புதன், 29 மே, 2019

வெற்றியின் அடிப்படை


"தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் 
மேகத்துக்கு குழாய் அமைப்போம்"
  என்று சொல்வதுபோல மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு பற்றி பேசுகிறார்.
 மக்களவைத் தேர்தலின்போது பேசியதையே தற்போதுகட்காரி தனது டுவிட்டர் பக்கத்திலும் கூறியுள்ளார்.

அதில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதுதான் தனது முதல் வேலை என்று அவர் கூறியிருப்பதாகவும், அதை பாராட்டி வரவேற்பதாகவும்நடிகர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது பங்கிற்கு டாக்டர் ராமதாஸ் பாமகவின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்ற முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தமிழகத்தின்மீதான அமைச்சரின் இந்த அக்கறை பாராட்டத்தக்கது என்றும் கூறி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
 அத்துடன் இந்தக் கோரிக்கை அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அவர் வைத்த பத்து கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கைஎன்றும் கூறியிருக்கிறார்.

அவரது மறைமுகமான ஒரே கோரிக்கைதனது மகனை தேர்தலில் வெற்றி பெறச் செய்வதும் எப்படியாவது அமைச்சராக்குவதும்தான்.
ஆனால் அதை நேரடியாக சொல்ல முடியாது என்பதால்.

மிக தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்தஅதிமுக ஆட்சியை பாராட்டி தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாக கூறிக்கொண்டார்.

ஆனால் அதை மக்கள் நம்பவில்லை என்பது தேர்தல் முடிவின் மூலம் தெளிவானது.
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தேர்தல் பிரச்சாரத்தின் போதே பாஜகவின் காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டத்தை வரவேற்று பேசினர்.
இப்போது தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி விவசாயத்திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில் காவிரி- கோதாவரி இணைப்புப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் கூறும் காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? தொடர்புடைய மாநிலங்கள் ஒப்புக்கொள்ளுமா?
 என்பதெல்லாம் கேள்விக்குறியது.

 கோதாவரி நதியின் உபரி நீரைகிருஷ்ணா நதி வழியாக காவிரிக்கு கொண்டு வந்து தமிழகத்திற்கு பயன்படுத்துவது காரியசாத்தியமானதுதானா?
என்பது பற்றி யோசித்ததுபோல் தெரியவில்லை.

ஏற்கெனவே கிருஷ்ணா நதிநீரை கொண்டு வர போட்ட திட்டத்தால் சென்னை பயன்பெறவில்லை.
 வீராணம் தண்ணீரே உதவியது.

காவிரி - வைகை - குண்டாறு - வைப்பாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மற்ற மாநிலங்களின் அனுமதியோ, உதவியோதேவையில்லை.
ஆனால் அதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

 அத்திக்கடவு -அவிநாசித் திட்டம் பற்றிதேர்தலில் பேசுவதோடு கூட கனவிலும், நினைப்பதில்லை.

ஆனால் காவிரி தண்ணீர் பிரச்சனைஎழும்போதெல்லாம் கோதாவரி - காவிரி இணைப்பைப் பற்றி பேசி ஏமாற்ற முயற்சிக்கின்றனர் மத்திய, மாநில ஆட்சியாளர்கள். அவர்கள் இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
 புதிய காங்கிரஸ் தலைவர் .
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய தோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ்செயற்குழுவில் தெரிவித்தார்.
25ஆம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததோடு நேரு குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்ட தாகவும் தகவல்கள் பரவின.
சில மூத்த தலைவர்கள் தனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் வேதனை தெரிவித் தார் என்றும் ஊடகங்களில் தகவல்கள் வந்தன.

நாட்டின் அனைத்து மாநிலகாங்கிரஸ் தலைவர்களும் தில்லியில்தான் முகாமிட்டுள்ளனர்.
தனது ராஜினாமா முடிவை காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்த ராகுல் காந்தியிடம் பல மூத்த தலைவர்கள் சென்று சமரசம் பேசியும் அவர் அந்த முடிவிலிருந்து பின்வாங்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
அமரீந்தர் சிங்


மேலும் தற்போதைய மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியா வில் தமிழகத்தில் 9 தொகுதிகள், கேரளாவில் 15 தொகுதிகள் காங்கிரஸ் வென்றுள்ளது.

ஆனால்  வட இந்தியாவில் காங் கிரஸ் வெற்றிபெற்றுள்ள ஒரே மாநிலம் பஞ்சாப்தான்.
அங்கே மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் ஏற்கனவே படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், தென்னிந்தி யரைத் தலைவராக தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.அது பாஜகவுக்கு வசதியாகிவிடும் என்ற எண்ணம்தான்.

 வட இந்தியா வில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் தனது வெற்றியை நிரூபித்துள்ளதை வைத்து, பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை காங்கிரஸ் தலைவராக நியமிக்கும் எண்ணமும் ராகுல் காந்தியிடம் இருப்ப தாகத் தெரிவிக்கிறார்கள் .

பேச்சாற்றல் மிக்க அமரீந்தர் சிங் நேரு குடும்பத்தின் நீண்ட கால விசுவாசி ஆவார். 2017 சட்ட மன்றம், 2019 நாடாளுமன்றம் என இரு தேர்தல்களில் பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றிக்குக் காரணமானவர். வட இந்தி யாவில் வீசிய மோடி அலை யிலும் பஞ்சாப்பில் பாஜக – அகாலிதளம் கூட்டணிக்கு 4 இடங்களே கிடைத்தன.
 ஒரு இடத்தை ஆம் ஆத்மி வென்றது. மீதி 8 இடங்களையும் காங்கிரசே கைப்பற்றி யது. அதற்குக் காரணம் அம ரீந்தர் சிங்கின் ஆட்சி மற்றும் பிரச்சாரமே.

 எனவே ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவராக அமரீந்தரை ஆக்கலாம் என்ற திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 உலக பட்டினி தினம்  .

 ஐ.நா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர்.

ஆசியா,மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் அதிக அளவில் பட்டினி சாவை எதிர்கொள்கின்றன.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள 78 நாடுகளின் பட்டியலில் இந்தியா 63-வது இடத்தில் உள்ளது.

 சீனாவை பொறுத்த வரையி்ல் 1990-ல் 13 புள்ளிகளை பெற்றிருந்தது.
இவை 2016-ல் 5.5 ஆக குறைத்துள்ளது.

இதே காலகட்டத்தில் இந்தியா 32.6-ல் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளது என தெரிவித்து்ள்ளது.

நாட்டு மக்களின் பட்டினியைப் போக்கவேண்டியது அரசாங்கங்களின் தலையாய கடமையாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மோடி வெற்றியின் அடிப்படை 

இந்துத்துவா.

 
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வியாழ னன்றுவெளியாகத் தொடங்கிய சமயத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  அவருடைய இந்து தேசியவாத பாஜகவின் பிளவுவாத மற்றும் மதவெறிப்பிரச்சாரத்தினைத் தொடர்ந்து, நரேந்திர மோடியும், பாஜகவும்அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைக் கண்டு, நான் அதிர்ச்சியடையவில்லை.
ஒரு பத்திரிகையாளர் என்றமுறையிலும், மோடி அரசியலுக்குள் வந்த நாளிலிருந்தும்,அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்தும்,அவருடைய அரசியல் தந்திரங்கள் அனைத்தையும் நான் அவ்வப்போது முழுமையாக வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்.

எனவே, இவர்களின் இவ்வெற்றி என்னைப் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை.இப்போது ஏற்பட்டிருக்கிற தேர்தல் முடிவுகளின் சித்திரத்தை வரைந்திடும்போது, இவ்வெற்றியைத் தொடர்ந்து மோடி தில்லியில் பேசியதை மட்டும் வைத்து முடிவுசெய்திடக் கூடாது. மாறாக, இதனை, மிகப் பிரம்மாண்டமான தேர்தல்வெற்றிவிழாக் கூட்டத்தில், சாமியாரினி உடையில் உரையாற்றிய பிரக்யா சிங் தாக்குர் உரையை வைத்து வரையறுத்திட வேண்டும்.


 மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியாரினியான பிரக்யா சிங் தாக்குர், 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும்நகரத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி, பத்து பேரைக்கொன்ற  பயங்கரவாதக் குழுவின் தலைவர் என்ற முறையில்அனைவராலும் நன்கு அறியப்பட்டவர்.
 இவர், இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா – பாகிஸ்தான் – நேபாளம் உள்பட அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து ஓர் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அபினவ்பாரத் என்னும் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள ஒரு பயங்கரவாதி.
 அவர் போட்டியிட்ட மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்குமுன்பு ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது,மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயை நாட்டுப்பற்று மிக்கவர்என்று வானளாவப் புகழ்ந்தார்.  (அவர்களுடைய இந்து வலதுசாரி உலகக்கண்ணோட்டத்தின்படி, மகாத்மா காந்தி, ஒரு முஸ்லிம் அனுதாபி என்று அடிக்கடி தூற்றப்படுபவராவார்.)  

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த ஆண்டில், தங்களுடைய பெரும்பான்மை மதவெறிக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கூறிக்கொண்டு,இத்தகைய பிரக்யா சிங் தாக்குரும், பாஜகவும் மக்களவைக்குள் நுழைவது என்பது என்னே முரண்நகை!
இப்போது ஏற்பட்டுள்ள முடிவுகள், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு என்ன நான் பார்த்தேனோ அவற்றைக் கிட்டத்தட்ட ஒத்திருக்கின்றன.
 2010இல் ஒரு செய்தி நிறுவனத்தின் சார்பாக, 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றக் கலவரங்கள் குறித்தும், அவற்றைச் செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்திடவும், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு முஸ்லிம்கள் சட்டத்திற்குப் புறம்பான முறையில் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்தும் புலனாய்வு மேற்கொள்வதற்காக மாறுவேடமணிந்து சென்றிருந்தேன்.

அமெரிக்கத் திரைப்படக் கல்லூரிமாணவி என்று என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்டு,மோடியின் ஆட்சியின் கீழ் பணியாற்றிய அநேகமாக அனைத்து அதிகார வர்க்கத்தினருடனும், அதிகாரிகளுடனும்பேசினேன்.
முஸ்லிம்களிடமிருந்து தாக்குதல் தொடுக்கப்படவுள்ள ஓர் இந்து தலைவர் என்ற முறையில் மோடி சித்தரிக்கப்படுவதையே அவர் விரும்பினார் என்று அப்போது நான் அறிந்து கொண்டேன்.
குஜராத்தில், மோடியினுடைய 12 ஆண்டு கால ஆட்சி,அங்குள்ள மக்களால் குஜராத்திப் பெருமையின் வெற்றியாகப்பார்க்கப்பட்டதை, அவருடைய தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் அவரை வரவேற்றுத் திரண்ட மக்கள் கூட்டத்திலிருந்து பார்க்க முடிந்தது.
அப்போது அவர்கள் முழங்கிய முழக்கம்“பாருங்கள் பாருங்கள், குஜராத்தின் சிங்கம் வந்திருக்கிறது” என்பதாகும்.2005இல் சொராபுதீன் ஷேக் என்கிற ஒரு சிறிய கிரிமினலை, மோடி அரசாங்கம், ஒரு மாபெரும் பயங்கரவாதி எனமுத்திரை குத்திக் கொன்றதை, திருவாளர் மோடி, குறிப்பிட்டசமயத்தில், கூட்டத்திலிருந்தவர்கள் “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டதைப் பார்க்க முடிந்தது.

சொராபுதீன் ஷேக்கையும் அவனது மனைவியையும் குஜராத் காவல்துறையினர் கொலை செய்துவிட்டார்கள் என்றுஇந்த வழக்கைப் பின்னர் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது தெரிந்தது.
இந்தியாவின் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அவர்களிருவரும் ஒரு போலி என்கவுண்டர் மூலமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதையும், குஜராத் மாநில அரசே இதனைச் செய்தது என்பதையும் தன் புலனாய்வு மூலமாகக் கண்டறிந்தது.

 மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் புலனாய்வு முடிவுகளை மதிப்பதற்குப் பதிலாக அன்றைய மோடி அரசு, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்தால் முஸ்லிம்களை முகத்துதி செய்வதற்கு, தான் பலியாகிவிட்டது போன்று இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றார்.
அதனைத்தொடர்ந்து அவர், குஜராத்திற்குள் தன்னுடைய ஆட்சியைத் தாக்குவதற்காக நுழைந்த ஒரு முஸ்லிம் பயங்கரவாதியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய தன்னுடைய அதிகாரிகளையும், அமைச்சர்களையும் தண்டித்திடவே தில்லி சுல்தான்கள் (மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான் மோடி இவ்வாறு குறிப்பிடுகிறார்) விரும்புகிறார்கள் என்று மக்களிடையே பிரச்சாரத்தை  மேற்கொண்டார்.


நீதியைக் கேலி செய்வதே மோடியின் துருப்புச்சீட்டாக மாறியது.
மற்றுமொரு முஸ்லிமும் குஜராத் அரசின் எதிரியாகச் சித்தரிக்கப்பட்டார். அதன்பின்னர் கோடையில் மோடி மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மோடி, கடந்த இருபதாண்டுகளாக நன்கு ஆய்வுசெய்து மேற்கொண்டு வந்த உத்திகள்தான் இந்தியாவில் 2019 பொதுத் தேர்தலின் முடிவாக வெளிவந்திருக்கிறது.
   இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு, உடனடி அச்சுறுத்தலாக, முஸ்லிம்களை, மறைமுகமாக ஆனால் அதே சமயத்தில் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில்  “ஊடுருவியுள்ளவர்கள்,”“கரையான்கள்,” “வெளியாட்கள்,” என்றெல்லாம் முத்திரை குத்தி மக்களிடையே வெறுப்பு விஷத்தை விதைத்திடும் உத்தியை இவர்கள் மிகவும் வெற்றிகரமாக கடந்த இருபதாண்டுகளில் தாங்கள் ஆண்ட மாநிலங்களில் மேற்கொண்டு வந்தார்கள்.

நான், 2019 தேர்தல்கள் குறித்து செய்திகள் சேகரிப்பதற்காக மகாராஷ்டிராவிலிருந்து உத்தரப்பிரதேசம் வரைபயணம் செய்தபோது, மோடியின் பேச்சுக்களில் இருந்ததைக்காட்டிலும் அதிகமாகவே,  மக்கள் மத்தியில் சிறுபான்மையினருக்கு எதிராக வேரூன்றியிருந்த வெறுப்பு உணர்வை நன்குகாண முடிந்தது.
 மும்பையில் தேர்தல் முடிவு குறித்து ஒரு டாக்சி ஓட்டுநர் கூறுகையில் (இவர் லால்கஞ்ச் பகுதியில்அரசாங்கத்தின் கேன்டீன் ஒன்றையும் நடத்தி வருகிறார்),“தொப்பிக்காரன்களுக்கு” (முஸ்லிம்களைத்தான் இவர்இவ்வாறு குறிப்பிடுகிறார்) சரியான பாடம் கற்பிக்கப்பட்டிருப்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறோம் என்றார்.

இத்தகைய இவர்களின் மதவெறிப் பிரச்சாரம் இவர்களுக்கு ஆதாயத்தை அளித்திருக்கிறது.
 முஸ்லிம்கள் கணிசமாக வாழும் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், உள்ளே நுழைவதற்கே மிகவும் அல்லாடிக்கொண்டிருந்த பாஜக, இத்தேர்தலில் இரண்டு இலக்க வெற்றியை ஈட்டியிருக்கிறது.இவ்விரண்டு மாநிலங்களிலும் பாஜக புதிதாகக் கொண்டுவந்த திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டமுன்வடிவை மையமாகவைத்துத்தான் பிரச்சாரத்தை மேற்கொண்டது.
 இச்சட்ட முன்வடிவானது முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை அளிப்பதை அனுமதிக்கிறது. அஸ்ஸாம் மற்றும்மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களுமே அண்டை மாநிலங்களிலிருந்து வந்து குடியேறியவர்களால் எப்போதுமே ஓர் இருக்கமான சூழ்நிலையுடனேயே இருந்து வந்தன.

இந்தச்சட்டமுன்வடிவானது,  முஸ்லிம்களை அனுமதிக்கமாட்டோம் என வகுப்புவாத அடிப்படையில் உத்தரவாதம் அளித்திருப்பதன் மூலமாக பாஜக மிகவும் எளிதாக, மனக்குறையுடன் வாழ்ந்துவந்த இந்து வாக்காளர்களை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக அறிமுகப்படுத்தியுள்ள தேசியக் குடிமக்கள் பதிவேடு(NRC-National Register of Citizens)  மாநிலத்தில் ‘ஊடுருவியவர்களை’ வெளியேற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இதில் “ஊடுருவியவர்கள்”என்று இவர்கள் குறிப்பிடுவது வங்கத்திலிருந்து வந்துள்ள முஸ்லிம்களைத்தான். இது நன்கு வேலை செய்திருக்கிறது.
இப்போது பாஜக, அஸ்ஸாமில் பெரும்பான்மையான இடங்களை வென்றிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இதே கதைதான்.
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் வலதுசாரி சாமியாருமான யோகி ஆதித்யநாத், தேர்தல் பிரச்சாரத்தின்போது மதவெறிநஞ்சை தொடர்ந்து உமிழ்ந்து வந்ததற்காக, கடுமையாக விமர்சனத்திற்கு ஆளானார். மோடியும், பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் குறித்து சரடுவிட்டுக்கொண்டிருந்தார்.
இதுவும் பல தரப்பினரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டன.

 எனினும், இப்போது பாஜகவிற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள எண்பது இடங்களில் அறுபது இடங்களுக்கும் மேல் கிடைத்திருக்கிறது.
இத்துடன், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டிக்கொடுக்கப்படும் போன்ற மோடியின் பிரச்சாரமும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வேலை செய்திருக்கிறது.
இத்துடன் மோடி ஒருவரால் மட்டும்தான் “தேசத்துரோகிகளையும்”, “தேச விரோதிகளையும்”, சுத்தமான இந்து மண்ணிலிருந்து  விரட்டியடிக்க முடியும் எனப் பாடல்கள் இயற்றப்பட்டு, நாட்டுப்புற மெட்டுகளில் பாஜக பேரணிகளில் பாடப்பட்டன.
கடந்த ஐந்தாண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக, கொலை பாதகச் செயல்களில் ஈடுபட்டவர்களில் அநேகமாகஎவரும் தண்டிக்கப்படவில்லை.

 இவ்வாறு இந்து பெருமையைஉயர்த்திப் பிடிப்பதன் மூலமாக, சிறுபான்மை மக்களைத் தனிமைப்படுத்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வாக்களிக்கும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. பல இடங்களில், முஸ்லிம் மக்கள் தொகை கணிசமாக உள்ள இடங்களில் கூட, பாரம்பரியமாகக் காங்கிரஸ் கட்சிக்குச்சென்றுகொண்டிருந்த முஸ்லிம் வாக்குகள் இந்த சமயத்தில்பாஜகவிற்கு எதிராக வலுவாகவுள்ள வேறு எதிர்க்கட்சிகளுக்குச் சென்றிருக்கின்றன.
   இவ்வளவுக்குப்பின்பும், 19 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்தியாவில் வெறும் 26 வேட்பாளர்கள்தான் 2019இல் நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறார்கள். ஆளும் கட்சியில் ஒருவர் கூட கிடையாது.

அதே சமயத்தில், பாஜகவின் பணமதிப்பிழப்பு முடிவு படுதோல்வி, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார சீர்திருத்தங்களின்மை, விவசாய நெருக்கடி மற்றும் ரேடாரை ஏமாற்றுவதற்காக மேகமூட்டத்தினூடே விமானத் தாக்குதலை நடத்தினோம் என்றுகூறும் ஓர்  ‘அறிவார்ந்த’ பிரதமரைப் பெற்றிருந்த போதிலும்,2019இல் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.

திருவாளர் மோடியின் பாஜக, காங்கிரஸ் கட்சியை அதன் வலுவான கோட்டையில் தகர்த்திருப்பது மட்டுமல்ல, அக்கட்சியின் மிக முக்கிய தொகுதியான அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியையும் தோற்கடித்திருக்கிறது.
மோடியின் ‘இரும்பு மனிதன்’ என்கிற சித்திரத்துடன் காங்கிரசின் ‘ரபேல் ஒப்பந்த ஊழல்’ போட்டிபோட முடியவில்லை.
நரேந்திர மோடி, ஒரு மூர்க்கத்தனமான தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

 நரேந்திர மோடியின்அபரிமிதமான வெற்றியின் அடிப்படை, இந்தியக் கலாச்சாரத்தை இந்து விழுமியங்களின் அடிப்படையில் வரையறுத்திடும் சித்தாந்தமான இந்துத்துவாவாகும்.


அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இதனை எவ்வித எதிர்ப்புமின்றி அனுமதித்தோமானால் அது நாட்டை ஓர் ஆபத்தான எல்லைக்கே இட்டுச்செல்லும்.

கட்டுரையாளர்: குஜராத் கோப்புகள்-மறைக்கப்பட்ட
கோர வடிவங்கள் என்னும் நூலின் ஆசிரியர்
நன்றி: டைம் இதழ்
தமிழில்: ச.வீரமணி


 ------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கமெண்ட் அடித்துவிட்டு நீண்ட நெடுங்காலமாகத் தலைமறைவாக இருந்த


 கோமாளி நடிகர் எஸ்.வி.சேகர் மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியைப் பிடித்த மமதையில் மொத்தத் தமிழ் சமூகத்தையும் அவமரியாதை செய்யும் வகையில் மீண்டும் ஒரு ட்விட்டர் வெளியிட்டு தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்டுள்ளார்.

 எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒருவர் தனது தலையில் மண்ணை அள்ளிக்கொட்டும் புகைப்படத்தை வெளியிட்டு,

 ‘ஓ இதுதான் தமிழ் மண்ணா’ என்று துவங்கி தொடர்ச்சியாக அந்த மண்ணுக்கு பல விளக்கங்கள் கொடுத்து ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தை இழிவு படுத்திவருகிறார். 

எஸ்.வி.சேகரின் அப்பதிவுக்குக் கீழே பிரசுரம் செய்ய முடியாத அளவுக்கு அசிங்கமான கெட்ட கெட்ட வார்த்தைகளால் மக்கள் அவரை அர்ச்சித்து வருகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 778 கோடி ரூபாய் வைக்கோல்போர் ஓவியம் 
பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற ஒவியர் கிளாட் மொனெட் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடிக்கு ஏலம் போனது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
பொதுவாகவே சில ஓவியங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
 பார்த்தவுடனே எளிதாக எல்லோரையும் கவர்ந்து விடும். வேறு சில ஓவியங்கள் ரொம்பவும் சிம்பிளாக இருந்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்திருக்கும்.
அவை பார்ப்பதற்கே ஒன்றுமே புரியாத மாறி இருந்தாலும் அவை ஏதாவது ஒரு அர்த்தத்தை வைத்தே வரையபட்டிருக்கும்.
இப்படி இருக்கையில், இணையவாசிகள் இன்று காலை முதல் மொனெட் வரைந்த வைக்கோல்போர்  ஓவியம் குறித்து அதிகம் பேசி வருகின்றனர். காரணம் அந்த ஓவியம் ரூ. 778 கோடிக்கு ஏலம் போனது தான்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட் ஓவியங்கள் எப்போதுமே தனித்துவம் வாய்ந்தவை.
இவர் வரைந்த ஒரு சில ஓவியங்கள் மட்டுமே இப்போது வரை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மொனெட் 1890 ஆம் ஆண்டு கிராமப்புற வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வைக்கோல்போர்  ஓவியம் ஒன்றை வரைந்தார்.

 அப்போதைய காலக்கட்டத்தில் அந்த வைக்கோல் ஓவியம் அனைவராலும் அதிகம் பேசப்பட்டது.
இந்த ஓவியத்திற்கு இப்போது ’மீலெஸ்’ என பெயர் வைத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பி ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது. யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் மொனெட் வரைந்த ஓவியம் 110.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஓவியம் ஏலம் போனது.
அதாவது இந்திய மதிப்பில் ரூ.778 கோடி.
ஏலம் தொடங்கிய முதல் 8 நிமிடங்களில் இந்த வைக்கோல் போர் ஓவியம் விலைக்கு போனது மற்றொரு ஆச்சரியம். இந்த தகவல் வெளியானது முதல் இணைய வாசிகள் பலரும் வைக்கோல் ஓவியத்தை அதிகளவில் விமர்சித்து வருகின்றனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------