இணைய சேவை முடக்கம்

இணைய சேவை முடக்கம்

இந்தியாவில் கடந்த ஆண்டு 134 முறை

  பாகிஸ்தானில் 12 முறைதான்


"குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய பிறகு எது குறித்தும் கவலைப்பட வேண்டாம் என்று நான் அசாமிலுள்ள சகோதர, சகோதரிகளிடம் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களது உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரம் உள்ளிட்ட எதையும், யாராலும் உங்களிடமிருந்து பறிக்க முடியாது என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். அவை தொடர்ந்து செழித்து வளரும்" என்று டிசம்பர் மாதம் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 
ஆனால், அப்போது நிலவிய பிரச்சனை என்ன தெரியுமா? மேற்கண்ட பதிவின் மூலம் தனது கருத்தை அசாம் மக்களிடம் தெரிவிக்க பிரதமர் விரும்பினார்; ஆனால், அப்போது அசாம் மக்களால் இணையத்தையே பயன்படுத்த முடியவில்லை.

கடந்த புதன்கிழமை, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் அசாம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்ல, உத்தரப் பிரதேசத்திலுள்ள அலிகார் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த 13ஆம் தேதி மாலை 5 மணிவரை இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 91 முறை இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டிருப்பதாக 'இன்டர்நெட் ஷட்டவுன்ஸ்' என்ற இணையத்தின் தரவு கூறுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவில் வெறும் 15 இணைய சேவை முடக்கங்களே பதிவாகியுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாக, 2016இல் 31, 2017இல் 79, 2018இல் 134 என அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 134 இணைய சேவை முடக்கங்களில் 65 சம்பவங்கள் ஜம்மு & காஷ்மீரில் மட்டும் நிகழ்ந்தன. இந்த ஆண்டு இதுவரை நடைபெற்றுள்ள 91 இணைய சேவை முடக்க சம்பவங்களில் 55 ஜம்மு & காஷ்மீரில் நிகழ்ந்துள்ளன.

2018ல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டிருந்தது; இதுதான் அந்த ஆண்டில், உலகளவில் பதிவான அதிக எண்ணிக்கை ஆகும். இரண்டாமிடத்தை பிடித்துள்ள பாகிஸ்தானில் வெறும் 12 இணைய சேவை முடக்க சம்பவங்களே அதே காலகட்டத்தில் பதிவாகியுள்ளன. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக வெளிவந்த அயோத்தி வழக்கு தீர்ப்பின்போதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டிருந்தது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து இணைய சேவை முடக்கத்தில் இராக் (7), யேமன் (7), எத்தியோப்பியா (6), வங்கதேசம் (5), ரஷ்யா (2) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இன்டர்நெட் ஷட்டவுன்ஸ்' இணையதளத்தின் தரவுகளை பார்க்கும்போது, இணைய சேவை முடக்கங்கள் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலம் வரை, அதிகபட்சமாக ஜம்மு & காஷ்மீரில் புர்கான் வாணி இறப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின் காரணமாக அங்கு கடந்த 2016ஆம் ஆண்டு தொடர்ந்து 133 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டது. 

அப்போது, மூன்றரை மாதங்களில் போஸ்ட்பெய்டு பயன்பாட்டாளர்களுக்கு இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்ட நிலையில், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் சுமார் ஆறு மாத காலம் இணைய சேவைக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

ஜம்மு & காஷ்மீரில் மற்றொரு இணைய முடக்கம் கடந்த ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி விதிக்கப்பட்டது, அப்போதுதான் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி அளித்த இந்திய அரசமைப்பின் 370வது பிரிவு இந்திய நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. இதுவரை நூறுக்கும் மேற்பட்ட நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அங்கு இணைய சேவை முடக்கம் திரும்ப பெறப்படவில்லை.
ஜம்மு & காஷ்மீர் தவிர்த்து பார்த்தோமானால், நாட்டிலேயே மூன்றாவது மிக நீண்ட இணைய சேவை முடக்கம் 2017 ஜூன் 18 முதல் 2017 செப்டம்பர் 25க்கு இடைப்பட்ட காலத்தில், மேற்குவங்கத்தில் அமலில் இருந்தது. கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, டார்ஜிலிங்கில் நடைபெற்ற போராட்டத்தை ஒட்டி விதிக்கப்பட்ட இந்த தடை சுமார் 100 நாட்கள் நீடித்தன.

அதிக இணைய சேவை முடக்கங்களை கண்ட பகுதி

2012ஆம் ஆண்டு முதல் இதுவரையில், இந்தியாவிலுள்ள பல்வேறு இடங்களில் 363 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது; இதில் ஜம்மு & காஷ்மீரில் மட்டும் 180 சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 67 இணைய சேவை முடக்கங்களுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், 18 சம்பவங்களுடன் உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவில் இணைய சேவையை முடக்குவதற்கு வழிவகை செய்வதற்கு பல்வேறு சட்டப்பிரிவுகள் உள்ளன. குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 (சிஆர்பிசி), இந்திய டெலிகிராஃப் சட்டம் 1885, தொலைத்தொடர்பு சேவைகளின் தற்காலிக இடைநீக்கம் (பொது அவசர நிலை அல்லது பாதுகாப்பு) விதிகள், 2017 ஆகியவை இந்தியாவிலுள்ள மாநிலங்கள், மாவட்டங்கள் ஆகியவற்றில் இணைய சேவையை முடக்குவதற்கான அதிகாரத்தை அரசு முகமைகளுக்கு வழங்குகிறது.
குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 144 "பொது அமைதியைப் பேணுவதற்கான தற்காலிக நடவடிக்கைகள்" என்ற அத்தியாயத்தின் கீழ், மாநில அரசுகள் "அவசரகால பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுக்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை" வழங்குகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

 உத்தரப்பிரதேச அடக்கத்துக்கு காரணம் 

காவல்துறை மீதான அச்சம்?

உத்தரப்பிரதேசத்தில் டிசம்பர் 20 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர், பல நகரங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான இந்து மற்றும் முஸ்லிம்கள் வீதிகளில் திரண்டனர். ஆனால் அமைதியாக தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள், கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் வன்முறையாக உருவெடுத்தது.
முசாஃபர்நகர், மீரட், பிஜ்னோர், சம்பல், மொராதாபாத், கான்பூர் போன்ற நகரங்களில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. அதில் 16 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்,
கிட்டத்தட்ட அனைவரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவர்கள். ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளர்; நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முசாஃபர்நகர், மீரட் மற்றும் பிஜ்னோர் ஆகிய மூன்று மாவட்டங்களின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் நாங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டோம். எங்கள் சக பணியாளர் சமீரத்மஜ் மிஸ்ரா கான்பூருக்கு சென்றார்.
எல்லா இடங்களிலும் சில விஷயங்கள் ஒன்று போலவே இருந்தன.
மரணங்கள் அனைத்தும் துப்பாக்கிச் சூட்டால் நிகழ்ந்தவை. இறந்த அனைவரும் முஸ்லிம்கள். தாக்குதல் சம்பவங்கள் நடந்த வீடுகள் மற்றும் மாநில அரசு நிர்வாகம் சீல் வைத்த கடைகள் அனைத்தும் முஸ்லிம்களுடையது.
உயிர் மற்றும் சொத்து இழப்புக்களை சந்தித்த அனைவருமே ஏழை மக்கள். அரசு நிர்வாகத்தையோ, கிராமத் தலைவர்களையோ அணுகும் இடத்தில்கூட அவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முசாஃபர்நகரை சேர்ந்த ஓர் இளம் வழக்கறிஞரிடம் பேசியபோது, "காவல்துறையும் நிர்வாகமும் எங்களை (முஸ்லிம்களை) குறிவைத்துள்ளன," என்றார். முஸ்லிம்களின் பகுதிகளில் உள்ள பலரிடம் பேசியபோது, அரசாங்கம் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக தெரிவித்தனர்.
முசாஃபர்நகரில், முஸ்லிம் குடியிருப்புகளில் பல வீடுகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. வீதிகளில் இருந்த வாகனங்கள் மற்றும் பிற உடைமைகள் அழிக்கப்பட்டன.

இதை பார்க்கும்போது, எதோ ஒரு விஷயத்திற்காக தண்டனை கொடுக்கும் நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது. மக்களின் வெறுப்புணர்வுகளை இந்த நாசவேலைகள் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இந்த நகரத்தின் பிரதான சாலையில் முஸ்லிம்களின் 52 கடைகள் மட்டுமே சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதை, அரசு நிர்வாகத்தின் தரப்பில் இருந்து தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொருளாதார ரீதியிலான தாக்குதலாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டும் அவர், அதில் ''அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் பழிவாங்கப்படுவார்கள்,'' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு பகுதியிலும் காவல்துறையின் மீதான அச்சத்தை நாங்கள் உணர்ந்தோம். முசாஃபர்நகரில் ஒரு வீட்டின் மீதான தாக்குதலின்போது அங்கு இருந்தவர்களுடன் பேச முயற்சித்தோம்.
ஓர் இளைஞர் முகத்தில் மஃப்ளரை வைத்து மறைத்துக் கொண்டு எங்களிடம் பேசினார்.
"இந்த பகுதியும், இந்த வீடுகளில் வாழும் மக்களும் எங்களுடையவர்கள், வரவிருக்கும் காலத்தில் அது எங்களுடையதாகும். இங்கிருந்து நீங்கள் வெளியேறுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டே, பொருட்களை சேதப்படுத்தினார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

வேறு பல வீடுகளில் வசிக்கும் பலரிடமும் பேசினோம். அவர்களும் இதேபோன்றுதான் சொன்னார்கள்.

நகரின் எஸ்.பி. சத்பால் அந்திலின் அலுவலகத்திற்கு சென்றோம், இந்த குடிமக்களின் புகாரை அவர்கள் முன் வைத்தோம். முதலில் அவருக்கு கோபம்தான் வந்தது. அவருடன் நேர்காணல் எடுத்து முடித்த பிறகு, எங்கள் சக செய்தியாளர் தீபக்கிடம் இருந்து தொலைபேசியைப் பறித்து, அதில் பதிவு செய்யப்படிருந்த உரையாடலை அழித்துவிட்டார்.
மக்களைத் தூண்டிவிடும் செயல்களில் பிபிசி ஈடுபடுவதாக எஸ்.பி. குற்றம் சாட்டினார். எங்களிடம் வீடியோக்கள் உள்ளன என்றும், அதில் மக்களின் குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்றும் நாங்கள் கூறினோம். அவர்களுக்கு உங்களிடம் இருந்து பதிலை பெற்றுத் தருவதற்காக வந்திருக்கிறோம் என்று கூறினோம். ஆனால் நாங்கள் தவறாக சொல்வதாக எஸ்.பி கூறினார்.
எனது 30 ஆண்டுகால ஊடகப் பணியில் காவல்துறையினரிடமிருந்து இதுபோன்ற எதிர்வினையை நான் பார்த்ததேயில்லை. கலவரம், தீவிரவாத தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், மும்பை பயங்கரவாத தாக்குதல் போன்ற பல தீவிரமான சம்பவங்கள் குறித்து நாங்கள் செய்திகளை கொடுத்துள்ளோம், ஆனால் எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் இதுபோன்று நடந்து கொண்டதில்லை. எங்கள் வீடியோக்களை யாரும் அழிக்கவில்லை.
காவல்துறையின் ஆற்றலையும் அதன் வலிமையையும் நான் அறிவேன், ஏனென்றால் எனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலும் நான் கிரைம் ரிப்போர்டிங் செய்துள்ளேன். காவல்துறையினரின் பிரச்சனைகள் பற்றியும் எனக்கு கவலை இருக்கிறது, ஆனால் சத்பால் அந்தில் தேவைக்கு அதிகமாக கடுமையான எதிர்வினைகளைக் காட்டியதாக தோன்றியது.
உள்ளூர் பத்திரிகையாளர்கள் அவரிடம் கடுமையான கேள்விகளைக் கேட்பதைத் தவிர்ப்பார்கள், அவரிடம் கடினமான கேள்விகளைக் கேட்பது பழக்கமில்லை என்றும் எங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவருடைய அதிகப்படியான எதிர்வினையை புரிந்து கொள்ள முடியவில்லை.

கோபம் குறைந்தபிறகு எஸ்.பி மீண்டும் எங்களுடன் பேசத் தயாரானாலும், சில கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார்.
 காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
காவல்துறையினர் அழிவுச் செயல்களில் ஈடுபட்டதான புகார் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று அவர் கூறினர். மக்கள் புகார் அளித்தால், அது விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
நிர்வாகத்திடமும் காவல்துறையினரிடமும் நாம் கூர்மையான கேள்விகளைக் கேட்கவில்லை என்றால், வேறு யார் இதை செய்வது?
ஆனால் காவல்துறையை எவ்வளவு விமர்சிப்பது?
போராட்டத்தை சீர்குலைக்க, எதிர்ப்பாளர்களை அடிப்பது, கைது செய்வது, மிகக் கடுமையான பிரிவின் கீழ் வழக்குத் தொடர்வது என, உத்தரபிரதேசத்தின் அனைத்து நகரங்களிலும், காவல்துறையின் அணுகுமுறை ஒரே மாதிரியாக இருந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மீண்டும் போராட்டஙக்ள் நடத்தக்கூடாது என்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.
 
முசாஃபர்நகர் தவிர, மற்ற நகரங்களிலும் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் பேசினோம். எதிர்ப்பாளர்கள் வன்முறையின் பாதையை எடுத்தார்கள். அதனால் கண்ணீர்ப்புகை, பெல்லட் குண்டு துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. அதோடு, துப்பாக்கிச் சூடும் நடத்த வேண்டியிருந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அனைத்து தரப்பினருடனும் பேசிய பின்னர், முதலில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடந்தன என்ற முடிவுக்கு வந்தோம். பிறகு, காவல்துறை அவர்களைத் தடுக்க முயன்றபோது, இருபுறமும் நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தத் தொடங்கினர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எல்லா பேரணிகளிலும் இதே மாதிரி நிலைமையை பார்க்கமுடிந்தது.
வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்களுக்கான உண்மையான பொறுப்புக்கூறல் உத்தரப்பிரதேச அரசுக்குத்தான் உள்ளது. ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க காவல்துறை அதிக சக்தியைப் பயன்படுத்தியது ஏன்?
காவல்துறையினர் கூறுவது போல் போராட்டக்காரர்கள் வன்முறைக்கு திரும்பினார்களா?
இந்த கேள்விகளுக்கு விடையை சுதந்திரமாகவும் , நியாயமான முறையிலும் விசாரணையின் மூலம் கண்டறிய வேண்டும். காவல்துறை என்ற போர்வையில், இந்து அமைப்புகளின் ஆர்வலர்கள் போராட்டக்காரர்களைத் தாக்கியதை நாங்களே நேரடியாக பார்த்தோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதி கொடுக்க விரும்பினால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து குடிமக்களுக்குமானது என்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?