ஒரு மயில் சிலை போதுமா?

 பாஜக ன் அடுத்த இலக்கு?
நீதித்துறை !


இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணிகளைப் போன்று சார்பு நீதித்துறையில்  மாவட்ட நீதிபதி களின் நியமனம்   பணி நிறுவன முறைகளை  அகில இந்திய நீதித்துறை பணி என்னும் மத்திய அமைப்பிற்குள்  கொண்டு வருவதற்கு பிஜேபி அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.

நீதித்துறை சீர்திருத்தம் குறித்த நடவடிக்கைகள்  மற்றும் ஆய்வுகள் என்ற  திட்டத்தின் கீழ் இந்திய பெருமுதலாளிகளின் ஆதரவு பெற்ற  விதி மையம் ( Vidhi Centre for Leval Policy) என்னும் அமைப்பு  சட்ட அமைச்சகத்திற்கு இந்திய நீதித்துறை பணியை உருவாக்கு வது பற்றி  தனது முன்மொழிவை அளித்திருந்தது. 15.2.2019 அன்று கூடிய நீதித்துறை அமைச்சகத்தின் திட்ட அனுமதிக்குழு இந்த முன்மொழிவில் இந்திய உயர்நீதி மன்றங்கள், மாநில அரசுகளின்  பொதுக்கருத்தை அடைய முடியவில்லை என்று 1.3.2019  அன்று அறிவித்தது.
 தேர்தலில் அசுர பலத்துடன் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிய மோடி அரசு மீண்டும் இந்திய உயர்நீதிமன்றங்கள், மாநில அரசுக ளிடமிருந்தும் புதிதாக  கருத்துரைகளை  கோரியிருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை  மாநிலங்களின் காவல் நிர்வா கத்தை டம்மியாக்கும்  மத்திய  புலனாய்வு முகமையின் அதிகார  விரிவாக்கம், மருத்துவக்கல்வியை சீரழிக்கும் சமீபத்திய சட்டம், விதி 370 அளித்த சிறப்பு அந்தஸ்தை பறித்து ஜம்மு - கஷ்மீர் மாநிலத்தை சிதைத்த ஜனநாயக படுகொலை இவைகளைப் தொடர்ந்து   சார்பு நீதித்துத்துறை நிர்வாகத்தின் சுதந்திரத்தை பறிப்பது   இந்துத்வா சர்வா திகாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாங்கள் நீதித்துறையில்  திறமையானவர்களையே விரும்புகிறோம், தேர்வு தகுதி அடிப்படையில் இருக்க வேண்டும். சிறந்த திறமைகளை ஏற்றுக்கொள்ள  வேண்டும் (லைவ் லா -28.6.2019 ) என்கிறார்.
நீதித்துறையில் உயர் தரத்தை பராமரிக்க தரவரிசை அடிப்படையில் அகில இந்திய நீதித்துறை பணித் தேர்வை  பரிசீலிக்கலாம்.
 சார்பு  நீதித்துறை நீதிபதிகள், இந்திய சட்டப் பணிகள், அரசு வழக்குரைஞர்கள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் சட்ட வரைவாளர்கள் ஆகியோரின் தேர்வுகளை மத்திய பணியாளர் சர்வீஸ் கமிஷனிடம் ஒப்படைக்கப்படலாம் என ( நிதி ஆயோக் பக்கம்  180 - நவம்பர் 2018 ) நிதி ஆயோக் கூறுகிறது.  நிதிஆயோக்கின் இந்த கருத்துதான்  ஆர்எஸ்எஸ்-பிஜேபியின்   உண்மை யான ஆசையாகும்.


சார்பு நீதித்துறையில் திறமையானவர்கள் இல்லாதது போலவும் தேசிய அளவில் தேர்வுமுறையை கொண்டு வந்துவிட்டால் மட்டுமே விரைவான தரமான நீதி மக்களுக்கு கிடைத்துவிடும் என்பது போலவும் பிஜேபி கூறுகிறது.
சார்பு நீதித்துறையில் மொத்தம் 22026 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 5133 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை ஏற்றுக்கொள்ள முடியாது ( ஏஎன்ஐ 23.10.2018) என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அமர்வு கூறியுள்ளது.
 உண்மையில்   இந்திய நீதித்துறை அடிப்படையை பலப்படுத்த போதுமான  நிதி ஒதுக்கீடு செய்யாமலும் நீதிபதி கள் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் பிஜேபி அரசு தொடர்ந்து அலட்சியம் செய்துவருகிறது. இவைகளே நீண்ட வரலாறு கொண்ட உலகின் மிகப்பெரிய   நீதித்துறையின் பலவீனத்திற்கு அடிப்படை காரணங்கள்.
இந்திய அரசியல் நிர்ணய சபையின் 16.9.1949 தேதிய நடவடிக்கைகளில்  சார்பு நீதித்துறையைப் பற்றிய அரசிய லமைப்பு விதிகளை (விதிகள் 233 - 237) இறுதி செய்யும்   விவாதங்களின்போது  மூல வரைவு விதி  209ஏ- திருத்தங்க ளை சட்ட மேதை அம்பேத்கர் முன் வைத்தார். இதன்மீது   சார்பு நீதித்துறையில்  நீதிபதிகளின் நியமனம், பதவி உயர்வு மற்றும் பிற பணி நிலைமைகள் மிகுந்த கவனத்துடனும் கவலையுடனும்  விவாதிக்கப்பட்டிருந்தன.
பிரிட்டிஷ்  மாகாணங்களின்  நிர்வாகம் மற்றும் புதிய இந்தியாவின் மாநில   நிர்வாகங்களின்  நேரடி கட்டுப்பாட்டி லிருந்த சார்பு நீதித்துறையை விடுவித்து  அந்தந்த உயர்நீதி மன்ற நீதி நிர்வாகத்தின் கீழ்  மாவட்ட நீதித்துறை சுதந்தி ரமாக இயங்க அம்பேத்கர் வடிவமைத்த மேலே கூறப்பட்ட அரசியலமைப்பு சட்டவிதிகள் வகை செய்துள்ளன.
ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக சட்டவியல் அனுபவம் கொண்ட ஒருவரை உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றே மாவட்ட நீதிபதிகளாக  ஆளுநர் நியமிக்க வேண்டும் என 233-வது அரசியலமைப்பு சட்டவிதி கட்டாயமாக்கியுள்ளது.  

 அந்தந்த   தேசிய இனங்களைச் சார்ந்த  அம்மக்களின் வாழ்வியல் முறை, பண்பாடு, கலாச்சாரம், மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளைப்  பற்றி நன்கறிந்த அம்மண்ணின் தகுதிவாய்ந்த வழக்கறிஞர்களை இந்திய மாவட்டங்களின் நீதிபதிகளாகும் வாய்ப்பினை  விதி 233-அளித்தது.
 இந்திய நீதித்துறை செயல்பாடுகளைப் பற்றிய  விமர்சனங்கள் இருந்தாலும்   இது  சட்டமேதை அம்பேத்கர் உருவாக்கிய இந்திய நீதித்துறை மாட்சிமையின் முக்கியக் கூறுகளில் ஒன்று  என  கூறலாம்.  உலகில் ஒவ்வொரு நாட்டின் சமூக பொருளாதார வாழ்வியல் நிலையைப் பொறுத்தே அந்நாட்டின் சட்ட நுகர்வாளர்களும் உள்ளனர்.

அவர்களுக்கான நீதியை வழங்குவதில்தான் அந்நாட்டின் நீதித்துறை மாட்சிமையும் உள்ளது. நியூயார்க்கிலிருந்து பாஸ்டன்  நகருக்கு  காரில் பயணம் செய்யும் அமெரிக்கர் ஒருவர் தன்மைமாறிய குளிர் பானத்திற்கு இழப்பீடு கோரி காரில் பயணம் செய்தவாறே தனது வழக்கறிஞருக்கு அறிவுரை அனுப்ப முடியும்.
அமெரிக்க சட்டநுகர்வாளரின் இந்த வாழ்வியல் நிலையும்   கீழமை நீதிமன்ற படிக்கட்டுகளிலும் மரத்தடியிலும்  குத்துக் காலிட்டு அச்சம் -ஏக்கம் கலந்த முகத்தோடு  காத்திருக்கும்  ஏழை இந்திய சட்ட நுகர்வாளர்களின் வாழ்வியல் நிலைமை யும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை.
சர்வதேச நீதித்துறை நெறிகளின் பொதுவான  வெளிச்சமிருந்தாலும்   இந்திய  நீதித்துறையின் மாட்சிமை ஏழை இந்திய மக்க ளுக்கான  நீதி வழங்கும் முறையில்தான்  உள்ளது.  நியாய மான வாய்ப்புகளை அளித்து தரமான விரைவான ஊழ லில்லா  நீதியை கடைக்கோடி இந்தியனுக்கும்  அளிக்கும்    கோட்பாடுதான் இந்திய நீதித்துறையின்  ( Sanctity of Indian Judiciary ) மாட்சிமையாக இருக்க முடியும்.

பாமர  சட்ட நுகர்வாளருக்கு  எளிதில் புரியும் வகையில் வழக்கறி ஞர்களும்  நீதிமன்ற நடவடிக்கைகளும் ஏன் நீதிபதியும் இருக்க வேண்டும். நீதிபதிகள் இந்திய சட்ட நுகர்வாளர்களி டமிருந்தே உருவாக வேண்டும்.
இந்திய குற்றவியல்-உரிமையியல்-கார்ப்பரேட் உள்ளிட்ட  மத்திய, மாநில சட்டங்கள்  இவைகளின் நடை முறை விதி கட்டாய வகையங்களைக் கொண்ட மென்பொ ருள் நிரல்களால்  நிரப்பப்பட்ட சூப்பர் கம்யூட்டர் எந்திரன்கள் இந்திய நீதித்துறைக்கு   தேவையில்லை.
இப்படி உருவாக்கப் பட்டவர்கள் கார்ப்பரேட்டுகளுக்குதான் சேவை செய்ய முடியும்.  அப்படிப்பட்ட எந்திரன்களை உருவாக்கி கோர்க்கும் சோதனைக்கூடம்தான் அகில இந்திய நீதித்துறை பணியும்  மற்றும் அதன் நடைமுறைகளுமாகும்.
  சட்டப்பிரிவுகளை வாத வெளிச்சத்தோடும் மக்களின் வாழ்வியலோடும் பகுத்தாய்ந்து தீர்ப்பு வழங்கும்  உளவியல் ஆற்றல் கொண்ட வர்களே இந்திய நீதித்துறைக்குத்  தேவை.
  ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்ட நீதிபதியாக நியமனம் பெறும் புத்தம் புதிய ஒரு  குஜராத் சட்டப்பட்டதாரியின் மழலை தெலுங்கு  நட வடிக்கைகள் பெரும்பாலான வழக்கறிஞர்களுக்கே  சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 அப்படியா னால்  சாட்சிய, குற்றவாளிக்  கூண்டுகளில்   நிற்கும் பாமர ஆந்திரர் எதை புரிந்து கொள்ள முடியும்?  

பிஜேபி-நிலையை ஆதரிக்கும் சில கார்ப்பரேட்  பத்திரி கைகள்  1955-இல் அமைக்கப்பட்ட முதல் சட்டக்கமிஷ னின்  அறிக்கை எண்: 14 மற்றும் 1985-இல் அமைக்கப்பட்ட 11வது கமிஷனின் அறிக்கை எண்: 116-களின் பரிந்துரை களை பயன்படுத்திக் கொள்கின்றன.
நீதித்துறை சுதந்தி ரத்தை பாதுகாக்கும் அரசியலமைப்புச்சட்ட  விதி 233-237-உருவான காலத்திலிருந்தே  அதற்கு எதிரான கருத்துக்கள் வாய்ப்பினை எதிர் நோக்கி காத்திருந்தன என்பதையும்  மாமேதை அம்பேத்கரின் போராட்டம்
அப்போது எப்படிப்பட்ட தாக  இருந்திருக்கக்கூடும் என்பதையும் இந்த அறிக்கைக ளின் வாதங்கள் புலப்படுத்துகின்றன.
அறிக்கை எண்:14, அத்தியாயம் 9,   பக்கம் 163, பத்தி 7 - தென் மாநிலங்களில் சாதி மற்றும் பிராந்திய முன்னுரி மைகளின் மூலம்  திறமை குறைவானவர்கள்  தேர்வு செய்யப் படுவதால்தான்   பொருத்தமானவர்களை  தேர்வு செய்ய முடிய வில்லை என்று சமூக நீதிக்கு எதிராக கூறுகிறது.


 பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளிலிருந்து வந்த  ஆயிரக்கணக்கான நீதிபதிகள் இன்று  இந்திய மாவட்ட நீதிமன்றங்களை   அலங்க ரிக்கின்றனர்.
 அரசியல்-தனிநபர் குடும்பம்-கார்ப்பரேட் வழக்கு களில் இவர்களது    அறிவார்ந்த  வாத, தீர்வுகளை   நாம் ஏராள மாக காணலாம்.இவை இந்துத்வா வியாக்கியான போலித் திறமையை அம்பலப்படுத்துகின்றன.  பக்கம் 164-இல் சார்பு நீதித்துறை அதிகாரிகளுக்கான தேர்வு களத்தை பெரிதாக்க வேண்டும். அப்போதுதான் அதி லிருந்து தகுதியானவர்களை பெற முடியும் என அறிக்கை கூறுகிறது.
 பக்கம் 654 மாவட்ட நீதிமன்றங்களில்  இந்தியை முதன்மையாக்குவதற்கு வசதியாக இப்போதே உயர்நிலை பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறது.
அறிக்கை எண்:116- பல நல்ல விவா தங்களை முன் வைக்கும்போதே நீதிபதி தேர்வில் வகுப்பு மற்றும் பிராந்திய முன்னுரிமைகளிலிருந்து நழுவி  இந்திய நடை முறைகளுக்கு சாத்தியமற்ற வழிகளையே காட்டுகிறது. ஆனால் இந்த அறிக்கைகள் சட்டக் கல்லூரிகள், வழக்கறிஞர்கள், நீதி மன்றங்கள், சிறைச்சாலைகள் அடங்கிய நீதித்துறை கட்டுமானம் மற்றும் இந்திய சட்டவியல்  மிக ஆரம்ப நிலையில்  இருந்த 1955-1985 காலத்திற்குட்பட்டதாகும்.
அதன் பரிந்துரைகளை 60, 30  ஆண்டுகளுக்கு பிறகு இப்போது எடுத்துக்கொண்டு விவாதிப்பது அடிப்படையிலேயே பொருத்தமற்றதாகும்.
அரசியலமைப்புச்சட்ட விதிகள் 233-237இன் மாண்பு கள் இந்திய சட்டநுகர்வாளர்களுக்கான  நீதித்துறையின் தேவைகளை 21வது நூற்றாண்டிற்கு அப்பாலும் எடுத்துச்செல்லும் சமூக நீதியை கொண்டவை.

  பிஜேபி   மாடல் இந்திய நீதித்துறை பணி அதன் தேசிய  அளவிலான தேர்வு முறை சார்பு நீதித்துறையை அந்தந்த உயர்நீதிமன்றங்க ளின் நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து துண்டித்து   நீதித்துறை யின் சுதந்திரத்தை பறித்துவிடும்.
சார்பு நீதித்துறை மீதான மாநில அரசின் பொறுப்பை பறித்து கூட்டாட்சி முறையை மேலும் பலவீனப்படுத்தும். 2014-2018 ஐந்து ஒதுக்கீட்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு  அனுப்பப்பட்ட  இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 56 பேர்.
இதில்  25 அதிகாரிகள் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
எஞ்சிய 31 பேர் பிற மாநிலத்த வர். (ஆதாரம்: மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஐஏஎஸ் சிவில் பட்டியல்). இது ஒரு உதாரணம்தான்.
 பிற மாநில புத்தம் புதிய சட்டப்பட்டதாரிகள் சமமற்ற முறையில்  வேறுவேறு  மாநிலங்களில் நியமிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்போது  அந்தந்த மாநில வழக்கறிஞர்  மன்ற  உறுப்பினர்களின்  பிரதிநிதித்துவத்தையும்  இது சீர் குலைத்து விடும் நிலை உருவாகிடும்.
 இது சார்பு நீதித்துறை நீதிபதிகளிடையே  உயர்வுதாழ்வையும் ஏற்படுத்தி ஒருங் கிணைப்பை சீர்குலைக்கும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டை காலப்போக்கில் கேள்விக்குறி யாக்கும்.  மாவட்ட நீதிமன்றங்களின் மீது மக்கள் கொண்டி ருக்கும்  நம்பிக்கையை அடியோடு முறித்து விடும் மிகப்பெரும் அபாயம் ஏற்படும். பிஜேபியின்  நோக்கம், நீதித்துறை சீர் ருத்தமல்ல.

 ஒரே கலாச்சாரம், ஒரே சட்டம், ஒரே ஆட்சி முறை, ஒரே நாடு என்னும் ஆர்எஸ்எஸ்-இன்பாசிச நோக்க மான அதிகாரக் குவிப்பின்  பின்புலத்தைக் கொண்டது. 
                                                                                                                                                                                    - சுஜித் அச்சுக்குட்டன்
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 8 முக்கியத் துறைகளின் 

வளர்ச்சி 2 சதவிகிதமாக குறைந்தது!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது (ஜிடிபி) கடந்த 25 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண் டில் 5 சதவிகிதமாகக் குறைந்தது.

இது தொடர்பான பரபரப்பே இன்னும் குறையாத நிலையில், தற்போது நாட்டின் உற்பத்தி மற்றும் தொழிற்துறைக்கு அடிப்படையாக விளங்கும் 8 முக்கியத் துறைகளின்(Core sectors) வளர்ச்சியும் எப்போதும் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.

2018 ஜூலை மாதத்தில் 7.3 சதவிகிதமாக இருந்த 8 துறைகளின் வளர்ச்சி நடப்புநிதியாண்டின் ஜூலை மாதத்தில் வெறும் 2.1 சதவிகிதம் என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது. 

அதிலும் குறிப்பாக, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்புப் பொருட்கள் துறையின் வளர்ச்சி ஜூலை மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை அடைந்துள்ளது.

விவசாய உரம், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்புப் பொருட்துறைகளே நாட்டின் 8 முக்கியத் தொழிற்துறைகளாக விளங்கி வருகின்றன. இத்துறைகளின் சராசரி வளர்ச்சி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 7.3 சதவிகிதமாக இருந்தது. இது தற்போது 2.1 சதவிகிதம் என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது.
 இதேபோல் ஏப்ரல் ஜூலை காலாண்டில்இந்த 8 துறைகளின் சராசரி வளர்ச்சி 5.9 சதவிகிதமாக இருந்தது. நடப்புக் காலாண்டில் இதன் அளவீடு 3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.மேற்கண்ட 8 துறைகளே, நாட்டின் தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டில் 40.27 சதவிகித அளவை கொண்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

 மும்பை பங்குச் சந்தையான ‘சென்செக்ஸ்’ ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது.
 36 ஆயிரத்து 500 முதல் 39 ஆயிரம் புள்ளிகளுக்கு உள்ளேயே நீண்டநாட்களாக வர்த்தகமாகி வரும் மும்பை பங்குச் சந்தை, கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி, 36 ஆயிரத்து 213 புள்ளிகளுக்கு சரிவைச் சந்தித்தது.இந்நிலையில், வார வர்த்தகத்தின்இரண்டாவது நாளான செவ்வாயன்றுமும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையான நிப்டி ஆகிய இரண்டுமே பலத்தஅடி வாங்கியிருக்கின்றன.

காலையில் வர்த்தகம் துவங்கும் போதே, சென்செக்ஸ் சுமாராக 450 புள்ளிகள் சரிந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
அந்த அதிர்ச்சி வர்த்தக நேரம் முடியும் வரை தொடர்ந்தது.
 காலையில் 36 ஆயிரத்து 879 புள்ளிகளில் இருந்தவர்த்தகம், வர்த்தக நேர முடிவில் 769.88 புள்ளிகள் சரிந்து, 36 ஆயிரத்து562.91 புள்ளிகளுக்கு வீழ்ச்சியடைந்தது.

காலையில் சுமார் 145 புள்ளிகள் சரிவுடன் 10 ஆயிரத்து 878 புள்ளிகளில் தேசிய பங்குச் சந்தை வர்த்தகம் துவங்கியது.
 வர்த்தக நேர முடிவில், மேலும் 75 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 797 புள்ளிகளுக்கு இறங்கியது.குறிப்பாக, வங்கிகள், ஆட்டோமொபைல் துறைகள் அதிக சரிவை சந்தித்தன.
 டாடா மோட்டார், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் ஆகிய நிறுவனங்களும் அதிக இழப்பை சந்தித்துள்ளன.வங்கிச் சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை இணைத்ததே, பங்குச்சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தத்துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
 இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் சந்தை வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஒரு மயில் சிலையும், 
தாமரை சிலையும் போதுமா?
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், முன்பு கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவாண் கூறியுள்ளார்.
திடீரென உள்ளே புகுந்து வைக்கப்பட்ட சிலைகள் மட்டுமே ஆதாரமாகி விடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அயோத்தியில் இருந்த 400 ஆண்டு பழமையான பாபர் மசூதியை, கடந்த 1992-ஆம் ஆண்டு சங்-பரிவாரங்கள் இடித்துத் தரைமட்டமாக்கின.

மசூதி இருந்த 2.77 ஏக்கர்நிலத்திற்கும் தற்போது உரிமை கொண்டாடி வருகின்றன.

 இதுதொடர்பாக, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய3 பிரிவினருக்கும் இடையே உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அப்துல் நசீர், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

இந்து அமைப்புக்களின் வாதங்கள் ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், சன்னிவக்பு வாரியம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவாண், தனது வாதத்தில் எடுத்துரைத்ததாவது:“இந்த நீதிமன்றத்தில் இந்துக்களின் நம்பிக்கை குறித்து வாதங்களை வைத்துவருகிறார்கள். ராமர் பிறந்த இடம், ராமர்கோவில் இருந்த இடம் என்று இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வாதங் களை வைத்து வருகிறார்கள்.
ஆனால், அதற்கான ஆதாரமே இல்லை.
இந்த வழக்கு எதன் அடிப்படையில் நடக்கிறது?
 ராமர் அங்குதான் பிறந்தார் என்பதை எப்படி இவர்கள் வரலாற்று ரீதியாக நிரூபிப்பார்கள்?
எப்படி அவர்களால் உறுதியான சாட்சியங்களை வழங்க முடியும்?
 மசூதியில் ஒரே ஒரு மயில் சிலையும், தாமரை சிலையும் கிடைத்தால் அது இந்து கோவிலா?
 இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முன்பு நாம் வைக்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அந்த இடத்தில் ஒருகோவில் இருந்ததா?
 அங்கு ஒரு மசூதியைகட்டுவதற்காக அந்த கோவில் இடிக்கப்பட் டுள்ளதா? என்பது தான்.

வேதகாலத்தில் கோவில்கள் எதுவும்இல்லை, மடங்கள் இல்லை.
சிலை வழிபாடுகளும் கிடையாது. மத நிறுவனங்கள் புத்தருடைய காலத்தில் தான் வந்தன.
ஆனால் சிலை வழிபாடு எப்போது தொடங்கியது என்
பதை உறுதியாக கூறமுடியாது.

 பிரகாரம் வலம் வருவது என்பது ஒரு வழிபாட்டு முறையே தவிர அது எந்த வகையிலும் ஆதாரம் ஆகாது. இந்தியாவுக்கு வருகை தந்த யாத்ரீகர்கள் அந்த இடத்தில் மசூதி இருந்ததாக எங்கும் கூறவில்லை என்று வாதம் வைக் கப்படுகிறது.
 மார்கோ போலோகூடத்தான் சீனப்பெருஞ்சுவர் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை.
சீனப் பெருஞ்சுவர் இல்லை என்றாகி விடுமா?
 நாம் முதிர்ச்சியற்ற வரலாற்றுஆசிரியர்களின் கருத்துகளை எடுத்துக் கொள்ள முடியாது.நான் 1828-ல் இருந்து வாதங்களை தொடங்க நீங்கள் உத்தரவு பிறப்பித்தால் என்னால் அந்த இடத்தில் மசூதி இருந்தது என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை நிறுவமுடியும்.
சிவில் வழக்கில் சரித்திரத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படும் வாதங்களுக்கு இடமில்லை. இதுதொடர்பாக பல தீர்ப்புகள் உள்ளன.
சரித்திரம் என்று கூறும் இதே நபர்கள் தான், 1934-இல் இருந்து தங்கள் கண்முன் இருந்த ஆதாரங்களை மறந்துவிட்டார்கள்.
பாபர் மசூதி இருந்த ஆதாரத்தையே மறந்து விட்டனர்.

இங்கிருந்த மசூதி வெறும் இடத்தில் கட்டப்பட்டது.
மசூதி கட்டப்பட்ட நேரத்தில் அந்தநிலத்தில் எதுவுமே இல்லை. அங்கு தரையில்எதுவுமே காணப்படவில்லை. இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து இருக்கிறோம்.
இங்கு மசூதி கட்டப்பட்ட நேரத்தில் எந்த இந்து கோவிலும் இல்லை.இதில் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு செய்கிறதோ அதுதான் இந்தியாவின் முகமாக இருக்கும்.
 ஏனெனில் இந்தியா மதச்சார்பற்ற நாடு.
அதன் முகத்தை காக்க வேண்டும் என்றால், நீதிமன்றம் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
தீர்ப்பு வழங்கும் முன்பு, உச்ச நீதிமன்றம் அதனைக் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த வழக்கு இந்தியாவின் எதிர்காலம்தொடர்பானது.
 நாம் இந்திய அரசியலமைப்புச் சட்ட ரீதியாக இதை விசாரிக்க வேண்டும். நீதித்துறையில் நாம் கடைப்பிடிக்கும் சட்டம் வேதத்தின் அடிப்படையிலான சட்டம் அல்ல.
 இந்தியாவில் சட்ட நடைமுறைகள் 1858-ஆம் ஆண்டில் அமலுக்கு வந்து விட்டன.இவ்வாறு ராஜீவ் தவான் கூறியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
டிவிட்டர் நிர்வாகிக்கே பாதுகாப்பில்லை
டிவிட்டர் சமூக வலைத்தளத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான ஜாக் டோர்சி(Jack Dorsey)யின் டிவிட்டர் கணக்கு சென்ற வாரத்தில் ஹேக் செய்யப்பட்டது.
இதற்கு தாங்களேகாரணம் என சக்லிங் ஸ்க்வாட் என்ற பெயரிலான ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது. 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடரும் இக்கணக்கை, ஹேக் செய்யப்பட்ட 15 நிமிடங்களிலேயே கண்டறிந்துவிட்டனர். மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு, இடைப்பட்ட நேரத்தில்,மிகவும் வன்முறையை தூண்டக்கூடிய இனரீதியிலான டிவிட்டுகள் பதியப்பட்டன.
 சில பதிவுகள் @jack என்ற ஜாக்கின் கணக்கில் இருந்து நேரடியாக பதிவு செய்யப்பட்டன. பிற பதிவுகள் பிற கணக்குகளில் இருந்து ரீட்வீட் செய்யப்பட்டன. இது எப்படி நிகழ்ந்தது என்பதற்கு டிவிட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஒருவர் தனது டிவிட்டர் கணக்கை மூன்றாம்தரப்பு சேவை வழங்குனர்கள்  மூலமாக பயன்படுத் தும்போது இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
குறுச்செய்தி ஒருங்கிணைப்பு மேம்படுதலுக்காக 2010ஆம் ஆண்டுடிவிட்டர் நிறுவனத்தால் வாங்கப்பட்ட `க்ளவுட்ஹூப்பர்` என்னும் தளத்தின் வழியாக இந்தடிவிட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன.அதாவது, ஒரு டிவிட்டர் பயனாளர் தனது டிவிட்டர்கணக்கில் நேரடியாக சென்று பதிவிடுவதற்கு மாற்றாக, மொபைல் மூலமாக குறுஞ்செய்தி (SMS)அனுப்புவது போன்ற முறையில் டிவிட்டரில் பதிவுகளை இடுவதற்கு க்ளவுட்ஹூப்பர் தளம் சேவைஅளிக்கிறது.
அந்த சேவையை பயன்படுத்துவதற்கு அத்தியாவசியமான ஜாக் டோர்ஸியின் சிம் கார்டைஹேக்கர்கள் ‘சிம் ஸ்வைப்பிங்’ எனும் முறையின் மூலம் போலியாக உருவாக்கி அதன் மூலம் இந்த டிவிட்டர் பதிவுகளை இட்டுள்ளனர் என்று விளக்கமளித்துள்ளது.
இந்த விளக்கம்தான் நமக்கு ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் எழுப்புகிறது.

சிம் ஸ்வைப்பிங்என்பது தொழில்நுட்பத்தில் முன்னேறிய அமெரிக்காபோன்ற நாட்டில்- மிகப்பெரிய தொழில்நுட்பநிறுவனத்தின் நிர்வாகிக்கே ஏற்படுகிறதென்றால், ‘டிஜிட்டல் இந்தியா’வில் இதுபோன்ற நிலையைசாதாரண மக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது கவலைப்படத்தக்கதாகும்.
பேஸ்புக் தகவல் திருட்டில் மூன்றாம் நபரானகேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மீது குற்றம் சுமத்தப்பட்டதும்.
, இதேபோல கேம்ஸ்கேனர்  வைரஸ் தாக்குதல் பிரச்சனையில் மூன்றாம் நபரான ஆட்ஹப் போன்ற நிறுவனங்கள் கைகாட்டப்படுவது போலவேடிவிட்டரும் தங்கள் பிழையல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.  மூன்றாம் நபர்களுக்கு அனுமதியளிப்பதன் மூலம், இது போன்ற பிரச்சனைகள் வரும்போது அதில் தங்களுக்கும் தார்மீக ரீதியில் பங்கிருக்கிறது என்பதை இவர்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வதே இல்லை.


கேம்ஸ்கேனர்
 டாக்குமெண்ட்களை மொபைல் மூலம் ஸ்கேன்செய்து அனுப்புவதற்கு அதிகம் பயன்படுத்தும் கேம்ஸ்கேனர் (Cam Scanner)ஆப் வைரஸ் தாக்குதல் மற்றும் அதிக விளம்பர தொல்லைகள் தருவதாககேஸ்பர்ஸ்கை நிறுவனம் கூகுளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் கேம்ஸ்கேனர் பிளேஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கேம்ஸ்கேனர் நிறுவனம், தங்களுடைய ஆப்பில் 3ஆம் நபர் விளம்பர நிறுவனமாக இணைந்துள்ள ஆட்ஹப் நிறுவனம்தான் வைரஸ் தாக்குதலுக்கு காரணம் என்றும்தற்போது அந்நிறுவனத்தின் விளம்பரங்கள் நீக்கப் பட்டு,  சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பாதிப்பு  ஆண்ட்ராய்ட்5.11.3, 5.11.5, 5.11.7 மற்றும் 5.12.0 ஆகிய பதிப்புகள்கொண்ட மொபைல்கள் மட்டுமே பாதிப்புக்கு உள் ளாகியிருப்பதாகவும், உடனடியாக கேம்ஸ்கேனர் அப்டேட்டை https://www.camscanner.com/ இணையதளம் அல்லது MI App Store மூலமாகபதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
 கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ளது இந்த அப்டேட்  செய்யப்பட்ட ஆப் இன்னும் கூகுள் பிளேவில் வழங்கப்படவில்லை.எனவே பழைய புதிய ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள் எவரானாலும் உடனடியாக கேம்ஸ்கேனர் மென்பொருளை அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கி அப்டேட் செய்து கொள்ளுங் கள்.
ஸ்கேனர் தேவையில்லை எனும் பட்சத்தில் உடனடியாக நீக்கிவிடவும். 

யுபிஐ பேமண்ட் கவனம்
தற்போது பிரபலமடைந்துள்ள யுபிஐ  (UPI )டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையில் ஐடி (UPI ID) விபரங்களை அறிந்து கொண்டு பணம் அனுப்பக் கேட்டு (Payment Request Notification) குறுஞ் செய்திகள், வாட்ஸ்அப் தகவல்கள் வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு அறிமுகமில்லாத எண்கள் அல்லது நபர்கள் மூலமாக கிடைக்கும் இத்தகவல்களை உறுதி செய்யாமல்பணம் அனுப்புவதற்கு ஓகே செய்யவேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



ஆண்ட்ராய்ட் 10
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட ஒவ்வொரு பதிப்பிற்கும்  பிரபலமான இனிப்புகளின் பெயர் களை சூட்டி வந்தது.
தற்போது இதனைத் தவிர்த்து,வரவிருக்கும்  ஆண்ட்ராய்ட் Q பதிப்பு ஆண்ட்ராய்டு10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 இதற்காக புதிய ஆண்ட்ராய்ட்இலட்சணையும் (Logo) உருவாக்கப்பட்டுள்ளது.

கூகுள் கோ செயலி
கூகுள் கோ என்ற பெயரில் யுடியூப், ஜிமெயில்,சர்ச் ஆகியவற்றிற்கான  செயலிகளை குறிப்பிட்ட சிலமாடல் கொண்ட (உதாரணம் ரெட்மீ கோ) ஸ்மார்ட்போன்களில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.
இச்செயலிகள் தற்போது உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு5.0 லாலிபாப் மற்றும் அதற்கு பிந்தைய இயங்குதள வடிவங்களில் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் கோ தேடல் செயலியை பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய அளவு 7 எம்பி ஆகும்.
கூகுள் தேடுபொறி செயலியைப் பயன்படுத்துவது போன்றே உணர்வைத் தரக்கூடியதாக உள்ளது இச்செயலி.கூகுள் கோ செயலியில் ‘லென்ஸ்’ என்று ஓர்அம்சம் உள்ளது. பயனர்கள் சொற்றொடர்களை மொழிபெயர்ப்பு செய்ய இந்த அம்சத்தை பயன் படுத்தலாம்.
கேமரா மூலமாக வேறு மொழியில் உள்ள அறிவிப்பு பலகைகளைப் படம் பிடித்து நம்விருப்ப மொழிக்கு மாற்றிப் பார்க்கக்கூடிய வசதியும்உள்ளது. இணைய பக்கத்தை சத்தமாக வாசிப்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது.
 செயலிகளின் இணைய வடிவத்தை எளிதாக சென்றடைவதற்கும் கூகுள் கோ உதவுகிறது. இதை பயன்படுத்திதேடிக்கொண்டிருக்கும்போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால், பயன்படுத்தும்போது பயனர் இருந்த இடத்தை நினைவில் வைத்து, மீண்டும் இணைப்பு கிடைத்ததும் பயனர் தேடியவற்றிற்கு பதில் தரும் வசதியும் கூகுள் கோ செயலியில் உள்ளது.
                                                                                                                                       -என்.ராஜேந்திரன்


-----------------------------------------------------------------------------------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?