புதன், 12 டிசம்பர், 2018

மகிழ்ச்சி !

ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக படு தோல்வி!!

ஆனால் மெத்தனம் கூடாது !!!

"ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் “மோடி மேஜிக்” பல்லிளித்து விட்டதைக் காட்டுகின்றன". 

ராஜஸ்தான், சட்டிஸ்கரில் பாஜக-வின் தோல்வி உறுதியாகிவிட்டது. ம.பி-யிலும் அநேகமாக பாஜகவின்  தோல்வி உறுதி.

பார்ப்பன பாசிசம் ஒழியவேண்டுமென்று எண்ணுபவர்கள் அனைவருக்கும் இந்த தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாஜக-வின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் விவசாயிகளின் கோபம்.


புதிய  தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதிலிருந்தே விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்ற போதிலும், மோடியின் ஆட்சிக்காலத்தில் அது ஒரு உச்சத்தை எட்டிவிட்டது.


விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்காமல் தானியங்களையும், காய் கனிகளையும், பாலையும் வீதியில் கொட்டி விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும், விவசாயிகள் மீது அரசு ஏவிவிட்ட வன்முறையையும், கந்து வட்டிக் கடனின் விளைவாக அதிகரித்து விட்ட விவசாயிகள் தற்கொலைகளையும் மோடி தனது சவடால் பேச்சை வைத்து சமாளிக்க முடியவில்லை.

நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பில்லை. விவசாயம் நலிவுற்றதால் முன்பு கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வந்த மக்கள், நகரத்திலும் வேலைவாய்ப்பில்லாத காரணத்தால் மீண்டும் கிராமம் நோக்கி செல்வதும், அங்கேயும் விவசாயத்தின் நலிவினால் வேலையில்லை என்ற நிலையும்தான் நகர்ப்புறங்களின் நிலைமை.

பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி யில் தொடங்கி மோடியின் அடுக்கடுக்கான தோல்விகளையும், ஊழல்களையும், கிரிமினல் நடவடிக்கைகளையும் கார்ப்பரேட் ஊடகங்கள் முடிந்த மட்டும் இருட்டடிப்பு செய்தபோதிலும் அவற்றையெல்லாம் மீறித்தான் வந்திருக்கிறது இந்த தேர்தல் முடிவு.

“சப் கா சாத், சப் கா விகாஸ்” என்ற 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடிப்பு இப்போது செல்லாது என்று தெரிந்துதான்,  அயோத்தி விவகாரத்தையும் ஆர்.எஸ்.எஸ் துணைக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த மூன்று மாநிலங்களில் மோடியைப் போல இரண்டு மடங்கு அதிகமாக ஆதித்யநாத்தை பிரச்சாரத்தில் இறக்கியிருப்பதும், 2019 தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமே.
விலை கிடைக்காத வெங்காயத்தை வீசி எரியும் விவசாயிகள்

ராஜஸ்தானும் மத்திய பிரதேசமும் சாதி – மத உணர்வுகள் பெரும் செல்வாக்கு செலுத்துகின்ற, பண்பாட்டு ரீதியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள்.

விவசாயிகளின் கோபத்தை திசை திருப்புவதற்காக சாதி, மத உணர்வுகளைத் தூண்டுவதற்கு பல கோணங்களில் பாஜக முயன்றிருக்கிறது.

 இருப்பினும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியிலிருந்து (anti – incumbancy) மக்களைத் திசை திருப்புவதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இன்று மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் தனது வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா?

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர் போன்ற அடிப்படை உழைக்கும் மக்களின் நலனுக்கான திட்டங்களை காங்கிரஸ் அரசு வகுத்து அமல்படுத்துமா?

புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் மூர்க்கத்தனத்தில் வேண்டுமானால் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் வேறுபாடு இருக்கலாமேயொழிய, இந்த கொள்கைச் சட்டகத்திற்கு வெளியே காங்கிரசோ அல்லது டி.ஆர்.எஸ்  உள்ளிட்ட மாநிலக் கட்சிகளோ இயங்கப்போவதில்லை.


புதிய தாராளவாதக் கொள்கை என்பது இந்தியாவைப் போன்ற நாடுகளை மறு காலனியாக்கும் ஏகாதிபத்தியங்களின் கொள்கை.


 இயற்கை வளங்களையும், பொதுச்சொத்துகளையும் ஆக்கிரமிக்கும் காலனியாதிக்கத்தையே ஒரு கொள்கையாக அமல்படுத்தும் எந்த ஒரு அரசாங்கமும், ஜனநாயகத்தன்மை கொண்டதாக நடந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.அதிலும் உலக முதலாளித்துவம் மீள முடியாத ஒரு கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியிருக்கும் காலம் இது. சந்தைகளின் தேக்கநிலையும், தானியங்கிமயமாதல் – செயற்கை அறிவு போன்றவையும் ஏற்கனவே இருக்கின்ற வேலைவாய்ப்புகளையே மென்மேலும் சுருக்கி வரும் காலம் இது.


இந்த சூழலில், எத்தகைய ஊழலற்ற நல்லாட்சியை வழங்குவதாக யார் பீற்றிக் கொண்டாலும், இந்தக் கட்டமைப்புக்குள் எந்த ஒரு அரசும் புதிய தாராளவாதக் கொள்கையை அமல்படுத்தும் கங்காணியாக மட்டுமே செயல்பட முடியும்.

ஒரு வலிமையான கங்காணி வேண்டும் என்பதற்காகத்தான் “அண்டர் பெர்ஃபார்மர்” மன்மோகன் சிங்குக்கு பதிலாக, மோடியை ஆளும் வர்க்கம் தெரிவு செய்தது. தான் தெரிவு செய்த அந்த கைப்பாவையை மக்களும் தெரிவு செய்யுமாறு நாட்டையே மூளைச்சலவை செய்தது. இன்று மக்கள் வேறு தெரிவைத் தேடுகிறார்கள் என்பது பாரதிய ஜனதாவை மட்டும் கவலைக்கு உள்ளாக்கியிருக்காது.
 அம்பானி, அதானி உள்ளிட்ட குஜராத்தி, மார்வாரி தரகு முதலாளிகளையும், வங்கிக் கொள்ளையர்களையும், பன்னாட்டு முதலாளிகளையும் நிச்சயம் கவலைக்குள்ளாக்கியிருக்கும். அந்தக் கவலையின் ஒரு வெளிப்பாடாகத்தான் ராமனுக்கு மீண்டும் மவுசு வந்திருக்கிறது.

“அயோத்தியில் கோயில் கட்ட சட்டமியற்று” என்று 2019 தேர்தலுக்கான புதிய நிகழ்ச்சி  நிரலை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கிளப்பியிருக்கிறார்கள்.


கடந்த 30 ஆண்டுகளில் “வளர்ச்சி – இந்துத்துவம்” என்ற இரண்டு முழக்கங்களையும் தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொண்டு, இதன் ஊடாக, தனது வாக்காளர் அடித்தளத்தையும் அரசியல் அடித்தளத்தையும் பார்ப்பன பாசிஸ்டுகள் மெல்ல மெல்ல விரிவு படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

அதிகார நிறுவனங்களையும் கைப்பற்றிக் கொண்டு விட்டார்கள்.
நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் மெல்ல மெல்ல காவிமயமாகி விட்டது. சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை அரசியலிலிருந்தும் மைய நீரோட்டத்திலிருந்தும் ஒதுக்கி வைப்பது ஒரு புதிய எதார்த்தமாகவே மாறிவருகிறது.

இது மட்டுமின்றி, தேர்தல் அரசியலுக்கு வெளியே பல்வேறு அரங்குகளிலும் தமது அமைப்புகளை பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கிறார்கள்.


ஆனால், பாஜக-வை எதிர்க்கும் கட்சிகள் – சக்திகள், தேர்தல் அரசியலின் வரம்புக்கு வெளியே, மக்கள் மத்தியில் அத்தகைய அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவில்லை.

இது நம் அனைவரின் கவலைக்குரிய உண்மை.


தேர்தல் அரசியலின் வரம்புக்குள் நின்று பார்க்கும்போது “மோடியை விட காங்கிரசோ மற்ற மாநிலக் கட்சிகளோ பரவாயில்லை” என்ற கருத்துக்கு ஒருவர் வரலாம்.

பிரச்சினையை “மோடி” என்று மட்டும் சுருக்கிப் பார்க்க கூடாது. மோடி, பார்ப்பன பாசிசத்தின் ஒரு பிரதிநிதி.


பார்ப்பன பாசிசம், கடந்த 30 ஆண்டுகளில் இந்திய அரசியிலில் அழுத்தமாக காலூன்றி விட்டது.

எனவே, எதிர்க்கட்சிகள் எனப்படுவோர் பார்ப்பன பாசிசத்தை இந்திய அரசியல் அரங்கிலிருந்து நிரந்தரமாக அகற்றும் நோக்கம் கொண்டவர்களா, அத்தகைய ஆற்றல் பெற்றவர்களா என்பதுதான் நாம் அக்கறை செலுத்த வேண்டிய கேள்வி.

தற்காலிகத் தீர்வாக, “பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது” என்பது வேறு.

 அதையே “நிரந்தரத் தீர்வாக நம்புவது” என்பது வேறு.

 புதிய தாராளவாதக் கொள்கையையும் மிதவாத இந்துத்துவ கொள்கையையும் பின்பற்றும் கட்சிகள் ஒருக்காலும் பார்ப்பன பாசிசத்தை எதிர்கொள்ள முடியாது.

பாஜக-வின் பார்ப்பன பாசிச அரசியலைக் கண்டு அஞ்சியும், அதன் ஆதிக்க சாதி சமூக அடித்தளத்தை திருப்திப்படுத்தவும் ராகுல்காந்தி நடத்தி வரும் கோயில் யாத்திரைகள் இதற்கொரு சான்று.
எல்லாவற்றிலும் வீழ்ச்சி.
  நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் பாசிசமயமாவது என்பது, புதிய தாராளவாதக் கொள்கையின் தவிர்க்கமுடியாத ஒரு விளைவு.

 மேலை நாடுகளில் நிறவெறியாகவும், இனவெறியாகவும், பிற நாடுகளில் மதவாத எதேச்சாதிகார ஆட்சிகளாகவும், அமெரிக்காவில் டிரம்ப்பாகவும் இது உருவெடுக்கிறது. இந்தியாவுக்கு – பார்ப்பன பாசிசம்.

புதிய தாராளவாதமும் பார்ப்பனியமும் இணைந்த கலவையே பார்ப்பன பாசிசம். இந்தப் புரிதலுடன் மக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் கட்டியமைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பாஜக வின் இந்தத் தேர்தல் தோல்வியை, பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக மக்களை திரட்டுவதற்குரிய ஊக்க மருந்தாகக் கருதலாமே தவிர, அரசியல் மெத்தனத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.
'இந்திய நாட்டு மக்களை குறிப்பாக தமிழர்களை ஒரு வழி செய்யாமல் விடமாட்டோம்"

                                                                                                                  நன்றி:வினவு.
 ===================================================
ன்று,
டிசம்பர்-12.

இந்திய தலைநகர் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது(1911)
  • ரொடீசியா நாடு, ஜிம்பாப்வே என பெயர் மாற்றப்பட்டது(1979)
  • ரஷ்யா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1991)
=================================================
  16 ஆம் தேதி கரையைக் கடக்கிறது !

 பெய்ட்டி புயல் !!

வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடலில், புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது.  
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த  9ம் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
 இது, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை, தீவிர காற்றழுத்த மண்டலமாகவும் மாறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இந்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, 14ம் தேதி முதல், தமிழக கடற்பகுதியை நோக்கி நகர துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.  
தற்போதைய நிலவரப்படி, டிசம்பர் 6 ஆம் தேதி முதல்  தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. அதேநேரம், புயல் சின்னம், தமிழக பகுதியை நெருங்கும்போது, கன மழை கொட்டும் என கூறப்பட்டுள்ளது..

வரும், 15ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்பகுதிகளில், கன மழை பெய்யும் என, கூறப்பட்டு உள்ளது. எனவே, தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளை, மஞ்சள் குறியீட்டில், இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது
 
மேலும், 16ம் தேதி, தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தெற்கு பகுதிகள் வழியே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்றும், வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
 
வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், அலைகள் கொந்தளிப்பாக காணப்படும்.  
கடல் சீற்றமாக இருக்கும்; 13 அடி வரை, அலைகள் உயரும். மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில், சூறாவளி காற்று வீசும் என, இந்திய கடல் தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது.

 இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் பேசும்போது, இன்று முதல், 15ம் தேதி வரை, வங்க கடலின் மத்திய தெற்கு, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிக்குள், மீனவர்கள் செல்ல வேண்டாம்.  
ஆழ்கடலில் இருப்பவர்கள், இன்று மாலைக்குள், கரை திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்..
 காற்றழுத்த தாழ்வு பகுதி, இரண்டு நாட்களில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.அதன் தீவிரத்தை கண்காணித்து வருகிறோம்
 தமிழக வட மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம், கரையை கடக்கும் என புவுயரசன் கூறியுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------