பொய்யன்றி வேறென்ன?

கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்பதே சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நவீன ஜனநாயக நெறி உருவாக காரணமாக அமைந்தது. 
ஆனால், இந்தியாவில் இந்து மதம் அனைவரையும் சமமாக பாவித்தது கிடையாது. எனவே சமூக இயக்கங்கள் தோன்றி தனக்கான இருப்புக்கும், சுயமரியாதையை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் இறங்கின.
பக்தி இயக்கமே அடிப்படையில் சமூக நீதிக்கான இயக்கமாகவே கிளர்ந்து எழுந்தது. அதில் சாதி – சமத்துவ கருத்துக்கள், ஆண்-பெண் பாகுபாடுகளுக்கு எதிரான வெகுசன கருத்தோட்டம் எழவும் அதுவே காரணியாக அமைந்தது.
தாழ்த்தப்பட்ட நந்தனார் வழிப்பாட்டு சுதந்திரம் வேண்டி போராடியவர். பல தடைகள் விதிக்கப்பட்டபோதும் சிவபெருமானே அவரது நிலத்தையெல்லாம் ஒரே இரவில் சாகுபடி செய்து உதவினாலும் தில்லை கோவில் அர்ச்சகர்கள் கோவிலுக்குள்ளே நந்தனாரை அனுமதிக்க மறுத்தனர். 

நந்தியே விலகி சிவதரிசனம் அளித்ததாக ஒரு சமரச ஏற்பாட்டை சமய இலக்கியங்களில் காண முடிகிறது.
வேத – ஆகமங்கள் மீது நம்பிக்கை இல்லாத சித்தர்கள் சாதி பிரிவினில் தீயை மூட்டுவோம்! என முழங்கி பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டனர். 
தமிழகத்தின் வடக்கே வள்ளலாரும், தெற்கே வைகுண்ட சாமிகளும் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கான தனித்த வழிபாட்டு முறையையே உருவாக்கினர். தேவதாசி முறையை ஒழித்து சட்டவிரோதமாக்கியது, நரபலி, தீண்டாமை, கொத்தடிமை முறையை ஒழித்தது என ஒரு பெரிய பட்டியலே நீள்கிறது.
இன்று சபரிமலை புனிதம் பேசும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பரிவாரங்கள்தான் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என வழக்கிட்டவர்கள். 
இந்த வழக்கில் பெண்கள் சார்பாக வழக்காடிய ரவிபிரகாஷ் குப்தா, சுஷேந்திர குமார் சௌகான், பிரேர்ன குமாரி, டாக்டர் லெஷ்மி சாஸ்திரி ஆகியோரும், இதில் பிரேர்ன குமாரி ஆர்.எஸ்.எஸ்.சின் பெண்கள் பிரிவான ராஷ்டிரிய சேவிக்கா சமிதியின் பொறுப்பாளர் ஆவார்.
தேவசம்போர்டு சார்பில் இந்த வழக்கில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், கிருஷ்ணன் வேணுகோபால், உதயக்குமார் சாகர் ஆகியோரும், கேரள அரசின் சார்பில் ராஜீந்தர் சச்சார், சதீஷ் ஆகியோரும் இந்து வழக்கறிஞர்கள்தான்.
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்த நீதிபதிகளும் இந்துக்களே. 
தீர்ப்பு வந்தவுடன் முதலில் வரவேற்றது பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ்.சும்தான். மத்திய அமைச்சர் மேனகா காந்தி இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று வரவேற்றார். 
ஆனால், இன்று ஐயப்ப பக்தர்கள் என்ற போர்வையில் பெண்களை அனுமதிக்க முடியாது என்று கலவரங்களை நடத்துபவர்களும் அவர்களே!
ஆண்டாளுக்காக அதிரடி வசனம் பேசிய தமிழக பரிவார தலைவர்கள் இன்று ஆண்டாள்கள் நுழைந்தால், ஐயப்பன் கோவிலில் புனிதம் கெடும் என பேசி வருவது அவர்களின் அப்பட்டமான பாசாங்குத்தனத்தை படம் பிடித்து காட்டுகிறது.
சிவனே தனது உடலில் சரிபாதியை பெண்ணுக்கு கொடுத்து (சக்தி) அர்த்தநாரீஸ்வர வடிவம் ஏகியதை பெருமை பேசும் இவர்கள் தான் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களின் நம்பிக்கையை கேள்வி கேட்க முடியாது, எங்கள் பாரம்பரியத்தை குலைக்க அனுமதிக்க மாட்டோம் என வெறிக் கூச்சலிடுகின்றனர். நம்பிக்கையை கேள்வி கேட்க முடியாது என்றால் ஒரு காலத்தில் பில்லி-சூனியம் எடுக்க, கட்டடங்கள் எழுப்ப நரபலியாக மனிதர்களையே பலி கொடுக்கும் வழக்கம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருந்தது! 
ஆனால் இன்று அது கொலை குற்றம்.

கேரள நம்பூதிரி சாதியில் முதலில் பிறந்த ஆண் மட்டுமே சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடியும். அதன் பிறகு பிறந்த ஆண்கள் நாயர் பெண்களோடு குடும்பம் நடத்தலாம்; குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஆணின் பூர்வீக சொத்தில் அந்த குழந்தைகளுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆக சேர்ந்து வாழலாம்; திருமண உரிமையை நிலை நாட்ட முடியாது என்ற வழக்கம் இருந்தது.
சமூக இயக்கங்களும், இடதுசாரி இயக்கங்களும் அதிலும் நம்பூதிரி சாதியில் பிறந்த இடதுசாரி இளைஞர்கள் குறிப்பாக இஎம்எஸ் நம்பூதிரிபாட் போன்ற புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்கள் சொந்த சாதியின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி பெரும் மாற்றங்களை கொண்டு வந்தனர்.
பாரம்பரியம் எனக் கூறி இப்போது, முன்பிருந்த அந்த வழக்கத்தை அனுமதிக்கலாமா? அப்படி அனுமதிப்பது மடமை அல்லவா? 
சமூக மாற்றங்கள் இப்படித்தான் படிப்படியாக நிகழ்ந்துள்ளன.
நமது இந்திய விமானத்துறையில் பணிபுரியம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் முதல் பிரசவம் அல்லது 45 வயது இதில் எது முதலில் வருகிறதோ அத்தோடு அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார். 
இந்திய விமானக் கழகச் சட்டம் 1953 இப்படித்தான் விதித்திருந்தது. அப்படி வேலையிலிருந்து விடுவிக்கப்படுவதே வழக்கமாகவும் இருந்தது.
இதனை எதிர்த்து அதில் பணி புரிந்த பெண்மணியான நெர்கேஷ் மீர்ஜா இந்திய விமான கழகத்தில் கடைபிடிக்கப்படும் இந்த பாகுபாட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த ஃபசலாலி சையது, முர்தா, வரதராஜன் அமர்வு விசாரித்து 1981 ல் ஒரு மெச்சத்தகுந்த தீர்ப்பை வழங்கியது. 

அதில் விமான நிறுவனத்தில் உள்ள இந்த விதிமுறைகள் பாலியல் ரீதியான பாகுபாட்டை அடிப்படையாக கொண்டது என்றும், அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது என்றும் கூறி, அந்த விதியை சட்டவிரோதமாக்கி நீக்க வைத்தது, பெண்களின் உரிமையை நிலைநாட்டியது.
சபரிமலைக்காக வாதாடுவோர் பெண்கள் இங்கு அனுமதிக்காமைக்கு தூய்மையையே காரணமாக கொண்டு தடுப்பதாக கூறுகின்றனர். அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்ட இக்காலத்தில் இப்படி பேசுவது அறிவீனம்.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக உபயோகிக்க எவ்வளவோ சாதனங்கள் வந்துவிட்டது. சானிட்டரி நாப்கின்கள் கூட அப்படிப்பட்டதுதான். வீர விளையாட்டுகள் தொடங்கி விண்வெளி பயணத்திற்கே அதை பயன்படுத்துகிறபோது இங்கே பயன்படுத்த முடியாதா? 
அல்லது அந்த நாட்களை கடந்த பிறகாவது அனுமதிப்பதில் என்ன சிக்கல்? 
கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோய்விடும். அவர்கட்கு தனித்த ஏற்பாடுகள் செய்து அனுமதிக்க தயாரா? 
மாட்டார்கள்.
ஆனால், திருட்டுத்தனமாக பணம் பெற்றுக்கொண்டு வேண்டியவர்களுக்கு அனுமதி வழங்கி இரவோடு இரவாக பெண்கள் கலந்து கொள்ளும் வழிபாடுகள் நடக்கும் விடயம் தெரிந்தும் பா.ஜ.க பரிவாரங்கள் அதை தட்டிக் கேட்காது.
ஐயப்பன் நைஷ்ட்டிய பிரம்மச்சாரி, எனவே, இங்கு பெண்களை அனுமதிக்க முடியாது என அடுத்த அஸ்திரத்தை ஏவுகிறார்கள். 
அப்படி என்றால் பெண் தெய்வங்கள் மற்றும் கன்னி தெய்வங்கள் சிலையைத் தொட்டு, நீரால் சுத்தம் செய்து பூஜை செய்யும் ஆண் புரோகிதர்களை இந்து மதமும், பாரம்பரியமும் அனுமதிப்பது ஏன்? 
இதை எதிர்த்து ஏன் கேள்வி எழுப்பவில்லை.
“ஒவ்வொரு அறிவியலும் பரிசோதித்து நிறுவப்படுவதையே உறுதி செய்கின்றன. மதங்கள் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு தன்னை பரிசோதித்து நிரூபிக்கின்றனவா? 
அறிவியலுக்கும் வெளி உலக அறிவுக்கும் இது பொருத்தப்படுகின்றனவா? 
எனது அபிப்பிராயம் அப்படி நடைபெற வேண்டும்; அதனை சிறப்பாக, விரைவாக செய்யப்பட வேண்டும்” என்ற சுவாமி விவேகானந்தரின் அறிவுரை எப்போதும் பொருந்தும் தங்க வரிகள்!
பொருளாதார, அரசியல் துறைகளில் உலக மய கண்ணோட்டத்தில் புதிய சீர்திருத்தம் கோரும் பா.ஜ.க. பரிவாரங்கள் சமயத்துறையில் இதுபோல் ஏன் கோர மறுக்கிறார்கள்.

 இதைத்தான் நடிப்பு சுதேசி என பாரதி பாடினான். 
அது அப்படியே பா.ஜ.க.வுக்கு பொருந்துகிறது.
மாட்டுக்கறி விவகாரத்தில், திருவோணத்தை வாமன அவதாரம் எனச் சொல்லி கேரள மக்களிடம் மாட்டிக் கொண்ட அமித்ஷா இன்று ஆட்சியையே கலைப்போம் என ஆட்டம் போடுகிறார். 
நம்பிக்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என உச்சநீதிமன்றத்தையே அவமரியாதை செய்கிறார்.
ரெஹ்மா பாத்திமா என்ற பெண்ணுரிமை செயல்பாட்டாளர் இந்த தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் சபரிமலைக்கு வருகை தந்ததை இஸ்லாமிய குரோத கண்ணோட்டத்தோடு பரிவாரங்கள் எதிர்த்தன. ஒரு இஸ்லாமியர் எப்படி வரலாம் என்று வினா தொடுத்தனர். 
ஆனால் அவர் 2017ம் ஆண்டு வி ஹெச் பி நடத்திய தாய் மதம் திரும்பும் (கர்வாப்சி) நிகழ்வில் இந்துவாக மதமாற்றம் ஆனவர். 
சபரிமலைக்கு வருவதற்கு முன்பு இவர் பா.ஜ.க., சங்க பரிவார தலைவர்களை ரகசியமாக சந்தித்த செய்தி இப்போது வெளிவந்துள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சி இங்கும் வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில், பந்தளம் ராஜ குடும்பம் இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என்று பெரும் கூச்சல் எழுப்புகின்றன. ஆனால் சமஸ்தானங்கள் காலத்தில் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை பெண்களின் முலைக்கு, முலை வரி என்ற கொடுமையான வரி விதிக்கப்பட்டது. 
திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் ராமசாமி ஐயர் இந்தியாவோடு சமஸ்தானத்தை இணைக்காமல் பாகிஸ்தான் முகவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தியவர். 
வரலாற்றை கிளறினால் அரச குடும்பத்தினரின் உண்மை வெளிப்படும்!
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் போலி சாமியார்களின் ஆசிரமங்களில் பெண்கள் இன்று வரை அனுமதிக்கப்படுகின்றனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான அப்படிப்பட்ட சாமியார்களை எதிர்த்து இவர்கள் பொங்கியதாகவோ, போராடியதாகவோ வரலாறு இல்லை. 
சலனமின்றி அமைதியாக கடப்பதே அவர்களது நடவடிக்கைகளாக உள்ளது.
ஆனால் பெண்களை புனிதப்படுத்தியது தங்கள் மதம் என்ற வெற்றுக் கூச்சல் மட்டும் ஓய்ந்தபாடில்லை. இஸ்லாமிய பெண்களின் முத்தலாக்கிற்கு முழங்கியவர்கள் இன்று ஏன் முடங்கிப் போனார்கள்?
இதைத்தான் ஆதாயத்திற்கு ஆற்றை கட்டி இறைப்பது என்பதோ!
                                                                                                                                                                                                                                                                                                                                                                              -த.லெனின்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வங்கி கடனை திருப்பிச் செலுத்தாதோர் பற்றிய விபரங்களை அளிக்க தவறியதற்காக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு சி.ஐ.சி., எனப்படும் மத்திய தகவல் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

'வங்கிகளில், 50 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதோர் பற்றிய விவரங்களை வெளியிடலாம்' என, ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இந்நிலையில், கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதோர் விபரங்களை, தகவல் உரிமை சட்டத்தின் கீழ்அளிக்க, ரிசர்வ் வங்கி மறுத்ததாக, சி.ஐ.சி.,யிடம் புகார் கூறப்பட்டுள்ளது.


இதை பரிசீலித்த, சி.ஐ.சி., கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறிய ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும், வாராக் கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் எழுதியுள்ள கடிதத்தை வெளியிடும்படி, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு, சி.ஐ.சி., உத்தரவிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொய்யன்றி வேறென்ன?


பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசுவதைவிடவும் நமோ ஆப்-பில் பேசுவதில் ஆர்வம் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் பேசுவதைவிடவும் வானொலியில் மனதின் குரலில் பேசுவதையே விரும்புகிறார். 
ஆனால்அதில் உண்மையை பேசுவதைவிட பொய்களைபுனைந்துரைப்பதிலேயே கவனம்செலுத்துகிறார். ஞாயிறன்று நமோ ஆப்-பில் அவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் பொய் சொல்லும் இயந்திரங்கள் என்று சாடியுள்ளார். 

அவர்களின் பொய்களை தோலுரித்து மக்களிடம்உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்று பாஜக தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

அவரது உரையைப் படித்ததும் நமக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வரும். அதாவது ‘தான் திருடி பிறரை நம்பான்’ என்பதே அது. மகாபாரதத்தில் தர்மனும், துரியோதனனும் உலகத்தில் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று தேடிவந்து சொல்லும் கதையும் நினைவுக்கு வரும். 

கடந்த தேர்தலின்போது பாஜக வெற்றிபெற்றால் கருப்புப் பணத்தை கைப்பற்றி நாட்டு மக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பி அல்ல என அந்தக் கட்சியின் அப்போது தேசிய தலைவராக இருந்த நிதின்கட்காரி பின்னாளில் கூறியதை எந்தவகையில் சேர்ப்பது? 


அதாவது நாங்கள் வெற்றிபெறுவதற்காக எத்தகைய பொய்யையும் சொல்வோம் என்பதன் எடுத்துக்காட்டு அல்லவா?
அந்த தேர்தலின்போதும் அதற்குப் பிறகும் நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பிறகு இதெல்லாம் தேர்தலில் சகஜமப்பா என்ற பாணியில் அமித்ஷா போன்றவர்கள் பேசியதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

இவையெல்லாம்தான் அந்த கட்சியினரின் உண்மை பேசுவதன் லட்சணம்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்குவோம் என்று நரேந்திர மோடி நாட்டு இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப் படவேயில்லை.

மோடி நமோ ஆப்-பில் பேசிய அதே நாளில் புதுதில்லியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் என்னுடைய வேலை எங்கே? 
என்று உரத்து முழங்கியது பாஜகவினரின் செவிகளைச் சென்று சேரவில்லையோ?

தமிழகத்தில் மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள்எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அக்கட்சியினரின் உண்மை விளம்பலின் மற்றொரு உதாரணம். 

தேர்தல் வந்தால் எதையாவது சொல்லி எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தயங்காமல் பொய்களை அவிழ்த்து விடுவது அக்கட்சியினருக்கும் அவர்களின் எஜ மானர்களாகிய ஆர்எஸ்எஸ்-காரர்களுக்கும் கைவந்த கலைதானே! 
அதனால் தானோபொய்பற்றி மோடி அப்படிப் பேசியிருக்கிறார்.
========================================================================================
ன்று,
நவம்பர்-05.
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம்(1870)
  • ஆட்டோமொபைலின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்(1895)
  • கொலம்பியா ஐநா.,வில் இணைந்தது(1945)
  • இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது(1971)
சுதந்திர போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ்
வங்க தேசம், டாக்கா மாவட்டம், விக்ராம்பூரில், 1870 நவ., 5-ல் பிறந்தார். 
வழக்கறிஞரான இவர், 1894-ல், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். 

1923, ஜன., 9ல் காந்தியின் பிற்போக்குக்கொள்கைகளை ,வெள்ளையர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை  எதிர்த்து, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களால், சுயராஜ்ஜிய கட்சி துவக்கப்பட்டது. 
இதில் முக்கியமானவர், சித்தரஞ்சன் தாஸ். கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார்.
ஜாதி வேற்றுமையையும், தீண்டாமையையும் வெறுத்தவர். 
பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். 'பார்வர்டு' என்ற பத்திரிகையை துவக்கி, சுபாஷ் சந்திர போசிடம் ஒப்படைத்தார். 
1924ல் நடந்த, கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில், சுயராஜ்ஜிய கட்சி வெற்றி பெற்றது. 
மேயராக, சித்தரஞ்சன் தாசும், நிர்வாக அதிகாரியாக, சுபாஷ் சந்திர போசும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

1925 ஜூன் 16ல், சித்தரஞ்சன் தாஸ் காலமானார். 

=========================================================================================

‘903இல்  3க்கு மட்டுமே இடம்’

உலக  அளவில் இந்தியா, கல்வித் தரம் மற்றும் ஆராய்ச்சியில் உயர உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறந்த பேராசிரியர்களை, இந்தியப்  பல்கலைக்கழகங்கள் நியமிக்க வேண்டியது அவசியம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மத்திய அரசு பல சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. 
ஆன்லைன் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

அதேவேளை, ஏற்கனவே உள்ள அங்கீகார முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், பல்கலைக்கழகங்களில் உயர் தரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஏதுவாகவும், சுதந்திரமாக செயல்படவும், பல்கலைக்கழகங்களுக்கு கூடுதலாக பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியதும் இப்போதைய காலக்கட்டத்திற்கு மிக அவசியமானதாக உள்ளது.வெறுமனே பணத்தை வாங்கிக்கொண்டு பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல .
 தற்போது இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட 903 பல்கலைக்கழகங்கள் உள்ளன .ஆனால் உலகஅளவு  தரப்பட்டியலில்  வெறும் 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே  இடம்பிடித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?