வியாழன், 1 நவம்பர், 2018

காவிகளுக்கு சொந்தமா வல்லபாய் பட்டேல்?


சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 600 அடி உயரம் கொண்ட சிலை சுமார் ரூ.3,000 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டு அக்டோபர் 31 புதனன்று பிரதமர் மோடியால், படாடோபமாக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டள்ளது.
 இவ்வளவு செலவு செய்த சிலை கூட “மேக் இன் சைனா”வாக உள்ளது என்பதுதான் நகை முரண்! 
சூழலியலாளர்களின் ஆட்சேபணைக்கும் உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்புக்கும் இடையே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வல்லபாய் பட்டேலை முன்நிறுத்த சங்பரிவாரம் பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அதன் ஒரு பகுதியே பிரம்மாண்ட சிலை. படேலை முன்னிறுத்துவதற்காக, ஆர்எஸ்எஸ்- பாஜக பரிவாரம், ஜவஹர்லால் நேருவை எதிரியாக கட்டமைக்க முயல்கின்றது.
 மறைமுகமாக காந்திஜியையும் சிறுமைப்படுத்துகின்றனர். காந்திஜி, நேரு, பட்டேல் ஆகியோரிடையே ஒருமித்த கருத்துகளும் இருந்தன; வேறுபாடுகளும் இருந்தன. 
அதே சமயத்தில் மூன்று தலைவர்களும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முதலாளித்துவத்தின் நலன்களை வெவ்வேறு வடிவங்களில் பிரதிபலித்தனர் என்பதே வரலாற்று உண்மை!
காந்தியின் பங்கு
விடுதலை போராட்டத்தில் இந்திய முதலாளித்துவத்தின் தலைசிறந்த பிரதிநிதியாக காந்திஜி உருவானார். 
பட்டிமன்ற மேடையாக இருந்த காங்கிரசை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருமை காந்திஜியையே சாரும். விடுதலை போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களையும் ஈடுபடவைக்க முயன்றார். சாதாரண மக்கள், முஸ்லிம்கள், இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்கள் அனைவரையும் அரவணைக்க விரும்பினார். 
அதே சமயம் தனது எல்லைக் கோட்டை இயக்கம் மீறாமல் இருப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தினார்.
சூழலுக்கு ஏற்ப தனது இரண்டு முக்கிய தளபதிகளான நேருவையும் வல்லபாய் பட்டேலையும் காந்திஜி பயன்படுத்திக் கொண்டார். பிரிட்டிஷாருக்கு எதிராக களத்தில் போராடும் பொழுது இடதுசாரி இளம் போராளிகளின் ஆதரவைப் பெற்ற நேருவை தலைவராக ஆக்கினார். 
அதே சமயத்தில் சமரசம் தேவைப்படும் பொழுது பட்டேல் காங்கிரஸ் தலைவர் ஆனார். எவ்வளவு முரண்பாடு இருந்தாலும் காந்திஜியின் சொல்லுக்கு இருவரும் கட்டுப்பட்டனர்.

பர்தோலி எனும் இடத்தில் 1928ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் நிலவரி சுமையை எதிர்த்து விவசாயிகள் போராடினர். இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை வல்லபாய் பட்டேலிடம் காந்திஜி ஒப்படைத்தார். ஒரு சிறிய பகுதியில் பிரிட்டிஷாரை எதிர்த்து வெல்ல முடியும் எனும் மகத்தான சாதனையை இப்போராட்டம் வெளிப்படுத்தியது. 
இந்த போராட்டத்தின் தளபதியாக செயல்பட்ட வல்லபாய் பட்டேல் “சர்தார்” – அதாவது மாபெரும் தலைவன் எனும் பட்டம் பெற்றார். 
அப்பட்டம் நிலைத்து நின்றது.
பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எதிராக விவசாயிகள் போராடிய பொழுது அவர்கள் பக்கம் நின்ற சர்தார் அதே விவசாயிகள் இந்திய ஜமீன்தார்களுக்கு எதிராக போராடிய பொழுது ஆதரிக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எனும் எதிரி வர்க்கத்தை எதிர்த்த பட்டேல் உள்ளூர் ஆளும் வர்க்கமான நிலபிரபுத்துவத்தை எதிர்க்க முன்வரவில்லை. 
இந்த முரண்பாடு பட்டேலின் வர்க்கப் பார்வையை வெளிப்படுத்துகிறது. இதுதான் காந்திஜி, நேரு உட்பட காங்கிரசின் தலைவர்களில் பெரும்பாலோர் கொண்டிருந்த வர்க்க அணுகுமுறையாக இருந்தது!
நேரு பட்டேல் இடையே ஒருமித்த கருத்துகள்!
பல முக்கிய முடிவுகளில் நேருவும் பட்டேலும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர். 
உதாரணத்திற்கு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையில் நேரு பட்டேல் இடையே ஒருமித்த கருத்து இருந்தது. இப்பிரச்சனையில் இருவரும், பிரிவினை கூடாது எனும் காந்திஜியின் கருத்தை நிராகரித்தனர். 
இந்தியாவின் வளங்களையும் உழைப்பாளிகளையும் சுரண்டும் உரிமையை பெறுவதற்கு பிரிவினை தவிர்க்க முடியாதது எனில் அதனை ஏற்கலாம் எனும் இந்திய முதலாளித்துவ கருத்தை நேருவும் பட்டேலும் பிரதிபலித்தனர். 
மாற்றுக் கருத்தை கொண்டிருந்த காந்திஜியை முதலாளித்துவம் கைகழுவியது எனில் மிகை அல்ல.
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதில் காந்திஜி போதிய அழுத்தம் தரவில்லை! 
அப்பொழுது வல்லபாய் பட்டேல்தான் காங்கிரஸ் தலைவர். பட்டேல் காந்திஜியின் பக்கம் நின்றார். 
ஆரம்பத்தில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் நேருவும் அவர்கள் பக்கம் சாய்ந்தார். காஷ்மீருக்கு 370வது பிரிவு பொருத்துவதில் நேருவுக்கும் பட்டேலுக்கும் ஒரே கருத்துதான் இருந்தது.
நேருவை தலைவர் பொறுப்பில் அமர்த்தினாலும் அவரது முற்போக்கு கருத்துகள் எதுவும் தன்னை மீறி அமலாகாமல் இருப்பதை காந்திஜி உத்தரவாதம் செய்து கொண்டார். 

காந்திஜியின் இந்த கடிவாளத்திற்கு உறுதுணையாக இருந்தது பட்டேல்தான்! 
இடதுசாரிக் கருத்துகளை முழங்கிய அளவுக்கு அவற்றை அமலாக்குவதில் நேரு முனைப்பு காட்டவில்லை. 
ஆகவே வல்லபாய் பட்டேலின் இடத்தை நேரு பறித்துக் கொண்டார் எனவும் அதற்கு காந்திஜி துணை புரிந்தார் எனவும் சங்பரிவாரம் கூறுவது உண்மை அல்ல! 
ஒரு காலனியாதிக்க தேசத்தில் காந்திஜி, நேரு, பட்டேல் மூவரும் இந்திய முதலாளித்துவத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தனர். 
அவர்களது வர்க்கக் கடமையை நிறைவேற்றுவதில் அவர்களிடையே எந்த வேறுபாடும் இல்லை.
வல்லபாய் பட்டேல் “இரும்பு மனிதரா”?
இந்தியாவின் இரும்பு மனிதர் என பட்டேல் போற்றப்படுகிறார். இதற்கு முக்கியக் காரணம் அவர் 560க்கும் அதிகமான சமஸ்தானங்களை இந்தியாவில் இணைத்ததுதான் எனும் பொதுவான கருத்து உள்ளது. ஆனால் வரலாற்று பதிவுகள் வேறு செய்தியை முன்வைக்கின்றன.
1947ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஹைதராபாத், காஷ்மீர், ஜுனாகத் ஆகிய மூன்று தவிர மற்ற அனைத்து சமஸ்தானங்களும் இந்திய ஒன்றியத்தில் இணைந்துவிட்டன. 
இந்த சமஸ்தானங்கள் மிக மிகச் சிறியவை! 
இந்திய ஒன்றியத்துடன் இணைவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. 
இவற்றை வழிக்கு கொண்டுவர “இரும்பு மனிதர்” தேவையாக இருக்கவில்லை.
562 சிறிய சமஸ்தானங்களை இணைப்பதில் மிகப்பெரிய பங்கை ஆற்றியது மவுண்ட் பேட்டன் பிரபுவும் பட்டேலின் அமைச்சக செயலாளர் வி.பி. மேனனும்தான்! 
இந்த இருவர்தான் ஒவ்வொரு சமஸ்தானத்துடனும் பேசியும் மிரட்டியும் இந்திய ஒன்றியத்தில் இணைய வைத்தனர். பட்டேலிடம் தவறாது தகவல்களையும் அவ்வப்போது தெரிவித்தனர். 
ஆகவே சமஸ்தானங்கள் இணைப்பின் முதல் கட்டத்தில் பட்டேலின் பணியைவிட வி.பி. மேனன் மற்றும் மவுண்ட் பேட்டன் பங்கு மிக முக்கியமானது. காஷ்மீர் இந்தியாவில் இணைந்ததில் பட்டேல், நேரு, காந்திஜி, ஷேக் அப்துல்லா ஆகிய அனைவருக்கும் முக்கியப் பங்கு இருந்தது. 
ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்ததில் பட்டேலின் பங்கு மிக முக்கியமானது. எனினும் தேவையில்லாமல் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் எனும் குற்றச்சாட்டும் உள்ளது.

காஷ்மீரை பாகிஸ்தானுக்கு பேரம் பேசினாரா பட்டேல்?
காஷ்மீர் பிரச்சனைக்கு நேருதான் காரணம் எனவும் பட்டேல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சனையே எழுந்திருக்காது எனவும் மோடியும் சங்பரிவாரத்தினரும் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் உண்மை என்ன?

ஹைதராபாத் மன்னர் நிஜாம், பாகிஸ்தானுடன் இணைய முயற்சித்தார். 
பாகிஸ்தானும் அவ்வாறு கோரியது. அது வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு சிக்கல் என பட்டேல் நினைத்தார். 
எனவே ஹைதராபாத்தை விட்டுத் தந்தால் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு தருவது குறித்து தாம் பரிசீலிக்க தயாராக இருப்பதாக பட்டேல் பாகிஸ்தானின் லியாகத் அலிகானிடம் கூறினார்.
ஆனால் ஹைதராபாத் வேண்டும் என பாகிஸ்தான் பிடிவாதமாக இருந்தது. இறுதியில் பாகிஸ்தான் ஹைதராபாத்தையும் பெறவில்லை. காஷ்மீரையும் முழுமையாக பெறவில்லை. எனினும் பட்டேல் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு பேரம் பேசினார் எனும் உண்மையை சங்பரிவாரத்தினர் மறைக்கின்றனர்.
ஜுனாகத் பகுதி எளிதாக இந்தியாவுடன் இணைந்தது. 
எனினும் ஹைதராபாத் மறுத்தது. இதன் காரணமாக இந்திய காவல்துறைக்கும் நிஜாம் படையினருக்கும் போர் ஏற்பட்டது. நிஜாம் படைகளின் தோல்விக்கு இந்தியப் படை மட்டுமே காரணம் அல்ல! அப்பொழுது தெலுங்கானா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கம்யூனிஸ்டுகளும் நிஜாம் படையினரை விரட்டினர். இந்த உண்மை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. 
நிஜாம் வீழ்ந்த பிறகு பட்டேல் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினார். இதனை நேருவும் ஆட்சேபிக்கவில்லை!

காந்திஜி படுகொலை- பட்டேலின் கவனக்குறைவு காரணமா?
விடுதலைக்குப் பிறகு நேரு- பட்டேல் இடையே இருந்த இடைவெளி அதிகரித்தது. முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி ஜனாதிபதி ஆவதை நேரு விரும்பினார். 
ஆனால் அவருக்கு பதிலாக இந்து மதவாத ஆதரவாளரான ராஜேந்திர பிரசாத்தை ஜனாதிபதியாக ஆக்குவதில் பட்டேல் வெற்றி பெற்றார். மவுலானா அபுல் கலாம் ஆசாத்தை அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது என பட்டேல் வலியுறுத்தினார். 
இந்து மகாசபையினரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் காங்கிரசில் இணைய வேண்டும் என கமிட்டியில் தீர்மானத்தையும் கொண்டுவந்தார். 
அப்போது நேரு வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்தார். 
இந்தியா திரும்பியவுடன் இந்த தீர்மானத்தை நேரு திரும்ப பெறவைத்தார். இத்தகைய நிகழ்வுகள் நேரு- பட்டேல் இடையே இடைவெளியை அதிகரித்தது.
காந்திஜி மீது உயிரினும் மேலான பக்தி நேரு,பட்டேல் இருவருக்கும் இருந்தது. எனினும் காந்திஜி படுகொலைக்கு பிறகு பட்டேல் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். 
மதவாத கருத்துக்கள் இல்லாத ஒருவர் உள்துறை அமைச்சராக இருப்பதை நான் விரும்புகிறேன் என ஜெயபிரகாஷ் நாராயணன் பகிரங்கமாக கூறினார்.
ஜனவரி 20ஆம் தேதியன்று, அதாவது காந்திஜியின் படுகொலைக்கு 10 நாட்கள் முன்பு அவரது பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிக்கிறது. காந்திஜி தப்பிவிட்டார். 
குண்டு வைத்த மதன்லால் பாக்வா எனும் நபர் கைது செய்யப்படுகிறார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு குழுவே காந்திஜியை கொல்ல சதி செய்வதும் இதன் சூத்திரதாரி சவர்க்கார் என்பதும் வெளிவருகிறது. இந்த விவரங்கள் முழுவதும் பட்டேலுக்கு தெரிவிக்கப்படுகிறது. 
எனினும் 10 நாட்கள் அவகாசம் இருந்தும் பட்டேல் இந்த சதியை முறியடிக்க எதுவும் செய்யவில்லை. ஜனவரி 30 அன்று காந்திஜி கொல்லப்படுகிறார்.
பட்டேலின் கவனக்குறைவு அல்லது அலட்சியமே காந்திஜியின் படுகொலைக்கு காரணம் என வலுவான கருத்து உருவானது. 
இந்த விமர்சனம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய பட்டேல் முன்வந்தார். ஆனால் பட்டேலின் ராஜினாமாவை நேரு ஏற்க மறுத்தார். 

பட்டேலை ஓரம் கட்ட வேண்டும் என நேரு நினைத்திருந்தால் இது ஒரு பொன்னான தருணம். ஆனால் நேரு அவ்வாறு செய்யவில்லை.
கம்யூனிஸ்டுகளையும் சோசலிஸ்டுகளையும் பட்டேல் மிகவும் வெறுத்தார். பிர்லா மாளிகையில் ஐ.என்.டி.யூ.சி அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் தொழிற்சங்க ஒற்றுமையை அரசியல் காரணத்திற்காக உடைத்த முதல் நபராக பட்டேல் செயல்பட்டார். 
இந்தச் செயல் மூலம் இந்திய முதலாளிகளுக்கு மிகப்பெரிய நன்மையை பட்டேல் செய்தார்!
இந்திய விடுதலைப் போராட்டத்தில் சர்தார் பட்டேலின் மகத்தான பங்கு மறுக்க முடியாத ஒன்று! எனினும் அவரது இறுதிக் காலத்தில் இந்திய பன்முகத்தன்மை குறித்த பட்டேலின் கருத்து விமர்சனத்திற்குரியதாக இருந்தது. 
பட்டேலின் பெருமை பேசுவது தவறு அல்ல! 
ஆனால் அதற்காக நேருவையும் காந்திஜியையும் சிறுமைப்படுத்தும் சங்பரிவாரத்தின் செயல் கண்டிக்கத்தக்கது. 
சர்தார் வல்லபாய் பட்டேல் எனும் விடுதலை வீரர் இந்தியா முழுமைக்கும் சொந்தமானவர். 
அவரின் செயல்கள் பல ஒரு இந்து சார்பாக இருந்தாலும் ,அது சராசரி இன்றைய இந்தியன் மனநிலை அதை மட்டுமே கொண்டு அவரை தனது பிம்பம் என சங்பரிவாரம் நிலைநாட்ட முயல்வது வரலாறை மாற்றி எழுதும் செயல்.
                                                                                                                                        - அ.அன்வர் உசேன்
தகவல்கள்: 
இந்திய விடுதலை போராட்டத்தின் வரலாறு/இ.எம்.எஸ். 
 நுரானியின் பிரண்ட்லைன் 2013 டிசம்பர் இதழ் கட்டுரை
பட்டேல் வாழ்க்கை வரலாறு/ராஜ் மோகன் காந்தி.
நன்றி:தீக்கதிர் 
=======================================================================================
ன்று,
நவம்பர்-01.

  • அல்ஜீரியா தேசிய தினம்
  • நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர மாநிலமாக்கப்பட்டது(1956)
  • இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ்(பின்னர் தமிழ்நாடு) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)
  • கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது ( 1956)
  •   நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நினைவு தினம்.(1959 )
  • மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)

எம்.கே.தியாகராஜ பாகவதர்: 
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், கிருஷ்ணமூர்த்தி -- மாணிக்கத்தம்மாள் தம்பதிக்கு, 1910, மார்ச் 1ல் பிறந்தார்.
 கர்நாடக இசையை, முறையாக கற்று தேர்ந்த இவர், 1926ல், திருச்சி, பொன்மலையில், பவளக்கொடி என்ற நாடகத்தில்,அர்ஜுனனாக நடித்தார். 

அது, 1934ல், திரைப்படமாக வெளியாகி, வெற்றி பெற்றது. அதில் இடம் பெற்றிருந்த, 55 பாடல்களில், 22 பாடல்களை, தியாகராஜ பாகவதர் பாடியிருந்தார்.

இவர் நடித்த,நவீன சாரங்கதாரா, சத்தியசீலன்,சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக் குமார்,சிவகவி, ஹரிதாஸ்ஆகியவை,வெற்றிப் படங்களாக அமைந்தன. 

ஹரிதாஸ் படத்தில் இடம் பெற்ற, 'மன்மத லீலை...' என்ற பாடல் பிரபலமானது.லட்சுமிகாந்தன் என்பவர் கொலை வழக்கில், பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். 
பின், வழக்கில் இருந்து, இருவரும் விடுவிக்கப்பட்டனர். 

சிறையிலிருந்து வெளி வந்ததும், இவர் நடித்த,ராஜமுக்தி, அமரகவிஉள்ளிட்ட படங்கள், சரிவர ஓடவில்லை. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். 

மக்கள் மத்தியில்  இவரின் செல்வாக்கு மட்டுமல்ல ,கண் பார்வையும்  படிப்படியாக  மங்கி வந்தது.
1959, நவம்பர்  1ல் காலமானார். 
========================================================================================
தமிழகம் 

இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்பட்ட  நாளின்று . 
 சுதந்திரம் வாங்கி எட்டாண்டுகள் வரை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி “மெட்ராஸ் பிரசிடென்சி’யாகத்தான் செயல்பட்டு வந்தது. 

1956ம் ஆண்டு நவ., முதல் தேதி மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 

கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய மெட்ராஸ் ஸ்டேட் உருவானது. 

தொடக்கத்தில் மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற பெயரில் 
அழைக்கப்பட்டன. பின்னர்தான் தற்போதைய பெயர்கள் இடப்பட்டன. 

1968ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது.

முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் மதராசைத் தலைமையிடமாகக் கொண்டு, ஆந்திரப்பிரிவினையைக் கோரினார். 
1952 அக்., 14ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். ஆந்திரத்தலைவர்கள் பிரகாசம், சாம்பமூர்த்தி ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். “மதராஸ் மனதே’ என்ற கோஷத்துடன் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவை, ம.பொ.சிவஞானம் சந்தித்தார். அப்போது பிரகாசம் ம.பொ.சி.,யிடம் “ராமுலுவின் உயிரைக்காக்க உதவுங்கள்’ எனக்கோரிக்கை விடுத்தார். ஆனால் மெட்ராசை விட்டு விட்டு ஆந்திராவை மட்டும் பிரிக்கக் கோரினால் தாமும் தமிழரசுக் கழகமும் உதவுவதாக மா.பொ.சி., உறுதியாகத் தெரிவித்து விட்டார்.
“ஆந்திர அரசு தற்காலிகமாக சென்னையில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்; விசால ஆந்திரம் அமையும் போது, ஹைதராபாத் கிடைத்து விட்டால் அங்கு போய்விடுவோம். நீங்கள் சம்மதித்தால் மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்’ என்று அவர்கள் தந்திரமாகக் கேட்ட போதும், ம.பொ.சி., தன் நிலையில் இருந்து பின்வாங்கவில்லை.
1952, டிச., 15ல் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தின் போதே உயிர் துறந்தார். 
ஆந்திராவில் கலவரம் வெடித்து, மூன்று நாட்கள் நீடித்தது.
இதன் பிறகு நேரு ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க சம்மதித்து வெளியிட்ட தன் அறிக்கையில், “சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமல்லாத, தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும். தலைநகர் பின்னர் அறிவிக்கப்படும்’ எனக் குறிப்பிட்டார்.
சித்தூர் மாவட்டத்தின் தென் பகுதிகள் தமிழகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழரசுக் கழகம் வலியுறுத்தி வந்தது. 
இதனால், ஆந்திராவுடன் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியது.
“கூவத்தை அடிப்படையாகக் கொண்டு, தென்சென்னை தமிழகத்தின் தலைநகராகவும், வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும் செயல்படலாம். அல்லது சென்னை நகரம் இரு மாநிலங்களுக்கும் பொதுநகராக இருக்க வேண்டும்’, என்ற கோரிக்கையை பிரகாசம் வலுவாக முன்வைத்தார். அப்போது சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மேனாக இருந்த ம.பொ.சி., இதற்குச் சம்மதிக்காததோடு, கடும் எதிர்ப்பையும் தெரிவித்தார். “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் துவக்கினார். 
அப்போதைய மேயர் செங்கல்வராயனின் உதவியுடனும், முதல்வர் ராஜாஜியின் ஆதரவுடனும் திருவல்லிக்கேணி கடற்கரையில், எஸ்.எஸ்.,கரையாளர், பக்தவத்சலம், ராஜாஜி, ஈ.வே.ரா., போன்ற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார்.
இவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, “ஆந்திர தலைநகர் ஆந்திராவுக்குள்ளேயே இருக்கும்’ என நேரு அறிவித்தார்.ம.பொ.சி., ஆல்டர்மேனாக இருந்த போதுதான் ஆங்கிலேயேர்கள் சென்னை மாநகராட்சிக்கு வடிவமைத்திருந்த கொடியை மாற்றி மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்களுடன் கூடிய தற்போதைய இலச்சினையைப் பொறித்தார்.
 மாநகராட்சியின் வரவு செலவுக்கணக்கை முதன்முதலில் தமிழிலேயே தாக்கல் செய்தார்.
“மதராஸ் மனதே’ கோஷத்தை முன்வைத்து பொட்டிஸ்ரீராமுலு நடத்திய மிஷன் மெட்ராஸ் படுதோல்வி அடையக்காரணம் ம.பொ.சி.,யும், ராஜாஜியும்தான். ராஜாஜிக்கு எதிராக தெலுங்கர்கள் “ராஜாஜி சாவாலி; ஆந்திர ராஷ்ட்ரம் ராவாலி’ எனக் கோஷம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
” உரிமைக்கு எல்லை வேங்கடம்(திருப்பதி); உறவுக்கு எல்லை இமயம்’ என ம.பொ.சி., எல்லைப் போராட்டம் திருப்பதியை மீட்டுத்தர இயலாவிட்டாலும் திருத்தணியைத் தக்கவைக்க உதவியது .
மெட்ராஸ் பிரசிடென்சி

முதலில், 1953ல் குர்நூலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. 
1956ல் தெலங்கானா ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட பின்னரே, ஹைதராபாத் தலைநகராக மாற்றப்பட்டது நினைவுகூறத்தக்கது..
மேலும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் தமிழகம் பயனடைந்ததை விட இழந்ததே அதிகமாகும். கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி உள்ளிட்ட தலைவர்களின் தொடர் போராட்டத்தால் தமிழகத்துடன் இணைக்கப் பட்டது என்றாலும், தமிழர்கள் வாழும் பல பகுதிகள் ஆந்திரா மற்றும் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.
தமிழர்கள் அதிகம் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டதால் தான் முல்லைப் பெரியாறு தீராத சிக்கலாக மாறியிருக்கிறது. 
அதேபோல், வடாற்காடு மாவட்டத்தின் பெரும்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட பகுதிகளில் தான் அதிக எண்ணிக்கையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. 
கே. வினாயகம், ம.பொ.சி. உள்ளிட்ட தலைவர்கள் வட எல்லை மீட்புக் குழு அமைத்து போராடியிருக்காவிட்டால் தமிழகத்தின் மேலும் பல பகுதிகள் ஆந்திரத்திற்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும். தலைநகர் சென்னை கூட நமக்கு சொந்தமாக இருந்திருக்குமா? என்பது சந்தேகம் தான். 
தமிழகத்தின் நிலப்பகுதியை பாதுகாப்பதற்காக போராடிய தலைவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் எதற்காக போராடினார்களோ, அதை சாதிக்க நாம் பாடுபட வேண்டும்.
அத்துடன் தமிழ்நாடு என மதராஸ் மாநிலத்துக்கு பெயர் இட வேண்டும் என கோரி நிஜமாலுமே உண்ணாவிரதம் -அதுவும் 60 நாட்கள் இருந்து உயிரை  விட்ட விருதுநகர் சங்கரலிங்கம் அவர்களையும் ஒவ்வொருவரும் நினைவு கூற வேண்டியது அவசியம்.
காங்கிரஸ் ஆளும் வரை பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.1968இல்  திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அண்ணா தீர்மானம் நிறைவேற்றி விருதுநகர் சங்கரலிங்கம் கனவை நினைவாக்கினார்.
============================================================================================