நினைவகமும் பாதுகாப்பும்
மொபைல் போன், டேப்ளட் போன்ற கையடக்க சாதனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ள சூழலில் அதற்கேற்ப நினைவகங்களின் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும்புற அளவை மிகச்சிறியதாக மாற்றுவது குறித்தானஆய்வுகள் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன.
டேட்டாக்களை எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பாகவும், எளிதாகவும் இருக்கவேண்டும்.
கோடிக்கணக்கான டேட்டாக்களிலிருந்து நமக்கு வேண்டியதை விரைவாக தேடிப் பெற அதிக வேகமும், திறனும் மிக்கதாகவும் நினைவகங்கள் இருக்கவேண்டும் என்பதே இன்றைய தேவையாக உள்ளது.
மேசைக் கணினி, சர்வர்கள் மற்றும் லேப்டாப் சாதனங்களில் பயன்படுத்தப்படும் நினைவகங்களை ஹார்ட்டிஸ்க் (HDD - வன்தட்டு) என்று பொதுவாக அழைக்கிறோம்.
இதில் காந்தப் பூச்சுகொண்ட மெல்லிய தகடுகளின் மீது டேட்டாக்கள் பதியப்படும்.
சாதாரணமாக நமது மேஜைக் கணினிகளில் 240 ஜிபி, 500ஜிபி, 1 டிபி எனத் தேவைக்கேற்ப வன்தட்டுகளைப் பயன்படுத்துகிறோம்.
12 டிபி, 14 டிபி அளவுள்ள ஹார்ட்டிஸ்க்குகள்கூட தற்போது சந்தையில் கிடைக்கின்றன.
ஹார்ட் டிஸ்க்குகள் தயாரிப்பில் சீகேட் (SEAGATE), வெஸ்டர்ன் டிஜிட்டல் (WESTERN DIGITAL), டோஷிபா(TOSHIBA), மக்ஸ்டோர்(MAXTOR), சாம்சங் (SAMSUNG), எடேடா (ADATA) முதலிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
SSD நினைவகங்கள்
ஹார்ட் டிஸ்க் சேமிப்பகங்களுக்கு மாற்றாக ஃபிளாஸ்முறையில் பதிவு செய்யும் சிப் வடிவ நினைவகங்கள் சமீப காலமாக பிரபலமடைந்து வருகின்றன.
சாலிட் ஸ்டேட் டிரைவ் - Solid State Drive (SSD) என்று அழைக்கப்படும் இவை ஹார்ட்டிஸ்க்குகளை விட பாதிக்கும் குறைவான அளவு கொண்டவை. சேமிக்கும் திறன் 128 ஜிபி முதல் கிடைக்கிறது.
ஹார்ட் டிஸ்க்கை விட வேகமான செயல்திறன் இதன் சிறப்பம்சமாகும். பலவகையிலும் சிறப்பானதாக இருந்தாலும் வாங்க எளிதானதாக இவற்றின் விலை இல்லை.
ஹார்ட்டிஸ்க் பிரச்சனைகள்
தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்தப்படும் கணினிகளில் ஹார்ட் டிஸ்க்குகளில் பேட் செக்டார் எனப்படும் கெட்டுப் போன பகுதிகளால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம்.
அதேபோல சீரற்ற மின்சாரப் பிரச்சனைஇருந்தாலும் ஹார்ட்டிஸ்க்குகளுக்கு பாதிப்பு ஏற்படும்.நினைவகத்தில் ஒரு பேட் செக்டார் (bad sector) ) என்பது, நாம் பதிவு செய்யும் இடத்தில் ஏற்படும் சிறியபழுதைக் குறிக்கிறது.
அந்த இடத்தில் எந்த டேட்டாவினையும் எழுதவோ, அதிலிருந்து படிக்கவோ முடியாது.
பேட் செக்டார் என்பது, ஹார்ட் டிஸ்க் டிரைவ்களில் மட்டுமல்ல சாலிட் ஸ்டேட் டிரைவ்களிலும் உருவாகலாம்.
பேட் செக்டார் உருவாக இரண்டு காரணங்கள்உள்ளன.
ஒன்று கணினி சாதனங்கள் மற்றும் மின்சாரம்போன்ற புறக்காரணங்களால் ஏற்படுவது (physical - or hard - bad sector).
மற்றொன்று நாம் பயன் படுத்தும் மென்பொருள்களால் ஏற்படுவது ((physical - or hard - bad sector) .
இது எளிதாக நாமே சரி செய்திடக்கூடியது.
முதல் வகையில் பழுது ஏற்பட்டால், அதனை சரிசெய்வது எளிதானதல்ல.சில சமயம் முடியாமலே கூட போய்விடும்.
சாலிட் ஸ்டேட் டிரைவ்களில் , குறிப்பிட்ட செல் வாழ்நாள் காலத்தினை இழந்திருக்கலாம்.இது போன்ற பழுதுகளைச் சரி செய்யமுடியாது.
நினைவகப் பழுதுகளை சரி செய்ய விண்டோஸ் இயங்க தளத்தில் செக் டிஸ்க் என்ற வசதி உள்ளது.
இதனைப் பயன்படுத்தி மாதம் ஒரு முறை ஹார்ட் டிஸ்க்குகளைப் பரிசோதித்துப் பார்த்து சரி செய்யலாம்.
செக் டிஸ்க் செயல்முறை
கணினியில் My Computer உள் நுழைந்து C Drive அல்லது நீங்கள் விண்டோஸ் இயங்குதளத்தைப் பதிந்துள்ள டிரைவ் எதுவோ அதன் மீது Right Click செய்து Properties செல்லவும்.
தோன்றும் விண்டோவில் Tools என்ற Tab-ஐ தெரிவு
செய்யவும்.
இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும்.
அதை கிளிக் செய்யவும்.
இதற்கு அடுத்து வரும் விண்டோவில் முதலாவதாக உள்ள Automatically fix file system errors டிக்செய்யப்பட்டு இருக்கும்.
இது System Error களை கண்டறிந்து தானாகவே சரி செய்துவிடும்.
இரண்டாவதாக உள்ள Scan for and attempt recovery of bad sectors என்பது, இதனை டிக் செய்து தேர்வு செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.
ஆனால் இதனையும் சேர்த்து தேர்வு செய்வது நல்லது.
அடுத்து Start என்பதை கிளிக் செய்யவும்.
கணினி இயங்கிக் கொண்டிருப்பதால் உடனடியாக செய்ய முடியாது, மறுமுறை கணினி தொடங்கும் போது செய்வதற்கு அனுமதி கேட்கும்.
அதற்கு அனுமதியளித்துவிட்டு கணினியை Restart செய்யவும்.
இப்போது Check Disk பணி நடைபெறும்.
இத்தருணத்தில் கணினியை அணைக்கக் கூடாது.
முழுமையான செயல்பாடு முடிந்து ஹார்ட் டிஸ்க் பிரச்சனைகள் பற்றிய விவரங்கள் காண்பிக்கப்படும். பிறகு தானாகவே கணினி செயல்பாட்டிற்கு வரும்.அதுவரை காத்திருக்க வேண்டும்.
விண்டோஸ் பதிந்த டிரைவ் தவிர்த்து பிற டிரைவ்களில் செக் டிஸ்க் செயல்பாட்டை கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போதே செய்யலாம்.
ரீஸ்டார்ட் தேவையில்லை.
ஆனால் அந்த டிரைவில் மட்டும் அத்தருணத்தில் எந்த ஒரு செயல்பாட்டையும் செய்யாமல் இருக்கவேண்டும்.
-சு .ராஜேந்திரன்,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோவிலின் புனிதம்.பாஜகவின் விளக்கங்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஷ்ரவன் தேவி கோயில் உள்ளது.
இங்கு, பாஜக தலைவர் நரேஷ் அகர்வாலின் மகன் நிதின், கட்சியினருக்கான விழா ஒன்றை நடத்தியுள் ளார்.
பின்னர், விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, உணவு ஏற்பாடு செய்து,கோயிலிலேயே வைத்து பொட்டலங்களாக விநியோகித்துள்ளார்.
இந்நிலையில், சாப்பிடுவதற்காக பொட்டலங்களைத் திறந்து பார்த்தபோது,
அத்தனைப் பொட்டலங்களுக்கு உள்ளும் பூரி, சப்ஜி, இனிப்பு ஆகியவற்றுடன் மது பாட்டிலும் இருந்தது .
நிகழ்ச்சியில், 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் கலந்து கொண்டிருந்த நிலையில்,
அவர்களுக்கும் தாராளமாக மதுபாட்டில்கள் வழங்கப்பட் டுள்ளன.
இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஒடுக்கப்பட்டவர்கள்,பெண்கள் நுழைந்தால் கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்று எதெற்கெல்லாமோ போராடும் பாஜகவின் தலைவரும் அவரது மகனும், கோயிலுக்கு உள்ளேயே மதுபாட்டில்களை விநியோகித்தது கடும்கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
=====================================================
இன்று,
ஜனவரி-09.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்
கனெக்டிகட், அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது(1788)
சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் டேவி விளக்கு பயனுக்கு வந்தது.(1816)
புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது(1921)
ஐநா தலைமையகம் நியூயார்க்கில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது(1951)
நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது(1990)
====================================================
1816 - டேவி விளக்கு என்று அழைக்கப்படும், ஹம்ப்ரி டேவி உருவாக்கிய பாதுகாப்பு விளக்கு முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது.
பாதுகாப்பு விளக்கு என்பது, நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்டது.
நிலக்கரி பயன்பாடு என்பது மிகநீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது.
புதிய கற்காலத்திலேயே (கி.மு.4000), சீனர்கள், நிலக்கரியைச் செதுக்கி, ஆபரணங்கள் செய்துள்ளனர்.
கி.மு.3000-2000 காலத்திய இங்கிலாந்தில், தரைக்குமேலாகக் கிடைத்த நிலக்கரி, இறுதிச் சடங்குகளில், உடல்களை எரியூட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கி.மு.1000 காலத்தில், சீனர்கள், தாமிரத்தைப் பிரித்தெடுக்க நிலக்கரியைப் பயன்படுத்தியுள்ளனர். கி.பி.200களில், ரோமப் பேரரசின் ஆளுகையின்கீழிருந்த இங்கிலாந்தில், சுரங்கங்கள் தோண்டி நிலக்கரியை எடுப்பது தொடங்கிவிட்டது.
நிலக்கரிச் சுரங்கங்களில், தொடக்க காலத்தில், வெளிச்சத்திற்கு மெழுகுவர்த்திகளே பயன்படுத்தப்பட்டன.
ஆனால், சுரங்கம் தோண்டும்போது, காற்றில் கலக்கிற நிலக்கரித் துகள்களாலும், சுரங்கங்களில் வெளியாகும் தீப்பற்றக்கூடிய மீத்தேன் முதலான வாயுக்களாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுத் தொழிலாளர்கள் பலியாயினர்.
இதைத் தவிர்க்க, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில், மின்மினிப்பூச்சி போன்று உயிரொளிர்வு கொண்ட மீன்களின் உலரவைக்கப்பட்ட தோல் பயன்படுத்தப்பட்டாலும், அது மிகக் குறைந்த வெளிச்சத்தையே தந்தது. 1700களில் சிக்கிமுக்கிக் கல்லை சுழலும் தட்டில் உரசச்செய்து, அதில் ஏற்படும் தீப்பொறிகளின் வெளிச்சத்தைப் பயன்படுத்தினர்.
அந்தத் தீப்பொறிகளாலும் விபத்துகள் ஏற்பட்டன.
வில்லியம் க்ளேனி, ஜார்ஜ் ஸ்டீபன்சன் ஆகியோர் உருவாக்கிய விளக்குகளைவிட, டேவி உருவாக்கிய விளக்கு பாதுகாப்பானதாக இருந்ததுடன், சுடரின் நிறத்தைக்கொண்டு வாயுக்களின் இருப்பைக் கண்டறியவும் உதவியதால் டேவிக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஆனாலும், ஆபத்தான சுரங்கங்களில் பாதுகாப்பின்றி தோண்டியதாலும், விளக்கு காட்டும் எச்சரிக்கைகளைச் சரியாகக் கவனிக்காததாலும், 1900களில் மின்விளக்குகள் வரும்வரை சுரங்க விபத்துகள் தொடர்ந்தன.
இவ்விளக்கை உருவாக்கியது மட்டுமின்றி, பொட்டாஷியம், சோடியம் உள்ளிட்ட 9 தனிமங்களை முதன்முதலில் பிரித்தெடுத்தவரும், அவ்வினைகளின்மூலம், மின் வேதியியல் என்ற புதிய துறை உருவாகக் காரணமாக இருந்தவரும், நைட்ரஸ் ஆக்சைட் வாயுவின் சிரிப்பூட்டும் தன்மையைக் கண்டறிந்தவரும் டேவிதான்!
=====================================================
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு லட்சணம்!
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 27 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை, தற்போது 8.46 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
‘இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை’ என்ற தலைப்பில், தொழில்துறை அமைச்சகம் மற்றும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பகம் சார்பில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த வகையில் வேலைவாய்ப்பின்மையின் சதவிகிதம் 7.38 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே 2018 நவம்பர் மாதத்தில் 6.62 சதவிகிதமாகவும், 2017 டிசம்பர் மாதத்தில் 4.78 சதவிகிதமாகவும் வேலைவாய்ப்பின்மை இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்பு ஆகியவற்றால், கிராமப்புறங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதும் புள்ளிவிரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கிராமப்புறங்களில் 2018-ஆம் ஆண்டில் மட்டும் தினக்கூலித் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், கல்வி கற்காதவர்கள், சிறு வணிகர்கள் என சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
இவர்களில் பெண்கள் மட்டும் 1 கோடியே 09 லட்சம் பேர் என்று கூறப்படுகிறது.
புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பில் இதுவே 83 சதவிகிதம் ஆகும்.வேலை அளிக்கும் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பும் குறைந்து கொண்டே வருகிறது.
நகர்ப்புறங்களில் 13.84 என்ற அளவில் இருந்த வேலைவாய்ப்புகள், தற்போது 13.66 ஆக சரிந்துள்ளது என்பதையும் புள்ளி விவரங்கள் காட்டியுள்ளன.