ஏன்பதவியேற்று 38 வது நாளிலேயே மாற்றம் !

 யாரைத்தான் நம்புவதோ ...?
இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருந்தாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய முழு கவனமும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றுவதில்தான் இருக்கிறது.
 ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, திமுக ஆட்சி அமைக்க அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் தமிழக உளவுத்துறையினர் முதல்வருக்குக் கொடுத்திருக்கும் தகவல்படி திமுகவினர் அதிமுக எம்.எல்.ஏ.க்களோடு தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

திமுகவின் திட்டம் என்பது நம்பர் கேம் ஆடி ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதல்ல.
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து உங்கள் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, விரைவில் தேர்தலைக்கொண்டுவருவதே என்று உளவுத் துறையினர் தொடர்ந்து முதல்வருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் ஸ்டாலினின் மேடைப் பேச்சை நம்பாமல் எடப்பாடி தொடர்ந்து தனது எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றிக் கொள்ள பல ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஒன்றுதான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் போன் கால்களையும் கண்காணித்து கடந்த சில மாதங்களில் அவர்கள் யாரோடெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்ற ரிப்போர்ட்டைக் கேட்டிருந்தார் முதல்வர்.

இதற்கு போலீஸ் பாஷையில் சிடிஆர் என்று பெயர்.
 அதாவது Call Detail Report என்று சொல்வார்கள்.
 குறிப்பிட்ட நபரின் அலைபேசி அல்லது தொலைபேசி எண்ணில் இருந்து யார் யாருக்கு அழைப்புகள் சென்றுள்ளன, எத்தனை நிமிடங்கள் பேசியுள்ளார்கள், எவ்வளவு தடவை பேசியுள்ளார்கள் என்பதையெல்லாம் உள்ளடக்கியதுதான் ’கால் டீடெயில் ரிப்போர்ட்’. இன்று பல எம்.எல்.ஏ.க்களும் வாட்ஸ் அப் காலில்தான் ரகசியங்களைப் பேசுகிறோம், யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 ஆனால் வாட்ஸ் அப் அழைப்பில் என்ன பேசினார்கள் என்பதை பதிவு செய்ய முடியாதே தவிர, எந்தெந்த நம்பருக்கு எத்தனை முறை எவ்வளவு நேரம் பேசினார்கள் என்பதை சேகரிக்கும் வசதி இருக்கிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

இந்த வகையில் கடந்த ஆறு மாதங்களில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் சிடிஆர் ரிப்போர்ட்டை கேட்டு வாங்கிப் பார்த்த முதல்வருக்கு தலை சுற்றிவிட்டது.
காரணம் தங்கள் மாவட்டத்திலுள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக எம்.எல்.ஏ.க்களோடு பேசாத அதிமுக எம்.எல்.ஏ.க்களே இல்லை என்ற அளவுக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களுமே திமுகவினரோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான் சிடிஆர் ரிப்போர்ட் .

பொதுவாகவே அரசியல்வாதிகள் முக்கியமான விஷயங்களை தங்கள் போனில் இருந்து பேச மாட்டார்கள், தங்களது அலுவலகத்திலுள்ள சாதாரண ஊழியர், அல்லது குடும்ப உறுப்பினரின் எண்ணில் இருந்துதான் பேசுவார்கள்.
 இந்த நுட்பத்தை அறிந்து எம்.எல்.ஏ.க்கள் நம்பர் மட்டுமல்லாது அவர்களை எப்போதும் சுற்றியிருக்கும் நபர்களின் நம்பர்களையும் சேர்த்தே இந்த சிடிஆர் ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
இதற்கு ஒன் பிளஸ் ஒன், ஒன் பிளஸ் டூ என்று உளவுத்துறை பரிபாஷையில் சொல்கிறார்கள்.

இந்த ரிப்போர்ட்டுகளை எல்லாம் பார்த்து அதிமுகவில் எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் திமுகவினரோடு அடிக்கடி, அதிகமாக பேசியிருக்கிறார்கள் என்று இன்னொரு ரிப்போர்ட்டையும் கேட்டுப் பெற்றிருக்கிறார் எடப்பாடி. அந்த ரிப்போர்ட்டின் படிதான் திமுகவினரிடம் நெருக்கமான தொடர்பில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் சிறப்பு கவனம் எடுத்து எடப்பாடி பேசி வருகிறார்.
அவர்களிடம், ‘உங்களுக்கு என்ன பிரச்சினை, மாவட்ட அமைச்சர்களோடு பிரச்சினையா?
 உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்’ என்ற ரீதியில் பேசிவருகிறார் எடப்பாடி.

கால் டீடெயில் ரிப்போர்ட்டில் அமைச்சர்களின் தொடர்பு விவரங்களும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.
இதில் என்ன விசேஷம் என்றால் அமைச்சர்களிலேயே சிலர் திமுகவினரோடு ரெகுலராக பேசிக்கொண்டிருக்கும் தகவலும் எடப்பாடிக்கு கிடைத்துள்ளது.

 ’எம்.எல்.ஏ.க்களுக்கு கூட திமுகவினரோடு தொடர்புகொள்ள பல சந்தர்ப்பங்கள் இருக்கலாம். ஆனால் அமைச்சர்களே திமுகவினரோடு நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால் இதை எப்படிப் புரிந்துகொள்வது?’ என்று நேற்றிலிருந்து தனக்கு நெருக்கமானவர்களிடமெல்லாம் கேட்டுப் புலம்பிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.

 பல்வேறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுக பிரமுகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துவருவதும், இதன் விளைவாக சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக ஏதேனும் நடந்து விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வும்தான் முதல்வரிடம் இப்போது அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவிலேயே .


தன் ஆட்சியைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த ஆபரேஷனை முறியடிப்பதற்காக, மத்திய வருமான வரித் துறையின் தலையீடு வேண்டுமென பாஜக பிரமுகர்களின் உதவியை எடப்பாடி நாடியிருப்பதாக  செய்தி வெளி வந்துள்ளது.


ஆட்சியைக் கவிழ்க்க திமுக ஏற்பாடு செய்துள்ளதாகச் சொல்லப்படும், இந்த ஆபரேஷனுக்குக் காரணமானவர்கள் என்று தமிழக உளவுத் துறை முதல்வருக்கு ஒரு பட்டியல் கொடுத்துள்ளது.
அந்தப் பட்டியலில் எ.வ.வேலு ,பொன்முடி, ஜெகத்ரட்சகன், செந்தில் பாலாஜி ஆகியோரது பெயர்கள் முன் வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 இவர்களின் நடமாட்டங்களைக் கண்காணித்தாலே ஆட்சிக்கு எதிராக நடத்தப்படும் பணப் பரிமாற்றத்தை எடுத்துவிட முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லியிடம் கேட்டுள்ளனர்.

ஆனால், இப்போது பந்து பாஜக வசம் உள்ளது.
 தேர்தல் நேரத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் பணப் பரிமாற்றத்தை ரெய்டுகள் மூலம் தடுத்து நிறுத்திய மத்திய அரசு, இன்னமும் அதே பாதையில் பயணிக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

 தமிழகத் தேர்தல் முடிவுகளில் கடுமையான அதிருப்தியில் இருக்கும் பாஜக மேலிடம், ‘தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றியைத் தவறவிட்ட வாக்கு வித்தியாசத்தை விட, அதிமுகதான் அதிக தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளது.
 எனவே பாஜகவை விட அதிமுக மேல்தான் மக்கள் அதிக அதிருப்தியில் இருக்கிறார்கள்’ என்று கருதுகிறது.

எனவே, இனி எடப்பாடியின் எல்லா கோரிக்கைகளும் டெல்லியால் ஏற்கப்படுமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

                                                                                                                                        -மின்னம்பலம்.
                          இதே தேதி . அரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய செய்தி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------


காவிமயமாகும் கல்வி .

தமிழக அரசு மாற்றி அமைத்துள்ள புதிய பாட புத்தகங்கள் நேற்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


அதில் 12ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டை பக்கத்தில்
இடம்பெற்றுள்ள பாரதியார் படத்தில் அவரது தலைப்பாகையில் வெள்ளை நிறத்திற்கு பதிலாக காவி நிறம் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுகவின் முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,

பாரதியாரை யாராவது காவி தலைப்பாகையுடன் பார்த்திருக்கிறார்களா?

 பாட புத்தகம் மூலம் காவியை திணிக்கும் செயலாக இதை பார்க்க முடிகிறது.


மாணவர்கள் மத்தியில் பாரதியாரை பற்றி வேறு கோணத்திலான சிந்தனையை உருவாக்குவதற்கான முயற்சி நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.



இப்படியே இந்த எடப்பாடி ஆட்சி தொடர்ந்தால் அடுத்து  வரும் புத்தகங்களில் தாமரையை மலரவைத்து விடுவார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
  வேலையின்மை

31-5-19 அன்று தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்திலிருந்து (National Sample Survey Organisation) 2017-2018ஆம் ஆண்டுக்கான கால வேலைப்படை ஆய்வு (Periodic Labour Force Survey - PLFS) முடிவுகள் வெளியிடப்பட்டன.


தற்போது இந்தியாவில் வேலையின்மையின் அளவு 6.1% என்றும், இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வேலையின் தன்மை, தொழிலாளர்களுக்குத் தரப்படும் அடிப்படை உரிமைகளின் நிலை ஆகியவை பற்றியும் இவ்வறிக்கை விவரித்துள்ளது.
மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் இந்த அறிக்கையின் மூலம்வெளியாகியுள்ளன.

அரசு வேலைவாய்ப்பை பெருக்காமல் இருப்பதால்தான் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்த இந்தியா துடைத்து வெளியேற்றப்பட்டள்ளது.
இதனால் இனி உலகநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வது குறையும்.

ஆனால் மோடியின் பாஜக அரசோ வேலைவாய்ப்புகளை பெருக்காததோடு மட்டுமல்ல அதன் கொளகை முடிவ்கள்,செயல்பாடுகள் எல்லாம் இருக்கிற வேலைவாய்ப்புக்களையும் பறிக்கிறவகையிலேயே உள்ளது வேதனை தரும் செயலாகவே உள்ளது.
இவைகளை மோடி அரசு தெரிந்தே செய்கிறதா?அல்லது யாரவது தவறான வழிகாட்டலைத் தருகிறார்களா என்பதுதான் புரியவில்லை.
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 மதுரை மாவட்ட ஆட்சியர் 
பதவியேற்று 38 வது நாளிலேயே மாற்றம் !
என்னதான் நடந்தது.?

மதுரையில் 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஆவணங்களை துாசு தட்டி எடுத்து, ஆளுங்கட்சியினர் தனித்தனியாக அளித்த பட்டியல்களை புறந்தள்ளி தகுதியான 1,560 பேரை அங்கன்வாடி மையங்களில் நியமித்துமாவட்ட ஆட்சியர்  நாகராஜன் உத்தரவிட்டார். நேற்று முன் தினம் இரவோடு இரவாக பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு 1,560 பேரும் நேற்று காலை பணியில் சேர்ந்தனர்.

 அதிர்ச்சியுற்ற ஆளுங்கட்சியினர் தலையீட்டால் நேற்று மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டார்.

 மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 1,500க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள், குறு மைய பொறுப்பாளர்கள், உதவியாளர்/ சமையலர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

இதற்காக 2017ல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 8,000 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு நேர்முகத் தேர்வு 2017 செப்டம்பர் முதல் வாரத்தில் நடந்தது.
நாகராஜன் இ.ஆ.ப.

காலியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் பட்டியல் அளிக்கப்பட்டது.

 ஒரே இடத்திற்கு ஆளுங்கட்சியினர் தனித்தனியாக ஆட்களை சிபாரிசு செய்தனர்.

 ஒருபணியிடத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை பெற்று சிபாரிசு செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.

 அன்றைய  மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு நெருக்கடி தரப்பட்டது.

இதனால் நியமனங்கள் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன.
 காலிப் பணியிடங்கள் அதிகரித்து ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டது.


இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்காக ஏப்.28 ல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு ஏற்ற நாகராஜன், கிடப்பில் போடப்பட்ட கோப்புகளை துாசு தட்டினார்.
அங்கன்வாடி பணி நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களின் விபரத்தை ஆராய்ந்த ,மாவட்ட ஆட்சியர் தகுதியானவர்களை தேர்வு செய்ய நான்கு துணை கலெக்டர்கள் கொண்ட குழுவை நியமித்தார்.

ஆதரவற்ற விதவை, விதவை, மாற்றுத்திறனாளிகள், குடும்பத்தில் யாராவது ஒரு மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் அக்குழுவினர் தேர்வு செய்தனர்.

அவர்களில் பொறுப்பாளர்கள், உதவியாளர்கள்/சமையலர்கள் 1560 பேருக்கு பணி நியமன உத்தரவு நேற்று முன்தினம் இரவு வரை வழங்கப்பட்டு, மறுநாளே பணியில் சேர உத்தரவிடப்பட்டது.
 அவர்கள் நேற்று காலை பணியில் சேர்ந்தனர்.

 இதுதெரிந்து அதிர்ச்சியடைந்த ஆளுங்கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கடி தர முயன்றனர். அவற்றை பொருட்படுத்தாத அதிகாரிகள் நியமன நடவடிக்கைகளை தொடர்ந்தனர்.
நேர்முகத்தேர்வில் பங்கேற்று பணி நியமன உத்தரவு கிடைக்காதவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.
அவர்களிடமிருந்து மனுக்களை பெற்று பரிசீலிக்க மாவட்ட ஆட்சியர்  நாகராஜன் உத்தரவிட்டார்.
கிராம ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை தலைமையிலான குழுவினர் மனுக்களை பெற்றனர்.



அதிகாரிகளுக்கு அதிமுகவினர்  அளித்த அழுத்தத்தால், நேர்முகத்தேர்வில் பங்கேற்ற தகுதியானவர்கள் தங்களுக்கு எங்கு பணி கிடைக்க போகிறது என நொந்து அமைதியாகி விட்டனர்.

 ஆனால் இரு ஆண்டுகள் கழிந்த நிலையில் பணி நியமன உத்தரவு வீடு தேடி வந்ததும் சிலர் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

38 வது நாளிலேயே  மாவட்ட ஆட்சியர் மாற்றம்:

இதனிடையே நேற்று காலை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை மாற்றி தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குனராக நியமித்து அரசு உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக டி.ஆர்.ஒ., (பொறுப்பு) சாந்தகுமாரை  மாவட்ட ஆட்சியர் பொறுப்பை கவனிக்கவும் உத்தரவிட்டது.
மதுரை லோக்சபா தொகுதி ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் நுழைந்ததால், மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜனை மாற்றி நாகராஜனை தேர்தல் ஆணைய ஆணைபடி அரசு நியமித்தது. அவர் ஏப். 28 ல் பொறுப்பு ஏற்றார்.

ஓட்டு எண்ணிக்கையில் எந்த சர்ச்சையும் எழாதவாறு பார்த்து கொண்டார். 

வழக்கமாக பொறுப்பேற்கும் அதிகாரிகள் மரியாதை நியமித்தமாக அமைச்சர்களை சந்திப்பர். 
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தாலும் கூட, நாகராஜன் செல்லூர் ராஜு,தயகுமார்,ராஜன் செல்லப்பா போன்ற ஆளுங்கட்சியினரை சந்திக்கவில்லை. 
அவர்களின் சிபாரிசுகளையும் பொருட்படுத்தவில்லை.
 இந்நிலையில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் ஆளுங்கட்சியினர் பட்டியல்களை புறக்கணித்ததால் உடனடியாக மாற்றப்பட்டார். 

தற்போது மக்களால் அடிமைகள் ஆட்சி எனப்படும் எடப்பாடி பழனிசசாமி தலைமையிலான ஆட்சிக்கு சாஹு போனற ஆமாம் சாமி அதிகாரிகள்தான் தேவை.

கொஞ்சம் போல் நேர்மை,கடமை இருப்பவர்கள் ஒப்புக்கு சப்பாணி பதவிகளில்தான் கலந்தள்ளமுடியும் என்பதற்கு நாகராஜன்களே ஆதாரம்.

சத்துணவு நியமனத்திற்கு தடை
சத்துணவு மையங்களிலும் காலியான 800 பணியிடங்களை நிரப்ப 2016 ல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணியிடங்களுக்கும் 1600 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு 2017 மே மாதம் நேர்முகத்தேர்வு நடந்தது. இப்பணியிடங்களுக்கும் ஆளுங்கட்சியினர் தனித்தனி பட்டியல் வழங்கியதால் நியமனங்கள் கிடப்பில் போடப்பட்டன. இவற்றிக்கும் தகுதியானர்களைமாவட்ட ஆட்சியர் நாகராஜன் நியமனம் செய்ய கூடும் எனக் கருதி ஆளுங்கட்சியினர் அரசை நிர்ப்பந்தித்தனர். 
அதையடுத்து சத்துணவு மைய பணிநியமனங்களுக்கு உயர் அதிகாரிகள் வாய்மொழி தடை பிறப்பித்தனர். 
இதனால் தகுதியானவர்களை நியமிப்பது நின்று போனது. 
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மாமியார் மெச்சிய மருமகன்.


ஆந்திர மாநிலத்தில் பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

கடும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக விஜயின் மாமியார் சில நாட்களாகவே தவித்து வந்துள்ளார்.

இதைக் கவனித்த விஜய், அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் மாமியாரின் குடிசை வீட்டில் ஏ.சி மாட்டிக் கொடுத்துள்ளார்.

 குடிசை வீட்டில் திடீரென ஏ.சி பொருத்தப்பட்டதைக் கண்டு அப்பகுதியினர் ஆச்சரியமாகப் பேசி வருகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?