இதுதான் ஆன்மிக அரசியலா?

கல்வி நிறுவனமா?காவி நிறுவனமா??
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ சங்கத் தலைவர் சாய் பாலாஜி, பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துப்பேசினாதல்  அவரது எம்.பில் பட்டத்துக்கான மதிப்பீடு நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாணவ சங்கத் தலைவர் சாய் பாலாஜி மீது தற்போது இரண்டு விஷயம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஒன்று அகாடமிக் கவுன்சில் வளாகத்துக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ்- பாஜகவுக்கு எதிராகவும் கோஷமிட்டதற்காக விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘சமமான வேலை, சமமான ஊதியம்' என்பதை வலியுறுத்தும் வகையில், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பேரணியில் அவர் கலந்து கொண்டதற்காகவும் விசாரணை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் மாணவ அமைப்பு, “சாய் பாலாஜி மீது மட்டுமல்ல, பல்வேறு மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் அரசியல் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சாய் பாலாஜி


ஆர்.எஸ்.எஸ்,பாஜக அரசுக்கு எதிராக மாணவர்கள் பேசுவதைத் தடுக்க, மாணவ அமைப்பின் தலைவர் சாய் பாலாஜி மீதே நடவடிக்கை எடுத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். 

மேலும், அவரது எம்.பில் பட்ட மதிப்பீட்டையும் நிறுத்தி வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜகதீஷ் குமார், பேராசிரியர்களுக்கு தினமும் ஒவ்வொரு வகையில் துன்புறுத்தல் கொடுத்து வருகிறார்” என்றுள்ளது. 

விஸ்வரூபம் எடுக்கும் இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக வட்டாரத்திடம் விசாரித்தபோது, “சாய் பாலாஜி, கல்வி கற்பதிலும், வகுப்பிற்குப் போவதிலும் எந்த வித சிக்கலும் இருக்காது. அதே நேரத்தில் அவரது தேர்வு மதிப்பெண் பட்டியலை பெற முடியாது” என்று கூறியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஜே.என்.யூ ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சாய் பாலாஜியின் எம்.பில் பட்டத்தைத் தடுக்கும் வகையில் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக முறைகேடான செயல்பாடுகளை பற்றி ,அதுவும் ஒரு மாணவர் சங்கத் தலைவர் பேசியதற்கு துணைவேந்தர்ஜகதீஷ் குமார் நடவைடிக்கை எடுத்தது நாங்கள் அவர் ஆர்.எஸ்.எஸ் மூலமாகக் கொண்டுவந்தவர் என்பதை உண்மை என்பதை நிரூபிக்கிறது.
இது ஆர்.எஸ்.எஸ் -பாசிச பாஜக ஆகியவற்றின் மூலம்   கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இது” என்று ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது . 
---------------------------------------------------------------------------------------------------------------
 இதுதான் ஆன்மிக அரசியல் ?
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிற்கும், பிரமால் நிறுவனத் தலைவர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த்திற்கும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில்720கோடி ரூபாய்கள் செலவில் எளிமையான திருமணம் நடைபெற்றது.
 ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமண வீட்டாரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன், உள்துறை செயலாளர் ஜான் கெர்ரியில் தொடங்கி, நமது ஊர் சல்மான், ஷாருக், அமீர் கான்கள் வரை பணமும்,அதிகாரம் படைத்த முக்கியவர்கள் மட்டும் அனைவரும் படையெடுத்தனர்.
இரண்டு நாட்கள் உதய்பூரையே குலுக்கிய அம்பானி குடும்ப திருமண விழா மும்பையின் பெடார் சாலையிலுள்ள அம்பானியின்  27 மாடி வீட்டில்தான் நடந்தது.
இவ்வீடு  இங்கிலாந்து மகாராணி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்ததாக உலகின் மிக மதிப்புமிக்கதாகும்.


இதன் முதல் ஆறு தளங்கள் கார்கள் நிறுத்துவதற்காக மட்டுமே பயன்படுகின்றன.
ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, தோட்டம், நீச்சல் குளங்கள் என சகல வசதிகளாலும் நிரம்பிய இவ்வீட்டை பராமரிக்க 600 பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.தங்குமிடம் அங்கேயே உள்ளது.
 இப்பிரம்மாண்ட வீட்டில் தான் அம்பானி குடும்ப திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் பங்கேற்க, தங்களுக்கு  நெருக்கமான 600 பேருக்கு மட்டுமே அம்பானி குடும்பத்தார் அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர். பின்னே ஓர் அழைப்பிதழ் 1.75 லட்சமாயிற்றே.
எல்லோருக்கும் அதை வாங்கத்தகுதி வேண்டாமா?அப்படி அழைப்பிதழ் வாங்கியவர் நம்மவூரு நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர்.

 இவ்விழாவில் பங்கேற்கத் தான், தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதையும் தவிர்த்துவிட்டு மும்பை பறந்துள்ளார்.
அரசியலில் இறங்கிவிட்டதாக அறிவிப்பாணை வெளியிட்டு ஒருவருடம் முடியும் தருவாயிலும், இதுவரை தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடவில்லை.
 டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளை கமல்ஹாசன் மூன்று முறை சுற்றி நிவாரணம்,ஆறுதல் கொடுத்து வந்துவிட்டார்.
ஆனால் சென்னை நகர எல்லையை கூட நடிகர் ரஜினிகாந்த் இதுவரை தாண்டவில்லை. அவரது  மன்றத்தினர்  பல்வேறு உதவிகளை வழங்கி வந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வராதது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் என நடிகர் அமிதாப் பச்சனிடம் மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார்.

 இதனையேற்று, வீடியோ ஒன்றை வெளியிட்ட அமிதாப், கஜா புயல் சேதங்களை பட்டியலிட்டு, சகோதரத்துவத்தை உணர்த்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அமிதாப் சொல்லி லட்சம் லட்சமாக குவியப் போவதில்லை என்றாலும், தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் ஒரு விஷயத்தை கூறும்போது, அவ்விஷயம் தேசிய அளவில் கவனம் பெறும். நடிகர் கமல்ஹாசன் அதற்கான முயற்சியை தான் அமிதாப் மூலமாக செய்தார். இதே முயற்சியை அமிதாப்புக்கு மிகவம் வேண்டப்பட்ட நடிகர் ரஜினி ஏன் செய்யவில்லை?

கேரளா முதல்வர் பிரனாயி விஜனிடம் பேரிடர் நிதி செய்து உதவவும் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார் .பிரனாயி விஜனம் உடனே 10 கோடிகளுக்கான காசோலையை அனுப்பிவைத்தார்.

இதுவரை கஜா புயல் பேரிடரை பற்றி வாயே திறக்காத,ஆறுதல் கூறாத நடிகர்  ரஜினியைப்போன்றேமக்களை சந்திக்காத பிரதமர் மோடியிடம் பேரிடரை பதித்த மக்களுக்கு தேவையான உதவிகளை,நிவாரணத்தை வழங்க நடிகர் ரஜினி இதுவரை சொல்லாதது ஏன்? என்பது தான் அடுத்த கேள்வி.


மோடி சென்னைக்கு வந்து சந்தித்தது இருவரைத்தான் சோ,மற்றும் நடிகர் ரஜினியைத்தான்.
சோ உடலநலமில்லாததால் சந்தித்தார்.
ஆனால் ரஜினியை நட்பிற்காக சந்தித்து தேநீர் அருந்தியதாக மோடி கூறினார்.
அவ்வளவு நெருக்கமான மோடியிடம் நடிகர் ரஜினி கூறினால் உதவி மழை கொட்டாதா என்ன?

“ஒரு சொட்டு வியர்வைக்கு, ஒருபவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா?”, என பாடி நடித்தவர், டெல்டா மாவட்டங்களில் ஒரு சுற்று  அடித்திருந்தால், மோடி  அளவில் கஜாவின் பாதிப்பு வெளிச்சமாகியிருக்கும் என்பது எதார்த்தம். 
 கேட்டால் கட்சி ஆரம்பித்தபின்னால்தான் இது எல்லாமாம்.
துன்பப்படும் நேரம் உதவும் மனிதாபிமானம் இல்லாதவன் ஆட்சியில் அமர்ந்தபின் இன்னொரு எடுபிடி பழனிச்சாமி,நரேந்திர மோடி கலை விட மோசமாகத்தான் நடந்த கொள்வார் என்பதுதானே உண்மை.!

 நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அரசுக்கும் அழுத்தம் ஏற்பட்டிருக்கும். அவர் வெறும் நடிகராக மட்டுமே இருந்திருந்தால், மக்களிடம் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்காது.

அரசியல் களத்திற்கு வந்துவிட்டதாக அறிவித்துவிட்டு, என்ன? ஏது? என்று கூட எட்டிப்பார்க்காதது தான் மக்களிடையே விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

தற்போது, ‘2.0’ படத்திற்காக வீதிக்கு வீதி போஸ்டர் அடித்து, பேனர் கட்டிய தனது ரசிகர்களை தன் பிறந்தநாளன்று கூட சந்திக்காமல், அம்பானி வீட்டு விஷேசத்திற்காக ஓடியது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக கிளம்பியுள்ளது.

மக்கள் அல்லல்படும் போது வந்து நிற்காதவர், போர் வரும்போது வருவேன் என்பது எதற்காக? 
அது ஓட்டு அரசியல் ஆகாதா? இது முறையா,இதுதான் ஆன்மிக அரசியலா?
 என்பது நடிகர் ரஜினிகாந்துக்கே வெளிச்சம்.

====================================================
ன்று,
டிசம்பர்-24.

 அல்பேனியா குடியரசானது(1924)

லிபியா விடுதலை தினம்(1951)

 லாவோஸ் விடுதலை பெற்றது(1954)

தந்தை பெரியார்  நினைவு  தினம்(1973)

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்த தினம்(1987)


நான் யார் தெரியுமா?

தந்தை பெரியார், தான் யார்? என்பதைஅவரே சொல்கிறார்.......!

நான் ஒரு நாட்டுக்காரனோ, ஒரு இனத்துக்காரனோ, ஒரு மதத்துக்காரனோ ,ஒரு சாதிக்காரனோ, ஒரு மொழிக்காரனோ கிடையாது...

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு மனித இனத்தை சார்ந்தவர்களே என்கிற அடிப்படையில் வாழ்ந்து வருகின்றவன்
ஆனால் ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைபடக்கூடிய நாட்டிற்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாட்டை எதிர்த்து போராடுவேன் !


அந்த நாட்டிற்குள் மதங்களை ஏற்படுத்திக்கொண்டு ஒரு மதத்தினை, ஒருமதம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைபடக்கூடிய மதத்திற்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய மதத்திற்கு எதிராக போராடுவேன் !

அந்த மதத்திற்குள் பல சாதிகளை ஏற்ப்படுத்திக் கொண்டு ஒரு சாதியை, ஒரு சாதி ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைபடக்கூடிய சாதிக்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய சாதிக்கு எதிராக போராடுவேன் !

அந்த சின்ன சாதிக்காரன் ஒரு தொழிற்சாலையை வைத்து நூறு தொழிலாளர்களை அடிமைப்படுத்தினால் நான் அந்த தொழிலாளர்கள் அருகில் நின்று சின்னசாதி முதலாளியை எதிர்த்து போராடுவேன் !

அங்கே பணியாற்றக்கூடிய தொழிலாளி தன்னுடைய வருவாயில்தான் தன்குடும்பம் நடக்கிறது என்று சொல்லி தன் மனைவியை அடிமைப்படுத்தினால் அந்த பெண்ணிற்கு அருகிலே நின்றுகொண்டு அந்த கூலி தொழிலாளியையும் எதிர்த்து போராடுவேன் !

  "யாரும் யாருக்கும் அடிமையில்லை "என்பதுதான் எனக்கு தேவை. அதைத்  தவிர வேறொன்றுமில்லை...
===================================================

‘மார்க்சியம் - ஓர் எளிய அறிமுகம்’
லண்டன் பி.பி.சி. செய்தி நிறுவனம் 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
“கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலை சிறந்த சிந்தனையாளர் யார்?” என்று கேள்வி எழுப்பியது.
மிகப் பெரும்பான்மையோரின் கருத்துப்படி முடிவை வெளியிட்டது.
 “கடந்த ஆயிரம் ஆண்டின் தலை சிறந்த சிந்தனையாளர் காரல்மார்க்ஸ்.
”அப்படியானால் மார்க்சியம் என்பது எவ்வளவு ஆழமானது, விரிவானது, மகத்தானது என்று எண்ணிப்பாருங்கள். அந்தமார்க்சியத்தைக்கற்பதற்கான தொடக்கப்புள்ளியாக, எளிய வாசகர்களும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவது எவ்வளவு சவால் மிக்க பணி !
அந்தச் சவாலில் வெற்றி அடைந்துள்ளார் தோழர் செந்தில்நாதன்.
முதல் அத்தியாயத்திலேயே வித்தியாசமாகவும், சுவைபடவும் கூறுகிறார் : மார்க்சியம்என்றால் என்ன ? “ மாற்றவே முடியாது கடவுள்படைத்த உலகை என்று மனிதன் நம்பிக்கொண்டு இருந்த போது, உலகை மாற்ற முடியும் என்ற குரல் கேட்டது.
அந்தக்குரல்தான் மார்க்சியம் ” என்கிறார் !
பிறகு தத்துவம், பொருளாதாரம், அரசியல், சமூகம், இலக்கியம் உள்ளிட்ட ஒவ்வொரு தளத்திலும் மார்க்சியம் என்பதுஎன்ன என்பதைச் சுருக்கமாகவும், எளிமையாகவும் அளிக்கிறார்.
 மார்க்ஸ், லெனின் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் மிகச் சுருக்கமாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
 அனைத்துமே சிறப்புதான்.எனினும் இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்புகள் என்று நான் மூன்று அம்சங்களைக் கருதுகிறேன்.முதலாவது : சமநிலை .சமுதாயத்தில் உற்பத்தி சக்திகளே அடித்தளம். சட்டம், தர்மம், கலை, இலக்கியம் உள்ளிட்ட அனைத்தும் மேல்கட்டுமானம்.

 “ மார்க்சியம் சொல்கிறது, அடித்தளம்தான் மேல்கட்டுமானத்தின் குணத்தை, இருப்பை,அமைப்பை எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” பெரும்பாலோர் அதோடு நிறுத்திவிடுவார்கள்.
 ஆனால் இவரோ அடுத்து மேல்கட்டுமானத்தின் முக்கியத்துவத்தையும் விவரிக்கிறார். “அடித்தளம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மேல்கட்டுமானமும் முக்கியம்” என்று கூறுகிறார்.
 இதுதான் சரியான மார்க்சியப் பார்வை.
 காரல்மார்க்ஸ் தனது ‘மூலதனம்’ நூலில் “பொருள்வகைப்பட்ட உற்பத்தியை நிச்சயிக்கும் அளவுக்கு அனைத்து வகையான மனிதஉறவுகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன” என்றும், “திரளான மக்களை ஒரு கருத்தியல் கவ்விப் பிடித்ததும், அந்தக் கருத்தியலேஒரு பொருள் வகைப்பட்ட ஆற்றலாக மாறுகிறது” என்றும் கூறுவது இங்கு கருதத்தக்கது.
அதே போல “வரலாற்றை உருவாக்குபவர்கள் மக்களே என்று மார்க்சியம் சொல்கிறது” என்று கூறும் செந்தில்நாதன் “இதற்குப் பொருள் தனி மனிதனுக்கு எந்தப்பங்குமே கிடையாது என்பதல்ல” என்றும் சேர்த்துச் சொல்கிறார்.
“மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ்சொன்னார்” என்று கூறும் அவர், அதே நேரத்தில் “மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகும்.
அது எவ்வாறு உயிர்ப்பற்ற நிலையில் உயிர்ப்பாக அமைகிறதோ, அதே போன்று இதயமற்ற உலகின் இதயமாக அமைகிறது” என்று மார்க்ஸ் சொன்னதையும் சேர்த்துச் சொல்கிறார். சமநிலைக்குஇவை போல இன்னும் பல எடுத்துக்காட்டுகளையும் கூறலாம்.
 இரண்டாவது : எளிமையும், சுவையும். “எளிமையாச் சொல்றதுதாண்டா கஷ்டமானது ” என்று என் குருநாதரும், சுதந்திரப்போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் தலைவருமான ஐ.மா.பா. என்ற ஐ. மாயாண்டி பாரதி கூறுவார். அந்தக் கஷ்டமான பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் தோழர் செந்தில்நாதன்.
 சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
பொருள்தான் முதன்மையானது என்னும் மார்க்சியப் பொருள்முதல்வாதத்தை விளக்கும் போது, “நம் கனவில் தொலைக்காட்சி வரலாம்.
 சங்க காலத் தமிழன்கனவில் தொலைக்காட்சி வந்திருக்குமா? ”என்று கேட்டு விளக்குகிறார் !
அதேபோல கருத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் போது “பறவையைக் கண்டான். விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசனின் சினிமா பாடலை மேற்கோள் காட்டுகிறார்.
இயக்கவியல் அல்லது இயங்கியல் விதிகளை விளக்கும் போது. ‘நிலைமறுப்பின் நிலைமறுப்பு’ என்ற விதியை விளக்குகிறார். “நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்றால் என்ன என்று கேட்கும் போதே மிரட்சி ஏற்படுகிறதா? பழையன கழிதலும்புதியன புகுதலும் நாம் அறிந்ததுதானே. அதுதான் நிலைமறுப்பின் நிலைமறுப்பு ” என்று கூறுகிறார்.
விதை, செடி, மொட்டு, பூ,காய் என்ற வளர்ச்சிப் போக்கில் ஒன்றை மறுத்து மற்றொன்றாக, அதாவது ஒன்றுமாறி மற்றொன்றாக வளர்வதை எடுத்துக்காட்டாகக் கூறி, பழையது மாறிப் புதியது, பழையதின் நல்ல அம்சங்களை எடுத்துக் கொண்டு புதியது என்பதை விரிவாக விளக்குகிறார்.மூன்றாவது : வழக்கத்துக்கு மாறான விஷயங்கள்.
 அதாவது மார்க்சிய அறிமுகத்துக்காக எழுதப்படும் புத்தகங்களில் வழக்கமாக எழுதப்படும் விஷயங்கள் மட்டுமல்லாமல், மேலும் பல விஷயங்களையும் இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்துகிறார் தோழர் செந்தில்நாதன்.
எடுத்துக்காட்டாக அந்தோனியோ கிராம்சி என்ற இத்தாலி நாட்டு மார்க்சிய அறிஞரை அவர் அறிமுகப்படுத்துகிறார்.

பொதுவாக மேல்கட்டுமானத்தின் முக்கியத்துவத்தை மார்க்சியர்கள் குறைத்து மதிப்பிட்ட போது, கிராம்சிதான் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். குறிப்பாக பண்பாட்டுத் தளத்தில் நடத்த வேண்டிய இயக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் விரிவாக விளக்கினார்.
அதேபோல ஆளும்வர்க்கமானது அரசு, அதிகாரம் என்ற அடக்குமுறையின் மூலமாகவே மக்களை ஆள்கிறது என்று மார்க்சியர்கள் கூறி வந்தபோது, அதுமட்டுமல்ல; ஆளும் வர்க்கக்கருத்துகளை மக்கள் ஏற்க வைக்கப்படுகிறார்கள்; இவ்வாறு மக்களின் ஒப்புதலுடனே அவர்களை ஆளும் வர்க்கங்கள் ஆள்கின்றன என்பதையும் கிராம்சி விளக்கினார்.
 இந்தக் கருத்துகளைத் தமிழ்நாட்டுப் பின்னணியில் செந்தில்நாதன் அழகாக விளக்குகிறார்.அதே போல இலக்கிய இயல்களில் மார்க்சியக் கண்ணோட்டங்களை விளக்கியும், இலக்கியத்தில் இசங்கள் என்று பின் நவீனத்துவம் வரை உள்ள கோட்பாடுகளை விமர்சித்தும் தாராளமாகவே பக்கங்களை ஒதுக்கி ( 16 பக்கங்கள் ! ) அறிமுகப்படுத்துகிறார்.
 என்ன இருந்தாலும் அவர் ஒரு இலக்கியவாதி அல்லவா !
இந்த அளவுக்கு வழக்கத்துக்கு மாறான விஷயங்களையும் எழுதும் தோழர் செந்தில்நாதன், ஒரு விஷயத்தில் மட்டும் வழக்கமான புறக்கணிப்பைச் செய்கிறார்.
இது இந்தப் புத்தகத்தின் ஒரு முக்கியக் குறைஎன்று நான் கருதுகிறேன். அதுதான் ஃபிராய்டிசத்தை அவர் கையாளும் முறை.
 “மனிதப் பிரச்சனைகளுக்குப் பால் உணர்வே (அதாவது உடலுறவு உணர்வே) காரணம் என்று கூறி பொதுமைப்படுத்தி விட்டார் ஃபிராய்ட்” என்று விமர்சிக்கிறார் தோழர் செந்தில்நாதன்.
ரொம்பச் சரி. ஆனால் சமூக இயக்கத்தில், சமூகப் பிரச்சனைகளில் பால் உணர்வின் பங்கு அப்படிப் போகிற போக்கில் புறக்கணித்துவிட்டுச் செல்லத் தக்கதா?‘குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம்’ என்ற மிக முக்கியமான புத்தகத்தில், எங்கெல்ஸ் இது பற்றிக் கூறுகிறாரே.
 பொருள் உற்பத்தியும், மனிதஉற்பத்தியுமே வரலாற்றை நிர்ணயிக்கின்றன; உழைப்பின் வளர்ச்சிக் கட்டம், குடும்ப அமைப்பின் வளர்ச்சிக் கட்டம்ஆகியவையே அந்தச் சமூக அமைப்பை நிர்ணயிக்கின்றன என்று எங்கெல்ஸ் சொல்கிறார்.
எங்கெல்ஸ் இங்கு சொல்லும்நிர்ணயகரமான பாலுணர்வு மனித உற்பத்தியின் அடிப்படையே செக்ஸ்தானே. அவ்வளவு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த செக்ஸின் பங்கு பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் தோழர் செந்தில்நாதன் புறக்கணித்தது ஒரு குறையாகவே எனக்குப்படுகிறது.
மற்றபடி பல்வேறு தனிச் சிறப்புகளைக் கொண்ட சிறந்த புத்தகம்தான் மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்.
இதை உழைக்கும் மக்கள்மத்தியில் பரவலாகக் கொண்டு செல்வது மிகவும் தேவையானது. இதை எழுதிய தோழர்செந்தில்நாதனுக்கும், அவரை எழுத வைத்தசந்தியா பதிப்பகத்திற்கும் பாராட்டுகள்.
                                                                                                     
                                                                                                           - இரா. ஜவஹர்

மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்
ஆசிரியர்: சிகரம் ச.செந்தில்நாதன்

 சந்தியா பதிப்பகம்
70,இந்திரா காலனி 53வது தெரு, 
 அசோக் நகர்
சென்னை-600 083
பக்:96 விலை : ரூ.90/-
தொ.பேசி: 98411 91397

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?