காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்...?

அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு “தத்துவம்” என்ற பெயரில் ஒரு பாடத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதனை எடப்பாடி அரசாங்கம் அனுமதித்துள்ளது என்பது தெளிவு.
திராவிட இயக்கத்தின் ஒரு பகுதி எனும் தகுதியை அ.தி.மு.க. வெகு நாட்களாகவே இழந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் துணை அமைப்பாக மாற்றிவிடுவார்களோ என கருதும் அளவிற்கு இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் கூட்டணியின் சரணாகதி வேகமாக அரங்கேறி வருகிறது.
இந்த சரணாகதியின் தற்போதைய நிகழ்வுதான் பொறியியல் மாணவர்களுக்கு “தத்துவம்” குறித்த பாடத்திட்டங்கள்.
இதில் மாணவர்கள் என்னென்ன படிக்க வேண்டும் என  அண்ணா பல்கலைக் கழகம் முன்வைத்துள்ளது?
வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை.

இதில் பாரபட்சம் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக, பிளேட்டோ மற்றும் பிரான்சிஸ் பேக்கன் ஆகியோரின் படைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடும் விமர்சனம் எழுந்ததால் துணை வேந்தரும் ,ஆர்.எஸ்.எஸ் காரருமான சூரப்பா, இது கட்டாயம் கிடையாது எனவும் விருப்ப பாடங்கள்தான் எனவும் கூறியுள்ளார். 
இதன் பொருள் “கட்டாய விருப்பபாடம்” என சில கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எதிர்ப்பு ஏன்?
இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கு அடிப்படையான காரணம் என்னவெனில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தத்துவம், அதுவும் ஆன்மீகம் தொடர்பான பாடங்கள் ஏன் தேவை என்பதாகும்.
 உலகின் மற்ற பகுதிகளில் இவ்வாறு இருப்பதாக தெரியவில்லை. மேற்கத்திய நாடுகளில் பொறியி யல் மாணவர்களுக்கு பைபிள் கற்பிக்கப்படுவது இல்லை; அரேபிய நாடுகளில் கூட பொறியியல் படிப்பில் குர் ஆன் பற்றி போதிக்கப்படுவது இல்லை.
 ஆனால் இந்தியாவில் சங் பரி வாரம் தனது பாசிச நிகழ்ச்சி நிரலை திணிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இதனை அமல்படுத்துகிறது.
 அதிமுக அரசாங்கம் துணை போகிறது.
 இன்னொரு முக்கியமான அம்சம், “இந்திய தத்துவம்” எது என்பது ஆகும். சங்பரிவாரம், ஆன்மீகம் மட்டும்தான் இந்திய தத்துவம் என கூறுகிறது. அதாவது இந்திய தத்துவ கோட்பாடு களில் கருத்து முதல் வாதம் மட்டும்தான் உள்ளது என்பது சங் பரிவரத்தின் அடிப்படைக் கருத்து ஆகும்.
துரதிர்ஷ்டவச மாக இந்தக் கருத்து திலகரிலிருந்து காந்திஜி மற்றும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் வரை வியாபித்திருந்தது.
எனினும் இது உண்மை அல்ல.
கடவுள் மறுப்பை உள்ளடக்கிய பொருள் முதல்வாத கருத்துகள் இந்திய தத்துவத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்துள் ளன என்பதை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் ஆணித் தரமாக வரலாற்று உண்மைகள் மூலம் நிரூபித்துள்ளார்.

சங்பரிவாரத்தின் திட்டம் ஆன்மீகத்தை மட்டும் முன் நிறுத்துவதுதான்!
அதனால்தான் அந்நிய தேசங்களின் கருத்து முதல்வாதிகளான பிளேட்டோ மற்றும் பிரான்சிஸ் பேக்கனை முன்நிறுத்துகின்றனர்.
ஆளுனருடன் சூரப்பா

பொருள் முதல்வாதத்தை முன்வைத்த டெமாக்கிரட்டஸ் அல்லது எப்பிகூரஸ் அல்லது பாயர்பாக் ஆகியோர் அவர்களின் பட்டியலில் இடம் பெற மாட்டார்கள். இந்தியாவின் சமரசமற்ற பொருள்முதல்வாத போராளிகளான லோகாயதவாதிகளையும் இந்திய தத்துவ வாதிகள் என இவர்கள் அங்கீகரிப்பது இல்லை.
அதே போல் பின்னர் வேதங்களிடம் சரண் அடைந்தாலும் மீமாம்சம், சாங்கியம், நியாயம், வைசேசிகம் ஆகிய இந்திய தத்துவ கோட்பாடுகளும் பொருள் முதல்வாதம் பற்றி வலுவாகப் பேசின.
 மேலும் தொடக்க கால பவுத்தம் மற்றும் சமணம் கூட வேதங்களை மறுத்து பொருள் முதல்வாதம் மற்றும் கடவுள் மறுப்பு பற்றி வாதங்களை முன்வைத்தன.

வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடித்த தத்துவம்
இந்திய தத்துவத்தில் கருத்து முதல்வாதம் என்பது வெறும் ஆன்மீக வாதமாக மட்டும் இருக்கவில்லை. மாறாக சமூகத்தில் நிலவிய பிற்போக்கு கருத்துகளை, குறிப்பாக வர்ணாசிரமத்தை- கருத்து முதல்வாதம் வலுவாக தூக்கிப் பிடித்தது.
வர்ணாசிரமத்தை -சமூகத்தின் பிரிக்க முடியாத அம்ச மாக நிலைநாட்டிட கருத்து முதல்வாதமும் ஏற்றத்தாழ்வான சமூகக் கோட்பாடுகளை முன்வைத்த சட்டக் கோட்பாடுக ளான மனுஸ்மிருதியும் அர்த்த சாஸ்திரமும் ஒன்றுக் கொன்று துணை போயின.

மநு கூறுவதென்ன ?
“ஸ்ருதி எனில் வேதங்கள் என அறியப்பட வேண்டும். 
ஸ்மிருதி எனில் சட்ட கோட்பாடுகள் என அறியப்பட வேண்டும். இவை இரண்டுமே சட்டத்தின் மூலக்கூறுகள் ஆகும். இவற்றை மாற்றுக் கருத்து மூலம் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது. தர்க்கத்தின் வலிமையில் நம்பிக்கை கொண்ட எவன் ஒருவன் வேதத்தையோ அல்லது சட்டக் கோட்பாடு களையோ உதாசீனப்படுத்துகிறனோ அவன் நாத்திகன் என வகைப்படுத்தப்பட வேண்டும்.
 அத்தகைய மனிதன் பிராம ணனாக இருந்தாலும் அவன் சமூகத்திற்கு வெளியே தூக்கி எறியப்பட வேண்டும்.”  
மனித குலம் பிராமணர்கள்/சத்திரியர்கள்/வைசியர்கள்/சூத்திரர்கள் என நால்வர்ணத்தை கொண்டிருக்கிறது என கூறும் மனுஸ்மிருதி பிரம்மனின் எந்தெந்த பாகத்திலி ருந்து எந்த வர்ணம் உருவானது என்பதையும் கூறுகிறது. சூத்திரர்களின் பிறவிக் காரணமே ஏனைய மூன்று பிரி வினருக்கு சேவை செய்வதுதான் எனவும் குறிப்பிடுகிறது.
 ஏனெனில் மற்ற மூன்று பிரிவினரும் இரண்டு முறை பிறப்பவர்கள்; ஆனால் சூத்திரர்கள் மட்டும் ஒரு முறைதான் பிறக்கின்றனர் எனவும் மனுஸ்மிருதி கூறுகிறது. 
சூத்திரர்கள் தாங்கள் நினைத்தாலும் தமது அடிமைத் தளத்திலிருந்து விடுபட முடியாது; ஒரு சூத்திரனின் எஜமான் அவனை விடுதலை செய்தாலும் அது செல்லாது  எனவும் மனு கூறுகிறது.

இதற்கு  வெளிப்படையாகவே பொழிப்புரையாக  ஆதி சங்கரர் கூறுகிறார்:

 “வேதங்களைக் கேட்கும் சூத்திரனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்”.
 “வேதங்களை சூத்திரன் கூறினால் அவனது நாக்கு அறுக்கப்பட வேண்டும்; 
அவன் மனதில் வேதம் இருப்பதாக கருதப்பட்டால் அவனின் உடல் துண்டாக்கப்பட வேண்டும்”. 

சூத்திரர்களின் உழைப்பால் உருவான உபரி உற்பத்தி முழுவதும் அபகரிக்கப்பட்டது.
 உடல் உழைப்பு மட்டுமே சூத்திரர்கள் செய்ய வேண்டும் எனவும்; மூளை உழைப்பு அவர்களுக்கு உரித்தானது அல்ல எனவும் சூழல் உரு வாக்கப்பட்டது.
மூளை உழைப்பு பற்றி சிந்திக்க இயலாத அளவிற்கு சூத்திரர்கள் உடல் உழைப்பின் மூலம் கசக்கிப் பிழியப்பட்டனர்.

இந்த கோட்பாடுகளுக்கு எதிராக லோகாயதவாதிகள் சவால் விடுத்தனர். 
அவர்கள் கீழ்கண்டவாறு எதிர்வாதம் செய் தனர் “சொர்க்கமும் மோட்சமும் வெற்று வார்த்தைகள்”. “விலங்கை பலியிடுவதன் மூலம் அது சொர்க்கத்திற்குச் செல்கிறது என வேதவாதிகள் கூறுகின்றனர். அப்படியானால் அவர்கள் ஏன் தமது தந்தையரை பலியிட்டு சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கக் கூடாது?”.
“மூன்று வேதங்களை உருவாக்கியவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்; வஞ்சகத் திருடர்கள்”. “நீங்கள் வாழும்வரை மகிழ்வாக வாழுங்கள்; கடன் வாங்கியாவது நன்றாக சாப்பிடுங்கள்; உடல் சாம்பலான வுடன் அது எப்படி மீண்டும் திரும்ப முடியும்?”
 - இந்த பகிரங்க சவால்கள் இயல்பாகவே கருத்து முதல்வாதி களை கோபம் அடையச் செய்தது.

 எனவே அவர்கள் லோகா யதவாதிகளையும் அவர்களது தத்துவ நூல்களையும் வேட்டையாடினர். அவற்றை அழித்துவிட்டு இந்திய தத்துவம் என்பது ஆன்மீகம் அடங்கிய கருத்து முதல்வாதம் மட்டும்தான் என்றனர். தற்போது, இந்திய தத்துவம் என்ற போர்வையில் ஆன்மிகம் அடங்கிய பிற்போக்கு கருத்துகளை மட்டுமே பொறியியல் மாணவர்களுக்கு போதிப்பதற்கு திட்டமிடப்படு கிறது. இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்; நிராகரிக் கப்பட வேண்டும்.

தொழிற்புரட்சி ஏன் இந்தியாவில் உருவாகவில்லை?

இந்திய தத்துவம் என்ற பெயரால் கருத்து முதல்வா தத்தை பாடமாக முன்வைப்பது இன்னொரு மிகப்பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கும்.
தொழிற் புரட்சி ஏன் இங்கிலாந்து மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உருவானது?
ஏன் இந்தியா அல்லது சீனாவில் உருவாகவில்லை?
 இந்த  கேள்வியை ஜோசப் நீதம் உட்பட பல அறிஞர்கள் எழுப்பி யுள்ளனர்.

 ஆர்யபட்டா, வராமிஹிரா, பிரம்மகுப்தா போன்ற பல அறிவியல் வல்லுநர்கள் தோன்றிய இந்திய சமூகத்தில் ஏன் தொழிற் புரட்சி நடக்கவில்லை?

இந்திய இரசாயன அறிவியலின் பிதாமகரான பி.சி.ரே இந்த கேள்விக்கு பதில் தருகிறார்:
“மனுஸ்மிருதியும் ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தம் முன்வைத்த மாயாவாதமும்தான் இந்தியாவில் அறிவியல் தொழில் நுட்பம் வளராததற்கு காரணம் ஆகும்” மனுஸ்மிருதி இறந்தவரின் உடலை தொடுவது தீட்டு என்றது.
 உடற் கூறு அறிவியலுக்கு இறந்த உடலை அறுத்து ஆய்வு செய்வது அவசியமாகிறது.
பிணத்தைத் தொடுவது தடுக்கப்பட்டதால் உடற்கூறு ஆய்வும் மருத்துவ அறிவியலும் இந்திய சமூகத்தில் மரணத்தைத் தழுவின.
 ஆதி சங்கரரின் மாயாவாதம் காரணமாக மாய உலகில் எதற்கு அறிவியல் கண்டுபிடிப்பும் ஆய்வுகளும் எனும் போக்கு வலுவாக உருவானது.
 இதன் காரணமாக பண்டைய அறிவியல் தொழில்நுட்ப அடித்தளத்தின் மீது முன்னேற்றம் இந்தியாவில் உருவாகவில்லை.
சீனாவிலும் இதே காரணம் என்கிறார் ஜோசப் நீதம். ஆனால் அது கலாச்சாரப் புரட்சிக்கு பிறகு அது சரி செய்யப்பட்டது.இன்று பலவேறு பொருட்கள் சீனாவில் தயாராகின்றன.ஆப்பிள் அலைபேசியே சீனாவில்தான் தயாரிக்கப்படுகிறது,

 ஆகவே பொருள் முதல்வாதத்தின் பின்ன டைவு இந்திய சமூகத்தில் அறிவியலின் மரணத்திற்கும் காரண மாக அமைந்தது.

எனவேதான் இந்திய தத்துவம் என்ற பெய ரால் ஆன்மீகவாதத்தையும் கருத்து முதல்வாதத்தையும் பல்கலைக் கழகங்களில் முன்வைப்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும் என வலுவாக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமை யும் ஒவ்வொரு முற்போக்காளருக்கும் உள்ளது.
                                                                                                                                   -அன்வர் உசேன் தீக்கதிரில்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ‘கல்யாண வீடா   பாலியல் வன் கொடுமை வீடா?"

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் பெண்க ளுக்கெதிரான வன்முறை, கும்பல் பாலியல் வன் கொடுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வித மாக காட்சிகள் அமைத்ததற்காக அந்தத் தொடரின் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
 இந்த தொடரில் வந்த காட்சிகள் சர்ச்சைக் குள்ளாகி தொலைக்காட்சித் தொடர்களை கண்காணிக்கும் ஒளிபரப்பு உள்ளடக்க புகார் மையத்திற்கு (பிசிசிசி) புகார் சென்றதால்தான் தொடர் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்டுள் ளார். தொலைக்காட்சிகளில் வெளியாகும் பல்வேறு தொடர்கள் அருவருக்கத்தக்கதாகவும், அநாகரிகமாகவும், பெண்களை  இழிவுபடுத்து வதுமாகவே உள்ளன.
அறிவியலுக்கு புறம்பான மூட நம்பிக்கைகளை வளர்ப்பதாகவும், புராண புனை கதைகளை புதுப்பிப்பதுமாகவுமே பல தொடர்கள் அமைந்துள்ளன.
 இதுகுறித்து பிசிசிசி எந்த நட வடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

‘கல்யாண வீடு‘ தொடரில் சித்தரிக்கப்பட்ட அந்தக் காட்சிகள் அநாகரிகத்தின் உச்சம்.
மனித மாண்புகளையே காலில் போட்டு மிதிக்கும் தன்மை கொண்டவை.
 அந்தத் தொடரில் ரோஜா என்ற கதாபாத்திரம் தன்னுடைய சொந்த அக்காவையே கும்பல் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்குமாறு ரவுடிகளுக்கு உத்தரவிடு வதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம்தான் தன்னுடைய சகோதரிக்கு மட்டுமல்ல, அவரை நேசிக்கும் ராஜா என்ற கதாபாத்திரத்துக்கும் புத்தி வரும் என்று கூறப்படுகிறது.

அழுகிப் போன வக்கிரமான ஒரு மூளை யிலிருந்து தான் இத்தகைய சிந்தனைகள் உரு வாகும்.
 இந்தத் தொடரை ஒளிபரப்பு செய்த சன் டிவி நிர்வாகத்திற்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த அநாக ரிகத்திற்கு சன் டிவி நிர்வாகமும் பொறுப் பேற்பதோடு, இனி இத்தகைய தொடர்களை ஒளிபரப்ப மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்.
இதே போன்று பெண்களை இழிவு படுத்தும் தொடர்களை ஒளி பரப்ப மாட்டோம் என அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்க ளும் உறுதியேற்க வேண்டும்.

சுய தணிக்கை முறைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிராகவும், சிறுமிகளுக்கு எதிராகவும் கூட பல்வேறு பாலியல் கொடுமை கள் தினம் தினம் நடந்து வருகின்றன.
திரைப் படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் எந்தவித மான சமூகப் பொறுப்பும் இல்லாமல் ஒளிபரப்பா கும் காட்சிகளும் இதற்கு முக்கியமான காரண மாகும்.
தொலைக்காட்சிகள் அதிகரித்துவிட்ட நிலையில், தங்களது வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், விளம்பரத்தை பெருக்க வும், மிகவும் தரம் தாழ்ந்த முறையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகின்றன.

பொழுது போக்கு என்ற பெயரில் செய்யப்படும் இந்த சமூக விரோத செயல்களை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும், சட்டப்பூர்வமாக தண்டிக்க வும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
திரைப்படங்களிலும் இதை விட அதிகமான அசிங்கம் பிடித்த,வன்முறைக்  காட்சிகள் தற்போது நிறைய வருகின்றன.
 ஆனால் அதை நாம் திரையரங்கில் போய் பார்க்காமல் தவிர்த்து விடலாம்.

தொலைக்காட்சி நிகழ்சிகள் அப்படி இல்லை.நம் வீட்டினுள்ளே இருக்கும் தொல்)லைக்காட்சிகள்.
பெரியவர்கள்,பெண்கள் மட்டுமல்ல பல குழைந்து பருவத்தினருக்கு பார்க்கின்றனர்.இந்நிகழ்ச்சிகளில் மக்களுக்கு பயன் தரும் காட்சிகள் ஒன்றும் தற்போது இல்லை.என்பதுதான் வேதனை தரும் நடப்பு.
விஜய் தொலைக்காட்சியில் வரும் பிக்பாஸ் என்னதான் கமல்ஹாசன் சப்பைக்கட்டு கட்டினாலும் அசிங்கங்கள்,அபத்தங்களின் உச்சமே.
மேலும் அதே விஜயின் வரும் கேம்ஷோக்களும் பார்ப்பவர்கள் மனதை வக்கிரப்படுத்தும் பணியைத்தான் செய்கின்றன.
கேட்டால் டி.ஆர்.பி. என்பார்கள்.இந்நிகழ்ச்சிகளால் எந்த தொலைக்காட்சிகளுக்கு மதிப்பு எறியதாகவோ,பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் இல்லை.என்ன வகையில் டி.ஆர்.பி.ஏறியது என்பதை தெளிவு படுத்தவேண்டும்.
 அமெரிக்கா ,லண்டன்உள்ள தொலைக்காட்சிகளில் "ஹாட் டேலண்ட்"என்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.அவை எந்த அளவு மனிதர்களிடம் உள்ளது திறமையை வெளிக்கொணர்கிறது.
பார்வையாளர்கள் எண்னிக்கை அந்நாடுகளையும் தாண்டி உலகெங்கும் பரவலாகக்கொண்டிருக்குறது,கவர்ந்திழுக்கிறது என்பதை நம் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் உணரவேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

 ந்நாளில் 

முன்னால்  

உலக ரேபிஸ் நோய் தினம்

பசுமை நுகர்வோர் தினம்

சீனப்  பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் 

பிறந்தார்(கிமு 551)

 சிரியா தனிநாடானது.

1961 - சிரியாவில் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு, ஐக்கிய அரபுக் குடியரசை முடிவுக்குக்கொண்டு வந்து, மீண்டும் சிரியக் குடியரசை ஏற்படுத்தியது.
ஐக்கிய அரபுக் குடியரசு என்பது, எகிப்தும், சிரியாவும் இணைந்து 1958இல் உருவான நாடாகும்.
அனைத்து அரபு நாடுகளையும் ஒன்றிணைக்கவேண்டுமென்ற முயற்சியின் தொடக்கமாக இது உருவாக்கப்பட்டது.

 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்தெல் நாசர், 1956இல் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியதைத் தொடர்ந்து, அதன்மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் இஸ்ரேல் தொடுத்த சூயஸ் போருக்குப்பின் (இரண்டாம் அரபு-இஸ்ரேலியப் போர்), அரபு நாடுகளிடையே நாசர்மீதான மதிப்பை மிகஅதிகமாக உயர்த்தியிருந்தது.
 ஒருங்கிணைந்த அரபு நாடு என்ற உணர்வு வழமையாகவே நிறைந்திருந்த சிரியாவில், நாசரின் தலைமைமீது பரவலான ஈர்ப்பு இருந்தது. சமூகவுடைமைச் சிந்தனைகொண்ட முற்போக்காளரான நாசர், பல்வேறு நவீனமய நடவடிக்கைகளை எகிப்தில் மேற்கொண்டிருந்தார்.
சிரியாவில் பலம்வாய்ந்த பொதுவுடைமைக் கட்சி இருந்ததுடன், புதிதாக நியமிக்கப்பட்ட ராணுவத் தளபதியும் பொதுவுடைமைச் சிந்தனைகொண்டவராக இருந்தார்.

அமெரிக்க சோவியத் பனிப்போர்க் கால மென்பதால், சிரியா பொதுவுடைமை நாடாகிவிடும் என்று அச்சமுற்ற அமெரிக்காவின் தூண்டுதலில், சிரிய எல்லையில் துருக்கி படைகளைக் குவித்த 1957இன் நெருக்கடிக்குப்பின், சிரியா எகிப்துடன் இணைந்துகொள்ள விரும்பியது.
இரு நாடுகளையும் இணைத்து விடுவதைவிட, ஓர் ஒன்றியமாகச் செயல்படலாம் என்பதே நாசரின் கருத்தாக இருந்தது.
 ஆனால், பொதுவுடைமைக் கட்சியின் பலத்தால், சிரியா பொதுவுடைமை நாடாகிவிடுமென்ற அச்சம், சிரியாவின் பாத் கட்சிக்கும் இருந்ததால், அதன் வற்புறுத்தலாலேயே, ஒரே நாடாக இணைக்க நாசர் ஒப்புக்கொண்டார்.

1958 பிப்ரவரி 22இல் ஐக்கிய அரபுக் குடியரசு உருவானது.

 எகிப்தின் தலைமையில், தாங்கள் ஆட்சி நடத்தலாம் என்ற பாத் கட்சியினர், பெருமுதலாளிகளின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, ஒற்றைப் பாராளுமன்றத்தை அமைத்த நாசர், பாத் உட்பட அனைத்துக் கட்சிகளையும் தடைசெய்துவிட்டார்.
 பாராளுமன்றத்தில் மூன்றிலொரு பங்கு சிரியாவுக்குப் பிரதிநிதித்துவம் இருந்தாலும், பாத் கட்சி எதிர்பார்த்தபடி அதிகாரம் கிடைக்கவில்லை.

 மறுபுறம், ஏற்கெனவே எகிப்தில் செய்ததுபோல, முக்கியத்துறைகளை தேசவுடைமையாக்கினார் நாசர். பாத் கட்சியினர், பெருமுதலாளிகள் ஆகிய இருதரப்புமே நாசருக்கு எதிராக மாறியதைத் தொடர்ந்து, 1961 செப்டம்பர் 28இல் ஒரு ராணுவக் கலகத்தின்மூலம் சிரியாவின் ஆட்சியைக் கைப்பற்றி, சிரியா தனி நாடானதாக அறிவித்தனர்.
                                                                                                                                                                                                                          - அறிவுக்கடல்

நினைவில் கொள்ளுங்கள்.

 சுரன் 260919
 செப்டம்பர் .
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு

அக்டோபர் 
.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு

டிசம்பர் 
.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
நபார்ட் வங்கியில் வேலை.


 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.

தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.32,000

கடைசி நாள்: 2.10.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு

விபரங்களுக்கு: https://www.nabard.org.
 --------------------------------------------------------------------------------

 ரிசர்வ் வங்கிப் பனி.
ஆன்லைன் முறை விண்ணப்பம் தொடங்கும் நாள் – செப்டம்பர் 21, 2019


ஆபிசர்ஸ் கிரேடு பி (டிஆர்)- டிஎஸ்ஐஎம் பதவிக்கு புள்ளியியல்/ கணித புள்ளியியல்/ கணித பொருளாதாரம்/ எகானாமெட்ரிக்ஸ்/ புள்ளியியல் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் கிரேடு பி அதிகாரிக்கு அடிப்படைச் சம்பளம் 35,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே 35150-1750 (9)-50900-இபி-1750 (2)-54400-2000 (4)-62400 என்ற முறையில் வழங்கப்படும்.

*--------------------------------------------*---------------------------------------*--------------------* 

ஆயுள் காப்பீட்டு கழகம் ( Life Insurance Corportaion LIC) நிறுவனத்தில், காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 
இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு மட்டுமே போதும் என்பதால், பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மொத்தக் காலிப்பணியிடங்கள் : 7,871 பணியிடங்கள்

மண்டல வாரியாக பணியிடங்கள்
வடக்கு மண்டலம் – 1544
மத்திய வடக்கு மண்டலம் – 1242
மத்திய கிழக்கு மண்டலம் – 1497
கிழக்கு மண்டலம் – 980
மத்திய மண்டலம் – 472
மத்திய தெற்கு மண்டலம் – 632
தெற்கு மண்டலம் – 400
மேற்கு மண்டலம் – 1104

சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.14,435
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

தேர்வு முறை : முதனிலை தேர்வு,
 முதன்மை தேர்வு மற்றும்
நேர்முகக்காணல்  மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள் :
பணியிட அறிவிக்கை வெளியான நாள் : செப்டம்பர் 17, 2019
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இறுதிநாள் : அக்டோபர் 01, 2019
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் : அக்டோபர் 22, 2019

விண்ணப்ப கட்டணம் :
எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு ரூ.85 + ஜிஎஸ்டி
மற்ற பிரிவினருக்கு ரூ.510 + ஜிஎஸ்டி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நேரடி லிங்க் : //ibpsonline.ibps.in/licastaug19/

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 உயர் தொழில்நுட்ப மோசடி

 "நீட் "ஆள்மாறாட்டத்தில் மேலும் 7 பேர்

 ''உதித்சூர்யா போல 'நீட்' தேர்வு ஆள் மாறாட்டத்தில் மேலும் 7 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்,'' என சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விஜயகுமார் தெரிவித்தார். ஆள்மாறாட்ட மாணவர்களின்பெயர் விபரங்களை வெளியிடாமல் இருக்க புரோக்கர் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா 21. தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் கடந்த மாதம் எம்.பி.பி.எஸ்., சேர்ந்தார். 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 'சீட்' பெற்ற பிரச்னையில்சி.பி.சி.ஐ.டி., போலீசார் உதித்சூர்யாவை குடும்பத்துடன் திருப்பதியில் பிடித்தனர்.பின்னர் தேனிக்கு கொண்டு வந்து நடத்தப்பட்ட விசாரணை முடிவில் உதித்சூர்யா, தந்தை வெங்கடேசனை கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பன்னீர்செல்வம் அக்.,10 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

போலீசார் இருவரையும் தேனி தேக்கம்பட்டி சிறைக்கு கொண்டு சென்றனர். 
அங்கு டாக்டர் வெங்கடேசன் கோரிக்கையின்படி, முதல் தர அறை இல்லாததால், இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.முன்னதாக வெங்கடேசன், தான் சீறுநீரக பிரச்னைக்கான மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வருவதாக தெரிவித்தார். 
அதனால் மதுரை சிறைக்கு மாற்ற போலீசார் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. விசாரணைக்குப்பின் உதித்சூர்யா தாய் கயல்விழி, உறவினர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டதாக போலீசார்தெரிவித்தனர்.
சி.பி.சி.ஐ.டி., உயரதிகாரி கூறுகையில், 'டாக்டர் வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும், ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்கும் பயிற்சி மையத்திற்கும் தொடர்பில்லை என தெரியவந்துள்ளது.
அம்மையத்திற்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஒருவர் புரோக்கராக செயல்படுகிறார்.

அவரிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, டாக்டர் வெங்கடேசன் முதற்கட்டமாக ரூ.10 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியது தெரியவந்துள்ளது. இதுபோல ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 7 மாணவர்களின் ஆவண விபரங்களை சேகரித்துள்ளோம்.
 டாக்டர் வெங்கடேசனிடம் தொடர்பு கொண்ட புரோக்கரை ஓரிரு நாட்களில் கைது செய்வோம். பின்னர் அந்த ஏழு மாணவர்கள், அவர்களின் பெற்றோரிடம் விசாரிப்போம்.

டாக்டர் வெங்கடேசனின் நண்பர் மூலம் தொடர்பில் உள்ள புரோக்கர், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களிடம் பெயர் விபரங்களை வெளியிடாமல் இருக்க ரூ. 1 கோடி கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்' என்றனர்.

சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விஜயகுமார் கூறியதாவது:கேரளாவில் பயிற்சிமைய புரோக்கர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறு. 'நீட்' தேர்வு ஆள்மாறாட்டத்தில் மேலும் 7 மாணவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 எளிதில் கண்டறிய முடியாத உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டறிய சிறப்பு நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப குழுவை நியமித்துள்ளோம். பின்னணியில் மிகப்பெரிய 'நெட்வொர்க்' இருக்கும் என்பதால் அதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளாம்.

தேனி மருத்துவக் கல்லுாரியில் மாணவர்கள் அட்மிஷன் நடந்த போது, கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படாதது, ஓரிரு முக்கிய இடங்களில் கேமரா காட்சிகளை பதிவு செய்யாதது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 உதித்சூர்யா வருகைப் பதிவேட்டில் குளறுபடியாக மாற்றம் செய்யப்பட்டது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் முதல்வர் ராஜேந்திரனிடம் விசாரணை செய்ய உள்ளோம். அவரை மறு விசாரணைக்கு வரும்படி தகவல் அனுப்பியுள்ளோம்.
கேரளாவிற்கு எங்கள் குழு சென்றுள்ளனர், என்றார்.

இந்நிலையில் நேற்று காலை கேரளா சென்ற சி.பி.சி.ஐ.டி., போலீசார் திருவனந்தபுரத்தில் ஜார்ஜ் என்பவரை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் டாக்டர் வெங்கடேசன் சார்பில் தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருவருக்கும் ஜாமின்கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
செப்.,30ல் முறைப்படி மனு செய்ய நீதிமன்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் , தேனி மருத்துவ கல்லுாரியில் ஆய்வு செய்தனர்.
மாணவர்களின் வருகை பதிவேட்டில், உதித்சூர்யா செப்.,12ல் கல்லுாரிக்கு வந்திருந்தார் என்பதற்கு 'பி'(பிரசன்ட்) என குறிப்பிட்டு, பின்னர் 'ஏ'(ஆப்சன்ட்) என மாற்றப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

செப்.,18 ல் க.விலக்கு போலீசில் ஆள்மாறாட்டம் தொடர்பாக புகார் அளித்த முதல்வர் ராஜேந்திரனிடம் நிருபர்கள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து,
 தேனி மருத்துவ கல்லுாரிக்கு வந்தது, உண்மையான உதித்சூர்யாவா அல்லது போலியான நபரா கேட்டதற்கு, போலியான நபர்தான் என கூறியிருந்தார். போலி நபர் குறித்த பயோ டேட்டா ஆதாரத்தையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதனால் முதல்வரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் ஆள் மாறாட்டம் தொடர்பாக விசாரிக்க, கல்லுாரியில் முதல்வர் அமைத்த குழு முன் ஆஜராக, செப்., 14ல் கல்லுாரிக்கு உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் வந்திருந்தார்.
 ஏற்கனவே பழக்கமானவர் என்பதால், அவரை தனது காரில் தேனிக்கு அழைத்து வந்தார் முதல்வர் ராஜேந்திரன்.
அப்போது பின் தொடர்ந்து சிவப்பு டூவீல் வந்த நபர் குறித்தும், முதல்வர் அறையில் தன்னை மிரட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் குறித்தும், வீடியோ ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் முதல்வர் கொடுத்துள்ளார்.
அதுவும் விசாரிக்கப்பட உள்ளது.

சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில், 'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட புகாரில் சிக்கியுள்ள சென்னை, கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் மூன்றுபேர், அவர்களின் பெற்றோர் இன்று காலை தேனி சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
அவர்களிடம் விசாரிக்கப்பட்டபின்  எஞ்சிய நான்கு மாணவர்கள் பெற்றோரிடம் விசாரித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், 'என்றனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு