புதன், 15 மே, 2019

பொய் அல்லது புளுகு

என்றுதான் வருமோ?
'ரேடார்' என்ற ஒற்றை வார்த்தை மூலமாக இந்தியா முழுவதும் இந்த வாரம் டிரெண்டிங்கில் இருக்கிறார்  மோடி.

 போர் விமானங்களை ரேடார்களின் பார்வையிலிருந்து மேகங்கள் தவிர்க்க உதவும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் மோடி.

அவ்வளவுதான் சமூக வலைதளங்களில் அவர் சொன்னதைப் பிரித்து மேய்ந்துவிட்டர்கள்.


அதோடு நிற்காமல் 1987-88-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தியதாகவும், அதன் மூலமாக எடுக்கப்பட்ட போட்டோவை அத்வானிக்கு இ-மெயில் மூலமாக அனுப்பியதாகவும் அதே பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஓ இது வேற இருக்கா !
என்ற நெட்டிசன்கள் அதையும் அடித்துத் துவைத்தார்கள்.

 அந்த ஒரே ஒரு பேட்டியின் மூலமாகப் பிரதமர் மோடி எதற்காகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிடுகிறார் ,மக்களவையி பேசவும் மறுக்கிறார் என்ற உண்மையும் உலகுக்குத் தெரிந்து போனது.

 இப்படிக் கடந்த சில வருடங்களில் அவர் கூறிய பொய்களை,தவறான தகவல்களைத் தொகுத்திருக்கிறது https://www.modilies.in/ என்ற இணையதளம்.

 கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி அண்மை வரையில் மோடி தெரிவித்த பொய்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

மேலும், அவற்றை வெறும் பட்டியலாக மட்டுமே கொடுக்காமல் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதையும் அதற்கான ஆதாரங்களையும் இந்த இணையதளத்தில் இணைத்திருக்கிறார்கள்.
இனி கூகுளில் மோடி என்று தேடினால் பொய் அல்லது புளுகு என்றுதான் வருமோ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆஸ்திரேலியா தேர்தலில் முக்கிய புள்ளி அதானியின் நிலக்கரி சுரங்கம்.

இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் கெளதம் அதானிக்குச் சொந்தமாக வடக்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கர்மிசாயெல் நிலக்கரிச் சுரங்கத் திட்டம் இப்போது மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலின் மையப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் மற்றும் சுற்றுச் சூழல், நிலக்கரி மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகளை உருவாக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
பிரகாசமான வாய்ப்பு உள்ள ஏழு சுயேச்சை வேட்பாளர்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அறக்கட்டளை (ACF) மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட முக்கியமான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அடுத்த நாடாளுமன்றத்துக்கு தாங்கள் தேர்வு செய்யப்பட்டால், அதானியின் திறந்த வெளி தெர்மல் நிலக்கரி சுரங்க மேம்பாடு உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தை பாதிக்கும் செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்வதாக அதில் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

தேர்தலில் பின்தங்கி இருக்கும் ஆளும் கன்சர்வேட்டிவ் சுதந்திர - தேசிய கட்சி, நிலக்கரி மற்றும் ஏற்றுமதியை பெரிதும் ஆதரிக்கிறது.
``ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதை (ஸ்காட்) மோரிசன் அரசு ஆதரிக்கிறது. குயின்ஸ்லாந்து பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க திட்டமாக அதானியின் கர்மிசாயெல் சுரங்கம் மற்றும் ரயில் திட்டம் உள்ளது. பிராந்திய சமூகங்களில் 1,500 நேரடி வேலைகளையும், ஆயிரக்கணக்கான மறைமுக வேலைகளையும் அது உருவாக்கும்'' என்று அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசி இந்திய மொழிகள் பிரிவு செய்தியாளரிடம் கூறினார்.

2019 பிப்ரவரி மாத நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத் தொழிலில் சுமார் 52,900 பேர் பணியாற்றி வருகின்றனர். 2018ல் ஆஸ்திரேலியாவில் 440 மில்லியன் டன் கருப்பு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. மெட்டலர்ஜிக்கல் நிலக்கரி 40 சதவீதமும், தெர்மல் நிலக்கரி 60 சதவீதமும் இருந்தன. 2017 - 18ல் ஆஸ்திரேலியாவின் ஜி.டி.பி.யில் (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி) நிலக்கரி சுரங்கத் தொழிலின் பங்கு 2.2 சதவீதமாக இருந்தது.
குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள நிலக்கரி ஆதரவு தொழிற்சங்க ஆதரவாளர்கள், பசுமைக் குடில் வாயு உற்பத்தியைக் குறைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பும் நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாண மக்களின் எண்ணங்களுக்கு இடையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலிய ஒலிபரப்பு காப்பரேஷனின் (ABC) 7.30 நிகழ்ச்சிக்குப் பேட்டி அளித்த தொழிலாளர் கட்சித் தலைவர் பில் ஷார்ட்டென், ``இந்த சுரங்கம் தொடர்பான எனது கருத்து சிறந்த அறிவியலின் அடிப்படையில் இருக்கும். அறிவியல் ரீதியிலான அனைத்து பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்றால் இறையாண்மைக்கு ஊறாக செயல்பட மாட்டேன். தன்னிச்சையாக இதற்கு முடிவு கட்ட மாட்டோம்'' என்று கூறினார்.
பாவ்லின் ஹன்சன் தலைமையிலான ஒன் நேஷன் கட்சி, கிளைவ் பால்மர் தலைமையிலான ஐக்கிய ஆஸ்திரேலிய கட்சி ஆகியவை கர்மிசாயெல் திட்டத்தை ஆதரிக்கின்றன. ஐக்கிய ஆஸ்திரேலிய கட்சியின் தலைவர் கிளைவ் பால்மருக்கு இரும்புத் தாது, நிக்கல் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் சொந்தமாக உள்ளன.

ஆனால், பேரழிவை ஏற்படுத்திய காட்டுத் தீ விபத்துகள், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற பருவநிலை பாதிப்புகள் நிறைந்த கோடையின் (டிசம்பர் - பிப்ரவரி) பாதிப்புகளைத் தொடர்ந்து, பருவநிலை மாற்றம் என்பது முக்கியமான தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.


 தேர்தலில் சுற்றுச்சூழல் பிரச்சினை குறித்து 29 சதவீதம் பேர் பேசுவதாக ஆஸ்திரேலிய வாக்காளர்களின் மனப்போக்கு குறித்து ஏ.பி.சி. வாக்காளர் மதிப்பீட்டுப் பிரிவு நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
2016 தேர்தலில் 9 சதவீதம் பேர் மட்டுமே சுற்றுச்சூழல் பிரச்சினை பற்றிப் பேசினார்கள் என்ற நிலையில், இப்போது அது 29 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை தீவிரமாக உருவாக்குவது, நிலக்கரியை படிப்படியாகக் கைவிடுவது, அதானியின் நிலக்கரி சுரங்கத்தை தடுத்து நிறுத்துவது, இயற்கையைப் பாதுகாப்பது - என்ற நான்கு விரிவான அம்சங்களின் அடிப்படையில் பருவநிலை மற்றும் இயற்கை சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு ACF மதிப்பெண் கொடுத்துள்ளது.

சுதந்திர - தேசிய கூட்டணிக்கு 4/100, தொழிலாளர் கட்சிக்கு 56/100, நான்காவது பெரிய கட்சியான கிரீன்ஸ் கட்சிக்கு 99/100 என அது மதிப்பெண் தந்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பழம்பெரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான பாப் பிரவ்ன், டாஸ்மானியா என்ற தீவு மாகாணத்தின் ஹோபர்ட்டில் இருந்து கிழக்கு கடலோரப் பகுதி வழியாக குயின்ஸ்லாந்து வரையில் `அதானியை தடுத்து நிறுத்தும் பேரணியை' மே 5 ஆம் தேதி நடத்தினார். தலைநகர் கான்பெர்ராவில் அது நிறைவடைந்தது.

பி.பி.சி. இந்திய மொழிகள் பிரிவு செய்தியாளருக்குப் பேட்டி அளித்த பிரவ்ன், ``சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் தெளிவான கருத்து மாறுபாடுகள் உள்ளன. எதிர்காலத்தில் சுரங்கத்தால் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற அடிப்படையில் வலுவான ஆதரவு சிலரிடம் காணப்படுகிறது.
ஆனால், நிலக்கரியை எரிப்பதால் உருவாகும் பசுமைக் குடில் வாயு கிரேட் பாரியர் பவளத் திட்டுகள் பகுதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பும் காணப்படுகிறது. பவளத் திட்டுகள் மூலம் பல்வேறு தொழில்களில் 64,000 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அது மேலும் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என அவர்கள் விரும்புகின்றனர்'' என்று கூறினார்.

உலக பாரம்பரியத்துக்கான யுனெஸ்கோ பட்டியலில், கிரேட் பாரியர் பவளத் திட்டுகள் 348,000 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரந்து உள்ளது என்றும், அதில் 400 வகையான பவளங்கள், 1,500 வகையான மீன்கள், 4,000 வகையான மெல்லுடலிகள் (முதுகெலும்பில்லாத உயிரினங்கள்), சுமார் 240 வகையான பறவைகள், ஏராளமான கடற்பஞ்சுகள், கடற்சாமந்திகள், கடல்வாழ் புழுக்கள் மற்றும் ஒட்டுடலிகள் இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தசாப்தங்களில் கடல் வெப்பம் அதிகரிப்பு, நிலக்கரி சுரங்கத் திட்டங்கள், துறைமுக வளர்ச்சி, நிலங்கள் அழிப்பு, கடல்தளங்களில் துரப்பணப் பணிகள், அதிகரிக்கும் கப்பல் போக்குவரத்து போன்ற காரணங்களால், உலகின் மிகவும் பரந்த இந்த பவளத்திட்டு சூழல் மண்டலம் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது.


அதானியின் சுரங்கம் புதிய வெப்ப நிலக்கரி படுகையை உருவாக்கும். பூமியில் மிகப் பெரிய நிலக்கரி சுரங்களில் ஒன்றாக இது உருவாகும். இதனால் பருவநிலை மாசுபாட்டில் பல நூறு கோடி டன்கள் அளவுக்கு மாசு ஏற்படுத்தும். ஆஸ்திரேலியாவின் உள்பகுதியில் உள்ள உலர் நிலப் பகுதியில் மதிப்புமிக்க நிலத்தடி நீர் வளத்தை சுரங்கம் வெளியேற்றிவிடும்.
 இதனால் சதுப்புநிலம் மற்றும் வனவிலங்குகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்'' என்று ACF ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கிறிஸ்டியன் ஸ்லேட்டரி எச்சரிக்கை விடுக்கிறார்.

கிரெட் ஆர்ட்டீசியன் படுகைக்கு மிக அருகில் கர்மிசாயெல் சுரங்கம் அமைந்துள்ளது.
அது உலகில் மிக அதிக அளவு நிலத்தடி நீர்வளம் கொண்டதாகக் கருதப் படுகிறது. குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் தெற்கு ஆஸ்திரேலியா, வடக்கு எல்லை மாகாணங்களில் 17 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 65 மில்லியன் ஜிகா லிட்டர் (1 ஜிகா லிட்டர் என்பது நூறு கோடி லிட்டர்) நிலத்தடி நீர்வளம் கொண்டதாக இது இருக்கிறது.
நிலத்தடி நீர்வள மேலாண்மைத் திட்டங்களுக்கு, தேர்தல் அறிவிப்பு வெளியான சமயத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி ஆஸ்திரேலிய அரசின் ஒப்புதலை அதானி பெற்றார்.

கர்மிசாயெல் நிலக்கரி சுரங்கம் மற்றும் ரயில்வே கட்டமைப்புத் திட்டத்துக்கான திருத்தி அமைக்கப்பட்ட நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டங்கள் கடுமையான அறிவியல் விதிகளின்படி உருவாக்கப் பட்டிருப்பதாகவும், ஆனால், `இந்த முடிவு இந்தத் திட்டத்தின் இறுதி ஒப்புதலில் சமரசம் செய்து கொள்ளப்படவில்லை' என்றும் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனமும், ஆஸ்திரேலிய புவி அறிவியல் அமைப்பும் உறுதி செய்திருப்பதாக ஏப்ரல் 9 ஆம் தேதி ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெலிஸ்ஸா பிரைஸ் கூறியுள்ளார்.

அழிந்து வரும் கருப்புக் கழுத்துக் குருவி இன பாதுகாப்புக்கு அதானி நிறுவனம் முன்வைத்த திட்டத்தை குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் துறை மே 2 ஆம் தேதி நிராகரித்துவிட்டது.

 சுரங்கத்தில் பணிகள் தொடங்குவதற்கு முன்பு தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசிடம் பெற வேண்டிய இரண்டு ஒப்புதல்களில் ஒன்றாக இது உள்ளது. நிலத்தடி நீர்வளம் சார்ந்த சூழல் மண்டல மேலாண்மைத் திட்டம் உருவாக்குவது அடுத்த விதிமுறையாகும்.

அழிந்து வரும் கருப்புக் கழுத்து குருவிகள் அதிகம் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதி இந்தச் சுரங்கத்துக்கான இடத்தில் இருக்கிறது. Ten Mile Bore என அந்தப் பகுதி குறிப்பிடப் படுகிறது என்று குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் துறை தெரிவித்துள்ளது.

``புதிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். இருந்தபோதிலும், அரசின் புதிய விதிமுறைகளை முழுமையாக ஏற்பதற்கு நாங்கள் தயாராக உள்ளபோதிலும், திட்டத்தை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயத்துக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று அதானி நிலக்கரிச் சுரங்க முதன்நை செயல் அதிகாரி லூகாஸ் டவ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுரங்கப் பணிகள் நடைபெறும் போது நிறைவேற்ற வேண்டிய வேறு எட்டு திட்டங்களும் (குயின்ஸ்லாந்து அரசின் ஒப்புதல் பெற வேண்டியவை நான்கு, மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டியவை மூன்று என்றும், மற்றொன்றுக்கு மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து ஒப்புதல் தர வேண்டியதாகவும்) உள்ளன.
கர்மிசாயெல் சுரங்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உற்பத்தியைத் தொடங்கி இருக்க வேண்டும்.
ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள குழுக்களின் மூலமாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக சட்ட ரீதியான சவால்களை இந்த நிறுவனம் சந்திக்க வேண்டியிருந்தது.
ஆஸ்திரேலியாவில் அதிக அளவு நிலக்கரி வளம் மிகுந்த கலிலீ படுகையில் கிரீன்பீல்டு கர்மிசாயெல் நிலக்கரி சுரங்கத்தையும், குயின்ஸ்லாந்தில் போவென் அருகே அப்போட் பாயின்ட் துறைமுகத்தையும் இந்த நிறுவனம் 2010ல் வாங்கியது.


அப்போதிருந்து ஆஸ்திரேலியாவில் 3.3 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அளவுக்கு அதானி முதலீடு செய்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கான முதலீடும் இதில் அடங்கும். அதானி குழுமத்தின் அங்கமாக இருக்கும் அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் - ஆஸ்திரேலியா, நிறுவனம் குயின்ஸ்லாந்தில் மொரன்பாஹ் நகரில் Rugby Run சூரியசக்தி வளாகத்தையும், தெற்கு ஆஸ்திரேலியாவில் Whyalla சூரியசக்தி வளாகத்தையும் நடத்தி வருகிறது.
உச்சநிலை கட்டுமானப் பணியின் போது 175 வேலை வாய்ப்புகளையும், சூரியசக்தி வளாகங்கள் செயல்படும் போது 5 வேலைகளையும் உருவாக்கும்.

Rugby Run -ல் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. முதலாவது கட்டம் முடிந்ததும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டு 65 மெகாவாட் மின்சாரம் உள்பத்தி செய்யப்படும்.
இது 170 மெகாவாட் வரை விஸ்தரிக்கப்படும் வாய்ப்புள்ளதாக இருக்கும். Whyalla திட்டத்துக்கு கட்டுமானத்துக்கு முந்தைய ஒப்புதல் 2018 ஆகஸ்ட்டில் அளிக்கப்பட்டது. இதில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டு 140 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆண்டுக்கு 300,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடியதாக இது இருக்கும்.
``எதிர்கால மின் உற்பத்தி திட்டங்களில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், அதனால் மட்டுமே தேவையை பூர்த்தி செய்துவிட முடியாது.
நமது எரிசக்தி ஆதாரங்கள் குறைந்த செலவு பிடிக்கக் கூடியவையாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அந்த விஷயத்தில் தான்
நிலக்கரி முக்கிய இடம் வகிக்கிறது'' என்று அதானி ஆஸ்திரேலியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சுரங்கத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளெர்மாண்ட் என்ற சிறிய நகரத்தில் இருக்கும் கிராண்ட் ஹோட்டலின் உரிமையாளர் கெல்வின் ஆப்பிள்டன், இந்தச் சுரங்கம் வருவது குறித்து உற்சாகம் அடைந்துள்ளார். பி.பி.சி. இந்திய மொழிகள் செய்தியாளரிடம் தொலைபேசி மூலம் பேசிய ஆப்பிள்டன் , ``உள்ளூர் பொருளாதாரத்துக்கு அது நல்லதாக இருக்கும்.
சுமார் 3000 பேர் வாழும் எங்கள் நகரத்தில் 90 சதவீதம் பேர் இந்தச் சுரங்கத் திட்டத்தை ஆதரிக்கின்றனர். அடிப்படை மின் உற்பத்திக்கும், ஸ்டீல் உற்பத்திக்கும் நமக்கு நிலக்கரி தேவைப்படுகிறது. அதானியை தனிமைப்படுத்திய விதம் குறித்து நாம் வெட்கப்பட வேண்டும்'' என்று கூறினார்.

கர்மிசாயெல் நிலக்கரி சுரங்கத் திட்டத்தில் ஆரம்பகட்ட கட்டமைப்பு மற்றும் சாய்தளங்கள் அமைக்கும் போது சுமார் 8250 (சுரங்கம் மற்றும் ரயில் பணிகளில் நேரடியாக 1500 மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் மறைமுகமாக சுமார் 6750) வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அதானி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 60 மில்லியன் டன் உற்பத்தித் திறன் உள்ளதாக 116.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவிலான மெகா திட்டம் என்ற அளவில் இருந்து,, 27 மில்லியன் டன் உற்பத்தித் திறன் உள்ளதாக 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவிலான திட்டமாக, மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
சுரங்கத்தில் இருந்து அப்போட் பாயிண்ட் நிலக்கரி முணையம் வரையில் 388 கிலோ மீட்டர் நீளத்துக்கான ரயில் பாதை திட்டமும், ஏற்கெனவே இருக்கும் ரயில் பாதையுடன் இணைக்கும் வகையில் 200 கிலோ மீட்டர் குறுகிய ரயில் பாதை திட்டமாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
அரசு அல்லது பெரிய வங்கிகளிடம் இருந்து நிதி வசதியைப் பெற முடியாமல் போய்விட்ட நிலையில், திறன் குறைக்கப்பட்ட திட்டத்துக்கு ``சொந்தமாகவே நிதி ஏற்பாடு'' செய்ய முடியும் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், நிதி வசதிக்கு ஏற்பாடு செய்வது அதானி நிறுவனத்துக்கு சிரமமான காரியம் என்று, அதானி நிறுவனத்தை வெளிப்படையாக விமர்சித்து வரும் எரிசக்திப் பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிலையம் (IEEFA) கூறியுள்ளது. பி.பி.சி. இந்திய மொழிகள் பிரிவு செய்தியாளரிடம் பேசிய IEEFA எரிசக்தி நிதி ஆய்வுகள் பிரிவு இயக்குநர் டிம் பக்லே, ``நிலக்கரியின் HALE (அதிக சாம்பல், குறைவான எரிசக்தி)இயல்பு, தொலைவில் அமைந்துள்ள நிலை, முதலில் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் கர்மிசாயெல் நிலக்கரி சுரங்கத் திட்டம் மிகக் குறைந்த அளவில் தான் சாத்தியமானதாக இருக்கும் என தொடர்ந்து கவனித்து வருகிறேன்'' என்று கூறினார்.

``2018ல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தத் திட்டத்துக்கு எந்த நிதி அமைப்பு மற்றும் வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் தங்களால் நிதி உதவி பெற முடியவில்லை என்று அதானி ஒப்புக் கொண்டிருக்கிறார். வங்கிக் கடன் பெறும் வாய்ப்பு பூஜ்யமாக உள்ளது.
எனவே, தனித்து தான் செயல்பட வேண்டியிருக்கும். மற்றவர்கள் முன்வராத நிலையில், தனது சொந்த முதலீட்டைப் போடுவதற்கு அதானி முன்வருவாரா?
அதானி குழுமத்துக்கு அப்படியான வழக்கம் இல்லை'' என்றும் பக்லே குறிப்பிட்டார்.
2017-18 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா 44 மில்லியன் டன்கள் அளவுக்கு இந்தியாவுக்கு மெட்டலர்ஜிக்கல் நிலக்கரி ஏற்றுமதி செய்தது. அதன் மதிப்பு 9.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள். அந்த ஆண்டில் 425 மில்லியன் டாலர் மதிப்புக்கு 3.8 மில்லியன் டன் அளவுக்கு தெர்மல் நிலக்கரி ஏற்றுமதி செய்தது.
உள்நாட்டில் ஸ்டீல் உற்பத்தி விரிவாக்கம் மற்றும் மின்சார உற்பத்தி தேவை அதிகரிப்பு போன்ற
பின்னணியில் 2019-20ல் இந்தியாவில் மெட்டலர்ஜிக்கல் மற்றும் தெர்மல் நிலக்கரி இறக்குமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்று ஆஸ்திரேலிய தொழில், புதுமை சிந்தனை மற்றும் அறிவியல் துறை தயாரித்துள்ள ஆதாரவளங்கள் மற்றும் எரிசக்தி குறித்த மார்ச் 2019 காலாண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இருந்தபோதிலும் , ``இந்தியாவுக்கு அதானியிடம் இருந்து நிலக்கரி வாங்க வேண்டியதில்லை. ஆஸ்திரேலியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பம் தான் இந்தியாவுக்குத் தேவை.
வரக்கூடிய தசாப்தங்களில் தெர்மல் நிலக்கரியின் தேவை படிப்படியாகக் குறைந்துவிடும் என்று தான் சர்வதேச நிலக்கரி தொழில் துறையும் கூறியுள்ளது'' என்று பிரவ்ன் உறுதியாகக் கூறுகிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------