ஏன் இந்த திடீர் நெருக்கடி

 பிஎஸ்என்எல் ;
 மூழ்கும் கப்பல் அல்ல!
தொலைத் தொடர்பு இலாகாவுக்கு கடந்த ஜூன் 17அன்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத் தால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
 பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ள தென்றும் தேவையான நிதி உடனடியாக விடுவிக்கப்பட வில்லை என்றால் ஜூன் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்குவதற்கும், பி.எஸ்.என்.எல்.   நிறுவனத்தின் அன்றாட சேவைகளைத் தொடர்வதற்குமே கூட சிரமம் ஏற்படும் என்றும் கடிதத்தில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஊழியர்களையும் பொது மக்களையும், தவறாக வழிகாட்டும் வகையில் பல ஊடகச் செய்திகளை சில சுயநல சக்திகள் வெளியிட்டு வரு கின்றன.

 பி.எஸ்.என்.எல்.  வாடிக்கையாளர்களை தனியார் நிறுவனங்களுக்கு மாறி விடுமாறு ஆலோசனை கூறும் அளவிற்கு அவர்கள் விஷமச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

பிரச்சனை என்ன?
தற்போது பி.எஸ்.என்.எல். மட்டுமல்ல; அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நடைமுறைப் படுத்தி வரும் கழுத்தறுப்பு விலைக் குறைப்பின் காரணமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் குரல்வளை யையும் நிதி நெருக்கடி என்பது நெரித்துக் கொண்டி ருக்கிறது.
செப்டம்பர் 2016- இல் சேவைகளைத் துவக்கிய காலம் முதல் அடக்க விலைக்கும் குறைவாகவே ஜியோ நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பொருளாதார பலத்தை வைத்துக் கொண்டு, போட்டியாளர்களை எல்லாம் வெளியேற்றுவ தற்காக இத்தகைய விலை குறைப்பை செய்து வருகிறது.
அரசாங்கமும், டிராய் அமைப்பும் ஜியோ நிறுவனத்துக்கு நேரடி மற்றும் மறைமுக உதவிகளைச் செய்து வரு கின்றன. அதன் விளைவாக, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருமானமும் தலை கீழாக அதல பாதாளத்துக்குச் சரிந்துள்ளன.
 ரிலையன்ஸ் ஜியோ தொடுத்த கொடூரமான கட்டண யுத்தம் காரணமாக, ஏற்கனவே ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோ காம், டெலினார் உள்ளிட்ட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

பிஎஸ்என்எல் நிறுவனம் திறனற்றதா?
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் செயல் திறன் குறித்துப் பேசுவோர், ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது. இன்றிருப்ப தைக் காட்டிலும் ஒரு லட்சம் ஊழியர்கள் கூடுதலாக இருந்த காலத்தில், இதே பி.எஸ்.என்.எல். நிறுவனம், 2004-05 ஆம் ஆண்டில் நிகர லாபமாக 10,000 கோடி ரூபாயை ஈட்டியது.

ஆனால் அதன் பின்னர், 7 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு, தனது கட்டமைப்புகளை விரிவாக்குவதற்குத் தேவையான புதிய கருவிகள் வாங்குவதற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதற்காக வெளியிட்டு, இறுதி செய்யப்பட விருந்த டெண்டர்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்யப்பட்டன.
இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்தது.
மேலே சொல்லப்பட்ட நெருக்குதலுக்குப் பிறகும் கூட, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் வரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

2014-15 நிதியாண்டு முதற்கொண்டு, பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் செயல்பாட்டு லாபத்தைத் தொடர்ந்து ஈட்டி வந்தது. 2015- ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின் போது கூட, பிரதமர் நரேந்திர மோடி நிறுவனம் செயல்பாட்டு லாபத்தை ஈட்டத் துவங்கியுள்ளதைப் பெருமையோடு குறிப்பிட்டார்.
 இன்றைய நிதி நெருக்கடிகளுக்கு இடையிலேயும், பி.எஸ்.என்.எல். நிறுவனம், தனது மொபைல் வாடிக்கை யாளர் தளத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
 உதாரணமாக, 2017-18- ஆம் ஆண்டில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்கள் 11.5 % அதிகரித்தனர்.

ஆனால் இதே ஆண்டில் ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள் 9.5 %, வோடஃபோன் 3.8%, ஐடியா நிறுவனம் 3.2% என்ற அளவில் மட்டுமே அதிகரித்தன.
2019 ஏப்ரல் மாதத்தில் கூட, பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2,32,487 புதிய மொபைல் வாடிக்கையாளர்களை அதிக ரித்துள்ளது. ஆனால் ஏர்டெல் 29,52,209 மொபைல் வாடிக்கையாளர்களையும் வோடஃபோன் 15,82,142 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.
நிதி நிலை குறித்துப் பேசினாலும் கூட, தனியார் நிறுவ னங்களோடு ஒப்பிடும் போது, பி.எஸ்.என்.எல். நிறுவ னத்தின் நிலை அந்த அளவு மோசமல்ல.
 இன்றைய தேதி யில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடன் 13,000 கோடி ரூபாய்கள் மட்டுமே. ஆனால் வோடஃபோன் ஐடியா நிறுவ னம் ரூ. 1,18,000 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ.1,08,000 கோடியும் கடன் வைத்துள்ளன.
 ரிலையன்ஸ் ஜியோ நிறு வனம் கூட 1,12,000 கோடி ரூபாய் அளவுக்கு மிகப் பெரிய கடன் சுமையைக் கொண்டுள்ளது.

மிகப்பெரும் சொத்து
மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி அடித்தளம் போதுமான வலிமை கொண்டதாகவே உள்ளது. 7.5 லட்சம் வழித்தட கிலோ மீட்டர் அளவு கண்ணாடி இழை வலைக் கட்டமைப்பு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் உள்ளது.
 ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் 6.25 லட்சம் கிலோ மீட்டரும், ஏர்டெல் நிறுவனத்திடம் 2.5 லட்சம் கிலோ மீட்டரும், வோடஃபோன் ஐடியா நிறுவனத்திடம் 1.6 லட்சம் கிலோ மீட்டரும் மட்டுமே உள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் நாடு முழுவதும் ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
வேறு எந்த நிறுவனத்திடமும் இவ்வளவு பெரிய சொத்துக்கள் இல்லை. மேற்சொன்ன இத்தனை வலிமைகள் இருந்தும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடுமையான பணப்புழக்க குறை பாட்டை சந்தித்து வருகிறது.

தொலைத்தொடர்புத் துறைக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி தான் இதற்கு காரணம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 100% பங்குகளும் இந்திய அரசுக்குச் சொந்தமானது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில், பி.எஸ்.என்.எல். நிறுவ னத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன தேவை களைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கி நடைபெற்று வரும் இந்த பதினெட்டரை ஆண்டுக் காலத்தில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூட நிதி உதவியாக பி.எஸ். என்.எல். நிறுவனம் அரசிடம் இருந்து பெறவில்லை என்று கூறுவது உண்மைதானே தவிர மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை அரசு மேற்கொள்ளும்போது அதற்குக் கை கொடுப்பது பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே. இந்த சமயங்களில் எல்லாம், தங்கள் பொறுப்புகளி லிருந்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தப்பி ஓடி விடுகின்றன. அது மட்டுமன்றி, பின் தங்கிய மற்றும் தொலை தூரப் பகுதிகளில் வாழும் மக்கள் மங்கள் தொலைத்தொடர்புத் தேவைகளுக்கு பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
எனவே, பி.எஸ். என்.எல். நிறுவனத்தின் நிதி ஸ்திரத் தன்மையை உறுதிப் படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. எனினும் மத்தியில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வந்துள்ளன.
 இன்றும் இதே நிலைமை தொடர்கிறது. உதாரணமாக, மொபைல் சேவை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்க ளுக்கு 1995- ஆம் ஆண்டிலேயே அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். -க்கு, 2002- ஆம் ஆண்டில்தான் மொபைல் சேவை அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 4 ஜி சேவையினை வழங்கி ஐந்தாண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை பி.எஸ்.எம்.எல் நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றையை அரசாங்கம் வழங்கவில்லை. இவ்வாறாகத்தான் அரசின் கொள்கை முடிவுகள், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளன.
 2000- ஆம் ஆண்டு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் உரு வாக்கப்பட்டபோது, அதன் நிதி ஸ்திரத் தன்மை பாது காக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை உறுதி அளித்தி ருந்தது.
ஆனால், இந்த வாக்குறுதி காகிதத்தில் மட்டுமே உள்ளது. தொலைத் தொடர்புத் துறையின் உண்மையான கட்டுப்பாட்டாளராக பி.எஸ்.என்.எல். மட்டுமே உள்ளது.

 பி.எஸ்.என்.எல். நிறுவனம் சந்தையில் இருப்பதால் மட்டுமே, தனியார் நிறுவனங்கள் கட்டணங்களை தன்னிச் சையாக உயர்த்தி வாடிக்கையாளர்களை கொள்ளை யடிக்க முடியவில்லை. பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப் பட்டால், தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தங்கு தடையின்றி சுரண்டுவதற்கான சூழ்நிலை ஏற்படும். எனவே, நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நலன்களை கருத்தில் கொண்டு, பி.எஸ்.என்.எல் எனும் மாபெரும் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
"தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்தில், மத்திய நீர் வளத்துறை கேட்ட தகவல்களை தராமல், பொதுப்பணித் துறை அலட்சியமாக இருந்த தகவல் அம்பலமாகி உள்ளது."

 தமிழகத்தில், காவிரி - வைகை - குண்டாறு; தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு உள்ளிட்ட ஆறுகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த 2012 முதல், மத்திய அரசிடம் நிதி பெறும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.


அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்.,அரசு, இத்திட்டத்திற்கு நிதி வழங்க மறுத்து விட்டது.
 இதை தொடர்ந்து, 2014ல், பா.ஜ., ஆட்சிக்கு வந்தது முதல், மீண்டும் நிதி பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 ஆறுகள் இணைப்பு திட்டத்தை, மத்திய அரசு நேரடியாக செயல்படுத்த உள்ளதாக கூறப்பட்டதால், மாநில அரசின் முயற்சி யில் பின்னடைவு ஏற்பட்டது.

இதில், தாமிரபரணி - கருமேனியாறு-நம்பியாறு திட்டபணிகள் ஏற்கனவே துவங்கியதால், கன்னடியன் கால்வாய் அமைப்ப தற்கு, பிரதமரின் திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரப்பட்டது.இந்த கால்வாய் அமைத்தால், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப் பாட்டால் தவிக்கும் சாத்தான்குளம், திசையன் விளை உள்ளிட்ட பகுதிகள் பயன் பெறும்.

இதற்கான நிதி பெறும்தொடர் முயற்சிகளை, பொதுபணித் துறை அதிகாரிகள் மேற்கொள்ளாமல், அலட்சியம் செய்துள்ளனர்.இதனால், மத்திய அரசு கொடுத்திருந்த காலக்கெடு, ஏப்., 18ல் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து விழித்துக் கொண்ட பொது பணித்துறை, மத்திய அரசிடம் நிதி வழங்க, கால நீட்டிப்பு கேட்டுள்ளது. கால நீட்டிப்பு கேட்பதற்கான உரிய விளக்கத்தை அளிக்கும் படி, மத்திய நீர்வள ஆணையம் தரப்பில், பொதுப்பணித் துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு,துறை அதிகாரிகள், உரிய விளக்கத்தை அளிக்க தவறி விட்டனர்.
இத்தகவல், தற்போது அம்பலமாகி உள்ளது. இதனால், இத்திட்டத் திற்கு, மத்திய அரசின் நிதி கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தனியார் கல்லூரிகளில் 
ஏன் இந்த திடீர் நெருக்கடி
 தமிழகத்தில் ஆசிரியர் தகுதி குறித்த யு.ஜி.சி., உத்தரவை உரிய காலத்தில் பின்பற்ற நடவடிக்கை எடுக்காத உயர் கல்வி துறையால் தனியார் கல்லுாரிகள் தற்போது கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பணிநீக்கம் செய்யப்படும் ஆசிரியர் இடத்தில் புதிய தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடைக்காததால் அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.
தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட சுயநிதி கல்லுாரிகள் உள்ளன. அரசிடமிருந்து எவ்வித நிதியுதவியும் பெறாமல் தன்னாட்சி அந்தஸ்து பெற்று செயல்படுகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பணியில் உள்ளனர். இக்கல்லுாரிகளில் பல்லாயிரக்கணக்கானமாணவர்கள் பயில்கின்றனர்.


யு.ஜி.சி., விதிப்படி பல்கலைகள் மற்றும் பல்கலைக்கு உட்பட்ட இணைவிப்பு கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் செட்/நெட் அல்லது பிஎச்.டி., தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் மதுரை காமராஜ், சென்னை மற்றும் நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைகள் மற்றும் இணைவிக்கப்பட்ட கல்லுாரிகளில் இவ்விதி பின்பற்றப்படவில்லை என நாகர்கோவிலில் உள்ள மூட்டா அமைப்பை சேர்ந்த அனந்தகிருஷ்ணன் ஜன., 2014ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தகுதியில்லாத ஆசிரியர்கள் நியமனங்கள் குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட பல்கலைகளுக்கு புகார்தாரர் அளித்தால், அதன் மூலம் பல்கலைகள் சம்மந்தப்பட்ட கல்லுாரிகளில், தகுதியில்லாத ஆசிரியர் நியமனங்கள் குறித்து மூன்று மாதங்களுக்குள் விசாரித்து யு.ஜி.சி.,க்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின் யு.ஜி.சி., சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என 11.8.2014 ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

துாங்கியதா பல்கலைகள்
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி பல்கலைகள் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதன் அறிக்கையை யு.ஜி.சி.,யிடம் அளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. உதாரணமாக, மதுரை காமராஜ் பல்கலையில் கல்யாணி, அவருக்கு பின் செல்லத்துரை என துணைவேந்தர்கள் பதவியில் இருந்த காலத்தில் இப்பிரச்னையில் எள் அளவுகூட அக்கறை காட்டவில்லை. மாறாக விதிமீறிய நியமனங்கள் தான் தொடர்ந்தன.

அதேநேரம் 2014 முதல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோதும் கூட இணைவிப்புக் கல்லுாரிகளில் ஏராளமான புதிய கோர்ஸ்கள் துவங்கப்பட்டன. இதற்கு யு.ஜி.சி., விதித்த நெட்/செட் அல்லது பிஎச்.டி., தகுதியுள்ள ஆசிரியர்கள் இருந்தால் தான் அனுமதி அளிக்க முடியும் என ஏன் பல்கலைகள் கண்டிப்பு காட்டவோ, நடவடிக்கை எடுக்கவோ செய்யவில்லை.

அப்போதெல்லாம் தனியார் கல்லுாரிகளுக்கு ஆய்வுகளுக்கு சென்ற பல்கலை அதிகாரிகள் குழு இதுகுறித்து கல்லுாரிகளை எச்சரிக்க வில்லை. மாறாக கல்லுாரி நிர்வாகங்கள் நீட்டிய பைல் களில் 'கையெழுத்து' போட்டு கோர்ஸ்களுக்கு அனுமதியை அள்ளி வழங்கிய அதிகாரிகளை என்ன செய்வது? அவர்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்படுமா? துாங்கி வழிந்த பல்கலைகளால் தான் இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் புகார்தாரர் அனந்தராமன் மீண்டும் முறையிட்டதால் தான் பிப்.,2017 ல் இதை நீதிமன்றம் அவதுாறு வழக்காக (வழக்கு எண்: 933/2017) எடுத்தது.

இதன் பின் தான் பல்கலைகள் சுறுசுறுப்பு அடைந்து சுற்றறிக்கைகள் மேல் சுற்றறிக்கைகள் அனுப்பி 'எங்கள் மீது தவறு ஏதும் இல்லை. எல்லாமே கல்லுாரிகள் மீது தான் தவறு' என ஆதாரங்களை காட்டுகின்றன.

எனவே பல்கலைகளின் இதுபோன்ற பொறுப் பற்ற செயல் பாடுகள் காரணமாக இன்று தமிழக அளவில் தனியார் கல்லுாரிகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இதற்கு அந்த  கால கட்டங்களில் பல்கலைகளில் பதவியில் இருந்த துணைவேந்தர்கள், பதிவாளர்கள் தான் பொறுப்பு. அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.



தீராத குழப்பத்திற்கு யார் காரணம்
வழக்கு தொடர்ந்த 2014ம் ஆண்டிலேயே நீதிமன்றம் உத்தரவை உயர்கல்வி கடுமையாக அமல்படுத்தி இருந்தால் தனியார் கல்லுாரிகளுக்கு தற்போது இந்த குழப்பமே ஏற்பட்டிருக்காது என்பது தெளிவு. அதேநேரம், உரிய காலத்தில் 'நெட்' (தேசிய தகுதி தேர்வு) நடத்தப்படுவது போல் தமிழகத்தில் 'செட்' (மாநில தகுதி தேர்வு) தேர்வுகள் நடத்தப்படுவது இல்லை.

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு பல்கலை பொறுப்பேற்று 'செட்' தேர்வை நடத்தும். ஆனால் இந்தாண்டு இதுவரை 'செட்' தேர்வுக்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை. யு.ஜி.சி., உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கண்டிக்கும் இந்த சூழ்நிலையில் தமிழக அரசு 'செட்' தேர்வு நடத்த இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
வழக்கம்போல் ஜூனில் இத்தேர்வு நடத்தப் பட்டு இருந்தால் பல தகுதியான ஆசிரியர்கள் கிடைத்து இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். யு.ஜி.சி., உத்தரவை அமல்படுத்த காரணம் காட்டி 'செட்' தேர்வை ஏன் நடத்தவில்லை என நீதிமன்றமாவது தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கலாம்.

யு.ஜி.சி., உத்தரவுப்படி தகுதியான ஆசிரியர்களை நியமிக்க கல்லுாரி நிர்வாகங்கள் தயாராக இருந்தாலும் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை.குறிப்பாக தமிழ், ஆங்கிலம் தவிர அறிவியல் பாடங்களுக்கு செட்/நெட் அல்லது பிஎச்.டி., முடித்த ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. பல பல்கலைகளில் தகுதியான பேராசிரியர் பலர் பிஎச்.டி., கைடு அந்தஸ்து விண்ணப்பித்து காத்துக்கிடக்கின்றனர்.
தற்போதுள்ள பணியில் உள்ள ஆசிரியர்கள் பிஎச்.டி., முடிக்க முயற்சித்தாலும் அதற்கான 'கைடுகள்' கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. உதாரணமாக ஒரு கல்லுாரியில் ஒரே நேரத்தில் 20 ஆசிரியர்கள் வரை வேலையிழக்க நேர்ந்தால் அங்கு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிலை என்னவாகும். தகுதியான ஆசிரியர்கள் தட்டுப்பாடுள்ள நேரத்தில் உடனடியாக 20 ஆசிரியர்களை கல்லுாரி நிர்வாகம் நியமிக்க முடியுமா?என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்

உடனடியாக 'செட்' தேர்வை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படும்பட்சத்தில் நீதிமன்றம் தலையிட்டு தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும். இம்மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலையில் 'செட்' நடத்தினால் கூட 50 சதவீதம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.கடந்தாண்டுடன்கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை மூன்று ஆண்டுகள் தேர்வை நடத்தி முடித்த நிலையில், அடுத்து எந்த பல்கலை செட் தேர்வு நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை இதுவரை அறிவிக்கவில்லை. இதற்கு யார் பொறுப்பேற்பது?


தனியார் கல்லுாரிகளில் உடனடியாக தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து நீதிமன்றத்தில் தெளிவாக தமிழக அரசு விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். போதிய பிஎச்.டி., கைடுகள் இல்லை. 'செட்' தேர்வு நடத்தவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் 'நெட்' தேர்வில் வெறும் 4 முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.
இதனால் உடனடியாக தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அவகாசம் கிடைத்தால் தற்போதுள்ள ஆசிரியர்கள் யு.ஜி.சி., தகுதிகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். மாணவர்கள் நலனும் காக்கப்படும். தமிழக அரசு இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த திடீர் நெருக்கடியால் ஏராளமான ஆசிரியர்கள் பணியை இழந்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்து வேலையிழந்ததால் அவர்களின் குடும்பங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.அவர்கள் கூறியதாவது: எங்களுக்கு தகுதி இல்லை என்றால் 10 ஆண்டு களுக்கும் மேலாக எங்களிடம் படித்து அதன் மூலம் பெற்ற மாணவர்களின் கல்வியை என்ன செய்வது.
செட்/நெட் அல்லது பிஎச்.டி., முடிக்காத எங்களை ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள் திருத்த பல்கலைகள் ஏன் அழைத்தன. அவதுாறு வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையிலும் நாங்கள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டோம். அந்த விடைத்தாள்கள் ஏற்கப்படுமா?பிஎச்.டி., படிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆனால் கைடுகள் கிடைக்க வில்லையே. கிடைக்கும் சில கைடுகளுக்கும் 2 லட்சம் ரூபாய் வரை 'லஞ்சம்' கொடுக்க வேண்டுமே. கைடுகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக மதுரை காமராஜ் பல்கலை உள்ளிட்ட பல இடங்களில் புகார் எழுந்தும் இதுவரை உயர்கல்வி துறை என்ன நடவடிக்கை எடுத்தது.

தமிழக அரசும் இந்தாண்டு 'செட்' தேர்வு அறிவிப்பு வெளியிடவில்லை. இது ஜூனில் நடந்தால் குறைந்தபட்சம் 60 சதவீதம் பேர் தகுதி பெற்றிருப்போம். இது யார் தவறு. இதுபோன்ற பல காரணங்கள் உயர்கல்வி, தமிழக அரசு மீது சுட்டிக்காட்டப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தகுதியை உயர்த்திக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் அதற்கான வழிமுறைகள் அமைத்து கொடுக் கப்படவில்லையே. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்தும் திடீரென வெளி யேற்றப்பட்டால் எங்கள் குடும்பம் என்னாகும் என்பதை யாராவது நினைத்து பார்த்தார்களா?

உண்மை நிலை குறித்து தமிழக அரசு விசாரித்து நீதிமன்றத்தில் எடுத்துரைத்தால் ஆயிரக்கணக்கான ஆசியர்கள் குடும்பங் களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்றனர்.

தமிழகத்தின் மூத்த கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மற்றும் உதவிபெறும் கல்லுாரிகளால் மட்டும் தேவையான தரமான உயர் கல்வியை வழங்கி விடமுடியாது. இதை உணர்ந்து தான் தனியார் சுயநிதி கல்லுாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. இதற்காக எவ்வித நிதியும் பெறுவதில்லை.

ஆனால் அரசிடமிருந்து அனைத்து சலுகை களையும் பெரும் அரசு மற்றும் உதவிபெறும் கல்லுாரிகளுக்கான விதிமுறைகளை பின்பற்ற சொல்வது எவ்வகையில் நியாயம். தமிழகத்தின் பெருமைஇந்திய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 48.6 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது தமிழகம் தான். ஆனால் இந்திய அளவிலான சேர்க்கை சதவீதம் 25.8 தான். இந்த பெருமை அதிக எண்ணிக்கையில் உள்ள சுயநிதி கல்லுாரிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து படிப்பதால் தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.


குறிப்பாக கிராமப்புறங்களிலும் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதாக தனியார் கல்லுாரிகளே உள்ளன. அரசு கல்லுாரிகள் அங்கொன்றும், இங்கொன்றும் தான் உள்ளன.இதுதவிர இன்றைக்கு முன்னணி ஐ.டி., மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகளை பெறுவது சுயநிதி கல்லுாரிகளில் படித்த மாணவர்கள் தான்.

இக்கல்லுாரி மாணவர்களை நம்பித்தான் மிகப் பெரிய ஐ.டி., மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவிற்குள் தங்கள் நிறுவனங்களை துவக்குகின்றன. இதுவே நாட்டின் வளர்ச்சிக் கும் பின்னணியாக உள்ளது. அதுபோல் தேசிய அளவில் தரம் வாய்ந்த கல்லுாரிகள் (என்.ஐ. ஆர்.எப்.,) பட்டியலில் இடம் பெறுவதும், 'நாக்'கில் அதிகமாக கிரேடுகள் பெற்றுள்ளதும் சுயநிதி கல்லுாரிகள் தான்.


இது தவிர ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புக்களையும் இக்கல்லுாரிகள் அளிக்கின்றன. இங்கு பணியாற்றிய அனுபவம் மூலம் பெரும் பாலான துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் அரசு மற்றும் உதவிபெறும் கல்லுாரிகளில் பணி நியமனமாகின்றனர். நேரடி பணி நியமனங்கள் என்பது குறைவே. இதுபோன்ற சுயநிதி கல்லுாரிகளின் சாதனைகளை தமிழக அரசு உணர வேண்டும்.

இவ்வாறு உயர்கல்வி துறை வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் சுயநிதி கல்லுாரிகள் முக்கிய பங்கு வகின்றன. இதனால் இக் கல்லுாரிகள் வளர்ச்சிக்கு தமிழக அரசு துணை யாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு நெருக்கடி வரும்போது பாராமுகமாக இருப்பது அரசின் சரியான நிலைப்பாடு அல்ல.இவ்வாறு தெரிவித்தனர்.
              திராவிடக் கிளி ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?