நான் ஏன் பாஜகவிலிருந்து விலகினேன் ?
-சிவம் சங்கர் சிங்.
பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் குழுவில் அங்கம் வகித்து வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டவர் சிவம் சங்கர் சிங்.
ஒரு நாட்டையோ அல்லது ஒரு சமூக அமைப்பையோ உருவாக்குவதற்கு பல நூறு ஆண்டுகளாகும். அவ்வாறு உருவாகியிருந்த மிக உயரிய நம் சமூக அமைப்பை அற்பக் காரணங்களுக்காக பாஜக சின்னாபின்னமாக்கி சிதற அடித்துவிட்டது.
எனவேதான் நான் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்என்று சிவம் சங்கர் சிங் கூறியிருக்கிறார்.
தான் விலகியதற்கான முக்கியமான காரணங்கள் என்று அவர் பட்டியலிட்டிருப்பதில் ஒருசில பின்வருமாறு:
தேர்தல் பத்திரங்கள்
பாஜக கொண்டுவந்திருக்கும் தேர்தல் பத்திரங்கள் அடிப்படையில் ஊழலை சட்டப்பூர்வமாக்கிவிட்டது. இது கார்ப்பரேட்டுகளும், அந்நிய நாடுகளும் நம் அரசியல்கட்சிகளை (விலைக்கு) வாங்குவதற்கு அனுமதிக்கிறது.
ஆட்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை நிறைவேற்றினால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்குவேன் என்று ஒரு கார்ப்பரேட் கூறினார் என்றால் அவர்மீது எவ்விதமான வழக்கும் தொடர முடியாது.
ஆட்சியாளர்கள் லஞ்சப் பணத்தை நேரடியாக வாங்காமல் தேர்தல்பத்திரங்கள் மூலமாக வாங்கினார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழலில் வழக்கு எதுவும் தொடர முடியாது.
திட்டக் குழு ஒழிப்பு
திட்டக் கமிஷன் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது.
நாட்டில்நடைபெற்றுவந்த திட்டங்கள் தொடர்பான தரவுகளைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இதன் மூலம் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது.
இதற்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் என்னும் அமைப்பிடமிருந்து இவற்றையெல்லாம் பெற்றுவிட முடியாது.
சிபிஐ/அமலாக்க இயக்குநரகம் முறைகேடு
மோடி/அமித்ஷாவிற்கு எதிராக எவர் பேசினாலும் அவர்மீது மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும், அமலாக்க இயக்குநரகமும் ஏவப்படுகின்றன.
இத்தகைய செயலானது, ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத கூறாகவிளங்கும் கருத்துவேறுபாடு தெரிவித்தல் என்னும் சிந்தனையோட்டத்தையே கொல்வதற்குப் போதுமானது.
முக்கிய வழக்கு விசாரணைகளில் தோல்வி
அருணாசலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்காலிகோ புல் அவர்களுடைய தற்கொலைக் குறிப்பு,நீதிபதி லோயா மரணம், சொராபுதீன் கொலை, உன்னோவோவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்டதும், அவரைகொலை செய்த கயவர்கள்மீதான வழக்கு ஆகியவற்றில்புலன்விசாரணைகள் உரியமுறையில் மேற்கொள்ளப்படாமல் தோல்வி அடைந்துள்ளன.
பண மதிப்பிழப்பு
எல்லாவற்றிலும் முக்கிய மானது .ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது பாஜக மோடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது.
எனினும் அதனை பாஜக இன்னமும் ஏற்க மறுக்கிறது.
பயங்கரவாதிகளுக்குப் பணம்வருவது தடுக்கப்படும், ஊழல் ஒழிக்கப்படும் என்றுசொன்னதெல்லாம் அபத்தமாகிப்போயின. நடைமுறையில் இது நாட்டின் வர்த்தகங்களை ஒழித்துக்கட்டியது.
ஜிஎஸ்டி அமலாக்கம்
ஜிஎஸ்டி மிகவும் அவசரகதியில் அமலாக்கப்பட்டது.
இது நாட்டின் வர்த்தகத்திற்குத் தீங்கு விளைவித்திருக்கிறது. சிக்கலான கட்டமைப்பு, பல்வேறு பொருள்களுக்கு பல்வேறு வரிவிகிதங்கள் போன்றவை மிகவும் தீங்கிழைத்திருக்கின்றன.
இவ்வாறு ஜிஎஸ்டி படுதோல்வி அடைந்தபின்னரும் அதனை ஏற்க பாஜக மறுப்பது அதன் ஆணவத்தையே காட்டுகிறது.
அயல்துறைக் கொள்கை
அயல்துறைக் கொள்கையில் மிகவும் குளறுபடி செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனா, இலங்கையில் ஒரு துறைமுகத்தைப் பெற்றிருக்கிறது.
வங்க தேசத்திலும் பாகிஸ்தானிலும் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு இந்தியாவைச் சுற்றிலும் அது செல்வாக்கை செலுத்துகிறது.
மாலத்தீவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு மரியாதையே கிடையாது. இனி இந்தியர்களுக்கு விசா அளிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.
உண்மை நிலைமை இவ்வாறிருக்கையில் உலகம் முழுதும் சுற்றிவரும் பிரதமர் மோடியோ 2014க்கு முன்னர்வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது என்று கூறிவருகிறார்.
இது உளறல்நிறைந்த வெட்டிப்பேச்சாகும்.
சரியாகச் சொல்லப்போனால் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களைக் கொல்வது, பத்திரிகையாளர்களைக் கொல்வது போன்ற இவர்கள் ஆட்சியில் நடைபெற்றுவரும் இழிசெயல்கள் மூலமாகத்தான் ஏற்கெனவே இந்தியாவிற்கு இருந்துவந்த நல்ல பெயர் தற்போது வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
மோடி அரசின் திட்டங்கள் அனைத்தும் தோல்வி
மோடி அரசு கொண்டு வந்த சன்சாத் ஆதர்ஷ் கிராம்யோஜனா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம், திறன்வளர்ச்சி, பயிர் இன்சூரன்ஸ் திட்டம் போன்ற அனைத்துத் திட்டங்களுமே படுதோல்வி அடைந்திருக்கின்றன. பயிர் இன்சூரன்ஸ் திட்டம் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பைகளைத்தான் நிரப்பி இருக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் நெருக்கடி ஆகியவற்றைத் தீர்த்திட எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெட்ரோல், டீசல்விலைகளை காங்கிரசார் உயர்த்திவிட்டதாக மிகவும்ஆக்ரோஷமாகக் கூறிவந்தனர். ஆனால் இப்போது என்னநிலை? கச்சா எண்ணெய் விலை மலிவாகக்கிடைத்தபோதும், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி இருக்கிறார்கள்.
இதனை எவ்விதத்திலும் ஏற்க முடியாது.
கல்வி-சுகாதாரம்
மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின்மீது அக்கறையே செலுத்தவில்லை.
அரசாங்கப்பள்ளிகளின் தரம் தாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இதனை மேம்படுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று சுகாதாரப் பாதுகாப்பிற்காகவும் எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.
இப்போது ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவும் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் நலத்திற்குத்தான் பயனளிக்குமேயொழிய மக்களின் சுகாதார நலனுக்கானது அல்ல.
மோடியின் இழிவான -அசிங்கமான திட்டங்கள்
இவை எல்லாவற்றையும்விட இந்த அரசாங்கத்தின் மிகவும் அசிங்கமான விஷயங்களும் உண்மையில் இருக்கின்றன. இவற்றை இந்த அரசாங்கத்தின் தோல்விகள் என்று சொல்லமுடியாது. மாறாக, இதன் இழிவான திட்டங்கள் என்றுதான் கூறவேண்டும்.
l இந்த அரசாங்கம் ஊடகங்களை மிகவும் இழிவாக நடத்திக் கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்போர் அனைவரையும் பத்திரிகையாளர்களாகவே ஏற்றுக்கொள்வதில்லை.
அவர்கள் அனைவரும் காங்கிரசின் ஊழியர் பட்டியலில் இருப்பதாகக் கூறுகிறது.
இத்தகைய விமர்சனங்கள் உண்மையல்ல என்று எனக்கு நன்றாகத் தெரியும். இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவென்றால் அவர்கள் எழுப்பும் பிரச்சனையைப் பற்றிக் கவலைப்படாமல், அவ்வாறு பிரச்சனையை எழுப்பியவரைத் தாக்கும் நிலைக்கு இந்த அரசு செல்வது என்பதேயாகும்.
l இந்த அரசாங்கம், கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில்
எதுவுமே நடக்கவில்லை என்று ஒரு கதையை அவிழ்த்து
விட்டிருக்கிறது.
இது நிச்சயமாக தவறு.
மேலும் இந்த அரசாங்கம் நாலாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக விளம்பரத்திற்காக செலவு செய்திருக்கிறது. அது யாருடைய பணம்?
அனைத்தும் சாமானிய மக்களின் வரிப்பணம். மிகவும் சிறிய வேலையைச் செய்வது. பின்னர் பெரியஅளவில் விளம்பரம் தேடுவது.
நாட்டில் உள்ள சாலைகளை அமைத்தவர்களில் முதல் நபர் மோடி அல்ல.
நான்பயணித்த மிகச்சிறந்த சாலைகளில் சில, உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோது அமைக்கப்பட்டவை, சில அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது அமைக்கப்பட்டவைகளாகும்.
இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறையில் உலக அளவில் சிறந்து விளங்குவது என்பது
1990களிலேயே துவங்கிவிட்டது.
கடந்த கால செயல்பாடுகளையும், கடந்த கால தலைவர்களையும் இன்றைய சூழ்நிலையில் நிந்தனை செய்வதுஎன்பது எளிது.
நேருவின் பாதை
உதாரணமாக ஒருவர் கேட்கலாம்: “கடந்த 70 ஆண்டுகளில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி கழிப்பிடங்களை ஏன் கட்டவில்லை?
மக்களுக்கு அடிப்படைத் தேவைகளாகஉள்ள சிலவற்றை அவர்களால் ஏன் செய்ய முடியவில்லை?” இந்தியாவின் வரலாற்றைப் படிக்கும் வரைக்கும்இதுபோன்ற விமர்சனங்களை நானும் நம்பினேன்.
1947இல் நம் நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் மிகவும் வறிய நிலையில் நம் நாடு இருந்தது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கான வளங்களோ, மூலதனமோ நம்மிடம் கிடையாது.
இவற்றைச் சமாளிப்பதற்காக நேரு, சோசலிச நாடுகள் மேற்கொண்டுவந்த பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்.
உருக்காலையை உருவாக்குவதற்கான வல்லமையை நாம் பெற்றிருக்கவில்லை. எனவே ரஷ்யாவின் உதவியுடன் அதனைச் செய்தோம்.
ராஞ்சியில் கனரக இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் அமைக்கப்பட்டது. அதன் மூலமாக இந்தியாவில் உருக்கு உருவாக்கப்பட்டது. இது அமையாதிருந்திருந்தால் நமக்கு உருக்கு கிடைத்திருக்காது.
அதன் அடிப்படையிலான கட்டமைப்பு வசதிகளையும் பின்னர் நம்மால் பெற்றிருக்க முடியாது.
பொய் மூட்டைகள்
நம்நாட்டில் அடிக்கடி வறட்சிகள் ஏற்படும்.
அதனால்ஒவ்வொரு 2, 3 ஆண்டுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பட்டினியால் மடிந்துகொண்டிருந்தார்கள்.
எனவே மக்களுக்கு உணவு அளிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அந்தக்காலத்தில் கழிப்பிடங்கள் என்பது ஓர் ஆடம்பரமான அம்சமாக விளங்கியது.
அதைப்பற்றி எவருமே அந்தக்காலத்தில் பொருட்படுத்தவில்லை.1990களில் பசுமைப்புரட்சி நடந்தது. உணவுப் பற்றாக்குறை காணாமல் போய்விட்டது.
இப்போது நாம் உபரி உணவை என்ன செய்வது என்கிற பிரச்சனையைப் பெற்றிருக்கிறோம்.
எனவே 70 ஆண்டுகளில் எதுவுமே நடைபெறவில்லை என்று கூறுவதானது பயங்கரமான மிகவும் வெறுக்கத்தக்க பொய்மூட்டையாகும்.
மனநிலையை மாற்றியமைப்பதும் மதவெறியை விசிறி விடுவதும்
பாஜகவினர், “இந்து மதம் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது, இந்துக்களும் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்,” என்றும், “இதிலிருந்து நம்மை மோடிதான் காப்பாற்றமுடியும்” என்பதுபோல ஒரு சித்திரம் கட்டமைக்கப்படுகிறது.
எதார்த்தத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்குமுன்பு இந்துக்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதேமாதிரிதான் இப்போதும் வாழ்கிறார்கள்.
அவர்களின் மனோநிலையை மாற்றியமைப்பதற்கான வேலைகள்தான் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுகிறீர்களா?
நீங்கள் தேச விரோதி.
இப்போது இந்து விரோதி என்றும்முத்திரை குத்தப்படுவீர்கள்.
இவ்வாறு முத்திரை குத்தப்படுவதன் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரான நியாயமான விமர்சனம் மூடிவைக்கப்படுகிறது.பாஜகவினர் செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்தி வருகின்றனர்.
அவற்றின் பிரதானமானபணி என்ன தெரியுமா?
இந்து – முஸ்லிம், தேசியவாதியா?– தேசவிரோதியா?
போன்ற விவாதங்களை நடத்துவதுதான்.
மக்களின் பிரதான பிரச்சனைகள் எது குறித்தும் விவாதிக்க மாட்டார்கள். மாறாக மக்கள் மத்தியில் மதவெறித் தீயை உசுப்பிவிட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்வார்கள்.
இதில் யார் அதிக அளவில் விஷத்தைக் கக்குகிறார்களோ அவர்களுக்கு விருதும் அளித்திடுவார்கள்.
வரவிருக்கும் தேர்தலில் பாஜவின் உத்தி என்பதுமதவெறியை விசிறிவிடுவதுதான்.
வளர்ச்சி என்பதெல்லால் போயே போய்விட்டது.
அடுத்து போலி தேசியவாதத்தைக் கிளறிவிடுவது.பாஜக எப்படி செயல்படுகிறது என்பதற்கு இவை சில உதாரணங்களேயாகும்.
சிவம் சங்கர் சிங் |
எதுவுமே செய்யாது இருட்டுமுனையில் நின்றுகொண்டு பிரசங்கம் செய்துகொண்டிருக்கிறது. இத்தகைய கட்சியில் செயல்படுவதில் அர்த்தமில்லை என்றுதான் நான் ராஜினாமா செய்துவிட்டேன்.
பின்குறிப்பு:-
2013இலிருந்து நான் பாஜக ஆதரவாளராக இருந்தேன்.
ஏனெனில் நரேந்திர மோடி நாட்டின்ஒளிவிளக்காக எனக்குத் தெரிந்தார். வளர்ச்சி குறித்து அவர் முழக்கமிட்டதில் ஏதோ அற்புதம் நிகழப்போகிறது என நம்பினேன்.
ஆனால் அந்த நம்பிக்கைகள் எல்லாம்இப்போது பொய்த்துப்போய்விட்டன.
தமிழில் : ச.வீரமணி(தீக்கதிர்)
=======================================================================================
இன்று,நவம்பர்-15.
- பிரேசில் குடியரசு தினம்(1889)
- வெனின்சுலா ஐநாவில் இணைந்தது(1945)
- உலகின் முதல் மைக்ரோபுரோசசரான 4004 ஐ இன்டெல் நிறுவனம் வெளியிட்டது(1971)
- பாலஸ்தீன விடுதலை தினம்(1988)
- இந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது(2000)
மோடி அரசு - ரிசர்வ் வங்கி மோதல் எதற்காக?
ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசாங்கத்திற்கும் நடைபெறும் மோதல்கள் சில நாட்களாக ஊடகங்களில் முக்கிய செய்தியாக உலா வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை மோடி அரசாங்கம் சீர்குலைக்க முயல்கிறது என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. சட்டப்படி ரிசர்வ் வங்கி அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டதுதான்; ரிசர்வ் வங்கிக்கு ஆணையிடும் உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது என இன்னொரு தரப்பு வாதம் உள்ளது.ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசாங்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடுகளின் பின்னால் ஒரு அடிப்படை பிரச்சனை உள்ளது. நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கம் செய்வதால்தான் இந்த முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
நவீன தாராளமயக் கொள்கைகளில் மோடி அரசாங்கத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லை. இந்த கொள்கைகளை எவ்வாறு அமலாக்குவது என்பதில்தான் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
குருமூர்த்தி கொளுத்திய வெடி!
இந்த மோதல்களின் உடனடி காரணம் தமிழக ஆடிட்டர் குருமூர்த்திதான் என்பது பத்திரிக்கைகளில் கூறப்படும் செய்தி ஆகும்.
சில மாதங்களுக்கு முன்பு ஆடிட்டர் குருமூர்த்தியை ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநராக மோடி அரசாங்கம் நியமித்தது. சமீபத்திய இயக்குநர்கள் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள கையிருப்பு தொகையில் சுமார் 3 இலட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசாங்கத்திற்கு மடைமாற்றம் செய்ய வேண்டும் என குருமூர்த்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் உட்பட பலரும் எதிர்த்தனர். ரிசர்வ் வங்கியை வழிக்கு கொண்டுவர மோடி அரசங்கம் ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7வது பிரிவை கொண்டு மிரட்டுவது என முடிவு எடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளில் ஒருவரான விரால் ஆச்சார்யா நவம்பர் 1ம் தேதி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். மோடி அரசாங்கம் 2019 தேர்தலை முன்னிட்டு டி-20 பொருளாதார மாட்ச் விளையாட முயல்வதாகவும் (அதாவது அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது) அது தேசத்தின் பொருளாதாரத்தை நாசமாக்கிவிடும் எனவும் கர்ஜித்தார். இது தனது கருத்து மட்டுமல்ல; ஒட்டு மொத்த ரிசர்வ் வங்கியின் கருத்து எனவும் கூறினார். ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் சர்வதேச நிதி சந்தைக்கு ஏதுவாகவே செயல்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தின் பல்லவிக்கு தாளம் போட முடியாது எனவும் ஆச்சார்யா கூறினார்.
ரிசர்வ் வங்கியின் திடீர் ரோஷம்
தனது அரசியல் நோக்கத்திற்காக ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை சீர்குலைக்க மோடி அரசாங்கம் முயல்கிறது என்பது வெள்ளிடைமலை!
எனினும் ரிசர்வ் வங்கிக்கு தனது உரிமை குறித்து திடீரென “ரோஷம்” வந்துள்ளதாக தெரிகிறது. பணமதிப்பு நீக்கம் எனும் மிகப்பெரிய பாதகமான நடவடிக்கையை மோடி அரசாங்கம் அறிவித்த பொழுது இதே ரிசர்வ் வங்கி அடிபணிந்து போனது என்பது தேசம் அறிந்த இரகசியம்.
அன்று இல்லாத ரோஷம் ரிசர்வ் வங்கிக்கு ஏன் இப்பொழுது வருகிறது எனும் கேள்வியையும் புறந்தள்ள முடியாது.வங்கித்துறை, ரிசர்வ் வங்கி, அதன் தன்னாட்சி, அரசாங்கத்தின் இறுதி உரிமை இவையெல்லாம் இந்திய முதலாளித்துவத்திற்காக உருவாக்கப்பட்ட ஏற்பாடுகள். தனக்கு தேவை எனில் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை தூக்கிபிடிப்பதும் தனது இலாபக்கொள்ளை பாதிக்கும் எனில் அதே தன்னாட்சியை காலில் போட்டு மிதிப்பதும் முதலாளித்துவத்தின் வாடிக்கை.
எனினும் இன்று மோடி அரசாங்கம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.
ஒரு புறம் தொழில் மந்தம், வளர்ச்சி கடுமையாக பாதிப்பு. மறுபுறத்தில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் விவசாய வீழ்ச்சி.
இதன் விளைவாக மக்களின் அதிருப்தி அதிகரித்த வண்ணம் உள்ளது. 2019 தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் அதிருப்தியை திசை திருப்ப சில அதிரடி பொருளாதார அறிவிப்புகளை செய்தாக வேண்டும். இந்த செலவுகளை ஈடுகட்ட ஒரு வழி ரிசர்வ் வங்கியின் கையிருப்பை பறிப்பது ஆகும்.
ரிசர்வ் வங்கியிடம் மோடி அரசாங்கம் நிர்ப்பந்திப்பது என்ன?
l வாராக்கடன் பிரச்சனையில் ரிசர்வ் வங்கி மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும். கடனை வசூல் செய்ய வங்கிகளுக்கு நிர்ப்பந்தம் தரக்கூடாது.
l வங்கி கடன் வட்டி விகிதங்களை குறைப்பதன் மூலம் முதலாளிகளுக்கு கடன் குறைந்த வட்டியில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
l இதற்காக வங்கிகளின் மறுமுதலீட்டு (Recapitalisation) நிதிக்காக ரூ 3 இலட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை ரிசர்வ் வங்கி அரசாங்கத்திற்கு மடைமாற்றம் செய்ய வேண்டும்.
l மறுமுதலீடுகளுக்கு பிறகு வங்கிகள் மூலம் சிறு தொழில்களுக்கான தாராள கடன் திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க ரிசர்வ் வங்கி உதவ வேண்டும்.
இதன் மூலம் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.மூலம் விளைந்துள்ள அதிருப்தியை நீக்க முடியும் என மோடி அரசாங்கம் திட்டமிடுகிறது.
மோடி அரசாங்கத்தின் இந்த திட்டத்தை ஏற்க ரிசர்வ் வங்கி தயங்குகிறது. எனவே இது வரை பயன்படுத்தப்படாத ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 7 ஐ சர்வாதிகார முறையில் பிரயோகிக்க மோடி அரசாங்கம் எத்தனிக்கிறது.
ஏன் இந்த நிலை?
மோடி அரசாங்கத்தின் பணமதிப்பு நீக்கம் மூலமாக சுமார் 3 முதல் 4லட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி வராது! அது மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமாகிவிடும் என மோடி கனவு கண்டார்.
அதன் மூலம் மக்களை கவர சில அதிரடி திட்டங்களை அறிவிக்கலாம் என மோடி அரசாங்கம் கனவு கண்டது. ஆனால் அது நடைபெறவில்லை.
மாறாக சிறுதொழில்களும், முறைசாரா தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல ஜி.எஸ்.டி இன்னொரு மரண அடியை கொடுத்தது.மோடி அரசாங்கம் தன்னை முட்டுகொடுக்கும் பெரு முதலாளிகளின் கொள்ளை இலாபத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. மறுபுறத்தில் தேர்தல் தேவைக்காக மக்களை கவர்வதற்கு சில அதிரடி நடவடிக்கைகளை அறிவிக்கவும் மோடி அரசாங்கம் எண்ணுகிறது.
இந்த திட்டங்களுக்கு பெரிய தொகை தேவை!
அதிரடி அறிவிப்புகளுக்கான செலவுகளை வசதி படைத்தவர்களிடம் வரிமூலம் திரட்டலாம்!
ஆனால் முதலாளிகளின் நலன்களை காக்கும் மோடி அரசாங்கம் அதனை செய்யாது.
இன்னொரு மாற்று வழியாக கடன் வாங்குவதன் மூலம் அல்லது பற்றாக்குறை பட்ஜெட் மூலம் இதனை செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்தால் உலக நிதி நிறுவனங்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என மோடி அரசாங்கம் பயப்படுகிறது.
ஏனெனில் நம்மிடம் உள்ள 400 பில்லியன் டாலர் அந்நிய செலவாணியின் பெரும்பகுதி மிக்குறுகிய கால முதலீடாக நிதி சநதைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்த தொகை வெளியே பறந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் கைவைக்க எண்ணுகிறது மோடி அரசாங்கம்!
ரிசர்வ் வங்கி மறுப்பதன் காரணம் என்ன?
மோடி அரசாங்கம் கேட்கும் தொகையை கொடுத்தால் ரிசர்வ் வங்கி சொத்து மதிப்பு மற்றும் அதன் அவசரகால கையிருப்பின் விகிதாச்சாரம் 6ரூக்கும் கீழே போய்விடும் அபாயம் உள்ளது. இதனை அதே உலக நிதிமூலதன சக்திகள் விரும்பாது.
இதன் விளைவாக முதலீடுகள் இந்தியாவைவிட்டு வெளியேறிவிடும் என ரிசர்வ் வங்கி எண்ணுகிறது. ஒட்டு மொத்தத்தில் மோடி அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கி இரண்டுமே நிதிமூலதன சக்திகளை கண்டுதான் பயப்படுகின்றன. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளிலிருந்து வெளிவருவதுதான் இதற்கான அடிப்படை தீர்வாக அமையும்!
இதற்கு அசாத்திய அரசியல் தைரியம் வேண்டும். அது மோடி அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது. மோடி அரசாங்கத்தை இந்த கோணத்திலிருந்து எதிர்க்க ரிசர்வ் வங்கியும் தயாராக இல்லை.மக்களின் நலனுக்காகவே ரிசர்வ் வங்கியுடன் மோதுகிறேன் எனும் பிம்பத்தை கட்டியமைக்க மோடி முயற்சி செய்யலாம்.
ரிசர்வ் வங்கியை தனக்கு அடிபணிய வைக்கவும் அதன் தன்னாட்சியை தகர்க்கவும் மக்கள் நலன் எனும் கேடயத்தை மோடி அரசாங்கம் கையில் எடுத்தால் ஆச்சர்யம் அடைய வேண்டியது இல்லை. ஆனால் மோடி அரசாங்கத்தின் ஆட்சி மக்களை கடுமையாக பாதித்துள்ளது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாய வீழ்ச்சி, முதலாளிகளின் கொள்ளை இலாபம், இதனால் உருவான இமாலய பொருளாதார இடைவெளி, ரஃபேல் உட்பட பல ஊழல்கள் இவையெல்லாம் மக்களிடம் அதிருப்தியை விளைவித்துள்ளன.
எனவே மோடி அரசாங்கத்தின் மாய பிம்பங்கள் எடுபடுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே! எனவேதான் மோடி அரசாங்கத்தை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். மறுபுறத்தில் மக்களை பிளவுபடுத்த மதவாதம் எனும் ஆபத்தான ஆயுதத்தை கூர்தீட்டி வருகிறது.
இதனையும் மக்கள் அடையாளம் காண்பார்கள் என்பது உறுதி!
தொகுப்பு: அ.அன்வர் உசேன்(தீக்கதிர்)
=====================================================================================================================================
பூமியை குளிரவைக்க இதையெல்லாம் செய்யுங்கப்பா.
நாசா வில் இருக்க வேண்டியவங்க எல்லாம் இந்தியாவில் மணியாட்டிட்டு இருங்காங்க!