இன்னும் இரண்டாண்டுகள் இப்படித்தான்.

 நலிவுற்ற 

பொருளாதாரத்தில் இந்தியா!

உலகின் 90 சதவீதம் நாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவுவதாகவும், அதில், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நிலைமை மோசமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார். 
கிறிஸ்டலினா ஜார்ஜிவா

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோ மொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா முன்பு இருந்த இடத்தில் இருந்து 10 இடங்கள் பின்னடைவை சந்தித்துள்ளதாக உலக பொருளாதார கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில், நடப்பாண்டில் உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்பதால், அதன் தாக்கம் இந்தியாவிலும் மிக கடுமையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின், வாஷிங்டனில் இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) தலைமையகத்தில், கிறிஸ்டலினா ஜார்ஜிவா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
 அப்போது, ஒருங்கிணைந்த மந்த நிலையை, உலகப் பொருளாதாரம் தற்போது சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், “நடப்பு 2019 - 20 நிதியாண்டில், 90 சதவிகிதநாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்தித்துவருகின்றனர். இந்த மந்த நிலைக்கு பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவைதான் காரணம்.” என குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல், இந்த
 “வர்த்தகப் போர் காரணமாக உலக அளவில், பொருளாதார வளர்ச்சி விகிதமானது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப் போகிறது”
என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, “பிரேசில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், நடப்பாண்டில் பொருளாதார மந்த நிலை மிக கடுமையாக இருக்கும்” என்று கூறியுள்ள கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, “மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தகத் திறனைப் பெருக்க வேண்டும்.

உலகப் பொருளாதாரம் இன்னும் வளர்முகமாகவே உள்ளது. ஆனால், மிகவும் மெதுவாக வளர்கிறது.
 இந்த நிலையை சீர்திருத்தவும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் நாம் மெத்தனமாக இருந்துவிட முடியாது. நாம் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக இந்தியா குறித்து கடந்த செப்டம்பர் மாதமே சர்வதேச நாணய நிதியம் கூறுகையில், “இந்தியாவில் கார்ப்பரேட் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் என பலவற்றுக்கும் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அமைந்துள்ளது.
2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் நலிவுற்றதாகவே இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆறுக்குள் நான்கு.
மதுரை மாவட்டத்திற்கு சென்ற 6 மாதங்களுக்குள் மட்டும்  4 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி சாதனை படைத்துள்ளது அதிமுக அரசு.
ஆளுங்கட்சி அதிமுக கொடுத்த  நெருக்கடியால் தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் விடுப்பில் சென்று விட்டார்.அவருக்கு விடுப்பு முடிந்து மதுரை திரும்பி ஆட்சி செய்யும் எண்ணமே இல்லையாம்.

இதனால் மதுரையின் புதியஆட்சியராக க டி.ஜி.வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத்  தேர்தலின் போது, மதுரை ஓட்டு எண்ணிக்கை மையத்தில், பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்ட அதிகாரிகள் அத்து மீறி நுழைந்து ஆவணங்களை எடுத்தும்,நகலெடுத்தும் முறைகேடாக நடந்த விவகாரத்தில் தொடர்பு இருந்ததாக எதிர்க்கட்சிகள் போராடியதால் அப்போதைய ஆட்சியர்  நடராஜன் மாற்றப்பட்டார்.
அவருக்குப் பதிலாக நாகராஜன்  பொறுப்பு ஏற்றார். மிகவும் நேர்மையாக செயல்பட்ட நாகராஜன், ஆளுங்கட்சி அரசியல் தலையீடுகளுக்கு இடம் கொடுக்காமல்,அவர்களின் மிரட்டலுக்கும் பயப்படாமல் அங்கன்வாடி மைய ஊழியர்களை நியமித்தார்.
இதனால் நாகராஜனை மதுரை ஆட்சியர் பொறுப்பில் இருந்து இடம் மாற்றி  அதிமுக  அரசுஆணையிட்டது.

அதனால் சென்னையில்  ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்த ராஜசேகர் ஜூலை 1ல் ஆட்சியராகப்  பொறுப்பு ஏற்றார்.
ஆனால் அவரை நேர்மையாக செயல்படவிடாமல் அதிமுகவினர் கொடுத்த குடைச்சலைத்தாங்க முடியாமல் கடந்த 4ம் தேதி அவர்  விடுப்பில் சென்றுவிட்டார்.
 ஆளுங்கட்சி தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியால்தான்  அவர் விடுப்பில் சென்றதாக அரசு  ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியது.
 தற்போது மதுரை  மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து ராஜ சேகர் மாற்றப்பட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த  டி.ஜி.வினய், மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக  நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆக மதுரை மாவட்டத்திற்கு ஆறு மாதத்திற்குள் நான்கு ஆட்சியர்களை அமர்த்தி சாதனை செய்துள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு.
மதுரையில் மாற்றங்கள் தொடருமோ?

அத்துடன் பல இ.ஆ.ப க்கள் பணியிடங்களை மாற்றம் செய்தும் தமிழக அரசு அறிவித்துள்ள்ளது.
அரியலூர் கலெக்டராக டி.ரத்னா நியமனம் செய்யப்பட்டார்.
வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக ஜே.ராதா கிருஷ்ணன் நியமனம்.
 அரசு போக்குவரத்து முதன்மை கழக செயலாளராக சந்திரமோகன் நியமனம்.
 சுற்றுலா, கலாச்சாரதுறையின் கூடுதல் தலைமைச் செயலராக அசோக் டோங்ரே நியமனம்.
 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலராக இருந்த தீரஜ்குமார் எரிசக்தி துறையை கூடுதலாக கவனிப்பார்.
 நகர்புற நிதி கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக அபூர்வ வர்மா நியமனம்.
தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக இருந்த சந்தோஷ் பாபுவுக்கு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநராக கூடுதல் பொறுப்பு.தூர்தர்ஷன் இயக்குனராக இருந்த சுப்ரியா சாஹூ குன்னூர் செயலராக நியமனம்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக வினீத் நியமனம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்
 உலக மனநல தினம்

உலக  மரண தண்டனை எதிர்ப்பு தினம்

எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்(1906)

தமிழறிஞர் மு.வரதராசன் நினைவு தினம்(1974)

நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது(1991)

 1868  - ஸ்பெயினிடமிருந்து கியூபா விடுதலையடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கியூபாவின் முதல் விடுதலைப்போரான பத்தாண்டுப்போர் அல்லது பெரும் போர் தொடங்கியது.
விடுதலையடைந்ததாக அறிவித்தவர், கரும்புத் தோட்டங்கள், சர்க்கரை ஆலை ஆகியவற்றின் உரிமையாளரான கார்லோஸ் செஸ்பீட்ஸ்!
தவறாமல் குறிப்பிடவேண்டிய செய்தி என்னவெனில், பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்க விடுதலை போன்றவற்றினால் உந்தப்பட்டு, அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான கியூப விடுதலை முயற்சிகளை முதலாளிகள் ஆதரிக்கவில்லை.
ஏனென்றால், அப்போது அவர்களுக்கு அடிமைகள் தேவைப்பட்டனர். அடிமைமுறையை ஆதரித்த ஸ்பெயினின் அரசும் தேவைப்பட்டது.
புதிய தொழில்நுட்பங்களின் வரவால், தோட்டங்களில் தொழிலாளர்களின் தேவை குறைந்துவிட்டதால், அடிமைகளைப் பராமரிக்கும் செலவுகளால் முதலாளிகள் இழப்புக்கு ஆளாகிக்கொண்டிருந்தனர். அதனால் அடிமைமுறைக்குத் தடை, வரிக்குறைப்பு, நாடாளுமன்றத்தில் கியூபர்கள் பங்கேற்பு, ஸ்பானியர்களுக்குச் சமமாகக் கியூபர்களையும் நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளைக்கொண்ட போராட்டங்களை முதலாளிகளே முன்னெடுத்தனர். விடுதலை அறிவிப்பைத் தொடர்ந்து உருவான போர் 1868-78வரை நீடித்து, வெற்றி-தோல்வியின்றி, ஸேஞ்சோன் ஒப்பந்தத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது.
அதற்கடுத்து, 1879இல் தொடங்கி, 1880இல் ஒடுக்கப்பட்டது சிறு போர் என்று குறிப்பிடப்படுகிறது. இவற்றுக்கிடையில், கியூபாவின் ஏற்றுமதியில் 90 சதவீதம் (ஸ்பெயினுக்குச் சென்றதைப்போல 12 மடங்கு!) அமெரிக்காவுக்குச் செல்லுமளவுக்கு அமெரிக்க முதலாளிகள் இங்கு வளர்ந்திருந்தனர்.
 இதனால், கரீபியப்பகுதியில் ஸ்பெயினின் ஆதிக்கத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, தான் கட்டுப்படுத்த விரும்பிய அமெரிக்கா, 1895இல் (மூன்றாவது) கியூப விடுதலைப்போர் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 1898இல் ஹவானா துறைமுகத்திலிருந்த தங்கள் கப்பல் வெடித்ததற்கு ஸ்பெயின்தான் காரணம் என்றுகூறி, அதன்மீது போர்தொடுத்தது.

வேறுவழியின்றி 1898 டிசம்பர் 10இல் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கியூபாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டு ஸ்பெயின் வெளியேறியது. 1902 மே 20இல் கியூபாவிற்கு விடுதலை என்று அறிவித்தாலும், அதன் நிதி, வெளியுறவு விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் தனக்கிருப்பதாகக்கூறிய அமெரிக்கா, படைகளையும் அங்கு நிறுத்தியது.
ஸ்பெயினுக்கு பதிலாக அமெரிக்க ஆதிக்கம் என்பதை ஏற்காத விடுதலைப்போரின் வீரர்கள் 1906இல் நடத்திய ஆயுதப்போரில் அரசுப் படைகள் தோற்றதைச் சாக்கிட்டு, கியூபாவுக்கு ஆளுநரை நியமித்து, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது அமெரிக்கா. இக்காலமே கியூபாவில் ஊழல் உருவான காலம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.

 1908இல் புதிய குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தன்னாட்சி அளிப்பதாகக்கூறி அமெரிக்கப்படைகள் 1909இல் வெளியேறினாலும்கூட, 1959இல் கியூபப் புரட்சி வெற்றியடையும்வரை அமெரிக்காவின் தலையீடு(ஆதிக்கம்!) தொடர்ந்தது!
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
 இப்போ தேசத்துரோகமில்லையா?
பாஜக ஆட்சியமைந்த பின்னர் "ஜெய் ஸ்ரீராம் "சொல்லாதவர்கள் மீதான வன்முறை அதிகரித்து விட்டது.
பல கும்பல் வன்முறை கொலைகளில் போய் முடிந்து இந்தியாவையே அதிரவைத்தது.
 கும்பல் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய பிரதமர் என்ற நிலையில் மோடிக்கு 49 கலையுலக பிரபலங்கள் கடிதம் எழுதினர் .இதில் தமிழகத்தைசசேர்ந்த இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி ஆகியோரும் கையெழுத்திட்டு இருந்தனர்.
இந்த  49 பிரபலங்கள் மீது பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் பாஜக வழக்குரைஞர் ஒருவர் "இப்படி கலைஞ்சர்கள் மோடிக்கு கடிதம் எழுதியதால் உலக அளவில் அவர் பெயர் கெட்டுவிடும்"என வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த நீதிபதி 49 பேர்கள் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய ஆணையிட்டார்.
உடனே பல கடுமையான பிரிவுகளில் தேசத்துரோகம் உள்ளிட்ட  வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை  இந்தியாவின் பல்வேறு மட்டங்களிலும் பாஜக அரசின் பாசிசம் என்று எதிர் குரல்கள் எழுந்தன.உலக அளவிலும் அதிர்வலையை எழுப்பியது.
மோடி நடவடிக்கையை கைவிடக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

கடுமையான எதிர்ப்பையடுத்து அதிர்ந்து போய் 49 பேர் மீதான  தேசத்துரோக வழக்கு கைவிடுவதாக பீகார் காவல்துறை அறிவித்துள்ளது.
அதற்கான காரணமாக "வழக்கு பதிவு செய்தவர் உரிய ஆதாரங்களை இதுவரை தாக்கல் செய்யாததால், அவர்கள் மீது பதியப்பட்ட தேச துரோக வழக்கை கைவிடுவதாக "அறிவித்துள்ளனர்.
மேலும் தவறான தகவல்களை தெரிவித்து குற்றச்சாட்டியவர்  மீது 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் பீகார்காவல்துறை கூறியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஓட்டுநர் தனியார்! நடத்துநர் அரசு!

 எடப்பாடி அரசின் விநோதம் !!


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங் கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் 19,489. இதில் பயணம் செய்வோர் நாள் ஒன்றுக்கு 1 கோடியே 74 லட்சம் பேர். கிராமப் புற வருமானமில்லா வழித்தடங்களிலும் பேருந்து களை இயக்கி மக்கள் போக்குவரத்தில் சேவை யில் 60 சதவீதம் அளவிற்கு நிறைவேற்றி, பொது  போக்குவரத்தில் இன்றளவும் தமிழகத்தில் சிறப்பாக இயங்கி வருகிறது அரசு போக்கு வரத்துக் கழகங்கள். விபத்தில்லா இயக்கம், வருவாய் பெருக்கல், டீசல் சிக்கனம், இவை களில் இந்திய அளவில் பல விருதுகளையும் பெற்றுள்ளது.
ஊழியர்கள் செயல்திறனிலும் சிறப்பான இடத்தையே பெற்றுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் அரசு விரைவு போக்குவரத்து, மாநகர போக்குவரத்து விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல் வேலி, கும்பகோணம் ஆகிய கோட்டங்களில் 1 கோடியே 43 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பணிமனைகள் உள்ளன.
பள்ளிக் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு நாள்தோறும் லட்சக் கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

5 ஆண்டாக பணி நியமனமில்லை
 
மக்கள் போக்குவரத்து சேவையில் மகத்தான பங்களிப்பை செய்து வரும் போக்குவரத்துக் கழகங்களை மெல்ல மெல்ல செயலிழக்கச் செய்து இயற்கை மரணம் அடைவதற்கு அரசு  எத்தனிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு காட்டிய ஆர்வத்தை  பணியாட்களை நியமிப்பதற்கு காட்டவில்லை.
  கடந்த 5 ஆண்டுகளாக புதிய பணியாட்கள் நியமனம் இல்லை. ஆனால் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களோ ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர். 1985 வாக்கில் பணியில் சேர்ந்த தொழி லாளர்கள், 2018-2019ல் மட்டும் சுமார் 6000 பேர் பணி ஓய்வு பெறுகிறார்கள்.
 போக்குவரத்துக் கழகத்தில் பணியாட்கள் விகிதப்படி  50,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஓட்டு நர், நடத்துநர், அலுவலகப் பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட வேண்டும். ஆனால் அரசு புதிய நியமனம் செய்ய மறுக்கிறது.
 வேலையில் இருக்கும் போது பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரி சுக்குக் கூட பணி நியமனம் வழங்கப்படவில்லை.
ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியில் மட்டுமே  30 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையான வேலைப் பளு விற்கு உள்ளாகிறார்கள். இரண்டு நாள், மூன்று நாள் ஓய்வின்றி தொடர்ந்து பணி பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்நிலை தொடர்வ தால் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். ஏன்? திடீர் மரணங்களைக் கூட சந்திக்கிறார்கள்.
 பேருந்துகளை முறை யாகப் பராமரிக்காமல் நிறைவான பேருந்து இயக்கத்தை நடத்த முடியாமல் கழகங்கள் தத்தளிக்கிறது.

கமிஷன் பெறுவதிலேயே கவனம்
ஊழியர்கள் பிரச்சனைகளும் தீர்க்கப்படு வது இல்லை. போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் நிதி இழப்பை சேவைத் துறை என்ற முறையில் அரசு வழங்க மறுத்து வருகிறது.
இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் ஆண்டுக்கணக்கில் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது.
ஊதிய ஒப்பந்தங்களை முழுமையாக அமல்படுத்த மறுக்கிறது. ஓய்வு பெற்று இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும் பணப்பலன்கள் கணக்கு முடிக்கப்படாத தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் உள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் போக்குவரத்துக் கழகங்கள் எவ்வாறு செயல்படும்?
பொதுத்துறை போக்குவரத்தை பாதுகாக்க, ஊழியர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க அக்கறையற்ற அரசு புதிய பேருந்துகள் வாங்கு வது, வழித்தடங்களில் இயக்குவது, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைக்கு கூட விழா எடுத்து கழகப் பணத்தை விரயம் செய்வது, இவை அனைத் திலும் கமிஷன் பெறுவதிலேயே கவனம் செலுத்துகிறது அரசு.

மோடி அரசு பாதையில்  எடப்பாடி அரசு
தில்லி, அகமதாபாத், மும்பை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் 5,595 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.
இத்திட்டத்தில் தமிழகத்திலும் 525 பேருந்துகள் இயக்கப்படும் என எடப்பாடி அரசு அறிவித்துள்ளது. இதற்கான டெண்டர் வருகிற அக்டோபர் 10 அன்று அரசு போக்குவரத்து நிறுவனம் சென்னை தரமணியில் விடப்பட உள்ளது. மின்சாரப் பேருந்துகள் அனைத்தும் தனியார் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப் படும். ஓட்டுநர்களை தனியார் நியமித்துக் கொள்வார்கள்.
அரசு போக்குவரத்துக் கழக  நடத்துநர்கள் பயணக்கட்டணம் வசூலிப் பார்கள். மின்சார பேருந்துகளுக்கான மின்சக்தி  சார்ஜ் வசதி அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் நிறுவப்படும். இப்பேருந்துகள் தமிழகத்தில் வேலூர், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை நகரங்களில் தனியார் மூலம் இயக்கப்படுமாம். இந்நிலையை நினைத்தால் “கேனப்பயல்கள் ஊரில் கிறுக்குப்பயல்கள் நாட்டாமையாம்” என்ற கிராமத்து சொலவடை தான் நினைவுக்கு வருகின்றது.
அப்படி எனில் போக்குவரத்துக் கழகங்கள் பொதுத்துறையாக நீடிக்குமா?
 காலப்போக்கில் முழுவதும் தனியார் மயமாகுமா?
 போக்கு வரத்துக் கழகங்களில் இனி வேலை வாய்ப்பு என்பது இருக்குமா?
என்ற கேள்விகளை போக்கு வரத்துத் தொழிலாளர்களும் பொது மக்களும் எழுப்புகிறார்கள். பொதுத்துறை போக்கு வரத்தை காக்க, தனியார்மயத்தை தடுக்கதொழிலாளர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

                                                                                                                                                                                                                                - ஆர்.மனோகரன்சிபிஎம் தஞ்சை  மாவட்ட செயற்குழு உறுப்பினர்.  

---------------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய துணை ராணுவ படைகளில் ஒன்றான CISF-ல் Constable (Tradesmen) பணிக்கான 914 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Constable (Tradesmen)
மொத்த காலியிடங்கள்: 914
சம்பள விகிதம்: ரூ.21,700 - 69,100
வயது வரம்பு: 18 முதல் 23 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற் திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உடற்தகுதி வருமாறு: 
உயரம்: 170 செ.மீ இருக்க வேண்டும். (ST - 162.5 செ.மீ)
மார்பளவு: 80 செ.மீ. அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். ST பிரிவைச் சேர்ந்த ஆண்கள் 76 செ.மீ. அகலமுள்ள மார்பளவுடன் 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி திறன்: 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6.30 நிமிடத்தில் ஓடி முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Indian Postal Order ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.
IPO எடுக்க வேண்டிய முகவரி: “Assistant Commandant, DDO, CISF. SZ HQrs, Chennai.”SC/ ST பிரிவினர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.cisfrectt.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: The DIG, CISF(South Zone) HQrs, “D” Block, Rajaji Bhavan, Besant Nagar, Chennai - 600090, Tamilnadu.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.10.2019.மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
 லீட் அகாடமி,
 37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, 
ஆயிரம் விளக்கு,
சென்னை – 600006.

---------------------------------------------------------------------------------------------------------------------------------
தில்லி மாநில அரசின் தீயணைப்பு துறையில் Fire Operator பணிக்கான 706 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Fire Operator
காலியிடங்கள்: 706 (UR-190, OBC-115, SC-309, ST-71, EWS-21)
சம்பளவிகிதம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

 உடற்தகுதி:
1. உயரம் குறைந்தது 165 செ.மீ.
2. எடை குறைந்தபட்சம் 50 கிலோ
3. மார்பளவு சுருங்கிய நிலையில் 81 செ.மீ. விரிவடைந்த நிலையில் 86.5 செ.மீ.

உடற்திறன்:
2.80 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். 80 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும். 200 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை ஓடி கடக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண், உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 6.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.-
--------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?