இதுதான் இன்றைய முக்கிய வினா.
1.ஓட்டிய பத்திரிகையாளர்கள்!
ஓடிய அன்புமணி.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை.என்று கூறிய ராம்தாஸ் அதற்கு சாட்சியாக கார்,நீர்,பார்,மோர் என்று பலவற்றை காட்டினார்.
பாத்திரம் எழுதித்தருவதாக பொங்கி எழுந்தார்.
ஆனால் நடந்ததோ நேர்மாறாகிப்போனது.
அச்சு ஊடகங்கள்,தொலைக்காட்சிகள் ராமதாஸையும்,அன்புமணியையும் கழுவி ஊத்தின.
அனைத்திற்கும் மேலாக சமூகவலைத்தளங்களில் இருவரையும் நாக்கைப்புடுங்கிக்கொண்டு வடக்கிருக்கும்படியாக இடுகைகள் பரவலாகின.
பாமக கட்சியினரையும் தலைமையை தட்டிக்கேட்க ஆரம்பித்தனர்.
அனைத்துக்கும் அன்புமணி இருநாட்கள் கழித்து திங்கட் கிழமை பதில் சொல்வதாக அமைதிப்படுத்தினார்.
ஆனால் திங்கட்கிழமை சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் திணறிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென பத்திரிகையாளர் சந்திப்பை துண்டித்துக் கொண்டுவேகமாக ஓட்டம்பிடித்தார்.
அவருடன் வந்த ஜி.கே.மணி,மூர்த்தியும் முகம் கூசி வெளியேறினர்.
சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, எதனடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் என்பதை நீண்ட நேரமாக அன்புமணி விளக்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய அடுக்கடுக்கான வினாக்களுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை.
தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் தயாரித்து ஆளுநரிடம் கொடுத்தீர்கள். அப்படிப்பட்ட அதிமுகவோடு தொகுதி உடன் பாடு செய்யும்போது ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தாதது ஏன்?
என்ற கேள்விக்கு, இதுகுறித்து ஆளுநர் விசாரித்து உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்பார் என்று நழுவினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், அதிமுக-வை விமர்சித்தாலும் அவர்களோடு அணி சேர்வதில் எங்களுக்கு எந்த நெருடலும் இல்லை என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதியா இல்லையா?
அதிமுக ஆட்சியில் ஊழல் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் கூறாமல் மழுப்பினார்.
தமிழகத்தை நாசப்படுத்தும் திட்டங்களைக் கொண்டு வந்து மாநிலத்தின் உரிமைகளை பறித்தது பாஜக, அந்த திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு.
இந்நிலையில், எப்படி மாநில உரிமைகளை மீட்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறுகிறீர்கள்? என்ற கேள்விக்கு, வெளியிலிருந்து போராட மட்டுமே முடியும்.
ஆட்சிக்குள் இருந்தால்தான் கொள் கையை செயல்படுத்த முடியும்.
பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ள நீட் மசோதாவிற்கு கையெழுத்திடச் செய்து தமிழகத்திற்கு அந்த தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறிக்கொண்டார்.
பாமகவின் மாற்றம், முன்னேற்றம் என்ற கொள்கை தோல்வியடைந்துவிட்டதா?
என்ற வினாவுக்கு, கடந்த 8 ஆண்டுகளாக தனித்து நின்றோம். மக்கள் அங்கீகாரம் தரவில்லை.
ஒரு எம்எல்ஏ கூட வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற தேர்தல் வியூகத்தை இந்த தேர்தலில் மாற்றியிருக்கிறோம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களின் நிலை என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது .
நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் வேறு, சட்டமன்ற தேர்தல் வியூகம் வேறு என்றார்.
குட்கா வழக்கில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்வீர்களா?
ஊழல்வாதி ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்ற பாமக-வின் நிலைபாட்டில் மாற்றம் உள்ளதா?
போன்ற பல கேள்விகளுக்கு அன்புமணி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
முதலமைச்சர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறித்தும், பாஜக தமிழக தலைவர் தமிழிசை பற்றியும் கடந்த காலங்களில் அன்புமணி தெரிவித்த கருத்துக்கள் தற்போது வைரலாக பரவி வருவது குறித்தும் செய்தியாளர்கள் தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
விமர்சனங்களை பார்த்தால் வெற்றி பெற முடியாது என்று கூறிய அவர், பல கேள்விக்கு நேரடியாக பதில் கூற முடியாமல் திக்குமுக்காடினார்.
ஒரு கட்டத்தில் ஒரு செய்தியாளர் ஒரு கேள்விக்கு மேல் கேட்கக் கூடாது என்ற அவர், ஒரு செய்தியாளரிடம் இருந்த மைக்கை பிடுங்கும்படி கூறினார்.
அடுத்தடுத்து செய்தியாளர்கள் பாமக-வின் நிலைபாடு, கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பாகவே தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
அதிமுக-பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் அன்புமணியின் மைத்துனருமான எம்.கே.விஷ்ணுபிரசாத் சில தினங்களுக்கு முன்பு கடுமையாக சாடியிருந்தார்.
அதுகுறித்த கேள்விக்கு மைத்துனர் சாடியது மன வேதனைத்தந்ததாகக் கூறிவிட்டு மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வேகமாக எழுந்து கிட்டத்தட்ட ஓடி சென்றுவிட்டார்.
ஊடகங்கள் எழுப்பிய திராவிட இயக்கம்,பாஜக கூட்டணி,எடப்பாடி மீது ஆளுநரிடம் கொடுத்த குற்றச்சாட்டுகள்,அதிமுகவினர் ஊழல் தொடர்பான ஆதரப்புத்தகம் வெளியிட்டது,குட்கா,8வழிச்சாலை ,கார,நீர்,மோர் விமலாக்கம்,பத்திரம் எழுதித்தருவதாக சொன்னது என எந்த ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் தவித்த அன்புமணி எதற்காக ஊடகவினர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.?
400 தீவிரவாதிகள் பலி எனத்தகவல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுவே கடைசி குரலாகட்டும்!
நாடாளுமன்றத்திற்கு செல்வதையும் வேண்டாத வேலையாக கருதினார்.
மறுபுறத்தில் எதிர்க்கேள்வி கேட்க வாய்ப்பில்லாத நிலையில், ‘மனதின் குரல்’ என்ற பெயரில் வானொலியில் உரையாற்றி வந்தார்.
அதில் தனது வீரதீர பிரதாபங்களை எடுத்துரைப்பது அவரது வழக்கம்.
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அரசு செலவில் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் மனதின் குரல் நிகழ்ச்சி இருக்காது என்றுஅவர் கூறியிருக்கிறார்.
இதைக்கூட தேர்தல்விதி என்று கூறாமல் தன்னுடைய பெருந்தன்மைப்போல அவர் பீற்றிக்கொள்கிறார்.
புல்வாமா தாக்குதலை தடுக்கத் தவறியமோடி அரசு மீது பல்வேறு சந்தேகக் கணைகள் தொடுக்கப்படுகின்றன. ஆனால் தன்னுடைய இயலாமையை மறைத்து, மத்திய பாதுகாப்புப்படை வீரர்களின் தியாகத்தை தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள பாஜக முயல்கிறது.
எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் பிரதமர், பயங்கரவாதிகளை ராணுவம் முற்றாக ஒழிக்கும் என்று கூறுகிறார்.
ஒரு நாட்டினுடைய பாதுகாப்பு என்பது தேர்தல் பிரச்சாரத்திற்கு உரிய ஒன்றல்ல.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடிமொரார்ஜி தேசாய் அவசர நிலை காலத்தில் ஆற்றிய பணியை நினைவுகூர்ந்து, அவர் பிரதமரான பிறகு உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை மீட்டுக் கொடுத்ததாக கூறியுள்ளார்.
பாரதிய ஜனசங்கம் என்ற பாஜகவின் முந்தைய வடிவம் ஜனதா கட்சியில் இணைந்தபோதும், தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் இயங்கி வந்தனர்.
இதற்கு ஜனதா கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது.
இரட்டை உறுப்பினர் பதவி கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு ஜனசங்கத்தினர் மறுத்ததால்தான் ஜனதாஆட்சி கவிழ்க்கப்பட்டது என்பதையும் மோடிசேர்த்துக் கூறியிருக்கலாம்.
பின்னர்காங்கிரசுக்கு மாற்றாக வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியையும் பாஜகதான் படுகுழியில் தள்ளியது. அவசர நிலை காலத்தை பேசுவதால் மட்டுமே மோடி தன்னுடைய ஜனநாயக விரோத முகத்தை மறைத்துக் கொள்ள முடியாது.
அவசர நிலைக் காலத்தைவிட கொடூரமான முறையில் அரசியல் சாசன அமைப்புகளின் மீது இவரது ஆட்சியில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை மொரார்ஜி மீட்டதாக மோடி கூறுகிறார்.
அனைத்து அரசியல் சாசன அமைப்புகளும் தகர்க்கப்படும் காலமாகவே மோடியின் ஆட்சிக்காலம் அமைந்தது. மனசாட்சியற்ற மனதின் குரல் இனி ஒலிக்காமல் இருப்பதே தேசத்திற்கு நல்லது.
====================================================
இன்று,
பிப்ரவரி-26.
2வது பிரெஞ்ச் குடியரசு அறிவிக்கப்பட்டது(1848)
பெய்ரூட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின(1984)
குவைத் விடுதலை தினம்(1991)
டிம் பெர்னேர்ஸ், லீ நெக்சஸ் என்ற உலகின் முதல் இணை உலாவியை அறிமுகப்படுத்தினார்(1991)
====================================================
2. யார் தேசத்துரோகிகள்?
படத்தில் நாம் காண்பது கிழிக்கப்பட்டு தரையில் வீசி எறியப்பட்ட ப்ளக்ஸ் போர்ட் துண்டுகள்.
இடம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டை ஊராட்சியின் பேருந்து நிறுத்தம். கிழிந்து கிடந்ததை விரித்து சேர்த்து வைத்து படித்துப் பார்த்தால் அதில் உள்ள வாசகங்கள் நம் மனதை உருக வைக்கின்றன.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத் தில் தீவிரவாத தாக்குதலில் பலி யான சிஆர்பிஎப் வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் ப்ளக்ஸ் போர்ட் அது, ‘‘எங்கள் எல்லை சாமிகளுக்கு கண்ணீர் அஞ்சலி வீரவணக்கம்’’ என நாட்டுப்பற்று ததும்பும் இந்த ப்ளக்ஸ் போர்டை வைத்தவர்கள் திருமக்கோட்டை ஊராட்சியின் இளைஞர்கள்.
அவர்கள் ‘ஆண்டி இண்டி யன்கள்’ அல்ல.
ஆனால் இதை கிழித்து தரையில் வீசி எறிந்தது,காவல்துறை.
இதற்கு சொல்லப் பட்ட முதல் காரணம் அனுமதி பெறாமல் ப்ளக்ஸ் வைத்தது.
இரண்டாவது காரணம் நீதிமன்ற உத்தரவு.கிழிக்கப்பட்ட போஸ்டருக்கு அருகாமையில் அதே திருமக்கோட்டை யில் அதிமுகவினர் வைத்த ப்ளக்ஸ்போர்டு மட்டும் அப்படியே ப்ரஷ்சாக உள்ளது.
காரணம் அது அனுமதி பெற்றதாம்.
காண்பவர் கண்களை கூச வைத்து படிப்பவர் முகங்களை சுளிக்க வைத்து கடந்த ஒரு மாத காலமாக அதிமுக போஸ்டர்களால் தமிழகத்தின் மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள் எல்லாம் நாறிக் கொண்டிருக்கின்றன.
மித மிஞ்சிய தனிநபர் துதியும் தன்னை பிரமாதப்படுத்திக் கொள்ளும் அழகிய கட்டவுட் போஸ்டர் கலாச்சாரம் இன்று தமிழகத்தில் மன வியாதியாகவே மாறியிருக்கிறது.
ஊழலிலும் சுய நலத்திலும் மொத்தமாக மூழ்கிக் கொண்டிருக்கும் அதிமுகவின் இந்த லட்சோபலட்சம் ப்ளக்ஸ் போர்டுகள் கட்டவுட்டுகள் நகரவெகுஜன மக்களின் சிந்தனையை திணறடித்து தெளிவான, கூர்மை யான சாலை போக்குவரத்து கவனத்தை தடுமாற வைக்கின்றன.
வாழும் மனிதர்களை பெரிதுபெரிதாய் காட்டும் இந்த கட்டவுட்டுகள், ப்ளக்ஸ் போர்டுகள் அவைகள் அனுமதி பெறப்பட்டி ருந்தாலும் உயர்நீதிமன்ற ஆணை களுக்கு எதிரானதாகும்.
ஆனால் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த சிஆர்பிஎப் துணை ராணுவப்படை வீரர்களுக்கு சல்யூட் செய்யும் திருமக்கோட்டை இளைஞர்களின் அந்த ப்ளக்ஸ் போர்டு நாட்டுப்பற்றை உயர்த்தும் இந்திய இளைஞர்களின் அடை யாளமாகும்.
தமிழ்நாடு திறந்தவெளி (உருக்குலைப்பு தடுப்பு) சட்டம் 1959-இன் முகப்புரை மற்றும் பிரிவு1 மற்றும் 2 வலியுறுத்தும் கட்டாய நெறிகளுக்குட்பட்டதாகும்.
அது சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டிருப்பதாக கருதினால் அதை காவல்துறையினர் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.அல்லது மேலே கூறப்பட்ட சட்டத்தின்படி வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.
அதை விடுத்து ப்ளக்ஸ் போர்டை கிழித்தது அந்த இளை ஞர்களின் நாட்டுப்பற்று உணர்வை தரையில் வீழ்த்துவதற்கு சமமாகும்.
நாட்டின் மிகப்பெரும் தலைவர்கள் தியாகிகள் மரணமடைந்தால் அஞ்சலி போஸ்டர்கள் வைப்ப தற்கு கூட அனுமதி பெற வேண் டும் என்று எந்த நீதிமன்ற ஆணையும் கூறவில்லை. சட்டமும் கூறவில்லை.
திருவாரூர் மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகம் இது குறித்தபுரிதலை தங்கள்துறையினர்களிடம் உருவாக்க வேண்டும். உயர்நீதி மன்ற ஆணைகளையும் சட்டத்தின் கட்டாய விதிகளை மீறுபவர்கள் அவர்கள் ஆளும் கட்சியினராக இருந்தாலும் அச்சமின்றி பாகு பாடின்றி அவர்கள் வைத்த மிதமிஞ்சிய கட்அவுட்டுகள், ப்ளக்ஸ் போர்டுகளை மாவட்ட நிர்வா கங்கள் அப்புறப்படுத்த வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது சாவுக்கு மம்தா பானர்ஜியே காரணம்!
கொல்கத்தாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தனது சாவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் காரணம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம், தற்போது மேற்குவங்கத்தில் முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின் அராஜக அரசியலுக்கு, அதிகாரி ஒருவர் பலியாகிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள் ளன.
மேற்குவங்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர் கௌரவ் சந்திராதத்.
அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றகௌரவ் தத், கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி, மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், தனது கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
குடும்பத்தினர் அவரைமீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், “எனது தற் கொலைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பழிவாங்கல் நடவடிக்கைகளே காரணம்” என்று கௌரவ்தத், கடிதம் எழுதி வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் பழிவாங்கல் அடிப்படையில், மம்தா பானர்ஜி தன்னை நீண்டகாத்திருப்புப் பட்டியலில் வைத்ததால், 2018 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் விருப்பஓய்வு பெற்றதாகவும், அதன்பிறகும் கூடஓய்வூதியம், கிராஜூவிட்டி உள்ளிட்ட ரூ. 72 லட்சம் ரூபாய் அளவிற்கான பணப்பலன்களை தராமல் மம்தா பழிவாங்கியதால் தற்கொலை செய்து கொள்வதாக கௌரவ் தத் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “1999 - 2000 ஆகிய ஆண்டுகளில் கேஷ்பூர் படுகொலை சம்பவம் மேற்கு வங்கத்தை உலுக்கிப்போட்டது.
கம்யூனிஸ்டுகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் மோதல் வெடித்தது.
இதில் பலர் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் நான் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றினேன். கலவரத்தை தடுக்க முற்பட்டேன்.
இந்த சம்பவத்தின்போது நான் கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நினைத்த மம்தா, முதல்வரான பின்னர், எனக்கு காவல்துறையில் பலஇடையூறுகளை உருவாக்கினார். 33 ஆண்டுகளாக நேர்மையாக பணியாற்றிய எனக்கு, பணி ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்து மம்தா என்னை பழிவாங்கினார்.
இதனால் நான் விருப்ப ஓய்வு பெற்றேன்.
அதன்பிறகும்கூட எனக்கான செட்டில் மெண்டை கொடுக்காமல் மம்தா மேலும்என்னை பழிவாங்கினார்.
அதேநேரத்தில் சிபிஐ-க்கு எதிராக அண்மையில் தர்ணாவில் ஈடுபட்ட மம்தா, தனக்கு சாதகமாக செயல்படும் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்கள், கார், சொகுசு பங்களா, இதர சலுகைகளை வழங்குகிறார்.
முதல்வருக்காக பல்வேறு மாநிலஅமைப்புகளால் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டேன் மற்றும் கொடுமைப்படுத்தப்பட்டேன்.
இதனால் எனக்கு நானே அளித்து கொண்ட மரணதண்டனையால், முதல்வருக்கு மன அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். நேர்மையான மற்றும் கடின உழைப்பு கொண்ட என்னையும், நஸ்ருல் இஸ்லாம் ஐ.பி.எஸ். போன்ற அதிகாரிகளையும் தேர்வு செய்து, அவர்களை திட்டமிட்ட முறையில் அழிக்கும் முயற்சியில் உங்கள் அரசு ஈடுபடுகிறது.
ஆளுங்கட்சியின் மோசம் நிறைந்த இதுபோன்ற விளையாட்டுக்களுக்கு அடையாள எதிர்ப்பு காட்டவே இந்த முடிவு” என்றுவிரிவாகவே கௌரவ் தத்தின் கடிதம் இருந்தது.
மேற்குவங்க வரலாற்றில் அதிகாரிஒருவர் தற்கொலை செய்து கொண்டதும், அதற்கு மாநில முதல்வரின் பழிவாங்கல்தான் காரணம் என்று குற்றம் சாட்டியதும், மேற்குவங்க மக்கள் மத்தியில் தற்போது விவாதமாக மாறியிருக்கிறது.
கௌரவ் தத்தின் மனைவி, தனது கணவரின் சாவுக்கு காரணமான மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடவடிக்கை எடுக்குமாறும், கௌரவ் தத் மரணத்திற்கு நீதி கோரியும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட கௌரவ் தத்தின் தந்தையான கோபால் தத்தும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
அவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------