திங்கள், 11 நவம்பர், 2019

பத்தாண்டு பந்தம் முடிவு?


இந்தியாவில் முதலீடா ? 

ரொம்ப யோசித்து செய்யுங்கள் !

மூடீஸ்’ என்ற முதலீட்டு சேவை நிறுவனம், இந்தியாவின் பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு, முதலீட்டு ரேட்டிங்கை குறைத்துவிட்டது.
இதனால் பாதிப்புகள் என்னென்ன?

‘பிட்ச், எஸ்., அண்டு பி., குளோபல், மூடீஸ்’ போன்ற நிறுவனங்கள் முதலீட்டுக்கான ஆலோசனைகளை வழங்கி வருபவை. ஒவ்வொரு நாட்டிலும், முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்பதை ஆய்வு செய்து, இவர்கள் பல்வேறு தரக் குறியீடுகளை வழங்குவர்.

பெருநிறுவனங்கள், வங்கிகள், பென்ஷன் பண்டுகள் போன்றவை, இவர்களது தர குறியீட்டை ஒட்டியே, தங்கள் முதலீட்டு முடிவை எடுக்கும்.
தற்போது, மூடீஸ் இந்தியாவுக்கு வழங்கி வந்த தரக் குறியீட்டை குறைத்துவிட்டது. இந்தியப் பொருளாதாரம், ‘ஸ்திரமானது’ என்ற நிலையில் இருந்து தற்போது, ‘நெகடிவ்’ என்ற தரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2017ல் இதே நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்யலாம் என்பதற்கான தரக் குறியீட்டை அப்போது உயர்த்தியது. இரண்டு ஆண்டுகளில் என்ன நடந்துவிட்டதாக கருதுகிறது மூடீஸ்?

அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.7 சதவீதமாக இருக்கும் என்று கருதுகிறது மூடீஸ். அரசின் கணிப்பு, 3.3 சதவீதம் தான். வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலையும், நிறுவன வரி குறைக்கப் பட்டதும், வருவாய் இழப்பை ஏற்படுத்தும். அதனால், நிதிப் பற்றாக்குறை அதிகமாகும்.
வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக இதர துறைகளிலும் தொடர்கின்றன.

குறிப்பாக, கார் விற்பனை, சில்லரை வர்த்தகம், நுகர்பொருட்கள், கனரக வாகனங்கள் ஆகியவை சரிவைச் சந்தித்துள்ளன. இதனால், இந்தியாவின் வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
இதையெல்லாம் எதிர்கொள்வதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கிறது மூடீஸ்.

அதனால், ஏற்கனவே பெரும் கடன் சுமையில் இருக்கும் இந்தியா, தொடர்ந்து அதிக சுமையை ஏற்க வேண்டிய நிலைமை.ஒரு பக்கம், உலக அளவில் பொருளாதாரச் சிக்கல்கள் இந்தியாவை பாதித்து வருகின்றன. அதேநேரம், இந்திய வாடிக்கையாளரின் நம்பிக்கையும் பெருகவில்லை. அரசின் முதலீடுகளும் பெருகவில்லை.

விளைவு, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5 சதவீதமாக சரிந்துள்ளது.
தங்கள் முடிவுக்கு மேலும் வலு சேர்ப்பது போன்று, இந்தியாவில் தனியார் துறை முதலீடுகள் பெருகாதது, நிலம் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாதது ஆகிய காரணங்களை அடுக்குகிறது மூடீஸ்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி உயராதவரையில், தங்களால் இந்தியாவின் தரக் குறியீட்டை உயர்த்த முடியாது என்றும் அது தெரிவித்துள்ளது.
வழக்கம் போல், இத்தகைய பயமுறுத்தல்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றோர் எண்ணம் பரவலாக இருக்கிறது.
நிதித் துறை தரப்பில் இருந்து தரப்பட்டுள்ள விளக்கத்தில், நம் இந்தியாவின் முதலீட்டுத் தரம் எத்தகையது என்பதை தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் தெரிவித்துள்ளனர்.

மூடீஸ் கருத்தை நாம் புறமொதுக்க வேண்டியதில்லை.
அது அவர்கள் தொழில். உலகெங்கும் உள்ள பெருமுதலீட்டாளர்களுக்காக, பல்வேறு நாடுகளின் முதலீட்டுத் தரத்தை ஆய்வு செய்வது அவர்கள் வேலை.
அவர்கள் பார்வையில், இங்கே முதலீட்டுக்கான சூழல் சரிந்து உள்ளது. இதர இரண்டு, ‘ரேட்டிங்’ நிறுவனங்கள் இவ்வளவு துாரம் நம் முதலீட்டுத் தரத்தைக் குறைக்கவில்லை. நாம் மூடீஸின் கருத்தை, ‘உஷார்’ அறிக்கையாக எடுத்துக் கொள்வதே நல்லது.

ஏற்கனவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சில வாரங்களாக பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். சமீபத்தில், ரியல் எஸ்டேட் துறைக்காக பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம், நின்று போன்ற பல்வேறு சகாயவிலை வீட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட இருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் குழுவும், தொடர்ச்சியாக ஐந்து முறைகளாக, ‘ரெப்போ’ விகிதத்தைக் குறைத்து வந்துள்ளது. பொதுத் துறை வங்கிகள், இந்த வட்டி விகிதக் குறைப்பின் பலனை முழுமையாக மக்களுக்கு வழங்க மறுக்கின்றன.
அவர்களோடு, நிதித் துறைச் செயலர் பேசிக் கொண்டே இருக்கிறார்.இந்திய அரசுக்கும் பொருளாதாரப் பிரச்னைகள் தெரிந்திருக்கவே தான், பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இது நாள் வரை, அரசுத் தரப்பைச் சேர்ந்தவர்கள் எவரும் இந்தியாவில், ‘மந்தநிலை’ ஏற்பட்டு உள்ளது என்பதை வாய் திறந்து ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் சந்திப்பில், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.சுப்பிரமணியம், இதை ஒப்புக் கொண்டுள்ளார்.ஆக, மூடீஸ் தெரிவித்திருப்பது புதிய விஷயமல்ல.

ஆனால், நாம் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான துாண்டுதல். தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதல்ல.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

இஞ்சி

இஞ்சிஎரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும்; பசியைத் துாண்டும்; உமிழ்நீரைப் பெருக்கும்; உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலிலுள்ள வாயுவை நீக்கும்; காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.
முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், மூழ்குமாறு, 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின், தினமும் இரண்டு துண்டு வீதம், உணவிற்கு முன், மென்று சாப்பிட்டு வர பசியின்மை, வயிற்று பொருமல் தீரும். நரை, தோல் சுருக்கம், மூப்பு அணுகாது. தேகம் அழகு பெறும். 
மனம் பலப்படும். இளமை நிலைத்திருக்கும்.

இஞ்சிச் சாறை, தொப்புளை சுற்றிப் பற்றுப்போட்டால், குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் நீங்கும்.
ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று வேளை குடித்தால், வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாகும்.
ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளை, ஏழு நாட்களுக்குப் பருகினால், சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.

இஞ்சி மற்றும் வெங்காய சாறு, தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து, சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால், வாந்தி கட்டுப்படும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, ஒரு வாரம், காலையில் ஒரு தேக்கரண்டி வீதம் குடித்துவர, நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய் குணமாவதோடு, உடம்பும் இளைக்கும்.
மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி நீங்க, இஞ்சியை துவையல் மற்றும் பச்சடி செய்து சாப்பிடலாம்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிடுவதால், பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் போன்றவை நீங்கும். அதேவேளை, சுறுசுறுப்பும் ஏற்படும்.
காலையில், இஞ்சி சாறில் உப்பு கலந்து, மூன்று நாட்கள் பருகுவதன் மூலம், பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீரும்; இளமையான தோற்றத்தையும் தரும்.
பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து, காலை, மாலை என, இரண்டு நாட்கள் சாப்பிட, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில், ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி, வெந்நீர் குடித்து வர, தொந்தி கரையும்.
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு திறன் கூடும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு, தலா ஒரு தேக்கரண்டி கலந்து, ஒருவேளை சாப்பிட்டு வர, ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

நன்றாக காயவைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின் கிழங்குகளே, சுக்கு எனப்படுபவை. 
 அரை தேக்கரண்டி சுக்கு பொடியை, சிறிது தண்ணீர் கலந்து
சூடாக்கி, பசை போல செய்து, வலி இருக்கும் இடத்தில் பரவலாகத் தடவினால், தலைவலி தீரும்.

 பத்தாண்டு பந்தம் முடிவு?

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன.

சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
பாஜக வுடனான கூட்டணி பேச்சு வார்த்தையில் கூறியபடி ஆட்சியில் சமபங்கை ,2அரையாண்டு முதல்வர் பதவி சிவசேனா கேட்டு பிடிவாதம் செய்கிறது. 
அரவிந்த் சாவந்த்

ஆனால் அவ்வாறு எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதனால், இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி கடந்த 18 நாட்களாக நீடித்து வருகிறது.

நேற்று பாஜகவை அடுத்துள்ள சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் கோரியுள்ளார். இதனிடையே சிவசேனா பெரும்பான்மையை பெற தேசியவாத காங்கிரஸிடம் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சிவசேனாவிடம் பாஜகவிலிருந்து முற்றிலுமாக விலகினால் இதைபற்றி முடிவு செய்யலாம் என்று திட்டவட்டமாக கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இன்று காலை சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது மத்திய கனரக தொழில்கள், பொதுத்துறை நிறுவனத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதன்பொருட்டு, பாஜக சிவசேனா உடனான பத்து ஆண்டுகளான  நட்பு முற்றிலுமாக முடிகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 ந்நாளில்,
முன்னால் 
போலந்து விடுதலை தினம்(1918)

வாஷிங்டன், அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்(1930)
மாலத்தீவு குடியரசு தினம்(1968)
அடையாளம் தெரியாத வீரனின் கல்லறை
1921 - அடையாளம் தெரியாத அமெரிக்க வீரனின் கல்லறை, வர்ஜீனியாவில் உள்ள ஆர்லிங்ட்டன் தேசிய மயானத்தில், குடியரசுத்தலைவர் வாரன் ஹார்டிங்-கால் திறக்கப்பட்டது.
 முதல் உலகப்போரில் உயிரிழந்து, அடையாளம் காணமுடியாமற்போன நான்கு அமெரிக்க வீரர்களின்  உடல்கள், ஃப்ரான்சிலிருந்த நான்கு அமெரிக்க ராணுவ மயானங்களிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஒன்றை, உலகப்போரில் காயமுற்று, மிகவுயர்ந்த விருது பெற்ற எட்வர்ட் யங்கர் என்ற வீரரைத் தேர்ந்தெடுக்கச்செய்து, அது அமெரிக்காவுக்குக் கப்பல்மூலம் கொண்டுவரப்பட்டு, இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி, இரண்டாம் உலகப்போர், கொரியப்போர் உள்ளிட்டவற்றில் இறந்தவர்களுக்காகவும் இவ்வாவறான நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், இவற்றைப் பாதுகாக்க, கல்லறைக் காவலர்கள் என்ற பிரிவும் உள்ளது.

பல்வேறு நாடுகளிலும் (இந்தியாவில் அமர் ஜவான் ஜோதி, புதுடெல்லி) அமைக்கப்பட்டுள்ள இத்தகைய அடையாளம் தெரியாத  வீரரின் நினைவிடம் என்பதை அமைப்பதை, இங்கிலாந்தின் டேவிட் ரெய்ல்ட்டன் என்பவர்தான் முன்மொழிந்தார்.
முதல் உலகப்போரில் ஒன்றாகப் போரிட்ட இங்கிலாந்தும்,  ஃப்ரான்சும் உயிரிழந்த தங்கள் வீரர்களையும் பொதுவான மயானங்களிலேயே அடக்கம் செய்தன. இங்கிலாந்தில் அவற்றைப் பராமரிக்கும் பணியிலிருந்த போர்க் கல்லறைகள் ஆணையத்தைச் சேர்ந்த இவர், ஒரு கல்லறையில், ‘அடையாளம் தெரியாத ஓர் இங்கிலாந்து வீரர்’ என்று கையால் கீறப்பட்டிருந்ததைக் காண நேர்ந்தபோது,  போரில் உயிரிழந்து, அடையாளம் காண முடியாமற்போன அனைத்து வீரர்களுக்குமாக இவ்வாறு ஒரு பொதுவான நினைவிடம் அமைக்கலாம் என்ற ஆலோசனையை முன்மொழிந்தார்.

இது அரசால் ஏற்கப்பட்ட அதே நேரத்தில், ஃப்ரான்சிலும் இதேபோன்ற  கருத்து உருவாகியிருந்தது.

 1920இல் இங்கிலாந்திலும், ஃப்ரான்சிலும் அமைக்கப்பட்ட அடையாளம் தெரியாத வீரரின் கல்லறை, அடுத்த ஆண்டே அமெரிக்காவில் அமைக்கப்பட்டதுடன், பிற நாடுகளுக்கும் பரவியது.

 இந்தக் கல்லறைகளில் அடையாளம் தெரியாத ஒரு வீரரின் உடல் வைக்கப்படுவதே மரபாகப் பின்பற்றப்படுகிறது.

வியட்நாம் போர் முடிந்தபோது, எந்த உடலை எடுத்துவந்தாலும், டிஎன்ஏ பரிசோதனைகளின்மூலம், அது யார் என்று கண்டுபிடித்துவிட முடியும் என்ற தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

 வியட்நாமில் போரிட்ட ஓர் அடையாளம் தெரியாத வீரரின் உடல் 1984இல் கொண்டுவரப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுவிட்டாலும், ஆசியப் போர்களில் காணாமற்போன வீரர்களுக்கான அமைப்பு, அந்த உடல் வான்படையின் மைக்கேல் ப்ளேசி-யுடையதாக இருக்கும் என்று கண்டுபிடித்து அறிவித்தது.

அடையாளத்தை உறுதிப்படுத்த எழுந்த கோரிக்கைகளால் 1998இல் அந்த உடல் தோண்டி எடுக்கப்பட்டு, டிஎன்ஏ சோதனையில் அவர்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பயிற்சி
அரசு மற்றும் அரசு உதவி பெறும், மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளாக, &'நீட்&' தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 
அதேபோல, சி.ஏ., என்ற, பட்டய கணக்காளர் தேர்வுக்கான வழிகாட்டும் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை, 32 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமான, ஐ.சி.ஏ.ஐ., முன்வந்துள்ளது.

முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 70 பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. டிசம்பரில் அரையாண்டு தேர்வு துவங்கும் முன், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியர், இந்த பயிற்சியில் பங்கேற்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 சூரிய ஒளி அவசியம்.
நம் தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் சொல்வதுண்டு. ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், நம் குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான நல்ல

நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை, முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துஉள்ளனர்.

சூரிய கதிரிலுள்ள புறஊதா கதிர்கள், தோலின் மீது படும்போது, வைட்டமின் - டி, நம் உடலில் உற்பத்தியாகிறது.

குடலில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதற்கு, இந்த வைட்டமின் - டி மிகவும் அவசியம்.

இந்த வகையில் குடலின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக, குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் பல்லுயிர் பெருக்கத் தன்மைக்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம் என்பதை,
 மனித சோதனைகள் மூலம் கனடா விஞ்ஞானிகள் நிறுவியிருப்பதாக, 'பிரான்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜி' இதழ் தெரிவித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------