உடனடியாக மறுசீரமைக்க இயலாது?

"கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு."

இக்குறளின் பொருள் 
நாட்டின் நிலையை கலந்தாராயாமல் கொடுங்கோல் புரியும் மன்னன், 
தன் நாட்டின் நிதி ஆதாரத்தையும் தன் மக்களின் நன்மதிப்பையும் இழப்பான்  
-என்றாகும். 


மோடிக்கு இந்தக் குறள் பொருந்துமா என்று இக்கட்டுரையின் இறுதியில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுமத்தின் உறுப்பினரான திரு. ரத்தின் ராய் என்பவர் கடந்த மே மாதம் NDTVக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் பொருளாதாரம் வரவிருக்கும் நாட்களில் “நடுத்தர வருமானப் பொறி”யில் சிக்கி, இந்தியாவும் பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளைப் போல் சமுதாயச் சீரழிவுகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படலாம் என்றார். 

ஒரு நாடு நடுத்தர நாடாகிய பிறகு (சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் USD 1000 முதல் 12000 வரை; இந்தியா : USD 2020) அதன் வளர்ச்சி விகிதம் வளராமல் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பின், அது “நடுத்தர வருமானப் பொறியில்” சிக்கிக் கொண்ட நாடாகக் கருதப்படும். 
அதாவது, அந்த நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள், குறிப்பாக ஏழைகள், அவரவர் பொருளாதார நிலையில் சிக்குண்டு குற்றங்களுக்கும் சமுதாய சீரழிவிற்கும் ஆட்பட்டு நெடுங்காலம் வாழ்வார்கள். 
கீழ்வரும் ஐந்து காரணங்களால், ரத்தின் ராயின் முன்கூற்று, இந்தியாவிற்குப் பொருந்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது. 

ரத்தின் ராய்

இந்தியப் பொருளாதாரம் -

உடனடியாகமறுசீரமைக்க இயலாது?


மோடி அரசின் அடிப்படைக் கூறுகள் 
2011-12க்கு பிறகு, நாட்டின் பொருளாதாரம் மந்தநிலை அடையத் தொடங்கியது. 
மே 2014-ல் ஆட்சியமைத்த மோடி, சில நாட்களிலேயே இதை உணர்ந்திருக்கக் கூடும். தன் அரசால் இந்தச் சரிவை துரித நேரத்தில் சரி செய்ய இயலாது என்றும் அரசுக்குப் புலப்பட்டிருக்கவேண்டும்.
 அந்தக் கால கட்டத்தில்தான் மோடியரசு, நாட்டின் மொத்த உள்நாட்டு உறபத்தியைக் (GDP) கணக்கிடும் முறையை மாற்றியது.
 இதன் மூலம், பொருளாதாரச் சரிவை புள்ளிவிவரத் துணைக் கொண்டு மறைக்கப் பார்த்தது. இவ்வாறான சூழ்நிலையில், பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பண மதிப்பிழப்புத் திட்டத்தை அமலாக்கியது. இத்திட்டம் படுதோல்வியைத் தழுவியது.

 அது மட்டுமல்லாமல், சிறிய மற்றும் நடுநிலைத் தொழில் நிறுவனங்கள் இழப்பில் சென்றன. 

இந்நிலையைச் சீர் செய்ய அடுத்ததாகச் சமச்சீர் வரி (GST) என்னும் புதுவித வரிமுறையை அமலாக்கியது மோடியரசு. இதுவும் படுதோல்வியிலேயே முடிந்தது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் மூடியே விட்டன. 
இந்தச் சூழ்நிலையைச் சரி செய்ய இந்த ஆண்டு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ 1.76 லட்சம் கோடியை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து, அரசு ஈவுத்தொகையாகப் பெறப்போகிறது. 
அதாவது, ஒரு தவறைச் சரி செய்வதற்கு மேலும் ஒரு பெரிய தவறைச் செய்வது என்பது, இந்த அரசிற்குக் கைவந்த கலையாகும். இவை அனைத்தும் வைத்துப் பார்க்கும்போது, மோடியரசின் அடிப்படைக் கூறுகளை நாம் அறிந்து கொள்ளலாம் – 
மோடியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கும் அரசு இயந்திரம், பெரும் திட்டங்களை முழுவிவரங்கள் அறியாமல் தன்னை நடுநிலைப்படுத்துவதற்காகவே அறிவித்தல், மறைவடக்கப் பண்புகளைக் கள நிபுணர்களைத் தள்ளி வைத்துவிட்டு, தனக்கு “ஆமாம் சாமி” போடும் அரசு ஊழியர்களையும், பணம் படைத்தவர்களையும் அருகில் வைத்துக் கொள்வது மற்றும் பண்டிதர் நேருவைக் காட்டிலும் தன்னுடைய பெயர் காலந்தோறும் வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்ற பேராவல்!

பெரும் இழப்பில் உள்கட்டமைப்புத் துறை
இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களை, இந்திய பொருளாதாரத்தின் பொற்காலம் என்றே அழைக்கலாம். இந்தக் காலகட்டத்தில்தான் உள்கட்டமைப்புத் துறையின் நெடுஞ்சாலை மற்றும் துறைமுகம் சார்ந்த மிகப்பெரிய திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டன. 
இதனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியப் பொருளாதாரம் விரிவடைந்தது. இந்த நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு பல சிறிய மற்றும் பெரிய கட்டுமான நிறுவனங்கள், இத்துறையில் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றும், முதலீடு செய்தும், தங்களை விரிவுபடுத்திக் கொண்டன.
 இதற்காக இந்நிறுவனங்கள் பெரிய அளவிலான கடன்களையும் வாங்கின. இவ்வாறான ஒளிமயமான நிலை 2010 க்குப் பிறகு மழுங்கத் தொடங்கியது. லாபம் ஈட்டும் திட்டப்பணிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கட்டுமான நிறுவனங்கள் நட்டத்தில் மாட்டிக்கொண்டன. 
பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன அல்லது மூடப்பட்டு விட்டன. இதன் தொடர்ச்சியாகப் பொருளாதாரச் சரிவும் தொடங்கியது. 
 இவ்வாறாக ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்புத் துறையின் வீழ்ச்சியை, அரசு பெருந்தொகையைக் கொண்டு முதலீடு செய்தால்கூட, சரி செய்ய நீண்ட நாட்களாகும். 
மேலும் இத்துறை சார்ந்த கட்டுமான நிறுவனங்கள் நட்டத்திலிருப்பதால், அவைகளால் பணிகளை எடுத்துச் செய்ய இயலாது. 
இந்நிறுவனங்களுக்குப் புத்துயிர் கொடுக்கப்பட வேண்டும் அல்லது புது நிறுவனங்கள் இத்துறைக்கு வரவேண்டும். 
இவை குறைந்த காலத்தில் செயல்படுத்த முடியாதவையே என்பது தெளிவாகிறது. 

மீளாத்துயரில் வேளாண்துறை
கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் வேளாண்துறையின் நடப்பு மிகுந்த கவலை அளித்து வருகிறது. நாட்டின் 49% மக்கள்தொகை வேளாண்துறையை வாழ்வாதாரத்துக்கு நம்பி இருக்கிறார்கள். 
ஆனால், உள்நாட்டு உற்பத்தித் தொகையில் (GDP) வெறும் 17% தான் வேளாண்துறையின் பங்காகும். இதனால், விவசாயிகளின் வருமானம் பல ஆண்டுகளாகவே குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.
 அரசு கொள்முதல் ஓரளவு உதவி செய்தாலும், பணவீக்கம் கட்டுப்படுத்தும் விதமாக உணவு தானியங்களின் விலை, குறைந்த அளவிலேயே வைக்கப் படுகிறது. 
நிலைமை தாங்காமல் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலையே செய்து கொள்கிறார்கள். 

சிறு நிலவுடைமை, அதிக அளவில் தண்ணீரை விரையம் செய்தல், குறைவான உற்பத்தித் திறன், தவறான தானியக் கொள்முதல் முறைகள், குறைந்த அளவிலேயே கடைப்பிடித்துவரும் தொழில்நுட்ப முறைகள், இவை அனைத்தும் இந்திய வேளாண்துறையின் முன்னேற்றத்துக்குத் தடைகற்களாக உள்ளன. 
நம் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சீர் தூக்க வேளாண்துறையில் முதலீடு பன்மடங்கு உயரவேண்டும். ஆனால், இவை அனைத்தையும் செயல்படுத்த நீண்ட காலமாகும் – அதாவது 8 முதல் 10 ஆண்டுகள் வரை கூட எடுக்கலாம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய வடக்கு-கிழக்கு மாநிலங்கள்
பொருளாதார ரீதியில் தென் மாநிலங்களும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 

கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் சமூக சீர்திருத்த இயக்கங்களின் தாக்கத்தினால், இம்மாநிலங்களால், 2000-10 ஏற்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூ 126,406 (2018-19)-ஐக் காட்டிலும் இந்த மாநிலங்களின் சராசரித் தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கின்றது.
இவற்றிற்கு நேரெதிராக, வடக்கு-கிழக்கு பகுதிகளின் மாநிலங்கள் தொடர்ந்து குறைந்த பொருளாதார மற்றும் சமூகக் குறிகாட்டிகளைப் பதிவு செய்துள்ளன. 
இந்த மாநிலங்களில் இந்தி பேசும் மாநிலங்கள், நிலம் பூட்டப்பட்டுள்ளதால், இவைகளின் வளர்ச்சி வரலாற்று ரீதியாக பின் தங்கியே இருந்து வந்திருக்கின்றது. அவைகளின் தனிநபர் வருமானம் தேசியச் சராசரியை விட மிகவும் குறைவானவை. 2018-இல் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரின் இந்தக் குறியீடு, முறையே ரூ. 66,000 மற்றும் ரூ 46,000-ஆகவே இருந்தது.

சொல்லப்போனால், தெற்கு-மேற்கு மாநிலங்கள், நாட்டின் பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் இயந்திரமாக செயல்படுகின்றன.
 பின்தங்கிய வடக்கு-கிழக்கு மாநிலங்களை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லாவிட்டால், மாநில ஏற்றத்தாழ்வு மற்றும் உள் இடம்பெயர்வு காரணமாக சமூக அமைதியின்மை மற்றும் வன்முறை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. 
இதன் பொருட்டு, நடுவண் அரசும், குறிப்பிட்ட மாநில அரசுகளும் அதிக வருமானம் ஈட்ட, நிர்வாகச் சீர்திருத்தம் செய்வது இன்றியமையாதது. 

தொடரும் சமூக ஒற்றுமைமின்மையும் சாதிமத வன்முறைகளும்

பசு பாதுகாப்பு, ஜெய்-ஸ்ரீராம் கோஷம் எழுப்புதல், லவ்-ஜீஹாத் மற்றும் கர்-வாபாசி போன்ற வன்முறை நடவடிக்கைகள் மூலம் முகமதியர்கள், தலித்துகள் மற்றும் மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
முத்தலாக் மீதான சட்டம் மற்றும் ஹஜ்ஜுக்கான சலுகையை நீக்குதல் ஆகியவை குறிப்பிட்ட சிறுபான்மைக் குழுவை அவமானப்படுத்துவற்காகவே செய்யப்படுகின்றன.
370 வது பிரிவு செயல்படாமலிருக்க மாற்றங்கள் கொண்டு வந்தது, அதன் விளைவாக 70 லட்சம் மக்களை 30+ நாள்களுக்கு சிறைப்பிடித்து வைப்பது, மிகவும் கொடூரமானது.
 அசாமில் செயல்படுத்தி வரும் என்.ஆர்.சி-யால், 20 லட்சம் மக்கள், குடியுரிமை இழக்க வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் என்.ஆர்.சி செயல்படுத்தும் அச்சுறுத்தலும் வைக்கப்படுகிறது
இவ்வாறாக மோடியரசு, 2019-இல் பெற்ற பெருவெற்றியைப் பயன்படுத்திக் கொண்டு, இந்துத்வா சித்தாந்ததை செயல்படுத்துவதில் பெரும்முனைப்புக் காட்டிவருகிறது.
 ஒரு வேளை, மோடியரசுக்கு நாடு எதிர்கொள்ளும் பொருளாதார பின்னடைவு குறுகிய காலத்தில் சரி செய்யமுடியாது என்று தெரிந்து இருப்பதால், தன்னுடைய சித்தாந்ததை செயல்படுத்த இவ்வளவு அக்கறை காட்டி வருகிறதோ என்ற அச்சம் எழத்தான் செய்கிறது. 

முடிவுரை
இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல, மேலும் 10 கோடி முதல் 15 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டு, நடுத்தர வருமானக் குழுவில் சேர்க்கப்படவேண்டும். 
அதுவும் பத்தாண்டு காலத்திற்குள் இந்த இலக்கை அடைய வேண்டும். 
இதுவே இந்தியரசின் ஒற்றைக் குறிக்கோளாக இருக்க வேண்டும். இது சாத்தியமா என்பது தான் இப்போதைக்கான கேள்வி!

மோடியரசின் அடிப்படைக் கூறுகள், உள்கட்டமைப்பு மற்றும் வேளாண் துறைகள் எதிர்கொண்டிருக்கும் மந்தநிலை, வடக்கு-கிழக்கு மாநிலங்களின் பின்தங்கிய நிலை மற்றும் சமூகத்தின் ஒற்றுமையின்மை மற்றும் சாதி மத வன்முறைகள் ஆகியவற்றை சேர்த்துக் கோவையாக்கிப் பார்த்தால், நமது பொருளாதார மீட்சி, குறுகிய காலத்தில் நடக்க வாய்ப்பேயில்லை என்பதை மறுப்பதற்கில்லை. 
ரத்தின் ராய் கூறியது போல், இந்தியா "நடுத்தர வருமானப் பொறி"யில் சிக்கிக் கொள்ளவே அதிக வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது!

இப்போது கூறுங்கள், இக்கட்டுரையின் தொடக்கத்தில் இருக்கும் அய்யன் வள்ளுவனின் குறள், மோடிக்குப் பொருந்துமா?

--------------------------------------------------------------------------------------------------------------------------------
 தமிழ்நாட்டு மக்களுக்கும் ,
மோடிக்கும் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன்கிறது?
தமிழ் நாட்டில் மட்டுமல்ல,கேரளா,ஆந்திராவிலும் பாஜக நாற்காலியை பிடிக்க தலைகீழாக நிற்க வேண்டிய,புறாவாசல் மூலமாக வரவேண்டிய நிலைதான்.காரணம் வட மாநிலங்களை விட கல்வியறிவு அதிகம்.
தென்னாட்டில் இந்திய விடுதலைக்குப்பின் பொறுப்பில் இருந்த எதிர்கட்சித்தலைவர்களின் மதசார்பின்மை,பகுத்தறிவுக்கொள்கைகள் மக்களிடம் உருவாக்கிய தாக்கம்.பெரியார்,காமராஜர்,அண்ணா போன்ற தலைவர்களின் ஆளுமைப்பண்பு மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கியது.
மோடியின் எழுச்சியே கோத்ரா ரெயில் எரிப்பு தன்பின்னரான மதக்கலவரங்களால் உருவாக்கப்பட்டவை .அதை சரியாக பகுத்தறிந்து கொள்ளும் தன்மை தமிழர்களுக்கு இருந்தது.
இன்றும் வட மாநிலங்களில் குறிப்பாக இந்தி மக்களிடம் சாதி அடிமைத்தனம்,மத வெறி இருக்கிறது.அதனாலேயே பாஜக அவற்றைத்தூண்டி விட்டு வளர்ந்துள்ளது.

மேலும் அங்கு அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினர் கூறும் சின்னத்துக்குத்தான் வாக்களிக்கிறார்கள்.வாக்களித்தல்தான் அவர்கள் கிராமங்களில் வாழ முடியும் என்ற நிலை.
மோடி வளர்ச்சி என்பது கர்ப்பரேட் தனமான விளம்பரங்கள் மூலம்,போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டது.
அதை வடமாநிலங்களைப்போல் இங்கு நம்பவில்லை.காரணம் பகுத்தறிவு.
பகுத்தறிவு என்பது கடவுள் இல்லை என்பதல்ல.எந்த நிகழ்வையும் பகுத்தறிந்து உணர்வதுதான் என்பதை உணர்ந்தவர்கள் நம்மவர்கள்.
ஏற்கனவே தகவல் தொழில் நுட்பத்தில்,கணினி அறிவு மிக்கவர்களுக்கு குஜராத் சாலைகள் என மேலைநாட்டு சாலைகளை ,வைகையில் மோடி கட்டிய பாலம் என்று வெளிநாட்டு பாலத்தை போட்டோஷாப்பில் போட்டால் கண்டு பிடிக்க முடியாதா என்ன?
ஆட்சிக்கு மோடி வந்த பின்னர் அவர் பக்கம் செல்லலாம் என்ற சில நடுநிலையாளர்களும்,மக்களும் கூட மோடி எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் ஒட்டு மொத்த இந்திய ஏழைகளுக்கும்,நடுத்தர மக்களுக்கும் கேடு தருவதாகவே அமைவதையும்,நீட் போன்ற கல்வி துறையில் எடுக்கும் ஒவ்வொன்றும் தமிழர்களுக்கு கல்வியை ,வேலைவாய்ப்பை மறுப்பதையும் உணர ஆரம்பித்தனர்.
மத்திய அரசு அலுலகங்களில் வட மாநிலத்தவர்களை 80% திணித்ததும்.அங்கு தமிழில் பேசக்கூடாது இந்தியில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதும் மோடியின் மீதும்,பாஜகவின் மீதும் கடும் வெறுப்பையே உருவாக்கியது.
எல்லாவற்றிக்கும் மேலாக இங்குள்ள பாஜக தலைவர்கள் மோடி செய்யும் தமிழநாட்டுக்கெதிரான செயல்களைவரவேற்று சப்பைக்கட்டு கட்டியதும்  அதிருப்தியைத்தான் தந்தது.
தாமரையை மலரவைக்க வேண்டும் என்றால் அதற்கு இங்குள்ள மக்களுக்கு ஏதாவது பயன் இருக்க வேண்டுமல்லவா?

விவசாயத்தை அடியோடு புறக்கணித்து ஸ்டெர்லைட்,அம்பானி,அதானி போன்ற கார்ப்பரேட்களுக்கு சலுகைமேல் சலுகைதந்தது மக்களிடம் எப்படி வரவேற்ப்பைத்தரும்.
மக்கள் மன்றத்தில்,எதிர்க்கட்சிகள் அவலங்களைப்பற்றி கேள்விகள் கேட்டால் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதைப்பார்த்தும்,வெளிநாடுகளில் போனாலே இங்குள்ள எதிர்கட்சிகளை கேவலமாகப் பேசுவத்தைப் பார்த்தும் சலித்து போயுள்ளது இந்தியா முழுக்கவே.அதைத்தான் ம.பி.ராஜஸ்தான் தேர்தல்கள் தெரிவித்தன.ஆனால் தன்வசம் உள்ள தேர்தல் ஆணையம் மூலம் மீண்டும் பலத்த போலி ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ளார்கள் மோடி கூட்டம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சி பிடிக்க எந்த அளவுக்கும் செல்வார்கள்,பணம்,மிரட்டல்,கடத்தல் மூலம் ஆட்சியைப்பிடிப்பார்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்.ஆனால் எங்கு முறையிட?
ரிசர்வ் வங்கி,சிபிஐ,வருமான வரித்துறை ,நீதித்துறை என எல்லாவற்றிலும் ஆர்.எஸ்.எஸ்.பின்னணி உள்ளவர்கள் திணிக்கப்பட்டுள்ளார்கள்.
எதிர்ப்பவர்கள் விரட்டப்பட்டுவருகிறார்கள்.
தொடர்ந்து நீதிபதிகள்,இ.ஆ.ப அதிகாரிகள் எனப் பலர் விலகி வருகின்றனர்.
அவர்கள் 90% தமிழர்கள் என்பது உண்மை.
கரணம் தமிழர்கள் எல்லாத்துறைகளிலும் இந்தி மாநிலத்தவர்களால ஒடுக்கபப்டுகிறார்கள்.
தமிழர்களைத்திட்டமிட்டு பழிவாங்கும் மோடி கும்பல்களிடம் தமிழர்கள் எப்படி ஒத்துப்போவார்கள்.இங்குள்ளவர்களுக்கு கொஞ்சம்  உணர்வுகள் அதிகம்.நல்லவர்கள் நல்லவர்களை பகுத்தறியும் திறன் குருதியிலேயே உண்டு.

மேலும் படிக்க






@

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?