சனி, 24 நவம்பர், 2018

கஜாவும் பாஜவும் ..,

கஜா புயல் பேரழிவில் தமிழக மக்கள் வருந்திக்கொண்டிருக்கையில் பாஜகவோ தனது கேவல அரசியல் நாடகத்தை நடத்தியுள்ளது.
சபரி மலை விவகாரத்தில் கேரளா அரசு நீதி  மன்றத் தீர்ப்பின்படி நடக்கையில் அதில்  மதவெறி அரசியல் செய்கிறது பாஜக .
கஜா புயல் கவலையில் மக்கள் இருக்கையில் பாஜகவின் இந்த அசிங்க அரசியல் தமிழ் நாட்டில் குட்டையில் கூட தாமரை மலர விடாமல்தான் ஆக்கும்.


மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் அவமதித்துவிட்டதாகக்கூறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவினர் வன்முறை தாண்டவத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்கள் அழைப்பு விடுத்த முழுஅடைப்புப் போராட்டத்தை மக்கள் புறக்கணித்த நிலையில், தங்களது வழக்கமான பாணியில் பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
 பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். பாஜகவினருக்கு தமிழக மக்களின் மீது கொஞ்சம் கூட அக்கறையில்லை என்பதையே இது காட்டுகிறது. 
 பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு சென்றதே கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற தீய நோக்கம்தான். இவர் சபரிமலைக்கு செல்வது குறித்து எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் கேரள அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்துவதாக கூறிய அதே நாளில்தான் இவர் சபரிமலைக்கு சென்றார். இவருக்கு எந்த அவமதிப்பும் நடந்துவிடவில்லை. 
தன்னுடைய படை பரிவாரங்களோடு பல கார்களில் செல்ல முயன்றபோது கேரள போலீசார் தடுத்து மத்திய அமைச்சர் என்ற முறையில் இவரது கார் பாதுகாப்போடு செல்வதில் பிரச்சனை இல்லையென்றும் ஆனால் பாஜகவினர் பல கார்களில் மலை மீது ஏறினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்றும்கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்துதான் அவர் பேருந்தில் சென்றுள்ளார். 

கோவிலிலும் குழப்பம் விளைவிக்க முயன்றுதோற்றநிலையில், திரும்பும் போது தன்னுடைய காரில் தேசியக்கொடியை பறக்கவிடாமல் வந்துள்ளார். 
போலீசார் காரை தடுத்த போதும் அமைச்சரின் கார் என்று தெரிந்த அடுத்த நிமிடமே செல்ல அனுமதித்துவிட்டனர். இதில் எங்கே அவமதிப்பு இருக்கிறது? இவர் சபரிமலைக்கு சென்ற அதே நாளில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியைச் சந்தித்து புயல் நிவாரண நிதி கேட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரேமத்தியமைச்சர் என்ற முறையில் இவரும் முதல்வருடன் சென்று தமிழகத்திற்கு புயலால் ஏற்பட்டுள்ள பேரழிவை பிரதமரிடம் விளக்கியிருக்க வேண்டாமா? இதுவரை கஜா புயல்பாதிப்பு குறித்து இவர் பிரதமரிடம் தொலைபேசியிலாவது பேசினாரா? அப்படி பேசியிருந்தால் பிரதமர் மோடி இதுவரை கஜா புயலில் பலியானவர்களுக்கு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்? கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு தமிழக மக்களின் துயரில் பங்கேற்பதாக அறிவித்து நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. மின் ஊழியர்களையும், சுகாதாரத்துறை ஊழியர்களையும் தமிழகத்திற்கு அனுப்பி உதவிக்கரம் நீட்டுகிறது.ஆனால் பாஜகவினர் கொஞ்சம் கூட மனச்சாட்சியின்றி இல்லாத பிரச்சனையை ஊதி பெரிதாக்கி கலவரத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகமக்களை வன்மத்தோடு வஞ்சிக்கும் பாஜகவினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. இவர்களது கபட நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். பாசிச குணம் கொண்டவர்கள் மக்களைப் பற்றி ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
சபரிமலையில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது திட்டத்தில் வெற்றி பெற முடியாமல் ஐயப்ப தரிசனம் செய்து திரும்பியுள்ளார். 

ஆனால் அவரை கேரள மாநில காவல்துறையினர் தடுத்துவிட்டதாக கூறி குமரி மாவட்டத்தில் வெள்ளியன்று கடை அடைப்பு, வேலைநிறுத்த போராட்டம் அறிவித்து விட்டு பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். 5 பேருந்துகள் மீது முதல்நாள் இரவே கல்வீசினர்.இதன் பெயரால் வெள்ளியன்று காலை பேருந்துகளை அதிகாரிகளே முடக்கி வைத்தனர். 

 இதனால்மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். வன்முறையின் ஒரு பகுதியாக, பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை சில இடங்களில் வெட்டி சாய்த்துள்ளனர். இச்சம்பவங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சபரிமலை பகுதியை கலவர பூமியாக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பலின் பெரும் வன்முறைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நவம்பர் 21 ஆம் தேதியன்று தனது ஆதரவாளர்களுடன் சபரிமலைக்கு சென்றார்.

நிலக்கல் பகுதியிலிருந்து பம்பைக்கு மத்திய அமைச்சரின் வாகனத்தை அனுமதித்த காவல்துறையினர், அவருடன் வந்த அவரது ஆதரவாளர்களின் காரை நிறுத்தி அவர்களை பேருந்தில்வருமாறு கூறினர். ஆனால் தனது ஆதரவாளர்களின் வாகனத்தையும் தன்னுடன் அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொன். ராதாகிருஷ்ணன், பின்னர் தனதுஆதரவாளர்களுடன் பேருந்தில் ஏறி சபரி மலைக்கு சென்றார்.


 இத்தகவல் கிடைத்தவுடன், குமரி மாவட்ட பாஜகவினர் மத்திய அமைச்சர் அவமானப்படுத்தப்பட்டதாக கூறிக்கொண்டு 21 ஆம் தேதியன்று தக்கலை மற்றும் களியக் காவிளையில் கேரள பேருந்துகளை தடுத்தும், கேரள முதல்வரின் உருவ பொம்மையை எரித்தும் அராஜகத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து பாஜகவினர் வெள்ளிக்கிழமையன்று குமரி மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்அறிவித்தனர். 

வியாழனன்று இரவே, மாவட்டத்தில்பல்வேறு பகுதியில் 8க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.வெள்ளிக்கிழமையன்று காலை 8 மணி வரை, நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை.

 இதன் காரணமாக, பள்ளி, கல்லூரி மாணவர்களும், அலுவலகத்துக்கு செல்வோரும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். காலை 8 மணிக்கு பின்னர், உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் காவல்துறையினர் பாது காப்புடன் இயக்கப்பட்டன. 

வேலைநிறுத்தம் அறி விக்கப்பட்டும், வழக்கம் போல் அரசு பள்ளிகள் இயங்கின.
 இருப்பினும், ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே விடுமுறை அறிவித்திருந்தன. 

கன்னியாகுமரியில் கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. பாஜக கும்பலின் வன்முறை காரணமாக வெள்ளியன்று நடக்கவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு அறிவித்தார்.

நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை, மார்த்தாண்டம், கருங்கல், ஆரல்வாய்மொழி, தக்கலை ஆகிய பகுதிகளுக்கு சென்ற 12 அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசிதாக்கினர். 
இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன.

போக்குவரத்து துறை சார்பில், 12 பேருந்துகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வீச்சு சம்பவம் தொடர்பாக, மாவட்ட காவல்துறைசார்பில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் திருகார்த்திகை கொண்டாட்டம் மற்றும் அதை சார்ந்து நடக்கும் வணிக நடவடிக்கைகளும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக, தோவாளை மலர் சந்தையில் பூ விற்பனை வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டதாக, பூ மொத்த வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

பாஜகவினரின் வன்முறை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியா குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி கூறுகை யில், அருமனை பகுதியில் மாத்தூர் கோணம், புதுவல், மங்காத்துவிளை, பட்டான்விளை, மாத்தூர்கோணம் அம்பலம் ஆகிய இடங்களில் இருந்த சிபிஎம் கொடிகம்பங்களை பாஜகவினர் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். 

 மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அரசுப் பேருந்துகளை பல பகுதிகளில் இயக்கவில்லை. 
பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்றுவர இயலாத நிலை ஏற்பட்டது.

குறிப்பாககல்லூரிகளில் வெள்ளியன்று தேர்வுகள் நடை பெற்றதால் பேருந்து வசதியின்றி மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. 
சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. சபரிமலை பிரச்சனையை அரசியலாக்கி குமரி மாவட்ட மக்களிடம் பதற்றத்தை உருவாக்கி அரசுப் பேருந்துகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தி அமைதியை சீர்குலைத்துவரும் தீய சக்திகளை வன்மையாக கண்டிக்கிறோம் என்று எதிர்க்கட்சியினர் கூறினர் . 

பொதுவாக சிறு பிரச்சனைகளுக்காக பாஜக தேவையில்லாமல் பந்த் அறிவிப்பதும், சில பேருந்துகளை கல்வீசி சேதப்படுத்துவதும், இதன் பெயரில் பேருந்துகளை ஓட்டாமல் நிறுத்துவதும், பிரச்சனைகளை உருவாக்கும் பாஜகவினர் மீது மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், தொடர் செயலாக இருந்து வருகிறது என்றும் குமாரி மாவட்ட மக்கள் தெரிவித்தனர் .

====================================================
ன்று,

நவம்பர்-24.


  • துருக்கி ஆசிரியர் தினம்
  • காங்கோ தேசிய தினம்
  • ஏபல் டாஸ்மான், வான் டீமனின் நிலம்(தற்போதைய தாஸ்மானியா) என்ற தீவை கண்டுபித்தார்(1642)
  • சார்லஸ் டார்வின், ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற நூலை வெளியிட்டார்(1859)

====================================================
 ‘போலி என்கவுண்ட்டரில் அமித் ஷாதான் சதிகாரர்’


குஜராத் போலீஸாரால் கடந்த 2005-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சொராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் மூலம், பாஜக தலைவர் அமித் ஷா, பண ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதாயம் அடைந்தார் என்று, சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்குர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குமூலம் அளித்தார். 

இதுதொடர்பான பரபரப்பு இன்னும் குறையாத நிலையில், துளசிராம் பிரஜாபதி படுகொலையிலும், அமித் ஷா-தான் சதிதிகாரர் என்று மற்றொரு விசாரணை அதிகாரியான சந்தீப் தம்காட்கே-வும் உறுதிப்படுத்தியுள்ளார்.துளசிராம் பிரஜாபதியின் மரணம் தொடர்பான வழக்கை கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து விசாரித்தவர் சந்தீப் தம்காட்கே. 
இவர்தான், புதனன்று மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நேரில் ஆஜராகி, வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்ட்டரில், “குற்றவாளிகள்- அரசியல்வாதிகள் - காவல்துறையினர் என முக்கூட்டு இருந்தது” என்று தெரிவித்துள்ள சந்தீப், “நாங்கள் நடத்திய விசாரணையில், அமித் ஷா, டிஜி வன்சாரா (குஜராத் முன்னாள் டிஐஜி), ராஜ்குமார் பாண்டியன் (புலனாய்வு அமைப்பு) மற்றும் எம்.என். தினேஷ் (ராஜஸ்தான் ஐபிஎஸ் அதிகாரி) ஆகியோர் முதன்மை சதிகாரர்கள் என்பது தெரியவந்தது” எனவும் உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
பிரஜாபதி,அமித்ஷா, சந்தீப் தம்காட்கே

குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மற்றும் ராஜஸ்தானின் உள்துறை அமைச்சராக இருந்த குலாப்சந்த் கட்டாரியா ஆகியோர் சொராபுதீன், துளசிராம் பிரஜாபதி மற்றும் ஆசம் கான் ஆகிய குற்றவாளிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரஜபாதி போலி என்கவுண்ட்டர் வழக்கில், கடந்த 2012-ஆம் ஆண்டே அமித் ஷா கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என 2014-இல் சிபிஐ நீதிபதி எம்.பி. கோசவி, அமித் ஷா உட்பட 18 பேரை விடுவித்தார்.
குஜராத்தில் நடந்த போலி என்கவுண்ட்டர்கள் தொடர்பாக, மொத்தம் 38 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் அமித்ஷா உட்பட விடுவிக்கப்பட்ட 18 பேர் தவிர, எஞ்சியவர்கள் மீதான விசாரணை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் மீண்டும் துவங்கியது.இதையொட்டி நவம்பர் 19-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரான சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்குர், “சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் அமித் ஷா ரூ. 70 லட்சம் லஞ்சம் பெற்றார்; அரசியல் ரீதியாகவும் ஆதாயம் அடைந்தார்” என்று குறிப்பிட்டார். 
இது அமித் ஷாவை மீண்டும் வழக்கிற்குள் இழுத்து விடுவதாக அமைந்தது. இந்நிலையில், தாக்குரை பின்பற்றி, சந்தீப் தம்காட்கேவும், பிரஜாபதி என்கவுண்ட்டரில் அமித்ஷா முக்கியமான சதிகாரர் என்று கூறியிருப்பது அமித் ஷா மீதான பிடியை இறுக்கியுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------