வியாழன், 24 ஜனவரி, 2019

சமமற்ற போட்டி..?

"தேர்தல் பிரசாரத்துக்கானஅரசு உட்படஅனைத்து வளங்களையும் வசதிகளையும்   பாரதிய ஜனதா தன்வசப்படுத்தியுள்ளது. 

பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் இடையேயான சமமற்ற போட்டிதான்  நிலவுகிறது."

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், முக்கிய தலைவர்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் அனைத்து சார்ட்டர் விமானங்களையும் ஆளும் பா.ஜ.க தன் வசப்படுத்திவிட்டதாகவும் 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விளம்பரங்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் விரைவிலேயே வெளியிட உள்ளது.


அநேகமாக வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.
 இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் மற்றும் பிரசார வியூகங்களை ஒவ்வொரு கட்சியும் வகுத்து வருகின்றன. 

இந்தத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை எப்படியும் வீழ்த்தியே தீருவது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாகத்தான் அண்மையில், கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பிரமாண்ட எதிர்க்கட்சிப் பேரணி  நடந்தது.

இதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவ கவுடா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசிய மாநாடு கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, பா.ஜ.க அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்தப் பேரணி பா.ஜ.க-வுக்குச் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிப்பதில் அக்கட்சித் தீவிரமாக உள்ளது.

 இதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளைக் கவர்வதற்காக கவர்ச்சிகரமான கடன் திட்டங்கள், நடுத்தர வர்க்கத்தினரை ஈர்க்க வருமான வரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது எனப் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம் பாஜக-வுக்கு ஆதரவாக சில பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பிரசாரகர்களைக் களமிறக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. கூடவே கட்சியின் முன்னணி தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்த முன்னணி தலைவர்களையும் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அதே சமயம், நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், அவர்கள் சார்ட்டர் விமானம் எனப்படும் தனி விமானத்தில் சென்றால்தான் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் செல்ல முடியும். இத்தகைய சார்ட்டர் விமானங்கள் தனியாரிடம்தான் அதிக அளவு உள்ளன.

இந்த நிலையில் பா.ஜ.க, தனது பிரசாரகர்களுக்கென இந்த சார்ட்டர் விமானங்கள் அனைத்தையும் முன்பதிவு செய்துவிட்டதாகவும், தங்கள் தலைவர்கள் பிரசாரத்துக்கென இந்த தனி விமானங்களைப் பெறுவதில் மிகுந்த போராட்டத்தைச் சந்திப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
``தேர்தல் பிரசாரத்துக்கான அனைத்து வளங்களும் பா.ஜ.க வசம் உள்ளது. பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் இடையேயான சமமற்ற போட்டி நிலவுகிறது.
எங்கள் பயன்பாட்டுக்காக ஒரு சில தனி விமானங்களைப் பெறுவதற்குக்கூட முடியாமல் உள்ளோம். இப்படி இருந்தால் எங்கள் தலைவர்கள் எப்படிப் பிரசாரத்துக்குச் செல்வார்கள்?

ஆளும் பா.ஜ.க கட்சி 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது. இது நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற பன்னாட்டு கம்பெனிகள் விளம்பரத்துக்காகச் செலவழிக்கும் தொகையைவிட அதிகமானது.

இவ்வளவு தொகை செலவழித்துச் செய்யப்படும் இதுபோன்ற விளம்பரங்களும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன.
இத்தனைக்குப் பிறகும் மக்களின் அன்பு மற்றும் ஆதரவுடன் பா.ஜ.க-வை நாங்கள் தோற்கடிப்போம்" என்று ஆனந்த் சர்மா மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை, வருகிற பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
                                                                                                                                                                                                                                                                                                                                                                        நன்றி:விகடன் பா.முகிலன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

"டீ விற்றதாக கூறியதும் பொய்யா?”
தன்னை ஒரு ஏழைத்தாயின் மகன் என்றும், சிறுவயதில் தேநீர் விற்று கஷ்டப்பட்டவன் என்றும் பிரதமர் மோடி அடிக்கடி கூறிக்கொள்வது உண்டு.
கேட்பவர்கள் தன்மீது இரக்கம் கொள்ள வேண்டும் என்பதே அதற்கான காரணம் ஆகும். இதையும் நம்பித்தான், கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, பலர் மோடிக்கு வாக்களித்தனர்.

ஆனால், “மோடி தேநீர் விற்றதை நேரில்பார்த்த மற்றும் அவரிடம் தேநீர் வாங்கி அருந்திய யாராவது இருக்கிறார்களா?”

 என்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்குஇப்போது வரை பதிலில்லை.

இதனால், ‘மோடி தேநீர் விற்றதாக கூறுவதே ஒரு பொய்’ என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும்.
 இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை, பிரதமர் மோடியின் 40 ஆண்டுகால நெருங்கிய நண்பரும், விஎச்பி அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரவீன் தொகாடியா,
 பகிரங்கமாக போட்டு உடைத்துள் ளார்.

திங்களன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரவீன் தொகாடியா, “பிரதமர் மோடி ‘டீ’ விற்றதே கிடையாது;
 நான் அவருக்கு 43 ஆண்டுகால நண்பர்;
 எனக்கு அவரை நன்கு தெரியும்; நாட்டு மக்கள் தன்மீது பச்சாதாபம் கொள்ள வேண்டும்என்பதற்காகவே ‘டீ’ விற்றதாக மோடி ஏமாற்றினார்”
என்று அம்பலத்தில் ஏற்றினார்.

இதுதான்  2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரல் செய்தி .

“ரூ. 15 லட்சம் தருவதாக பொய்சொல்லி ஏமாற்றினீர்கள்; பரவாயில்லை..டீ விற்றதாக கூறியதும் பொய்யா?”

என்று பலரும்பிரதமர் மோடியை கிண்டலடித்து வருகின்றனர்.
====================================================
ன்று,
ஜனவரி-24.
ஹோமி பாபா

தெற்காசியாவின் முதலாவது  பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)

பேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)

ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)

 இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)

முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)

====================================================
 'இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை' என்றழைக்கப்படும் ஹோமி பாபா 1909ம் ஆண்டு அக்டோபர் 30ம் நாள் மும்பையில் ஒரு வசதியான வீட்டில் பிறந்தார்.
அவரை ஒரு பொறியிலாளராக ஆக்குவதே அவரின் தந்தை ஜஹாங்கிர் பாபாவின் கனவாக இருந்தது.
 தாயார் மெஹ்ரானும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

 மும்பையில் பள்ளி படிப்பை முடித்த அவருக்கு கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் அதிக நாட்டம் இருந்தது. எனவே ராயல் அறிவியல் நிறுவனத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார்.
 பின்னர் தந்தையின் விருப்பத்திற்கேற்ப இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று 1930ல் பொறியியல் பட்டம் பெற்றார்.

 பாபா எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பவர். அவரின் அடுத்த நோக்கம் ஜாம்ஜெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர வேண்டும் என்பது.
பட்டம் பெற்றதையடுத்து இயற்பியல் துறையில் காமா கதிர்களை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சமர்ப்பித்தார்.
 அவரின் ஆராய்ச்சி சாதனைக்காக ஐசக் நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. இதனால் 1934ல் அவர் இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். அப்போது உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களான நீல்ஸ் போர், ஃபெர்மி, பாலி ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது.

அவர்களுடைய ஆராய்ச்சியிலும் முக்கிய பங்காற்றினார்.

 இயற்பியல் என்றாலே 'கோட்பாடு அறிவியல்' என்று கூறிய அந்த காலத்தில் 'அணு இயற்பியல்' என்ற அதிநவீன துறையை அறிமுகப்படுத்தியவர் பாபா.
 தன்னிகரற்ற அணு விஞ்ஞானியாக செயல்பட்டு வந்தார்.
பின்னர் எலக்ட்ரான், பாசிட்ரான் துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.
சர்.சி.வி.ராமன் தலைமையில் இருந்த இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் 1940களில் பணியாற்றினார்.

 பாபாவின் முயற்சியால் இந்தியாவின் முதல் அணுசக்தி மையமான டாடா அணு ஆராய்ச்சி கழகம் 1945ல் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, அணு ஆற்றலின் முக்கியத்துவத்தை இந்திய அரசுக்கு எடுத்துரைத்தார். அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் அவருடைய திறமையை புரிந்துகொண்டு அவருக்கு ஆராய்ச்சி செய்ய அனுமதி அளித்தார்.

தொடர்ந்து பாபாவுக்கும், நேருவுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
 இந்திய அரசின் உதவியினால் பாபா, அணுசக்தி துறையை மேம்படுத்தினார். 1948ல் இந்திய அணு ஆற்றல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அதன் முதல் தலைவராக பாபா பொறுப்பேற்றார்.
 அவரது திறமையான வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பினால் ஆசியாவின் முதல் அணு உலை மும்பையில் உள்ள டிராம்பேயில் 1956ல் இயக்கப்பெற்றது. 

ஆக்கப்பூர்வமாகவும், அமைதியாகவும் அணு ஆயுத தயாரிப்பு குறித்து முதல் முறையாக ஜெனிவாவில் நடந்த ஐ.நா மாநாட்டில் விளக்கினார்.
அணு ஆயுதத்தை அமைதிப்பணிக்காக பயன்படுத்தலாம் என எடுத்துரைத்தார். தொடர்ந்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பகட்ட முயற்சிகளை இந்தியாவில் விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார்.

  இன்று இந்தியாவில் இருக்கும் பல அணு உலைகள், அணு ஆற்றல் நிலையங்கள் ஆகியன அவர் முயற்சியால் தோன்றியவையே.

 இந்தியா அணு ஆற்றலிலும், அணு ஆயுத சோதனையிலும் சிறந்து விளங்க வித்திட்டவர் பாபா. அவரின் ஈடு இணையற்ற திறமையை பாராட்டி இந்திய அரசு 1954ல் பத்ம பூஷண் விருது அளித்து சிறப்பித்தது.
 இதுதவிர அவருக்கு மேலும் பல சர்வதேச விருதுகளும் வழங்கப்ட்டது.


 விக்ரம் சாராபாய்-உடன் இணைந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திலும் தன் திறமையை காட்டினார். 1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் சுவிட்சர்லாந்து பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பாபா அகால மரணமடைந்தார்.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------

 மோடிஜி ஆயுஷ்மான் பாரத் திட்டமும் தோல்வி!
 ஏழைகளிடம் கொள்ளையடிக்கும்மருத்துவமனைகள்
மோடி ஆட்சிக்கு வந்ததும் ஏராளமான திட்டங்களை அறிவித்தார்.

அல்லது ஏற்கெனவே இருந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி, புதிதாக சில விதிகளை சேர்த்து அறிவித்தார்.
ஆனால், தூய்மை இந்தியா துவங்கி, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என, அவர் அறிவித்த எந்த திட்டமும்உருப்படியாகவில்லை.


இலவச வங்கிக் கணக்குக்கான பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா, இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, பயிர்காப்பீட்டுக்கான பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா, சிறுகடனுக்கான பிரதான்மந்திரி முத்ரா யோஜனா, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான பேட்டி பச்சாவோ,பேட்டி பத்தாவோ ஆகிய நலத்திட்டங்களும் அறிவிப்பாகவே போயின.


அந்த வரிசையில், பிரதான் மந்திரி ஜன்ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் - உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீடு என்ற பெயரில் மோடி அறிவித்த ‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ திட்டமும் ஏமாற்றாக முடிந்துள்ளது.
 ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் இணைவோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி இலவச சிகிச்சையளிக்கப்படும்.

 இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்போ, நோயின் நிலையோ முக்கியமல்ல என்றெல்லாம், திட்டத்தை துவங்கி வைத்தபோது பிரதமர் மோடி கூறினார்.
தனது இந்த திட்டத்தால், இந்தியாவில் உள்ள 10 கோடி குடும்பங்கள் அதாவது 50 கோடிப் பேர் பயனடைவார்கள் என்றார்.
திட்டம் துவங்கப்பட்ட 100 நாட்களுக் குள் 6 லட்சத்து 85 ஆயிரம் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்று குணமடைந்து இருக்கிறார்கள் என்றும் பெருமை பீற்றினார்.

ஆனால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், எந்த தனியார் மருத்துவமனையும் தற்போது ஏழைகளுக்கு இலவச சிகிச்சைஅளிப்பதில்லை; மாறாக சிகிச்சைக்கு கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அறிவித்தபடி மருத்துவ சிகிச்சைக் கான காப்பீட்டுத் தொகையை, தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு வழங்காததும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், சிகிச்சைக் கட்டணம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படலாம் என்று கூறப் பட்டாலும், ஏழைகளிடம் வசூலிக்கப்பட்ட பணம் திருப்பி அளிக்கப்படுவதற்கு என்னஉத்தரவாதம்? என்ற கேள்விகளும் எழுந் துள்ளன.

காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாலும், லாபம் மருத்துவமனைகளுக்குத் தானே தவிர, ஏழைகளுக்கு கிடைக்கப் போவதில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
பிரதமர் மோடி, தேர்தல் ஆதாயத்திற் காக ஆரம்பித்த திட்டம்தான் ஆயுஷ்மான்பாரத் என்று இந்திய மருத்துவ சங்கத்தின்முன்னாள் தலைவர் கே.கே. அகர்வால் விமர்சித்துள்ளார்.

ஆயுஷ்மான் திட்டத் திற்குப் பதில், இஎஸ்ஐ திட்டத்தை விரிவுபடுத்தி இருந்தால் கூட 50 சதவிகித ஏழைகள்பயனடைந்திருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------