ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்கள் பற்றி எரிகிறது. பெரும் பதட்டம் நிலவுகிறது.
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதை சமாளிக்க அஸ்ஸாம், திரிபுராவுக்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தாமல் போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். போராட்டம் நடத்தும் இடம் வழியாக சென்ற ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தியதால் போலீஸார் லேசாக தடியடி நடத்தி கலைத்தனர். மோதல் போக்கு இந்தநிலையில் அஸ்ஸாமில் புதன்கிழமை தெரு வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். மாணவர்களும் இந்த போராட்டத்தில் உள்ளனர். போலீஸாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர்.
துணை ராணுவம் சட்டம் ஒழுங்கை காக்க ஏற்கெனவே ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்தை அடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த 2000-க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் வடகிழக்கு மாநிலங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிஆர்பிஎஃப், எல்லை பாதுகாப்பு படையினர், எஸ்எஸ்பி உள்ளிட்டோரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணீர் இந்த போராட்டம் அஸ்ஸாம் தலைமை செயலகம் முன்பும் நடைபெற்றது. ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்தெறிந்தனர். அங்குள்ள வாகனங்களை தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் தடியடி நடத்தினர்.
இணையதள சேவைகள் வன்முறை களமாக மாறிய அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் இன்று இரவு முதல் அஸ்ஸாமில் இணையதள சேவைகள் முடக்கப்படுகிறது. குவாஹாத்தியில் உள்ள திப்ருகார் மாவட்டத்திலும் போராட்டக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகளை வீசினர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் நிருபர் ஒருவர் காயமடைந்தார்.
குடியுரிமைத் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும். குடியிருப்பு மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேச மக்களின் ஊடுருவலுக்கு எதிராக நீண்ட காலம் போராட்டம் நடத்தி வரும் அசாம் மக்கள், இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.