இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

பாரதீய (தேர்தல்) ஜனதா ஆணையம்.

மோடி அரசாங்கம், தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர், தன்னுடைய குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சியினர் மீது ஏவுவதற்கு அரசாங்கத்தின் மற்றுமொரு துறையையும் தற்போது பயன்படுத்தத் துவங்கியிருக்கிறது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறையினர் எதிர்க்கட்சிகள் மீதும் அவற்றின் தலைவர்கள் மீதும் பாய்வதற்குக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறார்கள்.


கடந்த இரு வாரங்களில் நாட்டின் பல பகுதிகளில் பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் மீதும், அவற்றுடன் இணைந்த வர்த்தகப் பிரமுகர்கள் மீதும் முதலமைச்சர்கள் மற்றும் பாஜக அல்லாத அரசாங்கங்களின் அமைச்சர்களின் முக்கிய உதவியாளர்கள் மீதும் வருமான வரித்துறையினர் சோதனைகள் மேற் கொண்டதைப் பார்த்தோம்.

குறி வைக்கப்பட்டவர்கள்

இத்தகைய வருமான வரிச் சோதனைகள், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கு எதிராகவும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் திமுகவின் முக்கிய தலைவர் மற்றும் கட்சியின் பொருளாளருக்கு எதிராகவும் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் முக்கிய உதவியாளர்கள் சிலருக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டன.

இவற்றில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவையனைத்தும் மக்களவைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டபிறகு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின்பு, மேற்கொள்ளப்பட்டவைகளாகும்.

சார்புள்ள  தேர்தல் ஆணையம்


நம்முடைய தேர்தல் அமைப்பில் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களும் அரசியல்கட்சிகளும் மிகப்பெரிய அளவில் பணத்தைப்பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லவேண்டியிருக்கும்.
தேர்தலில் சட்டவிரோதமாகப் பணம் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தக்கூடாது என்று இங்கே யாரும் வாதிடவில்லை.

ஆனால் இந்தப் பணியைச் செய்ய வேண்டியது தேர்தல் ஆணையம்தான்.

தேர்தல் எந்திரம்தான் தேர்தலில் பயன்படுத்தப்படும் பணப் புழக்கம் குறித்துப் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையானவழிகளில் எல்லாம் (உண்மையில் அவைபோதுமான அளவிற்கு இல்லை என்றபோதிலும்) முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அது பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு, கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றி, வருமான வரித்துறையினரிடம் மேல்நடவடிக்கைக்காக ஒப்படைத்திருக்கிறது.

ஆனால், மோடி அரசாங்கம், தேர்தல் ஆணையத்தை ஓரங்கட்டிவிட்டு, வரிமான வரித்துறையினரையும், நேரடி வரிகள் மத்திய வாரியத்தையும் (Central Board of Direct Taxes)தேர்தலில் பாஜகவிற்கு எதிராகப் போட்டியிடுகின்ற அரசியல் கட்சியினர் மீது மட்டும் குறிவைத்துப் பாய வைத்திருக்கிறது.

வருமான வரித்துறை அதிகாரிகளும் சந்தேகமான முறையில் கணக்கில் வராத பணத்திற்காக பாஜக அல்லாதஅரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை மட்டுமே குறிவைத்துப் பாய்ந்து சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 பாஜகவின் எந்தவொரு தலைவர் வீட்டிலோ அல்லது பாஜக ஆதரவு வர்த்தகர்கள் வீடுகளிலோ அல்லது அதனை ஆதரித்திடும் கட்சித் தலைவர்கள் வீடுகளிலோ இதுவரையிலும் எவ்விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 

அலட்டிக் கொள்ளாத ஆணையம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்குவந்தபின்னர் வருமான வரித்துறையினரை அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்துகொண்டிருப்பதைப் பற்றி தேர்தல் ஆணையம் பெரிதாகஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. அது மத்திய வருவாய் செயலாளருக்கு ஒரு கடிதம்அனுப்பியது.
அதில், “தேர்தல் காலத்தில்மேற்கொள்ளப்படும் அமலாக்க நடவடிக்கைகள் அனைத்தும் தனித்துவத்துடனும், நடுநிலையுடனும், பாரபட்சமின்றியும், பாகுபாடு இல்லாமலும் அமைந்திட வேண்டும்,” என்றுகடுமையாக அறிவுறுத்தப்படுவதாகக் கூறியிருந்தது.
அது மேலும், மாநிலத் தேர்தல்அதிகாரிகள்(Chief Electoral Officers)தேர்தலில் சட்டவிரோதமான பணம் சந்தேகத்திற்குரியமுறையில் பயன்படுத்துவது பற்றி “பொருத்தமானமுறையில் தெரிவிப்பது” உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம், தங்களின் தெளிவான அனுமதியின்றி எந்தவொரு அரசியல்கட்சித் தலைவர்களின் இல்லங்களில் சோதனைகள் நடத்திடக் கூடாது என்று கூறியிருக்க வேண்டும்.
 தேர்தல்ஆணையம் மாநிலத் தேர்தல் அதிகாரிகள், தனக்குப் பொருத்தமான முறையில் தெரிவித்தால் மட்டும் போதுமானது என்று இருந்திருக்கக்கூடாது.
 மாறாக, அவ்வாறு செய்வதற்கு முன் தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறெல்லாம் தேர்தல் ஆணையம் செய்திடாமல், அரைமனதுடன் கடிதம் ஒன்றை மட்டும் அனுப்பியிருக்கிறது.

ஆளும்கட்சியும் குறிப்பாக பிரதமரும் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்றுநன்கு தெரிந்தபோதிலும், தேர்தல் ஆணையம்அரைமனதுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

ஆண்மையற்ற ஆணையம்?


மிகவும் கண்ணியம்மிக்க ஓய்வு பெற்றஐஏஎஸ்/ஐஎப்எஸ் அதிகாரிகள் குடியரசுத்தலைவருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், நம்நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கேந்திரமான அமைப்பாக விளங்கும் தேர்தல் ஆணையத்தின் “நம்பகத்தன்மையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி” குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அவர்கள் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமீறல்களைப் பட்டியலிட்டு அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரியிருக்கிறார்கள்.
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை முதல் ஆயுதத்தை விண்ணில் வெற்றிகரமாக இந்தியா ஏவியதைத் தொடர்ந்து பிரதமர் அதனைத் தானே செய்தது போல் ஆற்றிய உரை குறித்து தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அளித்தபோதிலும் எவ்வித எச்சரிக்கையும்கூட விடுக்காமல் அதனை விட்டுவிட்டது.

அதேபோன்றே உ.பி. முதல்வர் யோகிஆதித்யநாத், இந்திய ராணுவத்தை மோடியின்சேனை என்று விளித்ததையும் தேர்தல் ஆணையம் மிகவும் மென்மையான கண்டனத்துடன் கைகழுவி விட்டது.

 தேர்தல் ஆணையம் இதில் குறைந்தபட்சம் என்ன செய்திருக்க வேண்டும்?

ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு ஆதித்யநாத்தை பொதுக் கூட்டங்களில் பிரச்சாரம் செய்யவிடாது தடை விதித்திருக்க வேண்டும்.

அதேபோன்று, பிரதமர் மோடி, ஏப்ரல் 1 அன்று வார்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மிகவும் அப்பட்டமானமுறையில் இந்துவெறியைக் கிளப்பியபோதிலும், அதற்கெதிராகவும் எவ்விதமானநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு தன்னுடைய வெறித்தனத்தைத்தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதநிலையில், புல்வாமா தியாகிகளின் பெயரில்பாலக்கோட் வான்வழித்தாக்குதல் நடைபெற்றதுஎன்று கூறி, எனவே தங்களுக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கிறார்.


ஓய்வு அதிகாரிகளின் எச்சரிக்கை

இதேபோன்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ்/ஐஎப்எஸ் அதிகாரிகளின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மற்றுமொரு முக்கியமானஅம்சமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவிடமிருந்தும், அதன் கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் புகார்கள் வரும்பட்சத்தில் அவற்றின்மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து,ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் மாற்றப்படுவதைப் பார்க்க முடிகிறது.

 இவ்வாறு ஆந்திரம், மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தானில் நடந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மற்றும் இதர பாஜகஆளும் மாநிலங்களிலிருந்து அதிகாரிகளின்மிகவும் மோசமான நடவடிக்கைகள் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டபோதிலும் அவற்றின்மீது எவ்வித மாற்றல் உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

திரிபுராவில், இடது முன்னணிக்கு எதிராகச் செயல்படும் தேர்தல்அதிகாரிக்கு எதிராக ஒரு கடுமையான புகாரை அளித்தபோதிலும்கூட அதன்மீது எவ்விதநடவடிக்கையும் இல்லை.தேர்தல் ஆணையத்தின் இத்தகைய இழிநிலைப்பாடானது, மோடி அரசாங்கம் நாட்டின்சுதந்திரத்தையும், நாட்டிலுள்ள மிக உயர்ந்தநிறுவனங்களின் நம்பகத்தன்மையையும் எப்படியெல்லாம் நாசப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் எச்சரிக்கையாகும்.


தமிழில்: ச.வீரமணி

 
வேதனை தரும் பாரதீய தேர்தல் ஆணையத்தின் சோதனைகள்.!
மதுரை தொகுதியில் அடுத்தடுத்து புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் தூங்கி வழியும்நிலையில் ஆளுங்கட்சியினர் பகிரங்கமாக வாக்காளர்களை விலைபேசி வருகின்றனர்.

இந்த நிலையில் பணப்பட்டுவாடா நடப்பதை கையும் களவுமாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் பிடித்துக்கொடுத்தும் தேர்தல் அதிகாரிகளோ, காவல்துறையினரோ உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்யும் சம்பவங்களும் தொடர்கின்றன.அதிமுக சார்பில் தனது மகன் ராஜ் சத்யனை வேட்பாளராக நிறுத்தியுள்ள சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, வாக்காளர்களை விலை பேசும் விதத்தில் பணப் பட்டுவாடாவை பகிரங்கமாகத் தொடங்கிவிட்டார். 
இதை மதுரை தேர்தல் நடத்தும் அலுவலர் ச.நடராஜன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலேஅதிமுக கூட்டணியின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து புகார்கள்அளிக்கப்பட்டுள்ளன. 
மாநிலச் செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் நேரில் வலியுறுத்தியும் கூட தேர்தல் நடத்தும் அலுவலர் ச.நடராஜன் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


குறிப்பாக வாக்காளர்களை விலைபேசும்அதிமுகவினரின் பணப் பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள்அளித்தும் நடவடிக்கை இல்லை.
க.கனகராஜ் மற்றும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் மாநிலத் தேர்தல் ஆணையரிடம் முறையிட்டும் கூட எந்த அசைவும்இல்லை.

 மறுபுறத்தில் ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடா தங்கு தடையின்றி நடக்கிறது.
காவல்துறை அதற்கு துணைபோகிறது.
இந்த நிலையில் மதுரை அண்ணாத் தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக-வைச்சேர்ந்த பத்மநாபன் என்பவரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிடித்து திலகர்திடல் காவல்நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.
இது தொடர்பாகபுகாரும் அளித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலுடன் கையில் ரொக்கப்பணத்தை வைத்துக் கொண்டு பெயர் வாரியாக மேற்படி நபர் பணப்பட்டுவாடா செய்துகொண்டிருந்தார் என்பதையும் அதைநேரில் பார்த்து கையும் களவுமாக பிடித்தோம் என்பதையும் புகாரில் குறிப் பிட்டுள்ளனர்.
எனினும் கண்துடைப்பாக வழக்குப் போடுவதுபோல் போட்டு, நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றநிலையே இருக்கிறது.இதற்கிடையில் மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான கான்கிரீட் தொழிற்சாலையிலிருந்து வாக்காளர்களுக்கான பணம்கொண்டு செல்லப்படுவதாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகவல் கிடைத் தது.
இதை கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் மாநிலத்தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரி,மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்,காவல்துறை ஆணையர் உள்ளிட்டவர் களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

இதையடுத்து பறக்கும்படை அதிகாரிநாகரத்தினம், காவல்துறை உதவிஆணையர் உதயகுமார் மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
சுமார் 30 நிமிடம்சோதனை நடத்தி விட்டு ‘‘ஒன்றுமில்லை’’ 500 டிபன் பாக்ஸ்கள் மட்டுமே உள்ளது. அதற்கும் பில் வைத்துள்ளனர் என மிகச் சாதாரணமாகக் கூறி ஆய்வை முடித்துக் கொண்டனர்.தகவலறிந்து வருமான வரித் துறையினரும் அந்த நிறுவனத்திற்கு வந்தனர்.

சோதனையின் போது செய்தியாளர் களை அனுமதித்த காவல்துறையினர் வருமான வரித் துறை சோதனை நடைபெற்ற போது, செய்தியாளர்கள் உள்ளே வரக்கூடாது எனத் தடுத்துவிட்டனர்.
அவர்களும் 30 நிமிடத்தை அந்த நிறுவனத்தில் செலவழித்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டனர்.இந்த நிறுவனத்தில் இதுவரை இரண்டு முறை சோதனை நடைபெற்றுள்ளதாக பறக்கும்படை அதிகாரியொருவரும், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் இது நான்காவது சோதனையென்றும் கூறினர்.

 இதுகுறித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவலே உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
வெறும் மேலாட்டமாக நடைபெற்றுள்ள விசாரணை, சோதனையால் எந்தப் பலனுமில்லை. நெருப்பில்லாமலா புகையும். சனிக்கிழமை நடத்திய சோதனை போல் தேர்தல் முடியும் வரை நடத்தினாலும் அதிகாரிகள் கடைசி வரை டிபன் பாக்ஸ்தான் உள்ளது என்பார்கள்.
தேவைதீவிர சோதனை மட்டுமல்ல கண்காணிப் பும் தான்’’ என்றார்.