வியாழன், 9 மே, 2019

காசி-+மோடி +ராஜா =வாக்கு எந்திரம்.


ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏதாவது சூழ்ச்சி செய்திருக்கலாம்; அப்படி ஏதாவது நடந்தால், அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் கொந்தளிப்பார்கள் என தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

தேனி வட்டாட்சியர் அலுவல கத்திற்கு செவ்வாயன்று திடீரென்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்தன.
வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 அன்றே முடிவடைந்து விட்ட நிலையில்,தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்தது அரசியல் கட்சிகளுக்கிடையே குழப்பத்தை,சந்தேகத்தை  ஏற்படுத்தியது.

இதையடுத்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டனர்.


தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்த சாமி ஆகியோர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தான் இடம் மாற்றப்பட்டுள்ளது, இது வழக்கமான நடைமுறைதான் என்று அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் அளித்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவில் தவறு நடந்திருப்பதாக மாவட்ட தேர்தல் பிரிவு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
 இதனடிப்படையில் அங்கு மறு வாக்குப் பதிவு நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால், வாக்குப் பதிவு நடத்துவதற்கு முன்னேற்பாடாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்தனர்.

பின்னர், கோயம்புத்தூரி லிருந்து மின்னணு வாக்குப் பதிவு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக அறையைத்திறந்து, அவை பயன்படுத்தப்படாத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்தானா என்பதை தெரிந்து கொள்வதற்கு அரசியல் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு காவல்துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை தேனி ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்த தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.மகராஜன் ஆகியோர், வாக்குப்பதிவு நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் தேனிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது, சட்டவிரோத செயல் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:கோயம்புத்தூரிலிருந்து தேனிக்கு வந்துள்ள 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் உடனடியாகத் திருப்பியனுப்ப வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நல்ல முறையில் வாக்குப் பதிவு நடந்துள்ள நிலையில், இரு வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப் பதிவுநடத்துவது என்ற பேச்சுக்கே இட மளிக்கக் கூடாது என்று ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம்.மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை திரும்ப அனுப்புவது குறித்து ஆட்சியர் உத்தர வாதம் அளிக்கவில்லை.

எங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணை யத்திற்கு தெரிவித்து, அவர்களது உத்தரவின்படி நட வடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதற்கான காரணம் அதிகாரிகளுக்கும்  தெரிய வாய்ப் பில்லை.

 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏதாவது செய்திருக்கலாம். அவரும்,அவரது மகனும் வேட்பாளருமான ராஜாவும் மெனக்கெட்டு வாரணாசி சென்று மோடி,அமித்ஷாவையும் காவி வேட்டியுடன் சந்தித்து வந்தது இதற்கான அடிப்படையாக இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது.
அப்படி ஏதாவது நடந்திருந்தால் அரசியலுக்கு அப்பாற்பட்டு மோடி,அதிமுக ,தேர்தல் ஆணையம் பற்றி மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராணுவ நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து அரசியலாக்கி வருகிறார். இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் போதெல்லாம் என்னுடைய அரசு எல்லைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறது என்று, வழக்கமான ராணுவ நடவடிக்கைகளைக் கூட, தனது சாதனை போல பேசிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே, பதிலடி கொடுத்திருக்கின்றன.சர்ஜிக்கல் ஸ்டிரைக் புதிய விஷயமல்ல; தங்கள் ஆட்சியிலும் கூட 6 முறை துல்லியத் தாக்குதல் எனப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியுள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியும் கூறியது.


முதல் தாக்குதல் ஜூன் 19, 2008-ல் பூஞ்சின் பாத்தால் செக்டாரில் நடத்தப்பட்டது.
இரண்டாவது தாக்குதல் ஆகஸ்ட் 30-செப்டம்பர் 1, 2011-ல் நீலம் ஆற்றுப்படுகையில் உள்ள சார்தா செக்டாரில் நடத்தப்பட்டது.
 மூன்றாவது, ஜனவரி 6, 2013-ல் சுவான் பாத்ரா செக்போஸ்ட் பகுதியில் நடத்தப்பட்டது.
 மற்றொரு தாக்குதல் ஜூலை 27 மற்றும் ஜூலை 28, 2013-ல் நசாபியர் செக்டாரில் நடத்தப்பட்டது. ஐந்தாவது தாக்குதல் நீலம் பள்ளத்தாக்கில் ஆகஸ்ட் 6, 2013ல் நடத்தப்பட்டது,
ஆறாவது தாக்குதல் ஜனவரி 14, 2014-ல் நடத்தப்பட்டது என்று தேதிகளையும் வெளியிட்டனர்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் வீடியோ கேம் வேண்டுமானால் விளையாடியிருப்பார்கள்; துல்லியத் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று மோடி கிண்டலடித்தார்.

அவரின் இந்த கிண்டல், ராணுவத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரசை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், இந்திய ராணுவத்தினர் அர்ப்பணிப்பை மோடி கொச்சைப்படுத்துவதாக ராணுவ அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அதனொரு பகுதியாக, முன்னாள் ராணுவ அதிகாரியும், ‘பௌஜி ரிப்போர்டர்’ பத்திரிகையின் ஆசிரியருமான அசோக் குமார் சிங்கும், மோடி பேச்சுக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நான் 10 ஆண்டுகள், எனது உயிரைப் பணயம் வைத்து இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளேன். ஆனால், பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடி என்ற மனிதர் என்னை வீடியோகேம் விளையாடியதாக கேவலமாக பேசுகிறார். நான் என்ன சொல்வது?” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ராணுவத்தில் பகுதி நிலைகளிலான துல்லியத்தாக்குதல்கள் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்)எனப்படும்  தாக்குதல்கள் முன்பே நடத்தப்பட்டுள்ளன. 
ஆனால், ஒரு வித்தியாசம் என்னவெனில், அவை இப்போதுதான் தேசிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு மோடி  மற்றும் அவரது பாஜக கட்சியினரால் யால் அரசியல் ஆக்கப்படுகின்றன” என்று எம்.பி.எஸ். பஜ்வா என்ற இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற பிரிகேடியரும் கண்டித்துள்ளார்.
பிரிகேடியர் பஜ்வா, கடந்த 1999-ஆம் ஆண்டு கார்க்கில் யுத்தத்தில், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ‘டைகர் ஹில்ஸ்’ பகுதியைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவருக்கு வீரதீரச் செயலுக்கான விருதும் வழங்கப்பட்டது.
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரிலும் பிரிகேடியர் பஜ்வா பங்கேற்றுள்ளார்.

மோடி ஆட்சிக்கு முன்பும், சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் நடத்தப்பட்டுள்ளன என்று முன்னாள் லெப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடாவும் அண்மையில் கூறியிருந்தார்.
மோடி கூறும், 2016-ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை முன்னின்று நடத்தியவர்தான் டி.எஸ். ஹூடா ஆவார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 வியாபாரங்களில் லாபம் கல்வி வியாபாரம்தான்
பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தமிழகஅரசு விதிமுறைகளின் படிதான் கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும்; கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஆனால் தமிழகத்தின் மாநகர பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 80 சதவிகித சேர்க்கையை முடித்துவிட்டன.

அதுவும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவிதமாக கட்டணக் கொள்ளையை அரங்கேற்றி வருகின்றன. விண்ணப்பக் கட்டணம் கூட ரூ.300 முதல் ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.அதனை அச்சிடுவதற்கு அதிக பட்சம் 15 முதல் 20ரூபாய் வரை செலவாகும்.
ஆனால் நூறு மடங்குலாபம் வைத்து விண்ணப்பப் படிவங்களை விற்பனைசெய்கின்றன.


 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த அடுத்த நாளே கல்லூரிகளில் சேர்க்கையைஉறுதிப் படுத்தாவிட்டால் படிக்கவே முடியாது என்பது போல் ஒரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
 இதனால் பெற்றோர்கள் ஒரு விதஅழுத்தத்திற்குள்ளாகி கடன் வாங்கியாவது கட்டாய நன்கொடையையும், அபரிமிதமான கல்விக் கட்டணத்தையும் கட்டி விடுகின்றனர்
.இது ஒவ்வொரு வருடமும் தொடர்கிறது.


இவையெல்லாம் அரசுக்கு நன்றாக தெரியும்.ஆனாலும் அரசு நிர்வாகம் பெயரளவில் சில அறிவிப்புகளை செய்து விட்டு தனியார் கல்லூரி நிர்வாகங்களின் கட்டணக் கொள்ளையை வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன. குறிப்பாக பெரும்பகுதி தனியார் கல்லூரிகள் அரசியல் பின்புலத்தோடு இயங்குபவர்களால் நடத்தப்படுகிறது. அதன் காரணமாகவே கட்டணக் கொள்ளைகளும் கண்டு கொள்ளப்படுவதில்லை.

இதில் கொடுமை என்னவென்றால் பல்வேறுதனியார் கல்லூரிகளில் நடத்தப்படும் பாடப்பிரிவுகளுக்கு எவ்வித அங்கீகாரமும் இருப்பதில்லை. இதனை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டியஅரசு நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்திய அளவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன என்று இந்தாண்டு பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்து அதன்பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.
இவற்றில்7 பல்கலைக்கழகங்கள் தலைநகர் தில்லியிலேயே இயங்கி வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை விடக்கொடுமை வேறு இருக்க முடியுமா?
போலியாகசெயல்பட்டு ஆயிரக்கணக்கான மாணவர்களை ஏமாற்றி வரும் இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
ஏமாற்றும் மோசடிப்பேர்வழிகளை தண்டிக்க வேண்டாமா?
அதற்குபதிலாக ஒவ்வொரு வருடமும் இது போன்ற பட்டியலை வெளியிடுவது மட்டும் தீர்வை தந்து விடுமா? இந்த நடவடிக்கை போதாது.
உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பல்கலைக்கழகங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளை அரசே செய்துகொடுக்க வேண்டும்.
 போலி பல்கலைக்கழகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உரிய நடவடிக்கைஎடுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். தொடர்புடைய படம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மோடிக்கு எதிராக ராமரே .

மத்தியப்பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர் போட்டியிடும் நிலையில், அவருக்கு சாமியார்கள் மத்தியிலிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரக்யா சிங் தாக்கூரை தோற்கடிக்காமல் விடமாட்டோம் என்று அவர்கள் சூளுரைத்துள்ளனர்.மத்தியப்பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதி, பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொகுதி பாஜக வசம்தான் இருக்கிறது. 1989, 1991, 1996, 1998 ஆகிய நான்கு தேர்தல்களில், பாஜக மூத்த தலைவர் சுஷில் சந்திர வர்மா, போபால் தொகுதியில் வெற்றிபெற்றார்.

1999 தேர்தலில் உமா பாரதி, 2004, 2009 தேர்தல்களில் கைலாஷ் ஜோஷி, 2014 தேர்தலில் அலோக் சஞ்சார் ஆகியோர் பாஜக சார்பில் வென்றனர்.

இந்நிலையில்தான், 2019 தேர்தலில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூரை, போபாலில் பாஜக நிறுத்தியுள்ளது. காங்கிரசும், அதற்குப் போட்டியாக, கட்சியின் மூத்தத் தலைவரான திக்விஜய் சிங்கை, போபால் வேட்பாளராக களமிறக்கி விட்டுள்ளது. இருவருமே சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


“மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின்போது மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே என்னை துன்புறுத்தினார்; அவரை நான் சபித்தேன்; எனது சாபத்தின் காரணமாக பயங்கரவாதிகளால் கார்கரே சுட்டுக் கொல்லப் பட்டார்” என்று பிரக்யா சிங் பிரச்சாரத்தில் கூறியது, அவருக்கே எதிராக திரும்பியது. 
இந்த பேச்சால் பாஜக-வினரே, பிரக்யா மீது அதிருப்தி அடைந்தனர்.

இந்த சர்ச்சை ஓய்வதற்கு உள்ளேயே, “சிறையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது கோமியத்தைக் குடித்து குணமானேன்” என்று பிரக்யா கூறியதும், “பிரக்யாவுக்கு புற்றுநோயே இருந்ததில்லை” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியதும், மேலும் மேலும் பிரக்யா சிங்கிற்கு சிக்கலாக மாறியது.

வழக்கமாக, சர்ச்சை பேச்சுகள் என்றாலே திக்விஜய் சிங் மட்டும்தான் நினைவுக்கு வருவார்.
ஆனால், இந்த தேர்தலில் ஆரம்பம் முதலே அவர் அமைதி காத்து வருகிறார்.
அவருக்கும் சேர்த்து பிரக்யா சிங் உளறித் தள்ளி, மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில்தான், பெண் சாமியாரான பிரக்யா சிங் தாக்கூருக்கு எதிராக, ஒரு பெரும் சாமியார் கூட்டமே கிளம்பியிருக்கிறது. ‘கம்ப்யூட்டர் பாபா’ என்று அழைக்கப்படும் நாம்தேவ் தியாகி தலைமையில் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள இந்த சாமியார்கள், பிரக்யா சிங் தாக்கூரையும், பாஜக-வையும் தோற்கடித்தே தீருவது என்று சபதம் செய்துள்ளனர்.
திக்விஜய் சிங் வெற்றிக்காக சிறப்பு யாகமெல்லாம் நடத்தி, பாஜக பாணியிலேயே, அக்கட்சியினரை கதற வைத்துள்ளனர்.“போபால் தொகுதியில் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே யுத்தம் நடைபெறுகிறது. திக்விஜய் சிங் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறார்.

அவருக்காக 3 நாட்கள் யாகம் நடத்துகிறேன். காவி அணிந்திருப்பதால் பிரக்யா சிங் துறவியாகிவிட முடியாது. மத்தியில் கடந்த 5 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்துள்ளது.


ஆனால் பிரதமர் மோடி, ராமர் கோயிலை கட்டவில்லை.
 மதத்தின் பெயரால் பாஜக மக்களை ஏமாற்றும் வேலையைத்தான் செய்து வருகிறது” என்று கம்ப்யூட்டர் பாபா, பாஜகவை விமர்சித்துள்ளார்.நர்மதாவின் நிஜமான பக்தர் திக்விஜய் சிங் தான் என்றும் அழுத்தமாக கூறியிருக்கும் கம்ப்யூட்டர் பாபா, “நானும் சரி, பிற சாமியார்களும் சரி, நர்மதாவுக்கு பூஜை செய்வோமே தவிர, சிறை யாத்திரை நடத்துவது கிடையாது” என்றும் பிரக்யா சிங்கை சாடியுள்ளார்.

“பிரக்யா சிங், ஒரு சாமியார் என்று அழைக்கத் தகுதி இல்லாதவர். குண்டுவெடிப்பு, கொலை போன்றவற்றில் தொடர்பு உள்ளவர். வீர மரணம் அடைந்த ஹேமந்த் கார்கரே குறித்து, மோசமான கருத்து தெரிவித்தவர்” என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

கம்ப்யூட்டர் பாபாவுக்கு, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு, கடந்த ஆட்சியில் அமைச்சர் அந்தஸ்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வியாழக்கிழமையன்று (மே 9) ‘கம்ப்யூட்டர் பாபா’ தலைமையில் சுமார் 7 ஆயிரம் சாமியார்கள் பாஜக-வுக்கு எதிராக ஊர்வலம் செல்கின்றனர்.
மத்தியப்பிரதேசத்தில் மே 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
போபால் தொகுதியில் மொத்தம் 21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் சுமார் 4.5 லட்சம் பேர் முஸ்லிம்கள். 1.5 லட்சம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------