தொடரும் ஸ்டெர்லைட் அயோக்கியத்தனம்.
விசாரணை முடிந்தது
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
06.01.20 அன்று பேராசிரியர் பாத்திமா பாபு சார்பில் வழக்கறிஞர் யோகேஸ்வரன் அவர்கள் ஆஜராகி நிலமோசடி, புகைபோக்கி, காற்று மாசு, பசுமை வளையம், மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் மற்றும் நச்சு கழிவுகள் அவற்றைப் மோசமாக பராமரிப்பது பற்றி வாதிட்டார். மேலும் ஸ்டெர்லைட் நச்சு ஆலை பொது தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ளதையும் பற்றி சிறப்பாக விளக்கினார்.
07.01.20 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் வழக்கறிஞர் டி.மோகன் அவர்கள் ஆலை துவங்கியது முதல் மூடப்படும் வரை, உற்பத்தி நடவடிக்கைகளில் வெளியேறும் இரசாயனங்கள், உலோகங்கள் அடங்கிய கழிவு, நீரை சுத்திகரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், ஆலையின் அலட்சியமான நடவடிக்கைகள், மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின்மை ஆகியவற்றால் நச்சு பொருட்கள் சுற்றுச்சூழலில் கலந்தன என்றும் ஆலையின் உள்ளே அபாயகரமான கழிவுகள் புதைக்கப்படும் இடங்கள், ஜிப்சம் குளம், தாமிர கழிவு வைப்பிடம் அருகில் நிலத்தடிநீர் மாசு கண்காணிப்பிற்காக உள்ள அனைத்து போர் கிணற்று நீரும் கன உலோகங்கள், இரசாயனங்களால் கடுமையாக மாசு அடைந்துள்ளன.
குமரெட்டியாபுரம், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மடத்தூர் கிராமங்களிலுள்ள கண்காணிப்பு கிணற்று நீரும் மாசடைந்துள்ளது என்றும், நீரோட்டத்திற்கு எதிரான குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், காயலூரணி நிலத்தடி நீர் பாதிப்பிற்கு எங்களை எப்படி காரணம் சொல்ல முடியும்? என்ற ஆலையின் வாதத்திற்கு, 2009-ல் ஸ்டெர்லைட் நிதியுதவியில் செய்யப்பட்ட நிலத்தடி நீர் ஆய்வில் ஆலை உள்ள இடத்தில் நிலத்தடி நீர் முகடு (Groundwater crest) உள்ளது, அதிலிருந்து நிலத்தடி நீர் அனைத்து திசைகளிலும் பாய்கிறது எனவும், ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் நடைபெற்ற இடம், தாமிர கழிவுகள் வைப்பிடம் இக்கிராமங்களின் அருகில் இருப்பதாலும், ஓர் ஆண்டின் பல மாதங்கள் காற்று அக்கிராமங்களை நோக்கி வீசுவதாலும், இடையில் தூசுக்களை தடுக்கும் மரங்களின் பசுமை வளையம் இல்லாததால் கனஉலோகங்கள், இரசாயனங்கள் அடங்கிய தூசுக்கள் பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் தங்கியுள்ளன எனவும் வாதிட்டார். தன் இறுதி வாதமாக, பல ஆண்டுகளாக செயலற்று இருந்த மாசு கட்டுபாட்டு வாரியமும், தமிழக அரசும் மக்களின் தொடர் போராட்டங்களில் விழிப்படைந்து ஆலையை மூடியுள்ளன என்றார்.
39-வது நாள் விசாரணையான 08.01.20 அன்று அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் அவர்கள் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலை நிலம், நீர், காற்று ஆகியவற்றை மிகவும் மோசமான நிலையில் மாசுபடுத்தி உள்ளதாகவும், 25 மீட்டர் பசுமை வளையம் அமைக்கவில்லை என்றும், பல முறை கண்டிப்புடன் கூடிய அவகாசம் கொடுத்ததாகவும், 2013-ல் உச்சநீதிமன்றமும் பல அறிவுரைகள் கூறி பல விதிமுறை மீறல்களை கண்டித்து ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதித்ததாகவும், அதன் பின்னரும் தவறுகளை ஆலை சரி செய்யாததால் தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை பிறப்பித்ததாகவும் வாதிட்டார்.
தூத்துக்குடி வாழ் மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதற்காக அந்த ஆலையை மூடுவதைத்தவிர வேறு வழியே இல்லை. ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடி சுற்று வட்டார நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளது.
ரூ.3000 கோடி முதலீடு செய்து ரூ.20,000 கோடி லாபம் ஈட்டிய ஆலை நிர்வாகம் தற்போது நஷ்டம் ஏற்பட்டுவிட்டது எனக் கூறுவதை ஏற்க முடியாது. விதிகளை பின்பற்றாத காரணத்தால் தான் ஆலை நிர்வாகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என வாதிட்டார்.
ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதிடும் போது, ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டால் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம். கூடுதலாக கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதை ஏற்கத்தயார்” என்றார். ஆனால் அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசு தரப்பு வழக்கறிஞர் விஸ்வநாதன் அவர்கள் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துதான் ஆலையை மூடியுள்ளதாக வாதங்களை வைத்தார்.
அதன் பின்னர் நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் அவர்களிடம் “ஸ்டெர்லைட் ஆலை பொது தொழிற்சாலை பகுதியில் உள்ளதா? (General industrial zone) அல்லது நச்சு தொழிற்சாலை (hazardous industrial zone) பகுதியில் உள்ளதா?” என்பது பற்றிய கேள்விகளை எழுப்பினர். அதற்கு விஜயநாராயணன் அவர்கள் நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டானது நச்சு தொழிற்சாலை பகுதியில் இல்லாமல் பொது தொழிற்சாலை பகுதியில் உள்ளதாக பதிலளித்தார்.
அதன் பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் அவர்கள் ஆஜராகி, ”காப்பர் கழிவுகள் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை உட்பட பல இடங்களில் கொட்டப்பட்டது அனைவரும் அறிந்ததே! ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது பினாமிகளை வைத்து அதை உப்பாற்று ஓடையில் கொட்டிவிட்டு, தற்போது தனக்கும் காப்பர் கழிவுகளைக் கொட்டியற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நாடகமாடுகிறது. ஆனால் இப்போது கழிவுகளை அகற்றி விடுகிறோம் என்கின்றனர்.
மேலும் ஐந்து வருடமாக நச்சுக் கழிவுகளை பராமரிப்பதில் அரசிடம் எந்த அனுமதியும் வாங்காமல் ஆலை செயல்பட்டு நிலம், நீர், காற்று ஆகியவற்றை கடுமையாக மாசு படுத்தியுள்ளது என்றார். இறுதியாக ஸ்டெர்லைட் ஆலை ஒரு போதும் எந்த விதிகளையும் கடைப்பிடிப்பதில்லை என்றும் மாசுபடுத்துதல், விதிகளை மீறுதல், அரசையும் மக்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டுமே ஆலையை நடத்தியதாகவும், இதற்கு அரசு அதிகாரிகளும் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளதாகவும்” வாதிட்டார்.
இதற்கு ஸ்டெர்லைட் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் அவர்கள், அனைத்து தரப்பினரும் தவறான தகவல்களையும் மற்றும் தங்கள் நிலையில் மாற்றி மாற்றி பேசுவதாகவும் வாதிட்டார். நாங்கள் சட்டத்துக்கு புறம்பாக செயல்படவில்லை என்றும் தொழிற்சாலை விதிகளின்படியே செயல்பட்டதாகவும் வாதத்தை வைத்தார்.
இதனோடு பல மாதங்கள் கழித்து சென்னை உயர்நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் தீர்ப்புத்தேதி பட்டியலில் வரும் போதுதான் தெரியும். அதாவது தீர்ப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு மட்டுமே தீர்ப்பு தேதியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
இலட்சம் மக்கள் போராட்டமும், அனைவரின் தியாகமும் வீண் போகாது. நம்பிக்கையுடன் காத்திருப்போம் !
தகவல்:ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
தொடர்புக்கு: 9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.
ஸ்டெர்லைட் ஆலையின் அயோக்கியத்தனம்!
காசுக்கு மாரடிக்கும் பத்திரிகையாளர்கள்.
ஸ்டெர்லைட் சார்பில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் சுற்றுவட்டார கிராமங்களில் கொண்டாடப்பட்டதாகவும், அதற்கான பரிசுப்பொருட்கள் வழங்கியதாகவும், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அதிகாரிகள், அலுவலர்கள் அந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் நேற்று (18-01-2020) சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இந்த நாளிதழ் செய்தியை பார்த்த பல கிராமங்களில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனென்றால் இந்த கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள், பெரியோர்கள் வசூல் செய்தும் மற்றும் ஊர் கணக்கில் இருந்தும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் கொண்டாடப்பட்டது.ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து சல்லிக்காசு கூட வாங்காமல் தான் நடத்தியுள்ளார்கள். உண்மை இப்படியிருக்க ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செலவில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தியதாக ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பாக பத்திரிகைகளில் செய்தி கொடுத்துள்ளது.இது ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராம மக்களை மதிப்பிழக்கச் செய்யவும், அவதூறு செய்யும் விதமாகவும் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இது விஷமத்தனமானது.
இந்த பொய்யான செய்தி கொடுத்து வெளியிட செய்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பும், மன்னிப்பு செய்தியும் உடனே வெளியிட வேண்டும் என்று பண்டாரம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் முன்பு ஊர் மக்களும் ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராம மக்களும் கண்டணம் தெரிவித்திருப்பதோடு, சிப்காட் போலீசு நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.