பாஜகவால் உயிருக்கு ஆபத்து?

காவிரி ஆணையமா?கர்நாடகாவின் கைத்தடியா?


ச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைக்கூடப் பின்பற்ற மறுப்பதன் மூலம் கர்நாடகாவிற்குச் சாதகமாகச் செயல்படுகிறது, காவிரி ஆணையம்.
“காவிரியில் தமிழகத்திற்குரிய ஜூன் மாத ஒதுக்கீடான 9.19 டி.எம்.சி. நீரைக் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும்” என மே மாத இறுதியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், ஜூன் மாதம் தொடங்கிப் பத்து நாட்கள் கடந்த பிறகும் ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூடக் கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு வந்துசேரவில்லை. இதுவரை வந்த நீரின் அளவு 0.76 டி.எம்.சி.தான் எனப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 வந்து சேர்ந்த நீரின் அளவைப் பார்த்தால், அது கர்நாடக அணைகளில் இருந்து கசிந்து வெளியேறிய நீராகத்தான் இருக்குமேயொழிய, திறந்துவிடப்பட்ட நீராக இருக்க வாய்ப்பேயில்லை.



காவிரி ஆணையம்
குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்.
காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள், தீர்ப்புகளைக்கூடக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப் போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, ஒரு பல்லில்லாத ஆணையத்தின் உத்தரவுக்கு என்ன மதிப்பைத் தந்துவிடப் போகிறது?
 காவிரி ஆணையத்தின் கூட்டம் முடிந்த மறுநிமிடமே, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.சிவக்குமார், ஆணையத்தின் முடிவு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என அறிவித்தார்.
இதன் பொருள், தண்ணீரைத் திறந்துவிட முடியாது என்பது தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் பொறுப்பும் கடமையும் காவிரி ஆணையத்திற்கு மட்டுமே உண்டு.  எனினும், இவ்வாணையம் காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தோடு அமைக்கப்படவில்லை.
மேலும், இவ்வாணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் முடிந்துவிட்ட பிறகும்கூட, ஆணையத்திற்கான முழுநேரத் தலைவரை மோடி அரசு நியமிக்கவில்லை.

 காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமைக்கப்படவில்லை. இவற்றைச் செய்து முடிப்பதற்கான அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை.
காவிரி ஆணையம் தப்பித்தவறிக்கூடத் தமிழகத்திற்குச் சாதகமாக நடந்துவிடக் கூடாது என்பதுதான் இந்த இழுத்தடிப்பின் பின்னுள்ள உள்நோக்கம். காவிரி ஆணையமும் மோடி அரசின் இந்த உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில்தான் செயல்பட்டு வருகிறது.

காவிரி ஆணையம் சூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடிய பத்து நாட்களுக்கு ஒருமுறை கூடி, கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்காணித்து, அதற்கேற்ப உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், ஆணையமோ கடந்த ஆண்டில் ஜூலையில் ஒருமுறை கூடியது. அதன் பின்னர் டிசம்பரில்தான் மற்றொருமுறை கூடியது.
தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் குறுவை சாகுபடிக்காக ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் எனக் கோரிய பிறகுதான் கடந்த மே மாத இறுதியில் ஆணையம் கூடியிருக்கிறது.



காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளில் காணப்படும் நீர்வரத்து எவ்வளவு, எவ்வளவு நீரை, எதற்காக கர்நாடக அரசு வெளியேற்றுகிறது, அணையின் நீர் இருப்பு எவ்வளவு என்பதையெல்லாம் ஆணையம் மாதாமாதம் கண்காணித்துப் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், இந்த விதிமுறையை ஆணையம் நடைமுறைப்படுத்துவதேயில்லை.

குறிப்பாக, கர்நாடக அரசு கோடை கால சாகுபடிக்குக் காவிரியிலிருந்து எவ்வளவு நீரை எடுத்துப் பயன்படுத்துகிறது என்பதை ஆணையம் கண்காணிப்பதேயில்லை.
மேலும், அம்மாநில அரசு காவிரி நீரைச் சட்டவிரோதமான முறையில் ஏரிகளுக்குக் கடத்திக்கொண்டு போய் பதுக்கி வைப்பதையும் ஆணையம் கண்டுகொள்வதேயில்லை.

கடந்த ஐந்து மாதங்களில் காவிரி ஆணையம் ஒருமுறைகூடக் கூடவில்லை.
கடந்த அக்டோபர் 2018 தொடங்கி மே 2019 முடியவுள்ள எட்டு மாதங்களில் கர்நாடகம் தர வேண்டிய 51.61 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தருவது குறித்து ஆணையம் அக்கறை கொள்ளவில்லை. பா.ஜ.க.-வின் பினாமியான எடப்பாடி அரசும் அந்நிலுவை நீர் குறித்து வாய் திறக்கவில்லை.

கடந்த மே மாத இறுதியில் நடந்த ஆணையத்தின் கூட்டத்தில் இந்த நிலுவை நீர் பற்றி விவாதிக்க முன்வராத ஆணையம், மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிப்பதை நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக முன்வைக்க முயன்று, பின்னர் தமிழக அரசின் எதிர்ப்பின் காரணமாகப் பின்வாங்கிக் கொண்டது.

இப்படி மைய அரசும் காவிரி ஆணையமும் கர்நாடகாவிற்குச் சாதகமாகவே நடந்து வருவதால்தான், தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய பங்கைத் திறந்துவிடும் அளவிற்குத் தனது அணைகளில் தண்ணீர் இல்லை” எனத் துணிந்து சொல்கிறது, கர்நாடக அரசு.
வறட்சி காலத்திலும்கூட, கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை அதற்கேற்ற விதத்தில் (distress formula) காவிரிப் பாசன மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், கர்நாடகாவோ காவிரி ஆற்றைத் தனக்கு மட்டுமே பாத்தியப்பட்ட சொத்தாகவும், அதில் தமிழகத்திற்கு எள்ளளவும் உரிமை கிடையாது என்றும் திமிர்த்தனமாகவே நடந்து வருகிறது.

கர்நாடக அரசு கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்திற்குக் காவிரியில் திறந்துவிட்டுள்ள நீரின் அளவையும், அந்நீர் திறந்துவிடப்பட்ட காலமுறையையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தன்னால் தேக்க முடியாத உபரி நீரைத் திறந்துவிட்டிருக்கும் உண்மையையும், காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுத்து, தமிழகத்தை உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக மாற்றியிருக்கும் அவலத்தையும் யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.



காவிரிப் பிரச்சினை
குறுவை சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக்கோரி கல்லணையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயிகள்.
உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்குப் பாதகமான தீர்ப்பை அளிக்கிறது. மைய அரசோ ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைக்கிறது. கர்நாடகமோ எதற்கும் கட்டுப்படாமல் அடாவடித்தனமாகச் செயல்படுகிறது.
இந்த ஆட்டத்தைத் தமிழகம் இன்னும் எத்துணை நாட்களுக்குச் சகித்துப் போக முடியும்?


தமிழகம் குறுவை சாகுபடியை முற்றிலுமாகக் கைவிட்டுவிட வேண்டும் என்பதுதான் கர்நாடகாவின் இறுதி நோக்கம்.
ஏனென்றால் குறுவை சாகுபடி நடக்கும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் முடியவுள்ள மாதங்களில்தான் கர்நாடகம் தனது அணைகளிலிருந்து 143 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
“தனது அணைகளில் போதிய அளவு நீரில்லை” என்ற காரணத்தைக் கூறியே, கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது நோக்கத்தை வெற்றிகரமாகத் தமிழகத்தின் மீது திணித்துவிட்டது, கர்நாடகா.

இந்த ஆண்டாவது குறுவை பயிரிடுவதற்குரிய நீரைக் கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தருமாறு டெல்டா விவசாயிகள் கோரிவரும்போது, அதனை உத்தரவாதப்படுத்தாத மைய அரசு, கிருஷ்ணா நதி நீர் இணைப்புப் பற்றி வாய்ப்பந்தல் போடுகிறது.
தமிழகம் தனக்குரிய காவிரி நீரைக் கேட்டால், மோடி அரசோ கானல் நீரைக் காட்டும் மோசடியில் இறங்குகிறது. இந்த நதி நீர் இணைப்பு என்பது காவிரியில் தமிழகத்திற்குரிய வரலாற்றுரீதியான, நியாயமான, சட்டரீதியான பங்கை மறுக்கும் நயவஞ்சகமாகும்.


உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிக் கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடாவிட்டால், அது குறுவை சாகுபடியில் ஈடுபடும் டெல்டா மாவட்ட விவசாயிகளை மட்டும் பாதிக்கப் போவதில்லை.
குடிநீருக்குக் காவிரியை நம்பியிருக்கும் தமிழகத்தின் 24 மாவட்ட மக்களையும் நா வறண்டு சாகச் செய்யும்.


காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கை கர்நாடகம் திறந்துவிடுவதை உத்தரவாதப்படுத்த மறுக்கும் மைய அரசுதான், டெல்டா மாவட்டங்களின் நிலத்திலும், கடலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அடுத்தடுத்துத் திணிக்கிறது. 

தமிழக மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற மறுக்கும் மைய அரசுதான் தமிழக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்து எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறது, மின்கோபுரங்களை அமைக்கிறது.
அதற்காகவே காவிரியில் தண்ணீர் வந்து விடக்கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக செயல்படுகிறது.

இவை ஒவ்வொன்றும் தனித்தனியான பிரச்சினைகள் அல்ல.
தனித்தனியான போராட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த முறையில் தமிழகம் தழுவிப் போராடுவது மூலம்தான் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசைப் பணிய வைக்க முடியும்.
ரஹீம்


----------------------------------------------------------------------------------------------------------------------------------
 லவாசா உயிருக்கு பாஜகவால் ஆபத்து?
இந்திய தேர்தல் ஆணையமானது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, அப்பட்டமாக பாஜக ஆதரவு நிலையெடுத்தது. 
எதிர்க்கட்சிகள் இதுபற்றி வெளிப் படையாகவே குற்றச்சாட்டுக்களை வைத்தும் நிலைபாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.
இந்நிலையில்தான், மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா என்பவரே, தேர்தல் ஆணையம் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரதமரின் பிரச்சாரம் தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்ற கருத்தை, சக அதிகாரிகளான சுனில்அரோரா, சுஷில் சந்திரா ஆகியோர்கவனத்திலேயே கொள்ள மறுப்பதாக குற்றம் சாட்டிய அவர், தேர்தல் முடியும் வரை, ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும்அறிவித்தார்.பாஜகவால், தேர்தல் ஆணையர்களுக்கு உள்ளேயே மோதல் ஏற்பட்டது, மக்களவைத் தேர்தலின் போது விவாதத்தையும் கிளப்பியது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராகத் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா எழுதிய குறிப்புகள் என்ன?
என்று கேட்டு,அண்மையில், புனேவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் விகார் துர்வே தலைமை தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.

பிரதமரின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையர் லவாசா தெரிவித்த கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.
 
குறிப்பாக, பிரதமர் மோடியின் 2019 ஏப்ரல் 1 வார்தா உரை, ஏப்ரல் 9 லாத்தூர் உரை, ஏப்ரல் 21-ஆம் தேதி பதன், பர்மேர் ஆகிய பகுதிகளில் ஆற்றிய உரை, ஏப்ரல் 25 அன்று வாரணாசியில் ஆற்றிய உரை ஆகியவற்றின் மீது, அசோக்லவாசா, தெரிவித்த கருத்து என்ன?
என்று விகார் கேட்டிருந்தார்.

மேலும் லவாசாவின் குற்றச் சாட்டுக்கள் அடிப்படையில், பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
 என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குத்தான் தேர்தல் ஆணையம் தற்போது ‘பதில்’ என்ற பயமுறுத்தல் ஒன்றை செய்துள்ளது.
“இதுபோன்ற தகவலை வெளியிடுவது என்பது ஒரு சிலரின் உயிருக்கு ஆபத்தாகவோ, அல்லது அவர்கள் தாக்கப்படுவதற்குக் காரணமாகவோ அமையலாம்” என்று விகாருக்கு அளித்த பதிலில் ஆணையம்தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒருவரின் உயிருக்கு ஆபத்தாக அமையும் தகவல்களைத் தரவேண்டியதில்லை என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், அசோக் லவாசா, மோடி மீது வைத்த புகார்கள் குறித்து தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்தபதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது.
 தேர்தல் ஆணையர் ஒருவர் கூறிய புகாரை வெளியிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால், பிரதமர் மோடி மற்றும்
பாஜகவால் அசோக் லவாசாவுக்கு ஆபத்து ஏற்படும் என்று தேர்தல் ஆணையமே கருதுகிறதா? என்று சமூக ஆர்வலர்கள் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 நம்பிக்கைத்தன்மை இழந்த...

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
நீண்ட நெடிய தேர்தல் காலம் மே 19 இல் முடிவிற்கு வந்த பின், தேர்தல் முடிவிற்காக தேசம் மூச்சடக்கி காத்திருந்தது.
 அந்த நாள் 23 மே. இருந்தபோதிலும், தேர்தலிற்கு பின்னான இடைப்பட்ட காலம் அமைதியா னதாக இல்லை.
 முன்னெப்போதுமில்லாத கசப்புணர்வும், பிரிவுத்தன்மையும் இத்தேர்தலின் அடையாளங்களாக இருந்தன. அவை தேர்தல் கணிப்புகளில் வெளிப்பட்டு, பங்குச் சந்தையிலும் ஏற்ற இறக்கங்களை உருவாக்கி, தொலைக்காட்சி நிலைய விவாதங்களிலும் சூட்டை கிளப்பின.

பிரச்சாரத்தின் கடுமையால் இது வியப்பளிக்க வில்லை.
பெரும்பாலான தேர்தல் கணிப்புகள் பாஜக விற்கு சாதகமாக இருந்ததால், விவாதங்கள், முந்தைய கருத்துக் கணிப்புகள் எப்படி பிழையாயின என்பதை சுற்றியே இருந்தன.
ஒப்புகை சீட்டு (விவிபேட்) இயந்திரத்துடன் இணைந்து செயல்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தே மிக முக்கிய விவாதங்கள் இருந்தன.
எதிர்க்கட்சிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தொடர்ந்து நடந்த போராட்டத்தின் விளைவாகக் கூட இந்த விவாதங்கள் இருந்திருக்கலாம். வாக்குச் சீட்டு முறைக்கே மாறிட வேண்டுமென சில  எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் கோரின.
மின்னணு வாக்குப் பதிவுடன் விவிபேட் எண்ணிக்கை சரிபார்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவைகளில் பல வந்தன.
மின்னணு வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மைக்கு தேர்தல் ஆணையத்தின் உறுதியில் திருப்தியுறாத 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடின.

நீதிமன்றம் சொல்லாததும் - தேர்தல் ஆணைய மவுனமும்
மின்னணு வாக்குப் பதிவுடன் விவிபேட் எண்ணிக்கை சரிபார்க்கப்படுதல் என்கிற முன்மொழிவு,  ஒப்பு நோக்கில் அதிக நம்பத்தன்மை தந்து, பிரச்சனையின் தீர்விற்கான வழியையும் தரும் என்பதால்,இரு சுற்றில் பரிசீலித்த உச்சநீதிமன்றம் இதனை ஏற்றுக் கொண்டது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், ஐந்து வாக்குச் சாவடிகளில் இவ்வாறு சரிபார்க்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.ஆனால் அந்த ஐந்து வாக்குசாவடிகளின் தேர்வு எவ்வாறு செயல்படும் என்பதை நீதிமன்றம் சொல்லாமல் விட்டு விட்டது.

 அதில் ஒரு தெளிவின்மையால், வாக்கு எண்ணிக்கை துவக்கத்திலேயே இந்த மின்னணு வாக்குப் பதிவுடன் விவிபேட் எண்ணிக்கை சரிபார்க்கப்படுதலை ஒருங்கி ணைந்த எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் கோரி விவாதித்தன.இந்த கோரிக்கை பொருள் பொதிந்த ஒன்று.
ஏதாவதொன்றில் இவை இரண்டின் எண்ணிக்கையும் ஒத்ததாக இல்லையெனில், முழுவதுமாக அவை சரி பார்க்கப்பட்டாக வேண்டும்.ஆனால் தேர்தல் ஆணையம் இக்கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து விட்டது. இவ்வாறான சரிபார்ப்பு பற்றி இன்று வரை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிட வில்லை.

பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் தோற்றுவாய்
1990 இல் பொதுத்துறை நிறுவனங்களான எலக்ட்ரா னிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (ECIL), பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL) ஆகியவை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை உருவாக்கி பரிசோதித்து பார்த்தன.
1998-2001 இல் இந்த இயந்திரங்கள் அறி முகப்படுத்தப்பட்டன.
 2004 இல் இருந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்து பொது மற்றும் சட்டமன்ற  தேர்தல்களில் பயன் படுத்தப்படுகின்றன.
இருந்தபோதிலும் இந்த இயந்திரங்களின் செயல்பாட்டின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையே பல சுற்று கூட்டங்கள் நடந்துள்ளன.
 அவை தொழில்நுட்ப செய்முறை விளக்கங்களுடன் கூடியவை. அப்பொழுதெல்லாம் தேர்தல் ஆணையம், அதிலுள்ள சில்லுகளும் (chips), நுண் செயலிகளும் (micro controllers) மோசடியாக ஊடுருவி திருத்தம் செய்ய முடியா தவை எனவும் வடிவமைப்பு, உற்பத்தி, வாக்குச்சாவடி வாரி யான, தொகுதிவாரியான  நிறுவல் ஆகியவை, அவை சூழ்ச்சி யாக கையாளுவதற்கு அப்பாற்பட்டது என உறுதி செய்வ தாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

மற்ற நாடுகளைப்போலன்றி, இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இணைய வழி அணுகலுக்கு அப்பாற்பட்டது எனவும், மைக்ரோ கண்ட்ரோலர் வடிவ மைப்பு இதற்கென்றானது எனவும், தனித்த அடையாளம் கொண்டதெனவும், மீள் நிரலாக்க மென்பொருள் சூழல் ஏதுமற்றதெனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.
ஆனால், தாங்கள் தேர்வு செய்ததுதான் பதிவாகி உள்ளதா என்பதை வாக்காளர்களே பார்க்க முடியாமைதான் விவிபேட் இயந்திரம் 2014 இல் வருவதற்கு காரணமானது.
இன்று அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரம் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இதனால் தாங்கள் தேர்வு செய்ததுதான் பதிவாகி உள்ளதா என்பதை வாக்காளர்களே பார்க்க முடிந்தாலும், இன்னும் கேள்விகள் அப்படியே உள்ளன. காரணம் மொத்த வாக்களிப்பிற்கும் இரு இயந்திரங்களின் ஒத்திசைவினை சரி பார்ப்பதற்குமான விகிதம் என்பது மலைக்கும் மடுவிற்குமானது.
இந்த பின்ணணியில்தான், எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் நிராகரித்தது நம்பிக்கையின்மைக்கு வலு சேர்க்கிறது.
 அதிகரிக்கும் சந்தேகம்
 இவ்வாறான சந்தேகம் சில வருடங்களாகவே எழுப்பப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, பாஜக வின் உயர் மட்ட தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானி அவர்களே மின்னணு வாக்கு பதிவு இயந்தி ரங்கள் மீதான நம்பகத்தன்மையின் மீது கடுமையான ஐயப் பாட்டினை உரத்த குரலில் எழுப்பினார்.
அவரே வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார். இதன் மீதான இரு பக்கவாதத்தின் அடிப்படை இவைதான். ஒரு பக்கம் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் செலவு குறைவு; மறு பக்கம் வெளிப் படைத் தன்மை, சரி பார்ப்பு, ரகசியம் இன்மை.

வாக்களிப்பது, பதிவாவது, அவற்றை எண்ணுவது ஆகிய வாக்களிக்கும் செயல்முறையில் எந்த முரண்பாடும் இருக்கக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்துவது அவ்வளவு முக்கியமானதா?
 மக்களின் விருப்பத்தின் பேரில் அமைந்த அரசிற்கு சட்டப்பூர்வ தன்மையை ஜனநாயகம் வழங்குகிறது. மக்களின் விருப்பம் என்பது ரகசிய வாக்களிப்பு முறையில் வெளிப்படுத்தப்படுகிறது.

வாக்குகள் பதிவாவதும், எண்ணப்படுவதும் முறையாக நடந்தால் மட்டும் போதாது; அவ்வாறு பதிவாவது மற்றும் எண்ணப்படும் செயல்முறை பெருமளவிலான பொதுமக்களால் அணுகப்படக்கூடியதாகவும், சரிபார்க்க கூடியததாகவும் இருக்க வேண்டும். இது ஒரு வாக்கு கூட வேறுபடுவதை ஏற்க முடியாததாக்குகிறது.
இது ஒரு கற்பனாவாத கோரிக்கை அல்ல, உலகெங்கி லும் உள்ள ஜனநாயக நாடுகளால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த முக்கியமான பிரச்சனையின் முக்கியத்துவம்தான், மிகுந்த நேர்மையான 66 முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரச்சனை மீதான தேர்தல் ஆணையத்தின் கேள்விக் குள்ளாகும் பதிலை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான அவர்களின் எதிர்வினையை பேச வைத்துள்ளது.

மூன்று முக்கிய கேள்விகள்:
 1
 ஈ சி ஐ எல் மற்றும் பி இ எல் தயாரித்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கையும், தேர்தல் ஆணையம் பெற்றுக்கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கையும் ஒன்றாக இல்லை என்பது இக்கேள்விகளில் முதலாவதாகும்.
இந்த எண்ணிக்கை வேறுபாடு தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனு செய்து பெற்ற தகவலாகும். ஆர்டிஐ ஆவணங்கள் கடுமையான நிதி முறைகேடுகளைத் தவிர, கொள்முதல், வைத்திருத்தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வாங்கிய எண்ணிக்கை, வைத்திருந்த எண்ணிக்கை,  பயன்படுத்துதல் ஆகியவற்றில் வெளிப்படையான வேறுபாடுகளை வெளிப்படுத்தின.
எடுத்துக்காட்டாக, 1989-90 மற்றும் 2014-15- க்கு இடையில் 10,05,662 இயந்திரங்களைப் பி இ எல் இடமிருந்து பெற்றதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.
 1989-90 மற்றும் 2016-17 க்கு இடையில் ஈ சி ஐ எல் இலிருந்து 10,46,644 இயந்திரங்களைப் பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது.
மறுபுறம், 1989-90 ஆண்டு களுக்கு இடையில் 19,69,932 இயந்திரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியதாக பி.இ.எல் பதிவு செய்தது. இதேபோல், ஈ.சி.ஐ.எல் 19,44,596 இயந்திரங்களை வழங்கியதாகக் கூறுகிறது.

 இரண்டு உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட புள்ளி விவரங்க ளுக்கும் தேர்தல் ஆணையத்திடமிருந்து  பெறப்பட்ட புள்ளி விவரங்களுக்கும் இடையிலான வித்தியாசம் வெளிப் படையானது.
அதிகப்படியான இயந்திரங்கள் எங்கே?
 வினாக்களுக்கு பதில் கிடைக்காது. தேர்தலின் போது சமூக மற்றும் பிரதான  ஊடகங்களில் பரவலாக செய்தி ஒன்று வலம் வந்தது.
 வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள்  மற்றும் வி.வி.பி.ஏ.டி கொண்ட வாகனங்கள் விரைந்து சென்றதுதான் அந்த செய்தி.அத்துடன் இந்த கேள்வியை இணைத்துப்பாருங்கள்.
2

வாக்களிக்கப்பட்ட வாக்குகளுக்கும், ‘குயின்ட்’ மற்றும் ‘நியூஸ்க்ளிக்’ ஆகிய இரண்டு வலை இணையதளங்களால் கணக்கிடப்பட்ட வாக்குகளுக்கும் இடையிலான வித்தியாசம் பற்றியது.
தேர்தல் ஆணையவலைத்தளத்தால் வெளியிடப்பட்ட தரவை ஒப்பிட்டு பார்த்தால்,அவர்களின் கணக்கீடுகள் கவலை அளிக்கின்றன. கேள்விகளில் சிக்கிய தேர்தல் ஆணையம் ஒரு செய்திக்குறிப்பு மூலம் ஒரு மறுப்பு வெளியிட்டது. நாடு முழுவதும் தனிப்பட்ட தலைமை அதிகாரி களால் சமர்ப்பிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் உண்மை யான ஒட்டுமொத்த புள்ளிவிவரங்கள் அல்ல.
முன்னதாக வெளியிடப்பட்ட வாக்களிப்பு புள்ளிவிவரங்கள் (மற்றும் சில நிகழ்வுகளில், அகற்றப்பட்டவை) ஒரு தற்காலிக இயல்பு டையவை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.
எவ்வாறாயினும், இந்த சட்டரீதியான மறுப்பு ஏன் ஆரம்பத்தில் வெளியிடப்படவில்லை என்பது கேள்வி. இந்த ‘மறைமுகவாக்குகள்’ குறித்த சர்ச்சை; வாக்குப்பதிவு மற்றும் எண்ணப்பட்ட வாக்குபுள்ளிவிவரங்களுக்கிடையிலான முரண்பாடு, தேர்தல் ஆணையமே ஏற்படுத்திக் கொண்ட சிக்கலாகும். சிக்கல்களை தெளிவுபடுத்துவதில் தேர்தல் ஆணையத்தின் தோல்வி நிச்சயமாக மக்கள் மனதில் அமைதியின்மையை அதிகப்படுத்தியுள்ளது.
3
நடந்து முடிந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட, பி இ எல்/ ஈ சி ஐ எல் தயாரித்தளித்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்  மற்றும் வி விபேட் ஆகியவற்றில் பதிந்துள்ள கம்ப்யூட்டர் சிப் அல்லது மைக்ரோ கண்ட்ரோலர் பற்றியது கடைசியான மிக முக்கிய பிரச்சனை.
பல கோடி டாலர் மதிப்புள்ள அமெரிக்க கார்ப்பரேட் கம்பெனியான என் எக்ஸ் பி தயாரித்தளித்த சிப்ஸ் தான் பயன்படுத்தப்பட்டது என்பது பி இ எல் அறிவித்தது.
ஆனால் ஈ சி ஐ எல் அதன் தயா ரிப்பிற்கான மைக்ரோ கண்ட்ரோலர் தயாரித்தளித்தது யார் என்பதை வெளியிட மறுத்து விட்டது.

மூன்று வித மெமரி...
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ கண்ட்ரோலர்கள் ஒரு முறை மட்டுமே புரோக்கிராம் செய்யக்கூடியவை என்பதை எப்போதும் இரு நிறுவனங்க ளும் தொடர்ந்து சொல்லி வந்தன.

இருந்த போதிலும் அவற்றை தயாரித்தளித்த என் எக்ஸ் பி கம்பெனியின் வெப்சைட் அது தயாரிக்கும் மைக்ரோ கண்ட்ரோலர்களுக்கு மூன்று வித மெமரி உண்டு என்றும் அவை எஸ் ஆர் ஏ எம், எஃப் எல் ஏ எஸ் ஹெச் மற்றும் இ இ பி ஆர் ஓ எம் என்றும் குறிப்பிடுகிறது.
எஃப் எல் ஏ எஸ் ஹெச் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சிப்பினை ஒரு முறை மட்டுமே புரோகிராம் செய்யக்கூடியவை என கூற முடியாதென்கின்றனர். இதனில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திட அதில் பயன்படுத்தப்பட்ட மூல குறியீட்டின் (source code)  விரிவான தகவலை பொது வெளியில் வைக்கலாமா என தகுதியான அதிகாரியிடம் ஆலோசனை பெற மத்திய தகவல் ஆணையம் செய்த செப்டம்பர் 2018 பரிந்துரை மீது இன்று வரை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவுமில்லை. எதுவும் நடக்கவுமில்லை.
தகவல் அறியும் உரிமைபடி கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு விவாதங்கள் தொடர்ந்து நடக்கலாம். இதன் மீதான நம்பிக்கை என்பது முக்கியமாக பதிவு செய்ததை நிச்சயப்படுத்திக் கொள்வதில்தான் உள்ளது.

முடிவுரைக்கு பதிலாக
மக்களின் நம்பிக்கை பெற மறுக்க முடியாத வண்ணம் பதில் கண்டாக வேண்டும்.
ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய அளவில் கேள்விக்குள்ளானதே தேர்தல் ஆணயத்தின் செயல்பாடே. நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதைகள்  324 ஆவது பிரிவின் கீழ் தேர்தல் ஆணை யத்திற்கு பெரும் அதிகாரங்களை வழங்கி அதன் மூலம், போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்கிடவும் நியாயமான மற்றும் சுதந்திர மான தேர்தலை உத்தரவாதப்படுத்தவும் ஒரு வலுவான மற்றும் தன்னதிகாரமான பங்கை தேர்தல் ஆணை யத்திற்கு வழங்கினர்.

இந்த விதியின் கீழ் இயற்றப்பட்ட பல சீர்திருத்தங்கள் மற்றும் சட்டங்கள் இந்த தன்னதிகாரமான தன்மையை உறுதிப்படுத்துவதற்காக  மாறிவரும் காலங்கள் மற்றும் ஜனநாயகத் தன்மையின் வளர்ந்துவரும் தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சூழலைக்கெடுத்த மாற்றங்கள்
எவ்வாறாயினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல மாற்றங்கள் சூழலைக் கெடுத்துவிட்டன.
அவற்றில் முதலாவதும்  முக்கியமானதும்  அரசியல் கட்சிகளுக்கு யாரிடமிருந்து நிதி வந்தது என்பது வெளிப்படாமலேயும் மற்றும் வரம்பற்ற நிதியினை  பெருநிறுவனங்கள் அள்ளித்தரவுமான தேர்தல் பத்திரங்கள்.  இந்த புதிய ஏற்பாட்டில்பொதிந்துள்ள பெரு நிறுவன சலுகைசார் கூட்டாளிகளால் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வெளியாகியுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் ரூ .60,000 கோடி செலவிடப்பட்டதாக ஊடக ஆய்வு மையம் (சி.எம்.எஸ்) அறிக்கை காட்டுகிறது, அதில் பாஜக சுமார் 45 சதவீதம் செலவிட்டுள்ளது. இது ஒரு சம தள வாய்ப்பினையா காட்டுகிறது?
அதேபோல், தேர்தல் நடைபெற்றபோது மாதிரி நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம்  அமல்படுத்திய விதம் கேள்விக்குள்ளாகி உள்ளது.
 சிபிஐ (எம்) உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் அளித்த ஏராளமான மனுக்க ளுக்கு பதிலேதும் இல்லை. மாதிரி நடத்தை விதிமுறை களை மீறுவது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் குறிப்பிட்ட கட்டளைகளையே பிரதம மந்திரி மீறுவது தொடர்பானது.
 இவை வகுப்புவாத அடிப்படையிலான தேர்தல் பிரச்சாரம் மற்றும் இந்திய இராணுவ சாதனை யின் மீது உரிமையைக் கோருவது தொடர்பானது. இதனால் அவரது ஆளுமையை தேசத்தின் மற்றும் அதன் மக்களின் ‘உச்சபட்ச பாதுகாவலர்’ என்று பாஜக காட்ட இது உதவியது!

எவ்வாறாயினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல மாற்றங்கள் சூழலைக் கெடுத்துவிட்டன. அவற்றில் முதலாவதும்  முக்கியமானதும்  அரசியல் கட்சிகளுக்கு யாரிடமிருந்து நிதி வந்தது என்பது வெளிப்படாமலேயும் மற்றும் வரம்பற்ற நிதியினை  பெருநிறுவனங்கள் அள்ளித்தரவுமான தேர்தல் பத்திரங்கள்.  இந்த புதிய ஏற்பாட்டில்பொதிந்துள்ள பெரு நிறுவன சலுகைசார் கூட்டாளிகளால் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வெளியாகியுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் ரூ .60,000 கோடி செலவிடப்பட்டதாக ஊடக ஆய்வு மையம் (சி.எம்.எஸ்) அறிக்கை காட்டுகிறது, அதில் பாஜக சுமார் 45 சதவீதம் செலவிட்டுள்ளது.

இது ஒரு சம தள வாய்ப்பினையா காட்டுகிறது? அதேபோல், தேர்தல் நடைபெற்றபோது மாதிரி நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம்  அமல்படுத்திய விதம் கேள்விக்குள்ளாகி உள்ளது.
சிபிஐ (எம்) உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் அளித்த ஏராளமான மனுக்க ளுக்கு பதிலேதும் இல்லை. மாதிரி நடத்தை விதிமுறை களை மீறுவது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் குறிப்பிட்ட கட்டளைகளையே பிரதம மந்திரி மீறுவது தொடர்பானது.
இவை வகுப்புவாத அடிப்படையிலான தேர்தல் பிரச்சாரம் மற்றும் இந்திய இராணுவ சாதனை யின் மீது உரிமையைக் கோருவது தொடர்பானது.
 இதனால் அவரது ஆளுமையை தேசத்தின் மற்றும் அதன் மக்களின் ‘உச்சபட்ச பாதுகாவலர்’ என்று பாஜக காட்ட இது உதவியது!

நன்றி : பீப்பிள்ஸ் டெமாக்ரசி
தமிழில்: பாலச்சந்திரன்

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?