புதன், 11 செப்டம்பர், 2019

தொழிலில் நெருக்கடியல்ல...

 தொழிலுக்கே...  நெருக்கடி ஏன்?
மோட்டார் வாகன உற்பத்தி, வீட்டு உபயோகப் பொருட்கள், சிறு குறு தொழில்கள், கட்டுமானத்துறை, சேவைத்துறை, உணவுப் பொருள் உற்பத்தி ஆகியவை வேலைவாய்ப்புக்கான பிரதான பங்கினை வகித்து வருகிறது.
இதில் மோட்டார் வாகனத்துறை மற்றும் கட்டுமானத்துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இத்துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புச் சந்தையிலும் பிரதிபலிக்கும்.  மனித சமூகம் நுகர்வு – உற்பத்தி - பகிர்வு என்று ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.
தற்சமயம் இந்த சங்கிலி  அறுந்து போய் உள்ளது. அதனால் புதிய நெருக்கடிகள் வேலைவாய்ப்பு சந்தையிலும் தொழில் துறையிலும் அதிகரித்து வருகிறது.

இச்சூழலில் மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி முக்கியத்துவம் பெறுகிறது. இத்துறை, மொத்த இந்திய உற்பத்தி மதிப்பில் 7.5 சதவீதம் பங்கு வகிக்கிறது.
நாடு முழுவதும் 3 கோடி பேர் இத்தொழில்துறை யில் பணியாற்றி வருகின்றனர்.
நேரடி வேலை வாய்ப்பு மட்டுமின்றி, மறைமுக வேலை வாய்ப்பும் கிடைத்து வருகிறது.
5 பெரிய மோட்டார் கம்பெனிகளில் மட்டும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்ற னர். 64,000 பெட்ரோல் பங்குகள், உதிரிபாகம் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிறுவனங்கள், பழுதுபார்க்கும் நிலையங்கள், பழைய வாகனங்கள் சந்தை என அது சார்ந்த தொழில்களும் வேலைவாய்ப்பை தரக்கூடியதாக திகழ்ந்து வருகின்றன.
உலகமயமாக்கல் அமல்படுத்தப்பட்ட  பிறகு 28 ஆண்டுகளாக வளர்ச்சியை நோக்கி செயல்பட்டு வந்தது. ஆனால் இத்துறை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.


உள்நாட்டு கார்கள் 23 சதமும், இருசக்கர வாகனங்கள் 20 சதமும், டிராக்டர் 15 சதமும், சரக்கு வாகனங்கள் 15 சதம் என வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் தேங்கி நிற்கிறது. இதன் விளை வாக கம்பெனிகள் கடும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டி ருக்கின்றன.
அதனால், கம்பெனிகள் உற்பத்தி இல்லாத தினங்கள் என்று அறிவித்து  விடுமுறை அளிக்கக் கூடிய நிலைமை உருவாகிவிட்டது. டாடா மோட்டார்ஸ், மகேந்திரா மகேந்திரா, மாருதி சுசுகி, டொயோட்டோ, அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் விடுமுறைகளை அறி வித்துள்ளன.
உற்பத்தி நிறுவனங்கள் அளித்துள்ள விடுமுறையால் இந்த நிறுவனங்களுக்கு உதிரி பாகங்க ளையும், துணைப் பொருட்களையும் தயாரிக்கக்கூடிய நிறுவனங்களும் விடுமுறை விட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டன. டிவிஎஸ் நிறுவனம், போஸ்ட் ஜமுனா ஆட்டோ போன்ற நிறுவனங்களும் 3 முதல் 20 நாட்கள் வரை விடுமுறை அளித்துள்ளன.

இதனால் தொழிலாளர்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
 நிறுவனங்கள் விடுமுறை அளிப்பதால் முதலாளிகளுக்கு எந்த நட்டமும் கிடையாது.
வேலை யில்லாக்காலத்தில் தொழிலாளர்களுக்கான சம்பளம், பயன்கள் ஆகியவற்றை வழங்குவதற்கு நிறுவனங்கள் தயாராக இருப்பதில்லை.
அன்றாட வாழ்வில் தொழிலா ளர்கள் கடும் சிரமத்தை சந்திக்கக்கூடிய சூழல் நீடித்து வரு கிறது. இந்நிலையில், அரசின் நடவடிக்கைகள் மேலும் பாதிப்பை உருவாக்கும்.
உதாரணமாக பால் விலை உயர்வை இதோடு பொருத்திப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான பாலை வேலையிழந்த தொழிலாளர்கள் எப்படி வாங்கித் தர முடியும் என்பதை யோசித்தால் இதனுடைய வலியும் வேதனையும் உணரமுடியும்.
விடுமுறை அளித்ததோடு நிறுவனங்கள் நின்று விடவில்லை; தொடர்ந்து தொழிலாளர்களை வேலையி லிருந்து அனுப்புவதற்கான பல்வேறு முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
 மாருதி சுசுகி 28/08/2019 அன்று வெளியிட்ட அறிவிப்பில் மட்டும் 3500 பணியா ளர்களை மீண்டும் புதுப்பிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் வாகன உற்பத்தி நிறுவனங்களில் இருந்தும் 2 லட்சம் பேர் விநியோகப் பிரிவிலும் வேலை இழப்பை சந்தித்துள்ளனர். கடந்த பதினெட்டு மாதங்களில் முன்னூறு விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
 தொடர்ந்து ஏற்பட்டு வரக்கூடிய வேலையிழப்பு இன்னும் சில மாதங்களில் 10 லட்சத்தை எட்டும் என்று அறிவித்து நம்மை அச்சப்பட வைக்கின்றனர்.
இதை ஒரு துறையில் ஏற்பட்டுள்ள சரிவாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. ஒரு துறையில் ஏற்படக்கூடிய பாதிப்பு மற்ற துறைகளிலும் பிரதிபலிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உலகில் மோட்டார் வாகனத் துறை கடந்த 15 ஆண்டு களில் உச்சத்தை தொட்டுள்ளது.
உலகில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுக்கு அடுத்தபடியாக மோட்டார் வாகனத் துறை இந்தியாவில்தான் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.

 இந்தியாவின் டெட்ராய்ட் ஆக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதன் விளைவாக ஒரு சிறு பகுதி வேலைவாய்ப்பும் தமிழகத்தில் உருவானது. மூலதனம் எந்த ஒரு இடத்திற்கு வந்தாலும் அதீத லாபத்தையே விரும்பும். தமிழக அரசு போட்டி போட்டு அத்தகைய அதிக லாபத்தை எடுக்க முயலும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை தந்தது.
தண்ணீர், நிலம், மின்சா ரம் இன்னும் பல ஏற்பாடுகள் அரசினால் செய்து தரப்பட்டது. இதனால் தமிழகத்தில் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
 இந்திய மோட்டார் வாகன உற்பத்தித் துறையின் மையமாக சென்னை மற்றும் புறநகர் பகுதி அம்பத்தூர், ஒரகடம் ஆகியவை வளர்ந்தன.
22 மோட்டார் வாகன உற்பத்தி ஆலை களும், 45 மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை களும், ஆறு டயர் உற்பத்தி ஆலைகளும் உருவாகின. இங்கிருந்து ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 18 லட்சம் வாகனங்கள் உற்பத்தியாகின்றன.


தொழிற்சாலைகள் ஏற்றுமதி, வேலை வாய்ப்பு என தொடர்ந்து விரிவடைந்து இதில் எப்படி வீழ்ச்சியும் சுணக்க மும் ஏற்பட்டது?
இதற்கான காரணங்கள் மோடி அரசாங்கத் தின் கையில்தான் இருக்கின்றது.
வளர்ந்து வந்த இத்துறையை, மத்திய மோடி அரசாங்கம் எடுத்த பொருளா தார கொள்கை முடிவுகள் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை உயிர்களை காவு வாங்கியது மட்டுமல்ல, இந்திய நாட்டின் தொழில்துறையையும் காவு வாங்கிவிட்டது.


மூலப் பொருட்கள் வாங்குவதில், உற்பத்தி யில் கடும் நெருக்கடியை நிறுவனங்கள் சந்திக்கத் துவங்கின, இதனைத் தொடர்ந்து அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
மோட்டார் வாகனங்களுக்கு 28 சதவீதம் வரி விதித்து அதை அழித்து  விட்டனர் என்றே சொல்லலாம்.
இதுமட்டுமல்ல உற்பத்தி செய்யப்பட்ட 30 லட்சம் இருசக்கர வாகனங்களும், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களும் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி நிற்கின்றன.

இத்துடன் அரசு எடுத்துள்ள கொள்கை மாற்றங்கள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பகுதி பெட்ரோல், டீசல், எரிவாயுவில் இயக்கக்கூடிய வாகனங்கள் தான். இவ்வகை வாகனங்க ளுக்கு 28 சதவீதம் வரி விதிப்பை அரசு மேற்கொண்டுள் ளது.

புதிய கொள்கை முடிவாக இனிமேல் பேட்டரி வாகனங்க ளைத்தான் இயக்க வேண்டும் என தன் இஷ்டப்படி அரசு அறிவித்துள்ளது. தொழில் துறையினருடன் கலந்து பேசாமல் சீர்திருத்தத்தை எதேச்சதிகாரமான முறையில் அமல்படுத்தி வருகிறது. இதனால் மோட்டார் வாகன தொழில் துறையினர் மட்டுமல்ல; தொழிலாளர்கள் மட்டு மல்ல; நாடே மோசமான நெருக்கடிக்கு சென்று விட்டது.

 மின்சார வாகன உற்பத்திக்கும் சார்ஜர் உற்பத்திக்கும் 5 சதவீத வரிவிதிப்பு அறிவித்துவிட்டு அதை நோக்கி செல்வதற்கு உத்தரவிடுகிறது.
அதற்கான கால அவகாசமும் விவாதமும் உள்கட்டமைப்பு மேம்பாடும் ஏற்படுத்தாமல் அதிரடி உத்தரவுகள் மூலம் தொழில்துறையை சொல் லொண்ணா துயரத்திற்கு மத்திய மோடி அரசாங்கம் தள்ளியுள்ளது.

இது மட்டுமின்றி, மக்களின் வாங்கும் திறனில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சியும், பொருளாதார ரீதியான பாதுகாப்பின்மையும் மோட்டார் வாகன துறை யின் சிக்கலுக்குக் காரணமாகிறது.

எந்தவொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாங்கும் சக்தியே ஆதாரமாகும். இன்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தொழில்துறை நெருக்கடிக்கு மிக முக்கியமான காரணமாக இது மாறியுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் மக்களுடைய பங்களிப்பு வாங்கும் சக்தி உயர்வின் மூலமாகவே சாத்தியமாகும்.
 ஆனால், மத்திய பாஜக அரசு அதற்கு தலைகீழான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அதனுடைய வெளிப்பாடுதான் இன்றைக்கு நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் கடும் நெருக்கடியை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது.
 நாட்டு மக்களின் நுகர்வு ஐந்தில் மூன்று பங்காக தற்சமயம் சுருங்கியுள்ளது. இதனால் பொருட்கள் உற்பத்தியாகியும் வாங்க இயலாத நிலை உருவாகியுள்ளது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------

சவ்கிதார் மோடி காவலில் கீழ்.
2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும், நாட்டிலுள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் ரூ.32 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பொதுத்துறை வங்கிகளில்நடைபெற்ற பண மோசடி வழக்குகள் குறித்து, சந்திரசேகர் கவுர்என்பவர், தகவல் அறியும்உரிமைச்சட்டத்தின் மூலம் கேள்விஎழுப்பியிருந்தார்.


அதற்குத்தற்போது பதில் கிடைத்துள்ளது.அதில்,
“2019ஏப்ரல் முதல் ஜூன்வரையிலான மூன்று மாதங்களில், 18 பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 31 ஆயிரத்து898 கோடியே 63 லட்சம் ரூபாய்அளவிற்கு மோசடி நடந்துள் ளது; 
இந்த மோசடிகள் தொடர்பாக 2 ஆயிரத்து 480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” 
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இவற்றில் அதிகபட்சமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்து 12 கோடியே 77 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாகவும் 1,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அடுத்ததாக அலகாபாத் வங்கியில் ரூ. 2 ஆயிரத்து 855 கோடியே 46 லட்சம்,
 பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 2 ஆயிரத்து 526 கோடியே 55 லட்சம்,
 பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ. 2 ஆயிரத்து 297 கோடியே 5 லட்சங்கள் 
என மோசடிகள் அரங்கேறியுள்ளன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 பாராட்டு விழா நடத்த நான் தயார்.
நீங்கள் தயாரா?


28ம் தேதி லண்டன் பயணமான தமிழக முதல்வர் பின்பு அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
அந்த பயணத்தின் மூலமாக வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக முதல்வர் “யாதும் ஊரே” என்ற திட்டம் ஒன்றையும் அமெரிக்காவில் துவங்கி வைத்தார்.


நேற்று (10/09/2019) அதிகாலை சென்னை திரும்பிய அவர், இது வரை 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்றும்,
 அதன் மூலமாக 8,835 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

அது குறித்து முதல்வர் பேசுகையில், தாம் நினைத்ததை நடத்த முடியாத காரணத்தால் விரக்தியின் உச்சத்திற்கு சென்று எரிச்சலுடனும் பொறாமையுடனும் பேசி வருகிறார் முக ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

 அதற்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், இது வரை அதிமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும், முதலீடுகள் அளித்த அந்த நிறுவனங்கள் குறித்தும்,
 அதனால் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும் 2

நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 "2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தது திமுக அரசு. அந்த ஆட்சியின் போது 2 லட்சத்து 21ம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டது "

என்று மேற்கோள் காட்டிய அவர் தற்போது போடப்பட்டிருக்கும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

அந்த உண்மையை வெளியிட்டால், ஒரே வாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் பாராட்டு விழாவே நடத்தத் தயார் என்றும் சவால் விடுத்துள்ளார் முக ஸ்டாலின்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

மோடி ஆட்சியின் சாதனை.
மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!
 உலகில் மிகமோசமான வறுமைநிலவும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக 3-ஆவது இடத்தில் இந்தியா இருப்பது தெரியவந்துள்ளது.
‘வேர்ல்ட் பாவர்ட்டி கிளாக்’ (World Poverty Clock) என்றஅமைப்பின் புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டி ‘தி ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸ்’ (The Spectator Index) என்ற ட்விட்டர் பக்கம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், உலகில் மோசமான வறுமை நிலவும் நாடுகள் பட்டியலில் நைஜீரியாவுக்கு முதல் இடம்வழங்கப்பட்டுள்ளது. 

இங்கு அதீதவறுமையால் வாடுவோர் எண் ணிக்கை 15.7 சதவிகிதம் என்றும், 
காங்கோவில் 10 சதவிகித மக்கள்அதீத வறுமையால் வாடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 அதேநேரம் இவ்விரு நாடுகளுக்கும் அடுத்த மோசமான இடத்தில், இந்தியா இடம்பெற் றுள்ளது. 
இந்தியாவில் 8 சதவிகிதம்பேர், மிகமோசமான வறுமையில் வாடுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


அடுத்தடுத்த இடங்களில்

எத்தியோப்பியா (4.6 சதவிகிதம்);
தான்சானியா (3 சதவிகிதம்);
வங்கதேசம்(2.3 சதவிகிதம்);
 தென்னாப்பிரிக்கா (2.3 சதவிகிதம்);
 இந்தோனேசியா (2.1 சதவிகிதம்);
 ஏமன் (1.6 சதவிகிதம்); 
பிரேசில் (1.1 சதவிகிதம்);
சீனா(0.9 சதவிகிதம்);
பாகிஸ்தான் (0.3 சதவிகிதம்);
அமெரிக்கா (0.3 சதவிகிதம்);
மெக்சிகோ (0.35 சதவிகிதம்)
 என நாடுகள் வரிசைப்படுத்தப் பட்டு உள்ளன.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------