திங்கள், 13 மே, 2019

‘சவுகிதார்’தேர்தல் ஆணையம்.

4 தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகு திகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அன்றைய தினமே தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும் தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஞாயிறன்று திமுக தொண்டர் களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பெரும்பா ன்மையை இழந்து அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் மைனாரிட்டி அதிமுக ஆட்சி ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்துள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் தன் படுதோல்வி பயத்தை உணர்ந்திருக்கிறது.

கூடுதலாக, மே19 ஆம் நாள் நடைபெற விருக்கும் திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது ஆட்சிக்கான முடிவுரை உறுதி யாக எழுதப்படும் என்பதையும் உணர்ந்தே உதறலில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அதனால் ஏற்பட்ட அச்சத்தின் விளைவுதான், மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டிருக்கும் அறைக்குள் மர்மமான முறையில் ஓர் அதிகாரி நுழைந்தது முதல், தேனி - ஈரோடு எனப் பல இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்று வதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் வரையிலான அனைத்து மறைமுக செயல்பாடுகளும்” என்று விமர்சித்துள்ளார்.

மதுரை வாக்கு இயந்திர அறையில் முறைகேடு நடந்ததாக தகவல்வெளியானவுடன், சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன், மற்றக் கட்சிகளின் வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர் களும்கூட அந்த இடத்திற்கு விரைந்து வந்தநிலையில், அதிமுக வேட்பாளர் மட்டும் அது குறித்து அக்கறையோ கவலையோ கொள்ளவில்லை.
தேனி, ஈரோடு போன்றஇடங்களிலும் இதே நிலைதான்.

இதி லிருந்தே ஆளுங்கட்சியினர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள், என்னென்ன ரகசியத் திட்டங்களை வகுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இறுதியாக, “ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’ (பாது காவலர்) ஆகிவிடக்கூடாது என்பதை திமுகவும் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அது குறித்த சட்டரீதியான அணுகுமுறைகளும் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சியான வகையில் என்னதான் தந்திரங்கள் செய்தாலும், மக்கள் மன்றத்தில் அது ஒருபோதும் எடுபடவில்லை, ஏமாற்றமேமிஞ்சும் என்பதை ஒவ்வொரு கட்டமாகநடைபெற்று வரும் தேர்தல் வாக்குப் பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன” என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஊழல் புது வடிவம்.
 தங்கள் மீது ஊழல் குற்றசாட்டை சொல்லவே முடியாது.ஊழல் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை என சொல்லும் மோடி கும்பல் அந்த வார்த்தைப்பிடிக்காததால் வேறு வார்த்தையை தேடிக்கொண்டிருக்கின்றன.

ஊழல் என்பதற்கு இதுவரை நாம் அறிந்துள்ள இலக்கணங்களையெல்லாம் காலாவதியானவையாக ஆக்கி புதிய சாதனை படைக்கிறது. மோடி அரசு.

பணமதிப்பு நீக்கம் தொடங்கி, வராக்கடன்களைத் தள்ளுபடி செய்வது, மோடிகள் (நீரவ், லலித்...!) பத்திரமாக வெளிநாடுசெல்ல உதவுவது என்று நமக்குப் புரியாத வடிவங்களிலெல்லாம் ஊழல் செய்கிறது மோடி அரசு.

‘அட, இது தெரியாம ஏழெட்டுத்தடவ பிளைட்ல டிக்கெட் எடுத்துட்டனேப்பா...’ என்று புலம்பியதுபோல, மிகப்பெரிய ஊழல் வாதிகள் என்று கடந்த காலத்தில் புகழப்பட்டவர்களெல்லாம்(!), ‘இந்த வித்தையெல்லாம் நமக்குத் தெரியாமல் போச்சே...’ என்று ஏங்கும் வண்ணம், "இந்திய அரசியலில் முதன்முறையாக...’ என்று டைட்டில் கார்டு போடுமளவுக்குப் புதிய புதிய ஊழல்கள் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன.


அவற்றில் லேட்டஸ்ட், இல்லாத வரியை வசூலித்து, அதற்கு கணக்கே இல்லையென்று சொல்வது.
ஆம்!

ஏகப்பட்ட தடவை பிறந்த புதிய இந்தியாக்களில் ஒன்று ஜிஎஸ்டியால் பிறந்தது.
அதை அறிவித்துவிட்டு, ஒரே தேசம், ஒரே வரி என்று தனக்குத்தானே புகழ்ந்துகொண்ட மோடி, இனி இந்தியா வல்லரசுதான் என்று புளகாங்கிதம் அடைந்தார்.

உலகத்திலேயே மிக அதிக ஜிஎஸ்டி என்பது மட்டுமின்றி, வேறுபல வரிகளும் தொடர்வது, பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டிக்கு மாற்றாதது என்ற குளறுபடிகளுடன், ஜிஎஸ்டி செலுத்தியவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளும் ஏராளம்.

ஆனால்,

ஸ்வச் பாரத் செஸ், கிரிஷி கல்யாண் செஸ், அந்த செஸ், இந்த செஸ் என்று வசூலிக்கப்பட்டுக்கொண்டிருந்த செஸ் வரிகளெல்லாம், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 2017 ஜூலை 1இலிருந்து ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துவிட்டது.

அந்த இல்லாத வரிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதை ஒயர் இணையதளம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் வெளிக்கொண்டுவந்திருக்கிறது.

நிதியமைச்சகத்தின் தகவல் மேம்பாட்டுத்துறை தலைமை இயக்குனர் அளித்துள்ள பதிலில், 2017 ஜூலையிலிருந்து 2019 ஜனவரி வரை, ரூ.1340.55 கோடி கிரிஷி கல்யாண் செஸ் வரி வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதே காலகட்டத்தில், அதாவது, ரத்து செய்யப்பட்டபின், வசூலிக்கப்பட்ட ஸ்வச் பாரச் செஸ் வரி சுமார் ரூ.2100 கோடி.

கிரிஷி கல்யாண் செஸ் என்பது, விவசாயிகளுக்கான நலத்திட்டங்களுக்காக விதிக்கப்பட்ட வரியாகும்.
 இந்த வரி நடப்பிலிருந்த காலம்வரை வசூலான தொகை, பிரதம மந்திரி ஃபசல் பீம யோஜனா என்னும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரிமியம் செலுத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் கணக்கு வைத்திருக்கும் நிதியமைச்சகத்தால், வரி ரத்து செய்யப்பட்டபின் வசூலிக்கப்பட்ட ரூ.1340 கோடி எங்கே போனது என்பதற்குக் கணக்குச் சொல்ல முடியவில்லை.

இதே நிலைதான் ரூ.2100 கோடி ஸ்வச் பாரத் செஸ்-சுக்கும்.
இல்லாத வரியாக ரூ.3400 கோடி வசூலித்து, அது எங்கே போனது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் மட்டும் இவையெல்லாம் ஊழலாகிவிடுமா என்று, ராஜாவை மிஞ்சிய ராஜ நாராயண (மாலன்) விசுவாசிகள் உதவிக்கு வரலாம்.

அவர்களுக்குச் சொல்லுங்கள், தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், இப்படி இன்னும் ஏராளமாக வெளிவர இருக்கின்றன என்று!
------------------------------------------------------------------------------------------------------------------------------------

விக்கிப்பீடியாவை பாஜக ஆதரவாக்கும் 
மோ(ச)டி மஸ்தான்கள் .
 Time இதழ் இந்தியப் பிரதமர் மோடி குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் ஆதிஷ் தஸீரின் விக்கிப்பீடியா பக்கத்தில் பா.ஜ.க ஆதரவாளர்கள் அவர் குறித்த தவறான தகவல்களை எழுதி, அதை வைத்து அவரை விமர்சித்து வருகின்றனர்.

Time பத்திரிகையின் சமீபத்திய இதழில் மோடியின் ஐந்து ஆண்டுக்கால ஆட்சி பற்றி அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. 2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்றது, சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய தேர்தல் களத்தில் எவ்வளவு வித்தியாசமானது என்பதையும், காங்கிரஸின் வீழ்ச்சியையும் பேசுகிறது கட்டுரையின் தொடக்கம்.
 கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்து வந்த மதச் சகிப்புத் தன்மையும், சிறுபான்மையினர் மீதான கட்சியின் தலைவர்களின் வெறியூட்டும் பேச்சுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீதான வன்முறைகள் மீது மோடியின் அமைதியான போக்கு இந்த வெறுப்பூட்டும் பேச்சுகளை வளர்த்துவிட்டதைக் கண்டித்து நாட்டின் ஒருமைப்பாடு சிதைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது அக்கட்டுரையின் அடுத்தடுத்த பகுதிகள். 

இந்தக் கட்டுரை வெளியான உடன் சமூக வலைதளங்களில் மோடி ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் போர் புரியத் தொடங்கிவிட்டனர். 2015-ம் ஆண்டு டைம் இதழில் வெளியான மோடியின் அட்டைப்படக் கட்டுரையையும் இந்த இதழின் அட்டைப்படத்தையும் ஒப்பிட்டு அஸ்ஸாம் காங்கிரஸின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் பதிவிட்டது.

 இந்தக் களேபரங்கள் ஒரு பக்கம் நடக்க, இக்கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஸீர் காங்கிரஸின் ஊடகத் தொடர்பாளர் எனக் குறிப்பிட்டு, டைம் இதழ் அதனுடைய நம்பகத்தன்மையை இழந்து இடதுசாரிகளின் ஊதுகுழலாக மாறிவிட்டதாக Chowkidar Shash என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் பகிரப்பட்டது. அந்த ட்வீட் வைரலாக, மீண்டும் மீண்டும் பலரால் இது பதிவிடப்பட்டது.

 இதற்கு ஆதாரமாக ஆதிஷ் தஸீரின் விக்கிப்பீடியா பக்கத்திலிருந்து ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை அவர் இணை
த்திருந்தார்.

காங்கிரஸின் ஊடகத் தொடர்பாளர் இப்படி ஒரு கட்டுரையை எழுதியதில் வியப்பில்லை என பா.ஜ.க ஆதரவாளர்கள் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்டை வைத்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பொதுமக்களே பங்களிக்க முடியும் என்பதையே தனித்துவமாகக் கொண்டு இயங்கி வரும் விக்கிப்பீடியாவில் இந்த வசதியைப் பயன்படுத்தி சிலர் ஆதிஷ் தஸீர் குறித்த தவறான தகவல்களைச் சேர்த்தனர்.

நேற்று காலை 7.59-க்கு முதல் திருத்தத்தை பெயர் குறிப்பிடாத ஒருவர், ஆதிஷ் தஸீரின் பணி குறித்த தகவல்களில் அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஊடகத் தொடர்பாளராகப் பணிபுரிவதாகச் சேர்க்கிறார்.

அப்படிச் சேர்க்கும் போது PR manger என எழுத்துப்பிழையோடு பதிவு செய்திருக்கிறார்.
அதிலுள்ள எழுத்துப்பிழை, காலை 8.16-க்கு மீண்டும் பெயர் குறிப்பிடாத ஒரு பயனர் மூலம் சரிசெய்யப்படுகிறது.
கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் அவர் காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் என்றும், அவருடைய புத்தகங்கள் பிராமணர்களை இழிவுபடுத்துவதாகவும் அவருடைய விக்கிப்பீடியா பக்கத்தில் சேர்க்கப்பட்டுக்கொண்டே இருந்தன.

 முதலில் பொதுவாக அவர் புத்தகங்கள் பற்றிய அவதூறுகள் பதிவிடப்படுகின்றன.
 அவை நீக்கப்பட்டவுடன் அவருடைய சமீபத்திய புத்தகத்தின் பெயருடன் அவதூறு பரப்பப்படுகிறது.
அதுவும் நீக்கப்படுகிறது.
 பிறகு இதே அவதூற்றை அந்தப் புத்தகம் பற்றிய வேறு ஒரு இணைப்பை சான்றாகக் கொடுத்து பதிவிடப்படுகிறது.
 உரிய ஆதாரங்களுடன் பதிவிடப்படும்போது அவை நீக்கப்படாது என்பதை மனதில் கொண்டு இப்படி செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், அதுவும் புத்தகம் பற்றிய செய்திப் பதிவு என்பதால் நீக்கப்பட்டிருக்கிறது.

அவர் கடந்த தேர்தலில் மோடிக்குப் பணி புரிந்ததாக ஒருவர் பதிவிட, இன்னொருவர் அவர் சோனியா மற்றும் ராகுல் காந்திக்குப் பணி புரிந்ததாகவும் மாற்றி மாற்றிக் குறிப்பிட்டனர்.
 நேற்றைய விக்கிப்பீடியா பதிவுகளின்படி அவர் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் இந்து மகா சபா ஆகிய கட்சிகளுக்கும் ஊடகத் தொடர்பாளராகப் பணி புரிந்து வருகிறார்.

2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இவருடைய விக்கிப்பீடியா பக்கத்தில் ஒரு மாதத்துக்குச் சராசரியாக 2.3 திருத்தங்கள் மட்டுமே இது வரை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஆனால், நேற்று காலையிலிருந்து மட்டும் 78 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

விக்கிப்பீடியாவில் இதுபோல ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் நடைபெறும் பொறுப்பற்ற, பிழையான திருத்தங்களை சரி செய்வதற்காக விக்கிப்பீடியாவின் தொடர் பங்களிப்பாளர்கள் இயங்குகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இது போன்ற திருத்தங்களை உடனடியாக சரி செய்யவும், பழைய நிலைக்கு மாற்றுவதற்காகப் பல தானியங்கி 'பாட்'கள் (Bots) விக்கிப்பீடியா பயனர்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன.

ஆதிஷ் தஸீரின் விக்கிப்பீடியா பக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களை Huggle மற்றும் theinstantmatrix என்ற இரு 'பாட்'கள் விரைவாகச் சரிசெய்துகொண்டிருந்தன.
இவை தவிர மேலும் சில 'பாட்'களும் சில சின்னச் சின்ன திருத்தங்களை சரிசெய்தன.
 தொழில்நுட்பத்தில் மனிதர்கள் மேற்கொள்ளும் சில தவறுகளைச் சரிசெய்யவும் நமக்கு அந்த தொழில்நுட்பமே உதவுகிறது.

இறுதியாக, ஆதிஷ் தஸீரின் விக்கிப்பீடியா பக்கத்தில் மே 13-ம் தேதி வரை யாரும் திருத்தங்களை செய்யமுடியாதபடி மாற்றப்பட்டிருக்கிறது.