இருதலைக்கொள்ளி

 எறும்பின் தவிப்பை காணாதவர்கள்
ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியில் மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனத நேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெறுகிறது .

ஆனால்  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக, அதிமுகவும் பாஜகவும் , திரைமறைவில் நடத்தி வரும் பேச்சுவார்த்தை ஒரு மாதத்திற்கும் மேலாக இழுத்துக் கொண்டே போகிறது.

பாஜக கேட்கும் தொகுதிகளை, அதிமுக தர தயாராக இருந்தாலும் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை, அந்த கட்சிக்கு விட்டுத்தர வேண்டிய நெருக்கடியில், அதிமுக உள்ளது.

இதில் எத்தனை இடங்கள் வெற்றி பெற்றாலும், அதன் பலன் அனைத்துமே, தேர்தலுக்கு பின், பாஜகவுக்குத்  தான் கிடைக்க போகிறது.
அதனால் சிட்டிங்' எம்.பி.,க்கள் பலரது, தொகுதிகள் பறிபோக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுக- பாஜக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தமிழகத்தைச் சோந்த யாரும் இல்லததால் முறையாக தொகுதிகள் குறித்து பேசமுடியவில்லை என்கின்றனர் அதிமுகவினர் .

தமிழிசை,எச்.ராஜா ஆகியோர் கூறுவதை வைத்து முடிவெடுக்கும் தமிழக கள நிலவரங்கள் தெரியாத, டெல்லி தலைவர்களுடன் பேசி, விஷயத்தை புரிய வைப்பதில், அதிமுக  திணறுகிறது.

மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்  கூட்டணி பேச்சு குழுவில்  இல்லை.

இது ஒருபுறம் என்றால், பாஜகவுடன் நடத்தி வரும் பேச்சு குறித்து, அதிமுகவில் இரண்டு அமைச்சர்களை தவிர, வேறு யாருக்கும், எதுவும் தெரியாது.
 முழுக்க முழுக்க பழனிச்சாமி,பன்னிர்செல்வம் இருவர் மட்டுமே முன்னின்று தரும் வாக்குறுதிகள், எந்தளவு நிறைவேறும் என்ற சந்தேகம், பாஜகவுக்கு  வந்துவிட்டது.

அதே நேரத்தில் கூட்டணி குறித்து உடனே அறிவித்து விட வேண்டாம் என்று அதிமுக  தொடர்ந்து வலியுறுத்துகிறது.
முதலில் இதை பெரிதாக  எடுத்துக் கொள்ளாத பாஜக, தற்போது மத்திய உளவுத் துறை கொடுத்த அறிக்கையால் அதிர்ந்து விட்டதாம்..

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, பேச்சுவார்த்தையை சூயிங்கமாக  இழுத்து கடைசி நேரத்தில் கட்சிக்குள் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் கூட்டணி இல்லை என்று வெளியே துப்பிவிட அதிமுக உள்நோக்கத்துடனே இந்த வேண்டுகோளை போட்டுள்ளது அந்த அறிக்கை கூறியுள்ளது .

 இதனால் எச்சரிக்கையாக  பாஜக ,கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் மோடி  தமிழக சுற்றுப் பயணத்தின்போதே அதனை தெளிவு படுத்த வேண்டும்' என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
பாஜகவை பகைத்துக்கொண்டால் அதிமுக தலைவர்கள் பாதி  பேர்கள் நிலை என்னாகும் என்பதை உணர்ந்துள்ள அதிமுக தலைவர்கள் ஒருபுறம்,பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தற்போது அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் பாதி கூட வராது என்று கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக தொண்டர்கள் ஒருபக்கம்.
அதிமுக தொண்டர்களைப்பார்த்து பயப்படுவதா?
சிபிஐ,அமுலாக்கப்பிரிவை எண்ணி பயப்படுவதா?
இருதலைக்கொள்ளி எறும்பின் தவிப்பை காணாதவர்கள் அதிமுக தலைகளை பார்த்து உணரலாம்.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
ஸ்டெர்லைட் ; வாதங்கள் நிறைவு.
பிப்.11-ல் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்குஎதிரான மேல்முறையீட்டில் உச்சநீதி மன்றத்தில் அனைத்துத் தரப்பினரின் வாதம்பிப்ரவரி 7 வியாழனன்று நிறைவுபெற்றது.
பிப்ரவரி 11 ஆம் தேதியன்று அனைத்துத் தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளனர்.

 தூத்துக்குடியில் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய ஆவேச போராட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசு இந்த ஆலையைசீல் வைத்து மூடியது. 
இப்போராட்டத் தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

ஆலை மூடப்பட்டதை எதிர்த்தும் ஆலையை செயல்படுத்த அனுமதி கோரியும் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
இதனை விசாரித்த பசுமைதீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை செயல் படலாம் என்று தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சியடைக்கூடிய வகையில் தீர்ப்பளித்தது.
 தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவைஎதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதனுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். ர்ச்சுணன் தாக்கல் செய்துள்ள மனுவையும் (மனு எண் 163 09 / 2019) உச்சநீதிமன்றம் இணைத்துக்கொண்டது.
இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றனர்.
எதிர்தரப்புகளின் வாதம் பிப்ரவரி 5 ஆம் தேதியன்று துவங்கி நடைபெற்றது.
இந்த வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று அனுமதியளிக்கும் அதிகார வரம்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இல்லை என்றும் இந்த ஆலை யால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது;
 நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு குறைவாகவே புகைபோக்கிகள் அமைக்கப் பட்டுள்ளன;
இதனால் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விசார ணையில் முன்வைத்தனர்.

ஆலைக்கு எதிராக ஆஜராகி வாதாடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாக கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாதம் வியாழனன்று நிறைவுபெற்றுள்ளது.

 பிப்ரவரி 11 திங்களன்று தமிழக அரசு,மாசுகட்டுப்பாட்டு வாரியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் வேதாந்தா குழுமமும் எழுத்துப்பூர்வ வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இத்தகவலை அர்ச்சுணன் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான், சுப்பு முத்துராமலிங்கம்,பெனோ பென்சிகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 
 ====================================================
ன்று,
பிப்ரவரி-08.

புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1849)

  நச்சு வாயுவை பயன்படுத்தி மரண தண்டனை அமெரிக்காஅறிமுகப்படுத்தியது(1924)

நாஸ்டாக் பங்கச் சந்தை குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது(1971)

 அப்பர் வோல்ட்டாவில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது(1974)

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன(2005)
====================================================
தமிழக பட்ஜெட் 2019-20அறிவிப்புகள் .
1. மின்சார பேருந்து
தமிழகத்தில் மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவையில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

(ஏற்கனவே பேருந்து என்றபெயரில் ஓடுபாவைகளை பழுது பார்த்தல் போதாதா?மீதிப்பணத்தில் பணிமனைகளை அட்டாக்கில் இருந்து திருப்பலாமே!)
 
2. கலாம் கல்லூரி
ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்படும்.
(ஆரம்பப்பள்ளிகள் மூடப்படும்?)

3. 3 ஆயிரம் ஸ்கூட்டர்
மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3 ஆயிரம் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

4. புயல் நிவாரணம்
கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டித் தரும் திட்டத்திற்கு ரூ. 1700 கோடி ஒதுக்கீடு.

5. சென்னையில் பார்க்கிங் வசதி
சென்னையில் 2 லட்சம் கார்கள், 2 லட்சம் பைக்குகள் நிறுத்தும் வகையில் நிலத்தடி வாகன வசதி ரூ. 2 ஆயிரம் கோடியில் ஏற்படுத்தப்படும்.

6. கடன் சுமை
தமிழக அரசுக்கு ரூ. 3.97 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 42 ஆயிரம் கோடி நடப்பாண்டில் அதிகரித்திருக்கிறது.(மேலும் அதிகரிக்க ஆவண செய்யப்படும்)

தமிழக பட்ஜெட்டை வாழ்த்த காத்திருப்பவர்கள்.

7. 20 ஆயிரம் வீடுகள் 
சூரிய மின் சக்தி வசதியுடன் 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்.(ஒப்பந்தம் எடப்பாடி சமப்ந்தருக்கே)
 
8. விபத்து நிவாரணம் உயர்வு
ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம்

9. வருவாய் எதிர்பார்ப்பு
2019-20ல் தமிழக அரசின் வருவாய் ரூ. 1.97 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.(இதில் உங்கள் வருவாய் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் )

10. மாணவர்களுக்கு பஸ்பாஸ்
மாணவர்கள் பயன்படுத்தும் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.766 கோடி ஒதுக்கீடு
(ஆனால் பாதிப்பேருக்கு வழங்கப்படாது)

11. மூடப்பட்ட டாஸ்மாக்
இதுவரை 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(புதிதாக அவையே வேறு இடங்களில் 3000 கடைகளாகத்திறக்கப்பட்டுள்ளதை சொல்லவில்லையே)

12. விவசாயத்திற்கு...
விவசாயத்துறைக்கு  10,550 ரூபாய் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(அந்த விவசாயநிலங்கள் பலவழிச்சாலைகளுக்கு எடுக்கப்படும்)

13. மெட்ரோ ரயில் 
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தால் சேவைப்பகுதி 172.91 கி.மீ ஆக அதிகரிக்கும். பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14. தமிழ் இருக்கைகள்
ஹார்வர்டு பல்கலைக்கழகம் போல் பிற பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்.
(முதலில் டெல்லிப்பல்கலைக்கழக்தில் மூடப்படும் தமிழ் வகுப்பை திறக்கப்பாருங்கள்)
 
15. தனிநபர் வருமானம் உயர்வு
2011-2012 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 1,03,600 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம் 2017-2018 ஆம் ஆண்டில் 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது.
(அதிமுகவில் உள்ள தனியர்களின் நாள் வருமானம் இது)

16. பொருளாதார வளர்ச்சி
2019-2020-ல் மாநில பொருளாதார வளர்ச்சி 8.16% ஆக எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
(கடன் வளர்ச்சியை சொல்லுங்கள்)

17. உணவு பதப்படுத்தும் பூங்கா
பிரான்ஸ் நிறுவனம் ரூ2 ஆயிரம் கோடியில் உணவு பதப்படுத்தும் பூங்காவை தமிழகத்தில் அமைக்க உள்ளது.
(அதை அரசு செய்யவேண்டிய தமிழகப்பட்ஜெட்டில் சொல்வது ஏன்)

18. தமிழ் மொழி வளர்ச்சிக்கு...
 தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
(முதலில் தலைமைச் செயலகத்தில் தமிழைக்கொண்டுவாருங்கள்.தமிழில் ஆணைகளை வெளியிடுங்கள்)

19. மீனவர் நலன்
வரும் நிதியாண்டில் மீன்வளத்துறைக்கு, 927.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள், 18 கட்டுப்பாட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்  உதவியால் ஆபத்துக்காலங்களில் 200 கடல் மைல் தூரத்திலுள்ள படகுகளை கண்காணிக்க முடியும்.
(ஆனால் இலங்கை படைகள் தமிழர்களை கடத்துவதை மட்டும் அதன் மூலம் கண்காணிக்க இயலாது.) 


20. அணைகள் பாதுகாப்பு
தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் ரூ. 745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(இவை பொதுப்பணித்துறை அமைச்சர் இல்லப் புனரமைப்புக்குத்தான்)
 
21. ஆடு வழங்கும் திட்டம்
விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு.
(செம்மறி ஆடுகள்தான் ------- இருக்காங்களே.தனியே ஒதுக்கீடு எதற்கு)

 டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு மூடப்படும்?
டெல்லி பல்கலைக்கழகத்தில் நான்கு பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் அதன் தமிழ்ப் பிரிவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 இதன் இரண்டு பிரபல மகளிர் கல்லூரிகளில் இருந்த பேராசிரியருக்கான பணியிடங்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதால், அதன் தமிழ் துறைகள் ஏற்கெனவே மூடப்பட்டு விட்டன.

லட்சக்கணக்கான தமிழர்கள் வாழும் டெல்லியில் தமிழுக்காக ஏழு பள்ளிகள் உள்ளன. இதில் படித்து முடித்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வருபவர்களின் மேற்கல்விக்காக டெல்லியில் உள்ள கல்வி நிலையங்களில் பல வருடங்களாக தமிழ் மொழியில் சான்றிதழ், டிப்ளமோ, இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சுமார் எட்டு வருடங்களாக ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதனிடையே, டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பிரபல லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் 15 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றிருந்தார். மற்றொரு மகளிர் கல்லூரியான மிராண்டா ஹவுஸில் எட்டு வருடங்களுக்கு முன் தமிழ் பேராசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றார்.

 இந்த இரண்டு பணியிடங்களும் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு விட்டதால் அதன் தமிழ் பிரிவுகள் மூடப்பட்டு விட்டன. இது, நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்களை நிர்வகித்து வரும் மத்திய அரசின் மத்திய பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிரானது எனத் தெரியவந்துள்ளது.

எனினும், இதை தமிழர்களும், அம்மாநிலத்தின் அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தமிழ் கல்விக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
இதனால், டெல்லிவாழ் தமிழர்கள் அவற்றில் சேர்ந்து தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்புகளையும் இழந்துள்ளனர். குறிப்பாக டெல்லியின் பிரபலமான 2 மகளிர் கல்லூரிகளிலும் தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்பை பெண்களும் இழந்துள்ளனர். தமிழுக்கு, இந்தி உட்பட மற்ற மொழியாளர்களின் எதிர்ப்பும், காழ்ப்புணர்வும் இதற்கு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பிரிவை உயர்த்த, தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் ஒரு சொற்பொழிவை துவக்க திட்டமிடப்பட்டது.
 இங்கு பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித்தொகை அளிக்க எடுக்கப்பட்ட முயற்சியும் ஈடேறவில்லை எனினும், கடந்த 2007-ல், தமிழக அரசால் அளிக்கப்பட்ட ரூபாய் ஐம்பது லட்சத்தின் உதவியால் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கானப் பிரிவு துவக்கப்பட்டது. இருபதிற்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் உள்ள இங்கு டெல்லி மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் வந்து பயில மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், இங்கு கூடுதலாகப் பேராசிரியர்களை அமர்த்தாமல் இருப்பதால் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வெங்கடேஸ்வரா கல்லூரி மற்றும் தயாள் சிங் கல்லூரியிலும் தமிழுக்கானப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

அடுத்து ஐந்து முதல் பத்து வருடங்களில் இங்குள்ள பேராசிரியர்கள் ஓய்வு பெற்றால் அவையும் வேறு துறைகளுக்கு மாற்றும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?