முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சரிகிறது பொருளாதாரம்







பல மாதங்களாக ஏதேதோ சொல்லி சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்த மத்திய ப.ஜ.க அரசு, இறுதியாக இந்திய பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்துள்ளது என்று ஒப்புக்கொண்டு விட்டது. ஆனால் இது மந்தை நிலை இல்லை எனவும், மந்த நிலைக்குச் செல்லாது எனவும் நிதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இந்த வாக்குறுதி, நம் நாட்டின் காடுகளிலும், வயல்களிலும், ஆலைகளிலும், அலுவலகங்களிலும் பாடுபட்டு உழைக்கும் சாமானிய மக்களிடம் அளித்த வாக்குறுதி அல்ல. ஜனநாயகத்திற்கு எதிரான தேர்தல் பத்திரங்கள் (electoral bonds) மூலம் ப.ஜ.க-வை பணக்கார கட்சியாக மாற்றிய பெரு முதலாளிகளுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும், “உங்கள் சொத்துக்கு ஒன்னும் ஆகாது. இந்த நாட்டு மக்களையும் வளங்களையும் மொத்தமாக சுரண்டிக் கொடுத்தாவது அதை நாங்கள் பாதுகாத்துத் தருவோம்!” என்று கூறாமல் கூறியிருக்கிறார் அமைச்சர் அவர்கள். இவ்வாறு, சுரண்டுபவர்களே அஞ்சும் அளவு இந்திய பொருளாதாரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது; அரசு எவ்வளவு தான் மறைக்க நினைத்தாலும், ஒவ்வொரு நாளும் மக்களின் அதிகரிக்கும் இன்னல்களை வெளிப்படையாக்கும் தரவுகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
பொருளாதாரம் இப்படி பரிதவிக்க, இந்தியாவின் பங்குச் சந்தைகள் மட்டும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது! ஒவ்வொரு நாளும், இதுவரை வரலாற்றில் எட்டாத புதிய உச்சத்தை எட்டி வருகிறது! இது நம்மை வியக்கச் செய்கிறது அல்லவா? இதற்கு காரணம் என்ன? இந்த கேள்வியை ஒரு முதலாளித்துவ அறிஞரிடம் கேட்டால், “அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், வரும் காலங்களில் பொருளாதாரம் மீளும் என்ற நம்பிக்கையால் தான் பங்குச் சந்தை முதலீடுகள் உயர்ந்த வண்ணம் உள்ளன” என்று விளக்கம் தருவார். “ஆனால் அப்படி ஒன்றும் நம்பிக்கையூட்டும் வகையில் எதுவும் நடக்கவில்லையே! கார்ப்பரேட்டுகளுக்கான வரியை எல்லாம் குறைத்துப் பார்த்தார்கள். ஆனாலும், 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 4.5%-ற்கு குறைந்துவிட்டதே!” என்று நாம் பதிலுக்கு கேட்டல் முதலாளித்துவ அறிஞர்கள் வாயடைத்து நின்று விடுவர்; அவர்களிடம் விளக்கம் கிடையாது என்று நாம் சொல்ல வேண்டாம், அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்!
முதலாளித்துவத்தில் நடப்பதற்கு முதலாளித்துவ அறிஞர்களிடமே விளக்கம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் பின்பற்றும் “நவீன செவ்வியல்” (neo-classical) ஆய்வு முறை தான் – இந்த முறை மட்டும் அல்ல, தற்காலத்தில் விளங்கும் எல்லா முதலாளித்துவ ஆய்வு முறைகளுமே அறிவியலற்ற ஆய்வு முறைகள் தான். அறிவியல் முறையை பின்பற்றினால் தானே அவர்களின் முதலாளித்துவ முறையை அவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்?
ஆனால் இதற்கான சரியான விளக்கம் மார்க்சிய பொருளாதாரத்தில் மட்டுமே கிடைக்கும். அறிவியலுக்குப் புறம்பான “கருத்துமுதல்வாத” அடிப்படியில் உருவான “நவீன செவ்வியல்” முதலாளித்துவ ஆய்வு முறைக்கு மாற்றாக, அறிவியல் முறையை பின்பற்றி, “பொருள்முதல்வாத” அடிப்படியில் உருவானது தான் மார்க்சிய அரசியல் பொருளாதாரம். அறிவியல் முறையை பின்பற்றினால் தானே எதையும் நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும்? மார்க்சிய அறிவியல் முறையை பின்பற்றி, முதலில் முதலாளித்துவ நெருக்கடியை புரிந்து கொள்வோம்.

முதலாளித்துவத்தை நெருக்கடியில் தள்ளும் அதன் செயல்முறை:

முதலாளித்துவம் இவ்வாறு மீண்டும் மீண்டும் நெருக்கடிக்குள் செல்வதற்குக் காரணம் முதலாளித்துவத்தில் நிகழும் “மிகை உற்பத்தி” (over-production) பிரச்சனை தான் என்று பல இடதுசாரி அறிஞர்களும் சொல்லி நாம் கேட்பதுண்டு. அதாவது, முதலாளித்துவம் லாபத்தை பெருக்க தொழிலாளர்களை மேலும் மேலும் சுரண்டி, ஊதியத்தை மேலும் மேலும் குறைப்பதனால், தொழிலாளர்கள் உற்பத்தி செய்த பொருட்களை அவர்களே வாங்க அவர்களிடம் பணமில்லாமல் போகிறது. இதனால் தான் நெருக்கடி ஏற்படுகிறது என்பது தான் அந்த விளக்கம்.
இந்த விளக்கம் மிகச் சரியானது என்றாலும், போதுமானது அல்ல. இதிலிருந்து ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது – அப்படியென்றால் போதிய ஊதியம் கொடுக்காதது தான் பிரச்சனையா? ஊதியம் உயர்த்திக் கொடுத்து விட்டால் முதலாளித்துவதில் நெருக்கடி தீர்ந்துவிடுமா? இல்லை, அதனை புரிந்துகொள்ள நாம் மார்க்ஸ் கூறிய “லாப வீதம் குறையும் போக்கு பற்றிய விதி” என்பதை அறிய வேண்டும்.
இந்த விதியை புரிந்து கொள்வதற்கு முன்பு, நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், முதலாளித்துவத்தை ஆட்டிப்படைக்கும் முக்கியமான அளவுகோல் “லாபம்” அல்ல; “லாப வீதம்” தான். அதாவது, ஒரு முதலாளி ரூ.1000/- முதலீடு செய்து, ரூ.500/- லாபம் அடைந்தால், லாப வீதம் 50% (500÷1000). இந்த அளவுகோல் தான் அவர்கள் நெருக்கடியில் சிக்குவதை தவிர்க்க இயலாததாக ஆக்குகிறது.

லாப வீதம் குறையும் போக்கு பற்றிய விதி” என்றால் என்ன?

“லாப வீதம் குறையும் போக்கு பற்றிய விதி” கூறுவது என்னவென்றால், முதலாளித்துவ பொருளாதாரம் வளர வளர “லாப வீதம்” குறைந்து கொண்டே வரும் போக்கை நாம் காணலாம் என்பதைத் தான். அதாவது, ரூ.1000/- முதலீடு செய்து ரூ.500/- லாபம் கொடுக்கும் ஒரு முதலாளிதத்துவ பொருளாதாரம் (50% “லாப வீதம்” கொடுக்கும் பொருளாதாரம்), அடுத்த முறை ரூ.1500/- (முன்னரே இருந்த ரூ.1000/- + ரூ.500/- லாபம்) முதலீடு செய்தால், பெரும்பாலும் 50%-த்தைவிட குறைவான லாப வீதம் கொடுக்கும் போக்கை தான் பார்ப்போம். இங்கு “போக்கு” என்பது முக்கியமான சொல். ஒரு குறுகிய காலகட்டத்தில் லாப வீதம் அதிகரிக்கவும் செய்யயலாம். ஆனால் போதுமான அளவு நெடிய காலகட்டத்தை எடுத்துக்கொண்டோமானால், “லாப வீதம்” கண்டிப்பாக குறையும் போக்கை நாம் பார்க்கலாம்.
சரி, அப்படி குறைந்தால் பிரச்சனை என்ன? லாப வீதம் ஓரளவு அதிகமாக இருக்கும் பொழுது பிரச்சனை இல்லை. உதாரணமாக, ரூ.1000/- முதலீடு 50% லாப வீதம் கொடுத்தால் ரூ.500/- லாபம் கிடைக்கும். இப்பொழுது மீண்டும் ரூ.1500/- முதலீட்டிற்கு லாப வீதம் 40%-ஆக குறைந்தாலும், ரூ.600/- லாபம் கிடைக்கும் (அதாவது லாபம் அதிகரித்தது). ஆனால் லாப வீதம் மிகவும் குறைவான அளவை எட்டினால் தான் பிரச்சனை! எடுத்துக்காட்டாக, ரூ.10,000/- முதலீடு 10% லாப வீதம் அளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம் (அதாவது ரூ.1000/- லாபம்). மீண்டும் ரூ.11,000/- முதலீடு செய்யும் பொழுது, லாப வீதம் 9%-ஆக குறைந்தால், லாபமே குறைந்துவிடும்! (லாபம் ரூ.990/-). தொழிலாளர்களை சுரண்டி லாபம் ஈட்டுவது தானே முதலாளித்துவம்? அந்த லாபத்திற்க்கே ஆபத்து என்றல், முதலாளித்துவமே முடங்கிப் போகும் அல்லவா? இப்படி தான் முதலாளித்துவ நெருக்கடி உண்டாகிறது!
ஏன் இவ்வாறு லாப வீதம் குறைகிறது? இதை புரிந்து கொள்வதற்கு முன் ஒரு முக்கியமான குறிப்பு – முதலாளித்துவத்தில், “லாபம்” (“உபரி மதிப்பு” என மார்க்சியம் வரையறுக்கிறது) என்பது மூலதனம் தொழிலாளர்களை சுரண்டுவதால் மட்டும் தான் கிடைக்கிறது. உயிருள்ள ஒரு தொழிலாளி வர்க்கம் மட்டுமே உபரி மதிப்பை ஈடுத்த தர முடியும். ஒரு எந்திரத்தையோ, கருவியையோ, ஜடப் பொருளையோ முதலாளி வர்க்கத்தால் சுரண்ட முடியாது. உயிருள்ள தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பை சுரண்டுவதால் மட்டும் தான் லாபம் கிடைக்கும்.
இங்கிருந்து “லாப வீதம் குறையும் போக்கு பற்றிய விதி” குறித்து நாம் புரிந்து கொள்வது சிறிது கடினமாயினும், சாத்தியமே! மூலதனம் 3ம் பாகத்தின் முதல் பாதி முழுதும் இதைத் தான் மார்க்ஸ் விளக்கியிருப்பார்! இது  விளங்க, முதலாளித்துவதின் சில முக்கியமான அம்சங்களை நாம் நினைவில் வைக்க வேண்டும்:
1) மூலதன குவிப்பு மூலம் தான் முதலாளித்துவம் வளரும். ஒவ்வொரு முறையும் லாபத்தை மறு முதலீடு செய்து, அதிகமான மூலதனத்தை குவித்து, அதிக மக்கள் திரளை மூலதனத்தின் சுரண்டலுக்கு அடியில் கொண்டு வரும்.
2) முதலாளிகளுக்கு இடையே உள்ள போட்டியின் காரணமாக, உறப்த்தி முறையில் தொழிற்நுட்ப புரட்சி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால் ஒவ்வொரு முறையும் சில தொழிலாளர்கள் வேலை இழப்பர்.
3) முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள மோதலால், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கத்தின் மீது சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ள முயற்சி செய்துகொண்டே இருக்கும்.
இதனால், முதலாளி வர்க்கம் தொடர்ந்து உற்பத்தியை எந்திரமயமாக்கிக் கொண்டே இருக்கும். ஆனால் இதில் ஆபத்து இருக்கிறது. எந்திரத்தை முதலாளி வர்க்கத்தால் சுரண்ட முடியாது! “சுரண்டப்படும்” தொழிலாளியை விலக்கி, சுரண்ட முடியாத எந்திரத்தை கொண்டு வருவதால் லாப வீதம் குறைந்த கொண்டே வரும். முன்னரே கூறியது போல், லாப வீதம் மிகவும் குறைந்தால் முதலாளித்துவம் நெருக்கடிக்குள் தள்ளப்படும். இதான் முதலாளித்துவத்தின் நெருக்கடிக்குக் காரணம்.
முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டாலேயே இந்த நெருக்கடி உருவாகிறது. ஏதோ முதலாளி வர்க்கம் போதிய கூலி கொடுக்காமல் செய்யும் தவறினால் மட்டும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்த லாப வீத குறைப்பு ஒரு “போக்கு” மட்டுமே. இந்த போக்கிற்கு எதிர்வினையாக முதலாளித்துவத்திற்க்குள்ளேயே செயல்படும் சிலக் கூறுகளும் உள்ளன. உதாரணமாக, தொழிலாளர் இயக்கம் வலுவற்று இருந்தால், தொழிலாளி வர்க்கத்தை கடுமையாக சுரண்டுவதன் மூலம் லாப வீதம் அதிகரிக்கலாம். ஆனால் இது போன்ற அதிகரிப்பு நிலையானதல்ல. ஒரு கணிசமான காலகட்டத்தை எடுத்துக்கொண்டால், லாப வீதம் இறங்குமுகமாகவே இருப்பதை நாம் தெளிவாகக் காணலாம்.
இந்த லாப வீதம் குறையும் போக்கு தான் முதலாளித்துவ நெருக்கடிக்கு மூலக் காரணமாக மார்க்ஸ் கூறுகிறார். “மொத்த மூலதனத்தின் தற்பெருக்க வீதமே, அதாவது லாப வீதமே முதலாளித்துவ பொருளுற்பத்தியின் தூண்டு கோலாய் இருப்பதால் லாப வீதம் குறைந்த செல்வது சுயேச்சையான புதிய மூலதனம் உருவாவதை மட்டுப்படுத்துகிறது; முதலாளித்துவ பொருளுற்பத்திக்கே அச்சுறுத்தலாக தோன்றுகிறது. அது மிகை உற்பத்தியையும், ஊக வாணிபத்தையும், நெருக்கடிகளையும், உபரி-மூலதனத்தையும் .. விளைவித்திடுகிறது” என்கிறார் மார்க்ஸ்.
இங்கு விளங்குவது என்னவென்றால், லாப வீதம் குறைவதால் தான் “மிகை உற்பத்தி” பிரச்சனை உருவாகிறதே ஒழிய, மிகை உற்பத்தியே நெருக்கடியின் மூலக் காரணம் இல்லை. மற்றொரு முக்கியமான புரிதல் என்னவென்றால், “புதிய மூலதனம் உருவாவதை மட்டுப்படுத்துகிறது” என்று மார்க்ஸ் சொல்லும் பொழுது, லாப வீத குறைவு, புதிய முதலீடுகள் வளரும் வேகத்தை குறைக்கிறது என்று நமக்கு விளங்குகிறது.

பங்குச் சந்தையும், “கற்பனையான” மூலதனமும்:

பங்குச் சந்தைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், மார்க்சியம் “மதிப்பு” அல்லது “பரிமாற்ற மதிப்பு” (Exchange Value) என்பதை எப்படி வரையறுக்கிறது என்று புரிந்து கொள்வோம். மார்க்சியம் “பொருள்முதல்வாத” அறிவியல் முறையை பின்பற்றி ஆய்வு மேற்கொள்வதால், அதன் அடிப்படியில், “மனிதன் இயற்கையோடு உறவாடி, உழைப்பை செலுத்தி, மனித தேவைக்காக உற்பத்தி செய்யும் பொழுது தான் மதிப்பு உருவாகிறது” என்று வரையறுக்கிறது. இதான் முதலாளித்துவ அறிஞர்களுக்கும் மார்க்சியத்திற்கும் உள்ள வித்தியாசம். முதலாளித்துவ அறிஞர்களை கேட்டல், “ஒருவர் ஒரு விஷயத்திற்கு பணம் கொடுக்க விரும்பினால் அதற்கு மதிப்பு உண்டு” என்பார். அதாவது ஒருவர் எனக்கு சும்மா இருக்க காசு கொடுக்க விரும்பினால் அதற்கும் மதிப்பு உண்டு என்ற அபத்தமான வாதம் தான் முதலாளித்துவ அறிஞர்களின் வாதம். இது போன்ற “கருத்துமுதல்வாத” அடிப்படையிலான வரையறையால்தான் முதலாளித்துவ தத்துவம் உலகை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ள “பங்குகள்” (shares), பத்திரங்கள் (bonds) போன்றவற்றை “நிதி மூலதனம்” என்று அழைப்பர். ஆனால் இவை அனைத்தும் “கற்பனையான மூலதனம்” (Fictitious Capital) என்று மார்க்ஸ் கூறுவார். அதாவது, ஒரு முதலாளிக்கு சொந்தமான ஒரு எந்திரம் போல, ஒரு நிஜமான மூலதனத்தைப் போல, இந்த நிதி மூலதனம் கிடையாது. இந்த மூலதனத்தைக் கொண்டு புதிய மதிப்பு உருவாக்க முடியாது. காகிதத்தில் மட்டும் தான் மதிப்பு; ஏட்டுச் சுரைக்காய் போல. இந்த நிதி மூலதனம் ஒரு நிஜமான உற்பத்திக்கு வழி வகுத்தால் தான், “மதிப்பு” உருவாகும். அந்த மதிப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவது தான் இந்த நிதி மூலதனத்திற்கு கிடைக்கும் லாபம்/வட்டி. இந்த “கற்பனையான மூலதனம்” நிஜ மூலத்தனக் குவியலை துரிதப்படுத்தும். ஆனால் இதுவே மதிப்பை உருவாக்க பயன்படாது. 
இந்த “நிதி மூலதனம்”, வங்கியாளர்களுக்கும், ஊக வணிகர்களுக்கும் (speculators), நிதித் தரகர்களும் (financial brokers) வழி வகுக்கும். இவர்களிடம் இருக்கும் எந்த நிதி மூலதனமும் அதுவே மதிப்பை உருவாக்காது. இதை ஒரு உதாரணத்தை கொண்டு புரிந்து கொள்வோம்:
ஒரு முதலாளி, எண்ணெய் கிணற்றை சொந்தமாக்கி, எண்ணெய் எடுத்து, பெட்ரோல் உருவாக்கி விற்று லாபம் ஈட்டும் பொழுது, உழைப்பைச் சுரண்டி தான் அவர் லாபம் பார்த்தார் என்றாலும், அவரிடம் உள்ள மூலதனத்தைக் கொண்டு ஒரு புதிய “மதிப்பு” உருவாகிறது. ஆனால் அதே முதலாளி, ஒரு எண்ணெய் கம்பெனியின் பங்குகளை காலையில் வாங்கி மாலையில் விற்று லாபம் ஈட்டும் பொழுது, எந்த விதமான மதிப்பும் உருவாகுவதில்லை. முன்னரே உருவாக்கப்பட்ட மதிப்பை அவர் எடுத்துக்கொள்கிறார், அவ்வளவு தான். குதிரை ஓட்டத்தில் பந்தயம் கட்டுவது போல.
இதனால் தான் நிதி மூலதனத்தை “கற்பனையான மூலதனம்” என்கிறோம். அப்படி நிஜ மூலதனம் கொண்டு புதிய மதிப்பு உருவாகாமல் போனால், “கற்பனையான மூலதனம்” லாபம் ஏதும் தராமல், கற்பனையாகவே இருந்து அழிந்து போகும்.

இந்திய பொருளாதார நெருக்கடியை புரிந்து கொள்ளுதல்:

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் மூலக் காரணமான “லாப வீதம் குறையும்” போக்கினால் தான் இன்று இந்தியா மந்த நிலையால் வாடுகிறது. வளரும் நாடு என்பதால், இந்தியாவின் லாப வீதம் வளர்ந்த நாடுகளை விட அதிகம் என்றாலும், அது தொடர்ந்து குறையும் போக்கையே வெளிப்படுத்தி வருகிறது. 1980களில் 53% இருந்த லாப வீதம், இன்று 20%-ற்கும் மேல் குறைந்து விட்டது. இது முதலாளித்துவத்தை நெருக்கடியில் தள்ளியுள்ளது.
இந்த லாப வீதம் குறையும் போக்கு “புதிய மூலதனம் உருவாவதை மட்டுப்படுத்துகிறது” என்று மார்க்ஸ் கூறியது இந்தியாவிற்கு கச்சிதமாகப் பொருந்தும். “GFCF” எனப்படும் “மொத்த மாறா மூலதன உருவாக்கம்” குறைந்து கொண்டே வருகிறது – 2007ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35%-ஆக இருந்தது, இன்று 27%-ற்கும் கீழ் குறைந்துவிட்டது. சென்ற நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 12%-ஆக இருந்த முதலீட்டு வளர்ச்சி வீதம், முதலாளித்துவ நெருக்கடியையொட்டி, இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 4%-ஆக குறைந்தது. முதலீடுகளை ஈர்க்கப்போவதாகச் சொல்லி கார்ப்பரேட் வரியை குறைத்தார் நிதி அமைச்சர். ஆனால் அமைச்சர் கூறியதற்கு நேர் எதிராக, சென்ற இரண்டாம் காலாண்டில் முதலீட்டு வளர்ச்சி வீதம் மீண்டும் குறைந்து 1%-த்தை அடைந்துள்ளது. ஆனால் இந்த வரிச் சலுகையை பயன் படுத்தி முதலாளிகள் நன்கு லாபம் பார்த்து விட்டனர்; நமக்கு தான் ஏமாற்றம். இந்த லாப வீத குறைவு, லாபத்தையும் ஆபத்திற்கு உள்ளாக்கிவிட்டது – சென்ற நிதியாண்டின் முடிவில், 334 முக்கிய கம்பெனிகளின் லாபம் 18% குறைந்துள்ளது!
இவ்வாறு நிஜ மூலதனத்தின் லாப வீதம் குறைந்துவிட்டதால் தான் பங்க்குச் சந்தை உயர்கிறது. நிஜ மூலதனம் குவித்து, லாபத்தை பெருக்க முடியவில்லை. அதனால் முதலாளி வர்க்கம் தன் முதலீட்டை எல்லாம் தூக்கிக் கொண்டு பங்குச் சந்தையில் கொட்டி, “கற்பனையான மூலதனம்” வளர வழி செய்கிறது. புதிதாக மதிப்பு உண்டாகச் செய்து லாபம் பெற முடியாமல் போனதனால், முன்னரே உருவாக்கிய மதிப்பை சுரண்டுவதற்காக முதலாளிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. இந்த “ஊக வாணிபம்” வளர்ந்து கொண்டே போவதால் தான் பங்குச் சந்தைகள் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே இருக்கின்றது.

பங்குச் சந்தையின் ஏறுமுகம் நிலைக்குமா?

நினைவிருக்கட்டும், நிஜ மூலதனத்தின் மேல் தொழிலாளர்கள் உழைப்பை செலுத்துவதால் மட்டுமே மதிப்பு உருவாகும். அப்படி மதிப்பு உருவானால் மட்டும் தான், அதை “கற்பனை மூலதனம்” லாபமகா எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் நம் நிஜப் பொருளாதாரத்தை பாருங்கள் – தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி வீதம், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, சென்ற காலாண்டில் மேலும் பாதிக்கப்பட்டு, வளராமல், உற்பத்தித் துறை சுருங்கியுள்ளது! இது இந்தியாவிற்கு பெரும் ஆபத்தான செய்தி. ஆகையால், நிஜப் பொருளாதாரம், உற்பத்தித் துறை, ஏற்கனவே மந்த நிலைக்குள் சென்றாகிவிட்டது. நிஜப் பொருளாதாரத்தில் மதிப்பு உருவாகவில்லை என்றால், “ஊக வாணிபத்தில்” லாபம் சம்பாதிப்போரின் “கற்பனை மூலதனம்” விரைவில் கரைந்து போகும். உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, பங்குச் சந்தையையும் பாதிக்கும்; 2008ல் ஏற்படத்தைப் போல், மீண்டுமொரு “நிதி நெருக்கடி” துவங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இந்த நெருக்கடிக்கு காரணம் “பணமதிப்பிழப்பு”, “ஜீ.எஸ்.டி” என்று சில முற்போக்கு தாராளவாத பொருளாதார அறிஞர்களும், “மிகை உற்பத்தி”யும், கிராக்கி குறைந்ததும் தான் காரணம் என பல இடதுசாரி அறிஞர்களும் கூறி வருகின்றனர். கிராக்கி குறைவும், வேலையின்மையும் இந்த அமைப்பு ரீதியான நெருக்கடியின் தொடர் நிகழ்வுகள் தான். பணமதிப்பிழப்பும் ஜீ.எஸ்.டி-யும் ஏற்கனவே வந்த்துக்கொண்டிருந்த நெருக்கடியை துரிதப் படுத்தியது, அவ்வளவு தான். அனால் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டினால் ஏற்படும் “லாப வீதம் குறையும் போக்கு” தான் மூலக் காரணம் என்பதை மறந்து விட வேண்டாம்.
இந்த நெருக்கடியின் முதலாளித்துவ அறிஞர்களின் கற்பகைக்கே எட்டாத அளவு மோசமாக உள்ளதாக அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். இந்த நெருக்கடியை தீர்க்க மேலும் பல சீர்திருத்தங்கள் தேவை என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இவர்களின் வழக்காடலில் “சீர்திருத்தம்” என்றால் என்ன என்று நமக்குத் தெரியாதா என்ன? உழைப்பாளர்களின் உரிமைகளை மேலும் பறித்து, சொத்துக்குவிப்பை மேலும் எளிமையாக்கும் சட்டங்கள் மூலம் உழைப்புச் சுரண்டலையும், வளச் சுரண்டலையும் தீவிரமாக்குவது, அதானே?! ஆனால் இவை எல்லாம் லாப வீதத்தை சற்றே உயர்த்தலாம், ஆனால் நெருக்கடியை தீர்க்காது. பல தொழில்கள் மூடப்பட்டு, பலரும் வேலைகளை இழந்து, பல காலம் பயனில்லாமல் உற்பத்தி சக்திகள் அழிவுற்ற பின் தான் லாப வீதம் அதிகரித்து, நெருக்கடி தீர வாய்ப்புள்ளது. அதுவும் நிரந்தரமல்ல. நமக்கு தெரிந்தது போல், மீண்டும் நெருக்கடி வந்தே தீரும்! 
இவ்வாறு ஒவொரு முறையும் முதலாளித்துவத்தில் நெருக்கடி ஏற்படும் பொழுது, தொழிலாளி வர்க்கத்தை மேலும் உக்கிரமாக சுரண்டி லாப வீதத்தை மீண்டும் அதிகரிக்க முயற்சிகள் ஏற்படும். அப்படிப்பட்ட நடவடிக்கைகள் தான் மோடி அரசு கடைபிடிக்கும் நவீன தாராளமயக் கொள்கைகள். இது உழைக்கும் மக்களை மேலும் கொடுமையாக வாட்டி வதைக்க வழி வகுக்கும்.
-அபிநவ் சூர்யா.
நன்றி:மாற்று.
-----------------------------------------------------------------------------
என்ன செய்வது?
இந்தியாவில் ஊழல் செயவதே
பதவி பெற தகுதியாக்கிறதே.
தூக்குத் தண்டனை தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ள முஷாரஃப் தண்டனைக்கு முன்பே மரணிக்க நேர்ந்தால் உடலை மூன்று நாள் தூக்கில் தொங்க விட வேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேச துரோக வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் னஅதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 17 ஆம் தேதி தீர்ப்பளித்தது. 167 பக்கம் கொண்ட அந்த தீர்ப்பில், ஒருவேளை மரண தண்டனைக்கு முன்பாகவே முஷாரஃப் இறந்து விட்டால், அவரது உடலை "இஸ்லாமாபாத்தின் டி-சவுக் பகுதியில் மூன்று நாட்களுக்கு தூக்கில் தொங்கவிட வேண்டும் என அமலாக்க அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தீர்ப்பில், அரசியல் சட்டத்தை முடக்கி வைத்து நெருக்கடி நிலையை அமல்படுத்தியதாக முஷாரபுக்கு எதிராக தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் அவர் குற்றம் செய்திருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. எனவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
மேலும் தற்போது பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானில் இல்லை. வெளிநாட்டில் தப்பியோடி உள்ளார். இதனால் தப்பியோடி அவரை கைது செய்யும் ஒருவேளை இறந்து கிடந்தால், சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்வதற்கும், அவரது சடலத்தை பாகிஸ்தானின் டி-சவுக் பகுதில் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம். 03 நாட்களுக்கு அவரது சடலம் தூக்கில் தொங்க வேண்டும்”என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இங்கோ ஊழலே நடைமெறவில்லையென தீர்ப்புகள்.
ஆயிரங்கோடிகளில் ஊழல் செய்தவனெல்லாம் வாக்காளர்களுக்கு பிச்சைபோட்டுவிட்டு மீண்டும் ஊழல் செய்கிறான்.
இந்திய மக்களாட்..சீ நீடு வாழ்க.
வேறு என்ன சொல்ல?
--------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?