மண்டலம், என இப்படியே வாரத்துக்கு ஒன்னு வரப்போகுது. பொங்கல் வரை இந்த மாதிரி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வர உள்ளது. இன்னும் 7 பாக்கி இருக்கு. இந்த தாழவு மண்டலங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நல்ல மழை வரும்.
 
இப்போது வரக்கூடிய பேத்தாய் புயல் பாதிப்பு எப்படி இருக்கும்?
 
 நல்ல மழை இருக்கும். விவசாயிகள் கவலைப்படவே தேவையில்லை. நிலத்தடி நீர் உயரும். அப்போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் பயப்பட வேண்டாம். இந்த காற்றின் வேகம் கஜாவில் பாதி சக்திதான். சீர்காழி, திருமுல்லைவாசல், கொள்ளிடம், சிதம்பரம் பிச்சாவரம், பரங்கிப்பேட்டையில் கூடுதலான காற்று வரும் என்பதால் அந்த பகுதி மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். இந்த பகுதிகளில் வீட்டில் உள்ள மரங்களை, அதாவது வேர் கம்மியாக உள்ள மரங்களை கழித்துவிட்டால் வீடுகள் சேதமடையாது. ஆனால் மாமரங்கள் விழாது. அதன் வேர் பலமானது. இவ்வாறு செல்வகுமார் கூறியுள்ளார்.
நன்றி:ஒன் னிந்தியா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?