புதன், 20 நவம்பர், 2019

அந்த மூன்று பேர்.

இந்தியா முழுவதும் அரசு கல்வி நிறுவனங்கள் சர்ச்சைகளுக்குள்ளாகி வரும் நிலையில் நவம்பர் 9ம் தேதி சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் ஃபாத்திமா லத்தீப் என்கிற மாணவி தற்கொலை செய்து கொண்ட விஷயம் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
விவாதத்துக்கு முக்கியமான காரணம், ஃபாத்திமா எழுதியிருக்கும் கடிதம்.

கடிதத்தில் தன் மரணத்துக்கு காரணமென மூன்று நபர்களை குறிப்பிட்டிருக்கிறார் ஃபாத்திமா. சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் ப்ரெஹ்மே என்ற மூன்று பேர்.

ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் மகள் இறந்திருக்கும் முறையை வைத்து பல கேள்விகளை கேட்டு வருகிறார்.
சுதர்சன் பத்மநாபன் பல வகைகளில் ஃபாத்திமாவுக்கு உளவியல் சிக்கல்களை கொடுத்ததாக கூறுகிறார்.
மரணத்துக்கு முன்பே கூட ‘தன் பெயரே அவர்களுக்கு பிரச்சினையாக இருப்பதாக’ ஃபாத்திமா குறிப்பிட்டதை தந்தை நினைவு கூர்கிறார்.

சிறுபான்மை மதத்துப் பெண்ணை இந்தியாவில் வேறெங்கும் படிக்க அனுப்ப பயந்து, தமிழ்நாட்டை நம்பி அனுப்பி இழந்துவிட்டதாக ஃபாத்திமாவின் தாய் கலங்கினார்.
ஐ.ஐ.டி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டும் அப்துல் , ஃபாத்திமாவின் தற்கொலையில் சந்தேகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்கள் வேறு சில காரணங்களையும் சொல்கிறார்கள்.
 படிக்க வைக்கவென மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தம், ஹாஸ்டலில் தங்கி படிப்பதால் ஏற்படும் தனிமை, தேர்ச்சி பெறுவதற்கென இருக்கும் முறைகள் கொடுக்கும் அழுத்தம் என மாணவர்களுக்கு மன நெருக்கடி கொடுக்கும் சூழலே ஐ.ஐ.டி.யில் அதிகமென்கிறார்கள்.
இவை அல்லாமல் ஐ.ஐ.டி.யில் நிலவும் அரசியல் சூழலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

உதாரணமாக 2017ம் ஆண்டில் மாட்டுக்கறி உண்ணதாக ஒரு மாணவர் வளாகத்துக்குள்ளேயே தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

மேலும் ஐ.ஐ.டி.யின் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்றும் பார்ப்பன மற்றும் உயர்சாதியினரின் ஆதிக்கம் ஐ.ஐ.டி நிர்வாகத்தில் அதிகம் என்றும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.
 இந்தியாவில் இருக்கும் ஐ.ஐ.டி நிறுவனங்கள் மரணங்களின் விளைநிலமாக மாறியிருக்கும் சூழலில், சென்னையில் இருக்கும் ஐ.ஐ.டி மரண எண்ணிக்கையில் தலைமை வகிக்கிறது. எந்த வகையிலுமே ஏற்றுக் கொள்ள முடியாத தகவல் இது.

ஃபாத்திமாவின் தற்கொலை உட்பட சென்னை ஐ.ஐ.டியில் நடக்கும் மரணங்களுக்கு யார் காரணம்? யார் உண்மையான ’கொலைகாரன்’ ?
ஃபாத்திமா குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் இருந்தே தொடங்குவோம். முதல் நபர் சுதர்சன் பத்மநாபன். அவரின் அரசியல் என்னவென்பதை அடையாளம் காட்டும் வகையில் பல காணொளிகள் இணையதளத்தில் கிடைக்கின்றன. இட ஒதுக்கீட்டை தவறாக சித்தரிக்கும் வழக்கமான எள்ளல் அவரிடம் இருக்கிறது.
அதை விட இன்னொரு முக்கியமான காணொளி ஒன்று இருக்கிறது.
 ஒரு கருத்தரங்கு நடத்தப்படுகிறது. அதை ஒருங்கிணைக்கும் இடத்தில் சுதர்சன் பத்மநாபன் இருக்கிறார். பல மாணவர்கள் வந்து கருத்தரங்கின் பொருட்டு தாங்கள் செய்த ஆய்வுகளை சமர்ப்பித்து விளக்குகிறார்கள்.
அந்த கருத்தரங்கின் பெயரென்ன தெரியுமா?
Modern Hinduphobia and Dravidian Movement. தமிழில் மொழிபெயர்த்தால் ‘நவீன இந்து வெறுப்பும் திராவிட இயக்கமும்’ என சொல்லலாம்.
சுதர்சன் பத்மநாபன்


ஓர் உயர்கல்வி நிறுவனத்தில் இப்படியான ஒரு தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்படுகிறதெனில் அந்த நிறுவனத்தின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும்?
அது மட்டுமல்ல. அந்த கருத்தரங்கில் முன் வைத்து விளக்கப்பட்ட ஆய்வுகளின் தலைப்புகளை பாருங்கள். ‘தமிழ் மனதை காலனியாதிக்கத்தில் இருந்து எப்படி மீட்பது?
’, ‘தமிழ் தொலைக்காட்சிகளில் இருக்கும் இந்து வெறுப்பு’,
 ‘திராவிட மொழிச் சிந்தனை இனவெறிக்கு நிகர்’,
‘தமிழர் மருத்துவமான சித்த மருத்துவம் நச்சுத்தன்மை கொண்டது’ என பட்டியல் போகிறது.

இவை யாவும் ஒரு கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட தலைப்புகள். இது போல பல கருத்தரங்கங்களின் காணொளிகள் கிடைக்கிறது.
இன்னொரு கருத்தரங்கின் தலைப்பு ‘சாதி, தீண்டாமை மற்றும் இந்து மதம்’.
இந்த தலைப்பில் பேசப்படும் முதல் ஆய்வின் தலைப்பு என்ன தெரியுமா? 
 ‘சாதி பேசி ஆதாயம் பெறுவதை ஒழிக்கும் வழி’! அதில் பேசுகிற மாணவர், ‘ஒரு சில தனி மனிதர்கள் எப்படி சாதியை பேசி ஆதாயம் பெறுகிறார்கள் என்பதையும் அதன் வழி வருணாசிரம தர்மத்தையும் இந்து மதத்தையும் எப்படி அவதூறு பேசுகிறார்கள் என்பதையும் இந்த ஒரு புத்தகத்தை வைத்து நான் விளக்கவிருக்கிறேன்’ என கூறிவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்.
 அந்த புத்தகத்தின் அட்டையில் அண்ணல் அம்பேத்கரின் படம் இருக்கிறது.
 புத்தகத்தின் பெயர் ‘சாதியை ஒழிக்க வழி’!

பார்ப்பனீயத்தை முன்னெடுத்து கருத்தரங்குகளாகவும் ஆய்வுகளாகவும் ஐ.ஐ.டி நிறுவனம் திராவிட இயக்கத்தின் அரசியல் கருத்தியலை பற்றியும் தமிழர் சமயம் எப்படி பார்ப்பனீயம் ஆக முடியாதென்பதை மதச்சார்பின்மை பற்றியும் இஸ்லாமிய வெறுப்பை பற்றியும் அரசியல் மதம் கலப்பதன் பிரச்சினைகள் பற்றியும் ஆய்வுகளையோ கருத்தரங்குகளையோ நடத்தியிருக்குமா என தெரியவில்லை.

திராவிட இயக்கத்தை பற்றிய துவேஷமும் இந்தியாவில் ஆரியர்களின் வருகை குறித்தும் அப்பட்டமான வெறுப்பு விதைக்கும் விதங்களில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் சுதர்சன் பத்மநாபன் அமர்ந்திருக்கிறார்.

அத்தகைய மனிதரைத்தான் ஃபாத்திமா தன் மரணத்துக்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டிருக்கிறார்.
சுதர்சன் பத்மநாபன் என்ற பெயரை இட்டு தேடுபொறியில் தட்டிவிட்டால், அவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் தேடுபொறி கொண்டு வந்து காட்டுகிறது.
அதில் ஒரு முக்கியமான புத்தகமும் இருக்கிறது.
தலைப்பு என்ன தெரியுமா? 
Becoming Minority : How Discourses and Policies Produce Minorities in Europe and India.
அதாவது ‘சிறுபான்மையினராக மாற்றப்படும் தன்மை: கொள்கைகளும் போக்குகளும் எப்படி ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் சிறுபான்மையினரை உருவாக்குகிறது’ என மொழிபெயர்க்கலாம்.

தலைப்பிலேயே சிறுபான்மை மதங்களை பற்றியும் மொழியினரை பற்றியும் என்ன விதமான கருத்துகள் புத்தகத்தில் இருக்கும் என்பதை ஊகித்துவிட முடியும்.
எனினும் புத்தகத்தை படிக்காமல் கருத்து தெரிவித்துவிடக் கூடாதென படிக்க தொடங்கினாலே போதும். பக்கத்துக்கு பக்கம் வெறுப்பு உங்கள் முகத்தில் தெறிக்கும்.

சுருங்க சொல்வதெனில் ‘காலனியாதிக்கத்தின் தொடர்ச்சியாகவே சிறுபான்மை தொகுதி என்பது அரசியலில் நிறுத்தப்படுகிறது என்பதாகவும் ஓட்டரசியலின் விளைவாகவே அவர்களை பெரும்பான்மையுடன் கலக்க விடாமல் கட்சிகள் வைத்திருக்கின்றன என்பதாகவும் அதனாலேயே வெறுப்பரசியல் திட்டமிட்டு விதைக்கப்படுவதாகவும்’ புத்தகம் பேசி செல்கிறது.

நிலவரம் இப்படியிருக்க சமூக தளங்களில் தன்முனைப்பு மட்டுமே கொண்ட அரைவேக்காடுகளில் சில, சுதர்சன் பத்மநாபனை மட்டுமே திராவிட, அம்பேத்கரிய, கம்யூனிச கட்சிகள் விமர்சிப்பதாக குறிப்பிடுகின்றனர்.
மிலிந்த் ப்ரெஹ்மே


அதற்கு காரணமாக, ஃபாத்திமா குற்றம் சாட்டியிருக்கும் இன்னொரு நபரான மிலிந்த் ப்ரெஹ்மே என்பவர் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர் என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
குற்றம் எவர் செய்தாலும் குற்றமே.
 ஆனால் உண்மை தெரியாமல் குற்றஞ்சாட்டுவது சரியான அரசியலும் கிடையாது.
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தில் மிலிந்த் உறுப்பினராக இல்லை.
 ஐ.ஐ.டி நிர்வாகத்தின் பிரதிநிதியாக மட்டுமே இருந்தார்.
 இதைப் பற்றி செய்திகள் பல வந்திருக்கின்றன.

சோகம் என்னவென்றால் தமிழ் தேசியர்கள் இதுதான் வாய்ப்பு என கருதி திராவிட, அம்பேத்கரிய, கம்யூனிச கட்சிகளை பிறாண்ட ஓடி வருவதுதான்.

ஐ.ஐ.டி நிர்வாகம் நடத்தும் கருத்தரங்குகளை சில மணி நேரங்கள் செலவழித்து பொறுமையாக பார்த்தால், அவர்கள் பரப்பும் விஷம் திராவிடத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழுக்கும் தமிழர் பெருமைக்குமே எதிரானது என்ற விஷயம் புரிந்துவிடும்.

ஃபாத்திமா குற்றஞ்சாட்டியிருக்கும் மற்றுமொரு நபர் ஹேமச்சந்திர கரா.
அவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் கொண்டிருக்கும் அரசியலை பற்றி பெரிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும் இந்த கட்டுரை யாரும் குற்றஞ்சாட்ட எழுதப்படவில்லை. அதற்கென விசாரணைகளும் முறைகளும் இருக்கிறது.
அவை சரியாக நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். இந்த சமூகம் கொண்டிருக்கும் அமைப்புக்கேற்பவே விளைவுகளும் தீர்வுகளும் கிடைக்கும். அவற்றை தாண்டி இக்கட்டுரையின் முக்கிய நோக்கம், ஐ.ஐ.டி என்ற கல்வி நிறுவனத்தில் நடக்கும் மரணங்களுக்கு யார் காரணம் அல்லது எது காரணம்?
‘என் பெயரே அவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது’ என ஃபாத்திமா குறிப்பிட்டிருக்கிறார் என்றால் அந்த அவர்கள் யார்?
அந்த அவர்கள் கொண்டிருக்கும் சிந்தனை முறை மற்றும் அரசியல்கள் என்ன?

எந்தவொரு நிறுவனத்திலும் அமைப்பிலும் அதிகாரத்தில் எந்த சிந்தனை இருக்கிறதோ எந்த அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதுவே அந்த அமைப்பு முழுக்க, நிறுவனம் முழுக்க வழிந்தோடும். அந்த வகையில் ஐ.ஐ.டி நிறுவனத்தில் நிலவும் அரசியல் என்ன?
ஐ.ஐ.டி நிர்வாகம் என்ன சிந்தையை கொண்டிருக்கிறது?
'சிறுபான்மையினராக மாற்றப்படும் தன்மை' என புத்தகம் தொகுக்கும் நபரின் பார்வையில் சிறுபான்மை மதத்தை சேர்ந்த பெண் என்னவாக தெரிவாள்?
 என்ன மாதிரியான மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும்?
 எந்த மாதிரியான வார்த்தைகள் உதிர்க்கப்பட்டிருக்கும்?
மதிப்பெண்கள், தேர்வு, தனிமை போன்றவற்றுடன் பார்ப்பனீய ஆதிக்க சிந்தனையும் ஒடுக்குமுறையும் சேர்கையில் அங்கு படிக்கும் மாணவனுக்கு கிடைப்பது என்னவாக இருக்க முடியும்?

ஐ.ஐ.டி மரணங்களுக்கு அடிப்படை காரணம் பார்ப்பனிய அதிகாரம், பார்ப்பனிய சிந்தை, பார்ப்பனிய அமைப்பு, பார்ப்பனிய ஆதிக்கம்!

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் யாவும் காவி படிந்து கறைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், நம்மூருக்குள் அமர்ந்து கொண்டு திராவிடத்தையும் பெரியாரையும் அம்பேத்கரையும் தமிழையும் இடதுசாரிகளையும் எதிர்க்கும் கூடாரமாக இருக்கிறது ஐ.ஐ.டி.
இந்து மதத்தையும் ஆரியத்தையும் தமிழையும் ஒன்றென நிறுவும் திரிபுவாத கருத்துகளை ஆய்வுகளென செய்யும் ஆர்.எஸ்.எஸ் மடமாக மாறியிருக்கிறது ஐ.ஐ.டி.
இங்கிருந்துதான் நம் குழந்தைகள் அறிவை பெற இருக்கின்றன என்னும்போது அவர்கள் நமக்கு எதிராகவே எதிர்காலத்தில் நிற்பார்கள் என்பதே சாத்தியம்.
ஃபாத்திமா மட்டுமின்றி இனி வேறெவரையும் பறிகொடுத்திட கூடாதெனில் நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்.
ஐ.ஐ.டி.யில் அரசியல் ரீதியாகவும் இட ஒதுக்கீடு ரீதியாகவும் இருக்கும் சர்ச்சைகளை விசாரணைக்குட்படுத்த வேண்டும்.
காவி இருக்கும் இடங்கள் யாவும் அடித்து துவைத்து அலசி கழுவி சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்திட மாநில பிரதிநிதித்துவ அமைப்புகளை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் உருவாக்கிட வேண்டும்.
இல்லையெனில், இடம் கேட்டு வந்தவன் மொத்த வீட்டையும் பறித்துக் கொண்டு போவான்!-ராஜசங்கீதன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்.

யுனிசெஃப் குழந்தைகள் தினம்
 திப்பு சுல்தான் பிறந்த தினம் (1750)

லியோ டால்ஸ்டாய் நினைவு நாள்  (1910)
உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது(1917)
ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க், ரெண்டென்மார்க் ஆல் மாற்றப்பட்டது(1923)
மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது(1985)

திப்பு சுல்தான்
கர்நாடக மாநிலம், தேவனஹள்ளி எனும் ஊரில், ஹைதர் அலி -- பாத்திமா பக்ருன்-னிசா தம்பதிக்கு, 1750 நவ., 20ல் பிறந்தார். 
 ஹைதர் அலியின் இரண்டாம் தாரத்தின் மகனான, திப்பு சுல்தான், ஆங்கிலேயர் படைகளுடனான, இரண்டாம் -மைசூர் போரில், இவரது தந்தை, வெற்றி பெற உறுதுணையாக இருந்தவர்
.தந்தையின் வீரமரணத்திற்கு பின், மைசூரின் மன்னரானார். 

1782 --- 1799 வரை, மைசூரை ஆண்டார். 
இந்தியாவில் இருந்து, ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க, பிரான்சின் மாவீரன், நெப்போலியனுடன், திப்பு சுல்தான் பேச்சு நடத்தினார். 
முதன்முதலில், ராக்கெட்களை பயன்படுத்திய பெருமைக்குரியவர். 

மூன்றாம் மற்றும் நான்காம் -மைசூர் போர்களில், பிரிட்டன் கூட்டு படைகளால், திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார். 

ஸ்ரீரங்கப்பட்டினத்தில், 1799 மே, 4ல் போரில் வீரமரணம் அடைந்தார்.

----------------------------------------------------------------------------------------
 லியோ டால்ஸ்டாய்
 “அரசனின் வாளைவிடப் பேனா முனைக்கு வலிமை அதிகம்”. தமது பேனாவின் மூலம் சமுதாயத்தை மாற்றியவர்களுள் ஒருவரே லியோ டால்ஸ்டாய் ஆவார்.

இவர் ரஷ்யாவில் மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார்.

எண்ணற்ற சிறுகதைகளையும் மிகச் சிறந்த புதினங்களையும் எழுதினார். அவற்றுள் ஒன்றுதான் "போரும் அமைதியும்' என்ற நூலாகும். இந்நூலை எழுதி முடிக்க அவருக்கு ஏழு ஆண்டுகள் ஆயின.
இன்றளவும் ரஷ்ய இலக்கியத்தின் முக்கிய நூலாக அது கருதப்படுகிறது. 


இவர் எழுதிய மற்றொரு காவியம் "அன்னா கரீனீனா' ஆகும். இந்நூல்களைப் படிப்பதன் மூலம் ரஷ்ய சமூகத்தின் பல்வேறு அம்சங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
இவரது கதைகள் ஆழ்ந்த மனோதத்துவக் கொள்கைகளை வலியுறுத்துவதாக அமைந்தன.
டால்ஸ்டாய் மகாத்மா காந்தியையும் அவரது கொள்கைகளையும் பெரிதும் மதித்தார்!
உலகப் பொதுமறையாம் திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூலைப் படித்து அதன் பெருமையை ரஷ்யர்களுக்கு விளக்கினார்!
இவர் ரஷ்யர்களுக்கு எழுத்தாளர் மட்டுமல்ல!
தத்துவமேதை ஞானி மற்றும் தீர்க்கதரிசியும் ஆவார்!
-----------------------------------------------------------------------------------------
உலகின் முதல் பணவீக்கம்! 
1923 - ஜெர்மனியின் பழைய நாணய மான பேப்பியர் மார்க்குக்கு, ஒரு லட்சம் கோடிக்கு (ஆம்! 1,000,000,000,000!) ஒன்று என்ற விகிதத்தில் புதிய நாணயமான ரெண்ட்டன்மார்க் மாற்றித்தருதல் தொடங்கியது.
முதல் உலக்போருக்கான செலவு களுக்காக பிரான்ஸ் முதலான நாடுகள் கூடுதல் வரி களை விதித்தன. ஆனால், போரில் வென்று விடலாம், கைப்பற்றும் புதிய பகுதிகளிலிருந்து கூடுதல் வரு வாய் வரும், தோற்கும் நாடுகளிடமிருந்தும் பெருந் தொகையை இழப்பீடாகப்பெறலாம் என்றெல்லாம் கருதிய ஜெர்மனி, முழுமையாகக் கடன் வாங்கியே அனைத்து செலவுகளையும் செய்தது (பொருளாதார நோக்கமின்றி போரில்லை!)
 போரில் தோற்றபின், இழப்பீடாக 13,200 கோடி தங்க மார்க்(தங்கத்தின் அடிப்ப டையிலான ஜெர்மன் நாணயம்!) ஜெர்மனி தரவேண்டு மென்று பாரிஸ் அமைதி மாநாடு முடிவெடுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள், போருக்கு வாங்கிய கடன்கள் ஆகியவற்றால் நாணய மதிப்பு மிகமோசமாகச் சரிய, ஏராளமான பேப்பியர் மார்க்குகளை ஜெர்மனி அச்சிட்டது.
அதனால் ஏற்பட்ட வரலாறு காணாத பணவீக் கத்தைத் தொடர்ந்தே இந்தப் புதிய நாணயம் வெளி யிடப்பட்டது.
ஒரு நாணயத்தின் பொருட்கள் வாங்கும் திறன் (மதிப்பு) குறைதல் பணவீக்கம் என்றும், இவ்வாறு மிகப்பெரிய அளவில் நிகழ்வது அதிஉயர்(ஹைப்பர்) பணவீக்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
ரோமப் பேரரசில் மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட நெருக்கடி யின்போது உருவானதே உலகின் முதல் அதி உயர் பணவீக்கம்!

அப்போது ஃபியட் கரன்சி என்னும் இயல் பான மதிப்பற்ற, உறுதிமொழி அடிப்படையிலான நாண யங்கள் உருவாகவில்லை என்பதால், தங்கத்திற்கு பதிலாகப் பிற உலோகங்களாலான நாணயங்கள் வெளி யிடப்பட்டு, சரிவுக்குக் காரணமாயின.
காகித ஃபியட் கரன்சியை முதலில் அறிமுகப்படுத்திய நாடான சீனா, தொடக்கத்தில் காகித நாணய அச்சடிப்பிற்கு கடுமை யான கட்டுப்பாடுகளை கொண்டிருந்தது.
போர்ச் செலவு களுக்காக, 13ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஏராளமான காகித நாணயங்கள் அச்சிடப்பட்டதால் சரிந்து கொண்டேவந்த நாணய மதிப்பு, அதிஉயர் பணவீக்க மாக மாற, 1948இல் 18 கோடி யுவான் நாணயம்கூட அச்சடிக்கப்பட்டது!
அவ்வாண்டில், 30 லட்சம் யுவான் என்பது ஒரு தங்க யுவான் என்ற விகிதத்தில் புதிய நாண யம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதன் மதிப்பும் அடுத்த ஆண்டிலேயே சரிந்தது. புரட்சிக்குப் பிந்தைய அரசு ரென்மின்பியை அறிமுகப்படுத்தியபின்னரே, சீனா நாணய மதிப்பு நிலைபெற்றது.
 வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும், உலகின் பல நாடுகளி லும் அதிஉயர் பணவீக்கம் நிகழ்ந்திருக்கிறது. தற்போது வெனிசுலாவில் நிலவும் அதிஉயர் பணவீக்கம், 2019இன் இறுதியில் ஒரு கோடி சதவீதமாக உயருமென்று ஐஎம்எஃப் கணித்துள்ளது.

-அறிவுக்கடல்
-----------------------------------------
குளிர் சாதன  பெட்டியில் 
எப்படி  வைக்க வேண்டும்  

"ரொட்டிகளை ஃப்ரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும் என அதனை தயவு செய்து ஃப்ரிட்ஜுக்குள் சேமித்து வைக்காதீர்கள். ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு தட்பவெட்பத்தில் வைத்துதான் பயன்படுத்த வேண்டும்."

வேலை வாய்ப்புகள் 

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி, டேட்டா அனாலிஸ்ட் உள்ளிட்ட 13 வகையான பிரிவுகளில் மொத்தம் 105 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது
: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:
தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி
: 21.11.2019 

விபரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/pdf
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
 தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.  ----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய எண்ணைக் கழகத்தில் (indian oil corporation) வேலை

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 380 'டெக்னீசியின் அப்ரென்டிஸ்' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : மண்டல பைப்லைன்ஸ் வாரியாக மேற்கு 115, கிழக்கு 100, தென் கிழக்கு 50, வடக்கு 90, தெற்கு 25 என மொத்தம் 380 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.10.2019 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள் : 22.11.2019

விபரங்களுக்கு:www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------- 
  பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள் 
 மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500. கடைசிநாள்: 29.11.2019

விபரங்களுக்கு
: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf
 ----------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டால்கர்வேர்
வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு ஏற்ப, புதிய புதிய தொழில்நுட்ப பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களில் ஸ்டால்கர்வேர் (Stalkerware) என்ற புதிய தொல்லை கண்டறியப்பட்டுள்ளது.

நாம் ஏற்கனவே அறிந்துள்ள மால்வேர், ஆட்வேர், ஸ்பைவேர் ஆகியவற்றைப் போல ஸ்டால்கர்வேர் என்பதும் ஒரு வகையான வைரஸ்தான்.
ஸ்பைவேர் போன்றவை இலக்கின்றி புளூடூத், வைபை (WIFI) இணைப்புகள் மூலமாக, இணைய முகவரிகளைக் கிளிக் செய்வதன் மூலமாக தற்செயலாக நம்மை அறியாமல் ஸ்மார்ட்போனில் நுழைகின்றன. “ஸ்டால்கர்வேர்” என்பது பயன்படுத்துபவரின் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் நிறுவப்படுவது.
ஸ்டால்கர்வேர் ஸ்பைவேர் போன்றதுதான், இதில் கீபேட் செயல்பாட்டைக் கண்காணிக்கும் கீலாக்கர்கள் மற்றும் கிளிப்பர் போன்ற நிரல்களை உள்ளடக்கியது.
ஸ்டால்கர்வேருக்கும் ஸ்பைவேர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஸ்பைவேர் என்பது எந்த ஒரு ஸ்மார்ட்போனிலும் நம்முடைய தவறான செயல்பாடுகளைப் பயன்படுத்தி நுழைபவை.
பிறகு அந்த சாதனத்திற்குள் பதுங்கிக் கொண்டு, அதனை அனுப்பியவருக்கு ஃபோன் தகவல்களை அனுப்புகிறது.
ஸ்டால்கர்வேர் என்பதும் இதே வேலையைத்தான் செய்கிறது. ஆனால், நிறுவனமாக்கப்பட்ட செயல்முறையுடன் கட்டண அடிப்படையில் இந்த வசதியை தேவைப்படும் வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. கட்டணம் செலுத்தியவர் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போனில் நிறுவி, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம்.
 பாதிக்கப்பட்டவருக்கு இதுபோன்ற ஒரு செயல்பாடு நடந்ததே தெரியாத வண்ணம் இந்த ஸ்டால்கர்வேர் செயல்படுகிறது.
ஸ்டால்கர்வேரைப் பயன்படுத்தி பல்வேறு வகையான தகவல்களைக் கண்காணிக்க முடியும். எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்டவரின் எஸ்எம்எஸ் செய்திகளை ஒருவர் கண்காணிக்க முடியும், ஜிபிஎஸ் வசதி கொண்டு இருப்பிடத்தை கண்டறியலாம்.
 இதுபோல ஃபோன்கால்கள், ஆப் பயன்பாடுகள் அனைத்தையும் கண்காணிக்க என்று பயனரின் தேவைக்கேற்ப ஸ்டால்கர்வேர் வடிவமைக்கப்படுகிறது.ஸ்டால்கர்வேரின் முதன்மை சந்தை என்பது வேறொருவரை முழுமையாக நம்பாத நபர்கள்தான்.
எடுத்துக்காட்டாக, சந்தேகத்திற்கிடமான வாழ்க்கைத் துணையைக் கண்காணிக்க, பெற்றோர் குழந்தைகளைக் கண்காணிக்க ஸ்டால்கர்வேர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது தவறில்லை என்பது போன்ற சொற்பிரயோகங்களை கொண்டிருப்பதால், சைபர் சட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. தனிநபர் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ள ஸ்டால்கர்வேரும் ஒரு வைரஸ்தான்.

ஆண்ட்ராய்ட் பிளே ஸ்டோரில் ஸ்டால்கர்வேர் வகையைச் சார்ந்த 7 ஆப்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.

 Track Employees Check Work Phone Online Spy Free, Spy Kids Tracker, Phone Cell Tracker. Mobile Tracking, Spy Tracker, SMS Tracker, Employee Work Spy என்ற பெயரில் இருந்த அந்த ஆப்கள் ஆபத்தானவை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஆப்கள் ஏதேனும் உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டிருந்தால் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் மூலம் கண்டறியலாம். உதாரணமாக, கேஸ்பர்ஸ்கை போன்ற ஆண்டிவைரஸ்கள் தீங்கிழைக்கும் ஆப்களைக் கண்டறியக்கூடியவை.
இவற்றை நிறுவி உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் மால்வேர் ஆப்களின் எஞ்சிய சில பகுதிகள் (Remnants)நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான ஆப்களில் நுழைந்திருக்கலாம்.உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் ஃபேனை Factory Reset செய்து பயன்படுத்துங்கள்.
இந்த செயல்பாட்டில் உங்கள் மொபைலின் நினைவகம் அழிக்கப்பட்டு

புதிதாக்கப்படும்.
 எனவே, இந்த செயல்பாட்டிற்கு முன்பாக முக்கியமான தகவல்களை பேக்கப் செய்து கொள்ளவும்.மீண்டும் புரிதலுக்காக குறிப்பிடுகிறோம்.
ஸ்பைவேர் என்பது தற்செயலாக பதிவிறக்கம் செய்யப்படுவது. ஸ்டால்கர்வேர் என்பது குறிப்பிட்ட சாதனத்தைக் கண்காணிக்க ஒருவரால் வேண்டுமென்றே நிறுவப்படுவது.

இன்றைய டிஜிட்டல் உலகில் தனிநபர் உரிமைக்கான போராட்டத்தில் நாம் இதுபோன்ற அனைத்து வகையான வைரஸ்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதும், கவனமாக இருப்பதும் அவசியமாகும்.

-என்.ராஜேந்திரன்

---------------------------------------------------------------------------------------------------------------------------