வெள்ளி, 17 மே, 2019

பயங்கரவாத பாஜக?

''அரசியல், குற்றவாளிகள் மயமாவது வருத்தத்தை அளிக்கிறது. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகளைக் காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகள்மீது எடுக்கப்படும் நடவடிக்கையில், எந்தப் பாகுபாடும் நான் காட்டமாட்டேன். பி.ஜே.பி-யினராக இருந்தாலும் அவர்கள்மீதும் நடவடிக்கை பாயும். குற்றவாளிகளின் பிடியிலிருந்து அரசியலை விடுவிக்க எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்''
இதை சொன்னவர் வேறு யாருமில்லை இன்று தனது வேட்பாளர்களில் 40%க்கும் மேல் குற்றவாளிகளை களமிறங்கியுள்ள பாஜக மோடிதான்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் (2014 ஏப்ரல் 14) குஜராத் காந்தி நகரில் இப்படி முழங்கினார், பிரதமர நரேந்திர மோடி. தேர்தலில் வென்று, ஆட்சிக்கு வந்த இந்த ஐந்தாண்டுக் காலத்தில் குற்றவாளிகளின் பிடியிலிருந்து அரசியலை விடுவிக்க, எந்த முயற்சியையும் மோடி எடுக்கவில்லை.

மாறாகத் தேர்தலுக்குத் தேர்தல், குற்றப் பின்னணிகொண்ட வேட்பாளர்களைத்தான் களமிறக்கினார்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் அதிக அளவில் குற்றவியல் பின்னணிகொண்ட வேட்பாளர்களைத்தான் பி.ஜே.பி நிறுத்தியது.
 இது, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.


இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 7,928 பேரில், 1,500 பேர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
அதாவது, மொத்த வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணியினர்.
இந்த 1,500 பேரில் 1,070 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதன் சதவிகிதம் 13.
 இந்தத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்பட்ட 433 வேட்பாளர்களில் 175 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். பி.ஜே.பி களமிறக்கிய வேட்பாளர்களில் 40 சதவிகிதத்தினர் கிரிமினல் பின்னணியினர். இதில் 124 (29 சதவிகிதம்) பேர்மீது மட்டும் கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன.

 ''ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகளைக் காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள்'' என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மோடி சொன்ன குற்றச்சாட்டு இப்போது அவருக்கே பொருந்தும்.
 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில், அரசியலில் குற்றவாளிகள் கலப்பது தொடர்பாக, நிறைய இடங்களில் மோடி பேசினார்.

 2014 ஏப்ரல் 21-ம் தேதி உத்தரப்பிரதேசம் ஹர்தோய் என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ''நான் அரசியலையும் நாடாளுமன்றத்தையும் தூய்மைப்படுத்த வந்துள்ளேன். கட்சி வேறுபாடின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காகக் குழு ஒன்றை அமைப்பேன்.

இந்தக் குழுவினர், வெற்றிபெற்ற எம்.பி-க்கள், தங்கள் வேட்புமனுக்களில் குறிப்பிட்ட வழக்குகளின் விவரங்களைச் சேகரிப்பார்கள்.
 குற்றம்செய்தவர்கள் இருந்தால் அவர்கள் தண்டனைபெற்று, சிறைக்குச் செல்வார்கள். அவர்களின் தொகுதியில் மறு தேர்தல் நடைபெறும்.
அதில், குற்ற வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்'' என முழங்கினார்.
ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது அப்படி எந்தக் குழுவையும் மோடி அமைக்கவில்லை.
 குற்றப் பின்னணி எம்.பி-க்கள் யாரையும் சிறைக்கு அனுப்பவும் இல்லை.
மறு தேர்தலும் நடக்கவில்லை.

''தண்டிக்கப்பட்ட எம்.பி-க்களின் தொகுதிகளில் மறு தேர்தல் நடைபெறும்போது அதில், குற்ற வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்'' எனச் சொல்லியிருந்தார் மோடி.
 அதன் பிறகு, எத்தனையோ இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. அதில் எல்லாம் கிரிமினல் பின்னணிகொண்ட பி.ஜே.பி வேட்பாளர்கள்தான் அதிக அளவில் நிறுத்தப்பட்டார்கள்.
அரசியலைத் தூய்மைப்படுத்துவதை வேட்பாளர்களில் இருந்தே ஆரம்பித்திருக்கலாம். அதை, மோடி செய்யவில்லை. குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக செளக்கிதார் ஆனார், மோடி. அவர் சொன்ன வாக்குறுதிகள் பொய்யாகின.

2014 ஏப்ரல் 14-ம் தேதி குஜராத், காந்தி நகர் பிரசாரத்தில், குற்றப் பின்னணியினர் பற்றித்தான் அதிகமாகப் பேசினார், மோடி. ''அரசியலைக் குற்றவாளிகளின் பிடியிலிருந்து விடுவிப்பேன்.
பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், குற்றம்புரிந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். பி.ஜே.பி-யினராக இருந்தாலும் அவர்கள்மீதும் நடவடிக்கை பாயும்.

 'குற்றம் புரிந்த எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி சிறப்பு நீதிமன்றங்களை ஓராண்டில் அமைப்பேன்'' என்றெல்லாம் கர்ஜித்தார் மோடி.
 அவர் சொன்னபடி, ஓராண்டுக்குள் சிறைக்கு யாரும் அனுப்பப்படவில்லை.

`தண்டனைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 `குற்றப் பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ-க்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
2018 மார்ச் 1-ம் தேதி முதல் அவை செயல்பட வேண்டும்' எனக் கடந்த 2017 டிசம்பரில் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதன்பிறகும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்காமல் 12 சிறப்பு நீதிமன்றங்களைக் கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் அமைத்தார்கள்.
 தன்னிச்சையாகச் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முன்வராமல் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அதையும் காலம் தாழ்த்திதான் அமைத்தார் மோடி.
அந்தக் காந்தி நகர் பிரசாரக் கூட்டத்தில் இன்னொரு கருத்தையும் சொன்னார், மோடி. ''எம்.பி, எம்.எல்.ஏ-க்களைத் தொடர்ந்து, உள்ளாட்சிப் பிரதிநிதிகள்மீதான வழக்குகளை விசாரிக்க, ஊராட்சி அடிப்படையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்'' என்றார்.

அதுவும் புஸ்வாணம்தான்.

''குற்றப் பின்னணி எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை பாயும்'' எனச் சொன்ன மோடி, கிரிமினல் பின்னணி வேட்பாளர்களைத் தேர்தலில் நிறுத்துவதையாவது தடுத்திருக்கலாம்.
மாறாக, தேர்தலுக்குத் தேர்தல் குற்றப் பின்னணிகொண்ட வேட்பாளர்களை அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது பி.ஜே.பி.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி நிறுத்திய கிரிமினல் பின்னணி வேட்பாளர்கள் 27 சதவிகிதம்.

இது, அடுத்து வந்த 2014 தேர்தலில் 33 சதவிகிதமாக உயர்ந்தது.

தற்போதைய 2019  தேர்தலில் குற்றப் பின்னணி பி.ஜே.பி வேட்பாளர்கள் (குண்டுவைத்து பலரை கொன்ற பிரக்யாசிங் )உட்பட குற்றவாளிகள் 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளனர்.
இந்த பிரக்யா சிங் திக்கற்ற செயலில் தனது பயங்கரவாத செயலுக்காக அடைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் தனக்கு புற்று நோய் என்றும், மருத்துவம் பார்க்க  போவதாகவும் பரோலில் வெளிவந்தவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதை தேர்தல் ஆணையமும்,நீதிமன்றமும்,காவல்துறையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது,
காரனம் குற்றவாளிகளைத்தேர்தலில் ,அரசியலில் இருந்து விரட்டுவேன் என்று வாய்சவுடால் விட்ட  திருட்டுக் காவலாளி மோடிதான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கோட்ஸே தேசபக்தர்?
 பின்வாங்கிய பாஜக!.
காந்தியை சுட்டு படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் இந்துத்துவா பயங்கரவாதியான கோட்சேவை, ஒரு தேசபக்தர் என்று புகழ்ந்து பேசிய பாஜகவின் போபால்நாடாளுமன்றத் தொகுதி வேட்பா ளரும், மதவெறி சாமியாருமான பிரக்யா தாகூரின் கருத்து ஏற்கத் தக்கதல்ல என்று பாஜக மேலிடம் வேறு வழியின்றி பின்வாங்கியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிகத் தீவிரமான மதவெறி கருத்துக்களை பாஜக கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
 இதனிடையே, தமிழகத்தில் நடைபெற உள்ள நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச் சாரத்தையொட்டி, மக்கள் நீதி மய்யதலைவர் கமலஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும், அவரது பெயர் கோட்சே என்றும், தேச பிதாவை படுகொலை செய்தவர் கோட்சே என்றும் பேசினார்.
தமி ழகத்தில் உள்ள பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மதவெறியர்கள் மட்டுமின்றி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களும் கூட கமலின் கருத்துக்களை எதிர்ப்பதாகக் கூறி மதவெறிக்கு வால் பிடித்தனர். கமலின் கருத்து சரியானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறின.


மேலும் தேசத் தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சே ஒரு இந்துத்துவா மதவெறி பிடித்த பயங்கரவாதி என்றுஎதிர்க்கட்சிகள் உறுதிபட முழக்க மிட்டன.பிரக்யாவும் ஒரு பயங்கரவாதிஇந்நிலையில், காந்தியை படுகொலை செய்த கோட்சே ஒரு தேச பக்தர் என்று மதவெறி சாமி யாரும், பாஜக போபால் தொகுதி வேட்பாளருமான பிரக்யா தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 இது கடுமையான கண்டனக் கணைகளை உருவாக்கியது.

காந்தியைப் படு கொலை செய்த கோட்சேவை ஆர் எஸ்எஸ் மற்றும் பாஜக தேசபக்தர் என்று கூறுவது ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வலைகளை இழிவுபடுத்துவதாகும் என்றும் பாஜக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலை வர்கள் கூறினர்.
காந்தியை படுகொலை செய்தபயங்கரவாதியை தங்கள் கையில் வைத்திருந்த ஆர்எஸ்எஸ், இன்றைக்கும் கூட குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றம்நிரூபிக்கப்பட்டுள்ள பயங்கர வாதியை தனது வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது; இத்தகைய காரணங்களால்தான் அன்றைக்கு சர்தார் வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார் எனவும் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மேலிடம் பதற்றம்இந்நிலையில், தங்களது கட்சியின் வேட்பாளர் பிரக்யா தாகூரின் மேற்கண்ட இழி கருத்து தங்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை உணர்ந்த பாஜக மேலிடம் அவசர அவசரமாக, பிரக்யா தாகூரின் கருத்து கட்சியின் கருத்தல்ல என்றும், அக்கருத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.
 பாஜக செய்தித்தொடர்பாளர் ஹிதேஷ் பாஜ்பாய் செய்தியாளர்களைச் சந்தித்து, மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர் தேசப்பக்தர் அல்ல என்றும்பிரக்யா தாகூர் தமது கருத்துக்காக கண்டிக்கப்பட்டுள்ளார் என்றும் அதைத் தொடர்ந்து அவர் மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே பாஜக, பிரக்யாதாகூர் போன்ற குண்டுவெடிப்பு பயங் கரவாதியை வேட்பாளராக்கியுள்ள இழிசெயலுக்கும் நாட்டு மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் உலகம் முழுவதும் கடந்த 2018-ல் மட்டும் 205.4 பில்லியன் செயலிகள் (ஆப்ஸ்) தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
 2022-ல் இந்த எண்ணிக்கை 258.2 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 2017-ல் 12.1 பில்லியன் ஆப்ஸ் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

 2022-ல் இந்த எண்ணிக்கை 37.2 பில்லியனாக இருக்கலாம். உலகளவில் சீனாவில்தான் அதிகளவில் செயலிகள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன.
 2017-ல் மட்டும் 79.3 பில்லியன் செயலிகள் தரவிறக்கம் செய்துள்ளனர். உலகளவில் அதிக செயலிகள் தரவிறக்கம் செய்வதில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

 உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளின்பட்டியலை எடுத்துக்கொண்டால், முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப்தான்.
 உலகம் முழுவதும் 75.81 மில்லியன் பேர் இதைத் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் ஃபேஸ்புக் மெசஞ்சர் உள்ளது.
இதை 50.3 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.

 இதையடுத்து, ஃபேஸ்புக் லைட்டை 27.7 மில்லியன் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

சமீபத்தில் பேசுபொருளான டிக்டாக்கை உலகம் முழுவதும் 26.17 மில்லியன் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

கேம்களில் ஸ்டேக் பால் (Stack ball - blast through platforms),
 ரன் ரேஸ் 3D (run race 3D),
கரேனா ஃப்ரீ ஃபயர் (Garena free fire ),
கலர் பம்ப் 3D (color bump 3D),
ட்விஸ்ட் ஹிட் (Twist hit),
ஹோம்ஸ்கேப்ஸ் (Homescapes) போன்றவை அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட டாப் 10 ஆண்ட்ராய்டு ஆப்ஸ் பட்டியலில் உள்ளன.

 நம்மில் பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல செயலிகள்தான் டாப் 10 பட்டியலில் இருக்கும் என நினைப்போம். ஆனால் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஐஓஎஸ் செயலிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது க்ளீன் ரோடு (Clean Road) கேம்தான்.

 இதை 11.18 மில்லியன் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ரன் ரேஸ் 3D (run race 3D)-யை 9.75 பேரும், அமேஸ் (Amaze) ஆப்ஸை 9.73 மில்லியன் பேரும் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ரோலர் ஸ்ப்லாட் (Roller Splat), வாட்ஸ்அப் (Whatsapp), ஸ்டேக் பால் 3D (Stack ball 3D), மிஸ்டர்.புல்லட் - ஸ்பை புதிர்கள் (Mr.Bullet - Spy Puzzles), டைல்ஸ் ஹப் - EDM ரஷ் (Tiles Hop - EDM Rush), மெசஞ்சர் (messenger), ஃபேஸ்புக் (Facebook) போன்றவை அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு போனைக் காட்டிலும், ஐபோனில்தான் அதிக கேம்கள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன.
ப்ளே ஸ்டோரில் சில முக்கிய செயலிகளைப் பயன்படுத்தப் பணம் செலுத்தித்தான் தரவிறக்கம் செய்ய வேண்டும்.
 இந்தியர்கள்  இலவச செயலிகளை மட்டுமே அதிகமாக  தரவிறக்கம் செய்துள்ளனராம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

நரேந்திர மோடி சீ க்கு 

சாமானியன் எழுதிய ஒரு திறந்த மடல்

-
இந்தியர்களான நாம் அனைவரும் பூர்வ ஜென்மத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அட்லீஸ்ட்.. நம்மை கடித்த கொசுவை, அடித்துக் கொல்லாமல், போனால் போகிறது என்று பறக்கவிட்டு, ஜீவகாருண்யமாவது காட்டியிருப்போம்.

இல்லாவிட்டால்... இப்படி ஒரு பிரதமர் பிறகு எப்படி கிடைப்பாராம்? ஏதாவது சின்ன சின்ன நல்லதாவது செய்திருந் தால்தானே இப்படி ஒரு வலிமையான, புத்திசாலியான பிரதமர் நமக்கு கிடைப்பார்?

அப்படி என்ன நமது பிரதமர் மோடி செய்துவிட்டார் என்று யோசிக்கிறீர்களா?

ஸ்டாப்.. அந்த எண்ணத்தை அப்படியே அடித்து நொறுக்குங்கள். உடனே உங்கள் கன்னத்தில் போட்டுக்கொண்டு இறைவனி டம் மன்னிப்பு கேளுங்கள். அப்படியான ஒரு நினைப்பே, மா பாதகம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

தேசத்தின் ஒரு சாமானிய குடிமகனாக இருந்து, நான் பிரதமர் மோடிக்கு எழுதிய இந்த கடிதத்தை படித்துப் பார்த்துவிட்டு, மேற்சொன்ன வரிகள் எத்தனை தீர்க்கத் தரிசனம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்!

அன்புள்ள பிரதமர் மோடி சீ ! 
நீங்கள் சமீப காலமாக மீடியாக்களுக்கு, கொடுத்த அதிரடி இன்டர்வியூக்களை படித்தும், பார்த்தும் புளகாங்கிதம் அடைந்து தூக்கம் தொலைத்தவன் நான்.
அதன் தாக்கத்தால், கனவிலும் “மோடி.. மோடி..” என வீறுகொண்டு உளறி, வீடே எனக்கு குளிர் ஜூரம் வந்துவிட்டது என,பாராசிட்டமால் மாத்திரையுடன் பதறி அடித்து ஓடி வந்து பார்த்துவிட்டு, ஒன்று மில்லை என்று தெரிந்த பிறகு, கழுவி கழுவி ஊற்றிவிட்டு சென்ற வரலாற்றுக்கு சொந்தக்காரனும் நான்தான்.

இருக்காதா பின்ன.. இத்தனை நாட் களாக மீடியாக்களுக்கு பேட்டியளிக்க, நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று நாக்கு மேல பல்லைப் போட்டு ஏகடியம் பேசியவர் களின் பின்னந்தலையில் அடிப்பதை போல அல்லவா இருந்தது உங்கள் இன்டர் வியூக்கள். எத்தனை, எத்தனை கேள்விக் கணைகள். அதை நீங்கள் லாவகமாக சமாளித்து துடைதெறிந்ததை பார்த்தபோது, தன் நெஞ்சை, நோக்கி வரும் தோட்டாக் களை, சிம்பிளாக, கையாலே திருப்பி விடும் ரஜினிகாந்த் கதாப்பாத்திரத்தை திரையில் பார்த்ததை போன்ற ‘கூஸ்பம்ப்’ எனக்கு.


அதிலும், அக்ஷய் குமார் என்ற ஒரு நடிகர் உங்களை மடக்கிவிடலாம் என்று நினைத்து, “நீங்க மாம்பழம் சாப்பிடு வீங்களா” என்று கேட்டாரே பார்க்கலாம் ஒரு கேள்வி.
ப்ப்பா.. நீங்க கொடுத்த பதிலை பார்த்து சில்லரையை சிதற விட்ட பல கோடிபேரில் நானும் ஒருவன். “சிறு வய தில் நான் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவேன், ஆனால் எங்க வீட்டில் காசு இல்லை என்பதால், மரங்களில் இருந்தே பறித்து சாப்பிடுவேன்”, என்று நீங்க சொன்ன பதிலை பார்த்ததும், என் கண்களில் கண்ணீர் பிறிட்டு அடித்தது. குமுறி குமுறி அழுதேன். நல்லவேளை, டிவி அறையை பூட்டியிருந்ததால், யாரும் இதைக் கவனிக்க வில்லை.

இதெல்லாம் ஒரு கேள்வியா, நாட்டுக்கு அவசியமா? என்று கேட்கலாம் சிலர். பாவம் தற்குறிகள் அவர்கள். நமது பிரதமரும் நம்மைப்போல மாம்பழ பிரியர்தான் என்ற முக்கியத் தகவல் நாட்டு மக்களிடம் சென்று சேர விடாமல் தடுக்க நினைக்கும் தேசவிரோத சக்திகள். காசு இல்லை என்றாலும், மரங்களில் மாம்பழம் சாப்பிடுவேன் என்று நீங்கள் தெரிவித்தது, மார்க்ஸ் பேசிய, பொதுஉடமை கருத்தில், பிழிந்தெடுக்கப்பட்ட சாற்றின், ஒரு துளி என்பதை இந்த அறிவிலிகள் உணர்ந்திருக்க முடியாது!
“இப்போதெல்லாம் சுகாதாரம் இல்லை என்பதால் மாம்பழம் சாப்பிடுவதை நான் குறைத்துக் கொண்டேன்” என பரிதாபமாக நீங்கள் கூறியது, உலக வெப்பமய மாதல், சுற்றுச்சூழல் மாசு போன்ற பெரிய விஷயங்களுக்கான மாம்பழ குறியீடு என்பதை அறிந்த தேசபக்தன் நான்.

நியூஸ்நேஷன் சேனல் உங்களிடம் கேட்ட ஒரு கேள்வியை, என் வாழ்நாளில் மறக்க முடியாது. “நீங்கள் பர்ஸ் வைக்கும் பழக்கம் கொண்டவரா?” என்ற ஒரு அதிரடிக்கேள்வியை முன் வைத்தது. பதில் சொன்னதும் க்ஷசநயமiபே சூநறள போடுவதற்கு சேனலின் அத்தனை ஊழியர்களின் கைகளும் பரபரத்தன. ஆனால் “பணம் இருந்தால்தானே நான் பர்ஸ் வைத்துக்கொள்ள” என்று பளிச்சென நீங்கள் சொன்ன பதிலை கேட்டு பத்து நாட்கள்.. அட உண்மை தாங்க.. பத்து நாட்கள் நான் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன்.
பர்ஸ் கூட வைக்காதவர் பாரத பிரதமரா..என்ற எண்ணம் இப்போதும் என்னை திடீரென தூக்கத்திலிருந்து, தட்டி எழுப்பிவிடுகிறது. அப்பப்போ எனது பாக்கெட்டு க்கு கை போகிறது. ‘பர்சோபோபியா’ வந்து விட்டதாக பக்கத்தில் ஒரு டாக்டர் சொன்னார். பரவாயில்லை.

“உங்களுக்கு எலக்ட்ரானிக் உப கரணங்கள் பிடிக்குமா?” என்ற அடுத்த கேள்வியை ஒரு ஊடகம் உங்களிடம் முன் வைத்தது. உங்கள் இடத்தில் ராகுலோ, மமதாவோ, லாலுவோ இருந்தால், இந்த கேள்வியை கேட்டதும், பதில் தெரியாமல், ஓட்டம் பிடித்திருப்பார்கள். ஆனால் நீங்கள்தான் வாரமல் வந்த மாமணி யாயிற்றே. இரும்பு மனிதருக்கு, இதெல்லாம் ஒரு கேள்வியா?.
அழகாக ஒரு ஆன்சர் சொல்லி அனைவரையும் விளாசினீர்களே மறக்க முடியுமா அதை...!


“அது 1987 அல்லது 1988-ஆம் ஆண்டு இருக்கும்..” இப்படி நீங்கள் பதிலை சொல்ல ஆரம்பித்ததும், உணர்ச்சிப் பெருக்கால், உட்கார்ந்திருந்த நாற்காலியை, டிவி-க்கு பக்கத்தில் போட்டு அமர்ந்தபடி, “ஆ..”வென வாயை பிளந்து, உங்கள் பதிலை கேட்க ஆவலுற்றேன். “டிஜிட்டல் கேமராவில் அத்வானியை படம் பிடித்து, இ-மெயிலில் அனுப்பி வைத்தேன்” என்ற உங்கள் பதிலை கேட்ட அடுத்த நொடி, அப்படியே டிவி-யைக் கட்டியணைத்தேன்.

எத்தனை நாட்கள்.. ‘அன்ன ஆகாரம்’ இன்றி அப்படியே கிடந்தேன் என்பதை அறியேன் நான்.1995-இல் இந்தியாவில் அறிமுகமான இ-மெயிலையும், அமெரிக்காவில் மட்டுமே விற்பனையில் இருந்த டிஜிட்டல் கேமராவையும், பல வருடங்கள் முன்பே பயன்படுத்திய உங்கள் பராக்கிரமத்தை பார்த்து, “பக்தாள்” என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொண்டேன். ஒரு வேளை ‘டங் ஸ்லிப்பாகி’ 1997-ல் நீங்கள் இ-மெயில் அனுப்பியதை 10 வருடங்கள் முன்பு அனுப்பியதாக வைத்துக் கொண்டாலும், ஒரு போட்டோ அனுப்ப 2 நாட்களாவது ஆக கூடிய ஆமை வேக இணைய தள சேவைதான் அப்போது இருந்தது.


எனது, சிற்றறிவுக்கு எட்டியவரை, அந்த காலக்கட்டத்தில் அமெரிக்க ராணுவத்தில் தான், அதிவேக இணையதளம் இருந்தது. ஆதர்ஷ நாயகன் அத்வானிக்காக அமெரிக்காவுக்கு பிளேன் பிடித்துச் சென்று, அங்கேயிருந்து தில்லியிலுள்ள, அமெரிக்க தூதரகத்திற்கு இ-மெயில் அனுப்பியிருந்தால்தான் அடுத்த நாள் பத்திரிக்கையில் அந்த படம் வருவது சாத்தியம்.

வாரே வாவ்.. இதை நினைத்து பார்க்கும்போதே, என் உடலெல்லாம் உங்களை நினைத்து புல்லரிக்கிறது. இவ்வளவு அர்ப்பணிப்பாளரையா நாம் பிரதமராக பெற்றோம்.
ஆனால், நான் இந்த நூற்றாண்டில் கேட்டிராத, கனவிலும் நினைக்காத ஒரு பதிலை நீங்கள் சொன்னீர்களே நினை விருக்கிறதா? நீங்க மறந்திருப்பீங்க. ஏன்னா உங்களுக்குத்தான் தற்பெருமை பிடிக்காதே. ஆனால், நாங்கள் எப்படி மறப்போம்? வின்சென்ட் சர்ச்சில் உங்கள் இடத்தில் இருந்தால் கூட விழுந்தடித்து ஓடியிருப்பார். “மேகமூட்டம் இருந்தால், பாகிஸ்தான் ரேடாரால் இந்திய போர் விமானங்களை கண்டறிய முடியாது” என்று ராணுவத்திற்கு உத்தரவிட்டதாக சொன்னீர்களே.. ப்பா.. எத்தனை ஜென்மம் என்றாலும் நீங்களே எங்கள் பிரதமராக வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்ட தருணம் அது. ரட்சகன் பட நாகார்ஜூன் போல எனது கைகளில் நரம்புகள் முறுக்கேறியது. “ஐன்ஸ்ட்டீனின் அண்ணனே.. கலாமின் காட்பாதரே.. விஞ்ஞான வித்தகரே.. வடக்கின் செல்லூராரே” இப்படியெல்லாம் எனது வாய் அனிச்சையாகவே அலறத் தொடங்கிய அற்புத நிமிடம் அது.

இதுவரை எந்த விஞ்ஞானிகளாலும், பெண்டகன் தலைமையாலும் கண்டறிய முடியாத அற்புத விஞ்ஞானத்தை ஒரு பேட்டியில், ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று தட்டிவிட்டுச் சென்ற இந்த ஸ்டைல் யாருக்கு வரும்? இந்த கருத்துக்கு, காப்புரிமை பெற வேண்டும் என்று கூட உங்களுக்கு தோணலியே தலைவா!! அற்புத இந்த கருத்துக்கு, அறிவுசார் சொத்துரிமை வாங்க அவசியமில்லை என்று நினைத்த பெருந்தன்மையை நினைத்து, நினைத்து, இந்த கடிதம் எழுதும்போது கூட கண்களில் கண்ணீர் மறைக்கிறது!!
ஐயோ.. என்ன.. திடீரென எனது கைகள் நடுங்குகின்றனவே.. சாரி பிஎம் சார்.

இதற்கு மேல் என்னால் எழுத முடிய வில்லை. உங்கள் பேட்டிகளின் நினைவு என்னை நிலைகுலைய வைத்துவிட்டது..! கைகள் நடுங்க, நா தழுதழுக்க உடலில் ஏதேதோ ரசாயன மாற்றம் நிகழ்வதை உணர முடிகிறது. இதற்கு முன்பு இப்படி நிகழ்ந்தது இல்லை என்பது மட்டும் புரிகிறது. - இப்படிக்கு உங்களின் அடுத்த அதிரடி பேட்டிக்கு காத்திருக்கும் பக்தன்.. ப்ப்பாய்ய்..!

நன்றி : தமிழ்.ஒன்இந்தியா.காம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------