இந்தியாவில் வளரும் பாசிசம்.
மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி
இந்த நாட்டின் அரசு அமைப்புகள் அனைத்தும்
பார்ப்பனிய மயப்படுத்தப்பட்டு விட்டது என்பதற்கு மற்றொரு சாட்சியாக
மாறியிருக்கின்றார் சஞ்சீவ் பட்.
காவி பயங்கரவாதிகளை எதிர்ப்பவர்கள்,
அம்பலப்படுத்துபவர்கள் என்ன நிலைமைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதை இந்த
நாடு அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருகின்றது.
முற்போக்குவாதிகள்,
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள செயல்பாட்டாளர்கள் தவிர வேறு யாருமே
காவி பயங்கரவாதிகளால் தினம் தினம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும்
கைதுகளையும், கொலைகளையும், தாக்குதல்களையும் பெயரளவிற்குக் கூட கண்டிப்பது
கிடையாது.
அந்த அளவிற்கு இந்திய மக்களின் மனங்களில் பாசிசம் திணிக்கப்பட்டு
நச்சாக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு
பக்கம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்க
சதித்திட்டம் தீட்டிய கொலைகாரர்கள் எல்லாவகையான ஆதாரங்கள் இருந்தாலும்
விடுவிக்கப்படுவதும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கூட
தேர்ந்தெடுக்கப்படுவதும், இன்னொரு பக்கம் காவி பயங்கரவாதிகளை துணிவுடன்
அம்பலப்படுத்திய நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுவதும் வெட்கமற்ற
முறையில் நடந்தேறிக் கொண்டு இருக்கின்றது.
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு அப்போதைய
முதல்வராக இருந்த மோடி அரங்கேற்றிய வரலாறு காணாத இன அழிப்பு நடவடிக்கையை
அம்பலப்படுத்திய ஒரே காரணத்திற்காகவும், கடைசிவரை மோடி கும்பலின்
அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் சட்ட ரீதியாக மோடியை சிறைக்கு அனுப்ப
போராடியதற்காகவும் சஞ்சீவ் பட் தற்போது பழிவாங்கப்பட்டிருக்கின்றார்.
1900 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை முன்வைத்து அத்வானி
தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றபோது, குஜராத்தில் ஆட்சியில் இருந்த ஜனதா
தளம் அரசு அவரைக் கைது செய்தது.
இதைக் கண்டித்து விசுவ இந்து பரிஷத்,
பிஜேபி போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டன. குஜராத்தின் ஜாம்நகர் துணை
எஸ்.பி.பியாக இருந்த சஞ்சீவ்பட் தலைமையிலான போலீஸார் இது தொடர்பாக 1990
அக்டோபர் 30 ஆம் தேதி 150 பேரைக் கைது செய்தனர்.
அதில் ஒருவர்தான்
பிரபுதாஸ் வைஷ்னானி. ஒன்பது நாட்கள் போலீஸ் காவலுக்குப் பிறகு ஜாமீனில்
வீட்டிற்குத் திரும்பிய இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்குப்
பிறகு உயிரிழந்து விடுகின்றார்.
போலீசார் தாக்கியதாலேயே பிரபுதாஸ்
வைஷ்னானி இறந்ததாக அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்திருந்திருந்தனர்.
இந்த வழக்கில்தான் 29 ஆண்டுகள் கழித்து தற்போது ஜாம்நகர் செஷன்ஸ்
நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கின்றது. மேலும் ஐந்து
பேருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.
அத்வானி நடத்திய ரத யாத்திரையால் இந்தியா
முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் நடைபெற்றது
என்பதும், அதன் தொடர்ச்சியாக பாபர்மசூதி இடிக்கப்பட்டது என்பதும் இந்திய
வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புப் பக்கங்கள்.
குஜராத்தில் மட்டும் 26
கலவரங்கள் நடைபெற்றது. அதில் 99 பேர் கொல்லப்பட்டார்கள். அதே போல உ.பியில்
28 கலவரங்கள் நடைபெற்றது.
அதில் 224 பேர் கொல்லப்பட்டார்கள். ஆட்சி
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சாமானிய மக்களுக்கு மதவெறி ஊட்டி அவர்களை
பார்ப்பனியத்தின் கூலிப்படையாக மாற்றி சிறுபான்மையின மக்களுக்கு எதிராக
ஏவிவிடும் கேடுகெட்ட கும்பல்களைத்தான் சஞ்சீவ்பட் அன்றும் கைது
செய்திருக்கின்றார்.
மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த சஞ்சீவ் பட்
நினைத்திருந்தால் நல்ல வருமானம் தரும் ஏதாவது ஒரு வேலைக்குப் போயிருக்க
முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
ஒரு நேர்மையான காவல்துறை
அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகத்தான் இந்தப்
பணியைத் தேர்ந்தெடுத்தார்.
ஆனால் எவ்வளவுதான் நேர்மையாக நடந்துகொள்ள
வேண்டும் என்று போராடினாலும் அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனங்களை தட்டிக்
கேட்டால், அம்பலப்படுத்தினால் என்ன நேருமோ அதுதான் சஞ்சீவ் பட்டுக்கும்
தற்போது நேர்ந்திருக்கின்றது.
கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத்
தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அப்போதைய குஜராத்
முதலமைச்சராக இருந்த மோடி தலைமையில் கூட்டப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள்
ஆலோசனைக் கூட்டத்தில் “இந்துக்கள் தங்கள் கோபத்தை முஸ்லிம்கள் மீது
காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முஸ்லிம்களுக்கு பாடம்
புகட்டட்டும்” என்று நரேந்திர மோடி காவல்துறை உயரதிகரிகளுக்கு
உத்திரவிட்டதை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சஞ்சீவ்பட்
அம்பலப்படுத்தினார்.
அம்பலப்படுத்தியதோடு தனது உயரதிகரிகளை தொடர்புகொண்டு
திட்டமிட்டு நடக்கவிருக்கும் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று
வலியுறுத்தி இருக்கின்றார்.
ஆனால் முழுவதும் காவிமயப்படுத்தப்பட்டு, தயார்
நிலையில் வைக்கப்பட்டிருந்த கொலைகார அரசு இயந்திரம் எதுவும் அவர் சொல்வதைக்
கேட்கவில்லை.
பிப்ரவரி 28 ஆம் தேதி காவி பயங்கரவாதிகளுக்குப் பயந்து
குல்பர்க சமூகக் கூடத்தில் தஞ்சம் அடைந்த காங்கிரசின் முன்னாள் எம்.பி ஹஸன்
ஜாஃப்ரி உட்பட 69 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
சஞ்சீவ் பட் இது தொடர்பாக உச்சநீதி
மன்றத்திலும் மனுத் தாக்கல் செய்தார்.
அதில் மோடி 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி
27 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் தான் கலந்து கொண்டதையும், மோடி கலவரம்
நடப்பதற்கு ஆதரவாக செயல்பட்டதையும், இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு
சரியாக விசாரிக்கவில்லை என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால்
அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ்பட் கலந்து கொள்ளவே இல்லை என்று அன்றைக்கு
டி.ஜி.பியாக இருந்த சக்ரவர்த்தி மறுத்தார்.
ஆனால் சஞ்சீவ் பட்டின்
ஓட்டுநராக இருந்த பந்த் அன்றைய கூட்டத்தில் சஞ்சீவ்பட் கலந்து கொண்டதாகவும்
அவருக்காக தான் வெளியே வண்டியுடன் காத்திருந்ததாகவும் வாக்குமூலம்
அளித்தார்.
இந்த சாட்சி எல்லாம் ஒரு பெரிய விஷயமே
இல்லை என்பதுதான் உண்மை.
எப்படியெல்லாம் தாங்கள் முஸ்லிம் பெண்களை பாலியல்
வல்லுறவு செய்து கொன்றோம், எப்படி வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே
எடுத்து சூலாயிதத்தால் குத்திக் கொன்றோம் என்று ரத்தவெறி பிடித்த
மிருகங்கள் பேசியதை வீடியோ பதிவாக வெளியிட்ட தெகல்கா ஆவணங்களை வைத்துக்
கொண்டே மோடியையும், கலவரத்தில் ஈடுபட்டவர்களையும் தண்டிக்க இந்த நாட்டின்
நீதிமன்றங்களுக்குத் துப்பில்லாதபோது ஒரு டிரைவரின் வாக்குமூலமா ஏற்றுக்
கொள்ளப்பட போகின்றது?
ஆனால் மோடி அந்த ஓட்டுனரையும்
மிரட்டினார்.
சஞ்சீவ்பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராக பொய் வாக்குமூலம்
வாங்கி விட்டதாக அந்த ஓட்டுநரிடமே புகார் ஒன்றை எழுதி வாங்கி, அதன்
அடிப்படையில் சஞ்சீவ் பட்டை சிறையில் வைத்தார்.
மேலும் அவர் சிறையில்
இருந்த போது அவரது வீட்டில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் திருடப்பட்டன.
சஞ்சீவ்பட்டைப் போலவே 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மோடி நடத்திய
கூட்டத்தில் கலந்து கொண்டவரும், பின்னர் அப்ரூவராக மாறியவருமான பாஜக
முன்னாள் அமைச்சர் ஹிரோன் பாண்டியா படுகொலை செய்யப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக
விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுத் துறையிடம் மோடி 2002 ஆம் ஆண்டு
பிப்ரவரி 27 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் தான் கலந்துகொண்டதையும் அதில்
மோடி “இந்துக்கள் தங்கள் கோபத்தை முஸ்லிம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள
வேண்டாம், அவர்கள் முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டட்டும்" என்று சொன்னதையும்
வாக்குமூலமாக மீண்டும் பதிவு செய்தார் சஞ்சீவ்பட்.
இதனால் ஆத்திரம் அடைந்த
மோடி இனி மேலும் இவரை விட்டுவைத்தால் தன்னுடைய பிரதமர் கனவுக்கே வேட்டு
வைத்துவிடுவார் என்று எண்ணி அவரை சிறைக்கு அனுப்ப முடிவு செய்தார். அதன்
விளைவாக சஞ்சீவ் பட் அனுமதி பெறாமல் பணிக்கு வராது இருந்தது, அரசு வாகனத்தை
தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2011ஆம்
ஆண்டில் அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பிறகு 2015ல் அவர்
பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
போதை மருந்துகள் வைத்ததாக எழுந்த
புகார்களின் பேரில் 2018 செப்டம்பரில் இருந்து சஞ்சீவ் பட் சிறையில்
இருந்து வருகிறார்.
தற்போது அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள்
தண்டனையானது செஷன்ஸ் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது என்பதால் இன்னும்
மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் காவி பயங்கரவாதம்
தலைவிரித்து ஆடும் காலத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் நம்மிடம்
வறட்சியாக இருக்கின்றது.
முகிலன் தானே தலைமறைவாகி இருக்கக் கூடும் என்ற செய்தியை நம்ப வைக்கும்படி உளவுத்துறையும் அரசும் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இன்னும் எட்டு வாரங்கள் கழித்து சிபிசிஐடி, ’இதற்கு மேல் எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று சொல்லிவிடுவதற்கு தான் ஊடகங்கள் வழியாக இந்த பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது’என்று சந்தேகம் எழுப்பியுள்ளது இளந்தமிழகம் அமைப்பு.
முகிலனைத் தேடும் பணிக்கு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மேலும் எட்டு வார அவகாசம் கேட்டுப்பெற்றிருக்கும் நிலையில் இளந்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எழுதியுள்ள கடிதத்தில்,...நேற்று ஜூன் 27 அன்று முகிலனின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கம் போலவே சீலிடப்பட்ட கவரில் முன்னேற்ற அறிக்கையைக் கொடுத்தது சிபிசிஐடி. நிர்மல் குமார், எம்.எம். சுந்தரேசன் ஆகிய இரு நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். சிபிசிஐடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றும் பெண்டுல்லம் போல் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு வழக்கின் திசைப் போவதாகவும் சிபிசிஐடியிடம் சில க்ளு இருப்பதாகவும் ஆனால் அவர்களால் அதை துல்லியமாக்க முடியவில்லை என்றும் திரு எம்.எம்.எஸ். கூறினார். ஒருவர் பின் ஒருவராக விசாரணை செய்து வருகின்றனர். இன்னும் ஆழமாகப் போக வேண்டியிருக்கிறது என்றும் நீதிபதி எம்.எம்.எஸ். சொன்னார்.
ஜுன் 3 தேதியிட்ட ஒரு தமிழ் நாளிதழில் ’முகிலன் உயிருடன் இருக்கிறார்’ என்ற தலைப்பிட்டு இத்தகவல் சிபிசிஐடியிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லி ஒரு செய்தி வந்தது. இப்படியான புரளிகள் பரப்பபடுகின்றன என்றும் முன்பு முகநூலில் ஒரு காவல் ஆய்வாளரே முகிலன் ‘சமாதி’ எனப் பதிவிட்டுள்ளார் என்றும் வழக்கறிஞர் சுதாராமிலங்கம் நீதிபதியிடம் முறையிட்டார். சிபிசிஐடி விசாரித்துக் கொண்டிருக்கிறது என்று நீதிபதி சொன்னார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் ’எட்டு வாரம்’ அவகாசம் கேட்டார். வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆறு வாரம் மட்டுமே கொடுக்கச் சொல்லி கேட்டார். நீதிபதி எட்டு வாரத்திற்கு ஒப்புக் கொண்டார். வழக்கு விசாரணை ஆகஸ்டு 22 ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
கடந்த மூன்று முறையாக சிபிசிஐடி தரப்பில் இருந்து இரகசிய அறிக்கையே கொடுக்கப்படுகிறது. விசாரணை நடந்துகொண்டிருப்பதால் இப்படி தருகிறோம் என்கிறார்கள். ஆனால், அதே சிபிசிஐடி பத்திரிகைகளுக்கு செய்தி கொடுக்கிறது. விசாரணை எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்ற விவரம் தெரிந்தால் அது விசாரணையைப் பாதித்துவிடும் என்று கவலைப்படும் சிபிசிஐடி, ’முகிலன் உயிருடன் இருக்கிறார், வட இந்தியாவில் இருக்கிறார், மாவோயிஸ்ட்டுகளோடு இருக்கிறார்’ என விதவிதமான செய்திகள் வருவதால் விசாரணை பாதிக்கப்படும் என்று கவலைப்படுவதாக தெரியவில்லை. அப்படி வரும் செய்திகள் சிபிசிஐடி அதிகாரிகள் சொல்வதாகவே வருகிறது. முன்னேற்ற அறிக்கையை இரகசியமாக தரும் சிபிசிஐடி அதிகாரிகள் ஊடகங்களில் வரும் செய்திகளை மறுப்பதோ அல்லது கட்டுப்படுத்தவோ இல்லை. ஊடகங்களில் வெளிவரும் புரளிகளால் பாதிக்கப்படாத விசாரணைதான், சிபிசிஐடி யின் விசாரணை அறிக்கையை எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் பார்ப்பதால் பாதிக்கப்பட்டு விடுமா? அல்லது நத்தைப் போல் நடக்கும் விசாரணையை மறைப்பதற்கா செய்யும் மாய்மாலமா இது?
ஒருவழியாக முகிலன் தானே தலைமறைவாகி இருக்கக் கூடும் என்ற செய்தியை நம்ப வைக்கும்படி உளவுத்துறையும் அரசும் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இன்னும் எட்டு வாரங்கள் கழித்து சிபிசிஐடி, ’இதற்கு மேல் எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று சொல்லிவிடுவதற்கு தான் ஊடகங்கள் வழியாக இந்த பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.பிப்ரவரி 15 முதல் ஜூன் 27 வரை சொல்லிக் கொள்ளும் படியான எந்த துப்பும் துலக்க முடியாத சிபிசிஐடி மேலும் எட்டு வாரம் அவகாசம் கேட்டுப் பெற்றுள்ளது.
அரசுத் தரப்பில் முதல் பத்து நாட்கள் விசாரணையையே தொடங்கவில்லை. பின்னர், எழும்பூர் ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை என்று சொன்னார்கள். ஒருமாதம் கழித்து, அவர் மீண்டும் ரயில் நிலையத்திற்கு வந்து மதுரை மகால் ரயில் நிற்கும் நடைபாதையில் இருக்கும் பதிவு கிடைத்துள்ளது என்றனர்.
மதுரை மகால் ரயில் இரவு 11:50 மணிக்கு புறப்படுகிறது. பத்தரை மணியில் இருந்து 11: 50 வரையான ஒன்றே கால் மணிநேர சிசிடிவி பதிவைக் கூட ஒழுங்காகப் பார்க்காமல் முகிலன் ரயில் நிலையத்தை விட்டு வெளியே போய் விட்டார் என்ற செய்தியைப் பரப்புவானேன். தொடக்கம் முதலே அவர் திட்டமிட்டு தலைமறைவாகிவிட்டார் என்ற குழப்பதை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளை நம்மால் அடையாளம் காண முடிகிறது.
காலம் கடந்து போக போக முகிலனுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையும்கூட காணாமலாக்கப்பட்டுவிடுமோ என்று தோன்றுகிறது. ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் மலைக் கொள்ளை எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அம்பலப்படுத்தல் என முகிலன் பயணித்த களங்கள் எல்லாம் பல்லாயிரம் கோடி பணம் புரள்பவை. இதனால் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்குமோ என்பதுதான் எல்லோரது கவலையும். ஆனால், நீதிபதிகளோ அத்தகைய எவ்வித கவலையுமின்றி துளியும் சமூகப் பொறுப்பு இன்றி இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கிறார்கள். அதனால்தான், அவர்களால் எட்டு வாரம் கால அவகாசத்தை அள்ளிக் கொடுக்க முடிகிறது!’என்று கண்டித்திருக்கிறார் செந்தில்.
ஏசியாநெட் டில் இருந்து,
தமிழக தலைமைச் செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் நிதித் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்து வந்தார்.
1985-ம் ஆண்டு தஞ்சை உதவி மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கினார். அதன்பின்னர், சிவகங்கை, புதுக்கோட்டை கலெக்டராகவும், பல்வேறு முக்கிய துறைகளிலும் பொறுப்பு வகித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் இருந்தே சண்முகம் நிதித்துறை செயலாளர் பொறுப்பை கவனித்து வருகிறார். கிரிஜா வைத்தியநாதன் 2017 டிசம்பரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரது பொறுப்பை கூடுதலாக சண்முகம் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வீட்டு வசதித்துறை செயலாளராக இருக்கும் எஸ்.கிருஷ்ணன் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்படலாம் என உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், முதல் பட்டதாரி ஆவார். வேளான் முதுகலை பட்டம் பெற்றவர். 1985-பேட்ச் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார்.
கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் முதல் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம், மாநிலத்தின் நிதி நெருக்கடியை சமாளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது இவருக்கு பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்தது. இவர் 9 பட்ஜெட்களையும், 2 இடைக்கால பட்ஜெட்களையும் தாக்கல் செய்திருக்கிறார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திட்டங்களான இலவச வண்ணத் தொலைக்காட்சி ,அம்மா உணவகம் ஆகிவற்றுக்கு நிதிஆதாரங்களை ஒதுக்கி சிறப்பாக தமிழக பட்ஜெட்டை கையாண்டு பாராட்டு பெற்றவர் சண்முகம்.
இதன்மூலம் பல தலைவர்களின் கவனம் பெற்றார். இவரது இந்த நிர்வாகத் திறமை தலைமை செயலாளர்பொறுப்பிலும் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனுதர்ம சாஸ்திரம்
சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மனிதரின் சுயமரியாதைக்கு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில் கவலையும் ஊக்கமும் அதிகமாகி வருகின்றது.
சென்னை, வடஆற்காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில் கூடிய பல மகாநாடுகளில் வர்ணாசிரம தர்மம் என்பதை கண்டித்திருப்பதுடன் அதற்கு ஆதாரமான புஸ்தகங்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன.
சில மகாநாடுகள் மனுதர்ம சாஸ்திரத்தை நெருப்பில் கொளுத்தி சாம்பலைக் கரைத்தும் வந்திருக்கின்றன.
அரசாங்கமும் சட்டசபை மெம்பர்களும் இதைக்
கவனிக்கப் போகிறார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை.
பழைய
காலமாயிருந்திருக்குமானால் இம்மாதிரி பெரும்பான்மையான மக்களுக்கு
ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அரசாங்கமானது வருணாசிரமத்தை அழித்து
சட்டம் செய்திருக்கும் என்பதோடு வருணாசிரமக் கொள்கைக்காரர்களை கழுவிலேற்றி
இருக்கும் என்றும் கூட சொல்லலாம்.
ஏனெனில், நிரபராதிகளான 8000 சமணர்கள்
கழுவேற்றப்பட்டதாக சொல்லும் சரித்திரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு
அக்கிரமமும் ஜீவகாருண்யமும் அறிவும் அற்றத்தன்மையான கொடுமையை சகித்துக்
கொண்டிருக்கும் என்றும் யாரும் சொல்ல முடியாது.
நமது அரசாங்கங்கள் பழய கால
அரசாங்கங்களைப் பின்பற்றிக் கழுவேற்றா விட்டாலும் சட்ட மூலம் கொடுமைகளை
ஒழிக்கவாவது உதவ வேண்டாமா என்று கேட்கின்றோம்.
ஒருக்கால் மத விஷயத்தில் தலையிட முடியாது
என்று சொல்வார்களானால் மத விஷயங்களையாவது கவனித்து மதத்தில் எப்படி
சொல்லியிருக்கின்றதோ யார் யாருக்கு என்ன என்ன வேலை இடப்பட்டிருக்கின்றதோ,
யார் யாரின் நடத்தை எப்படி இருக்க வேண்டுமென்று
குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ அப்படியாவது நடக்கும்படி பார்க்க வேண்டும்.
அப்படியும் இல்லாமல் இப்படியுமில்லாமல் பார்ப்பானும், வெள்ளைக்காரனும்
மாத்திரம் பிழைக்க என்ன என்ன மாதிரி நடக்க வேண்டுமோ எப்படி எப்படி
சீர்திருத்தம் செய்ய வேண்டுமோ அப்படியெல்லாம் சூழ்ச்சிகள் செய்துக் கொண்டு
மதவிஷயத்தில் பிரவேசிக்க மாட்டோம் என்று சொல்வது வடிகட்டின
அயோக்கியத்தனமாகுமென்றே சொல்லுவோம்.
இச்சூழ்ச்சிகளைப் பார்க்கும்போது இதுசமயம்
மகமதிய அரசாங்கத்தில் வாழும் யோக்கியதையாவது நமக்குக் கிடைக்காதா என்று
ஆசைப்பட வேண்டியதாயிருக்கின்றது.
காரணமென்னவென்றால், வீரர் கமால்பாஷா
அவர்கள் ஒரு அரச விசாரணைக்கு கொரானை ஆதரவாக காட்டியபோது “அது அக்காலத்து
சங்கதி இக்காலத்திற்கு செல்லாது” என்று அதைப் பிடுங்கி வீசி எறிந்தாராம்.
குரான் வாக்கியம் செதுக்கப்பட்ட இடங்களையெல்லாம் அழித்து சுயமரியாதையையும்
கைத்தொழிலையும் கவனியுங்கள் என்று எழுதி வருகிறாராம்.
மகமதியரைவிட
வெள்ளைக்காரருக்கும், பார்ப்பனர்களுக்கும் மதபக்தியிருக்கின்றது என்று
சொன்னால் எந்த பைத்தியக்காரராவது நம்ப முடியுமா என்று கேட்கின்றோம்.
எனவே மதம் என்கிற புரட்டுகளையும்,
மதாச்சாரியார்கள் என்கின்ற அயோக்கியர்களையும், சாஸ்திரம், வேதம், புராணம்
என்பவைகளாகிய அதர்ம அக்கிரம ஆதாரங்களையும் குருட்டுத்தனமாய் பின்பற்றாமல்
அன்பு, ஜீவகாருண்யம், அறிவு, சத்தியம் என்பவைகளை ஆதாரமாய் வைத்து
அவற்றிற்கு விரோதமாய் உள்ளவைகளையெல்லாம் அடியோடு ஒழிப்பதற்கு முற்பட
வேண்டியதுதான் பகுத்தறிவுள்ள மனிதன் கடமை. ஆதலால் அதற்கு ஒவ்வொருவரும்
முற்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.
(குடி அரசு - கட்டுரை - 04.12.1927)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி மறக்கும் திரையுலகு,பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான பிரமிட் சாய்மிரா ஸ்வாமிநாதன் மரணத்திற்கு திரையுலகில் இருந்து யாரும் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது நிறுவனம் 2000களில் தமிழ் சினிமா, இசை மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளில் தனக்கென நிரந்தர இடம் பிடித்த பிரபல நிறுவனமாக விளங்கியது.
ஸ்வாமிநாதன் |
பிரமிட் சாய்மீரா என்றால் தெரியாதவர்கள் சினிமாவில் யாருமில்லை.
இவரது நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு 'கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தை யூடிவி, ராடன் மீடியாவுடன் இணைந்து தயாரித்தார்.மேலும், 'மொழி' படத்தை விநியோகம் செய்துள்ளார். பின்னர் ஸ்பை த்ரில்லர் படமான முக்பீர் (2008) ஐ இந்தியில் தயாரித்தார்.
நடிகர்கள் ரஜினிகாந்தின் ‘குசேலன்’, விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்', அஜித்தின் ‘பில்லா’, ஜோதிகாவின் ‘மொழி’, மாதவனின் ‘எவனோ ஒருவன்’, ஆர்யாவின் ‘நான் கடவுள்’ போன்ற வெற்றி படங்களை தயாரித்து, விநியோகம் செய்துள்ளார். ரஜினி,விஜய்,அஜித் ஆகியோருடன் நெருங்கி பழகிய உள்ளார்.
ஆனால் நேற்று அவர் மரணமடைந்தார் .ஆனால் பலனடைந்த எந்த பிரபல நடிகரும் அவரது மரணத்திற்கு வரவில்லை.
சினிமா உலகமும் அவருக்கு தகுந்த மரியாதை செய்யவில்லை. பிரபல தயாரிப்பாளருக்கே இந்த நிலையா என எல்லோரும் வருந்துகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------