ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

பாதுகாப்பு (அவ)லட்சணம்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் ரஞ்சன் கோகாய்.
இவர் மீது 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின், ஜூனியர் பணியாளாக பணியாற்றி வந்தவர் இவர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின், 22 நீதிபதிகளுக்கு, அந்த பெண் ஒரு பிரமாணப் பத்திரத்தை கடிதமாக அனுப்பியுள்ளார்.
 ரஞ்சன் கோகாய் வீட்டில் 2018ம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதிகளில் அவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தகவல் இடம் பெற்றிருந்தது.
 அந்த கடிதம் தொடர்பான செய்தி தற்போது சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 
இது தொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்தார். 
பாலியல் புகார் தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்தான் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார். 
எனவே இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமை நீதிபதி தலைமையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சய் கண்ணா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று கூடியது.

அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நான் 20 வருட காலமாக நீதித் துறையில் பணியாற்றி வருகிறேன்.
 சுய லாபம் இல்லாத எனது சேவையில், தற்போது என் மீது இப்படி ஒரு புகார் கூறப்பட்டுள்ளது. இது நம்பமுடியாததாக இருக்கிறது.
 நீதிபதி பொறுப்பில் நான் மிகவும் உண்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். 
இது போன்ற பொய்ப் புகார் அடிப்படை ஆதாரமற்றது. 
இப்படி புகாரை கூறியுள்ளதன் மூலமாக நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்லது. நீதித்துறையின் ஸ்திரத்தன்மையை உடைப்பதற்கு யாரோ பின்னிலிருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். 
இவ்வாறு ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.
 அதே நேரம் இந்த சிறப்பு அமர்வில் இருந்து ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 
இதனிடையே அமர்வில் இடம் பெற்ற நீதிபதி அருண் மிஸ்ரா, ஊடகங்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி,தேர்தல் ஆணையம்,சிபிஐ,வருமானவரித்துறை போன்றவற்றை தனது கைப்பாவையாக வைத்துள்ள பாஜகவின் பின்னணி இதில் இருப்பதாக பல நீதிபதிகள் கருதுகிறார்கள்.
காரணம் நீதிபதி லோயா திடீர் மர்மமான இறப்பு கொலை என்ற வழக்கு மீண்டும் உயிர்பெற்று எழுகிறது,மேலும் ரபேல் வழக்கில் ஆளுங்கட்சிக்கு எதிராக வழக்கு உறுதி செய்யப்பட்டதுமே இந்த மிரட்டலுக்கு காரனம் என்று எண்ணப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 7பேர்களை கொலை  செய்தவர் 
பிணையில் வந்து தேர்தலில்  போட்டி?
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கியக் குற்றவாளியாக இருக்கும் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், உடல்நலத்தைக் காரணம் காட்டி ஜாமீன் பெற்றுவிட்டு, தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரக்யா சிங் தாக்குர், தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்; தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு உடல் நலத்துடன் இருப்பவ ரால், சிறையிலும் இருக்க முடியும் என்பதால் பிரக்யா சிங் தாக்கூரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ஆம் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த 7 பேர் உயிரிழந்தனர்.


தீவிர விசாரணைக்குப்பின், இந்த குண்டுவெடிப்புச் சதியில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டு, பெண் சாமி யாரிணி பிரக்யா தாக்குர் உட்பட 14 பேரை, மும்பை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
இவர்கள் மீது 2009-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், 2011-இல் இவ்வழக்கு என்ஐஏ வசமும் ஒப்படைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வழக்கில், ஷியாம் சாஹூ, ஷிவ்நாராயண் கல்சங்ரா மற்றும்பிரவீன் தகல்கி ஆகியோர் விடு விக்கப்பட்டனர்.


ஆனால், பிரக்யா சிங், ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் திவேதி,ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ்உபாத்யா, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
ஜகதிஷ் மாத்ரே, ராகேஷ் டாவ்டே ஆகியோர் மீது ஆயுதத் தடைச் சட்டத்தின்கீழும் குற்றம்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், 2017-ஆம் ஆண்டு, பிரக்யா சிங் தாக்கூருக்கு ஜாமீன் கிடைத்தது.

உடல்நலமின்மையைக் காரணம் காட்டி, பிரக்யா சிங் ஜாமீனில் வெளியேவந்தார். அண்மையில் அதிகாரப்பூர்வ மாக பாஜக-வில் இணைந்த பிரக்யா சிங் தாக்குர், தற்போது மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராகவும் களம் இறங்க உள்ளார்.
இதுதான் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யா சிங் தாக்குர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திலும், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திலும் நிசார் சயீது என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

 இவர், மாலேகான் குண்டு வெடிப்பில் உயிரிழந்த நபர் ஒருவரின் தந்தை ஆவார். “பிரக்யா சிங் தாக்குர் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்றால், முன்பு உடல்நலமில்லை என்று அவர் நீதி மன்றத்தை தவறாக வழி நடத்தியது தெளிவாகி விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.எஸ். படல்கர், இதுதொடர் பாக பதிலளிக்குமாறு ஐஎன்ஏஅமைப்புக்கும், பிரக்யா சிங் தாக்கூ ருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரக்யா சிங் தாக்குர், போபால் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கும் நிலையில், அதற்கு முதல்நாளான திங்கட்கிழமையன்று (ஏப். 22) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
  பாதுகாப்பு (அவ)லட்சணம்.
 மதுரையில் சித்திரைத் திருவிழா கோலகலமாக நடைபெற்றதால், அங்கு இரவு எட்டு மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல்கள் முடிந்த பின்னர், வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குச்சாவடிகளில் இருந்து பெறப்பட்டு, பத்திரமாக (?)பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பெண்  வட்டாட்சியர்( கலால்) சம்பூரணம் என்பவர் நுழைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு பேர்களுடன் உள்ளே நுழைந்த அவர் சில ஆவணங்களை நகலெடுத்துள்ளார்.மாவட்ட ஆட்சியரின் எந்தவித அதிகாரப்பூர்வமான அனுமதியும் இல்லாமல் அவர்களாக உள்ளே வந்து மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்ளே உள்ள ஆவணங்களை எடுத்து வெளியே உள்ள ஜெராக்ஸ் கடையில்  ஜெராக்ஸ் எடுத்துள்ளனர்.

சிலவற்றை மாற்றியும் வைத்துள்ளார்.

வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் சிலருடன் நுழைந்ததாகவும்,  அவர் அங்கே 2 மணி நேரம் இருந்ததாகவும், முக்கிய சில ஆவணங்களை எடுத்துச்சென்றதாகவும் தகவல் சில பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் வெளியே பரவியது.

அந்த வட்டாட்சியர்  சம்பூரணத்திடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையின் அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 இதனை அறிந்த மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மூன்று மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்த்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை வேட்பாளர்கள் சு. வெங்கடேசன் மற்றும் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் சம்பவம் குறித்து அறிந்து வர அவ்வாளகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 அதிகாரி சம்பூர்ணம் உட்பட, அனுமதி இன்றி உள்ளே வந்தவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியிர் நடராஜன் அறிவித்தார்.

இவர்கள் பாதுகாப்பு லட்சணம் அருமையாகத்தெரிகிறதே.

இது போன்ற முறைகேடுகள் செய்யும் அதிகாரிகள் அதற்கு துணையாக மட்டுமின்றி,ப்பாதுகாப்பகவும் இருக்கும் காவல்துறையை நம்பித்தான் 34 நாட்கள் நம் மக்கள் வாக்களித்த வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக இருக்குமென நம்பி யிருக்கிறோம் .
வாக்குப்பதிவு எந்திரங்கள் பகுதிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பாம்.
எதிர்க்கட்சிகள் குற்றசாட்டுகளுக்குப்பின்னர் அங்குள்ள கேமிராவைப்பார்த்தபின்னர் சம்பூரணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------