செவ்வாய், 5 நவம்பர், 2019

1000 கோடிக்கான ஊழல்கள் அம்பலமாகுமா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலிருக்கும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறைகளிலுள்ள கோட்டக்கணக்கர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் தமிழக அக்கவுண்ட் ஜெனரல் அருண்கோயலை கடந்த வருடம் கைது செய்தது சி.பி.ஐ.!

இந்த வழக்கில் குற்றவாளிகள் பலரையும் சி.பி.ஐ. தப்பிக்கவிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.

மத்திய தலைமை கணக்குத் தணிக்கைத் துறையின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் கணக்காயர் தலைவர் (அக்கவுண்ட் ஜெனரல்) அலுவலகம் இயங்குகிறது.

தமிழகத்தில் சென்னை தேனாம்பேட்டையில் இயங்கும் அந்த அலுவலகத்தில் அக்கவுண்ட் ஜெனரலாக இருந்தவர் அருண் கோயல். தமிழக அரசின் பட்ஜெட்டை தணிக்கை செய்து மக்களின் வரிப்பணம் முழுமையாக செலவிடப்பட்டுள்ளதா?
 முறையாக பயன்படுத்தப் பட்டதா?
முறைகேடுகள், ஊழல்கள், விதி மீறல்கள், நட்டம், அனாவசிய செலவினங்கள் நடந்துள்ளதா?
என ஆய்வு செய்வது இத்துறையின் முக்கியப்பணி.

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையிலுள்ள கோட்ட கணக்காளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி ரிசல்ட்டை அறிவிப்பதும், கோட்ட கணக்காளர் பணியிடங்களை நிரப்பும் அதிகாரமும் அக்கவுண்ட் ஜெனரலுக்கு உண்டு.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்வு எழுதுபவர்களை வெற்றி பெற வைக்க அருண்கோயல் லஞ்சம் பெற்றதில் கடந்த வருடம் 2018 மார்ச்சில் அவரை பொறி வைத்து பிடித்தது சி.பி.ஐ.!
அவருடன் அவருக்கு புரோக்கராக செயல்பட்ட கஜேந்திரன், சிவலிங்கம், ராஜா ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிறையில் தள்ளியது சி.பி.ஐ.!

ஆட்சியாளர்களின் லஞ்ச- ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டிய அக்கவுண்ட் ஜெனரலே லஞ்சம் பெற்ற விவகாரம் தேசத்தையே உலுக்கியது .

சி.பி.ஐ. விசாரித்த இந்த வழக்கில்தான் சில உத்தரவுகள் சமீபத்தில் பிறப்பிக்கப்பட, குற்றவாளிகள் பலரும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், "பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளில் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கோட்டங்கள் இருக்கின்றன. திட்டங்களை செயலாக்கம் செய்யும் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒரு கோட்ட கணக்காளர் உண்டு. மக்கள் பணத்துக்கு பாதுகாவலன் என்கிற பெயர் இவர்களுக்கு இருப்பதால் செலவிடப்படும் ஒவ்வொரு காசும் விரயமில்லாமல் நேர்மையாக செலவிடப்படுகிறதா?
 என கண்காணிக்கிற கடமையும் இவர்களுக்கு இருக்கிறது.
பொதுப்பணித்துறையிலுள்ள கோட்ட கணக்காளர் பணியிடங்களை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலக அதிகாரிகளை அயல்பணியாக ஏ.ஜி. அலுவலகமே நியமிக்கும். ஆனால், நெடுஞ்சாலைத்துறைக்கான கோட்ட கணக்காளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறுபவர்களே நியமிக்கப்படுவார்கள். அந்த தேர்வை நடத்துவதும் அதன் ரிசல்ட்டை அறிவிப்பதும் ஏ.ஜி. அலுவலகம்தான். நெடுஞ்சாலைத்துறையில் உதவியாளர்களாகவும் கண்காணிப்பாளர்களாகவும் இருப்பவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்துகொள்ள முடியும். தேர்ச்சி பெறுபவர்கள் கோட்ட கணக்காளராக நியமிக்கப்படுவர்.

இந்த நடைமுறைகளில்தான் புகுந்து விளையாடினார் அருண்கோயல். கோட்ட கணக்காளர் பதவி உயர்வுக்கான தேர்வில் மொத்தம் 5 தாள்கள் எழுத வேண்டும். ஒரு தாளில் தேர்ச்சி பெற 1 லட்சம் என 5 தாளுக் கும் 5 லட்சம் என கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக அருண் கோயலை கைது செய்தது சி.பி.ஐ.!

இந்த வழக்கை விசாரித்து முடித்த சி.பி.ஐ. அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறைக்கான கோட்ட கணக்காளர் பதவிக்காக ஏ.ஜி. அலுவலகத்தில் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்துகொண்ட நபர்களின் விடைத்தாள்கள் ஹைதராபாத்திலுள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது.
 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தடய அறிவியல் ஆய்வகத்தின் இயக்குநர் அறிக்கை தந்திருக்கிறார்.
அதனால், தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்றும், அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன் திரும்பப்பெற வேண்டும் எனவும் ஏ.ஜி. அலுவலகத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.

இதனடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்.சுக்கு கடந்த செப்டம்பர் 16-ந்தேதி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள அக்கவுண்ட் ஜெனரல் ஜெய்சங்கர், ஆறுமுகம், பால்ராஜ், சந்திரன், ஜெய்துன்பி, ஜெய பாலன், பரசுராமன், ராஜா, தங்கதுரை, மலர்விழி, முருகானந்தம் ஆகிய 10 நபர்களின் தேர்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
 இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்களின் பதவி உயர்வை ரத்து செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநர் கோதண்டராமனுக்கு பிரபாகர் ஐ.ஏ.எஸ் கட்டளையிட, ஆறுமுகம், பால்ராஜ் இருவரும் கோட்ட கணக்காளர் பதவியில் தற்போது இல்லாததால் அவர்கள் இருவரை தவிர மற்ற 8 பேரின் பதவி உயர்வை ரத்து செய்துள்ளார் கோதண்டராமன்.
இதனால் இவர்கள் அனைவரும் கண்காணிப்பாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் நிறைய தவறுகள் நடந்துள்ளன. 2016 மற்றும் 2017 முறையே 32 மற்றும் 24 என 56 கோட்ட கணக்காளர்கள் தேர்ச்சி பெற்றதாக நெடுஞ்சாலைத் துறைக்கு பட்டியலை அனுப்பி வைத்தார் அருண்கோயல்.
அந்த 56 பேருமே அருண் கோயலுக்கு லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள்.

ஆனால், 10 பேர் மீது மட்டும் ஆக்சன் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதியுள்ள 46 பேரை காப்பாற்றியுள்ளது நெடுஞ்சாலைத் துறை. லஞ்சம் கொடுத்தவர்களின் பதவி உயர்வை ரத்து செய்வது மட்டுமே போதுமானதல்ல.

நெடுஞ்சாலைத் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் 10 ஆயிரம் கோடி ரூபாயில், ஒவ்வொரு கோட்டத்திலும் வருசத்துக்கு 100 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அந்த 100 கோடிக்கும் கோட்ட கணக்காளர்கள்தான் பாதுகாவலர்.
ஆனால், லஞ்சத்தால் பதவி உயர்வு பெற்ற இவர்கள் எப்படி 100 கோடி ரூபாயும் முறையாக செலவிடுவதில் அக்கறை காட்டியிருக்க முடியும்?

காண்ட்ராக்டர்கள் முதல் உயரதிகாரிகள் வரை சேர்ந்து கொள்ளையடிக்க கோட்ட கணக்காளர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். அதற்காக, சேங்ஷன் செய்யப்படும் ஒவ்வொரு பில்லிலும் இவர்களுக்கு 5 சதவீத கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால், மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்க அனுமதித்த கோட்ட கணக்காளர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதுடன் அவர்கள் ஒப்புதல் அளித்த திட்டங்களுக்கான நிதியில் நடந்துள்ள முறைகேடுகளை தடய அறிவியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தினால் 1000 கோடிக்கான ஊழல்கள் அம்பலமாகும்''’ என சுட்டிக் காட்டுகிறார்கள் ஆவேசமாக.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளரும், ஏ.ஜி.அலுவலக ஊழியர் சங்கத்தின் அகில இந்திய முன்னாள் தலைவருமான எம்.துரைபாண்டியனிடம் விசாரித்தபோது, ’அக்கவுண்ட் ஜெனரலாக அருண் கோயல் நியமிக்கப்பட்டதுமே லஞ்சத்தில் ஊறிப்போனது ஏ.ஜி. அலுவலகம்.
கோட்ட கணக்காளர் பதவிகளை நிரப்புவதில் அருண்கோயலின் லஞ்ச விளையாட்டை ஆதாரங்களுடன் சி.பி.ஐ.யில் புகார் கொடுத்தேன்.
 என் புகார் மீது ஆரம்பத்தில் அக்கறை காட்டாத சி.பி.ஐ., ஒரு கட்டத்தில் ஆக்ஷனில் குதித்தது. அருண்கோயலும் புரோக்கரும் கைது செய்யப்பட்டார்கள்.
லஞ்சம் கொடுத்து பாஸான கோட்ட கணக்காளர்கள் சிலரின் பதவி உயர்வை சி.பி.ஐ.யின் உத்தரவுக்கேற்ப தற்போது ரத்து செய்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறை. ஆனால், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணை நியாயமாக இல்லை.
குற்றவாளிகள் பலர் தப்பித்துள்ளனர்''’ என்கிறார் அழுத்தமாக.

உளவு வேலையின் உள்நோக்கம் ?

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் பெசாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகில் 1400 பேரின் வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்த்ததாக பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள் ளது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகை யாளர்கள், சட்ட வல்லுநர்கள், அரசியல் தலை வர்கள், மனித உரிமை ஆர்வலர்களும் உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இந்த உளவு வேலை நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப் தகவல்களும் உளவு பார்க்கப்பட்டதாகவும், அவரது செல்பேசி ஹேக் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
 2019 மக்களவைத் தேர்தலின்போது பாஜக வுக்காகவே இத்தகைய உளவு பார்க்கும் வேலை கள் நடந்துள்ளன என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
 இது குறித்து மத்திய அரசுக்கு கடந்த மே மாதமே தெரியும் என்றும் கூறப்படு கிறது.

இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரி வித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளதும், அந்த எச்சரிக்கையில்  போதுமான விவரங்கள் இல்லாததால் பெரியதாக எடுத்துக் கொள்ள வில்லை என்று மத்திய அரசு கூறுவதும், ஆழ்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
இந்த உளவு வேலைக்கும், மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுக்கப்பட்டபோ தும் உளவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்க்கும் போது பாஜகவுக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது.
தனிநபர்களின் செல்போன்கள் மற்றும் கணினியை உளவு பார்ப்பது உச்சநீதிமன்றம் வரை யறுத்துள்ள தனிநபர் உரிமைகளை மீறுவதாகும்.
இஸ்ரேல் நிறுவனம் உளவு மென்பொருளை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே தாங்கள் தருவ தாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்படி மத்திய அரசு இந்த நிறுவனத்தை உளவு பார்க்க பயன்படுத்தியதா என்பது குறித்து பதில் சொல்லியாக வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகைய உளவு மென்பொருளை தாங்கள் வாங்கவில்லை என்று மறுத்திருந்தபோ தும் மத்திய அரசின் கீழ் இயங்கும் புலனாய்வு நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தவில்லை என்று வெளிப்படையாக மறுக்கவில்லை.
பொதுமக்களின் ஆதார் உள்ளிட்ட விப ரங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்பட்ட தகவல்கள் வெளியாகின. இதை குறிப்பிட்ட தொகைக்கு விற்கவும் கூட மத்திய அரசு திட்ட மிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பின்னணியில் குடிமக்களின் தனிப்பட்டவிஷயங்களில் சர்வதேச அளவிலான நிறுவனங்கள் தலையிடுவது மிகப்பெரிய அபாய மாகும். இதைத் தடுப்பதற்கு உரிய சட்டத்தை இயற்றுவது மத்திய அரசின் கடமையாகும்.

-//////////////////-/////////////////--//////-/------------------/////////////-//-///////////////////-///////////////////////////- 

 ஏழை மாணவர்களால் எப்படி  முடியும் .?

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், அரசு மருத்துவ கல்லூரியில் இந்தாண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 3,081 மாணவர்களில் 48 பேர் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல, நீட் பயிற்சி மையங்கள் 2 முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள் மருத்துவப் படிப்பு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவப் படிப்பு சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், நீட் தேர்வு பயிற்சிக்காக அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய் தான் ஊதியம் வழங்குவதாகவும் இது அரசு பள்ளி ஆசிரியர்களை விட மிகக் குறைவானது எனவும் தெரிவித்த நீதிபதிகள் புனிதமான பணியை செய்து வரும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாகவும் தெரவித்தனர்.
மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திரும்ப பெற்று வரும் மத்திய அரசு நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகம் மாணவர்களின் கைரேகைகள் இன்று சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை வழங்கிய கைரேகைகளை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தங்களிடம் உள்ள கைரேகைகளுடன் ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என்று கேள்வியெழுப்பி, நீட் ஆள் மாறாட்டம் குறித்து ஏதேனும் புகார் பெறப்பட்டுள்ளதா என சி.பி.ஐ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 ந்நாளில் ,
முன்னால்

இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம்(1870)

ஆட்டோமொபைலின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்(1895)
கொலம்பியா ஐநா.,வில் இணைந்தது(1945)
 இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது(1971)


1556 - இரண்டாம் பானிப் பட் போர், டெல்லிப் பேரரசர் ஹெமு என்னும் ஹேமச்சந்திர விக்ரமாதித்யா வுக்கும், அக்பரின் படைகளுக்கு மிடையே நடைபெற்றது.
பாபரின் மறைவுக்குப்பின், ஷெர்-ஷா சூரி-யிடம் டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளை 1539இல் ஹுமாயூன் இழந்துவிட்டார்.
1540 மே 17இல் சூர் பேரரசை உருவாக்கிய ஷெர்-ஷா, எதிர்பாராதவிதமாக மே 22இல் உயிரிழக்க(பின்னர் விரிவாக!), அவருக்குப்பின் பட்டத்துக்கு வந்த இஸ்லாம்-ஷா சூரி, அவர் மகன் ஃபிரோஸ் கானுக்கு 12 வயதேயானபோது,  1553இல் இறந்துவிட்டார்.
ஃபிரோஸ் கானைக் கொலைசெய்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றிய தாய்மாமன் அடில்-ஷா சூரி, அரசு நிர்வாகத்தில் அக்கறையின்றி, சுகவாசியாக இருந்ததால், முதலமைச்சரும், படைத் தளபதியுமான ஹேமச்சந்திரனே அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தார்.

1556இல் ஹுமாயூன் இறந்தபோது வங்கத்திலிருந்து ஹேமச்சந்திரன், உடனடியாக முகலாயப் பேரரசின் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றத் தொடங்கினார்.
 அவர் முன்னேறி வருவதையறிந்த ஆக்ராவின் முகலாய ஆளுனர் போரிடாமலே, கோட்டையைக் காலிசெய்து ஓடிவிட்டார்.
1556 அக்டோபர் 7இல் துக்ளகாபாத் சண்டையில் வென்று டெல்லியைக் கைப்பற்றிய ஹேமச்சந்திரன், பண்டைய இந்து அரசர்களின் பட்டமான விக்ரமாதித்யா என்பதுடன் டெல்லியின் பேரரசராக முடிசூட்டிக்கொண்டார்.
அடில்-ஷாவின் தளபதியாகப் போரில் வென்ற ஹெமுவின் படையினரும் ஆஃப்கானியகளாகவே இருந்தநிலையில், டெல்லியின் பேரரசர் என்று அறிவித்துக்கொண்டாலும், அடில்-ஷாவின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவராக இல்லாமல் சுதந்திரமான அரசராக இருந்தாரா என்பதில், வரலாற்றாசிரியர்களிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றன.
ஹுமாயூன் இறந்தபோது அக்பருக்கு வெறும் 13 வயதென்பதால், காப்பாளராக பைரம் கான் ஆட்சி நடத்தினார்.

துக்ளகாபாத் தோல்வியையடுத்து, அவர் அனுப்பிய பத்தாயிரம் குதிரைப்படையினர், முப்பதாயிரம் குதிரைப்படையினர், 500 யானைகள் கொண்ட ஹெமுவின் படையுடன் பானிப்பட்டில் மோதின.
ஹெமுவின் படை பெரியதாக மட்டுமின்றி, வலுவாகவுமிருந்தது.
அது உறுதியான வெற்றியை நெருங்கிய நேரத்தில், (ஹெமுவை நோக்கி எய்யப்படாத) ஓர் அம்பு எதிர்பாராமல் ஹெமுவின் கண்ணுக்குள்  புகுந்ததில் அவர் நினைவிழந்தார்.
ஹெமு சரிந்ததில் அவரது படையினர் கலக்கமுற்றதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட முகலாயப் படைகள் வென்றன.
பிடிபட்டும் மயக்கத்திலிருந்த ஹெமுவின் தலையைக் கொய்யுமாறு அக்பரை பைரம்கான் கேட்டுக்கொண்டாலும், அக்பர் மறுத்துவிட்டார்.
 பைரம்கானே அதைச் செய்ய, ஹெமுவின் டெல்லிப் பேரரசு 29 நாட்களில் முடிவுற்றது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரே வழி  
இஸ்ரேலைச் சேர்ந்த NSO என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று இந்தியர்கள் பலரின் வாட்ஸ் அப் மூலம், ஸ்பைவேர்களை செலுத்தியுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இந்த ஸ்பைவேரின் மூலம் இந்திய பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

 இந்த ஸ்பைவேர் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் மூலம் ஊடுருவுவதாகவும், அந்த அழைப்புகளை பொருட்படுத்தாவிட்டாலும், அதனை அட்டெண்ட் செய்தாலும் எளிதாக ஸ்மார்ட் ஃபோன்களில் ஸ்பைவேர் ஊடுருவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இதனை தடுப்பதற்கு ஒரே வழியாக வாட்ஸ் அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்வதுதான்.

ஏனெனில் அப்டேட் செய்யாமல் இருக்கும் வாட்ஸ் அப்களில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதால் எளிதில் ஹேக் செய்துவிடமுடியும்.

அதன் மூலம் குறிப்பிட்ட சாஃப்ட் வேரை இன்ஸ்டால் செய்து தரவுகளை திருட முடியும்.
இந்த செயல்கள் எதுவும் பயனாளர்களுக்கு தெரியாமெலேயே நடைபெறும்.
இது வாட்ஸ் அப்க்கு மட்டுமல்லாமல் மற்ற சமூகவலைதள செயலிகளுக்கும் பொருந்தும் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------
 வேலை வாய்ப்புகள் 


  “Air India Engineering Services Limited”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Assistant Supervisor (General Admin/ Finance/ MMD)
காலியிடங்கள்: 170
சம்பள விகிதம்: ரூ.19,570
வயது வரம்பு: 1.8.2019 தேதியின்படி 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு அல்லது Aircraft Maintenance/ Computer Science Engineering பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து AVIATION துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன்மூலம் செலுத்த வேண்டும். (SC/ ST/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.500).
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணயைதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 5.11.2019. மேலும் காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------- 
 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி 
இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
---------------------------------------------------------------------------------------------------------------------

  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------ 

 3,400 வங்கிக் கிளைகள் மோடி ஆட்சியில் மூடல்
 மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்- அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்குச் சொந்தமான 3 ஆயிரத்து 400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ள தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தபின், வங்கிகள் இணைக்கப்படுவதும், கிளைகள் மூடப்படுவதும் தொடர் நடவடிக்கைகளாக மாறியுள்ளன. வராக்கடன்கள், வங்கி மோசடிகளை தடுக்க முடியாத நிலையில், தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, மோடி அரசு இந்த கண்மறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வங்கிக் கிளைகள் இதுவரை மூடப்பட்டிருக்கின்றன என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுத், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். 
 
அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி தற்போது பதில் அளித்துள்ளது. அதில், “இந்தியாவில் உள்ள 26 பொதுத்துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3 ஆயிரத்து 427 வங்கிக் கிளைகளை மூடியுள்ளன அல்லது மற்ற வங்கிக் கிளைகளோடு இணைத்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதில் மற்றொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், மூடப்பட்ட மொத்த வங்கிக் கிளைகளில் 75 சதவிகித வங்கிக் கிளைகள்-
அதாவது 2 ஆயிரத்து 568 வங்கிக் கிளைகள், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்று கூறப்பட்டிருப்பதாகும்.
மேலும், 2014-15ஆம் ஆண்டில் 90 கிளைகளாக துவங்கிய மூடல் நடவடிக்கை, 2015-16ஆம் ஆண்டில் 126 கிளைகள், 2016-17ஆம் ஆண்டில் 253 கிளைகள், 2017-18ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 83 கிளைகள் என்று ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்துள்ளது.
 2018-19ஆம் ஆண்டில் 875 கிளைகள் மூடப்பட்டுள்ளன.பாரதிய மகிளா பாங்க், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானெர் - ஜெய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் 2017 ஏப்ரல் 1-ஆம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைக்கப்பட்டன.
இதேபோல 2019 ஏப்ரல் மாதத்தில் தேனா வங்கியும் விஜயா வங்கியும் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------------------------------------------