ரபேல் விமானங்களை தரக் கட்டாயம் இல்லை!
மோடி- டஸ்ஸால்ட் ஒப்பந்தம் !!
ரபேல் விமானக் கொள்முதல் விஷயத்தில், பிரதமர் மோடி தனது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கமிஷன் சம்பாதித்துக் கொடுக்கும் வேலைபார்த்திருக்கிறார் என்பது மட்டுமே இதுவரை தெரிந்த விஷயமாக இருந்தது.
ஆனால், “இந்திய அரசு ரூ. 60 ஆயிரம் கோடியை தூக்கிக் கொடுத்தாலும், பதிலுக்கு ‘டஸ்ஸால்ட்’ நிறுவனம், ரபேல் விமானத்தை தயாரித்துக் கொடுத்தே ஆக வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை” என்று ஒப்பந்தம் போட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதால், இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், எம்.எல். ஷர்மா மற்றும் வினீத் தண்டா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் அமர்வு முன்பு, புதன்கிழமையன்று இவ்வழக்கில் விசாரணை நடை பெற்றது.
மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதங்களைமுன்வைத்தார். அப்போது நீதிபதிகள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வேணுகோபால் திணறினார்.
“இந்தியாவிற்கு ரபேல் விமானங்களை வழங்கும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப் பந்ததாரரை யார் தேர்வு செய்தது;
இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திற்கு பதிலாக,வேறொரு நிறுவனம் (ரிலையன்ஸ்) திடீரென எப்படிதேர்வு செய்யப்பட்டது;
ரபேல் ஒப்பந்த விதிகளை மாற்றியது யார், எதன் அடிப்படையில் இதை மாற்றினீர்கள்; ஏற்கெனவே ஒரு ஒப்பந்தம் நிலுவையில் இருந்தபோது, 2015-ஆம் ஆண்டு பிரதமர் மோடி, புதிதாக ஒரு ஒப்பந்தத்தை போட அவசியம் என்ன?”என்று அடுக்கடுக்காக எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்றுக்குக் கூட உருப்படியான பதிலை வேணுகோபால் அளிக்கவில்லை.
“டஸ்ஸால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றே தங்களுக்குத் தெரியாது” என்றுவேணுகோபால் அளித்த பரிதாபகரமான பதிலைப்பார்த்த நீதிபதிகள், “பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபடப்போகும் பங்குதாரர் யார் என்பதைக் கூட தெரியாமல்தான் விமானம் வாங்குவீர்களா?
இதுதான் பாதுகாப்புத்துறை மீதான அக்கறையா? என்று விளாசித் தள்ளினர்.
குறிப்பாக, ரபேல் ஒப்பந்தம் குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு,அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அளித்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போயினர்.“மத்திய அரசு செய்திருக்கும் ரபேல் ஒப்பந்தத்தில் பெரிய ஓட்டை இருக்கிறது.
இதில் விமானங்களை அளிக்க வேண்டிய டஸ்ஸால்ட் நிறுவனம், விமானத்தை கட்டாயமாக அளித்தாக வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எங்குமே கூறப்படவில்லை; ஒருவேளை அவர்கள் ஏமாற்றிவிட்டால் மத்திய அரசு என்ன செய்யும்?” என்பதே பிரசாந்த்பூஷனின் கேள்வி.
அதற்குப் பதிலளித்த வேணுகோபால், “நாங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் கண்டிப்பாக விமானத்தை அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தின் எந்த இடத்திலும் கூறப்படவில்லை; அது உண்மைதான்” என்று எந்த உறுத்தலுமின்றி ஒப்புக்கொண்டார்.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், “பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையில் இப்படியா பதில்அளிப்பது; டஸ்ஸால்ட் நிறுவனம், பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டனர்.
“விமானம் இல்லை, ராணுவம் வலிமையாக இல்லை என்று கூறி, அதை வலிமையாக்கவே இந்த ஒப்பந்தம் என்கிறீர்கள்; அப்படியிருக்கும்போது ஒப்பந்தத்தை இப்படியா மோசமாக வடிவமைப்பது?” என்று சாடினர்.
இதனால் பதற்றம் அடைந்த வேணுகோபால், பிரச்சனையை சமாளிப்பதாக கருதி, மேலும் உளறிக் கொட்டினார்.
“பிரான்ஸ் அரசு தங்களுக்குஆற்றுப்படுத்தும் கடிதம் கொடுத்துள்ளது; அதில் பிரான்ஸ் அரசு ஒப்பந்த முறைகளை பின்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது” என்றார்.
இது ஒன்றும் உத்தரவாதக் கடிதம் அல்ல என்பதை மறைத்து, ஆற்றுப்படுத்தும் கடிதம் என்றுசமாளித்தார். அதுவும் நீதிபதிகளிடம் எடுபடவில்லை.
“ஒப்பந்த படிவத்திலேயே விமானத்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று வரிஇல்லாத போது, ஆற்றுப்படுத்தும் வார்த்தை மூலம்விமானம் இந்தியாவிற்கு கிடைத்து விடுமா?” மத்திய பாஜக அரசை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர்.
============================================================================================
மூன்றாண்டு ஆட்சியில் கிடைத்த வளர்ச்சி .
2014 தேர்தலில் சுவிஸ் வங்கிகளிலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அது தொடர்பாக எந்தக் குறிப்பிட்ட தகவலையும் அளிக்கவில்லை.
உண்மையில், 2017ஆண்டு கணக்குப்படி சுவிஸ் கணக்குகளில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது மோடியின் மூன்றாண்டு ஆட்சியில்தான்.
2014 பொது தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்தபோது, நரேந்திர மோடி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பல ஆயிரம் கோடி பணத்தை மீட்டுக் கொண்டுவருவேன் என்றும், ஒவ்வொரு இந்தியர்கள் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் 2014 முதல் இப்போது வரை, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்கள் பணம் எவ்வளவு, இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ள அல்லது கொண்டுவர முயற்சிக்கப்படும் பணத்தின் அளவு அல்லது வரிகள் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்து எந்த தகவலையும் அளிக்கவில்லை.
பிரதமர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பரிதாபமாகத் தோல்வி அடைந்துள்ளார். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
அரசு கையெழுத்திட்டுள்ளதாக, பெருமைப்பட்டுக்கொள்ளும், பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சி தலைமையிலான, வங்கிக் கணக்குத் தகவல்கள் தொடர்பாக நாடுகளுக்கு இடையிலான தானியங்கிப் பரிமாற்றத்திற்கான பொதுவான வெளியீட்டு தர நிர்ணய ஒப்பந்தம் ஒன்றும் வரி ஏய்ப்பை தடுப்பதற்கான மந்திர கோல் இல்லை.
மத்திய நிதி அமைச்சகத்திற்கு இது தெரியும். முதலில், சி.ஆர்.எஸ். கீழ் பெறப்படும் தகவல்கள் வரி அல்லாத விஷயங்களுக்காகப் பல்வேறு உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ள முடியாது.
எனவே ஊழல் மற்றும் பணம் பதுக்கலில் இதைப் பயன்படுத்த முடியாது. இரண்டாவதாக, வரி ஏய்ப்பிற்காக வசிக்கும் நாட்டைக் குறுக்கு வழியில் பயன்படுத்திக்கொண்டு சி.ஆர்.எஸ்.ஐச் சமாளித்துவிடலாம். மேலும் ஒரு சில நிறுவனங்கள் முக்கிய தகவல்கள் கசியாமல் இருப்பதற்காக சி.ஆர்.எஸ்.ஐச் சமாளிக்கும் வழிகளை நாடலாம்.
இறுதியாக, அதிக நிகர மதிப்புள்ள பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் இணையாத அமெரிக்காவுக்கு தங்கள் கணக்குகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
பாரின் அக்கவுண்ட் டாக்ஸ் கம்ப்லயன்ஸ் சட்டத்தின் கீழ், பதில் தகவல் அளிப்பதாக உறுதிமொழியை அமெரிக்கா இன்னமும் நிறைவேற்றாத நிலையில், அமெரிக்க வங்கிகளில் பதுக்கி வைக்கப்படும் இந்தியர்களின் பணத்தை திருப்பி கொண்டு வருவது எப்படி சாத்தியம்?
வெளிநாட்டு வரி அமைப்புகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ள பெரும்பாலான வரி உடன்பாடுகள், பங்குதாரர்களிடையே தகவல்களைக் கோரிப் பரிமாறிக்கொள்வதற்கு வழி செய்கிறது. கோரிக்கை மூலம் தகவல்களைப் பெறுவது தொடர்பாக அரசு இந்தியாவின் சில வரி உடன்பாடுகளில் திருத்தம் செய்துள்ளது.
ஆனால், கோரப்படும் தகவல்கள் வரி உடன்பாடு அல்லது வருமான வரி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இருக்க வேண்டும் என்பதை நிதி அமைச்சகம் அறியும். வரி செலுத்துபவர் தொடர்பான குறிப்பிட்ட குற்றவியல் தகவல்கள் இல்லாமல் இருப்பது தான், தகவல் பரிமாற்ற ஏற்பாட்டை ஏற்க வைக்கிறது.
பெரும்பாலான வழக்குகளில், வெளிநாட்டு வரி அமைப்புகள் பலவித காரணங்களுக்காக கோரிக்கைகளை தாமதப்படுத்தலாம் அல்லது நிராகரிக்கலாம்.
அரசு, வரி செலுத்தாமல் இருப்பதை கறுப்புப் பணத்துடன் தவறுதலாக குழப்பிக்கொள்கிறது.
இந்தியா ஆண்டுதோறும் வர்த்தக வரி ஏய்ப்பால் கோடிக்கணக்கான டாலர்களை இழக்கிறது.
ஆனால் வர்த்தக வரி செலுத்தாமல் இருப்பது மற்றும் கறுப்புப் பணம் வேறு வேறு தீர்வுகளை நாடும் வேறு பிரச்சனைகள். வரி சலுகையை பெற வரி உடன்பாடுகளை தவறாக பயன்படுத்திக்கொள்வதை வருமான வரி சட்டம் தெரிவிக்கும் வரி தவிர்ப்பு பிரிவு மூலம் எதிர்கொள்ளலாம்.
இந்திய வர்த்தக வரி தொடர்பான அண்மைக்கால மாற்றங்கள் வர்த்தக வரி ஏய்ப்பு தொடர்பாக உள்ளனவே தவிர, நாடுகளுக்கு இடையிலான வரி ஏய்ப்பு அல்லது சட்டவிரோத நிதிப் பரிமாற்றம் தொடர்பாக இல்லை.
சுவிஸ் தேசிய வங்கி தகவல்படி, 2017இல் இந்தியர்கள் சுவிஸ் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்த பணம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவை எல்லாம் கறுப்புப் பணம் அல்ல ஆனால், இவை வெள்ளை பணமும் அல்ல. (சுவிஸ் வங்கி கவர்ச்சியான வட்டி அளிப்பதில்லை). உண்மை என்னவெனில், இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்குவதை தடுக்க நான்கு ஆண்டுகளில் அரசு அதிகம் செய்யவில்லை என்பது தான்.
கணிசமான கறுப்புப் பணம் கொண்ட வழக்குகளை, குறிப்பாக வெளிநாட்டு வங்கி மற்றும் கணக்கில் வராத பணம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மோடி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தார்.
இந்தக் குழு என்ன கண்டுபிடித்தது?
நான்கு ஆண்டுகளில் எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டு கறுப்புப் பணம் எவ்வளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த நாடுகளிடம் இருந்து எந்த தகவல்கள் பெறப்பட்டன. எந்த பதிலும் இல்லை.
உலக பசி பட்டியலில் 119 நாடுகளில் இந்தியா 103ஆவது இடத்தில் உள்ளது. வரி வருவாயில் கோடிக்கணக்கான டாலர்களை இழக்கிறது.
இந்த பணம் வறுமையால் ஏற்படும் மரணங்களை தடுத்து நிறுத்தும். மோடி அரசு மக்களுக்கு நல்ல நாள் என்ற வாக்குறுதி அளித்தது. அந்த நாள் இன்னும் வராமலே இருக்கிறது.
ஆசிஷ் கோயல்
நன்றி: தி டெலிகிராஃப்
இன்று,
நவம்பர்-16.
- இந்திய பத்திரிகைத் தினம்
- உலக சகிப்புத் தன்மை தினம்
- முதல் முறையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது(1896)
- ஃபெடரல் ரிசர்வ் வங்கி, ஐநா., ஆல் திறக்கப்பட்டது (1914)
- யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1945)
அலைபேசி ஆபத்து?
அமெரிக்கா அரசின் தேசிய நச்சியல் திட்டப் பிரிவு, மொபைல்கள் வெளியிடும் ரேடியோ அலைவரிசை கதிர் வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை, எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தது.
அந்த ஆய்வின் முடிவில், விலங்குகள் தொடர்ந்து ரேடியோ அலைவரிசைக்கு ஆளாகும் போது, சில விலங்குகளுக்கு புற்றுநோய் துாண்டப்படலாம் என்றும், இந்த விளைவு மனிதர்களுக்கு ஏற்படுவதற்கான ஆதாரம் மிக மிக பலகீனமாக இருப்பதாகவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆய்வகத்தில் சராசரி மொபைல் வெளியிடும் கதிர்வீச்சை விட, நான்கு மடங்கு அதிகமான கதிர்வீச்சு பயன்படுத்தப்பட்டது. எனவே அதைவிட குறைவான கதிர்வீச்சையே சந்திக்கும் மனிதர்களுக்குள், அத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று சொல்ல முடியாது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த, 10 ஆண்டுகளில், '2ஜி' மற்றும் '3ஜி' அலைவரிசை, மொபைல்கள் வெளியிடும் கதிர்வீச்சு மட்டுமே அந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.
இத்தொழில்நுட்பங்கள் குறைந்த, 'மெகாஹெர்ட்ஸ்' அலைவரிசைகளையே பயன்படுத்துகின்றன.
இவை விலங்குகளின் உடல்களை துளைக்க வல்லவை.
ஆனால், தற்போது வேகமாக, 4ஜி மற்றும் 5ஜி அலைவரிசை போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த உயர் அலைவரிசைகளுக்கு, விலங்குகளின் உடல்களுக்குள் ஊடுருவும் திறன் கிடையாது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அப்படியென்றால், '4ஜி, 5ஜி'யால் ஆபத்து இருக்காதா?
புதிய அலைவரிசைகள் பாதுகாப்பானவை என, உத்தரவாதம் தர முடியாது என்றும், அவை ஏற்படுத்தும் தாக்கம், ஆய்வுக்குள்ளான, 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட மாறுபட்டவையாக இருக்கும் என்றும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுக்கு நிதி கொடுத்துதவியது மொபைல் தயாரிப்பு நிறுவங்களாக இருக்குமோ?
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானிக்கும், பிரமல் குழுமத்தின் தலைவர் ஆனந்த் பிரமல்லுக்கும் வரும் டிசம்பர் 12ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
மும்பையில் இவர்களது திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான சடங்கு உள்ளிட்ட நடைமுறைகள் டிசம்பர் 10, 11 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெறுகின்றன.
திருமணத்தை தொடர்ந்து, புதுமணத் தம்பதிகள் மும்பை ஒர்லி கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற கிலிட்டா பங்களாவில் வசிக்கவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றன.
அரபிக்கடல் ஓரத்தில் 50,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கிலிட்டா கட்டிடம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது. இதை 2012ல் ரூ.450 கோடி கொடுத்து ஆனந்த் பிரமாலின் தந்தை அஜய் பிரமால் சொந்தமாக்கினார்.
குடும்பங்கள் வசிக்கும் மதிப்புமிக்க வீடுகளில் உலகிலேயே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பிறகு, இரண்டாவது இடத்தில் ஆன்டிலியா கட்டடம் உள்ளது. முகேஷ் அம்பானி, நிடா அம்பானி தம்பதிகளுக்கு சொந்தமான இந்த வீட்டில் 27 மாடிகள் உள்ளன. பல்வேறு சொகுசான வசதிகள் கொண்ட கட்டிடமாக இது அறியப்படுகிறது.
சுமார் 600 பணியாளர்கள் வசிக்கும் இந்த வீடு, ரூ. 14,000 மதிப்பில் கட்டப்பட்டது. மும்பையில் ஆன்டிலியா கட்டிடம் அமைந்துள்ள பகுதியோடு பார்த்தால், அதன் மதிப்பு இன்னும் உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்துக்கு பிறகு இஷா அம்பானி - ஆனந்த் பிரமால் வசிக்கவுள்ள கிலிட்டா கட்டிடத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பங்காளவில் வேலை செய்யவுள்ள பணியாளர்களுக்கு தனியாக குடியிருப்புகளும் வழங்கப்படவுள்ளன.
டிசம்பர் 1-ம் தேதி புதுமனை புகும் விழா நடைபெறுகிறது. இந்த பங்களாவை மகன் ஆனந்த் மற்றும் மருமகள் இஷாவுக்கு திருமணப்பரிசாக அஜய் பிரமால் வழங்கவுள்ளார்.
2012ம் ஆண்டில் ’தி எக்கானமிக் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியில், கிலிட்டா கட்டிடம் விற்பனைக்கு வந்த போது, அதை வாங்க அம்பானி மற்றும் கௌதம் அதானி இடையே கடும் போட்டி நிலவியுள்ளது. முட்டிக்கொண்டனர். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக அஜய் பிரமால் அதை வாங்கினார். தற்போது அந்த வீட்டில் தான் அம்பானி மகள் வாழப்போகிறார்.
==========================================================================================