வியாழன், 17 அக்டோபர், 2019

அயோத்தி: ராமரும் ,பாபரும் .

 அயோத்தி ராமர் பிறந்த இடம்,பாபர் மசூதி தகராறில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பை எட்டியுள்ளது.
இதுவரா<
* 1528: அயோத்தியில் முகலாய மன்னர் பாபர், மசூதி கட்டினார். இது ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது

* 1853: அயோத்தியில் முதன்முதலில் வன்முறை வெடித்தது; 75 பேர் பலியாகினர்.

* 1859: பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இரு மதத்தினரும் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. உட்பகுதியில் முஸ்லிம்கள், வெளிப்பகுதியில் ஹிந்துக்கள் வழிபட வகை செய்யப்பட்டது. இருபுறம் சுவர் எழுப்பி, மோதல் தவிர்க்கப்பட்டது

* 1949: மசூதியில் ராமர் விக்ரகம் தென்பட்டது. இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு, அரசு பூட்டுப் போட்டது. 'அயோத்தி சர்ச்சைக்குரிய இடம்' என அறிவிக்கப்பட்டது

* 1950: அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக்கூடாது என, பைசாபாத் நீதிமன்றத்தில், கோபால் சிங் விஷாரத், வழக்கு தொடர்ந்தார். இது சுதந்திரத்துக்குப் பின், அயோத்தி தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்ற முதல் வழக்கு

* 1959: பிரச்னைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி, பைசாபாத் நீதிமன்றத்தில் நிர்மோகி அகாரா வழக்கு தொடுத்தார்

* 1961: உ.பி.,யில் வக்பு சன்னி மத்திய வாரியம், பிரச்னைக்குரிய இடத்தை தங்கள் வசம் தரும்படி பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது

* 1986: பூட்டப்பட்ட மசூதியின் உள்ளே சென்று, ஹிந்துக்கள் வழிபடலாம் என, மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, முஸ்லிம்கள் போராட்டம் வெடித்தது

* 1989: 'சர்ச்சைக்குரிய இடம் முழுமையாக, கோவில் என அறிவிக்க வேண்டும்' என்று, பக்தர்கள் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும், மூன்று நீதிபதிகள் உடைய அலகாபாத் உயர் நீதிமன்ற பெஞ்சுக்கு மாற்றப்பட்டன

* 1991: சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி., அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'அரசே அந்த இடத்தை வைத்திருக்கலாம்; எவ்வித கட்டுமானப் பணிகளையும் நடத்தக்கூடாது' என, நீதிமன்றம் உத்தரவிட்டது

* டிச., 6, 1992: மசூதி இடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கலவரத்தில், 2,000 பேர் பலியாகினர்

* மார்ச், 2002: குஜராத்தின் கோத்ராவில், அயோத்தி சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணம் செய்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில், 58 பேர் பலியாகினர். தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

* ஏப்., 2002: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, விசாரணையை துவக்கியது

* ஆக., 2003: மசூதி இருந்த இடத்தில், கோவில் இருந்ததற்கான சான்று இருப்பதாக, தொல்லியல் நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்தது
* செப்., 2003: பாபர் மசூதி இடிப்பில், ஏழு ஹிந்து தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால், அத்வானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும், உயர் நீதிமன்றம் அறிவித்தது

* ஜூலை, 2005: சர்ச்சைக்குரிய இடத்தின் வளாகச் சுவரில், வெடி பொருட்கள் ஏற்றிய ஜீப் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில், ஆறு பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்

* ஜூலை, 2009: பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட, லிபரான் கமிஷன், தன் அறிக்கையை, 17 ஆண்டுகளுக்கு பின் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை, இன்னும் வெளியிடப்பட வில்லை

* செப்., 2010: 'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், மூன்றில் ஒரு பகுதி, ராம் லாலா அமைப்புக்கும், மற்றொரு பகுதி, நிர்மோனி அகாரா அமைப்புக்கும், மூன்றாவது பகுதி, சன்னி வக்பு வாரியத்துக்கும் பிரிக்க வேண்டும். மூன்று மாதத்துக்கு பின் பணி தொடங்க வேண்டும்' என, அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது

* மே, 2011: அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மூன்று தரப்பினர் உள்ளிட்ட, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன

* பிப்., 2016: வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு

* மார்ச் 21, 2017: 'இப்பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் ஏற்படுத்தலாமா' என உச்ச நீதிமன்றத்தின், அப்போதைய தலைமை நீதிபதி, கெஹர் யோசனை தெரிவித்தார்

* பிப்., 8, 2018: வழக்கு தொடர்பான தனிநபர் மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது

* மார்ச் 14: சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு உள்ளிட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

* செப்., 27: 'மசூதிகள் என்பது இஸ்லாமுடன் ஒருங்கிணைந்ததில்லை' என, 1994ல் அளித்த தீர்ப்பை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது

* ஜன., 8, 2019: வழக்கை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையில், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், என்.வி.ரமணா மற்றும் யு.யு.லலித் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்தது

* ஜன., 10: அமர்வில் இருந்து விலகுவதாக, நீதிபதி யு.யு.லலித் அறிவித்தார்

* ஜன., 25: ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ.நஜீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு நியமிக்கப்பட்டது

* மார்ச் 8: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு தலைமையில், மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது

* ஆக., 1: சமரச பேச்சுவார்த்தை நடத்திய, மத்தியஸ்தர் குழு, இறுதி அறிக்கையை, 'சீல்' வைக்கப்பட்ட கவரில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது

* ஆக., 2: 'மத்தியஸ்தர் குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது' என, உச்சநீதிமன்றம் தெரிவித்தது

* ஆக., 6: உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கை தினந்தோறும் விசாரிக்க துவங்கியது

* அக்., 16: விசாரணை நிறைவடைந்தது. தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


--------------------------------------------------------------------------------------------------------------------------------
‘ராஜீவ் காந்தி படுகொலை.
 விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தொடர்பில்லை
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பிரசாரம் மேற்கொண்ட சீமான், “ராஜீவ்காந்தியை நாங்கள்தான்)விடுலதலப்புலிகள்) கொன்றோம்” என்கிற ரீதியில் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 சீமானின் பேச்சு, ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எழுவர் விடுதலையில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என எழுவர் விடுதலை ஆதரவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக, ‘ராஜீவ் காந்தியின் படுகொலைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பில்லை’ என விளக்கி விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னர் வெளியிட்ட அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம் மற்றும் அரசியல்துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோரின் பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை பின்வருமாறு :

  
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் ,
முன்னால்.
 உலக வறுமை ஒழிப்பு தினம்
 போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)
கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)
 

1346 - ‘நெவில்லியின் சிலுவை’ யுத்தத்தில் ஸ்காட்லாந்து தோற்று, அதன் அரசர் இரண்டாம் டேவிட், அடுத்த 11 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

அங்கிருந்த கற்சிலுவையின் அருகில் யுத்தம் நடைபெற்று, யுத்தத்துக்குப்பின், புதிய சிலுவையை நெவில்லி பிரபு அமைத்துக்கொடுத்ததால், இப்பெயர் ஏற்பட்டது. உண்மையில் நூறாண்டுப் போரின் ஒருபகுதியாக, பிரான்சின்மீது இங்கிலாந்து படையெடுத்ததை எதிர்த்தே, ஸ்காட்லாந்து இங்கிலாந்தின்மீது படையெடுத்தது. 1295இல் செய்துகொள்ளப்பட்டிருந்த ஆல்ட் அலையன்ஸ் என்ற ஒப்பந்தத்தின்படி, ஸ்காட்லாந்து இவ்வாறு படையெடுக்க வேண்டியிருந்தது.
ஆல்ட் என்ற ஸ்காட் மொழிச்சொல்லுக்கு பழைய (ஆங்கிலத்தில் ஓல்ட்!) என்று பொருள் என்பதால், இது பழைய கூட்டணி என்று பொருள்படும். ஸ்காட்லாந்தின் அரசியான மார்கரெட் 1295இல், ஏழு வயதில் இறந்துவிட, வாரிசு இல்லாத ஸ்காட்லாந்தின் அரசுரிமையைக் கைப்பற்ற இங்கிலாந்தின் அரசர் முதலாம் எட்வர்ட் முயற்சித்தார்.
 அப்போது, துணைக்கு பிற நாடுகளை ஸ்காட்லாந்து தேடியபோது, பிரான்சின் கேஸ்கனியை இங்கிலாந்து ஆக்கிரமித்தது தொடர்பான விரோதத்தால், இரு நாடுகளும் போரிடும் தருவாயில் இருந்தன. அதனால், ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகியவற்றில் யாரை இங்கிலாந்து தாக்கினாலும், மற்றவர் இங்கிலாந்தைத் தாக்கவேண்டும் என்று செய்துகொள்ளப்பட்டதே ஆல்ட் அலையன்ஸ்.
வறுமையுடன், ஐரோப்பாவின் கோடியில் அமைந்திருந்த நாடான ஸ்காட்லாந்துக்கு, பிரான்ஸ் துணை என்பது பெரியதாகத் தோன்றினாலும், இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் மோதல் ஏற்படும்போதெல்லாம் தானும் போரிடவேண்டியதாகி, அதிக இழப்பு ஏற்பட்டது ஸ்காட்லாந்துக்குத்தான்.
1329இல் 5 வயதில் இரண்டாம் டேவிட் அரசராகி, காப்பாளர்மூலம் ஆட்சி நடந்துகொண்டிருந்த நிலையில், 1332இல் இங்கிலாந்து ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, 1333இல் பிரான்சில் தஞ்சம் புகுந்த அவர், 1341இல் அவரது ஆதரவாளர்களின் கை ஓங்கும்வரை 8 ஆண்டுகள் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று.
17 வயதில் நேரடியாக ஆட்சிசெய்யத்தொடங்கிய அவர், 5 ஆண்டுகளில் இங்கிலாந்தால் சிறைப்பிடிக்கப்பட்டார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பத்தாயிரம் மார்க்குகள் வீதம் பணயத்தொகை தருவதாக 1357இல் ஸ்காட்லாந்து ஒப்புக்கொண்டு அவரை மீட்டாலும், 1363ஆம் ஆண்டுக்கான தவணையைத் தர முடியவில்லை. தனக்குப்பின் அரசுரிமையை இங்கிலாந்து எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதிக்கொடுத்து அவர் பிரச்சனையைத் தீர்த்ததை, ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஏற்கவில்லை.
இங்கிலாந்துடன் ரகசிய உடன்படிக்கைகள்மூலம் பிரச்சனையைத் தீர்த்து, 1371இல் இறக்கும்வரை அரசராக இருந்தார் டேவிட்.
1332இல் இங்கிலாந்து ஆக்கிரமித்ததிலிருந்து, 1357இல் டேவிட் மீட்கப்பட்டது வரையான யுத்தங்கள் ஸ்காட் லாந்தின் இரண்டாம் விடுதலைப்போர் என்று அழைக்கப்படுகின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் (IGNOU) உள்ள 116 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Assistant Professor
காலியிடங்கள்: 51
சம்பளவிகிதம்: ரூ.57,700 - 1,82,400

2. பணியின் பெயர்: Professor
காலியிடங்கள்: 27
சம்பளவிகிதம்: ரூ.1,44,200 - 2,18,200
3. பணியின் பெயர்: Associate Professor
காலியிடங்கள்: 38
சம்பளவிகிதம்: ரூ.1,44,200 - 2,18,200
காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்: 
English/ Anthropology/ Library Science/ Political Science/ Psychology/ Biochemistry/ Chemistry/ Geology/ Life Science/ Physical Statistics/ Education/ Child Development/ Home Science/ Nutritional Science/ Rural Development/ Management/ Health Sciences/ Nursing/ Computer and Information Science/ Tourism and Hospitality Service.
கல்வித்தகுதி: காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்  ஏதாவதொன்றில் IGNOU விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ignou.ac.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Academic Co-ordination Division, IGNOU, Maidan Garhi, New Delhi - 110068.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.10.2019
தபாலில் விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 5.11.2019.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
தில்லி காவல் துறையில் தலைமைக் காவலர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Head Constable
மொத்த காலியிடங்கள்: 554 ஆண்கள்: 372 (UR-140, EWS-37, OBC-86, SC-56, ST-53)
பெண்கள்: 182 (UR-69, EWS-18, OBC-42, SC-27, ST-26)
சம்பளவிகிதம்: ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் இதர பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி:
ஆண்கள்: உயரம்: 165 செ.மீ.
மார்பளவு: 78 செ.மீ. இருக்க வேண்டும். 4 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள்: உயரம்: 157 செ.மீ.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. (SC/ ST/ EX-SM/ PWD மற்றும் பெண்கள் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.delhipolice.nic.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 13.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 பகவான் கல்கி க்கே சோதனையா 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதைய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. கல்கி சாமியாருக்கு உலகெங்கிலும் பக்தர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமங்களில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. ஆந்திரா, சென்னை உள்பட நாடு முழுவதும் அந்த ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் காலை 8 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கி ஆசிரம உரிமையாளரின் மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் சபி அகமது சாலையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கல்கி சாமியார் ஆசிரமத்திற்குட்பட்ட தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவதற்குண்டான காரணங்கள் வெளிவந்துள்ளன.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த விஜயகுமார் எனும் கல்கி பகவான் சென்னையில் குடியேறி அதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆசிரமம் அமைத்தார். இவரது புகழ் உலகெங்கும் பரவியது.
இவரையும், இவரது மனைவி பத்மாவதியையும் தரிசிக்க முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்தால் தான் கல்கி பகவானின் தரிசனம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
மிக வேகமாக வளர்ச்சி அடைந்த கல்கி பகவானின் ஆசிரமம் நூற்றுக்கணக்கான கிளைகளாக உருவெடுத்தது. இவரது மகன் கிருஷ்ணா சொந்தமாக ஐ.டி. நிறுவனங்களை நடத்திவருகிறார். மேலும், அமெரிக்காவிலும், கர்நாடக மாநிலத்திலும் கட்டுமான தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
ஆந்திராவின் கோவர்த்தனபுரம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஆசிரமத்திற்கு சொந்தமாக உள்ளன. சுமார் 1500 கோடி அளவிற்கு ஆசிரம சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆசிரமத்திற்கு சொந்தமாக, ஒன்னெஸ் யுனிவர்சிட்டி என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது.
சமீபகாலமாக கல்கி ஆசிரமம் தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டுவருகின்றன. இதுதவிர பணப் பரிமாற்றம் தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாளில் ஆசிரம சோதனை முழுமையாக முடிவடையும் எனவும், வரிஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத பண நிலவரங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
1920 அக்டோபர் 17 அன்று, சோவியத் யூனியனின் துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகராக அப்போதிருந்த தாஷ்கண்ட் நகரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதை அறிவிப்பதற்காக ஒரு கூட்டம் நடந்தது.
 இந்தக் கூட்டத்தில் எம்.என். ராய், எவ்லின் டிரெண்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்கோவ், முகமது அலி, முகமது சஃபீக் மற்றும் எம்பிபிடி ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார்.
 துவக்க நிகழ்வு கூட்டத்தில், கம்யூனிஸ்ட் அகிலத்தால் பிரகடனம் செய்யப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுவது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் ‘இந்தியாவின் நிலைமைகளுக்குப் பொருந்தக்கூடிய’  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டத்தை வகுத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
எம்.என். ராய், 1920இல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாகப் பங்கேற்றிருந்தார்.
 அபானி முகர்ஜியும், ஆச்சார்யாவும் கூட ஆலோசகர்கள்  என்னும் தகுதியுடன் காங்கிரசில் பங்கேற்றிருந்தார்கள்.  முகமது சஃபீக் பார்வையாளராகப் பங்கேற்றிருந்தார்.    எவ்லின் ஓர் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் மற்றும் எம்.என்.ராய் மனைவியுமாவார்.
 ரோசா பிட்டிங்கோவ் ஒரு ரஷ்யக் கம்யூனிஸ்ட். இவர் அபானி முகர்ஜியைத் திருமணம் செய்திருந்தார். இக்குழுவில் இருந்த இந்தியர்கள் அனைவரும் இளைஞர்கள். நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறிந்திட, ஒரு புரட்சிகர இயக்கத்தை அல்லது ஆயுதப் போராட்டத்தை மேற்கொள்வதற்கான வழிவகைகளைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து சென்றிருந்தவர்கள். எம்.என். ராய், அபானி முகர்ஜி மற்றும் எம்பிபிடி ஆச்சார்யா ஆகிய அனைவரும் இந்த வகையினர்தான்.
 முகமது சஃபீக் மற்றும்  முகமது அலி ஆகியோர் ‘முஹாஜிர்கள்’ (Muhajirs) ஆவார்கள்.
பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட உதவி கோரும் குறிக்கோளுடன் தாஷ்கண்ட் சென்றிருந்தார்கள்.
 மிகவும் துணிச்சல் மிகுந்த புரட்சியாளர்களான இவர்களின் பயணங்களும், வீரதீரச் செயல்களும் மற்றொரு சமயத்தில் சொல்லப்படும்.

தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதன் பின்னணியில், உலகத் தொழிலாளர் வர்க்கப் புரட்சி மற்றும் இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் குணாம்சங்களும் பிரிக்கமுடியாத விதத்தில் பின்னிப் பிணைந்துள்ளன.
 1917இல் ரஷ்யாவில் நடைபெற்ற நவம்பர் புரட்சி, உலகம் முழுதும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சி நடைபெற்ற விதம் குறித்ததான செய்திகள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்பே, வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியப் புரட்சியாளர்கள் மத்தியில், சகாப்தம் படைத்த சமூகப் புரட்சி, மிகவும் ஈர்ப்பினை ஏற்படுத்தி இருந்தது.
பெர்லினில் செயல்பட்டுவந்த சில புரட்சிக் குழுக்கள், மாஸ்கோவில் இருந்த போல்ஷ்விக்குகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தார்கள். வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா (குழுவின் தலைவர்), பூபேந்திரநாத் தத், முகமது பரக்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் இக்குழுக்களில் இருந்தார்கள்.
அமெரிக்காவில், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்காக அமைக்கப்பட்ட கதார் கட்சியின் தலைவர்களும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். (ரஷ்யப் புரட்சியாளர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முயன்ற கோமகட்ட மாரு நிகழ்வுக்குப்பின்னர், இவர்கள் மேற்கொண்ட கலகம் நசுக்கப்பட்டது.)
இந்தியாவிலிருந்து, 1920-21இல் ஒத்துழையாமை-கிலாபத் இயக்கம் நடைபெற்ற சமயத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடர விரும்பிய,  கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த எண்ணற்றவர்கள், ஆப்கானிஸ்தானத்திற்குச் சென்றார்கள்.
அங்கிருந்த பலர், தாஷ்கண்டிற்குச்  சென்றார்கள்.
இவ்வாறு சென்ற ‘முஹாஜிர்கள்’ சோவியத்  அதிகாரிகளால் நன்கு வரவேற்கப்பட்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர்கள் நடத்துகின்ற போராட்டத்திற்கு உதவி அளித்திடவும் தயாராக இருந்தார்கள்.
 கம்யூனிஸ்ட் கட்சியுடனும், போல்ஷ்விக் புரட்சியாளர்களுடனும் தொடர்பு ஏற்பட்டபின்னர், முஹாஜிர்களில் சிலர் கம்யூனிசத்தைத் தழுவினார்கள். இவர்களில் 25க்கும் மேற்பட்டவர்கள் மாஸ்கோவில் இருந்த கிழக்கின் உழைப்பாளர்களின் கம்யூனிஸ்ட் பல்கலைக் கழகம் (Communist University of the Toilers of the East), 1921இல் தொடங்கப்பட்டபோது, அதற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

எம்.என். ராய், கம்யூனிஸ்ட் அகிலத்தில் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தாஷ்கண்டில் இருந்த மத்திய ஆசிய பீரோவிற்குத் தங்களின் பிரதிநிதியாக கம்யூனிஸ்ட் அகிலம் அவரை அனுப்பி வைத்தது.  இந்த தகுதியின் அடிப்படையில்தான் எம்.என்.ராய், முஹாஜிர்கள் மத்தியில் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டார். இவர்களில் பலர், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள்.
உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆரம்பத்தில் சிறு குழுக்களாகச் செயல்பட்ட புரட்சியாளர்களால்தான் அமைக்கப்பட்டன. சீனாவில், 1921இல் ஷாங்காயில் 13 பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டத்தில் அமைக்கப்பட்டது. பிரான்சில் வாழ்ந்து வந்த இந்தோ-சைனாவைச் சேர்ந்தவர்களால் (அப்போது இந்தோ-சைனா எனப்பட்ட இன்றைய வியட்நாம், கம்போடியா மற்றும் லாவோஸ் பகுதிகள் பிரான்சின் காலனியாட்சியின் கீழ் இருந்தது) ஆரம்பிக்கப்பட்டது.
 இவர்கள் மார்க்சியத்தை முழுமையாகத் தழுவிக்கொண்டிருந்தார்கள்.
தாஷ்கண்டில் கம்யூனிஸ்ட் குழுக்களின் பதிவேடுகள், அங்கே இரு கூட்டங்கள் நடந்ததாகக் காட்டுகின்றன. 1920 டிசம்பர் 15 அன்று நடைபெற்ற கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்பேடு, கட்சிக்குள் மூன்று பேர் பரீட்சார்த்த உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்று காட்டுகிறது. அப்துல் ஆதர் சேஹ்ராஜ், மசூத் அலி ஷா மற்றும் அக்பர் ஷா (சலீம்) ஆகியோரே இம்மூவருமாவார்கள்.
ஒரு பரீட்சார்த்த உறுப்பினர் என்பவர் கட்சியில் முழு உறுப்பினராவதற்காக மூன்று மாத காலத்திற்கு தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்திருக்க வேண்டும். அந்த சமயத்தில், தாஷ்கண்டில் இயங்கிவந்த இந்தியப் புரட்சிக் குழுவில் பிரதானமாக முஹாஜிர்களும், வெளிநாட்டிலிருந்து செயல்பட்ட இந்தியப் புரட்சியாளர்களுமே இருந்தார்கள். இவர்களிலிருந்துதான் மாஸ்கோவில் இருந்த கிழக்கின் உழைப்பாளர்களின் கம்யூனிஸ்ட் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட நபர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

பெர்லினில் செயல்பட்டுவந்த வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா தலைமையிலான புரட்சிக் குழுவினர், கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமையைச் சந்தித்திட,  1921இல் மாஸ்கோ போய்ச் சேர்ந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடவேண்டிய ஒரு விஷயமாகும். அவர்களின் சிந்தனையோட்டம் எப்படியிருந்தது என்றால், இந்தியா முதலில் பிரிட்டிஷாரிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
அதன்பின்னர் அங்கே கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க வேண்டும் என்பதாகும். அவர்கள், நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் அகிலத்தின் உதவியை விரும்பினார்கள். எம்.என்.ராய் மற்றும் அவருடைய குழுவினைச் சேர்ந்தவர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாக அங்கீகரிப்பதை அவர்கள் விரும்பவில்லை. கம்யூனிஸ்ட் அகிலத்தால் அமைக்கப்பட்ட ஓர் ஆணையம், அனைத்துக் கருத்துக்களையும் கேட்டறிந்தபின்னர், தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட கட்சியை, இந்தியக் கம்யூனிஸ்ட் குழுவாக அங்கீகரித்திடத் தீர்மானித்தது.
 தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியால் ஒரு கட்சித் திட்டத்தை இறுதிப்படுத்த முடியவில்லை. கம்யூனிஸ்ட் அகிலத்துடன் இணைப்பினை (affiliation) ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமானால் இது அவசியமாகும்.
எனினும், இந்தியாவில் பல்வேறு மையங்களில் இயங்கிவந்த பல கம்யூனிஸ்ட் குழுக்களின் மத்தியில் கம்யூனிசக் கருத்துக்களைக் கொண்டு செல்வதில் இக்குழுவைச்சேர்ந்தவர்கள், குறிப்பாக எம்.என்.ராய், முக்கிய பங்கு வகித்தார்கள்.
எம்.என். ராயும், அபானி முகர்ஜியும் 1921இல் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியத் தேசியக் காங்கிரசின்  அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் அமர்விற்கு ஒரு திறந்த மடல் எழுதினார்கள். அதில், காங்கிரஸ் கட்சி, தொழிற்சங்கங்கள் முன்வைத்திடும் குறைந்தபட்சக் கோரிக்கைகளை, தன்னுடைய கோரிக்கைகளாக மாற்றிட வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார்கள்.
மேலும், அகில இந்திய விவசாயிகள் சங்கம் முன்வைத்திடும் கோரிக்கைகளையும், தன்னுடைய கோரிக்கைகளாக மாற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்கள். இவ்வாறு செய்தோமானால் காங்கிரஸ் கட்சியை எந்த சக்தியாலும் தடுத்துநிறுத்த முடியாது என்றும், ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் அது வலுப்படுத்தப்படும் என்றும், ஏனெனில் இது ஒன்றுதான் நம்முடைய நலன்களுக்காகப் போராடக்கூடிய அமைப்பு என்று உளப்பூர்வமாகக் கருதத்தொடங்கிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான் அது உருவான காலத்திலிருந்தே, வேறு எந்தக் கட்சியோ அல்லது குழுவோ கூறுவதற்கு முன்பே, இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தது.  எம்.என். ராயும், அபானி முகர்ஜியும், தங்களுடைய திறந்த மடலை காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பிய அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, ஹஸ்ரத் மொஹானி அந்நிய ஆட்சியரிடமிருந்து முழுச் சுதந்திரம் என்கிற ஸ்வராஜ்யம் வேண்டும் என்கிற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ஹஸ்ரத் மொஹானி, கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டிருந்தார்.
  பின்னர் கட்சியின் உறுப்பினராகவும் மாறினார். இவ்வாறு கோருவது நடைமுறைச் சாத்தியமற்றது என்று கூறி காந்தி இதனை எதிர்த்தார்.
எம்.என்.ராய், கம்யூனிஸ்ட் அகிலத்தின் உதவியுடன், இந்தியாவில் இயங்கிவந்த பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். அவர், பம்பாயில் இயங்கி வந்த எஸ்.ஏ. டாங்கே, கல்கத்தாவில் இயங்கி வந்த முசாபர் அகமது, சென்னையில் இயங்கிவந்த சிங்கார வேலர், மற்றும் பலருக்கும் கடிதங்கள் எழுதி கட்சியை எப்படிக் கட்டுவது என்றும் செயல்பாடுகளை எப்படி மேற்கொள்வது என்றும் ஆலோசனைகளை அளித்தார்.

1922, 1923களில் இந்திய சுதந்திரத்தின் முன்னணி (Vanguard of Indian Independence) என்ற பெயரில் பெர்லினிலிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, அதிகாரப்பூர்வமான முறையில் ஓர் இதழ் வெளியிடப்பட்டது.
இது இந்தியாவில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைப் பரப்பிட உதவியது. இத்தகைய பிரச்சாரத்தின் மூலமாகத் தங்களுக்கு வரவிருக்கும் அச்சுறுத்தலை பிரிட்டிஷ் அரசாங்கம் புரிந்துகொண்டது.  எனவே இவ்விதழ் இந்தியாவிற்குள் வருவதைத் தடை செய்தது.
1920ஆம் ஆண்டு மேலும் ஒருவிதத்தில் முக்கியத்துவம் உள்ள ஓராண்டாகும். இந்த ஆண்டில்தான் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சீர்திருத்தவாதச் சிந்தனைகளுடன் இது துவக்கப்பட்ட போதிலும், கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்புடன் ஒருசில ஆண்டுகளிலேயே இது உழைக்கும் வர்க்கத்தின் உருக்கு போன்ற தொழிற்சங்க மையமாக வீறுகொண்டு எழுந்தது.

எனவே, 1920இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாஷ்கண்டில் அமைக்கப்பட்டது என்பதை, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்படுவதற்கான முதல் அடி எனப் பார்க்க வேண்டும்.  
                                                                                                                                  - தமிழில்: ச. வீரமணி/---------------------------------------------------------------------------------------