மந்தநிலை என்பது உண்மையில்லை ..?

  வங்கிகள் இணைத்தால்
 இந்திய பொருளாதாரம் 
உயரும்?
மோடி அரசின் தவறான நடவடிக்கைகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் 5 ரூபாய் பிஸ்கெட் தொடங்கி ஆட்டோ மொபைல் துறை வரை பல தொழில்கள் முற்றிலும் முடங்கி உள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
பொருளாதாரவளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் ஜூன் வரையிலான பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது.


நாடுமுழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாக செயல்படும் என அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

இதுமட்டுமின்றி பொதுத்துறை வங்கிகளுக்காக பல்வேறு சீர்திருத்தம் என்ற பெயரில் பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிதியாண்டில் 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன.
 பாங்க் ஆப் பரோடா, விஜயா பாங்க், தேனா பாங்க் ஆகியவை இணைக்கப்படும்.
 பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்படும்.
 கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் இணைக்கப்படும்.
 யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை இணைக்கப்படும்.
 இந்தியன் வங்கியும், அலகாபாத் வங்கியும் இணைக்கப்படும்.
 சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா ஆகியவை தனி வங்கிகளாக செயல்படும்
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ பாங்க், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் பாங் ஆகியவை அந்தந்த பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றும்.
  என கூறினார்.

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு சற்று முன்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்தியாவின் ஜிடிபி 5% ஆகக் குறைந்து பொருளாதார நிபுணர்களையும், பொதுமக்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சற்று முன்புதான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பைப் பற்றிப் பேசினார்.

பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கித் திருப்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்த சிறிது நேரத்திலேயே இப்படியொரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
தனியார் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் சரிவே இந்த 0.8 சதவிகித ஜிடிபி சரிவுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மரண அடி வாங்கியுள்ளது.

உற்பத்தித் துறையில் கடந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் இருந்த 12.1% வளர்ச்சி இந்தக் காலாண்டில் 0.6% ஆக குறைந்து பலத்த அடி வாங்கியுள்ளது.
கட்டுமானத்துறை கடந்த 2018-2019 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 9.6% ஆக இருந்தது தற்போது 5.7% ஆக சரிந்துள்ளது.
விவசாயம், வனங்கள், மீன்பிடித்தல் ஆகிய துறைகளின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி கடந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டிலிருந்து 3.1% குறைந்து வெறும் 2% ஆகச் சரிந்துள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த 2012-2013 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4.9 ஆக இருந்தது.
அதற்குப் பின்னர் இப்படியொரு சரிவை இப்போதுதான் சந்தித்திருக்கிறது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி. இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

பொருளாதார மந்தநிலை என்பது உண்மையில்லை என்று கூறும் நிதியமைச்சர், இந்த ஜி.டி.பி சரிவை என்ன சொல்லி நியாயப்படுத்தப் போகிறார் ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"பொருளாதார மந்தநிலை ஏன்?..
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) என்பது பொருளாதார வளர்ச்சியின் அளவு கோலாகப் பார்க்கப்படுகிறது.
" ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) என்பது பொருளாதார வளர்ச்சியின் அளவு கோலாகப் பார்க்கப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலைக்குச் செல்லும்.
உலக அளவில் 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு நிலை, தற்போதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.
உலக அளவில் கடந்த வாரம் ஊடகங்களில் வெளியான செய்திகளின் மூலம் இதை அறிய முடிகிறது.

அந்த வகையில், பொருளாதார வளர்ச்சி வேகத்தில் சீனாவுக்கு அடுத்தப்படியாக உள்ள இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்திஎன்பது தனியார் நுகர்வு, முதலீடுகள், அரசின் செலவினங்கள், நிகர ஏற்றுமதி (ஏற்றுமதி கழித்தல் இறக்குமதி) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
 இவைதான் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
இந்த நான்கு உள்ளீடுகளில் ஒவ்வொன்றின் நிலையைப் பற்றி பொருளாதார குறிகாட்டிகள் தெரிவிக்கும் தகவல்கள் நம்மை பிரமிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன.

 இந்த நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலகட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகள் எந்த அளவுக்கு குறைந்துவிட்டன என்பதை பொருளாதாரக் குறிகாட்டிகள் வெளிப்படுத்துகின்றன. கார்ப்பரேட் போர்டுரூம்கள் மற்றும் கால்சென்டர்கள் முதல் சந்தைகள் வரை அனைவரும் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையைப் பற்றி பேசுகிறார்கள்.
இந்த ஆண்டு (2019) தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மெச்சும்படியாக இல்லாததே இதற்குக் காரணம். ஜிடிபியை வெளிக்காட்டும் பல்வேறு அளவீடுகளின் பகுப்பாய்வுகளும், பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்கு மந்தநிலையில் உள்ளது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது..!

இந்த ஆண்டு ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாகச் சரிந்தது. அதேபோல, இந்த நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது. நுகர்வு: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நுகர்வு பெரும்பங்கு வகிக்கிறது.
இது இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் 5-இல் மூன்று பங்கு பங்களிப்பைக் கொண்டுள்ளது. நுகர்வில் மந்தநிலை ஏற்படும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும். தற்போதைய நிலவரப்படி, நாட்டில் மக்களிடையே நுகர்வு சக்தி வெகுவாகக் குறைந்துள்ளதாகவே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 உள்நாட்டு கார்கள் விற்பனை, இரு சக்கர வாகனங்கள் விற்பனை, கிராமப்புறங்களின் தேவைப்பாட்டை உணர்த்தும் குறிகாட்டியான டிராக்டர்கள் விற்பனை, வணிக வாகனங்கள் விற்பனை ஆகியவை வெகுவாகக் குறைந்துவிட்டது. நிலைமை இப்படி இருக்கும் போது, எப்படி பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக கூற முடியாதே...!


முதலீடுகள்: மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு புதிய முதலீடுகள் மிக முக்கியத் தேவையாகும்.
அப்போதுதான், எந்தவொரு பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதையில் இருக்க முடியும் என்பதுடன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
 இது அதிக வருமானம் மற்றும் அதிக செலவுகளுக்கு வழிவகுக்கிறது. மேலும், பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்குகிறது.
ஆனால், முதலீடுகள் விஷயத்தில் தற்போதைய நிலை நன்றாக இல்லை என்பது துரதிருஷ்டவசமாகும். எனவேதான், இக்குறியீடு, பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.


புதிய முதலீட்டுத் திட்டங்கள்: 2019 ஏப்ரல் - ஜூன் காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பு ஒட்டு மொத்தமாக ஆண்டுக்கு 79.5 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது செப்டம்பர் 2004 முதல் இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

 உண்மையைச் சொல்லப் போனால், 2019, ஏப்ரல் - ஜூன் வரை அறிவிக்கப்பட்ட புதிய முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பு ரூ.71,337 கோடியாக இருந்தது, இது 2004 செப்டம்பருக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட மிகக் குறைந்த அளவாகும். இது நாட்டில் வர்த்தக நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துள்ளதையே காட்டுகிறது.
எதிர்கால இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை குறைந்துள்ளது என்பதையே இக்குறிகாட்டி சுட்டிக் காட்டுகிறது.

நிறைவடைந்த முதலீட்டுத் திட்டங்கள்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிறைவடைந்த முதலீட்டுத் திட்டங்கள் 48 சதவீதம் குறைந்துள்ளது.
இது செப்டம்பர் 2004-க்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச வீழ்ச்சியாகும். முழுமையான வகையில், ஏப்ரல் -ஜூன் காலாண்டில் நிறைவடைந்த திட்டங்களின் மதிப்பு, ரூ.69,494 கோடியாக இருந்தது, இது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.
இது பொருளாதார வளர்ச்சியின் உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.

செலவினங்கள்: இந்திய பொருளாதாரத்தில் செலவினங்கள் பொதுவாக சுமார் 10-11 சதவீதமாக இருக்கும் (பணவீக்க புள்ளிவிவரத்தை ஈடுசெய்யாமல்).
கடந்த இரண்டு நிதியாண்டுகளில், அரசு செலவினங்களின் வளர்ச்சி 19.1% மற்றும் 13.2 சதவீதமாக இருந்தது, இது 2008-09 மற்றும் 2009-10 ஆகிய நிதி நெருக்கடியான ஆண்டுகளில் இருந்ததைவிட மிக அதிகமாகும்.
இந்நிலையில், 2019-20 நிதியாண்டில் இது எப்படி இருக்கும்? பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு, அரசு அதிக செலவு செய்ய வேண்டும். அதற்காக வரி வளர்ச்சியும் முக்கியமானது.
2019 ஏப்ரல் - ஜூனில் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் வெறும் 1.4 சதவீதம் அதிகரித்து ரூ. 4 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், மொத்த வரி வருவாய் 22.1% அதிகரித்திருந்தது. இது இந்தியப் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் மந்தநிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
 நிகர ஏற்றுமதி: 2019 ஏப்ரல் - ஜூனில் நாட்டின் நிகர ஏற்றுமதி -46 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூனிலும் இதே நிலையில்தான் இருந்தது.
அதாவது 46.6 பில்லியன் டாலராகும்.

 இந்தக் கால கட்டத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டும் கடந்த ஆண்டைப் போல இருந்ததே இதற்கு முதன்மையான காரணமாகும்.
இதைப் பார்க்கும்போது, ஏற்றுமதியைப் பொருத்தமட்டில் எந்தவிதமான பொருளாதார நடவடிக்கைகளும் இல்லை என்பது தெளிவாகிறது.



 மொத்தத்தில் பார்த்தால், பொருளாதார குறிகாட்டிகள் அனைத்தும், நாம் பொருளாதார மந்தநிலையில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், இது மோசமடையக்கூடும் என்பதையும் மறைமுகமாக எச்சரிக்கிறது.
இதில் முரண்பாடு என்னவென்றால், இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, அரசைத் தவிர மற்ற அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.
இது நமக்கு விட்டுச் செல்லும் மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், ஒரு பிரச்னையை முதலில் ஒப்புக் கொள்ளாமல் அதற்கு எப்படித் தீர்வு காண்பது என்பதுதான்....!
மத்திய அரசு இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது!
அரசுக்கு சிந்தித்து துரிதமாகச் செயல்பட வேண்டிய சவாலான நேரம் இது..!

முடங்கிக் கிடக்கும் 12.80 லட்சம்அடுக்குமாடிக் குடியிருப்புகள்! இந்தியாவில் முன்னிலைப் பட்டியலில் உள்ள தலைநகர் தில்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை,பெங்களூர் உள்பட 30 பெருநகரங்களில் கடந்த மார்ச் நிலவரப்படி 12.80 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

 ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான லியாஸ் ஃபோராஸின் ஆய்வுத் தகவல் இதைத் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 7% உயர்ந்துள்ளது. 2018, மார்ச் நிலவரப்படி சுமார் 12 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் இருந்தன.
கட்டுமானதாரர்கள் வீடுகளை அதிவேகமாகக் கட்டி முடித்துவிடுகின்றனர்.
ஆனால், அதற்கேற்ற வகையில் வாங்குவோர் இல்லை என்பதுதான் தற்போதைய யதார்த்த நிலை. ரியல் எஸ்டேட் துறையானது, சுமார் 250 துணைத் தொழில்களைக் கொண்டுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாகச் செயல்படும்போது, எஃகு மற்றும் சிமெண்ட் முதல் அலங்கார சாதனங்கள், பெயிண்ட் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களும் சிறப்பான வளர்ச்சியைக் காணும்.

ஆனால், இவை தற்போது நடைமுறையில் இல்லாத ஒன்றாகிவிட்டது.
ரியல் எஸ்டேட் விலை பல ஆண்டுகளாக ஏற்றம் பெறாமல் முடங்கிக் கிடக்கிறது.
இதுவும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக உள்ளது.
 கடந்த 2003, 2012 ஆகிய ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் வாங்கியிருந்த வீடுகளைத்தான் தற்போது மக்கள் வாங்கி வருவதும், இவை புதிய வீடுகள் அல்ல என்பதுதான் இதற்கான காரணம் என விளக்கம் அளிக்கப்படுகிறது.
 இதை எந்த வகையிலும் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறவே முடியாது என்கின்றனர் நிபுணர்கள்!

கார்கள் விற்பனை 15 ஆண்டுகளில் கண்டிராத வீழ்ச்சி! 
இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூனில் உள்நாட்டு கார்கள் விற்பனை, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் சதவீதம் குறைந்துள்ளது.
இது 2004 முதல் இதுவரை (15 ஆண்டுகள்) கண்டிராத மிகப் பெரிய சரிவாகும். மேலும், இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் காலாண்டு தரவு, பொருளாதார பின்னடைவு எந்த அளவுக்கு உள்ளது என்பதை உணர வைக்கிறது.
கார் விற்பனையில் ஏற்படும் மந்த நிலையானது, டயர் உற்பத்தியாளர்கள் முதல் எஃகு உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டீயரிங் உற்பத்தியாளர்கள் வரை எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது.
முன்னோக்கிப் பார்த்தால், வாகன விற்பனை மையங்கள் மூடப்படுகின்றன அல்லது மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
மேலும், வாகனக் கடன் வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இது கடந்த 5 ஆண்டுகளில் கண்டிராத கடுமையான வீழ்ச்சியாகும். இதன் தாக்கம் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.

 இருசக்கர வாகனங்கள் விற்பனை: கார் விற்பனை பாதிக்கப்பட்ட அளவுக்கு இருசக்கர வாகனங்கள் விற்பனையில் பாதிப்பு இல்லை. இருப்பினும், ஏப்ரல் - ஜூன் காலத்தில் இரு சக்கர வாகன விற்பனை 11.7 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த 2018 அக்டோபர் - டிசம்பருக்கு அடுத்து ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியாகும். பொருளாதார மந்தநிலைதான் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மொபெட்டுகளை வாங்குவோரின் எண்ணிக்கைகூட வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதன் காரணமாக மொபெட் விற்பனை ஏப்ரல் - ஜூனில் 19.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. விற்பனை பெருமளவு குறைந்துவிட்டது. 

 டிராக்டர்கள் விற்பனை: நாட்டின் கிராமப்புறத் தேவைப்பாட்டின் அளவை எடுத்துக்காட்டுவது டிராக்டர் விற்பனைதான். கடந்த ஏப்ரல் - ஜூன் காலத்தில் டிராக்டர்கள் விற்பனையும் 14.10 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் கண்டிராத பெரிய வீழ்ச்சியாகும்.

 உள்நாட்டு வணிக வாகனங்கள் விற்பனை: இது தொழில் துறை நடவடிக்கைகளின் முக்கியப் பொருளாதார குறிகாட்டியாகப் பார்க்கப்படுகிறது. வேகமான விற்பனையானது, உள்கட்டமைப்பு மற்றும் தொழில் துறை முன்னேற்றத்தில் ஒரு வலுவான செயல்பாடு உள்ளதைக் குறிக்கிறது.
கடந்த ஏப்ரல் - ஜூன் காலத்தில் வணிக வாகனங்களின் விற்பனை 9.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக குறைந்த அளவாகும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வணிக வாகன விற்பனை 51.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.

மக்களிடம் பொருள்கள் வாங்கும் திறன் குறைகிறது! 
எஃப்எம்சிஜி நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களின் விற்பனை அளவு, கடந்த ஓராண்டில் வெகுவாகக் குறைந்துவிட்டது.
பிரபல எஃப்எம்சிஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பொருள்கள் விற்பனை வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலத்தில் 5 சதவீதமாக இருந்தது.
 இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 சதவீதமாக இருந்தது. இதேபோன்று டாபர், பிரிட்டானியா விற்பனையும் குறைந்துள்ளது. இந்தத் தரவுகள் மக்களின் அன்றாடப் பொருள்கள் வாங்கும் திறன் குறைந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது.

 எண்ணெய், தங்கம், வெள்ளி அல்லாத இறக்குமதிகள்: இது நுகர்வோர் தேவையை வெளிப்படுத்தும் ஒரு நல்ல குறிகாட்டியாக பார்க்கப்படுகிறது.
 ஏனெனில், மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை அதிக அளவு வாங்குவதைக் கணக்கிடும் ஓர் அளவீடாக இது உள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூனில் இறக்குமதி 5.3 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது மூன்று ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய வீழ்ச்சியாகும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 6.3 சதவீதமாக இருந்தது.
டோல்கேட் வருமானம் எல்லாம் எங்கே?

அதாவது மக்களிடம் இறக்குமதிப் பொருள்கள் பயன்பாடு குறைந்துள்ளதையே இது வெளிப்படுத்துகிறது.

எஃகு நுகர்வு: எந்தவொரு புதிய உள்கட்டமைப்பு வசதியை உருவாக்க வேண்டுமானாலும், உலோகங்களில் முக்கியப் பொருளான எஃகு தேவைப்படுகிறது.
எனவே, முந்தைய காலங்களைவிட எஃகு நுகர்வு அதிகரிக்கும்போது, முதலீட்டு நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றிருப்பதாகக் கருதப்படும். இந்த வகையில், எஃகு நுகர்வு 2019, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 6.6 சதவீதம்தான் அதிகரித்துள்ளது.
ஆனால், இது கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது.  கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, இது 8.8% வளர்ச்சியைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 ரயில் சரக்குப் போக்குவரத்து வருவாய்: இந்திய ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்தில் பெரும்பகுதி நிலக்கரி, சிமெண்ட், பெட்ரலியம், உரங்கள், இரும்புத் தாது போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சரக்குகளை ரயில்வே அதிக அளவில் கொண்டு செல்வது, முதலீடுகள் அதிகரித்துள்ளதையும், தொழில் துறை நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றுள்ளதையும் காட்டுவதாக அமையும்.
மேலும், இது பொருளாதார வளர்ச்சியில் நேர்மறை விளைவைத் தரும். நாட்டிற்கும் நல்ல செய்தியாகவும் அமையும்.
ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில் இதன் வளர்ச்சி விகிதம் 2.7 சதவீதமாக மட்டுமே. இது கடந்த இரண்டரை ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்தபட்ச அளவாகும்.

 முரண்படும் புள்ளிவிவரங்கள்!
வங்கி சில்லறைக் கடன்கள் குறித்த ;தரவுகள் தற்போதைய போக்குக்கு எதிர்மறையாக உள்ளது.

 இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் வங்கிகளின் சில்லறை கடன்கள் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் 16.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், இது 17.9 சதவீதமாக இருந்தது.
 வளர்ச்சியில் சிறிய அளவில்தான் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சில்லறைக் கடன்களில் வீட்டுக் கடன்களின் பங்களிப்பு 50 சதவீத்துக்கும் மேலாக உள்ளது. இந்தக் காலாண்டில் வீட்டுக் கடன்கள் வளர்ச்சி விகிதம் 18.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 15.8 சதவீதமாக இருந்தது.
வீட்டுக் கடன்கள் வளர்ச்சியைக் கண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஏராளமான வீடுகள் விற்கப்படாமல் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இந்தத் தரவுகள் அனைத்தும்,தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிடும் போது, முரணாக அமைந்துள்ளன.


தொழில் துறைக்கு வங்கிக் கடன்: இந்த முக்கியமான குறிகாட்டியானது, இரண்டு ஆண்டுகளாக எந்த வளர்ச்சியையும் காணவில்லை. மாறாக ஏற்றமோ, இறக்கமோ இல்லாமலும் உள்ளது. ஆனால், சமீப காலங்களில் இது மேம்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் இதன் வளர்ச்சி 0.9 சதவீதமாக இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பெரும்பாலும் பெரிய தொழில்களுக்கு கடன் வழங்குவதன் காரணமாக இருந்துள்ளது.

கடந்த ஆண்டு 0.8 சதவீதமாக இருந்த இதன் வளர்ச்சி விகிதம், இப்போது 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிறு, குறுந் தொழில்களைப் பொருத்தமட்டில், கடன் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 0.6 சதவீதமாக இருந்தது. தற்போது 0.7 சதவீதமாக உள்ளது. இதில் பெரிய அளவில் மாற்றமில்லை.

பெரிய தொழில்களுக்கு கடன் வழங்குவது முக்கியமானதுதான். ஆனால்,எந்தவொரு பொருளாதாரத்திலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது சிறு, குறுந் தொழில்கள்தான் என்பதை மறந்து விட முடியாது.

 சிறு, குறுந் தொழில் வளர்ச்சியைப் பெறாதபோது, எங்கிருந்து பொருளாதார வளர்ச்சியைக் காணமுடியும் என்பது நிபுணர்களின் கேள்வி?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?