செவ்வாய், 17 செப்டம்பர், 2019

"இந்தி"(யா) திவா(ல்)ஸ்

‘இந்தி திவஸ்’ எனப்படும் இந்தி தினத்தையொட்டி நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழி மட்டும்தான் இந்தியாவின் மொழியாக இருக்க முடியும் என்றும்இதன்மூலம்தான் உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்றும் பேசியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


இந்த கருத்து அமித்ஷாவின் கருத்து அல்ல.
அவருடைய குருசாமி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தையே அவர் வாந்தியெடுத்துள்ளார்.

 இவர்களது குல குருவான கோல்வால்கர் ‘தொடர்பு மொழி என்றபிரச்சனைக்கான தீர்வு என்கிற வகையில் சமஸ்கிருதம் அந்த இடத்தை பிடிக்கும் வரைவசதியின் பொருட்டு இந்திக்கே நாம் முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்’என்கிறார்.
இதைத்தான் அமித்ஷா கூறியிருக்கிறார்.
 அண்மையில் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கான தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் இந்தியில் மொழிபெயர்க்கப்படுகிறது; இதை இந்தியில் தயாரித்து பின்னர் பிற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தி மொழியின் வழியாகத்தான் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்பதை விடஅபத்தமான வாதம் வேறு இருக்க முடியாது.
 பல்வேறு மொழிகளைப் பேசுகிற, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை கொண்ட  நாடாக இந்தியா விளங்குகிறது என்பதுதான் உலக அரங்கில் உயரிய அடையாளமாக உள்ளது.
 இந்தியாவில் இந்தி பேசுபவர்கள்தான் பெரும்பான்மை; எனவே, அந்த மொழியைத்தான் அடையாளப்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டால், ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாவால் முன்வைக்கப்படும்  சமஸ்கிருத மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் எத்தனை பேர்?
வழக்கொழிந்து போன அந்த மொழியைஉயிரோடு வைத்திருக்க இந்தக் கூட்டம் ஏன்இவ்வளவு முயற்சி எடுக்கிறது?
அவர்களைப் பொறுத்தவரை சமஸ்கிருதம் என்பது தேவபாஷா.
அதாவது, தேவ மொழி, உயர்ந்தோர் பேசுகிற உயர்ந்த மொழி.
மற்றவையெல்லாம் நீசர்கள் பேசுகிற நீச மொழி.

 இவர்கள் இந்திக்கு முட்டுக் கொடுப்பது கூட, சமஸ்கிருதம் அந்த இடத்தை வந்து சேரும் வரைதான்.
இந்தியிலும் கூட சமஸ்கிருத வார்த்தைகளை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்றும் இந்துஸ்தானி மொழியிலுள்ள பாரசீகஅரபு வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி விட வேண்டும் என்றும் நீண்ட காலமாகவே கூறி வருகிறார்கள். அதை நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.
ஆட்சி மொழி ஆணையம் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது: “இந்தியாவில் உள்ள மொழி வகைகளை கண்டு நாம் வெட்கப்படவோ, அவற்றை மறைத்து வைக்கவோ தேவையில்லை.
இந்த துணைக்கண்டத்தின் அளவு, பழமையான வரலாறு, பல்வேறு வகையான பண்பாட்டுக் கூறுகளையும் பலவீனக் கூறுகளையும் உட்செரித்தும், அவற்றை ஒன்றுடன் ஒன்று இணங்கிச் செல்ல வைக்கும், செயல்படும் தனிச் சிறப்பான மரபு ஆகியவற்றை சார்ந்தும் நாம் பெருமை கொள்ளத்தக்கதுமான நமது பாரம்பரியச் செல்வம்தான் அம்மொழி வகைகள்.”


இந்தியாவின் பெருமை இதுதான். ஆனால்அதை சிறுமைப்படுத்த அமித்ஷா வகையறா முயல்கிறது.
 இந்தி மொழித் திணிப்பால் வடமாநிலங்களில் பல மொழிகள் காணாமல் போய்விட்டன.
இதுகுறித்து டி.கே.உம்மன் கூறுகையில், ‘இந்தியாவில் வாழும் மக்களில் கணிசமானோர் தமது மொழிப் பண்பாட்டுத் தனித்தன்மையை இழந்து வருவதைக் காண்கிறோம்.
இவர்களில் பெரும்பாலோர் பழங்குடி மக்களும் கிராமப்புறங்களில் வாழும் பரந்துபட்ட உழவர்களும்தான்.  போஜ்புரி, பிரிஜ்பாஷா, மகதி, ராஜஸ்தானி, சதீஸ்கரி போன்ற மொழிகளைப் பேசுபவர்கள், தங்கள் மொழியை மட்டுமல்ல, தனித்த பண்பாட்டையும் இழந்துவிட்டனர்.
 இம்மொழிகள் இந்தி மொழியின் வட்டார மொழிகளாக சுருக்கப்பட்டுவிட்டன.

இம்மொழிகளைப் பேசுபவர்களை இந்தி மொழிப் பேசுபவர்களாக காட்டுவதன் மூலம் இந்திதான் இந்தியாவில் தனிப் பெரும்பான்மையினர் பேசும் மொழி என்று காட்டி, அதனை இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்குவதற்கான நியாயங்களை ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது’ என்கிறார்.
மோடி அரசின் பல்வேறு தாக்குதல்கள் அனைத்து மொழி பேசும் மக்களின் மீதும்ஒருசேரத்தான் தொடுக்கப்படுகிறது.
அவர்கள் ஒன்றுபட்டு போராடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தி பேசும் மக்களுக்கு இடையிலும்,பேசாத மக்களுக்கு இடையிலும் நிரந்தரப் பகைமையைத் தீயை இவர்கள் உயிரோடு வைத்திருக்க முயல்கிறார்கள்.


இதன் மூலம்கூட்டாட்சித் தன்மைக்கு மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் வேட்டு வைக்கிறார்கள்.
மோடி அரசின் இந்த இந்தி திணிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததோடு, அவரது கொள்கைக்கும் மலர் வளையம் வைத்துவிட்டார்போலிருக்கிறது.
இதுகுறித்து, வாயைத் திறக்கக் காணோம்.தமிழக பாஜகவைச் சேர்ந்தவர்கள் வழக்கம் போல, அமித்ஷா கருத்துக்கு முட்டுக்கொடுத்து வருகின்றனர்.
எச்.ராஜா காரைக்குடியில் பேட்டி அளிக்கும்போது, அமித்ஷா தாய்
மொழியை படிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறார் என்று விளக்கிவிட்டு அதையே இந்தியில் கூறுகிறார். ராஜாவின் தாய்மொழிப் பற்று பாராட்டத்தக்கது.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியின் பிடியில் சிக்கியிருப்பதால் நகைச்சுவையின் உச்சத்தை தொடும் வகையில், ஆறு அறிவு உள்ள மனிதர்கள் ஆறு மொழியாவது படிக்க வேண்டாமா?
  என்று கேட்கிறார்.
இவருக்கு இருக்கிற அறிவுக்கு இந்நேரம் குறைந்தபட்சம் நூறு மொழியாவது படித்திருக்க வேண்டாமா?


விலங்குகளுக்கு ஐந்தறிவு என்கிறோம்.
அப்படியென்றால், ஆடு, மாடெல்லாம் ஐந்து மொழிகள் படிக்க வேண்டுமா?
தாவரங்களுக்கு ஓரறிவு என்பதால் செடி, கொடியெல்லாம் ஒரு மொழியாவது தெரிந்து வைத்திருக்கவேண்டுமா?
அந்த மொழியும் கூட இந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்பார் அமித்ஷா.
அப்படியே ஆகட்டும் என்பார் பொன்னார்.
“உலகின் தொன்மையான மொழிகளில்ஒன்று தமிழ் என்று மோடி கூறியதற்காக ஆண்டு முழுவதும்  விழா நடத்த வேண்டாமா?தமிழர்கள் நன்றி மறந்தவர்கள்” என்று சாபமும் விட்டுள்ளார்.

மோடி ஒன்றும் மொழியியல் அறிஞர் அல்ல.
அவர் சொல்லித்தான் தமிழின் பெருமையையும் தொன்மையையும் உணரக் கூடிய நிலையில் தமிழர்கள் இல்லை.
தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் இவர்கள் இழைத்து வரும் வஞ்சகத்திற்கு விழா எடுக்கும் வகையில்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் விழா கொண்டாடியது.
பொன்னார் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது.
                                                                                                                                         -மதுக்கூர் ராமலிங்கம்.
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்நாளில் 
முன்னாள்;
மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)
பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)
தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)

கேம்ப் டேவிட் ஒப்பந்தங்கள்
1978 - கேம்ப் டேவிட் ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படும் இரண்டு ஒப்பந்தங்கள், இஸ்ரேலுக்கும், எகிப்துக்குமிடையே 13 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப்பின், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
கேம்ப் டேவிட் என்பது, அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில், காக்டன் மலைப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள, அமெரிக்க ஜனாதிபதியின் விடுமுறைக்கால ஓய்விடமாகும்.

பேச்சுவார்த்தை ரகசியமாக அங்கு நடத்தப்பட்டதால் ஒப்பந்தங்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது.
 1967இல் நடைபெற்ற ஆறு நாள் போரில், எகிப்திடமிருந்து சினாய் தீபகற்பத்தையும், (அப்போது எகிப்தின் கட்டுப்பாட்டிலிருந்த) காஸா பகுதியையும், ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரைப் பகுதியையும், சிரியாவிடமிருந்து கோலன் குன்றுகளையும்  இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது.

 இதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும், எகிப்து, ஜோர்டான், பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றுக்குமிடையே 1970 ஆகஸ்ட்வரை நடந்த மோதல்கள் தேய்வுப் போர் என்றழைக்கப்படுகின்றன.
1970 செப்டம்பரில் எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் மறைந்து, அன்வர் சதாத் புதிய குடியரசுத் தலைவரானார்.

சினாய் தீபகற்பத்தை மீட்பதற்காக 1973இல் அவர் தொடுத்த யோம் கிப்பூர் போரில், சூயஸ் கால்வாயின் கரையில் சிறிது பகுதியை எகிப்து கைப்பற்றினாலும், எகிப்திடமிருந்து மேலும் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. இப்போரின் விளைவாக இருதரப்புக்கும் மற்றவரின் படைபலம் பற்றிய மதிப்பீடு மாறியிருந்ததால், அமைதிவழித் தீர்வைநோக்கி நகரத் தொடங்கியிருந்தனர்.
1977இல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் இருதரப்புக்கும் அழைப்பு விடுத்ததையடுத்து, கேம்ப் டேவிட்டில் 1978 செப்டம்பர் 5 தொடங்கி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் இறுதியில், சினாய் தீபகற்பத்தை எகிப்துக்குத் திருப்பியளிப்பதென்றும், சூயஸ் கால்வாயை இஸ்ரேலியக் கப்பல்களுக்குத் திறந்துவிடுவதென்றும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
 இஸ்ரேலுடன் ஓர் அரபு நாடு மேற்கொண்ட முதல் ஒப்பந்தம் இதுதான்.
இதற்காக, அமைதிக்கான அவ்வாண்டின் நோபல் பரிசு, அன்வர் சதாத்துக்கும், இஸ்ரேலியப் பிரதமர் மெனாச்செம் பெகினுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
 இந்த ஒப்பந்தங்கள், பாலஸ்தீனத்தின் பங்கேற்பின்றி, பாலஸ்தீனப் பகுதிகளைப் பற்றியும் முடிவு செய்ததால், ஐநாவின் கண்டனத்துக்கும் ஆளாகின.
 அரபு நாடுகள் அரபு லீகிலிருந்து எகிப்தை வெளியேற்றவும் காரணமான இந்த ஒப்பந்தங்கள் மத்திய கிழக்கின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகிற்கே "பெரியார்".
1879 செப்டம்பர் 17 அன்று  ஈரோட்டில் பிறந்த, தந்தை பெரியார், 1973 டிசம்பர் 24 அன்று சென்னையில் உயிர்நீத்தார்.
அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள். அதாவது 34 ஆயிரத்து 433 நாட்கள். இப்போதிருப்பது போல வசதியான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே சுமார் 8600 நாட்கள் சுற்றுப்பயணத்திலேயே செலவு செய்தார்.
சுமார் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தார்.
 அந்தப் பயணத்தில் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் பத்தா யிரத்து எழுநூறு ஆகும்.
அவற்றில் அவர் கருத்துரைகள் ஆற்றிய நேரம் சுமார் 21 ஆயிரத்து 400 மணி நேரமாகும்.  இந்தச் சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்து,  அது ஒலிபரப்பப்பட்டால் இரண்டு ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இரவு பகலாகத் தொடர்ந்து ஓடிக் கொண்டி ருக்கும்.
இவருக்கு முன்னர் வேறெந்தத் தத்துவ ஞானியும் இவ்வளவு நீண்ட நாட்கள் மக்களிடையே சொற்பொழிவு ஆற்றியதில்லை எனலாம்.

 அதனால்தான் யுனெஸ்கோ என்னும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கீழ் உள்ள கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு மன்றம், ‘‘பெரியார் புதிய உலகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியக் கண்டத்தின் சாக்ரடீஸ், சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை!
அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற வழக்கங்கள், ஆதாரமற்ற நடப்புகள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று 1970 ஜூன் 27 அன்று பட்டயம் வழங்கியது.

‘‘மனிதன் எவனும் தானாகவே பிறக்கவில்லை, ஆகவே அவன் தனக்காகவும் பிறக்கவில்லை. மனித வாழ்க்கை என்பது மக்கள் சமுதாயத்துக்குத் தொண்டு செய்வதே யாகும். தொண்டு செய்யாத மனித வாழ்வு என்பது மிருக வாழ்க்கைக்குச் சமமானதேயாகும்’’ என்று அறுதியிட்டு உறுதிபடக் கூறினார்.
தமிழ் மக்களிடையே சுயமரியாதை உணர்வுகளை விதைக்க வேண்டும், சுயமரியாதை உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற கருத்தில் ஈ.வெ.ரா. ‘குடிஅரசு’ என்னும் வாரப் பத்திரிகையைத் தொடங்கி னார். இவரது அச்சகத்துக்கு, ‘உண்மை விளக்க அச்சகம்’ எனப் பெயரிட்டார்.

 ‘‘மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்து வமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். உயர்வு - தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர்களும் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்’’ என்ற நோக்கங்களை குடிஅரசு அடிப்ப டையாகக் கொண்டிருந்தது.

பெரியார் துவக்கி வைத்த சுயமரியாதை இயக்கம் சொல்வது என்ன?
சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு - தாழ்வும் இருக்கக் கூடாது.
மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லாருக்கும் சரிசமமாக இருத்தல் வேண்டும்.
மக்கள் சமூகத்தில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும். மனித சமூகத்தில் சாதி - மதம் - தேசம் - வருணம் - கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக ஒற்றுமையே நிலவ வேண்டும்.
உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் உயர்வு தாழ்வு இல்லாமல் சமூகத்தின் தேவைகளுக்கு, சகல மனிதர்களும் பாடுபட்டு அவற்றின் பயனைச் சரிசமமாக அனுபவிக்க வேண்டும்.
 ஒவ்வொரு மனிதனும் எவற்றுக் கும் எவ்விதத்துக்கும் அடிமையாகாமல் அவரவர் அறிவு, ஆராய்ச்சி, காட்சி, உணர்ச்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரம் இருக்க வேண்டும்.
பெரியாரின் இந்தக் கொள்கைகளே அவர் நடத்திய ஒவ்வொரு போராட்டத்து க்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அடிப்படையாகும்.

சுயமரியாதை இயக்கத்திற்காக தந்தை பெரியார், ‘ரிவோல்ட்’ என்னும் ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். ரிவோல்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குக் கட்டுப்பாட்டைத் தகர்த்தல் என்று பொருள்.
மனித இயற்கைக்கும் அறி வுக்கும் முரணான கட்டுப்பாட்டைத் தகர்ப்பதும் உலகமும் அதன் இன்பமும் எல்லாருக்கும் பொது என்பதும் அதன் நோக்கங்களாக இருந்தன.
மக்கள் யாவரும் சமம் என்ற கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே இப்பத்திரிகையின் நோக்கம் என்று பெரியார் பிரகடனம் செய்தார்.
குடியரசு இதழை ஆங்கிலே யர் ஆட்சி 1933ஆம் ஆண்டில் தடை செய்தது. அப்போது அதற்கு மாற்றாக நவம்பர் 20ஆம் நாளன்று ‘புரட்சி’ என்னும் வார ஏட்டினைத் தொடங்கினார்.
அதன் முதல் இதழில் பெரியார், ‘‘குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியில் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும் பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாய் புரட்சி தோன்றி யேதான் ஆகவேண்டும்.
 அந்த ஐதீகப்படியே புரட்சி தோன்றி யிருப்பதால், புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் புரட்சியை வரவேற்பார்கள்.

 பாடுபட்டு ஊரானுக்குப் போட்டு விட்டுப் பட்டினியாகவும், சமூக வாழ்வில் தாழ்மையாகவும் வாழும் மக்களின் ஆதரவையே ‘புரட்சி’ எதிர்பார்த்து நிற்கிறது.
வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலா ளிகளைக் காக்கும் வேலைக்காக இன்று ‘புரட்சி’ வெளி வரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த ‘புரட்சி’ தோன்றவில்லை. அதுபோ லவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப ‘புரட்சி’ தோன்றவில்லை.
 ‘சகல முதலாளி வர்க்கமும், சகல சமயங்களும் அடியோடு அழிந்து மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் - பெண் அடங்கலும் சர்வ சமத்துவ மாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் ‘புரட்சி’ ஏடும் நிறுத்தப்பட்டு, ‘பகுத்தறிவு’ வார ஏட்டைத் துவக்கினார்.
 இதன் முதல் இதழில், ‘‘மனித சமூ கத்தால் மவுடீகத்தால் ஏற்பட்ட துரபிமானங்களை கடவுள், சாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமா னங்களை அறவே ஒழித்து, மனித சமூக ஜீவாபிமானத்தை யும், ஒற்றுமையையும், பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும், ‘பகுத்தறிவு’ மனித ஜீவாபிமானத்திற்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும், மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது’’ என்றும் பெரியார் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், 1935ஆம் ஆண்டு ஜூன் முதல்நாள் ‘விடுதலை’ தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்து வருகிறது. இவ்விதழின் முதல் இதழில் பெரியார், ‘இப்பத்திரிகை நீடுழி வாழ்ந்து பாமர மக்களுக்கும், பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலகமக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தன் வாழ்நாள் முழுதும் மக்கள் மேம்பாட்டிற்காகப் பல்வேறு இதழ்களையும், இயக்கங்க ளையும் கண்டவர் தந்தை பெரியார்.
ஓர் உன்னத மனிதாபிமானியாக, ஓர் உன்னத உலகக் குடிமகனாக மாபெரும் புரட்சியாளராக வாழ்ந்திட்ட தந்தை பெரியார் அவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டும் அல்ல, உலகமே என்றென்றும் நினைவு கூரும்.

இந்தியை மீண்டும் திணிப்பவர்களுக்கு அடி விழும்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 97 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட எழுத்தாளர் கி.ரா பேசியதாவது :
பேச்சுத்தமிழ் தான் மொழியின் ஆதாரம். அதைப் புறந்தள்ள முடியாது. தமிழ் இன்றைக்கும் கன்னித் தன்மையைக் கொண்டது. ஹீப்ரூ, லத்தீன் போன்ற பழைய மொழிகள் அழிந்த பின்னும் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. சமஸ்கிருதத்தில் தாலாட்டு, ஒப்பாரி ஆகியன கிடையாது. தமிழ் மொழியின் இயல்புகள் சமஸ்கிருதத்தில் கிடையாது.
அதைக் கொண்டாடும் போது நாம் தமிழை உச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டாமா? பேச்சுத் தமிழும், வழக்குச் சொற்களும் எல்லா மொழிகளிலும் உண்டு; அதைத் தொடர்ந்து பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை. சந்தன மரம் வளர வேண்டுமென்றால் வேறு மரங்கள் பக்கத்தில் வளர வேண்டும். புலமைப்பித்தன் சொல்வார். எந்த மொழியையும் யாராலும் அழிக்க முடியாது.அதைப் பேசுபவர்களால் தான் அதற்கு பாதகம் ஏற்படும்.

நரிக்குறவர்களில் ஒருவர் இருந்தாலும், அவர்கள் பேசும் பாஷைகள் இருந்துகொண்டு தான் இருக்கும். மொழிக்கு இறுதி கிடையாது. மனிதர்கள் வருவார்கள், போவார்கள். மானுடமும், மொழியும் என்றும் நிரந்தரமானவை. அதைப் பாதுகாப்பதன் பொறுப்பு அந்தந்த மொழியைப் பேசுபவர்களின் கைகளில் தான் உள்ளது.

உலகில் இதுவரை ஆயிரக்கணக்கான மொழிகள் அழிந்துள்ளதாக தகவல். நாட்டுப்புறவியலையும், பண்பாட்டையும் சிலர் கவனிக்கத் தவறுகின்றனர். ஒவ்வொரு மண்ணின் இயல்பு, மண்வாசனை, கலாச்சாரம், வழக்காறு ஆகியவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதென்பது தங்களது பிள்ளைகளை பாதுகாப்பது போன்று தார்மீக பொறுப்பாக ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு.” இவ்வாறு அவர் கூறினார்.

 இந்தியாவின் அடையாளமாக இந்தி மொழி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்தாளர் கி.ரா பதிலளித்துப் பேசியதாவது:-
"இவ்விஷயத்தில் கருத்தே தேவையில்லை. அது அவருடைய கருத்து. அதை நாம் கட்டாயம் கேட்கவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அவர் கருத்து அவருடையது. நம் கருத்து நம்முடையது. மொழியைத் திணிக்க முடியாது. ஏற்கெனவே திணிக்க முயன்று இங்கு அடி வாங்கியுள்ளனர். மீண்டும் திணிக்க வந்தால் கூடுதலாக நான்கு அடிதான் கிடைக்கும். எக்கருத்துமே மாறிக்கொண்டே இருக்கும். உண்மையில் இவ்விஷயத்தில் நாம் பேசாமல் இருந்தாலே பெரிய அடியாக இருக்கும்"
என்றார்..

----------------------------------------------------------------------------------------------------------------------------------
 தவறான முன்னு தாரணம்
242 கோடி மரங்களை நட்டு சத்குரு ஜக்கி  வாசுதேவ் கனவை நனவாக்குவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
 கார்ப்பரேட் சாமியாரும், மத்திய ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு நெருக்கமானவருமான ஜக்கி வாசுதேவ் “காவிரி கூக்குரல்” என்கிற பெயரில் பயணம் ஒன்றை நடத்தி வருகிறார். 242 கோடி மரங்களை நட திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக ஒவ்வொருவரும் மரம் ஒன்றுக்கு ரூ.42 வீதம் பணம் தர வேண்டுமென்றும் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.
காவிரி நதியிலிருந்து ஒவ்வோராண்டும் தமிழ கத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் காலத்தே கிடைப்பதில்லை. இதுகுறித்து வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் நடைமுறைப்படுத் தப்படுவதில்லை.
இதுகுறித்து காவிரி பாசன விவசாயிகளின் கூக்குரலை ஜக்கி போன்ற வர்கள் ஒருபோதும் காதில் வாங்கிக்கொள்வ தில்லை.

ஆனால் தற்போது காவிரியின் கூக்குரல் என்ற பெயரில் மரம் நடப் போவதாக புறப்பட்டி ருக்கிறார்.
 இதற்காக பலரையும் வளைத்துப் பிடிக்கிறார்.
மாநில முதல்வரான எடப்பாடி பழனிசாமி மரங்களை நட்டு ஜக்கியின் கனவை நனவாக்கு வோம் என்று மரம் நடும் இயக்கத்தை ஜக்கிதான் கண்டுபிடித்ததுபோல புல்லரித்துப் பேசியிருக்கி றார்.
ஆதிசிவனுக்கு சிலை வைப்பதாக கூறிக் கொண்டு காட்டு மரங்களை அழித்தவர்தான் ஜக்கி.
 இதனால் யானைகளின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு யானைகள் திசைமாறி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.
மேலும் இவரது வன ஆக்கிரமிப்பை எதிர்த்த பழங்குடி மக்கள் மீது கொடுமையான தாக்குதல் நடத்தப் பட்டது. அப்போது அவர்களுக்கு துணை நின்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.
 ஏராளமான தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் மரம் நடும் இயக்கத்தை நாடு முழுவதும் செய்து வருகின்றனர். இதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடமும் அதிகரித்து வருகிறது.
 எதையும் விளம்பரமாக்கி, வியாபார மாக்கி வரும் ஜக்கி இதை புரிந்துகொண்டு வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார்.

தமிழகத்தின் இயற்கை வளங்களை பாது காக்கும் அக்கறை முதல்வருக்கு உண்மையி லேயே இருக்குமானால் அரசே இந்த இயக் கத்தை நடத்தலாம்.
விவசாயிகள் யாரிடமும் காசு வாங்கிக் கொண்டு மரம் வளர்ப்பதில்லை. விவசாயத்தையும், விவசாயிகளையும் பாது காத்தாலே மண் வளத்தையும், இயற்கை வளத் தையும் பாதுகாக்க முடியும்.
ஆனால் விவசாயி களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஜக்கி போன்ற போலிகளுக்கு முட்டுக்கொடுக்கிறார்கள்.
இதே ஆசாமி கடந்த முறை நதிகளை மீட்கப் போவதாக புறப்பட்டார். அது என்னாயிற்று என்று தெரியவில்லை. அடுத்து மரத்தை முன்னி லைப்படுத்துகிறார்.
மாநில அரசே இவர்க ளின் பின்னால் செல்வது தவறான முன்னு தாரணம் ஆகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஜிடிபி சரிவு.
 இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடிகள் இழப்பு!
உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 5 சதவிகிதமாக சரிந்ததன் மூலம், இந்தியா ரூ. 6 லட்சம் கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளதாக பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர்  கூறியிருப்பதாவது:
நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து, கருத்து கூறிய பீகாரின் நிதியமைச்சர் சுஷில் மோடி, ‘மழைக்காலம் காரணமாகவே மந்த நிலை நிலவுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய வர்த்தகத்துறை அமைச்சரோ ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விதி பற்றி பேசுகிறார் (நியூட்டன் ஈர்ப்பு விதி). மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓலா,  உபேரால் ஆட்டோமொபைல் துறை  வீழ்ச்சியடைந்தது என்று கூறியிருக்கிறார்.
பாஜக அமைச்சர்களின் இது போன்ற வேடிக்கையான பேச்சுகள் இந்தியாவை நல்வழிப் பாதைக்கு எடுத்துச் செல்லாது.
 மாறாக, இவை இந்தியாவின் மீதான நன்மதிப்பை குறைக்கும். ஓலா, உபேர் வாடகைக் கார்களால், பயணிகள் வாகன விற்பனை குறையலாம், ஆனால் டிரக்குகள் விற்பனை ஏன் குறைந்துள்ளது? என்ற கேள்விக்கு அமைச்சரிடம் பதிலில்லை.
துபாயில் நடக்கும் ஷாப்பிங் திருவிழா போல், இந்தியாவிலும் நடத்தப்போவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியாவின் நிதி நிலைமை வேறு, துபாயின் நிதி நிலைமை வேறு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் விவசாயிகளின் வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும்போது, இந்தியாவும் வளர்ச்சி பெறும். எடுத்துக்காட்டாக விவசாயிகள் அதிகம் உள்ள மத்தியப்பிரதேச மாநிலம் மண்ட்சோர் போல் மாற வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சி, தற்போதைய சூழலில் 8 சதவிகிதத்தை எட்டியிருக்க வேண்டும்.
மாறாக கடந்த ஜூன் காலாண்டில் ஜி.டி.பி விகிதம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெறும் 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. 3 சதவிகித வளர்ச்சி காணாமல் போய்விட்டது.
 இதனால் அரசுக்கு 6 லட்சம் கோடிரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கிகள் இணைப்பை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த வங்கிகளின் இணைப்பால் வராக் கடன்களின் மதிப்புதானாகக் குறைந்து விடாது.
மாறாக இந்தத் திட்டம் வங்கிகளுக்கு  தீங்கினையே விளைவிக்கும். ஏனெனில் வங்கி அதிகாரிகள் வங்கிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, வங்கிகளை முழுமையாக இணைப்பதிலேயே கவனத்தைச் செலுத்துவார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------